அதெல்லாம் மாறியபோது

ஜோஆன்னா ரஸ்

ஜோஆன்னா ரஸ் (1937) – ஒரு வாழ்க்கைக் குறிப்பு:

52310

ஜோஆன்னா ரஸ்(Joanna Russ) என்றால் யாரென்று 30 வருடம் முன் வரை கூட, தமிழ்நாட்டில் வெகு சிலருக்கே தெரிந்திருக்குமென நினைக்கிறேன். அதுவும் தமிழ் எழுத்தாளர்களில் ஓரிருவருக்கே தெரிந்திருக்கும் என்று பந்தயம் கட்டி வென்றிருக்க முடியும். இத்தனைக்கும் அவர் ’67 இலிருந்து எழுதுகிறார், அதுவும் அறிவியல் நவீனங்களில் முக்கியமான பத்திரிகைகள் (ஆர்பிட்), பிரசுரகர்த்தர்கள் ஆகியவர்களால் வெளியிடப்பட்ட கதைகளை, நாவல்களை எழுதி இருக்கிறார். அறிவியல் நவீனங்களில் முக்கியமான பரிசுகளான, ஹ்யூகோ, நெபுலா போன்ற பரிசுகளை எல்லாம் வென்றவர்.

எண்பதுகளில் நான்தெரிந்து கொண்டது, எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் எழுத்தாளருக்காவது ஜோ.ரஸ் பற்றி நிச்சயம் தெரிந்திருந்தது.  எப்படி எங்களிருவருக்கும் அவருடைய எழுத்து பிடித்திருந்தது என்று கொஞ்ச நேரம் பேசக் கூட செய்தோம்.  அவருக்கு ஜோஆன்னா ரஸ் பற்றி என்னை விட அதிகம் தெரிந்திருந்தது, புரிந்திருந்தது. காரணம் அவர் ஜோஆன்னாவை அணுகிய பாதை வேறு, சக புனைகதை எழுத்தாளராக, சம காலத்தில் தன் கருத்தியல் சார்புள்ளவராக என்று பல காரணிகள் இருந்திருக்கலாம். நான் அறிவியல் நவீனங்களின் ஆர்வமிக்க ஒரு வாசகனாக மட்டுமே அணுகி இருந்தேன். அவர் ஜோஆன்னா ரஸ்ஸின் பல பரிமாண இயக்கத்தை அறிந்து அதன் வரலாற்று நிலையைப் புரிந்து வைத்திருந்தார் என நினைக்கிறேன். அவர் தன் புரிதலை எங்கும் எழுதியதாக எனக்குத் தகவல் இல்லை. சமீபத்தில் ஜோஆன்னா ரஸ்ஸின் கதை ஒன்றை ஒரு தொகுப்பில் மறுபடி படிக்க நேர்ந்தபோது இவருடைய கதைகளைத் தமிழில் கொணர வேண்டும் என்று நினைத்தேன். [ஏற்கனவே ஏதும் வந்திருக்கவும் வாய்ப்புண்டு.]

ஜோஆன்னாவின் கதைகள் எனக்கு அப்போது பிடித்ததற்குக் காரணம் அவை அறிவியல் கதைகள் என்பதால் மட்டுமல்ல. அவருடைய சிறுகதைகளைத் தொகுப்புகளில் படித்தபோது அவை ‘கடின அறிவியல்’ கதை அல்ல, மாற்று உலகு குறித்த யோசனைகள் என்பது புரிந்தது. அந்த யோசனை என் அன்றைய அரசியல் சாய்வுகளுக்கு ஏற்றதாக இருந்ததாலும் அவருடைய கதைகள் எனக்குப் பிடித்திருக்கலாம். நிறைய மாற்றங்கள் நடந்துள்ள கடந்த நாற்பது வருடங்களுக்குப் பின்னும், ஜோஆன்னா ரஸ்ஸின் கதைகள் இன்றும் எனக்கு மேம்பட்ட கதைகளாகவே, முக்கியமான தடம் பதித்தவையாகவே தெரிகின்றன.  இலக்கிய நயம், கற்பனை வளம், அறிவியல் கதை என்ற வகைகளில் அவற்றின் செழுமை கூர்மை எல்லாம் பொருட்டில்லையா, அரசியல் சாய்வுதான் ஒரே மதிப்பீட்டு மானியா என்று கேள்வி எழலாம், அவையும் மதிப்பீட்டு எடைகளாக இருக்கும் முறையிலும் ரஸ்ஸின் கதைகள் மேம்பட்ட கதைகளாகவே எனக்குத் தெரிகின்றன.

