மகரந்தம்

அரேபிய விஞ்ஞானம்?!

உளுத்துப் போன பழம் நம்பிக்கைகளை புனர் நிர்மாணம் செய்வது எப்படி? அவற்றை உலக ஊடகங்களில் முன்னிறுத்த,  பொய்யான தகவல்களை வைத்து சற்றும் பொருத்தமில்லாத அறிவியல் முலாம் பூசிப் புரட்டல் செய்வதுதான்.  எல்லா நம்பிக்கை சார்ந்த கூட்டங்களிலும் புரட்டல்காரர்கள் உண்டே? இந்தப் புதுப் புரளியில் எப்படிச் சாதாரண மக்களுக்கு உடனே புலப்படாத ஒரு தகவலைச் சொல்லி உலகளவில் அரசியல் செய்கிறார்கள் பாருங்கள்.  மெக்காவில் காந்த சக்தியே வேலை செய்வதில்லை என்று ஒரு மதவாதி பிரச்சாரம் செய்வதும், அதற்கு அரபு ’விஞ்ஞானிகள்’ துணை போவதும்…. என்ன சொல்லி என்ன பயன்?  க்ரீன்விச் ஏன் உலகுக்கு மையம் என்பதை இந்தச் செய்தி விளக்கவும் இல்லை என்பதையும் கவனியுங்கள்.

நிழலில் வாழ்ந்திருந்த ஒளிக் கலைஞர்கள்

மனித குல வரலாற்றின் மிக முக்கியமான ஒரு தருணத்தை பதிவு செய்தவர்கள் இவர்கள். இரண்டாம் பனிப்போர் காலகட்டத்தில் அணுகுண்டுகளை தயாரித்த விஞ்ஞானிகள் புகழின் உச்சியில் இருந்தனர். அந்த குண்டுகளைப் பரிசோதித்த போது ஒரு சில புகைப்படக்காரர்கள் அந்த நிகழ்வைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். மிக ரகசியமாக இது செய்து முடிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்யுமபோது பல அடி தூரங்களுக்கு தூக்கி வீசப்பட்டதை இன்றும் நினைவு கூறுகிறார்கள் இவர்கள். சிலர் புற்றுநோயினால் மரணித்தனர். இவர்களை குறித்த தகவல்கள் இத்தனை வருடங்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க அரசாங்கம் கடந்த சில வருடங்களாக இவர்களை குறித்த தகவல்களை வெளியிட துவங்கியிருக்கிறது. இது குறித்து பேசும் கட்டுரை ஒன்றை இங்கே வாசியுங்கள்.

துறவின் தியாகத்தின் டார்வினிய வேர்கள்?

டார்வினின் காலத்திலிருந்து 1940களின் இறுதி வரை சமூக டார்வினியம் இனவாதக்கோட்பாடுகளை கொண்ட போலி அறிவியல் புலமாகவே இருந்தது. ஆனால் 1970களிலிருந்து ஒரு புதிய போக்கு உயிரியலில் உருவானது. குறிப்பாக ஈ.ஓ.வில்ஸனில் தொடங்கி ரிச்சர்ட் டாவ்கின்ஸ் வரையாக சமூக செயல்பாடுகளின் பரிணாம வேர்களை ஊகிக்க ஆரம்பித்தார்கள். தனி உயிரின் உயிர்வாழும் நிகழ்வை அதிகரிக்கும் இயக்கங்களாக பரிணாம வளர்ச்சியின் திரிகளை தனித்தனியாக கண்டு அதனை கூட்டாக பாவி பரிணாமத்தின் சித்திரம் நெய்யப்பட்டு வந்தது. இதில் உயிரினக்கூட்டத்துக்கு என்ன பங்கு? ஒரு தனி உயிர் தன்னுடைய நேரத்தை தன் இனப்பெருக்க சாத்தியங்களை ஓரளவாவது துறந்து தன் உயிரினக் கூட்டத்துக்கு நேரத்தையும் தன் சக்தியையும் கொடுப்பதற்கு பின்னால் இயங்கும் ஆதாரமான பரிணாம விதிகள் என்ன? ஈ.ஓ.வில்ஸன் தன் வாழ்க்கையையே இந்த ஆராய்ச்சியில் செலவழித்திருக்கிறார். அவரும் அவரது சக ஆராய்ச்சியாளரும் வந்துள்ள சில முடிவுகள் கடுமையான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. கூடவே பரிணாம இயக்க விதிகளின் புதுமைகளை நாம் கண்டடையும் சாத்தியக்கூறுகளையும் கோடி காட்டுகின்றன. எறும்புகளில் ஆரம்பித்து துறவு வரை: துறவு குறித்து சொல்லும் போது சுயநல ஜீன்கள் குறித்து எழுதிய டாவ்கின்ஸ் முன்வைத்த ஒரு கருதுகோளான மீம்ஸ்கள் குறித்து யோசிக்கலாம். மானுட சமுதாயத்தில் குறிப்பிட்ட மீம்களை சுமக்கும் மானுடர்களீன் ஜீன்களை பரப்ப எடுக்கப்படும் பரிணாம முயற்சிதான் துறவா? பல சிந்தனைகளை தூண்டும் இந்த கட்டுரையை இங்கே படியுங்கள்.

secularசுயமும், அரசியல் தேர்வுகளும்

இங்கே ஒரு சுவையான கட்டுரை , நாம் எப்படிப்பட்டவராக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது அரசியல் சாய்வுகள் இருக்கும் என்று சொல்கிறது. இந்தக் கட்டுரையில் எதையும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம்/களவும் கற்று மற என்று நினைக்கிறவர்கள் லிபரல்களாகவும், எந்த விஷயத்திலும் ஜாக்கிரதையாகவும் மனசாட்சிக்கு ரொம்பவும் பயப்படுகிறவர்களாகவும் இருப்பவர்கள் கன்சர்வேட்டிவ்களாகவும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.  இந்தக் கட்டுரையில் இன்னும் ஒரு படி மேலே போய், தீவிரவாதக் குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களைக் கணக்கெடுத்து ஒரு சில வித்தியாசமான முடிவுகளுக்கு வர வேண்டியிருப்பதாகக் கட்டுரையை எழுதியவர் சொல்கிறார்.