அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை

kung-fu

விறுவிறுப்பாக ஓடிவந்த துணை இயக்குணர் சரவணன், “ஸார், டூயட் காட்சியில் பிரச்சினை!” என்றார்.

‘என்னைய்யா இப்ப புதுசா?” என்றார் இயக்குனர் அறிவு.

“கதாநாயகி கொஞ்சம் வெயிட் கூட. ஹீரோ சார் தூக்க மாட்டேங்கிறார்”.

“சரி, ஒரு க்ளோசப்பில தூக்கறா மாதிரி ஒரு ஷாட் எடுத்துரு. சிஜில பாத்துக்கலாம்” என்றவர், சிஜி வல்லுனர் வெங்கியை செல்லில் அழைத்தார்.

“வெங்கி, சின்ன பிரச்சினை. சிஜி கால்ஷீட் ஒரு வாரம் நீட்ட முடியுமா?”

“உங்களோட ரோதனையாப் போச்சு அறிவு. போன வாரம் தொப்பை ஹீரோ உயர குதிக்க மாட்டேன்னாருன்னு ஒரு வாரம் சிஜி கால்ஷீட் கேட்டீங்க. ரொம்ப பிஸி ஸார். ‘தென்பாண்டி பேய்’ ன்னு புது சப்ஜெக்ட், பூரா சிஜி வச்சு அசத்தறாங்க. பத்து வார கால்ஷீட் குடுத்துட்டேனே!”

தமிழ் சினிமா ஏறக்குறைய இப்படித்தான் இயங்குகிறது. அதென்ன சிஜி? Computer Generated (CG) imaging என்பதன் சுறுக்கம் சிஜி. ஷங்கரிலிருந்து நேற்று வந்த இயக்குனர் வரை எல்லோரும் சிஜி பின்னால் பேயாய் அலைகிறார்கள். ஒரு ரஜினி சில பல ரஜினியாய் மாறி குண்டர்களை துவம்சம் செய்வது, சூர்யா கையில் மின்சாரம் பாய்ந்து வில்லன் மேல் அடி விழுவது எல்லாம் சிஜி புண்ணியத்தில்.

இப்போது சில முழு நீள சிஜி அனிமேஷன் திரைபடங்கள் வரத் தொடங்கிவிட்டன. ராமாயணம், அனுமார் கதை என்று டிவிடிக்கள் வரத் தொடங்கியுள்ளன. இப்படங்களில் மனித நடிகர்கள் கிடையாது, எல்லாம் கணினியில் உருவாக்கப்பட்டவை. ‘லயன் கிங்’ என்ற திரைப்படத்தைப் பார்த்த நடிகர் நாசர், “கணினியில் கோடு வரைந்து பல கோடி மக்களைக் கவர்வது சாதாரண விஷயமல்ல. என் பார்வையில், இன்னும் 30 ஆண்டுகளில் நடிப்பு என்ற தொழிலே இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.

இன்று சினிமா, விளம்பர உலகங்கள் சிஜி பின்னால் அலைகின்றன. ஆனால், ஒரு 30 ஆண்டுகளாய் அனிமேஷன் துறை சினிமா பின்னால் அலைந்துதான் இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த அனிமேஷன் துறையின் ஆரம்பம், சவால்கள் மற்றும் படிப்படி வெற்றிகள், இந்நுட்பத்தைப் புரிந்து கொள்ள உதவும். இப்பகுதியில் அதை சற்று அலசுவோம்.

swami-manoharஅதற்கு முன், இக்கட்டுரைகளை எழுத உதவிய என் கல்லூரி நண்பரும், க்ராபிக்ஸ் நிபுணரும், பேராசிரியரும், புதுத் தொழில் நிறுவனருமான டாக்டர் ஸ்வாமி மனோகர் பற்றி ஒரு சின்ன அறிமுகம். அமெரிக்காவில் டாக்ட்ரேட் பட்டம் பெற்றும், பல்நாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டாத ரகம் இவர். IISc, North Carolina மற்றும் Brown University போன்ற உயர் கல்வி அமைப்புகளில் க்ராபிக்ஸ் (virtual reality) மற்றும் அனிமேஷன் துறையில் பலர் முதுநிலை மற்றும் டாக்ட்ரேட் பட்ட ஆராய்ச்சிக்கு உதவியவர். அனிமேஷன் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். Virtual Reality என்ற க்ராபிக்ஸ் துறையில் இந்தியாவிலே முதன் முறையாக கற்பித்தவர் இவர். UP என்ற அனிமேஷன் திரைப்படம் இசைக்காக 2010 ஆஸ்கர் வாங்கியதைக் குறித்து நான் எழுதிய ‘சொல்வனம்’ கட்டுரையைப் படித்த டாக்டர் மனோகர், “அலட்டலாக பிறகு விளக்கமாக கட்டுரைகள் எழுத எண்ணம் என்று எழுதி இருக்கியே? ஏதாவது உதவி வேண்டுமானால் கேள்” என்றார். சத்தியமாக இக்கட்டுரைகளை எழுதியதற்காக எனக்கு எந்தப் பட்டமும் கிடையாது என்று அவர் முன்னமே சொன்னது ஒன்றுதான் குறை!

