மகரந்தம்

ஃபைடோ-ப்ளாங்டன்…

… என்று நுண்ணுயிரிகள் உலகக் கடல்களில் எங்கும் உலவுகின்றன. பெரும் திமிங்கிலங்கள் ப்ளாங்டன் இல்லையெனில் மாண்டு போகும். கடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும். ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது. கடலில் வளரும் ப்ளாங்டன்களின் இருப்பும், இல்லாமையும் கடல்களில் தோன்றும் பெரும்புயல்களைக் குறைக்கும் அல்லது கூட்டும். எப்படி அது? ஃபைடோ-ப்ளாங்டன் கடலின் சாதாரண நிறமான ஆழ்ந்த நீல நிறத்திலிருந்து மாற்றி, கடலை ஒரு குழம்பான பசும் நிறமாக்குகிறது. நீலக்கடலினுள் சூரிய ஒளி ஆழத்தில் ஊடுருவி கடலை உஷ்ணமாக்கும். ஆனால் பசும் குழம்பு நிறமோ கடல் மேல்பரப்பில் சூரிய ஒளியை நிறுத்துகிறது. கடலின் ஆழம் குளிர்ந்து இருக்கும், மேல்பரப்பு மட்டும் உஷ்ணமாகும். கடலில் புயல்கள் உருவாகக் காரணமே இந்த மேல்பரப்பு உஷ்ணத்துக்கும் ஆழ்கடலின் வெப்பத்துக்குமிடையே உள்ள வேறுபாட்டினால்தான். வேறுபாடு அதிகரிக்க அதிகரிக்கப் புயல்களின் கடுமையும் அதிகரிக்கும். ஃபைடோ- ப்ளாங்டன் குறைவாக வளர்ந்தால் பெரும்புயல்கள் குறையும் என்று வானிலை – கடல் பரப்பு ஆய்வாளர்கள் கருதத் துவங்கி இருக்கிறார்கள். மேல் விவரங்களுக்கு இந்தச் செய்தியைப் படியுங்களேன்.

http://www.wired.com/wiredscience/2010/09/tiny-plankton-could-steer-giant-hurricanes/

யூரோப்பில் மீண்டும் இனவெறி

நுகர்வுக் கலாசாரமும், அதீதமான தனிமனித சுதந்திர வேட்கையும், குடும்பங்கள், நீண்ட காலப் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து இளைஞர்களையும், குறிப்பாகப் பெண்களையும் விடுதலை செய்து விட்டன. அதனால் பிள்ளை பெறுவதே ஒரு பாரம் என்று நம்பத் துவங்கிய அடுத்தடுத்த தலைமுறை யூரோப்பியர் இப்போது தம்மைத் தாமே பதிலி செய்வதைக் கூட விட்டு விட்டார். இளைஞர்கள் மிகக் குறைவாக, முதியவர் அதிகமாக உள்ள ஒரு நாகரீகத்தில் உடலுழைப்புக்கு யார் கிட்டுவார்- அகதிகள், அல்லது குடியேறிகள். இரண்டு வகையிலும் வருபவர்கள் யூரோப்பியர் அல்ல. உலகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கான பிராணவாயு பூராவும் சீனாவால் உறிஞசப்படுவதால் உலகில் அனேக நாடுகளில் தொழில் வளர்ச்சி இல்லை- சீனாவைத் தவிர. சீனாவின் அடிப்படை வளம் மனிதர், இளைஞர். அதாவது அடிமாட்டு விலைக்குக் கிட்டும் உழைப்பு. யூரோப்பில் வந்த குடியேறிகளுக்கு முன்னளவு இன்று வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் யூரோப்பின் சமூக நலத் திட்டங்களில் வேலையில்லாதாருக்குக் கிட்டும் அரசு உதவித் தொகையில் பிழைக்கத் துவங்கி இருக்கிறார். இதில் ஏற்கனவே நுகர்வு மோகத்தால் கடனில் மூழ்கியவர், வாழ்வில் தனிமை துரத்த குடி, போதை மருந்துகளுக்கு ஆளானவர், இப்படிப் பல வகை வெள்ளை/ உள்ளூர் யூரோப்பியர் இந்த மக்களோடு போட்டி இடும் நிலை. இது உள்ளூர் வேலையில்லா மனிதருக்கு எரிச்சலை ஊட்ட, இனவெறி அரசியல் நல்ல வளமான மண்ணை மறுபடி காண்கிறது வேரூன்றி வளர. கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளில் வெளி வந்த பல யூரோப்பிய மர்ம நாவல்களில் பெரும்பகுதி இந்த குடியேறிகளுக்கும் உள்ளூர் வெள்ளையருக்கும் நடக்கும் மோதல்கள் அல்லது இனவெறியால் நடக்கும் குற்றங்கள், தாக்குதல்கள், கொலைகள் பற்றியன என்பது நாவலாசிரியர்கள் அரசியல் அமைப்பும், ஆய்வாளர்களும்  விழித்துக் கொள்வதற்கு ஒரு பத்தாண்டுகள் முன்பே விழிப்போடு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டுகிறது. ஸ்வீடனில் மால்மோ என்ற நகரம் இத்தகைய நாவல்களின் ஒரு களம். ஒரு சமீபத்திய செய்தியில் தெரிய வருவது- கதையை எதார்த்தம் இன்று எட்டிப் பிடித்து விட்டது என்பது. ஸ்வீடனில் மால்மோ நகரில் குடியேறிகளைத் திடீர் தாக்குதல்களில் யாரோ கொன்று வருகிறார்கள். செய்தி இதோ :
http://www.guardian.co.uk/world/2010/oct/31/sweden-malmo-immigrants-gunman/print
இந்தச் செய்தி வெளியான சில தினங்களில் மால்மோ நகரில் குடியேறி, வெளிநாட்டு மக்களை தன் விருப்பத்துக்குச் சுட்டுக் கொன்ற ஒரு ஸ்வீடிஷ் பிரஜையைக் கைது செய்ததாக மால்மோ போலிஸ் அறிவித்துள்ளது.
http://www.guardian.co.uk/world/2010/nov/09/malmo-shootings-man-charged
வழக்கமான் இடது சாரிக் குற்றச்சாட்டுகளையும் மேற்படி செய்தி சொல்கிறது.  வலது சாரியினர் பார்லிமெண்டில் நுழைந்ததால்தான் இந்தக் கொலைகள் நடந்து வருவதாக அவர்களின் குற்றச் சாட்டு.
எல்லா நாடுகளிலும் இடது சாரிச் சிந்தனைக்குச் சல்லி வேர்தான் என்று தோன்றுகிறது.

