போர் – நினைவுகள், சாட்சியங்கள்

half

“உதய சூரிய பூமியே…” என்ற தேசிய கீதத்துடன் பிறந்த பியாஃப்ரா ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் இருந்து எழுபது வரையிலான இரண்டரையாண்டுகளே நைஜீரியாவிலிருந்து தனித்திருக்க முடிந்தது. ரத்தத்தில் உதித்த நைஜீரிய தேசிய யுத்தம் முப்பது லட்சம் உயிர்களைக் குடித்து அடங்கியது.

பியாஃப்ர போரின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் அடிச்சீயின் “மஞ்சள் சூரியனின் பாதி”- அந்தி வேளை அஸ்தமனத்தை நோக்கி விரையும் வேகம் நாம் அறியாத ஒன்றல்ல. வானில் மஞ்சள் வண்ணத்தை வாரியிறைத்து எஞ்சி நிற்கும் அர்த்தசூரியன் மறைய அரை போதாகுமா? பியாஃப்ராவின் உதய நாழிகையில் அஸ்தமனம் கண்ட இபோக்களின் துக்க நிகழ்வுகளைப் பேசுகிறது “மஞ்சள் சூரியனின் பாதி”

இன்றைய நைஜீரியாவின் எண்ணை வளம் மிகுந்த தென்கிழக்குப்பகுதி பெரும்பான்மை கிறுத்தவர்களான இபோ மக்களின் பூமி. அன்றைய சமூக மற்றும் பொருளாதாரக் கட்டாயங்கள் இபோக்களை தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளின. இதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த போரின் விளைவாக முப்பது லட்சம் பேர் உண்ண உணவில்லாமல் இறந்தனர் என்ற நிலையில் தர்ம நியாயங்களை தரம் பிரித்து பங்கிட்டுத் தருவதில் பயனிருப்பதாகத் தெரியவில்லை.

—[]—

கலபாஷ் (குடுக்கை ) –  ‘மஞ்சள் சூரியனின் ஒரு பாதி’ நாவலிலிருந்து ஒரு பகுதி

ஒலன்னா குத்துக்காலிட்டு ரயிலின் தரையில் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி வெம்மையான வியர்த்த உடல்களின் நெரிசல்… ஒவ்வொரு முறை (ரயில்) ஆட்டங்கொடுத்தபோதும், ஒலன்னா தன்னருகில் இருந்த பெண்ணின் மேல் தள்ளப்பட்டாள், அவளது மடியிலிருந்த ஏதொவோன்றின் மேல் விழுந்தாள், அது ஒரு பெரிய குடுக்கை, ஒரு கலபாஷ். அந்தப் பெண்ணின் சுற்றுத் துணியில் தெளித்திருந்த கறைகள் ரத்த வண்ணப் புள்ளியிட்டிருந்தன, அது குறித்து ஒலன்னாவுக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.

…யாரோ இபோவில் கத்தினார்கள், “_அன்யி அகாஃபீலா! நாம் நைஜர் ஆற்றைத் தாண்டி விட்டோம்! வீடு வந்தாயிற்று!” (நைஜரின் தெற்கே இபோ பிரதேசம்)

ரயிலின் தரையில் ஒரு திரவம்- சிறுநீர்- பரவிக் கொண்டிருந்தது. ஒலன்னா அது சில்லென்னத் தன் ஆடையுள் தோய்வதை உணர்ந்தாள். கலபாஷ் குடுவையை வைத்திருந்தவள் அவளை இடித்தாள், அப்புறம் அருகிலிருந்த மற்ற சிலரையும் தன் அருகே வரும்படி சைகை செய்தழைத்தாள். “_பியானு, வா,” என்றாள் அவள், “வந்து பாருங்கள்.”

அவள் தன் கலபாஷைத் திறந்தாள்.

“இங்கே பாருங்கள்,” என்றாள் அவள்.

