பால்வழி குற்றத் தடுப்பு

மங்கை நடராஜன்

பேராசிரியர். மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார்.

இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பாளர்: உஷா.வை.

(உதவி: மைத்ரேயன்)

”பெண்கள் தகுதி நிலை ஆணையம் (கமிஷன் ஆன் தி ஸ்டேடஸ் ஆஃப் விமென்) தன் எழுபது வருடச் செயல்பாட்டில் நெடுகவும், பாலின சமத்துவத்திலும், பெண்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பதிலும் உலகளவில் செயல்திட்டங்களை வடிவமைப்பதற்காக, பெண்களின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து ஊக்குவிப்பதுடன், ஐ.நா சபையின் அனைத்து நடவடிக்கைகளிலும் பாலினப் பார்வைச் சாய்வுகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து வந்திருக்கிறது.”

அறிமுகம்:

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதும், ஒழிப்பதும் பல பத்தாண்டுகளாய் ஐ.நா சபையின் செயல்திட்டத்தில் இருந்து வருகின்றன. ’பெய்ஜிங் அறிக்கை’ என்றறியப்படும் தீர்மானம் நிறைவேறிய தருணத்திலிருந்து பல நாடுகள், முக்கியமாய் மரபுசார்ந்த வளரும் நாடுகள், தமது மண்ணில் வன்முறைகளைத் தடுக்கவும், களையவும் தீவிர முயற்சிகளைச் செய்து வருகின்றன. அரசு மற்றும் அரசு சாராத முகமையகங்கள் தனியேயும், கூட்டாகவும் பெண்களுக்கு எதிராய் இழைக்கப்படும் குற்றங்களை திறனுடன் எதிர்கொள்வதற்குப் பல வழிகளைத் தேடுகின்றனர். காட்டாக, அத்தகைய வன்முறையை ஒழிப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்துவது இவற்றில் ஒரு அணுகல்.

இந்த விஷயத்தில் தலையாய பிரச்சினை குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை (அல்லது வீட்டில் நெருக்கமானவரது வன்முறை) போன்றவை இன்னும் பல சமுதாயங்களில் தனிமனிதர்களின் சொந்தப் பிரச்சினைகளாய் கருதப்படுவதால் இத்தகைய அவதிக்குள்ளாகும் பெண்கள் உதவி நாடிப்போவதைத் தவிர்க்கிறார்கள். இதைத் தடுக்கும் சட்டபூர்வ அதிகாரம் உள்ளவர்களிடம் கூட சொல்வதில்லை.

india-2

மரபுசார்ந்த நாடுகளில் பல பெண்கள் காவல்துறையின் உதவியை நாடாததற்கான காரணங்கள்:

• தங்களது சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி ஆண் அதிகாரிகளிடம் பேசுவதற்கு அவர்கள் தயங்குகிறார்கள்.

• ஆண்கள் பிற ஆண்களுக்கே ஆதரவும் இரக்கமும் கொடுப்பார்கள், அவர்களைத்தான் நம்புவார்கள் ஆகையால் அவர்களிடமிருந்து தங்களுக்குப் பரிவு கிட்டாது எனப் பெண்கள் நம்புகிறார்கள்.

• ஆண் அதிகாரிகள் பெண்களின் மனப்பாங்கைப் புரிந்து கொள்ள மாட்டாதவர்கள் எனவும், பெண்கள் குடுமப வ்ன்முறையால் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடியாதவர்கள் எனவும் நம்புகிறார்கள்.

• ஆண் அதிகாரிகள் தாம் ஆதரவற்று இருப்பதைக் கண்டு, தம்மிடம் தகாத முறையில் நடக்கக் கூடும் என்று பயப்படுகிறார்கள்.

• காவல்துறையின் குறுக்கீடு தங்களது துணைவர்களை முன்னை விட அதிகமான வன்முறையை நாடுபவர்களாக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

• புகார் செய்தால் போலிஸார் தங்களது கணவன்மார்களைப் பிடித்துச் சென்று தாங்கள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிடுவோம் என அவர்கள் பயப்படுகிறார்கள்.

