சந்தை என்னும் கடவுள்

தொண்ணூறுகளின் இரண்டாம் பகுதியில், தில்லியில் இருந்த அந்தப் பாரம்பரிய இந்திய நிறுவனம், தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில், ஒரு பன்னாட்டு மேலாண் ஆலோசக நிறுவனத்தை அழைத்தது. அதுவும் நிறுவனத்தின் செயல்பாடுகளை அவதானித்து, ரூம் போட்டு யோசித்து, ஒரு புது நிர்வாகக் கட்டமைப்பைப் பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரைப்பின் விளைவாக, முதன் முதலாக, அந்த நிர்வாகத்தின் உற்பத்தி மற்றும் வாங்கும் துறைகளில் தொழில்முறை வல்லுநர்கள் அமர்த்தப்பட்டார்கள். பொருள் வணிகனாக எனக்கு வேலை கிடைத்தது. சலங்கை ஒலியின் கமலஹாஸன் போல், “கோயிங் டூ தில்லி” என்றொரு குழந்தைக் குதூகலத்துடன் பணியில் சேர்ந்தேன்.

பரேட்டோ (pareto) என்றொரு இத்தாலிய பொருளாதார நிபுணர் இருந்தார். அவர் சும்மா இருக்காமல், ‘பரேட்டோ விதி‘ என்று ஒன்றை உருவாக்கினார். அது 80:20 விதி என்றும் அழைக்கப்படுகிறது. தொழில்துறையின் ஆதார விதிகளில் ஒன்று. புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் 80 சதம் விற்பனை, 20 சத நுகர்வோரால் வருகிறது. உலகின் 80 சதம் செல்வம் 20 சத மக்களிடம் இருக்கிறது. இது அதிகமான இடங்களில் செல்லுபடியாகும் ஒரு தேற்றம். விதி விலக்குகளும் உண்டு. அமேஸான் இணைய நூல் விற்பனை நிறுவனம் போல.

தமக்குத் தெரிந்த தேற்றங்களையும், கருவிகளையும், தனக்குக் கிடைத்த ஆட்களின் மீதோ, நிறுவனத்தின் மீதோ பரிசோதிக்காத நிபுணன் என்ன நிபுணன்? நான் பரேட்டோவின் விதியை முதலில் ப்ரயோகித்தேன். தேங்காயெண்ணய், சர்க்கரை, மிளகு, ஏலம், வெல்லம் போன்ற சில பொருட்கள் (20 சதம்), நான் வாங்கும் பொருட்களின் விலை மதிப்பில் 80 சதம் என்னும் மாபெரும் உண்மையைக் கண்டு பிடித்தேன். என் பொருளாதாரத் திறனை, முதலில் எனக்குத் தெரிந்த தேங்காயெண்ணையில் காட்டலாம் என்று தீர்மானித்தேன்.

உடனே சேர நன்னாட்டிளம் தென்னை மரங்களைப் பாத்து வரும் நோக்கத்தோடு கொச்சிக்குச் சென்றேன். எங்கள் வியாபாரத்தின் இடைத் தரகர் என்னை விமான நிலைத்திலேயே வரவேற்க வந்திருந்தார். அவர் குழைந்த குழையலில், பின்னால் வால் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது. அங்கே தேங்காயெண்ணெய் வளர்ச்சி நிறுவனத்தின் நாயர்களோடு சம்சாரித்து, ஒரு அறுபதாண்டுப் புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். மக்களின் சரியான ப்ரதிநித்துவமாக, ஒரு நாயர், ஒரு கிறித்துவர் மற்றும் ஒரு முஸ்லீம் தேங்காயெண்ணெய் வியாபாரியைச் சந்தித்து, எண்ணெய் மார்க்கெட் நிலவரம் பற்றி சதியாலோசனை நடத்தத் திட்டமிட்டேன்.