ஒலன்னா குடுக்கையுள் பார்த்தாள். ஒரு சிறுமியின் தலையை, அதன் சாம்பல் பழுப்பு தோலையும், சடையிட்ட பின்னலையும் மேல் நோக்கிய கண்களையும் திறந்த வாயையும் பார்த்தாள். அவள் அதையே சற்று நேரம் வெறித்திருந்தாள், தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளுமுன். யாரோ அலறினார்கள்.

அந்தப் பெண் தன் கலபாஷை மூடி வைத்தாள். “உனக்குத் தெரியுமா,” என்று கேட்டாள் அவள், “இந்த சடையைப் பின்ன எனக்கு எவ்வளவு நேரம் ஆயிற்று என்று? அவளுக்கு அவ்வளவு அடர்த்தியான மயிர்.”

—[]—

அடிச்சீ குறித்து அ.முத்துலிங்கம் எழுதிய அறிமுகம் மற்றும் அடிச்சீயின் இரு சிறுகதைகளை சொல்வனத்தில் இங்கேயும், இங்கேயும் வெளியிட்டிருக்கிறோம். அவற்றின் தொடர்ச்சியாக அடிச்சீயின் பேட்டி ஒன்றை இவ்விதழில் பதிவு செய்கிறோம்.

போர் – நினைவுகள், சாட்சியங்கள்

(புக் ஃபோரம் பத்திரிகையிலிருந்து)

நைஜீரிய எழுத்தாளர், சிமமாண்டா (இ)ங்கோஸி அடிச்சி, தனது இரண்டாவது நாவலான, 2007 ஆம் ஆண்டு  ‘ஆரஞ்சு’ பரிசை வென்ற, ’ஒரு மஞ்சள் சூரியனில் பாதி’ புத்தகம் அமெரிக்க வாசகர்களுக்குப் பிடிபடும் என்று சிறிதும் கருதவில்லை. இந்த நாவல், பதின்மூன்று வயதான, ஒரு வீட்டு வேலைக்காரப் பையன், அவனை வேலைக்கமர்த்தி, படிப்பும் சொல்லிக் கொடுக்கும் புரட்சியாளரான ஒரு பல்கலைப் பேராசிரியர்; அந்தப் பேராசிரியரின் பிரியையும், சமூகவியல் கல்லூரி ஆசிரியருமான, ஒரு மேட்டுக் குடிப் பெண்; மேலும் இபோ மொழி பேசத் தெரிந்தவரும், தான் ஒரு பியாஃப்ராவியனாகக் கருதப்பட வேண்டுமென விரும்புவருமான ஒரு இங்கிலீஷ்காரர் ஆகியோரின் வாழ்வுகளைச் சித்திரிக்கிறது. கதை நடக்கும் காலம், பியாஃப்ரா போர்க் காலம். இந்தப் போரின் காரணம், தென்கிழக்கு நைஜீரியாவைச் சேர்ந்த இபோ மொழி பேசும் மக்கள், நைஜீரியாவிலிருந்து பிரிந்து செல்ல முயன்றது. அவர் இந்நாவலைப் பற்றி எண்ணியது- ‘1960களில் எங்கோ நடந்த ஒரு ஆஃப்ரிக்கப் போரில் அமெரிக்கர்களுக்கு என்ன ஈர்ப்பு இருக்கப் போகிறது?’ ஆனால் காதல், நம்பிக்கை மோசடி, வன்முறை மேலும் அறிவுத் துலக்கம் பெறுதல் ஆகியன பற்றி நைஜீரியாவின் வரலாற்றில் கடுங்குழப்பமான அத்தியாயங்களைச் சுற்றிபக் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பின்னப்பட்ட இந்த நாவல் பரவலாக விமர்சகரின் அங்கீகாரத்தையும், வாசக ஆதரவையும் பெற்றது அவருக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பாக இருந்ததாம். பத்தாண்டுகள் முன்பு மருத்துவக் கல்லூரியில் படிப்பை விட்டு விட்டு, இலக்கியத்தில் தன் முயற்சிகளைத் தொடரவென்று அவர் எடுத்த ஒரு முடிவை அது நல்ல முடிவுதான் என்று உறுதி செய்ததாம் இந்த வரவேற்பு.

