ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று

2005061703440201

ராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம்.

தொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக  சம்பந்தமில்லாத பல விஷயங்களைச் சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஓரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை. (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் தயங்காமல் அப்பத்தியை விட்டு மேலே படித்துக்கொண்டே செல்லுங்கள். ஒலிக்கோப்புகளையும் கேளுங்கள். நம் சங்கீதம் என் விளக்கங்களையும் மீறி நமக்கு நிச்சயம் புரியும். சந்தேகம்/தவறுகள் இருந்தால் மடலிடுங்கள். அடுத்த பாகத்தில் சரிசெய்துவிடுவோம்.

பல்லவி என்றால் பதம், லயம், வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர். இப்படி யார் முதலில் வகுத்தது என்று தெரியவில்லை.

பதம் என்றால் சாஹித்யம் அல்லது பாட்டு வரிகள்.

லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது.

வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.

சரியாகப் பாடப்படும் பல்லவியை, சரியாய் புரிந்துகொண்டு ரசிப்பதற்கு ஓரளவு தாளம் (லயம்) பற்றிய அறிவு வேண்டும். இல்லையேல் பல வேளைகளில் என்னய்யா பல்லவி, எல்லாம் ஒன்னும்புரியாத வெறும் கணக்குவழக்கு என்று குறைசொல்லத் தோன்றும். புரியவில்லை என்றால் எப்படி “வெறும் கணக்கு வழக்கு” என்று உபயோகமற்றதாக்குகிறீர்கள் என்றால் கோபம் வரும். அதேபோல், சாஹித்ய வரிகளின் பொருள் தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல் ஏன் இங்கு வார்த்தையை உடைக்கிறார், ஏன் பல்லவியின் இந்த வார்த்தையை எடுத்துக்கொண்டு நிரவல் செய்கிறார், ஏன் நிரவல் செய்யவில்லை, என்பதெல்லாம் தெளிவாகாது. அதைப்போல், வின்யாசம், அதாவது சங்கீத சித்துவிளையாட்டுகள் என்னென்ன, எங்கெங்குவருகிறது, ஏன் த்ரிகாலம் மட்டும் பாடுகிறார், ஷட்காலமும் பாடவில்லை என்று ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் பக்கத்து சீட் தாத்தா ‘ஆஹா’ என்கையில் ஏன் என்று புரியாது.

(ஆனால், இன்று பல ரசிகர்கள் கண்ட இடத்தில் கைதட்டுவது பற்றி கவலைகொள்ளாதீர். கச்சேரியில் கைதட்டல் என்று ஒரு அழகான கட்டுரை தலைப்பு உதிக்கிறது. உள்ளடக்கம்தான் என் முதுகில் தட்டு வாங்கவைத்துவிடும்.)

பல்லவிகள் பலவகை. திரைப்படப்பாடல்களில் வரும் முதல் இரண்டு வரிகள் அனைத்தும் பல்லவிகளே. கீர்த்தனைகளிலும் இவ்வாறே. ஆனால் கீர்த்தனைகளில் அனுபல்லவி நிச்சயம் வரும். பிறகே சரணம். திரைப்படப் பாடல்களில் இப்பொதெல்லாம் பல்லவி, பின் சமஷ்டி சரணங்கள்தான். கீர்த்தனை பல்லவிகளே முதலில் RTPயின் பல்லவிகளாக உபயோகிக்கப்பட்டது என்கிறார் வேதவல்லி (தன் புத்தகத்தில்). பிறகே, RTPக்கான பிரத்யேக பல்லவிகள் அமைக்கப்பட்டனவாம். RTPக்கான பல்லவிகளை, சம, அதீத, அனாகத எடுப்பு பல்லவி, ஷட்கால பல்லவி, ராகமாலிகை பல்லவி, ராட்டை பல்லவி, நடைபல்லவி, த்விதாள அவதான பல்லவி, கோபுச்ச பல்லவி என்று பலவகையாகப் பார்க்கலாம். பல்லவி என்றால் பாட்டு வரிகள் என்பது இவைகளுக்கெல்லாமும் பொருந்தும்.