ரஸ் தன் கருத்தியல், மதிப்பீடுகள், வாழ்வில் பெண்களின் நிலை குறித்த தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதி இருக்கலாம், அவற்றைக் கட்டுரைகளாக எழுதி விடுவது எளிதாகவே இருந்திருக்கும்.  மாறாக கதைக் களனில் அந்தக் கருத்துகளைக் கொணர முயல, அந்த முயற்சியில் வெல்ல, வாழ்வுக்கும், மனிதருக்கும் மிக நெருக்கத்தில் ஒரு கதாசிரியர் வர வேண்டும். அறிவு ஜீவியாக இருப்பது ஒப்பீட்டில் எளிது.  புனை கதையாசிரியராக இருந்து வாழ்வை ஜீவனுடன் சித்திரிக்க மேம்பட்ட திறன் வேண்டும். இது ரஸ்ஸிடம் இருந்தது என்பது என் மதிப்பு.  அப்படியே ‘70களில் இருந்து இன்றுவரை பெண்ணியக் கருத்தியலாளரும் சரி, அறிவியல் நவீனங்களில் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட பல பிரதான எழுத்தாளரும் சரி, கருதி வந்திருக்கின்றனர்.

இதற்கும் மேலாக ஜோஆன்னா ரஸ் ஒரு கூர்மையான விமர்சகராகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பிற்பாடு அறிந்தேன்.  புனைகதை இலக்கியத்தில் பெண்களின் எழுத்த்தும், ஆண் எழுத்தும் எப்படி மாறுபடுகின்றன, ஏன் என்பதைப் பற்றி நிறையவே யோசித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.  ஒரு காட்டு இங்கே- ஹார்லன் எல்லிசன் என்னும் நாவலாசிரியர் இவரது நண்பர். அவருடைய கதை ஒன்றைத் திரைப்படமாக எடுத்திருந்தனர். நண்பர்களும், எல்லிசனும் வற்புறுத்த அப்படத்தைப் பார்த்த ஜோஆன்னா அதற்கு எழுதிய விமர்சனம் குறிப்பிடத் தக்கது. நண்பரின் கதை என்று ஒரமாக ஒதுங்காமல், அதன் கதைச் சாய்வுகளையும், சினிமாவாக மாறியதிலும் இருந்த பிரச்சினைகளைகயும் கறாராக அணுகிய அவரது விமர்சனப் பார்வையின் நேர்மைக்கு ஒரு எடுத்துக் காட்டு அந்த விமர்சனம்.  [பார்க்க: http://www.ejumpcut.org/archive/onlinessays/jc12-13folder/BoyDogRuss.html ]

தன் எழுத்து, படைப்புகள், சமகால எழுத்து, இதர சக அறிவியல் நவீன எழுத்தாளர்களின் இயக்கம், படைப்புகள் ஆகியன குறித்த ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருந்த ரஸ் தன் பார்வையில் அவர்கள் எழுத்து எப்படி இருந்ததென்று தொடர்ந்து எழுதி வந்தார். இது அவருக்கு நிறைய கண்டனக் கடிதங்கள், பல வாசகர்களின் வெறுப்பு ஆகியனவற்றை சம்பாதித்துக் கொடுத்தது என்றாலும் ரஸ் அன்று எழுப்பிய அதிர்வலையால் அறிவியல் நவீனம் என்னும் ஒரு இலக்கியத் துறையில் நிச்சயமாக ஒரு திருப்பம் ஏற்பட்டது.  அவருடைய நோக்கம் தன்னை முன்னிறுத்திக் கொள்வதல்ல, மாறாக எழுத்துத் துறையிலும் மற்றெல்லாத் துறைகளைப் போலவே பெண்கள் இரண்டாம் நிலையிலேயே நிறுத்தப்பட்டு, அவர்களுடைய சாதனைகள் பல விதங்களில் அலட்சியம் செய்யப்படுவதை மாற்றுவது அவசியம் என்று அவர் வாதம், முயற்சி அமைந்திருந்தது.

ஆண்களுக்காக, ஆண்கள், ஆண்பாத்திரங்களின் நடவடிககைகளைப் பற்றியே எழுதும் ஒரு ‘தனிப்பட்ட’ வகை இலக்கியமாகப் பெருமளவும் இருந்த அறிவியல் நவீனம் திசை திரும்பி பெண்களின் பங்கு, பெண்களின் இயக்கம், பெண்களின் பார்வைகள், எதிர்பார்ப்புகள், உயிரின இயக்கத்தில் அவர்களுடைய முக்கியமான பங்கெடுப்பு ஆகியவற்றை எதார்த்தமாக அணுக உந்தியதும், அந்த நகர்வு நிகழ்வதைப் பார்த்து அது இன்னும் துரிதப்பட வேண்டும், ஆழப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதும் ரஸ்ஸின் சாதனை என்றே நாம் கருதலாம்.