(இபோ (Igbo) மொழிக் குழுவைச் சார்ந்தவரும், உலகப் புகழ் பெற்ற நைஜீரிய எழுத்தாளருமான) சினுவா அச்செபே முன்பு வாழ்ந்த வீட்டில், கணிதப் பேராசிரியர் ஒருவருக்கும், பல்கலை நிர்வாகி ஒருவருக்கும் மகளாக வளர்ந்த 30 வயது அடிச்சி- நைஜீரியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் மாறி மாறி வாழ்பவர். யேல் பல்கலைக் கழகத்தில் ஆஃப்ரிக்க ஆய்வுகள் எனும் துறையில் முது நிலை மாணவராக இருப்பதோடு, தன் நாவலை உலகெங்கும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளுக்காக நெடுகப் பயணம் செய்ய வேண்டியும் இருப்பதால், நேரக் குறைவால் தத்தளிக்கிறார். (யேல் பல்கலையில் அவர் படிப்பது அவருடைய இரண்டாவது முதுநிலைப் பட்டப் படிப்பு. இந்த பேட்டியில் அவர் பியாஃப்ரப் போருக்குப் பிந்தைய நைஜீரியா குறித்தும், தன்னுடைய குடும்பத்தின், மேலும் நைஜீரியாவின் பயங்கரமும், பெரும் அழிப்பும் நிறைந்த வரலாற்றை கட்டவிழ்த்துப் பார்த்து எதிர் கொள்வதையும் குறித்துப் பேசியிருக்கிறார். அவருடைய உறவினர்களும், சக நைஜீரியர்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளத் தயங்கினாலும் கூட, அவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

– கேரா போலானிக்

—–[]—–

சிமமாண்டா (இ)ங்கோஸி அடிச்சி, 2006.

காலத்தாலும் இடத்தாலும் வெகு தொலைவில் இருக்கும் உங்களுக்கு, பியாஃப்ர யுத்தம் பற்றி சுய அனுபவம் போல எழுத முடிந்தது எப்படி சாத்தியமானது?

அடிச்சி: இந்த யுத்தத்தை நான் அனுபவிக்கவில்லை என்பதால்தான் என்னால் இந்தப் புத்தகத்தை எழுத முடிந்தது. ஆனால் புத்தகத்தை எழுதியது ஒரு உள்ளார்ந்த உணர்ச்சிகள் கொண்ட அனுபவமாக அமைந்ததால், இந்த யுத்தம் எந்த அளவுக்கு என் நினைவாகவே மாறியிருந்தது என்பதை மிகத் தீவிரமாக நான் அப்போது உணர்ந்தேன். ஒரு பகுதியை எழுதி முடித்ததும் அதை முடித்தது குறித்து சந்தோஷப்படுவேன். பிறகு இம்மக்களுக்கு நேர்ந்ததை நினைத்து அழுவேன். இதைப்போல வேறெதுவும் இதற்கு முன்னால் நான் எழுதியிராததால் எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எனக்குச் சில சமயம் என் எழுத்திலிருந்து விலகிய மனோபாவம் இருக்கும், ஆனால் “ஒரு மஞ்சள் சூரியனில் பாதி” நாவலைப் பொருத்தவரை அப்படியில்லை.

adichie_h_5281738நைஜீரிய மக்கள் இன்னும் இந்த போரைப் பற்றிய துக்கத்துடன் அதைக் கடக்கும் முயற்சியில்தான் இருக்கிறார்களா?