neuron-birthஅதென்ன நியூரோஜெனிஸிஸ்?

கடந்த சில நூறாண்டுகளோடு ஒப்பிட்டால் இன்றைய காலகட்டத்தில்  முதியோர்கள் சில பத்தாண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள் என்பதை நாம் கணக்கிலெடுக்க வேண்டும். இந்த முதியவர்கள் முன்னெப்போதையும் விடக் கூடுதலான நோய்களோடும், உதவி தேவைப்படும் விதமான உடல் நிலைகளோடும் வாழ்ந்தால் அது அவர்களுக்கும், அவர்களுடைய இளைய தலைமுறையினருக்கும் மிக உபாதையான நிலையாக மாறும். மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்ற சில பத்தாண்டுகள் ஆகும். அதை எதிர்பார்த்து இன்றைய முதியோர் இருக்க முடியாது. மாறாக அவர்கள் தம் உடல் நிலைகளை மேம்படுத்தும் வழிகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

சில சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பன.

1. உண்டி சுருங்கல் மிக்க ஆரோக்கியம் தரும். வயதாக ஆக, உணவு உட்கொள்ளும் ஆர்வம் குறையும், அதே நேரம் உடலை வருத்தி உழைக்கும் தேவையும் குறையும் என்பதோடு, உடல் தளரத் துவங்குவதால் அத்தனை வேலைகளையும் முன்போலச் செய்ய முடியாது. எனவே உணவுக்கான தேவையும் குறைவே. இவற்றை மனதில் கொண்டு, உணவைக் குறைத்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் அது ஆரோக்கியத்தையும், நினைவு சக்தியையும் நல்ல நிலையில் வைக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

2.தொடர்ந்த உடற்பயிற்சி அல்லது நடை அல்லது உடலைச் சுறுசுறுப்பாகவும் ஓரளவாவது உழைப்பு உள்ளதாகவும் வைத்திருப்பது நீண்டகால நினைவு சக்தி, மூளைத் திறன், மேலும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதாகவும் தெரிகிறது.

3. மஞ்சள்பொடியை உணவில் இந்தியாவெங்கும் மக்கள் நிறையப் பயன்படுத்துகிறார்கள். இது கிருமிகளைக் கொல்லும் அற்புதப் பொருள் என்பதோடு, இதில் உள்ள ஒரு மூலப்பொருள், நினைவாற்றலை நீண்ட நாள் தக்க வைக்க உதவுகிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். மீதம் தகவல்களுக்கு இந்தச் செய்தியைப் படியுங்கள்.

http://www.huffingtonpost.com/dr-david-perlmutter-md/neurogenesis-what-it-mean_b_777163.html

ஒளிரும் மரங்கள்

மக்கள் கூட்டம் பெருகிவருகிறது. நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் அபிரிதமாக பெருகி வருகின்றன. பெருகும் தேவைகள், சுரண்டப்படும் இயற்கை வளங்கள், அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல்கள், இதில் ஓஸோன் மண்டலத்தின் ஓட்டை வேறு. இதில் ஒரு சில சிக்கல்களுக்கு தீர்வாக கீழே இருக்கும் செய்தி விளங்கலாம். தைய்வான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஒளிரும் துகள்களை மரத்தினுள் செலுத்தி அவற்றை இரவில் ஒளிரச் செய்ய முடியும் என்று கூறுகிறார். இதனால் என்ன லாபம்? மின்சாரத்தை மிச்சப்படுத்த மரம் வளர்க்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படும், மின்சார நுகர்வும் குறையும். நல்ல செய்தி இல்லையா? இது நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். இருக்கட்டுமே. விரிவான தகவலுக்கு இந்த செய்தியை படியுங்கள் :

http://www.gizmag.com/glowing-trees-using-gold-nanoparticles/16917/