பொதுவாக அனிமேஷன் துறையை இரு பகுதிகளாய்ப் பிரிக்கலாம். 1) பதிவு செய்யப்பட்ட வேகம் 2) உடனே வேகம். சினிமா மற்றும் விளம்பரத் துறைகள் முதல் ரகத்தைச் சேரும். மிகச் சிக்கலான தேவைகள் உண்டு. ஆனால், பதிவு செய்து, காண்போருக்குத் தக்க வேகத்தில் காட்சிகளைக் காட்டலாம். வீடியோ விளையாட்டுக்கள் இரண்டாம் வகை. க்ளிக்கினவுடன் அனிமேட் செய்யவில்லையானால் வேறு விளையாட்டைத் தேடிப் போய்விடுவார்கள் விளையாட்டுப் பிரியர்கள். இப்பகுதியில் முதலாம் வகையின் தொடக்கம், மற்றும் வளர்ச்சி பற்றி விவரமாக பார்ப்போம்.

முதல் அனிமேஷன் திரைப்படம் கணினி கண்டுபிடிப்பதற்கு முன்னரே வந்துவிட்டது. 1937 ல் வெளிவந்த ‘Snow white and the seven dwarfs’ என்ற டிஸ்னி ஆங்கில திரைப்படம் உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை இங்கே காணலாம்:

walt-disney_zoetrope-1940sஎவ்வளவு கடினமாக உழைத்து மனிதர்களற்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள் என்று ஒரு சின்ன அறிமுகத்தைப் பார்க்கலாம். பொதுவாகத் திரைப்படங்களில் நிமிடத்திற்கு 24 காட்சிகள் (24 frames/sec) வந்து போவதால் நமக்கு நிஜ வாழ்க்கையின் அசைவு போலத் தோற்றமளிக்கிறது. குறைந்த பட்சம் 15 காட்சிகளாவது நிமிடத்திற்கு காட்டப்பட்டால்தான் அசைவைப்போன்ற உணர்வு ஏற்படும். இந்த அளவுக்குக் கீழே போனால் காட்சிகள் விட்டு விட்டு மிகவும் குதிப்பது போல தோன்றும். டிஸ்கோ விளக்குகள் மிக வேகமாக துடிக்கும் போது வேகமாக நகரும் நடனக்கலைஞர் மெதுவாக நகருவது போல தோன்றுவதும் இதனாலேயே. மேலே சொன்ன படத்தில் பல ஓவியக் கலைஞர்களை வைத்து ஒவ்வொரு காட்சியும் வரையப்பட்டது. வேலைப்பளுவை குறைப்பதற்காக, சில தந்திரங்கள், நுட்பங்களை  அன்றே டிஸ்னி செய்யத் தொடங்கினார்.

மாபெரும் வெற்றியடைந்த ‘Snow white and the seven dwarfs’ திரைப்படத்தை எப்படி எடுத்தார்கள் என்று விவரமாக பார்ப்போம். பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், அப்படத்தின் பாதிப்பு இன்றும் அனிமேஷன் துறையில், என்.எஸ்.கே.யை மறக்காத தமிழ் சினிமா போல இருக்கத்தான் செய்கிறது.