முதலில் கிறித்துவர். கண்ணுக்குக் கீழே உப்பிய சதையும், கன்னங்களில் தென்பட்ட பளபளப்பும், லேசாக நடுங்கும் விரல்களும் அவர் யாரென்பதைச் சொல்லிவிட்டன. ‘சாயங்காலம் க்ளப்லே பாக்கலாம்.. க்ளப்லே பாக்கலாம்’ என்று தப்பி ஒடுவதிலேயே குறியாக இருந்தார். மாலைப் பேச்சுவார்த்தைகளை எங்கே கொண்டு போய் நிறுத்துவார் என்பது சிறுபிள்ளைக் கணக்கு. “ஏட்டனுக்கு கொஞ்சம் ஃபண்ட்ஸ் ப்ரோபளம்” என்றார் இடைத்தரகர். “ஓ” என்றேன் மலையாளத்தில்.

அடுத்தது இஸ்லாமியர். பெயர் சொன்னால்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. மத்தபடி, ‘ரோஸ் இஸ் அ ரோஸ்’ மாதிரி எல்லோரும் மலையாளிகளாகத்தான் தெரிந்தார்கள். அறைக்குள் நுழைந்த உடனேயே, இடைத்தரகரை மலையாளத்தில் காச்சினார். “சொன்னபடி அட்வான்ஸ் பேமெண்ட் எங்கேடா?” என்று. “அத விடுங்க காக்கா, இவரு வெளிச்செண்ணெய் மேனேஜர். டெல்லியில இருந்து வந்திருக்காரு”ன்னார். “என்ன வேணுமாம்?” முந்திய கேள்விக்கு பதில் கிடைக்காத எரிச்சல் இன்னும் இருந்தது.

“வெளிச்செண்ணெய் பத்தி கொஞ்சம் விஷயம் தெரியணுமாம்,” காக்கா கொஞ்சம் கண்ணை மூடினார்.

“தமிழா?” ன்னு கேட்டார்.

“ஆமாம்.”

”தேங்காண்ணெய்ல என்ன இருக்கு? எங்கிருந்து வருதுன்னு தெரியாதா?”

மகாத்மாவை இவர்கிட்ட அனுப்பி, வாடிக்கையாளர் பற்றிய அவரின் வாக்குகளை கேரளத்துக்காக மாற்றி எழுதச் சொல்லனும்னு நெனச்சிகிட்டேன்.

‘ஜோக்கடிக்காதீங்க காக்கா… மார்க்கெட் பத்தி சொல்லுங்க…”

“மார்க்கெட்டா?” என்று இழுத்துக் கொண்டிருக்கும்போது சாயா வந்தது.

காக்கா என்னைப் பார்த்தார். சாயாவைப் பாத்து சாடை செய்து, “சாயா குடி” என்றார்.

எங்கள் வீட்டில் ஜிம்மியிடம்தான் இவ்வாறு பேசுவோம்.

coconutoilசாயா குடித்த பின், கூட்டிச் சென்று தென்னை மரங்களைக் காண்பித்தார். எரியோஃபைட் தாக்கிய தேங்காய்களைக் காண்பித்தார். ப்ரௌன் கலரில் சூம்பிப் போன காய்கள். வராத வேலையாட்கள், எரியோஃபைட் பூச்சி, ஏறும் விலைவாசி எல்லாவற்றையும் ஒரு பாட்டம் புலம்பிவிட்டு, ‘வெளிச்செண்ணெய்க்கு 60 ரூபா வெல கம்மி ஸாரெ… ஒரு நூறு ரூபா இருந்தாத்தான் நாலு காசு கையில கிடைக்கும்’ என்று முத்தாய்ப்பு வைத்தார். அவர் பின்னால் கரோலா கார் அமைதியாக நின்றிருந்தது.