அமெரிக்க வழக்கறிஞர் சங்கத்தின்படி, வாழ்வையும் சொத்தையும் அச்சுறுத்துவதாக ‘அறிய’ப்படும் நடத்தைகளைத் தடுப்பதும், குற்ற நடத்தைகளால் தாக்கப்பட்டு. உடல்ரீதியான சேதத்தை எதிர்நோக்குவோருக்கு உதவுதலும், போலிஸாரின் பல கடமைகளில் முக்கியமான சில. உலகமெங்கும் போலீஸார் செயல்படும் விதங்களில் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் நடந்துள்ளன – இவை காவல் துறையின் பெண் அதிகாரிகளின் பஙகை முக்கியமான விதஙகளில் பாதித்துள்ளன. (வீய்ஸ்பர்ட் மேலும் ப்ராகா, 2006, பக்:350) பெண் அதிகாரிகள் காவல்துறைக்கான, காப்பு மற்றும் தடுப்புக் கடமைகளைச் செய்வதற்கு இயல்பாகவே தனித்திறமை பெற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று ஆப்பியர் (Appier) எனும் ஆய்வாளர் தன் 1992-ஆம் வருடப் பிரசுரத்தில் கூறுகிறார்; இதனாலேயே பல பெண் சீர்திருத்தவாதிகளும் பணியில் இந்த வித கடமைகளைப் பெண் அதிகாரிகளுக்குக் கொடுப்பதை ஆதரித்துள்ளனர். ’பிரச்சினைக்கேற்ற அணுகல்’ முறை, மேலும் ’முன்கூட்டிய நடவடிக்கை’ (proactive) வகை நவீன காலப் போலிஸ் நடவடிக்கைகளோடு இணங்கிப் போகும் இந்த அணுகலை, ‘பால் வகைக் காவல் முறை’ (‘gendered’ policing) எனச் சொல்லலாம். இந்த வகைக் காவல் அளிப்பு உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மிக்க செயலாற்றலுடன் விளங்குவது இப்போது நிரூபிக்கப் பட்டு வருகிறது.

பெண் காவல் நிலையங்களைப்பற்றிய கள ஆய்வுகளை, தமிழ்நாட்டில் இருபதாண்டுகளாகவும், [அண்மையில் ப்ரெஸ்யு நாட்டிலும் (Brazil)] நான் நடத்தி வருகிறேன். அந்த ஆய்வுகளைச் சார்ந்த இந்தக்கட்டுரையின் குறிக்கோள், குற்றத்தடுப்பில் பன்னாட்டுத்தரம் மற்றும் முன்மாதிரிகளை எட்டுவதற்கான சிறந்த நடைமுறைகளை விவரிப்பதாகும். குறிப்பாக, இந்நாடுகளில் காவல் நிலயங்களில் பெண்களின் பங்கையும், எவ்வாறு அந்தப் பெண்கள், துன்பம் சூழ்ந்த நிலையில் சமூகத்தில் இருக்கும் பெண்களுக்கு நியாயத்தையும் பாதுகாப்பையும் கொடுக்க வழி வகுக்கின்றனர் என்பதையும் நான் விவரிக்கிறேன்.

காவல் நிலையங்களில் பெண்கள்:

அமெரிக்காவும் இங்கிலாந்தும், பெண்களோடும், குழந்தைகளோடும் தொடர்பு கொண்டு செயலாற்றவென, பெண் அதிகாரிகள் பணியாற்றும் காவல்துறைப் பிரிவுகளை, அறுபதுகளில் ஆரம்பித்தனர். சமகால இலக்கியத்தின்படி, இந்தப் பெண் அலுவலர்கள் தங்களது பணியில் மகிழ்ச்சி கொண்டிருந்ததோடு, தம் பணியில், சட்ட அமலாக்கத்திற்குச் சமமான அளவு குற்றத் தடுப்பும் முக்கியமானதென்று நம்பினர். எழுபதுகளில் ஆரம்பித்த சம வாய்ப்பு இயக்கத்திற்குப் பின்பே இத்தகைய பிரிவுகள் பாலின அடிப்படையில் வேற்றுமை காட்டுவன எனக் கருதப்பட்டு மூடப்பட்டன.

இன்றைய நவீன உலகத்தில் பெண் காவல்நிலையங்கள் சில சமயம் காலத்துக்கு ஒவ்வாதனவாகக் கருதப்பட்டாலும், அவை தம் ஆண் துணைவர்களின் வன்முறையால் பெரும் அச்சத்தில் வாழும் பல பெண்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள, தமிழ்நாடு எனும் மாநிலத்தின் அனுபவத்தில், பெண் காவலர்கள் கொண்ட அதன் 200 காவல் நிலையங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்வதில் முன்னேற்றம் எற்படுத்தியதுடன், ‘என் சகோதரி என்னை பாதுகாக்கிறாள்,’ என்ற பாதுகாப்பு உணர்வையும் பெண்களுக்கு கொடுத்துள்ளன என்பதையே இங்கு நான் சொல்கிறேன்.