பல்லவியை கேட்பதே ரொம்ப கடினம் என்று ஜெர்க் விடுவதாக நினைக்காதீர்கள். முன்னர் சொன்னது போல, சரியாகப் பாடப்படும் பல்லவியை சரியாகப் புரியாமலும் ரசிப்பதற்கு, காதும் பொறுமையும் போதும். நிச்சயம் கேளுங்கள். பல படிமங்களில் விளங்குவதுதான் கலை. அவரவரின் அப்போதைய புரிதல் படிமத்திற்கு ஏற்ப, இசைக்கலை மனதிற்கு இசைந்து அனுபவப்பொக்கிஷங்களை அருளும். தன்னால் மேலும் விளங்கும்.

—ooOOOoo—

ல்லவியைப் பற்றி சுருக்கமாக வரலாற்றிவிட்டு அதன் வகைகளுக்கும் உதாரணம் தருவோம். பல்லவி பாடும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் பிரபலமானதாகத் தெரிகிறது. இந்த வரலாற்றின் பெரும்பகுதியை சாம்பமூர்த்தி, வேதவல்லி, பந்துலராமா இசைப் புத்தகங்களில் இருந்து கலக்கியுள்ளேன். கட்டுரையின் கீழே புத்தகங்களின் சான்றேடுகள் உள்ளன. மிச்சம் கேண்டீன்களில் கேட்டது.

1763ஆம் வருடம் முதல் 1787 வரை, ராஜா துலஜாவின் அரசவைக் கலைஞராகத் திகழ்ந்த பச்சிமிரியம் ஆதியப்ப அய்யா,  பல்லவி பாடுவதை முதலில் ஒருங்கிணைத்ததாக அறிகிறோம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரியின் குரு (குரு சங்கீத ஸ்வாமி) அவரை ஆதியப்பா பல்லவி பாடுவதை கேட்டுவரச்சொல்லி அனுப்பினாராம். கவனிக்கவும், கேட்டுவர, கற்றுவர இல்லை.

பிறகு சியாமா சாஸ்த்ரி பொப்பிலி கேசவய்யாவை தஞ்சாவூர் சமஸ்த்தானத்தில் பல்லவிப் போட்டியில் வென்றதாக வரலாறு. சிம்மனந்தனதாள (108 அக்‌ஷரங்கள்) பல்லவிக்கு எதிர்ப்பாட்டாய் சரபனந்தன தாளத்தில் (79 அக்‌ஷரங்கள்) பல்லவி பாடி.

ஆதி தாளத்துடன் (8 அக்‌ஷரம்) ஒப்பிடுகையில், இவ்வகை தாளங்களின் கால அளவு நீளமானது. பிறகு சமயம் வருகையில் பார்ப்போம்.

அக்காலத்தில் பல்லவிப் போட்டிகள் வெகு பிரபலம். சாம்பமூர்த்தி  இதைக்குறித்து தனியே ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார். இரு இசைக்கலைஞர்களிடையே போட்டி என்றால், ஒரு மூத்த இசைக்கலைஞர் அம்பயர். முதலில் இ.க-1 ஒரு ராகத்தில் ஆலாபனை செய்து பொளக்கவேண்டும். இ.க-2 அது என்ன ராகம் என்று கண்டுசொல்லிவிட்டு, ஸ்பாட்டிலேயே அந்த ராகத்தில் பல்லவியின் அனைத்து அங்கங்களும் மிளிர ஒரு பல்லவி கம்போஸ் செய்து காட்டவேண்டும். அப்பல்லவியை இ.க-1 சமத்காரமாகப் பாடிவிட்டால், ஆட்டம் எதிர்ப்புறம் திரும்பும். இப்போது இ.க-2 ஒரு ராக ஆலபனை செய்யவேண்டும். இ.க-1 இதில் பல்லவி. இ.க-2 அதைப் பாடவேண்டும்.

இருவரும் சரியாய் செய்துவிட்டால் ஆட்டம் டிரா. அம்பயர் தாத்தா இருவரையும் தழுவி தட்டிக்கொடுத்து பரிசளித்து அனுப்பிவிடுவார்.

டிரா எப்போதாவதுதானாம். பல்லவி போட்டி பெனால்டி ஷூடவுட்டைவிட மோசம். நிச்சயம் போட்டியில் ஒருவர் சொதப்பிவிடுவாராம்.