அடுத்தவர் இந்து. நாயரா, மேனனா, பிள்ளையா என்று தெரியவில்லை. “எங்களுக்கே சொந்தமா ப்ராண்ட் இருக்கு. அது வித்தது போக, இருந்தா தர்றோம். ஆனா அட்வான்ஸு பேமெண்டு’ என்றார்.

மற்றபடி பழைய புராணம்தான். பூச்சி… கூலி… விலைவாசி… அதனால எண்ணெய்க்கு வெல கூட்டனும்… இடைத்தரகரைப் பாத்தேன். ‘அப்ப வர்றோம் ஸாரே” என்று கிளம்பினோம்.

“கிறித்தவரப் பாக்கணுமா?”ன்னு கேட்டார் இடைத்தரகர். வேணாம், ராத்திரி கோயமுத்தூர் போய் நிம்மதியாத் தூங்கறேன்னு ஓடி வந்துட்டேன்.

அங்கிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியே பயணித்து, கோவையில் தங்கி, அடுத்தநாள் காலையில் காங்கேயத்தில் கால்வைத்தேன். தொலைவில் வெள்ளுடைத் தேவதைகள் யாரும் ஸ்லோமோஷனில் குதித்தோடி வருகிறார்களா என்று பார்த்தேன். சொந்த மண். ஒரு புல்லரிப்பு? ம்ஹூம்… வியர்வைதான் வந்தது.

கேரளத்தில் மூவர் எனில், காங்கேயத்தில் முப்பத்து மூவர். எல்லோரும் புதிதாய் உருவான வியாபார காந்தங்கள். முக்கால்வாசி கவுண்டர்கள், கொஞ்சம் செட்டியார்கள், ஒன்றிரண்டு முதலியார்கள். இங்கு கதையே வேறு. இங்கு இரண்டு தரகர்கள். ஒருவர் தி.மு.க மற்றொருவர் காங்கிரஸ்.

மார்க்கெட் எப்படி என்று கேட்டேன் ஒரு செட்டியாரிடம். 24 மனைத் தெலுங்குச் செட்டியார்.

“கொஞ்ச செரமந்தாங்க… ஆனா ப்ரச்சின வராதுங்க. ஸப்ள பண்டீர்லாங்க.”

“வெல அறுபதா.. ஜாஸ்தியாயிருக்கே?”

“அது பரவால்லீங்க. முன்னே பின்னே பாத்துச் செஞ்சரலாங்க.”

எவ்வளவு விலைக் குறைப்போ, அவ்வளவு கலப்பு என்பது இங்கே தேசியக் கொள்கை.

“வெல ஏறுமா?”ன்னேன்.

“இப்ப சித்திரை மாசங்க. இப்பவே இப்பிடின்னா, ஆடி மாசம் கட்டாயம் 70 ஆயிருங்க!”

“அப்ப, கொஞ்சம் எண்ணெய் வாங்கி வெச்சா, நல்லாருக்குமா? வெல ஏறுமா?”

“தங்கமாச் செய்யலாங்க”

“இறங்கற வாய்ப்புகள் உண்டா?”

“சொல்ல முடியாதுங்க. எறங்கினாலும் எறங்கிரும்.”

எங்களூரில் கோவில் பூசாரி இருப்பார். கைகால் சுளுக்கு, வலி போன்றவற்றுக்கு, துண்டை சுழற்றி, பாடம் போடுவார். முணுமுணுப்பாக, திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தை மந்திரம் போல் சொல்வார். ‘உனக்கு வலிச்சா எனக்கென்ன? உனக்கு வலிச்சா எனக்கென்ன?’ என்பதே அது. அப்படி ஒரு முகபாவனை கொண்டிருந்தார் செட்டியார்.

5-6 பேரைப் பார்த்து, பேசி முடிப்பதற்குள்ளே பொழுது சாய்ந்துவிட்டது. காங்கேயம் தேங்காயெண்ணெய்த் தொழிலதிபர்கள், தண்ணீரில் மிதக்கத் துவங்கி இருந்தார்கள். துப்பறியும் சங்கர்லால் போல, அவர்கள் அருந்திக்கொண்டிருந்த ப்ராண்டி, ரம் பாட்டில்களூடே நீந்திச் சென்று முடிந்த அளவு விஷயங்களை அள்ளினேன்.