தற்போது முழுதும் பெண்களே நடத்தும் காவல்நிலையங்கள்  “மரபுசார்ந்த” மற்றும் மாறி வரும் சமூகங்களிலேயே பெரிதும் காணப்படுகின்றன. பெண்களுக்கு காவல்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், பெருகி வரும் (பதிவு செய்யப்பட்ட வகை) குடும்ப வன்முறைக் குற்றங்களை சமாளிப்பதற்கு்மென, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபால், பிலிப்பின்ஸ் போன்ற பல ஆசிய நாடுகளில் பெண்களுக்கான மேசைகள், பிரிவுகள், நிலையங்கள், செயலகங்கள் மேலும் பெண்களின் குழுக்கள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

1973 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால். கேரள மாநிலத்தில் இந்தியாவின் முதல் ’அனைத்துப்பெண்கள் காவல்துறைப் பிரிவு’ துவக்கி வைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், இந்தியாவில் 332 பெண்கள் காவல் நிலையங்கள் இருந்தன. 1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, முக்கியமாய் வரதட்சிணைக் கொடுமைகளைப் பதிவு செய்வதை மேம்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கையாய் முதல் பெண்கள் காவல்நிலையம் துவக்கப்பட்ட்து. ஆனால் இன்று இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில், 196 பெண்கள் காவல்நிலையங்கள் இன்று தமிழ்நாட்டில்தான் உள்ளன. இவை பெண்களுக்கெதிரான குற்றங்களை, முக்கியமாய் வரதட்சிணை சார்ந்த பிரச்சினைகளை விசாரிக்கின்றன. மேலும் குடும்பச் சச்சரவுகள், தம்பதிப் பிரச்சினைகள், சிவில் வழக்குகள், ஏமாற்றான திருமண வாக்குறுதிகள், பாலுறவுத் தாக்குதல்கள், வன்புணர்வு, ஆட்கடத்தல் மற்றும் பெண்கள் தொடர்பான இதர வழக்குகளையும் கையாளுகின்றன.

india-1

1985 ஆம் ஆண்டில் ப்ரெஸ்யு (Brazil) நாட்டின் ஸௌ பௌலோ நகரத்தில் முதல் பெண்கள் காவல்நிலையம் அறிமுகப்படுத்தப்பட்ட்து. இது இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக அனைத்து மகளிர் போலிஸ் நிலையம் ஒன்று துவங்கப்பட்டு ஐந்தாண்டுகள் கழித்து நடந்தது. ப்ரெஸ்யு நாட்டில் இந்நிலையங்கள் கொலை, கொலைமுயற்சி, தற்கொலை, சிசுக்கொலை, கருச்சிதைப்பு, உடல் சார்ந்த வன்முறை, குழந்தைகளைத் துன்புறுத்துதல், அவர்களைப் பராமரிக்காமல் இருப்பது, வன்புணர்வு அல்லது அதற்கு முயற்சி, பாலுறவுக்குத் துன்புறுத்துதல், அதற்கென வன்முறை, விபச்சாரம், மற்றும் குழந்தைகளை ஆதரவற்றுக் கைவிடுதல் போன்ற குற்றங்களை கையாளுவதற்காக உருவாக்கப்பட்டன. ப்ரெஸ்யு நாட்டின் முன் மாதிரியை ஏற்ற அர்ஹென்டீனா, கொலொம்பியா, கோஸ்டா ரீகா, எல் ஸால்வதோர், எக்வடோர், நிகராகுவா, பெரு, உருஹுவாய் போன்ற 8 லத்தின் அமெரிக்க நாடுகளும் பெண்கள் காவல்நிலையங்களை உருவாக்கியுள்ளன. இன்று ப்ரெஸ்யுவில் 408 பெண் காவல் நிலையங்கள் உள்ளன.