அடிச்சி: ஏராளமான நைஜீரிய மக்கள் இன்னும் இதைக் குறித்து எதிர்கொள்ளவேயில்லை. ஒருங்கமைந்த நாடாக நாங்கள் இதை எதிர்கொள்ளாததும் இந்தப் போர் குறித்து நாங்கள் எதுவும் செய்யவில்லை என்ற மனநிலை ஏற்படுவதற்கான ஒரு காரணம். உயர்நிலைப் பள்ளியில் யாரும் ‘இபோ’ பண்பாடு குறித்து கற்றுக் கொள்வதில்லை. ஒரு போர் நடந்தது என்பது ஒரு தகவலாகச் சொல்லப்படுகிறது, அதைத் தவிர வேறெதுவும் இல்லை. ‘எதுவும் நடக்காதது போல் நடிக்க வேண்டும்’ என்பதே தம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்ற உணர்வு இபோ மக்களிடம் இருக்கிறது. இப்போது ஒரு பத்து ஆண்டுகளாகப் புதிதாக ஒரு பியாஃபர இயக்கம் நடக்கிறது. பெரும்பாலும் இதைச் செய்பவர்கள் இபோ கிராமங்களில் உள்ள ஏழை மக்கள்தான். அவர்கள் பியாஃப்ராவிலிருந்து விஷயங்களைக் கையிலேடுக்கிறார்கள், பியாஃப்ரக் கொடியைப் பறக்கவிடுகிறார்கள். நான் போரைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னதும், பலர் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்தார்கள். “நீ குழப்பத்தை எப்படித் தருவிப்பது என்று தேடி அலைகிறாய், வன்முறையை ஊக்குவிக்கிறாய்,” என்று சொன்னார்கள். அந்தப் போரைப் பற்றி நான் எழுதியிருக்கக்கூடாது என்று நினைப்பவர்களிடமிருந்து இன்றும் எனக்கு கோபமான மின் அஞ்சல்கள் வருகின்றன. ஆனால் புத்தகத்தின் காரணமாக அந்தக் காலகட்டம் குறித்த கேள்விகளைக் கேட்பவர்கள் பலர் என்னை இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள். போர்க் காலத்தில் வாழ்ந்தும் அது குறித்து எதுவும் பேசாமலிருப்பவர்களின் பிள்ளைகள் இவர்கள். சில சமயம் முட்டாள்தனமாக நான் உணர்ச்சி வசப்படுவதும் நடக்கிறது. நைஜீரியாவில் ஒரு முறை இப்புத்தகவாசிப்பு நிகழ்ச்சியில், ஒரு பெண்மணி என்னிடம் “உன் புத்தகத்தால், எனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இப்போது என்னால் பேசமுடிகிறது. அதற்கு நன்றி,” என்று சொன்னார். அப்போது நான் அழத்துவங்கினேன்.

உங்கள் பெற்றோரால் உங்களிடம் இது பற்றி பேச முடிந்திருக்கிறதா?

அடிச்சி: என் அம்மாவுக்கு, தான் இழந்த பொருட்களைப் பற்றிப் பேசுவது,அவளது பீங்கான் பாத்திரங்கள், புத்தகங்கள், பியானோ இதையெல்லாம் பற்றிப் பேசுவது ஒப்பீட்டில் கூடுதலாக எளிதாக இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதும்போது நான் அவருடன் அடிக்கடி பேசினேன், ஒவ்வொரு சிறு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். அவர் தன் தலைமுடியை என்ன செய்தார் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தேன். அப்போதெல்லாம் நைஜீரியாவில் நடுத்தர சமூகப் பெண்கள் ஒவ்வொருவரும் விக் (wig) வைத்திருப்பார்கள். அவர் தன் விக்கைத் தொலைத்திருந்தார், அதற்காக துக்கப்பட்டிருந்தார். அதையெல்லாம் குறித்து அவரால் பேசமுடிந்தது. ஆனால் அவரால் தன் அப்பாவை இழந்தது குறித்துப் பேசவே முடியவில்லை. அவர் அப்பா ஒரு அகதி முகாமில் இருந்தார். சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காரணத்தால் என் அம்மாவால் அங்கே போக முடியவில்லை. என் அப்பாவும் தன் தந்தையை இழந்திருந்தார். அவர் தன் புத்தகங்களையும், வேறு அனைத்து பொருட்களையும் கூட தொலைத்திருந்தார். அவர் பெர்க்லியில் படித்து முடித்து வாங்கிய பட்டத்திற்கான அங்கியை இழந்ததைக் குறித்து வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.