பண்டிதர்களால் “மஹா பெரியவா” என்று போற்றப்படும் மஹாவைத்தியநாத ஐயர் நாராயணகௌளையில் நாள் முழுவதும் (மிகை விடுத்து, அட்லீஸ்ட் பல மணி நேரங்கள் என்று கொள்ளலாம்) விஸ்தாரமாக RTP பாடி போட்டியில் வென்றதாக சங்கீதவரலாறு. இப்போது கச்சேரி மேடையேறும் வித்வான்கள் பெரும்பாலானவர்களுக்கு இந்த ராகத்தின் ஆரோஹ-அவரோஹணமே தெரியுமா என்பதே சந்தேகம். ஏன் என்று ஆராய்வது வேறு கட்டுரையின் விஷயம்.

பல்லவி பற்றி பல புத்தகங்கள் உள்ளன. அவற்றை நான்கு வகையாக்குகிறார் வேதவல்லி தன் புத்தகத்தில். முறையே, பல்லவியின் சாஹித்யத்தை மட்டும் தொகுத்தளிப்பவை (நவரோஜ், புன்னாகவராளி, அஸாவேரி என்று மேடைக்கு வராத ராகங்களிலும் என்று 153 பல்லவிகள் கொண்ட தாச்சூர் சிங்கராச்சார்யலூ இயற்றிய கானேந்து சேகரம், 1912), பல்லவி பாடும் முறையை சுருக்கமாய் சொல்பவை (சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்சினி), பல்லவி பாடும் முறையை விளக்கமாய் சொல்பவை (சாம்பமுர்த்தியின் சவுத் இண்டியன் மியூசிக் பாகம் 4, 1963, புத்தகமே உதாரணம்), பல்லவி சொல்கட்டு, ஸ்வரங்கள், வகைகள் என்று அதிரடியாக விளக்குபவை (பல்லவி ஸ்வரகல்பவல்லி – திருவொட்டியூர் தியாகைய்யர், 1900).

ராகம்-தானம்-பல்லவியை வளர்க்க ஸ்ருதி இதழ் பட்டாபிராமன் பெருமுயற்சி செய்துள்ளார். என்பதுகளில் (1980) எம்.எல்.வஸந்தகுமாரி, செங்கல்பட்டு ரங்கநாதன் என்று பலர் பங்கேற்ற பல்லவி பட்டறைகள் நடத்தியும், பயிலரங்குகளில் இளம்வித்வான்களை தேர்ச்சிபெறவும் செய்துள்ளார். இன்றும்  ராகம்-தானம்-பல்லவியை உழைத்து வெற்றிகரமாகப் பாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பலரை முதல் இரண்டாம் பாகங்களில் குறிப்பிட்டுள்ளேன். முதல் பாகத்தில் எழுதியுள்ள சில நிலைமைகள் மாறுமானால், மேடையேறி பாடுபவர்கள் அனைவரும் இப்படி இருக்கமுடியும். ரசிகர்களின் பங்கும் மிகமுக்கியம்.

—ooOOOoo—

ல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி என்பது கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர்.எம்.வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்துப் பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய கணக்குகளும் – மெலடி + ரிதம் என போட்டிபோட்டு கலக்கிவருவதுதான் பல்லவி.

சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றோ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ‘ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு’ என்று அங்கலாய்ப்பர். இக்கட்சியில் பல இசைவிமர்சகர்களும் உண்டு. உண்மையில் இவர்களுக்குப் பெரும்பாலும் தாளம் போட வராது. இல்லை சில ஆவர்தங்களுக்கு மேல் நிற்காது.

பல்லவியை எப்படி அமைக்க வேண்டும் என்று நியதிகள் நிறைய இருக்கின்றன. பொதுவாக, பல்லவிக்கு மூன்று அங்கங்கள் இருக்கும். பூர்வாங்கம் (அல்லது ப்ரதமாங்கம்), உத்தராங்கம் (த்துவித்தீயாங்கம்), பதகர்பம் (தமிழில் அறுதி). பூர்வாங்கம் பல்லவியின் முதல் பாகம் (முதல் வரி போல), உத்தராங்கம் இறுதி பாகம். இணைப்பது அல்லது பிரித்துக்காட்டுவது அறுதி. ஒரு தாளத்தில் பல்லவி அமைகிறது என்றால், அறுதி தாளத்தின் ஒரு சுற்றில் நடுசெண்டரில் விழும்.

உதாரணமாய்

ராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||

என்று ஆதி தாளத்தில் (8 அக்‌ஷரம்) இரண்டு களையில் சம எடுப்பில் தொடங்கி ஒரு பல்லவி அமைத்தால், அறுதி, நான்கு அக்‌ஷரத்தில் தாளத்தின் நடுவில், கொண்டுவில் விழும் (பியூரிஸ்டுகளுக்கு: “கொண்டு வா” அக்‌ஷர கணக்கு இழுவை என்றால், “ஞான கான” என்று மாற்றிக்கொள்ளுங்கள்).