ப்ரெஸ்யுவில் இந்த நிலையங்கள் உருவாக்கப்பட்ட காரணம், “…பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு மரபுவழி நிறுவனங்களின் எதிர் நடவடிக்கைகள் போதவில்லை என்பதோடு அவை ஒருதலைப் பட்சமாய் இருந்தன. காவல்துறையினர் பெரும்பாலும் எப்போதும் ஆண்களே என்பதால் உடல் மற்றும் பால் வன்முறைக்குட்பட்ட பெண்களின் வழக்குகளை வழக்கமாய் அலட்சியப்படுத்தி வெகு அரிதாகவே நடவடிக்கை எடுத்தனர்” என்கிறார் என்கிறார் நெல்சன் எனும் ஆய்வாளர் (2002ஆம் வருடப் பிரசுரம், பக் 197). 1) பெண்களுக்கு நீதி பரிபாலனததில் கிட்டும் அலட்சியம், பாரபட்சம் 2) வன்முறைக்குப் பலியான பெண்களுக்கு அவசரத் தேவைகளான உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் சட்டரீதியான ஆலோசனை அளிக்க வேண்டி இருப்பது 3)அரசாங்கத்தின் மேல் பெண்ணிய இயக்கம் உருவாக்கிய அரசியல் நெருக்கடி ஆகிய மூன்றும் ப்ரெஸ்யுவில் D D M (delegacia de defesa da mulher), எனப்படும் இந்தப் பெண் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்ட காரணங்கள்.

ப்ரெஸ்யுவில் பெண்கள் காவல்நிலையங்கள் எண்ணிக்கையில் பெருகிவருவது, பெண்போலிஸாருக்கு பாலின விழிப்புணர்வுள்ள அரசு ஊழியர்களர்களாய்ச் செயல்பட இடமளித்துள்ளது என்கிறார் ஸாண்டுஸ் (2005ல் பிரசுரம்). துன்புற்ற பெண்களுடன் நாள்தோறும் அவர்களுக்கு அனுபவம் கிட்டுவதால், பெண்களுக்கெதிரான வன்முறையின் குற்றத் தன்மையைப் பற்றிய பெண்போலிஸாரின் எண்ணோட்டங்கள் மாறி உள்ளன. பெண்ணிய சிந்தனையாளர்களிடையே பழகுவதும், பாலியல் வன்முறை மற்றும் பெண்ணுரிமைகள் பற்றிய பெண்ணிய சிநதனையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் பழக்கம் பெற்றதும், சட்டங்களை அவர்கள் பயன்படுத்தும் முறைகளில் விரிவான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

மகளிர் காவல்நிலையங்களின் கட்டமைப்பும் செயல்பாடும் – இந்தியா, பிரெஸ்யு:

இந்திய மேலும் ப்ரெஸ்யுவின் காவல்நிலையங்களின் இடையே நிர்வாகக் கட்டமைப்பில் சில வித்தியாசங்கள் இருப்பினும், அவை வன்முறைக்கு இரையான பெண்களுக்கு ஒரே வகை சேவைகளையே செய்கின்றன. இத்தகைய நிலையங்களில் புகார் கொடுக்கச் செல்லும் ஒரு பெண்ணுக்குத் தனது நிலையைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பெண் அதிகாரியை சந்திப்போம் என்ற நிச்சயம் இருக்கிறது. குடும்ப வன்முறைகளைச் சமாளிக்க, கலாசாரப் புரிதல் உள்ள, பிரச்சினைக்கேற்ற அணுகுமுறை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

brazil-1

இரு நாடுகளிலுமே இந்தப் பெண் காவல்நிலையங்களுக்கு, பொதுக் காவல்நிலையங்கள் இருக்கும் அதே இடத்திலேயோ, அல்லது அண்மையிலோ இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சில நிலையங்களில் ஆலோசகர்களோ உளவியல் நிபுணர்களோ இருக்கிறர்கள். ஆனால் பெரும்பாலும் பெண் அதிகாரிகள், வெளி நிபுணர்களிடமிருந்தே உதவி பெறுகிறார்கள். அனேகமாய் இவர்கள் உளவியல் நிபுணர்களின் இணையங்கள் மூலம் ஆலோசனையும் அரசு சாரா சேவை நிறுவனங்களிடமிருந்து பிற உதவிகளும் பெறுகின்றனர். பெரும்பாலான நிலையங்கள் உதவும் பாதிக்கப்படுவோர்களில் அனேகர் கீழ்மட்ட / கீழ்-மத்திய வர்க்கத்தில் உள்ளவர்களே. இத்தகையோரில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடும்போது வழக்கமாய் அவர்கள் தங்கள் கணவர்/மனைவி அல்லது தற்போதைய / முன்னாள் துணைக்கெதிராய் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. மாறாய் அவர்கள் எச்சரிக்கப்படவேண்டும் எனவும், அவர்களுக்கு சரியான அறிவுரையும் ஆலோசனையும் கொடுக்கப்பட்டு, தமது குடும்ப வாழ்வு வலுப்படவேண்டும், நல்லுறவு திரும்ப வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறர்கள். இந்தியாவில் பெரும்பாலும் பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்யவே காவல்துறையை நாடுகிறார்கள்.