இப்படியாகத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு போய் தில்லியில் எனது மேசை மேல் கொட்டினேன். கொட்டிய தகவல்களை இரண்டு வகையாகப் பிரித்தேன். அடிப்படை ஆராய்ச்சி (fundamental analysis) மற்றும் நுட்ப ஆராய்ச்சி (technical analysis) என. அடிப்படை ஆராய்ச்சி என்பது, இந்தியாவில் தேங்காயெண்ணெய் உற்பத்தி எவ்வளவு (அந்த வருடம் எரியோஃபைட் என்னும் பூச்சி தாக்கியதில் பலத்த சேதம்), மழை எவ்வளவு, நுகர்வு எவ்வளவு, என்பது போன்ற புள்ளி விவரங்கள். இவற்றோடு, சந்தையின் மதிப்பீடு என்று நாயர்களும், செட்டியார்களும், கவுண்டர்களும் சாராய போதையில் உளறியவற்றையும் சேர்த்து ஒரு மூலையில் வைத்தேன். வைத்த சற்று நேரத்திலேயே ஒரு குட்டிச் சாத்தான் போல் உருவெடுத்து பல்லிளிக்க ஆரம்பித்தது. “தம்பி, இந்த வருஷம் பூச்சித் தாக்குதல்ல, தேங்காண்ண உற்பத்தி காலி” என்று கீச் கீச்சென்று கத்தத் துவங்கியது. “தே… சும்மாரு…” என்று அதட்டி உட்கார வைத்தேன்.

நுட்ப ஆராய்ச்சி ஒரு இளம் மேலாளனுக்கு தனி ஆவர்த்தன வாய்ப்பு. தன் தலைவரான முதுநிலை மேலாளர் தாண்டி தன்னிடமும் விஷயம் இருக்கிறது என்று காட்டிக்கொள்ளும் ஒரு நிகழ்வு. புள்ளியியல் புள்ளிகள் மேல் கோடு போட்டு, கட்டம் கட்டி, வட்டமிட்டு இன்னும் பல கர்ணங்களை அடித்து, வீடு கட்டிப் பணிந்து நின்றால், முதலாளிகளின் தலை லேசாக ஆடுவதைக் காணலாம். அவ்வமயம், மோகானாம்பாள் மாதிரி, “இன்கிரிமெண்ட் சமயத்துல, என்ன மறந்துறாதேள்” என்று ஏக்கத்தோடு நயன பாஷையில் ஒரு வேண்டுகோள் வைப்பது பெரும்பயனளிக்கக் கூடியது. பொதுவாக இந்திய முதலாளிகளுக்கு ஏழாம் கிளாஸ் கணக்குக்கு மேல் அதிகம் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தெரியாமல் இருப்பதால்தான் அவர்கள் முதலாளிகளாக இருக்கிறார்களோ என்னும் ஒரு ஐயமும் எனக்கு உண்டு.

நாயர்களிடமிருந்து கொண்டு வந்த அறுபதாண்டு மாதாந்திர விலைப் புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்ச்சியைத் துவங்கினேன். சராசரி, நகரும் சராசரி (moving averages), நியம விலகல் (standard deviation – சரியான மொழி பெயர்ப்பா?), பெல் வளைவு என்னும் அடிப்படை ராகங்களில் துவங்கினேன். உச்சகட்டமாக, ஆறு மாத தினசரி தேங்காயெண்ணெய் விலைகளை எடுத்து, அவற்றின் மீது ஃபிபோனாச்சி (fibonocci) தேற்றத்தைப் ப்ரயோகித்தேன்.