ஆனால் இது கட்டாயமில்லை. நடுசெண்டருக்கு முன்னரும் பின்னரும் அறுதி இருக்கலாம். இப்படி இருந்தால் பல்லவியின் முதல் பாகமோ இறுதி பாகமோ அடுத்ததைக்காட்டிலும் நீட்டம். அறுதியே வைக்காமல் பல்லவி பாடுவேன் என்றும் சிலர் செய்துள்ளனர். அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதுடன் விட்டுவிடுவோம் (இது என் சப்ஜெக்டிவ் ஒப்பீனியன், அகவயமான கருத்து).

பல்லவியை மேடையில் முதல்தரம் பாடுகையில் ஓரிரு ஆவர்த்த சுற்றுக்களுக்கு அதன் அமைக்கப்பட்ட தாளம், களை, காலப்பிரமாணம், எடுப்பு, தவறாமல் பாடுவது முக்கியம். முதலில் (பக்கவாத்யக்காரர்களையும் சேர்த்து) கேட்பவர்களுக்கு புரியும்படி தாளத்தை நன்கு போட்டு பல்லவியை பாடிவிடவேண்டும். பிறகே மற்ற சங்கதிகள். இது நியதி. ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பக்கவாத்யத்தை ‘கவனிப்பதற்கே’ அவ்வப்போது துணிக்குள் தாளம் போடும் பாடகர்கள் இருக்கிறார்கள்.

சரி இப்போதைக்கு இது போதும். அதீத அனாகத எடுப்பு, அனுலோமம், ப்ரதிலோமம், த்ரிகாலம், ஷட்காலம், நிரவல், ஸ்வரகல்பனை, க்ருஹபேதம், ராகமாலிகை என்று நிறைய உள்ளது. இதில் சிலவற்றை, அடுத்த பாகத்தில் ஒரு பல்லவியை பிரித்து எழுத்தி விளக்குவோம்.

இப்போது பல்லவி கச்சேரியை தரையிறக்குவோம்.

—ooOOOoo—

ஏகப்பட்ட விதிகள் உள்ளது போலிருக்கே. என்னப்பா இது கேட்பதற்குமுன்னே இவ்வளவு மண்டைக்குள் ஏற்றவேண்டுமா என்றால், பல்லவி சுலப செய்முறையும் உள்ளது. பார்ப்போமா?

ஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும்? நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.

சரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்‌ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா?), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்.

முருகா, மால் மருகா, குருகுஹா, ஷண்முகா
வள்ளிமணாளா, வேல வா,

இப்படி. கடைசி ‘வேலவா’வை வேல வா என்று பிரிப்பது முக்கியம். ஏன் என்று படிக்கையில் விளங்கும்.

இது பிடிக்கவில்லை என்றால், பாட்டிலி(லி)ருப்பதை பாத்திரத்தில் கொட்டி, முத்து, குமரா, கந்தா, செந்தில், நாதா, வடி, வாடி, ஆடி, ஓடி, சரவணபவா, மயில், மா, வா, தா, ஆ, அன், என்று வேறு பதார்த்தங்களைச் சேர்த்து, இம்முறை மிக்ஸியிலிட்டு கலக்குங்கள். இப்போது

முருகன், முத்துக்குமரன், செந்தில்வேலவன்
சரவணன், குஹன், சரவணபவ வடிவழகன்

என்று வரலாம். கச்சேரியில் பாடும்முன் ஏவிஎம் ஸ்டூடியோவில் காப்பிரைட் பிரச்சனை வராதே என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்படியாக உதிக்கும் பல்லவிகளை பிறகு, ஆதி, கண்ட ஜாதி திரிபுடை என்று ஏதோ ஒரு தாளத்தில் பொருத்தி, ஒரு ராகத்தில் மெட்டமைத்து பாடவேண்டும். இதற்கு முன்னர் கூறியபடி, தானம் தெரிந்திருந்தால் கைகொடுக்கும். இல்லை பல் வலிக்கும்.

மேலும், வார்த்தைகளைப் போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம்.

குறையாய்த் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடி முடித்துவிடுவார்கள்.