பெரும்பாலான பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு வன்முறைக்காளான பெண்களை அணுகும் முறைகளில் பயிற்சி இருப்பதில்லை. புகார் செய்பவர்களைப் பேட்டி காணவும், ஆலோசனை சொல்வதற்கும் இந்த அதிகாரிகள் தாம் பெண்களாய்த் தமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் கற்றதையே நம்புகிறார்கள். இவர்களுடைய இப்பணிகளில் – காவல் அதிகாரியாகவும் சமூக சேவையாளராகவும் ஒரே நேரம் பணி புரிவதில்- ஒரு உள்முரண் இருக்கிறது. எனினும் பெரும்பாலான பெண் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள். ஸௌ பௌலோவில் ஒரு காவல்நிலையத்தின் தலைமை அதிகாரி ஒருவர் சொன்னது இது: “பெண்களுக்கு உதவி செய்யும் பேரார்வமும், அதற்கான பொறுமையும் உள்ளவர்கள்தான் வழக்கமாய் பெண் காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.” எனினும், காவல் துறையினர் இத்தகைய காவல் நிலையங்களின் பணியைக் குறைத்து மதிப்பிடுவதால் இவர்களுக்குப் போதுமான அளவில் பணியாளர்களையும், நிதி ஒதுக்கீட்டையும் கொடுக்காமல் இவற்றை நலிவடையச் செய்கின்றனர்.

குடும்ப வன்முறைத் தடுப்பில் பெண் காவல்நிலையங்களின் செயல்திறன்:

2008 ஆம் ஆண்டின் லத்தின் அமெரிக்கக் காவல்நிலையங்கள் குறித்த ஒரு பிராந்திய முகப்பு ஆராய்வின் (ஜப் (Jubb) மற்றும் பலர் 2008) கண்டுபிடிப்பில் ப்ரெஸ்யுவில் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 54% பேர், துணைவர்களால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் பிறர் உதவியை நாடுகிறார்கள் என எண்ணினர். இவர்களில் 45% அந்தப் பெண்கள் மகளிர் காவல் நிலயங்களூக்கு செல்வதாய் எண்ணினர். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரை, சென்னையிலுள்ள 27 மகளிர் காவல் நிலையங்களில் 20,268 குற்ற மனுக்கள் பெறப்பட்டன. இவற்றுள் 331 (1.6%) மட்டுமே குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகளாய் பதிவு செய்யப்பட்டன. மற்றவை யாவும் ஆலோசனையின் மூலமே தீர்க்கப்பட்டன.

இந்தியப் பெண் காவல் நிலையங்கள் பெருமளவில் வரதட்சிணை சார்ந்த வன்முறைகளைக் கையாளவே நிறுவப்பட்டதால், இந்த வகையில் அவற்றின் செயலாற்றலைப் பற்றிய ஒரு ஆய்வை நான் மேற்கொண்டேன். சென்னையில் மூன்று காவல் நிலையங்களில் 1999 லிருந்து 2001 வரையான மூன்று வருடங்களில் பதிவு செய்யப்பட்ட மனுக்களிலிருந்து, முறையுடன் தொடர்பறு தேர்வு வழியே (systematic random sampling) எடுத்த 474 வரதட்சிணை சார்பான மனுக்களைக் கொண்டு (மொத்த மாதிரிகளில் 1/3 பங்கு) நடத்தப்பட்டது இந்த ஆய்வு. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் ஏதோ ஒரு வகை உடல் மீிதான் வன்முறை- கன்னத்தில் அறைதல், கழுத்தை நெரித்தல், அடித்தல், குத்துதல், தள்ளுதல், சுவற்றில் மோதுதல் போல், ஆனால் மருத்துவ உதவி தேவைப்படுமளவுக்குத் தீவிரமான காயங்களை ஏற்படுத்தாத வகை வன்முறை – இருந்தது.