ஃபிபோனாச்சி தேற்றம் பங்குச் சந்தையில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுவது. எந்த வரிசையிலும், புள்ளி விவரங்கள் ஒரு கணக்குப்படி ஏறி இறங்குகின்றன என்பதே அவர் தேற்றத்தின் சாராம்சம். அதை உபயோகித்தால், அது, 60 ரூபாய்க்கப்பறம், விலை அறுபத்தி எட்டைத் தொடும், அதைத் தாண்டினால் 75க்கு மேலே என்றது. கீழே என்று கேட்டேன் – 54 அந்த விலை உடைந்தால் 48 என்றது. இதுவும் உனக்கு வலித்தால் எனக்கென்ன தேற்றம்தான். என்ன செய்வது என்று யோசித்தேன். “அதிகம் யோசிக்காதே… நாயருக்கும், செட்டியாருக்கும், கவுண்டருக்கும் தெரியாததா இந்தக் கம்ப்யூட்டருக்குத் தெரியப் போகுது. பேசாம எண்ணெய வாங்கிப் போடு!” என்றது குட்டிச்சாத்தான். குழம்பினேன். மோகன் தாஸ் வழியில் கொஞ்சம் உள்ளுணர்வைக் கூப்பிடலாமா என்று முயற்சித்தேன். குட்டிச்சாத்தான் ஆடிய ஆட்டத்தில் அது வெளியே வர மறுத்துவிட்டது.

ஆனா எதுனாச்சியும் பண்ணனுமே. இல்லண்ணா தொழில் முறை வல்லுநன் என்னும் மரியாதை போயிரும். ஒன்னும் இல்லன்னாலும் ஒரு அப்பண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணினாத்தானே மருத்துவனுக்கு மரியாதை. சரி ஒரு ஆயிரம் டன் வாங்கி வைப்போம் என்று முடிவெடுத்தேன். அதற்குத் தகுந்தாற்போல், அடிப்படை ஆராய்ச்சித் தகவல்கள், நுட்ப ஆராய்ச்சி க்ராஃப்கள் முதலியவற்றை மிகக் கோர்வையாக எழுதி, பவர் பாயிண்ட் சிலைடுகள் தயாரித்தேன். ஒரு வழியாக 25-30 நிமிடம் ஓடும் ஒரு திரைக்கதை ரெடி. கார்ப்பரேட் நிறுவனக் கச்சேரிகளின் ஃபார்மேட் அரைமணி நேரம்தான். என் தலைவருக்கு அனுப்பினேன். “அப்படியே ப்ரசெண்ட் பண்ணிரு” என்றார் தலைவர் திங்கட்கிழமை காலையில், எனது ப்ரசெண்டேஷனுக்கு அரை மணி முன்னதாகச் சென்று எல்லாம் சரியா என்று பரிசோதித்துக் கொண்டேன். பஜாஜ் ஸ்கூட்டரையும், விண்டோஸையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. எப்போ மக்கர் பண்ணும்னு கடவுளுக்கும் தெரியாது.

பழுத்த பரங்கிப்பழம் போன்ற முகத்துடன், முந்தைய நாளின் ப்ளூ லேபிளின் மிச்சம் கண்கள் வழியே கசிய வந்தார் முதலாளி. அமர்ந்தார். மற்றவர்களும் அமர்ந்தனர்.

“ம்” என்றார்.

நான், “வந்தேனே…” என்று துவங்கினேன். அவ்வப்போது ப்ரசண்டேஷனை நிறுத்தி அதி முக்கியக் கேள்விகள் கேட்டார்.

”தேங்காயெண்ணெய் கேரளாவிலிருந்துதானே வரும்? தமிழ்நாட்டுக்கு எப்போ வந்தது?”