நாம் பார்த்த வால்ட் டிஸ்னி ட்ரெய்லரைப்போல முதலில் திரைபடத்தில் வரும் முக்கிய பாத்திரங்களை முடிவு செய்வார்கள். பிறகு லீட் அனிமேட்டர் என்பவர் ஒரு காட்சியில் வரும் முக்கிய ஃப்ரேம்களை முக்கிய பாத்திரங்களுடன் கலர் பென்சிலால் வரைந்து விடுவார். ஒரு தொடர்ச்சியின் (sequence) முக்கிய காட்சிகளை இவ்வாறு வரைந்து விடுவார். உதாரணத்திற்கு, நாய் ஒன்று குதிப்பது போன்ற ஒரு காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டால், அதன் ஆரம்ப நிலை, தாவிய நிலை மற்றும் நிலத்தில் இறங்கிய நிலைகள் முக்கிய ஃப்ரேம்கள். இந்தத் தொடர்ச்சி ஒப்புக்கொள்ளப்பட்டால், லீட் அனிமேட்டர், வரைந்த படங்களை மற்ற வரைபட கலைஞர்களிடம் ஒப்படைத்து விடுவார். இவர்களை இடை அனிமேட்டர்கள் (in betweeners) என்று அழைக்கிறார்கள். இவர்கள் லீட் செய்த காட்சிகளை ட்ரேஸ் செய்து, இடைக்காட்சிகளை வரைந்து காட்சிக் கோர்வையை முடிப்பார்கள். இதை ‘ட்வீனிங்’ (tweening) என்று அழைக்கிறார்கள். இன்னும் படமெடுக்க வேண்டிய நிலையை நாம் அடையவில்லை.

அடுத்தபடியாக காட்சியைப் படமெடுக்க தயார் செய்ய வேண்டும். இந்த நிலையை ‘மை மற்றும் சாய நிலை’ (ink and paint) என்கிறார்கள். தயார் செய்த ஃப்ரேம்களை செல் (cel – cellulose acetate) என்ற ப்ளாஸ்டிக் தகட்டிற்கு மாற்றுகிறார்கள். மிகக் கவனமாக செல்லில் சரியான நிறங்களை சாயம் பூசுகிறார்கள். காட்சிக்குத் தகுந்த மாதிரி சரியான மூட் வரவழைக்க சரியான வண்ணங்கள் உண்டாக்குவது தனிக்கலை. மிக முக்கியமாக, ஒளி பட்டால் என்ன நிறத்தில் காட்சியின் பகுதி வரும் என்று கலைஞருக்குத் தெரிய வேண்டும். மேலும் அசைவுக்கேற்ப நிறங்கள் சற்று கூட்டியும் குறைந்தும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறாக, ஒரு காட்சியைப் படமெடுக்க பல செல்கள் தயார் செய்யப்படுகின்றன.

ஒரு ஃபேரமுக்கு பல செல்கள் இருக்கும். பின்னணிக்காட்சி கீழ் செல்லிலும் , அதற்கு மேலே பாத்திரங்கள் வரையப்பட்ட செல்களும் அடுக்கப்படும். ஒரு தெளிவான கண்ணடியால் மேற்பரப்பு நெளிவு சுளிவுகள் நீக்கப்படும். பிறகு ஸ்பெஷலான அனிமேஷன் காமிராவால் (Rostrum) ஒரு ஃப்ரேம் படம்பிடிக்கப்படும். அடுத்த ஃப்ரேமை இதே போல படமாக்க வேண்டும். காட்சியில் சரியான alignment-க்காக பல வசதிகளை உருவாக்கினார்கள். இது இல்லையேல் தொடர் காட்சியாக பார்க்கும் போது குதிப்பது போல தோற்றமளிக்கும். ஒரு முழு நீள திரைப்படத்தை மனதில் எண்ணிப் பாருங்கள். உழைத்து ஓடாக ஆக வேண்டியதுதான்! இப்படித்தான் ‘Snow white and the seven dwarfs’ படமெடுக்கப்பட்டது! எத்தனை திட்டமிடல், எத்தனை தோல்விகளை தாண்டி உருவானது இந்த அனிமேஷன் திரைப்படம்.

இதே கால கட்டத்தில்  ‘மிக்கி மவுஸ்’, ‘டாம் & ஜெர்ரி’ போன்ற சிறுவர் கார்டூன் திரைப்படங்களும் வரத் தொடங்கின. நேர்த்தியான இசை கலந்து சிறுவர்களை மிகவும் கவர்ந்த கார்ட்டூன் திரைப்படங்கள் மூலம் வால்ட் டிஸ்னி என்ற மேதை உலகிற்கு அறிமுகமானார். 1938-ல் வெளிவந்த மிக்கி கார்ட்டூன் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

1942-ஆம் ஆண்டு வெளிவந்த ‘Bambi’ என்ற அனிமேஷன் திரைப்படத்திற்கு, வால்ட் டிஸ்னி 1500 ஓவியக் கலைஞர்களை உபயோகித்தாராம்!