மனுதாரர்களில் அனேரும் ஏதோ ஒரு விதமான பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டும், பின் உடன்பட்டு சேர்ந்து வாழ்ந்து கொண்டுமிருந்தனர். 25 சதவிகித மனுதாரர்கள் பிரச்சினைகளைக் குடும்ப நீதிமன்றங்கள் வரை எடுத்துச் சென்று முடிவு கண்டனர். மிக அபாயமானவை எனக் கருதப்பட்ட சிலவற்றில் பெண் போலிஸாரால் வன்முறை நடத்தியவர்கள் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிந்தது. 474 மனுதாரர்களிலிருந்து தேர்ந்தெடுத்த 60 பாதிக்கப்பட்ட பெண்களிடம் (ஆய்வுக்குட்பட்ட மூன்று காவல் நிலையங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 20 பேர்) விரிவான பேட்டி நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இப்பேட்டிகளை ஆயநத பின்னர் கண்டுபிடிக்கப்பட்டவை இவை- வரதட்சிணையே முக்கியமான பிரச்சினையாய் இருந்த போதிலும் மற்ற காரணங்கள் குடும்பச் சண்டைகளை எரியும் பிரச்சினைகளாக்கின. சிறு, தனிக்குடும்பங்களில் வளர்ந்த பல பெண்களுக்குக் கூட்டுக் குடும்ப வாழ்வுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளுவது சிரமமானதாக இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் வழக்கமாய் கணவரின் நெருக்க உறவினர்கள் மோதல்களுக்குக் காரணமாய் இருந்தனர். மருமகள் செய்யும் சிறு பிழைகளைப் பெரிதுபடுத்தி அவள் போதுமான அளவு பணம் தன் பெற்றோர்களிடமிருந்து கொண்டு வராததைச் சுட்டிக் காட்டி விமரிசித்தனர். பேட்டி கொடுத்த பெண்களின் கூற்றுப்படி, கணவன்மார்கள் இவர்களின் மீது காட்டும் எரிச்சலுக்கும் கோபத்துக்கும் காரணம் கணவன்மார் வீட்டவர் அவர்களைத் தூண்டி விடுவதே ஆகும்.

india-3

மனைவிக்கும், பெற்றோருக்கும் நடுவே சிக்கிக் கிழிபடும் கணவன்மார்களிடம் மட்டும் என்று தங்களுக்குத் தனியாக ஏதும் பிரச்சினைகள் கிடையாது எனப் பல பெண்களும் கூறினர். பிரச்சினைகளைத் தீர்க்கக் குடும்ப அளவிலும், வேறு கிட்டிய வழிகளை எல்லாம் முயன்றும் களைத்த பின்பே, பொதுவாகப் பெண் மனுதாரர்கள் கடைசி முயற்சியாகவே காவல் நிலயங்களின் உதவியை அணுகினார்கள். அவர்களது பிரச்சினைகளை அனுசரணையுடன் காது கொடுத்துக் கேட்கவும், அவற்றுக்குத் தீர்வு காணுமளவு செல்வாக்கும் உள்ள ஒரு மூன்றாம் நபரின்/அமைப்பின் உதவி இவர்களுக்குத் தேவையாய் இருந்தது. இதைப் பெறுவதையே இவர்கள் இந்தக் காவல் நிலையங்களிடம் எதிர்பார்த்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் (93%) காவல் துறையினரின் உடனடி மறுவினை குறித்து திருப்தி அடைந்திருந்தனர். காவல்துறையினர் அவர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பதில் உதவியாய் இருந்தனர் என்றும், கணவன் மற்றும் அவர் குடும்பத்தாருடன் பல சந்திப்புகள் மூலம் பேசிப் பிரச்சினைகளைத் தீர்க்க்கத் தீவிரமாக முயன்றனர் என்றும் பெரும்பான்மையானோர் (88%) அறிவித்தனர். காவல்துறையின் அதிகாரமும், சக்தியும் தங்களது கணவன் மற்றும் தொடர்புள்ள குடும்பத்தினரின் மேல் முக்கிய ஆற்றல் உடையதாய் இருந்ததாகப் பேட்டி கண்ட பெண்கள் பொதுவாய் கூறினர்.