அடுத்து, தமிழ்நாடு இலங்கையில் தானே இருக்கிறது என்று ஒரு கேள்வியை எதிர்பார்த்தேன். தலைவர் மிக சாமர்த்தியசாலி. பாலக்காட்டுத் தமிழர். டி.என்.சேஷன் பாலக்காட்டுத் தமிழர்களை நான்கு வகையாகக் கூறுவார். 4 Cs என்று. Cooks, crooks, carnatic musicians and civil servants. இவர் நால்வரையும் கலந்து செய்த புத்திசாலி. சமாளித்துவிட்டார்.

“அது, மேற்குத் தொடர்ச்சி மலையின் இருபுறங்களிலும் இருக்கிறது. பொதுவாகக் கேரளா என்று சொன்னாலும், தென்னிந்தியா முழுக்க இருக்கிறது.”

“ஓ!” என்றார் ஆச்சரியமாக. இன்று மாலை, ஜல பானம் அருந்தும் போது நண்பர்களிடம் சொல்ல அவருக்கு ஒரு புது விஷயம் கிடைத்து விட்டது போல.

புள்ளிவிவர நுட்ப ஆராய்ச்சி ஸ்லைடுகளில் கொஞ்சம் வித்தை புரிந்திருந்தேன். க்ராஃப்களில் அம்பு நகர்ந்து நகர்ந்து மேலே செல்வது, கட்டங்கள் திடீரென எழுதல் மறைதல் என… முதலாளி அசந்து விட்டார். திரும்பித் தலைவரைப் பார்த்தார். தலைவர் முகத்தில் கொஞ்சமாய்ப் பெருமிதப் புன்னகை.

ப்ரசெண்டேஷன் முடிந்ததும், “எவ்வளவு முதலீடு?” என்றார்.

“சுமார் ஆறு கோடி”

“ஓகே. டேக் கேர்!”

ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?

ஓணத்துக்கு முன்னும் பின்னும் ஒரு வாரம் கேரளம் வேலை செய்வதில்லை. மார்க்கெட் துவங்கிய முதல் நாள் விலை 62க்கு வந்தது. தலைவரிடம் சென்று சேதி சொன்னேன். இருடா, இன்னும் டிமாண்ட் வரத்துவங்கவில்லை என்றார். இரண்டாவது வாரம், அது அங்கேயே உட்கார்ந்திருந்தது. சரி வந்திரும், வந்திரும் என்று சொல்லிக் கொண்டேன்.

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. சட்டென்று விலை 58க்கு வந்தது. ஃபிபோனாச்சி இறங்கினால் 54 என்று சொல்லியிருந்தது.. வயிற்றில் பூச்சி பறந்தது. அய்யா என்றலறிக் கொண்டு தலைவரிடம் சென்றேன்.

“எவ்வளவு நஷ்டம்?” என்றார்.

“விலை, வட்டி, வாடகை எல்லாம் சேர்த்து நம் அடக்க விலை 62.75. கிட்டத்தட்ட 50 லட்சம் நஷ்டம்.”

“க்ரேட்! கணக்குச் சரியாக வைத்திருக்கிறாய். வியாபாரத்தில்தான் சொதப்பி விட்டாய். உன் குல தெய்வம் என்ன?”

“முருகன் ஸார்”

“கும்புட்டுக்கோ… இல்லீன்னா பஞ்சாபிங்க கெடா வெட்டிடுவாங்க”

என்ன கவி பாடியும் முருகன் இரங்கவில்லை. அடுத்த வாரம் விலை நேரே 50ஐத் தொட்டது. இம்முறை தலைவர் அறைக்குப் போகவே பயமாக இருந்தது. 1.3 கோடி நஷ்டம். காலை, இருக்கையில் அமர்ந்து ப்ரார்த்தனை செய்யும் நேரம் தொலைபேசி அடித்தது.

“வா…”

கதவைத் திறந்து போனேன்.

“உனக்கு வெத்திலை பாக்கு வைத்துக் கூப்பிடணுமா?”

அமைதியாய் நின்றேன்.

“இன்னியோட எவ்வளோ நஷ்டம்?”