”அறிவியல் நவீனத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் பரிமாற்றங்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளி வந்திருக்கின்றன. 1974-75 காலகட்டத்தில் நடந்த இந்தப் பரிமாற்றங்கள் அன்று சில பத்திரிகைகளில் வெளி வந்தன. 1993 இல் தொகுக்கப்பட்டு இரண்டாம் பதிப்பாக ஒரு புத்தகத்தில் வெளியாயின.  இந்தப் புத்தகத்தில் ஒரு பத்தியை இங்கு தருகிறேன்.

’இந்தக் கருத்தரங்கில் ஒரு கட்டத்தில், திருமணமாகாத, முழு நேர பல்கலைப் பேராசிரியராக இருக்கும் ஒரு பெண்ணாக இருக்கும் தன் நிலையின் நிலையில்லாத் தன்மையால் தன் கருத்து வெளிப்பாடுகள் எப்படிப் பல வரம்புகளுக்குள் குறுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அவர் தெளிவாகச் சித்திரிக்கிறார்.

நான் விரும்பித் தேர்ந்தெடுக்காத பல சக ஊழியர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை வேலையில் இருந்து நீக்க முடியும் அதிகாரம் உள்ளவர்கள் (நீக்கவும் செய்தார்கள்).  ஆனால் அவர்களுடைய பால்வகைச் சாய்வுகளை மீறிய, அசாதாரணமான நன்னம்பிக்கையைத்தான் என் வாழ்க்கையை நடத்தத் தேவையான சம்பளப்பணத்துக்கு நான் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.  எனக்கு ஒரு கணவர் இல்லை, பின்னிருந்து தாங்க. சமூகத்தின் பாதுகாப்பைத் தரக் கூடியதான மண வாழ்க்கையும் எனக்கில்லை. … பிருஷ்டத்தில் கிள்ளப்படும் மோசமான அனுபவத்தை ஒரு வாரத்தில் பல முறை நான் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு முழுநேர எழுத்தாளருக்கு இருக்கும் பல சுதந்திரங்கள் எனக்கில்லை- என் தனிப்பட்ட வாழ்வை என் விருப்பப்படி வாழ்வதோ, எனக்குப் பிடித்தவர்களை மட்டும் நான் சந்திப்பதோ எனக்கு சாத்தியமில்லை. என் கோபத்தை வருடத்துக்கு ஒரு முறைக்கு மேல் என்னால் வெளிப்படுத்தி விட முடியாது. இந்தக் கருத்தரங்கில் பங்கெடுக்கும் பல பெண்களுக்குள்ள சுதந்திரம் எனக்கில்லை, அதனால்  பலவற்றையும் என்னால் முடிந்த அளவு நான் விலக்கவே வேண்டி இருக்கிறது.” ‘ (ஹெலன் மெர்ரிக் எழுதிய ‘அறிவியல் நவீனத்தின் பெண் ‘ஆட்லஸ்’?’ என்ற கட்டுரையிலிருந்து எடுத்தது. பக் 56)

இதையும் சொல்லி விடுகிறேன். எந்த எழுத்தாளரும் எப்போதும் சிகரத்திலேயே வீற்றிருப்பதில்லை. சிகரப் படைப்பு எனக் கருதப்படும் ஒன்றிலேயே கூட சரிவுகளும், தாழ்ச்சிகளும், உயிர்ப்பற்ற பகுதிகளும் இருக்கவே செய்யும் என்பது என் பார்வை. (பல நூறுபக்க நாவல்களை மனதில் வைத்துச் சொன்ன கருத்து இது.) அவையும் படைப்பூக்கமுள்ள அல்லது அசாதாரண வீச்சுள்ள பகுதிகளும் ஒன்றியங்கித்தான் ஒரு படைப்புக்கு உயிரோட்டம் கிட்டுகிறது எனலாம்.