கணவன்மார்களின் அடி, உதை போன்ற உடல்மீதான வன்முறைகள் குறைந்திருப்பதாகவும், இது பெண் காவல்துறையின் குறுக்கீட்டால்தான் எனத் தாம் நம்புவதாகவும் 50% பெண்கள் கூறினர். உடல்மீது தாக்குதல்கள் பற்றிய புகார் வந்தால் ஜெயிலில் அடைத்துவிடுவோம் என மனுதாரர்களின் கணவர்களைப் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். இதற்கும் மேல் இத்தகைய இடங்களைப் பெண்போலிஸார் கண்காணிப்பார்கள் என்ற எச்சரிக்கையும் கணவன்மார்களுக்கு வழங்கப்படுகிறது. பெண் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு உரக்கப் பேசிக் கண்டிக்கப்படுவது இக்கணவன்மார்களுக்கு கூச்சம் விளைவிப்பதாய் இருக்கிறது. இவை யாவுமாய் சேர்ந்து உடல் மீது வன்முறைகளைத் தடுக்க வழி செய்கின்றன.

மொத்தத்தில், பேட்டி கண்ட பெண்களில் பெரும்பாலானோர் பெண் காவல்துறையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்களது முக்கிய குறைகள் என எடுத்தால் அவை, பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் காவலர் செயல்முறையில் காணப்படும் எதேச்சாதிகாரமும், வீசப்படும் கொச்சை வசைகளும் பற்றியதாகும். எனினும் அவர்கள் ஆண்களை விட பெண் அதிகாரிகள் மூலமே இப்பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பினர். பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் நல அமைப்புகளை விட பெண் காவல்துறையிடமே தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் கூறினர். குறைந்த வருவாய் மற்றும் குறைந்த கல்வி உள்ள குடும்பங்கள் காவல்துறையை அதிகமாய் நாடுவதற்கு இந்த நம்பிக்கையே காரணமாய் இருக்கலாம். மத்திய மற்றும் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மகளிர் நல அமைப்புகளையே அதிக அளவில் நாடுகின்றனர் அல்லது தீர்வை நாடி நேரடியே நீதிமன்றங்களுக்குப் போகின்றனர்..

மகளிர் காவல்நிலையங்களின் பால்-வழி குற்றத்தடுப்புச் சேவை:

brazil-2

மகளிர் காவல்நிலையங்கள் பெண்களுக்கு பெண்களுடன் தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பைக் கொடுக்கின்றன. தணிந்து போவதையே வழக்கமாக்கிக் கொள்ளும்படி கலாச்சாரத்தால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கு, வீட்டில் தஙகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களைப் பற்றிப் புகார் செய்யவும், காவல்துறையின் உதவியை நாடவும் தைரியமளிக்கின்றன. மோசமான கலாச்சாரப் பழக்கங்களால் எவ்வாறு பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதைப் பல குடும்பங்களுக்குப் (கணவன், குழந்தைகள், கணவனின் பெற்றொர் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு) புரிய வைக்க உதவுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களை வன்முறையிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகளைக் கற்பிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாய், பாதிப்புக்குள்ளானவர்களின் வாழ்கையும் மற்றவர்களைப் போல வாழத்தகுதி உடையதே எனப் படிப்பிக்கின்றன. அவர்கள் குடும்பத்தில் வன்முறையைச் சகித்துக் கொள்ள வேண்டியதில்லை எனப் போதிக்கின்றன..

மேலை நாடுகளில் கட்டாயக் கைது, இறுதி வரை விடாமல் வழக்குத் தொடருதல் போன்ற செயல்முறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு காரணம் உண்டு. அது, ’பொதுமக்கள் பாதுகாப்பு,’’பொதுமக்களின் நலன்’ ஆகியவற்றுக்காக, குடும்ப வன்முறை கடுமையாய் தண்டிக்கப்படவேண்டிய மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது என்ற உண்மையே. குடும்ப வன்முறைகெதிரான நடவடிக்கைகளின் மைய நோக்கம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு என்பது மேலை நாடல்லாத சமூகங்களின் அணுகல். பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களைக் கொடுமைப்படுத்தும் கணவன்மாரை விட்டு விலகத் தயாராக இல்லாததற்குக் காரணம் குழந்தைகளும், அப்பெண்கள் தம் ஆண் துணைவரைப் பொருளாதார ரீதியாக நம்பி இருக்க வேண்டி இருப்பதுமே. பாதிக்கப்பட்டவர்கள் மண உறவை சீர்ப்படுத்தி விடவும், சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் தாம் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவுமே விரும்புகின்றனர். மகளிர் காவல்நிலையங்கள் இந்த இலக்குகளை அடையும் வழியாகின்றன.