“1.3 கோடி ஸார்”

“ஆமா.. கேரளா தமிழ்நாடுன்னு டூர் போனியே யார் யாரைப் பாத்தே?”

சொன்னேன்.

“எம்.எஸ்.குப்புஸாமி முதலியாரப் பாக்கலியா?”

“இல்லே ஸார்”

“கெட் ஹிம் ஆன் த லைன் அண்ட் புட் ஆன் தெ ஸ்பீக்கர் ஃபோன்.”

“குப்புஸாமி வணக்கம். மார்க்கெட் என்ன சொல்லுது?”

அவர் விலாவாரியாகச் சொன்னார். இனி 50க்கு கீழேதான் என்று. அறுவது ரூபாய் மிக அதிக விலையென்று வாங்கிச் சேகரிக்க வில்லையென்று.

”ஒங்க பையன் எங்கிட்டே ஒரு வார்த்த கேட்டிருக்கலாமே ஸார்.. நான் கூட வருத்தப் பட்டேன். ஏன் நீங்க இருந்தும் இப்படிப் பண்றாங்கன்னு”

”மார்க்கெட் போய் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆள விட்டுட்டு மத்த எல்லாம் பண்ணியிருக்கே”

“ஸாரி ஸார்..”

“உன் ஸாரியின் விலை 1.3 கோடி. கெட் லாஸ்ட்!”

கதவைச் சார்த்திவிட்டு வந்தேன். அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு லோதி ரோடு ரமண கேந்திரம் சென்றேன். அவருக்கென்னெ வழக்கம் போல சிரித்துக் கொண்டிருந்தார். கேட்டால், ‘எது நடக்குமோ அது நடந்தே தீரும், எது நடக்காதோ அது என் முயற்சிக்கினும் நடவாது. ஆகவே மௌனமாய் இருக்கை நன்று’ அப்படீன்னுவார். போய்யாங் என்று கோவித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். கீழே கூட்டமாக இருந்ததால், முதல் மாடிக்குச் சென்றேன். அங்கே ரங்கநாதர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். ஜில்லெனும் க்ரானைட் தரையில் கண்மூடி அமர்ந்தேன். “ஊரிலேன்… காணியில்லை… உறவு மற்றொருவர் இல்லை” என்று மனதுள் பாட்டு ஓடியது. கண்களில் நீர் ததும்பிக் கசிந்தது. மெல்ல மனம் சமன் அடைந்து, கொஞ்சம் அமைதியானது. ஆனது ஆகட்டும் என்ற முடிவுடன் எழுந்து ப்ரசாதம் வாங்கிக் கொண்டு, வீட்டுக்குக் கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை நேரே தலைவர் அறைக்குச் சென்றேன்.

“என்ன?” என்றார்.

கையிலிருந்த உறையைக் கொடுத்தேன்.

“என்ன, 1.3 கோடிக்குச் செக்கா?”

“இல்ல ஸார். என்னுடைய ராஜினாமாக் கடிதம்.”

அவர் அறை அதிரச் சிரித்து நான் பார்த்தது அதுவே முதல் தடவை.

“பத்துக்கு ஆறு சரியான முடிவு எடுக்கிற பொருள் வணிகன் பெரிய ஆள். சந்தை என்பது கோடிக்கணக்கான மனங்கள் எடுக்கும் முடிவுகள் சங்கமிக்கும் ஒரு பெருங்கடல். எனக்குத் தெரியும் என்பவன் முட்டாள். எனக்குத் தெரியாது; ஓடிப் போறேன் என்பவன் பேடி. இன்னும் ஒரு வருஷம் எல்லோரும் உன்னை ஏளனமாப் பாக்கறது, உன்னை இன்னும் சிறந்த பொருள் வணிகனாக்கும். போய் வேலயப் பார்.”

உறையைத் திறந்து கடிதத்தைக் கிழித்தெறிந்தார்.