எனவே ஜோஆன்னாவும் அப்படி ஊடாடித்தான் செயல்பட்டிருக்கிறார் என்பதை நான் இயல்பான ஒரு போக்காக எடுத்துக் கொள்கிறேன். ஒரு வீச்சில் நோக்கி, அவருடைய படைப்பிலக்கியம் மட்டுமல்ல, விமர்சன இலக்கியம், பால்- அரசியல் வழி நோக்கும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியனவும் கூர்த்த மதி நுட்பம் கொண்டவை என்று சில விமர்சகர்கள் சொல்வதையும் கவனித்திருக்கிறேன். (சாமுவெல் ஆர். டிலானி)

அறிவியல் கதைகளில் எனக்குப் பொதுவாக கடினமான அறிவியல் கதைகள் என்று சொல்லப்படும் கதைகள்தான் பிடிக்கும். (Hard Science fiction). அவை சில நிஜமான, அல்லது ஊகமாக நம்பத்தக்க அறிவியல் கருத்துகளை வைத்துப் புனையப்பட்ட வகைக் கதைகளாக இருக்கும். அறிவியல் என்று சொல்லிக் கொண்டு நம் பழைய ராஜா ராணிக் கதைகள், அடிதடிக் கதைகள், ‘மர்மக் கதைகள்’, சாகசக் கதைகள் போன்றன ஏராளமாக எழுதித் தள்ளப் படுகின்றன. அவை எனக்கு வேடிக்கையாய்ப் படிக்க முடிந்திருக்கிறது என்றாலும் அவற்றால் நிறைவு ஒருபோதும் கிட்டியதில்லை. சில வகை அறிவியல் கதைகள் தர்க்க விசாரணை, அற விசாரணை, தத்துவத் தேடல் போன்றனவற்றில் ஈடுபடும். டெட் சியாங் எழுதும் கதைகளோ, நான்ஸி க்ரெஸ்ஸின் நாவல்களோ, பிலிப் கே.டிக் உடைய நாவல்களோ, ஸ்டானிஸ்லாவ் லெம் கதைகளோ இத்தகையவை.

மூன்றாவது வகைக் கதைகள் வரலாறு, அரசியல், மானுடவியல், உளவியல் போன்ற மனித ஆய்வியல்களோடு உரசிப் புரசி மாற்றுலகுகள், மாற்று சமுதாயங்கள், மாற்று உடற்கூறுகளினால் எழும் உளப்பாங்கு வேறுபாடுகள் என்று ஊகமான அல்லது அதிபுனைவுகளான கதைகளை அறிவியல் நவீனம் என்ற பெரிய அடைப்புக்குள் கிட்டும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை. இதில் உர்சுலா லெகுவின், ஐசக் ஆஸிமாவ், கிம் ஸ்டான்லி ராபின்ஸன், ஆர்ஸன் ஸ்காட் கார்ட், நீல் ஸ்டீஃபன்ஸன், வில்லியம் கிப்ஸன் போன்ற பலர் உண்டு. இவர்களெல்லாம் கொஞ்சம் பிரபலமானவர்கள். நிறைய பிராபல்யம் இல்லாத ஆனால் மிகத்திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் ரஷ்ய, கிழக்கைரோப்பிய, யூரோப்பிய எழுத்தாளர்கள், ஓரிரு தாய்லாந்து / வியத்நாமிய எழுத்தாளர்கள், லத்தீன் அமெரிக்கர்களை எல்லாம் இங்கு கருதவில்லை.

இந்த மூன்றாவது வகை எழுத்தாளர்களில் பலரும் உடற்கூறு, விலங்கியல், உயிரியல் போன்ற துறைகளில் நல்ல நிபுணத்துவம் கொண்டவர்கள். ஆம், பெண் எழுத்தாளர்களில் பலரும் இந்த வகை நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிறார்கள். (உதாரணமாக, ஆக்டேவியா இ.பட்லர்.)

(தொடரும்)

____________________________________________________________

 

 

அதெல்லாம் மாறியபோது

ஜோஆன்னா ரஸ்

(1972)