சரி, கம்போஸிங்கில் அவ்வப்போது தானம்-ஞானம் மிக்ஸி ஓவராய் கிடைந்து

மாதவன் மருகா, மாமயில் முருகா, எனையாளவா
வடிவேலவா, ஓடிவா, விரைந்தோடிவா

என்றும் வந்தால், நீர் கொடுத்துவைத்தவர். விரைந்தோடிவாவில் பொடி வைத்து, தோடி ராகத்தில் அமைத்து சங்கீர்ன திரிபுடை (9+2+2=13 அக்‌ஷரம்) தாளத்தில் பாடலாம் (நிஜந்தான்).

ஆனால் ஒன்று. பல்லவியில் ஆக்‌ஷன் வெர்ப், வினைச்சொல் இருக்கவேண்டும் என்று ஒரு நியதி. அதுபடி வரிசையாய் பெயர்ச்சொற்களாய் மேலே மிக்ஸியில் ஆட்டி வெறுமனே கூட்டிச்சொன்னதெல்லாம் பல்லவியாகாது. அதற்காகத்தான் இப்படி வேல வா, ஆடிவா, ஓடிவா, விரைந்தோடிவா, என்றும், முடியவில்லை என்றால் வெறுமனே வா என்றும் ஜல்லியடிப்பது.

அப்படியே போய் சைக்கிள் ஏறிவா, ஸ்கூட்டர் ஓட்டிவா, 12பி பஸ் பிடித்துவா என்றெல்லாம் பாடலாம். எல்லாம் ஆக்‌ஷன் வெர்ப்தானே.

ஏனெனில், “கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி”, “உப்புமா கிண்டடி பெண்ணே, நன்றாக” என்றெல்லாம் ஒம்மாச்சி அற்ற பெயர்சொற்களுடன், சரியான வினைச்சொல்லுடன், டைகர் வரதாச்சாரியார் 1920களிலேயே பல்லவி அமைத்துப்பாடியுள்ளதாக தெரிகிறது. அவருக்கு (ம், பெரும்பாலான அவர் தலைமுறையினருக்கும்) சங்கீதமே பிரதானம். சாஹித்யம் சாதாரணம். கேட்டவர் சொல்லிக் கேட்டவர் சொல்வதை கேட்டுச் சொல்கிறேன்.

அதேபோல் ஒம்மாச்சி, மனிதப் பெயர்சொல்தான் பல்லவியில் வரவேனும் என்றில்லை,

குத்தாலத்து குரங்கே | மரத்தை விட்டிறங்கே ||

என்றும் வினைச்சொல்லுடன் பல்லவி அமைக்கலாம். அமைத்திருக்கிறார்கள், பைரவி ராகத்தில், ஆதி தாளத்தில் (ஆதாரம்: பக்கம் 49, சவுத் இண்டியன் மியுசிக், பாகம் 4, சாம்பமுர்த்தி)

மேலுள்ள பல்லவியை யாரராவது கச்சேரியில் பாடினார்களா தெரியவில்லை. ஆனால், அதற்கு முன் மிக்ஸி வைத்துக் கடைந்த நம் பல்லவிகள் பலதை பலர் அவரவர் திறனுக்கேற்ப தற்கால கச்சேரிமேடைகளில் பாடியுள்ளனர்.

இப்போது கன (கான) மேட்டர் கொஞ்சம்.

ஆனால் “நாட்டைக் குறிஞ்சி என்பார், சிறந்த எங்களது” என்று நாட்டைக்குறிஞ்சி ராகத்திலேயே பல்லவி அமைப்பதற்கு சற்று சாதுர்யம் தேவை. குறிஞ்சி நிலத்தையும் நினைவுகூருங்கள்.

அந்தந்த வார்த்தையை அந்த ராகத்தில் பாடலாம். சேர்த்தும் பாடலாம். ஆலத்தூர் சகோதரர்கள் இயற்றியது. கே.வி.நாராயணஸ்வாமிக்கு பிடித்த பல்லவி. ஆலத்தூர் சகோதரர்கள் நாட்டைக்குறிஞ்சியில் பாடுவார்கள். மேலும், அநாயாசமாய் நடையை மாற்றிப்பாடுவார்கள். நடைபல்லவிகளை பிளந்துகட்டியவர்கள். முதல் பாகத்தில் சொன்னதுபோல, கச்சேரிகளில் ரசிகர்களை கடினமான ராகம்-தானம்-பல்லவியையும் உட்கார்ந்து கேட்கவைத்த உழைப்பும் திறனும் பெருமையும் ஆலத்தூர் சகோதரர்களையே சேரும். நடைபல்லவி பற்றி பிறகு பேசுவோம்.