இபோ மற்றும் ஹௌஸா மக்களிடையே இன்னமும் போர்க்கால காழ்ப்புணர்ச்சி தொடர்ந்து வருகிறதா?

ஆம், இன்னமும் இருக்கிறது. ஆனால் என் தலைமுறையில் அந்த காழ்ப்புணர்ச்சி குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இபோக்கள் “ஆதிக்கம் செய்து நம் பொருட்களை அபகரிக்க” ஆசைப்படுகிறவர்கள் என்பன போன்ற விஷயங்களை நம்புகிறவர்கள் நைஜீரியாவில் இருக்கிறார்கள். ஆனால் இதைக் கடந்து செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குழு துவேஷங்களைக் குறித்துத் தெரிந்திருந்தாலும், என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த துவேஷங்களில் அக்கறை இல்லை..

உயர்கல்வி பெற்றவர், வெளிநாடுகளில் கொண்டாடப்படுபவர் என்பதால் உங்களுக்கு வேரறுந்த உணர்வு இருக்கிறதா?

இல்லை. என் நண்பர்கள் நான் நைஜீரியாவில் ’ராக் ஸ்டார்’ மாதிரி இருக்கிறேன் என்று கேலி செய்கிறார்கள். இதுவரை நான் என்னை ஒரு அமெரிக்கராக ஒருபோதும் உணர்ந்ததில்லை, இனி எப்போதும் அப்படி உணரவும் போவதில்லை. நான் அமெரிக்காவில் காலந்தள்ளும் ஒரு நைஜீரியர்.

‘மஞ்சள் சூரியனில் ஒரு பாதி’ நாவலை எழுதும்போது சரித்திரத்தையும் புனைவையும் உங்களால் எப்படி சமனப்படுத்திக் கொள்ள முடிந்தது?

நான் மிக அதிகமான அளவில் “உண்மை” பாத்திரங்கள் இருப்பதை விரும்பவில்லை. என் கதையில் பேராசிரியர் எஜெகா இருக்கிறார், அவர் பியாஃப்ர தலைவர் ‘சுக்வெமேகா ஓடுமேக்வு ஒஜூகு’ அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டவர். ஒகியோமா பாத்திரம் ’கிறிஸ்டொபர் ஒகிக்போ’ என்ற அற்புதமான நைஜீரிய கவிஞனை அடிப்படையாகக்கொண்டது. ஒகிக்போ போலவே அவனும் போருக்குப் போகிறான், சாகிறான். ’மஞ்சள் சூரியனில் ஒரு பாதி’ ஒரு யுத்தப் புத்தகமாக இருக்கலாம், ஆனால் போர் இரண்டாம்பட்சமாக இருக்க வேண்டுமென்றே நான் விரும்பினேன். நான் மனிதர்களைப் பற்றி எழுத நினைத்தேன், போர் அவர்களை எப்படி மாற்றியது என்று எழுத நினைத்தேன். சின்ன சின்ன மாற்றங்கள், சாப்பிடும் முறை, பார்க்கும் முறை, அன்பு செலுத்தும் முறை இதிலெல்லாம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எழுத நினைத்தேன்.

ரிச்சர்ட் என்ற அந்த இங்கிலீஷ்காரன், தன்னை மற்றவர்கள் பியாஃப்ராவைச் சேர்ந்தவன் என்று நினைக்க எத்தனையோ ஆசைப்படுகிறான்- அவன் ஒரு படுகொலையைப் பார்க்கிறான். ஒலான்னா என்ற பாத்திரம், ரயிலில் தன் குழந்தையின் தலையை ஒரு சுரைக்குடுக்கையில் (கலாபாஷ்) சுமந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்க்க நேர்கிறது. தான் கண்ணுற்ற ரணகளக் காட்சிகளால் பதைபதைத்துப் போகும் ஒலான்னா, உண்மையாகவே செயலற்று உறைந்து நிற்கிறாள். ரிச்சர்ட் தனது அனுபவம் தன்னை பாதிக்காதது குறித்த உறுத்தலை உணர்கிறான். “வெறும் பார்வையாளன் போலத் தானிருந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் அவனைக் கூடுதலாக அச்சுறுத்தியது. அவன் தன் உயிருக்காகப் பயப்படவில்லை,” என்று எழுதுகிறீர்கள்.