கேட்டி பிசாசு போல ஓட்டுவாள்; அந்த வளைவுகளில் எங்கள் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டருக்கு மேலிருக்கும். திறமைசாலிதான், ஏன், பிரமாதமாகத் தொழிலும் தெரிந்தவள் கூடத்தான்.  ஒரு மொத்தக் காரையும் அக்கக்காகக் கழற்றிப் போட்டு, ஒரே நாளில் திரும்பச் சேர்த்துப் பூட்டியிருக்கிறாள், நானே பார்த்திருக்கிறேன். ’வைலவே’ கிரகத்தில் நான் பிறந்த ஊரில் அனேகமாக வயலில் சாகுபடி செய்யும் எந்திரங்கள்தான் இருந்தன. அதனாலோ என்னவோ, நான் இன்றும் ஐந்து கியர் வண்டிகளோடு மல்லுக்கு நின்று, பிசாசுத்தனமாக ஓட்டுவதைத் தாங்க முடியாதவளதான், அப்படி வளர்க்கப்படவில்லை என்பது காரணமாக இருக்கலாம். இருந்தாலும், அந்த கிராமப் புறங்களின் வளைசலும் நெளிசலுமான சாலைகளில், அதுவும் எங்கள் பகுதியில் இருப்பவற்றின் அழகைச் சொல்ல வேண்டுமா என்ன, படு மோசம், அதிலே போய் அர்த்த ராத்திரியில் இப்படித் தலை தெறிக்க அவள் ஓட்டுகிறாள், என்றாலும் எனக்குச் சிறிதும் பயமே இல்லை.  என்னுடைய வீட்டுக்காரி ஒரு விஷயத்தில் மாத்திரம் கொஞ்சம் கிறுக்கு: துப்பாக்கிகளை அவள் தொடக்கூட மாட்டாள்.  48ஆவது அட்சக்கோட்டுக்கு மேலே இருக்கிற பெருங்காடுகளில் எல்லாம் புகுந்து நாள்கணக்கில் அவள் அலைந்து இருக்கிறாள். ஒரு துப்பாக்கி கூட எடுத்துப் போகாமல்.  ஆனால் அதுதான்…. எனக்கு கிலியாக இருந்தது.

எங்கள் இரண்டு பேருக்கும் மூன்று குழந்தைகள். இரண்டு என்னுடையவை, ஒன்று அவளுடையது. யுரிகோ, என்னுடைய மூத்த பெண், பின்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தாள், பனிரெண்டு வயதுக் குழந்தைகள் காணும் போரும் காதலும் கலந்த கனவுகளில் மூழ்கி. வீட்டை விட்டு ஓடிப் போய் கடல்பயணங்கள் செய்வதாக, வடதிசை நிலங்களில் வேட்டையாடுவதாக, விசித்திரமான நிலங்களில் வசீகரமான மனிதர்களைக் காண்பதாக.  அதென்ன, இளமையின் துவக்கத்தில் சுரப்பிகள் வேகமாக வேலை செய்யத் துவங்கியதும் நாம் எல்லாம் பன்னிரெண்டு வயதில் காமாசோமாவென்று கனவுகள் காண மாட்டோமா, அவற்றில் எல்லாம் மூழ்கி இருப்பாளாயிருக்கும். அந்த ஒரு நாள், சீக்கிரமே வரப் போகிறது, வாரக்கணக்கில் காணாமல் போய் விடுவாள், ஒரே அழுக்காக, ரொம்ப பெருமிதத்தோடு திரும்பி வரப்போகிறாள், தன்னுடைய முதல் சிறுத்தையைக் கத்தியால் கொன்றதனால், முதல் கரடியைத் துப்பாக்கியால் சுட்டதினால், ஒரு படுமோசமான பயங்கர மிருகத்தைக் கொன்று இழுத்து வருவதனால்.  அது மட்டும் ஏதாவது என் பெண்ணுக்குச் சேதம் விளைவித்து இருந்தால் அந்த மிருகத்தை நான் மன்னிக்கவே மாட்டேன். யுரிகோவானால், கேட்டி வண்டியை ஓட்டுகிறதைப் பார்த்தால் தனக்குத் தூக்கம்தான் வருகிறது என்கிறாள்.

மூன்று பேரோடு ஒண்டிக்கு ஒண்டியாய் மோதி இருக்கிறேன், ஆனால் நான் எதற்கெல்லாமோ பயப்படுகிறேன். எனக்கு வயசாகிப் போச்சு. என் மனைவியிடம் அதைத்தான் நான் சொன்னேன்.

”உனக்கு முப்பத்தி நாலு வயசுதான் ஆச்சு,” என்றாள். வாயைத் திறந்தால் முத்து உதிரும் என்று நினைப்பு  இவளுக்கு , பேசுவதில் அப்படி ஒரு சிக்கனம். சாலை மேன்மேலும்  மோசமாகிக் கொண்டிருந்தது, இருட்டத்  துவங்கியிருந்தது, இன்னும் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பாக்கி, இவள் ஸ்விட்சைத் தட்டி