ப்ரெஸ்யு (Brazil) மற்றும் இந்தியாவில் கண்ட வெற்றிகள் எழுப்பும் ஒரு முக்கியமான கேள்வி ஒன்று – இத்தகைய காவல் நிலையங்கள் காவல்துறையில் நிரந்தரமான அங்கம் வகிக்குமா இல்லை இவை வெறும் தற்காலிக ஏற்பாடுகள்தானா என்பதே அது. இந்தியா, ப்ரெஸ்யு இவற்றொடு கலாச்சார ஒற்றுமைகள் உள்ள இன்ன பிற நாடுகளிலும் இத்தகைய நன்மைகள் விளையுமா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.

குடும்பம் என்பது புனிதமானது. இயன்ற வரையில் திருமணத்தையும், பந்தங்களையும் பாதுகாப்பதற்கு நாம் உழைக்க வேண்டும். ஆனால் துன்பமும், பயமும் குடும்பத்திலிருந்து விலக்கப்பட வேண்டும். நகரமோ, கிராமமோ. மேலை நாடோ, இதர நாடுகளோ, எங்கும் பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது. ஒரு பெண் ஆபத்திலிருந்தால் அவளது குடும்பமும் ஆபத்திலிருக்கிறது. சரியாய் வடிக்கப்பட்டு, செயலாற்றப்பட்டு, நிர்வகிக்கப்படும் பெண்கள் காவல்நிலையங்கள் நிச்சயமாய் ஒரு பாதுகாப்பு வலையை அளிக்கின்றன

________________________________________________________________________

பின் குறிப்பு:

பெரும்பாலான மேலை நாடுகளிலும், ப்ரெஸ்யுவிலும் துவக்கநிலை போலிஸ்காரர்களையும் ‘அதிகாரிகள்’ என்றே பதவிப் பெயர் கொடுத்து அழைக்கிறார்கள்.  போலிஸ் ஆஃபிஸர் என்பது அனைத்துப் போலிஸ்காரர்களையும் அழைக்கும் விதம்.  இந்தியாவில் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் என்றெல்லாம் பல அடுக்குப் பெயர்கள் உண்டு.  இங்கு கட்டுரையில் அதிகாரி எனக் குறிக்கப்பட்டவர்கள் பல நிலைகளிலும் உள்ள பெண் போலிஸ்காரர்களைத்தான்.  ஆய்வுக்கான தகவல்கள் பெருமளவும் துவக்க நிலைப் பெண் போலிஸ்காரர்களிலிருந்துதான் பெறப்பட்டன.

References:

Aleem, S. (1991). Women police and social change. New Delhi: Ashish.

Appier, J. (1992). Preventive justice: The campaign for women police, 1910-1940. Women and Criminal Justice, 4(1), 3-36.

Jubb, N., Camacho, G., D’Angelo, A., Yáñez De la Borda, G., Hernández, H., León, I.M., Santos, C.M., Molina, Y & Pasinato, W. (2008). Regional mapping study of women’s police stations in Latin America. Project Report: Access to Justice for Women in Situations of Violence: A Comparative Study of Women’s Police Stations in Latin America. Retrieved from http://www.ceplaes.org.ec/AccesoJusticia/

Natarajan, M. (1996). Women police units in India: A new direction. Police Studies, 19, 63-75.

Natarajan, M. (2005). Women police stations as a dispute processing system: The Tamil Nadu
experience in dealing with dowry-related domestic violence cases. Women & Criminal Justice, 16(l/2), 87-106.
Natarajan, M. (2008). Women police in a changing society: Back door to equality
Aldershot, UK: Ashgate.

Nelson, S. (1996). Constructing and negotiating gender in women’s police stations in Brazil. Latin American Perspectives, 23, 131-148.

Nelson, S. (2002). Constructing and negotiating gender in women’s police stations in Brazil,” In J. Abbassi, & L.S. Lutjens (Eds), Rereading women in Latin America and the Caribbean: The political economy of gender. Maryland: Rowman & Littlefield.
Santos, C. M. (2005). Women’s police stations: gender, violence, and justice in Sao Paulo, Brazil. New York: Palgrave Macmillan.

Weisburd, D. & Braga, A. (Eds.). (2006). Police innovation: Contrasting perspectives. New
York: Cambridge University Press.