ஆலத்தூர் சகோதரர்கள்
ஆலத்தூர் சகோதரர்கள்

டி.என்.சேஷகோபாலன் ராகமாலிகை பல்லவியாய் நாட்டைக்குறிஞ்சி, நாட்டை, குறிஞ்சி, என்று மூன்று ராகங்களில் மேலேசொன்ன பல்லவியைப் பாடியுள்ள ராகம் தானம் பல்லவி கடையில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள்.

டி.என்.சேஷகோபாலன் நாட்டைக்குறிஞ்சி ராகம் தானம் பல்லவி

(மூன்று ராகமும் தெரிய ஒலிக்கோப்பில் பல்லவியை வெட்டிக்கோர்த்துள்ளேன். நிஜத்தில் இன்னமும் அபாரமாய் இருக்கும்)

இதையும் தாண்டி தானம்-ஞானம் கொப்பளித்தால், “வீர மாருதி கம்பீர மாருதி லங்கா பயங்கர (தீர)” என்றும் பல்லவி வரும். ராகம் திலங். மாருதி லங்காவில் பொதிந்திருக்கிறது. கேட்டுப்பாருங்களேன்.

டி.என்.சேஷகோபாலன் திலங் ராகம் தானம் பல்லவி

இவ்வகை வார்த்தை விளையாட்டு சேஷகோபாலன் ஸ்பெஷல். அடுத்த கச்சேரியில் “உன்மேல் எனக்கு காதல் ஆகிரியோ, ஸ்ருதிலயதான இசையே” என்று ஆஹிரி ராகத்தில் கண்டஜாதி திரிபுடை தாளத்தில். அவரிடம் இப்படியே பல தாளங்களில், ராகங்களில், எடுப்புக்களில், அறுதி கார்வை வித்தியாசங்களுடன் அரைமணியில் அம்பது பல்லவிகள் ஸ்பாட் கம்போசிஷனாய் வரும். பேச்சாய் அவர் சொல்வதை கேட்பதற்கே பிரமிப்பாய் இருக்கும்.

இதில், அவர், அவருடைய குரு (ராம்நாட் சங்கரசிவம்) மாதிரி செய்யமுடியாது என்று கூறி உதாரணமும் கொடுப்பார். சங்கரசிவத்தின் எளிய அறிமுக பல்லவி சாம்பிள் இப்படிப்போகுமாம்.

தம்பி, பல்லவி ரொம்ப சுலபம். எங்கே, ரூபக தாளம் எடுத்துக்கோ பார்ப்போம், சதுஸ்ர ரூபகம். அதான் தம்பி (X = 4, 2) ஆறு அக்‌ஷரங்களா வருதா, இப்போ பாடு

அறம் செய்ய விரும்பு | கரும்பு ||

அவ்ளோதான் பல்லவி.

இதெப்படியிருக்கு?

இப்போது நீங்கள் அடுத்ததாய் “ஆறுவது சினம், மனம்” என்பீர்களே, சரிதானே? டூ லேட். அதையும் அப்படியே நீட்டி, ரூபகத்தை விடுத்து, திஸ்ரகதியில் ஆதியாக்கி

ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ, (8 அக்‌ஷரம், திஸ்ர கதியில்)

மாறுவது மனம், சேருவது இனம் தெரியாத முருகனா நீ,
ஏறுமயிலேறு, ஈசனிடம் நாடு, இன்முகம் காட்டவாய் நீ,
ஏற்றுக்கொள்வாய், கூட்டிச்செல்வேன் என்னுடன் ஓடிவா நீ

என்று ஆதி தாளம், திஸ்ர கதியில், நாலு ஆவர்த்தங்களில், திருவிளையாடலில் ஒளவை ரோலில் கே.பி.சுந்தராம்பாள் கே.வி.மகாதேவன் கம்போசிங்கில் செய்துவிட்டார் (பழம் நீ அப்பா பாடலின் இறுதி சரணம்).

யூடியுப் விடியோ

இப்பாடல் ஆதிதாளத்தில், சதுஸ்ர நடையில்/கதியில் தொடங்கி, ஒரு க்ளைமாட்டிக் இடை-இசைக்கு பின் ஆதிதாளத்தில் திஸ்ர நடையில்/கதியில் மாறி (மேலே உள்ள சரணம்) முடியும்.