joanna-russ-the-female-manமுன்விளக்குகளைப் போட்டாள்.  ஆளற்ற கிராமப் புறம் சுற்றிலும். பளீரென்ற பச்சையில் மரங்கள் முன்விளக்குகளை நோக்கிப் பறந்தடித்து வந்து பக்கவாட்டில் சிதறின. நான் என் அருகில் கீழே கை நீட்டி, கதவை ஒட்டி ஒரு தூக்கில் இருந்த என் ரைஃபிளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். யுரிகோ பின்னிருக்கையில் நெளிந்து விழிக்கத் துவங்கினாள். என் உயரம், ஆனால் கேட்டியின் கண்கள், கேட்டி போலவே முகஜாடை.  இந்தக் கார் எஞ்சின் அத்தனை மௌனம், பின்னிருக்கையில் மூச்சு விட்டால் இங்கு கேட்கிறது என்பாள் கேட்டி. அன்று முன்னாடி அச் செய்தி வந்த போது, வெகு உற்சாகமாக அந்த கோடு புள்ளி கோடு செய்தி ஒலிபரப்பை வார்த்தைகளாகப் பெயர்த்தாள் யுகி, அப்போது காரில் தனியாக இருந்தாள். (ஆமாம், விரிவலை பரப்பு/வாங்கியை கார் எஞ்சினுக்கருகில் பொருத்துவது கொஞ்சம் பித்துக்குளித்தனம்தான், ஆனால் ’வைலவே’யில் அனேகமாக எல்லா எஞ்சின்களும் நீராவிதான்.) அவள் காரை விட்டுப் பாய்ந்தடித்துச் சிதறி ஓடி வந்தாள், என்னுடைய களேபரமான, பளீரென்றிருந்த பெண். உச்சக் குரலில் கத்திக் கொண்டு ஓடி வந்தாளா, பின் அவளும் எங்களோடு வராமல் எப்படி இருப்பாள், வந்தாள். இந்தக் குடியேற்றத்தை நாங்கள் துவக்கிய நாளாகவே இப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான்; நாங்கள், புத்தியளவில் அதற்குத் தயாராகவே இருந்தோம்.

ஆனாலும் இப்படியா நடக்க வேண்டும்?  சே! இப்படி ஒரு … மோசமான நிகழ்வு இது.

”புது ஆட்கள்,” யுகி கூப்பாடு போட்டாள், கார் கதவைத் தாண்டிக் குதித்தாள். “அவங்க திரும்பவும் வந்திருக்காங்க! நிஜமாவே பூமிலேர்ந்து வந்த மனுசங்க!”

அவர்கள் தரையிறங்கிய இடத்துக்கு அருகிலிருந்த ஒரு பண்ணைவீட்டின் சமையலறையில் அவர்களைச் சந்தித்தோம்; ஜன்னல்கள் திறந்திருந்தன, இரவுக்காற்று மிதமாகவே இருந்தது. நாங்கள் வெளியே காரை நிறுத்துவதற்குள் பல வகை போக்குவரத்து சாதனங்களைக் கடந்து வந்திருந்தோம், நீராவி உழவுஎந்திரங்கள், ட்ரக்குகள், ஒரு பெரிய திறந்த சரக்கு வண்டி, ஒரு சைக்கிள் கூட இருந்தது. அந்த வட்டாரத்தின் உயிரியலாளர், லிடியா கூட, அவள் வடபுலத்தில் போய் தன்னந்தனியாக செய்யும் ஆய்வுகளை விட்டுவிட்டு வந்திருந்தாள்.  வந்தவர்களின் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றைக் கொஞ்சம் புட்டிகளில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து கிட்டிய முடிவுகளைப் பார்த்து வியப்புடன் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். தன்னைத் தானே வருத்திக் கொண்டு -(ஆஜானுபாகு, ரொம்ப நேர்மையானவள், கூச்ச சுபாவம், எதற்கெடுத்தாலும் முகம் சிவந்துபோகிறவள்) -முந்தைய காலத்து மொழி சம்பந்தப்பட்ட கையேடுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  என்னை உறக்கத்திலெழுப்பினால் கூட அந்த மொழிகளைப் பேச முடியும். பேசுகிறேன். லிடியாவோ எங்களோடு அத்தனை வசதியாக உணரவில்லை; நாங்கள் தென் புலத்தவர், ரொம்பவே கொட்டமடிப்போம். ஒரு இருபது பேரை சமையல் உள்ளில் எண்ணினேன், வடக்குக் கண்டத்தின் எல்லா அறிவாளிகளும் இங்கே இருந்தார்கள். ஃபிலிஸ் ஸ்பெட், க்ளைடரில் வந்திருந்தார் என நினைக்கிறேன். யுகி ஒருத்திதான் அங்கு சிறுமி.

அப்போது அந்த நால்வரை நான் பார்த்தேன்.

 

எங்களை விட உருவில் பெரியவர்கள்.  பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.