அவனைப் போன்ற ஒருத்தனுக்கு அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணமாக இருக்கிறது. வெள்ளை இங்கிலீஷ்காரனாக இருந்து பியாஃப்ர அடையாளத்தைத் தனதாகத் தெரிவு செய்வது என்பது, ஒரு பியாஃப்ர மனிதராகப் பிறந்து வாழ்வதிலிருந்து வேறுபட்டது என்று அவனுக்கு சரியாகப் பிடிபடுவதில்லை. பிரிட்டிஷார் அந்தப் போரில் அத்தனை நிறையப் பங்கெடுத்தார்கள், அதனால் பியாஃப்ராவில் வெறுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்; நான் ரிச்சர்டை இனியவனாகவும், அதே சமயம் நம் சீற்றத்தைத் தூண்டுபவனாகவும் காட்டவேண்டுமென்று நினைத்தேன். எந்த இடத்திலும் பொருந்த முடியாமல் இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துக்குரியவனாக தன்னை பாவித்துக்கொள்ள நெருக்கியடித்து ஒட்டிக்கொள்ளும் ஆட்களில் ஒருவனாக அவனை நினைத்தேன். இந்தப்போர் குறித்து ஆய்வு செய்யும்போது, சில பெண்கள் கொலை செய்யப்பட்ட தங்கள் குழந்தைகளின் உடலுறுப்புகளைப் பைகளில் சுமந்து திரிந்ததைப் பற்றிய கதைகளைப் படித்தேன். அவை அழியாது நின்று மனதை உலுக்குபவை. திக்கற்று அனாதரவாக நின்ற அவர்களுடைய கடைசி கட்ட சோகாப்பு அது. எனக்கு அது… அது மிகக் கஷ்டமாக இருந்தது. அந்தக் காட்சியை எழுதும்போது நானே அப்படியொரு மனம் ஓய்ந்த நிலையை உணர்ந்தேன்.

குறிப்பாக எந்த ஒரு பாத்திரத்துடனாவது நீங்கள் ஆழ்ந்த பிணைப்பை உணர்ந்தீர்களா?

எனக்கு என் குழந்தைகள் எல்லாரையும் பிடிக்கும் (சிரிக்கிறார்). நான் மிகவும் மதிக்கும் பாத்திரம் ஒலான்னாவின் சகோதரி கைனேனிதான் என்று நினைக்கிறேன். நான் கதையை அவளது பார்வையில் சொல்லியிருந்து அவளது எண்ணங்களுள் புகுந்திருந்தால் அவள் இவ்வளவு புதிரானவளாக இருந்திருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன், நானும் அவளை இந்த அளவுக்கு மதித்திருக்க மாட்டேன். எனக்கு அவளது ஒரு சில சிறு தோற்றங்களே கிட்டின. தனக்கென தானே அமைத்துக் கொண்ட விதிகளின்படி வாழ்கிறாள் என்பதால் எனது ஆதர்ச பெண்மணி அவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் பார்த்தால், ஒடேனிக்போவின் வேலைக்காரப் பையன், உக்வு, அவனைத்தான் எனக்கு மிகப் பிடித்தது. அவனை எழுதுவது மிக எளிதாக இருந்தது. ஒரு வகையில் அதனால் அவனோடுதான் எனக்கு நிறைய ஒட்ட முடிந்தது. ஆனால் அவன் என்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனும் கூட. பாவப்பட்ட வேலைக்காரச் சிறுவன் அவன். ஆனால் இருப்பவர்களில் அவன்தான் அதிகம் விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான். அவன் நன்கு கவனிப்பவன். ஒருவேளை இருந்தவர்களிலேயே மிகவும் புத்திசாலியும்கூட என்று சொல்லலாம். அவனுக்கு இந்த உலகைத் தெரிந்து கொள்ள நிறைய ஊக்கம் இருக்கிறது. நகைச்சுவை உணர்வு கொண்டவன் அவன். இந்தப் புத்தகத்தின் உயிராக அவன் இருக்க வேண்டுமென்றுதான் நான் உண்மையாகவே நினைத்தேன், அத்தனையையும் ஒன்றாகப் பிணைக்கும் பாத்திரமாக அவன் இருக்க் வேண்டுமென விரும்பினேன்.