பல்லவி சுலபம். என்ன நான் சொல்வது?

இப்படி சுவையாய் மேதைகள் சத்சங்கங்களில் பரிமாறிய பலதை பலமுறை சொல்லலாம். நூற்றாண்டுகளாய் மஹா வைத்தியநாத அய்யர் (1844 – 1893), பட்ணம் சுப்ரமண்ய அய்யரில் (1845 – 1902) தொடங்கி, இன்றைய பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆர். சுப்பிரமணியன் உட்பட பல பல்லவி மேதைகள் இருந்துவருகின்றனர். ஒரு சாம்பிள் பாலமுரளி பல்லவி

பாலமுரளி கிருஷ்ணா ஹம்ஸவிநோதினி பல்லவி

முதலில் மத்யமகாலத்தில் தொடங்கி பிறகு வேகமாகவும் பாடுகிறார் கவனித்திருப்பீர்கள். இது ஷட்கால பல்லவி. ஆறு கால அளவைகளில் அனாயாசமாகப் பாடலாம். அதே தாளத்தினுள். ஷட்காலம் பற்றி விரிவாக பிறகு. ஹம்ஸவிநோதினி ராகத்தில் அமைத்திருக்கிறார். சாஹித்யம் கவனித்தீர்களா, ராக ஸ்வரங்களே சாஹித்யம். விநோத பல்லவிக்கு ஒரு உதாரணம்.

இன்னொன்று கேட்டுப்பாருங்கள்.

பாலமுரளி கிருஷ்ணா நடபைரவி பல்லவி

இது க்ருஹபேத பல்லவி. நடபைரவி ராகத்தில். சாஹித்யம் கவனித்தீர்களா, ஸ்வரங்களாய்த் தொடங்கும் சாஹித்யம். க்ருஹபேதம் பற்றி பிறகு.

இது பாலமுரளி ஸ்டைல்.

சபையின் இசை அறிவிற்கேற்ப சமயோசிதமாக (சபையோசிதமாக) பல்லவியைத் தேர்தெடுக்கவேண்டும். இதுவும் நியதி. கரஹரப்ரியா ராகத்தில் ‘ராம நீ சமானமெவரு’ என்று பிரபலமான கீர்த்தனை உள்ளது. கேட்டிருக்கலாம். தெலுங்கானாலும் பொருள் புரிகிறது இல்லையா. இதையே பல்லவியாய் பாடுவர். இது கோப்புச்சத்தை அனுமதிக்கும்.

கோ என்றால் ko இல்லை, go. அதற்காக எழுந்துசென்றுவிடாதீர்கள். கோ என்றால் பசு. புச்சம் என்றால் வால். பசுவின் வால் அப்படி தொங்கி வந்து முனையில் மீண்டும் பிரிந்து, சிறு வால்களாய் முடிகள் இருக்கும். ஃபர்ஸ்ட் ஆர்டர் அப்ராக்சிமேஷனில், ஃபிராக்டல் போல. இசையில் கோபுச்சம் என்றால், சாஹித்யத்தை அடுத்தடுத்த வார்தைகளை நீக்கி பொருள் வருமாறு அமைத்து பாடுவது. மேல் பல்லவியில்

ராம நீ சமானமெவரு
நீ சமானமெவரு
சமானமெவரு

இப்படி செய்யமுடியும். அனைத்து சொற்றொடர்களுக்கும் பொருள் உண்டு. ரசிக்கும்படி.

25fr_trs_kvs_jpg_19501f
T.R.சுப்ரமணியம்

சமயோசிதம் என்றேனே, அதற்கு உதாரனம், ஒருமுறை டி.ஆர்.சுப்ரமணியன் கச்சேரி. ராகம் பாடியாகிவிட்டது. வயலினிஸ்ட் பிரமாதப்படுத்திவிட்டார். அரங்கமே அதிர்ந்த கைதட்டல். முடிந்ததும் அமைதி. கீர்த்தனை தொடங்கவேண்டும். சுப்ரமணியன் தொடங்கினார்

சமானமெவரு
நீ சமானமெவரு…

வயலின்காரரை பார்த்து புன்னகைத்தபடி.

இப்போது கைதட்டல் சுப்ரமணியனுக்கு.