என் கண்களால் அவர்களுடைய அன்னியப்பட்ட உடல்களின் வெளி வடிவைப் பார்த்து இன்னுமே எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது, அவர்களைத் தொடக்கூட என்னையே உந்தவும் முடியவில்லை. இத்தனைக்கும், அவர்களில் ஒருவன், ரஷ்ய மொழி பேசியவன் – அம்மா, என்ன குரல் அவர்களுக்கு!- ”கை குலுக்க” விரும்பினான், பழங்காலத்து பழக்கம் போலிருக்கிறது. என்னைக் கேட்டால் மனித முகம் கொண்ட மனிதக் குரங்குகள் அவர்கள் என்றுதான் சொல்வேன். அவன் ஏதோ நல்லது செய்வதாக எண்ணினான் போலிருக்கிறது, நான் ஒரேயடியாகக் கூசி, அதிர்ந்து சமையலறை நீளத்துக்குப் பின்னாடி போய் விட்டேன் – கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்து சமாளித்துப் பார்த்தேன் – பின் மற்றவருக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டி (அண்டவெளி விருந்தினர்களாச்சே, கொஞ்சமாவது சுமுகமாக இருக்க வேண்டாமா, என நினைத்தேன்.) கடைசியில் “கைகள் குலுக்கினேன்.” அவன் கை முரடென்றால், அத்தனை முரடு. உழவுக் குதிரைகளைப் போல பெருந் தடியன்களாக இருந்தார்கள். உருத் தெளிவில்லாத அடிக் குரல்கள்.  யுரிகோ வளர்ந்தவர்கள் நடுவே இடுக்கிக் கொண்டு நின்று, அந்த மனிதர்களை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவனுடைய தலையை அவன் திருப்பினான் – அந்த வார்த்தைகள்- ’அவன்’, ’அவனுடைய’, இதெல்லாம் எங்கள் மொழியிலேயே ஒரு அறுநூறு வருடங்களாக இருக்கவில்லை – மோசமான ரஷ்யனில் பேசினான்.

“அது யார்?”

“என் பெண்,” நான் சொன்னேன், தொடர்ந்தேன் ( புத்தி கலங்கிப் போனால் கூட சில நேரம் நாம் மரியாதை காட்ட வேண்டுமென்று நினைப்போமில்லையா, அதனால்தான்.); “என்னுடைய பெண், யுரிகோ ஜானெட்சன்.  நாங்கள் ஆண்வழிப் பெயர்கள்தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் பெண்வழிப் பெயர் என்பீர்கள்.”

 

தன்னையறியாமல் அவன் சிரித்தான். யுகி திடீர் என்று சொன்னாள், ‘அவங்களெல்லாம் பார்க்க நல்லா இருப்பாங்கன்னுட்டு இல்லெ நான் நெனச்சேன்!’ அவளுக்கு தனக்குக் கிடைத்த வரவேற்பு ஏமாற்றமாயிருந்தது போலிருக்கிறது. ஃபிலிஸ் ஹெல்காசன் ஸ்பெட், இவளை என்னிக்கோ ஒரு நாள் நான் நிச்சயம் கொல்லத்தான் போகிறேன், அறைக்கு அந்தப் பக்கத்திலிருந்து என் மீது நேராகவே, வெறுப்பு கலந்த, ஒரு  கடும்பார்வையை வீசினாள். ’என்ன பேசறேன்னு கவனிச்சுப் பேசு, நான் என்ன செய்வேன்னு உனக்குத் தெரியும்’ என்று சொல்வது போல இருந்தது அது.  எனக்கு ஏதும் பதவி கிதவி எல்லாம் இல்லைதான்.  ஆனால், மாட்சிமை தங்கிய அதிபரான அவள் தொழிற்துறையில் ஏதாவது சேதம் விளைவிக்கலாமென்று நினைத்தாளானால் என் கிட்டேயும் சரி, அவளுடைய உதவிகளிடமும் சரி பெரிய சங்கடத்தில் மாட்டுவாள்.  போர்களும், போர்களைப் பற்றிய வதந்திகளும், எங்களுடைய மூதாதையரின் புத்தகங்களில் சொல்லி இருப்பதைப் போல.  நான் அந்த ஆளுடைய தண்டமான ரஷ்யனில்-அதுதான் ஒரு காலத்தில் எங்களுடைய பொது மொழியாக இருந்தது-  மொழி பெயர்த்தேன் யுகி சொன்னதை, அவன் மறுபடி சிரித்தான்.

 

சும்மா பேச்சு கொடுக்கிற மாதிரி, ‘உங்களோட ஜனங்களெல்லாம் எங்கே போய்ட்டாங்க?” என்றான்.