இபோ மொழியின் உயிர்ப்பையும் பொருளையும், நேரடியாக மொழிபெயர்த்துச் சொல்லாமலே தருவித்திருக்கிறீர்கள். மொழி உங்களுக்குத் தடையாக இருக்கவில்லையா?

அப்படி இருக்கலாம். என் பாத்திரங்களில எல்லாரும் அப்படி இல்லையென்றாலும் பெரும்பாலானவர்கள் இபோ மக்கள். என் வாசகர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டியது எனக்கு அவசியமாக இருக்கிறது. எப்போதுமே இந்த இரண்டு மொழிகளோடு (ஆங்கிலம், இபோ) கூடிக்கலந்து பேசியபடியே இருக்கிறேன். ஆனால் நான் என்னைப் போலவும் இன்ன பிற நைஜீரியர்கள் போலவும் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளையும் பேசுகிறவர்களைப் பற்றியும் எழுதுகிறேன். உதாரணத்துக்கு என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஸ்பாங்கிலிஷ் போல இபோ பேசுகிறார்கள். எங்களுக்கு முழுக்க முழுக்க மூன்று வாக்கியங்களை இபோவில் பேசத் தெரியாது. அனேகமாக ஒரு ஆங்கிலச்சொல்லை உபயோகித்து விடுகிறோம். நான் அதைக் கொணர நினைத்தேன்.

‘மஞ்சள் சூரியனில் ஒரு பாதி’ எழுதும்போது அது சர்வதேச அளவில் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்ற கவலை உங்களுக்கு இருந்ததா?

அரண்டு போயிருந்தேன். “யாருக்கும் இது புரியப்போவதில்லை, அதனால் இந்த ப்ளடி புக்கை அமெரிக்காவில் யாரும் வாங்கப் போவதில்லை. இது டார்ஃபூர் (Darfur) பற்றி இல்லையே. (சிரிக்கிறார்) நைஜீரியாவிலும் எல்லாரும் ஆத்திரப்படப்போகிறார்கள், ஏனெனில் அறுபதுகளைப் பற்றி எழுதுகிறேன். இன்னமும் சுமையாய் இருக்கும் விஷயத்தை எழுதுகிறேன்,” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். திரும்பத் திரும்ப என் எடிட்டரைக் கூப்பிட்டு, “இன்னும் ஒரு தடவை திருத்தி எழுத வேண்டும்,” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ‘ஒரு கட்டத்தில்’ அவர் “சிமமாண்டா, இதோடு சரி. நீ இதை விட்டுவிடத்தான் வேண்டும்,” என்று சொன்னார். நான்கு ஆண்டுகளாக என்னை அந்தப் புத்தகம் தின்றிருந்ததால், அதை இறுதியாக முடித்தபோது, நம்பிக்கையே இல்லாது போய் மன அழுத்தத்துக்கு ஆளானேன். மொத்தமாகக் கலங்கிப் போனேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண் விழித்ததும் இடிந்துபோய் உட்கார்ந்திருப்பேன். இப்புத்தகத்தை எழுதும்போது அழுதுகொண்டிருந்தேன். என் துயரத்தின் ஆழம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

கலைக்கு அறம் சார்ந்த பொறுப்புகள் இருக்கின்றனவா?

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.