இந்த இடத்தில் சொல்லிவிடலாம் என்பதால் ஒரு இடைச்சொருகல்: கோபுச்சத்தை போல தேவாரத்தில் கொண்டுகூட்டி என்று இருக்கிறது. உதாரணம்

கொடுத்தானை
பதம் கொடுத்தானை
பாசுபதம் கொடுத்தானை
அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை
யுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை
அடுத்தானை யுரித்தானை அர்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை

இப்படி. வார்த்தைகளை வரிவரியாய் கொண்டு கொண்டு கூட்டிக் கூட்டி பாடவேண்டும்.

யதுகுலகாம்போஜியில் (விருத்தமாய்) பாடி, சேஷகோபாலன் அரங்கையே பலமுறை கலக்கியிருக்கிறார். சீசன் சபை சகாக்களுக்கு தெரியும்.

என்னடா சேஷகோபாலன், சுப்ரமணியன், பாலமுரளி என்று ஒரு பக்கமாகவே வண்டி குடை சாய்கிறதே என்று கோபிக்காதீர்கள். பல்லவியின் சில அங்கங்களை விளக்கவும், ஒலிக்கோப்பு தேற்றமுடிந்ததற்கேற்பவும் அப்படி அமைகிறது. அடுத்த பாகங்களில் மேலும் சிலரை நிச்சயம் குறிப்பிடுகிறேன்.

நூற்றாண்டுகள் முன்னரும் பல்லவியில் ஜித்துவேலைகள் செய்திருக்கிறார்கள். வைத்தியநாதரும், சுப்ரமண்யரும் சிம்மனந்தனதாளத்தில் பல்லவி அமைத்திருக்கிறார்கள். ஒரு ஆவர்த்தத்திற்கு 128 அக்‌ஷரங்கள். இத்தாளம் லகு, த்ருதம், ப்ளிதம், காகபாதம், குரு என அனைத்து அங்கங்களும் கொண்டது. உதாரணமாய் காகபாதம் என்றால் த்ருதம் போடுவதையே மாற்றி கையை இடது, வலது, எதிர்புறம் என மூன்று முறை செய்யவேண்டும். காக்கையின் பாதத்தை போல. குரு என்றால் கல்லுரலில் அப்படி கையை சுற்றி மாவாட்டுவது போல செய்து கால அளவை குறித்துக்கொள்ளவேண்டும். கற்பனைவளம் மிக்க நம் தாள அங்கங்கள்.

சுகுணா புருஷோத்தமன்
சுகுணா புருஷோத்தமன்

சுகுணா புருஷோத்தமன் தோடி ராகத்தில் சிம்மனந்தன தாளத்தில் பாடிய பல்லவி வீடியோ வட்டில் கடைகளில் உலவுகிறது. சுட்டு, நெட்டில் உலவுகிறதா தெரியவில்லை. வாங்கி கேட்டுப்பாருங்கள், இல்லை, பார்த்துக் கேளுங்கள். அப்போழுதுதான் தாளத்தின் கடினமும், அப்பியாசமும் விளங்கும்.

வேதவல்லிக்கு தானம் என்றால், சுகுணா பல்லவி, லயங்களில் கெட்டி. சாமர்த்யசாலி. இரண்டு கைகளில் இரண்டு வேறு தாளங்கள் போட்டு பல்லவி பாடுவார். செவ்வியல் இசைக்கலைஞர்கள் பியானோவில் (கீ போர்ட்டில்) இரண்டு கையில் ஒன்றில் ரிதமும் இன்னொன்றில் மெலடியும் சேர்த்து வாசிப்பதைப்போல. ஆனால், இங்கு, மண்டைக்குள் மூன்றாவதாய் ஒரு தாளம் ஓடும். இவ்வகை பல்லவிகளுக்கு த்விதாள அவதான பல்லவி என்று பெயர். நானே நேரில் பார்த்து, கேட்டிருக்கிறேன். அசாத்ய மனதை ஒருமுகிக்கும் திறன் வேண்டும். எங்கும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை நாம்.

இப்படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டோவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம் மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.

சான்றேடுகள்

1. South Indian Music – Book 4 – PadmaBhushan Prof. S. Sambamurthy, 1963
2. Shaping of an Ideal Carnatic Musician through Sadhana – Pantula Rama, 2008
3. Ragam Thanam Pallavi their evolution, structure, and exposition – M. Vedavalli, 1995

அடுத்த பாகத்தில் ஒரு பல்லவியை பிரித்தாளுவோம்.