நான் மறுபடி மொழி பெயர்த்தேன், எல்லாருடைய முகங்களையும் பார்த்தேன். லிடியா (எப்போதும்போல) கூச்சப்பட்டாள். ஸ்பெட் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள், ஏதோ திட்டம் போடுகிறாள். கேட்டி வெளுத்துப் போயிருந்தாள்.

 

”இது வைலவே ஆயிற்றே,” நான் சொன்னேன்.

அவனுக்கு இன்னமும் ஏதும் புரியவில்லை.

“வைலவே,” நான் சொன்னேன்.  “ நினைவில்லையா? உங்களிடம் ஏதும் பழைய ஆவணங்களெல்லாம் இல்லையா? வைலவேயில் ஒரு ப்ளேக் வந்ததே.”

அவன் இப்போது கொஞ்சம் புரிந்து கொண்டாற்போலத் தெரிந்தான்.  தலைகள் அறையின் பின்பக்கம் திரும்பின. உள்ளூர் தொழில் குழுக்களின் பிரதிநிதி தெரிந்தார்.  காலைக்குள் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு மாவட்ட குழுமத்திலும், கூட்டங்கள் முழு வேகத்தில் நடக்கத் துவங்கும்.

 

“ப்ளேக் நோயா?” என்றான். “ என்னவொரு கஷ்டம்?”

”ஆமாம்,” என்றேன். “பெரிய துரதிர்ஷ்டம்தான்.  எங்கள் மொத்த ஜனத்தொகையில் பாதியை ஒரே தலைமுறையில் நாங்கள் இழந்துவிட்டோம்.”

அவனுக்கு இது நன்கு புரிந்தாற்போலத் தெரிந்தது.

”வைலவேக்கு கொஞ்சமாவது அதிர்ஷ்டம் இருந்தது.” நான் சொன்னேன். “எங்களுக்கு துவக்கத்தில் கணிசமான அளவில் மரபணுக்கள் கிட்டி இருந்தன. எங்கள் எல்லாரையுமே மிக உயர்ந்த அறிவுத் திறனுக்கென்றுதான் தேர்ந்தெடுத்து அனுப்பினர். எங்களிடம் ஏகப்பட்ட தொழில் திறமையும், அறிந்து கொண்ட தொழில் நுட்பமும் இருந்தது. மீதமிருந்தவர்களில் ஒரு பெரிய ஜனத்தொகையளவு மக்களிடம் இன்னும் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். இங்கு நிலம் நல்ல வளமாக இருந்தது. தட்ப வெப்ப நிலையும் சுலபமானதாக இருந்தது. இப்போது 30 மிலியன் பேராக இருக்கிறோம். தொழில்துறையில் இப்போது எல்லாம் திரண்டு பெரிய அளவில் உருவாகி வரத் துவங்கி இருக்கிறது.  உமக்குப் புரிகிறதா இது? இன்னும் 70 வருடம் கழித்துப் பாருங்கள், எங்களிடம் நிஜமான நகரம் என்பன ஒன்றுக்கு மேல் இருக்கும்.  ஒரு சில தொழில் மையங்களுக்கு மேல் பெருகி பலவாகி இருக்கும்.  முழுநேரப் பேராசிரியர்கள், முழு நேர ரேடியோ ஆபரேட்டர்கள், முழு நேர எந்திர வார்ப்புக்காரர்கள் இருப்பார்கள், இன்னும் எழுபது வருடங்களில் ஒவ்வொருவரும் முக்கால் வாசி நேரம் வயல் வேலைகள் செய்ய வேண்டி இராது.”

(தொடரும்)

_________________________________________________________________

அறிமுகம்/தமிழாக்கம்: மைத்ரேயன்

References for the Introduction:

http://scienceblogs.com/grrlscientist/2008/01/women_science_and_writing.php

http://feministsf.org/authors/wsfwriters.html

http://www.sfsite.com/fsf/2008/sl0810.htm

http://www.geekosystem.com/why-scientists-should-read-science-fiction/

http://sciencefictionbiology.blogspot.com/2009/01/science-and-science-fiction-what.html

ரூடி ரக்கர்

http://www.americanscientist.org/bookshelf/pub/rudy-rucker

http://books.google.com/books?id=cegaLU7oAMwC&printsec=frontcover&dq=joanna+russ&source=bl&ots=oDosWMeW0E&sig=QLJmI5j20J70OpX7i4ok5W6V5LA&hl=en&ei=dNx4TbTYEMatgQfa59XlBw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CC8Q6AEwAjgK#v=onepage&q&f=false

http://mumpsimus.blogspot.com/2009/02/my-dear-emily-by-joanna-russ.html

http://www.villagevoice.com/2009-02-04/books/the-speculator-on-joanna-russ/