1980-களிலிருந்து இத்துறை சூடு பிடிக்கத் தொடங்கியது. பிக்ஸார் மற்றும் ட்ரீம்வர்க்ஸ் என்ற இரு பெரும் நிறுவனங்கள்  இத்துறையை முன்னேற்ற மிகவும் பாடுபடத் தொடங்கின. இன்றும் இந்நிறுவனங்கள் இத்துறையில் முன்னிலையில் உள்ளன.

1982 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி முழுநீள உயிருள்ள ஆக்‌ஷன் (Live action) மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன் (computer generated images) ’Tron’ என்ற 17 மில்லியன் டாலர் செலவுள்ள படத்தை எடுக்க முடிவு செய்தது. அனிமேஷனுக்கு மட்டும் 4 மில்லியன் டாலர் பட்ஜெட்! 6 அனிமேட்டர்கள் 9 மாதம் ஒரு கணினியுடன் போராடி இப்படத்தை உருவாக்கினார்கள். படமென்னவோ படு தோல்வியடைந்தது. படம் பார்த்தவர்களின் விமர்சனம் – கணினி பாத்திரங்களில் மனித உணர்ச்சிகள் இல்லை. அத்தோடு கதையும் சரியாக சொல்லப்படவில்லை. ஓரளவிற்கு அந்நாளைய கணினியின் குறைபாடுகள் சரியாகக் கதை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணமாக இருக்கலாம். வெறும் தொழில்நுட்பம் விற்காது – அழகான கதை சொல்லும் திறன் தேவை என்று டிஸ்னி நிறுவனம் புரிந்து கொண்டது.

1938 முதல் 1986 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் எல்லாம் இரு பரிமாண திரைப்படங்கள். 1986 ஆம் ஆண்டு முதல் முப்பரிமாண குறுநீளத் திரைப்படமான ‘Luxo Jr’ ஐ பிக்ஸார் வெளியிட்டது. இப்படத்தை இங்கே காணலாம்:

இத்துறையின் அதீத முன்னேற்றம் 2 நிமிடம் 33 வினாடிகளில் தெளிவாகத் தெரியும். உருளும் பந்தின் மேல் எப்படி வெளிச்சம் பிரதிபலிக்கிறது என்று கவனியுங்கள். குதிக்கும் விளக்கின் மின்கம்பி எப்படி வளைகிறது என்று கவனித்தால் தொழில்நுட்ப வித்தைகள் ஆச்சரியமளிக்கும். இத்தனைக்கும் 1986-ல் கணினிகளின் திறன் இன்றைய மடி கணினியின் திறனில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லை. வெறும் முப்பரிமாணம் மட்டுமல்ல இந்த முன்னேற்றம்.

1988 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Who framed Roger rabbit?’ என்ற திரைப்படம் அனிமேஷனுடன் மனித வீடியோவையும் முதல் முறையாக இணைந்து வந்த திரைப்படம்.

1989 ஆம் ஆண்டு வெளிவந்த டிஸ்னியின் ‘Little Mermaid’ என்ற திரைப்படத்தில், முதன் முறையாக மென்பொருள் கொண்டு மை மற்றும் சாய (digital ink and paint) கட்டம் உருவாக்கப்பட்டது. அப்படத்தின் சில காட்சிகள் இங்கே:

பின்னணி இசையைக் கவனித்தீர்களா? எவ்வளவு முன்னேற்றம்!

இதே சமயத்தில், கனேடிய மென்பொருள் வல்லுனர்கள் ‘மாயா’ என்ற முப்பரிமாண (இதன் ஆரம்ப பெயர் ‘ஏலியஸ்’) அனிமேஷன் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். பல விளம்பர ஏஜன்சிகள் பல விதமான விளம்பரப் படங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இந்த மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட ’Terminator 2’ என்ற ஹாலிவுட் திரைப்படம் விசேஷ எபெக்டுக்காக ஆஸ்கர் பரிசு வென்றது (இன்றைய கலிபோர்னியா கவர்னர் நடித்த படமிது). அடுத்தபடியாக ‘Jurassic Park’ என்ற ஸ்பீல்பர்க் திரைப்படத்தில் அனைவரையும் பயம் காட்ட உதவியது ‘மாயா’ மென்பொருள்!

1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லயன் கிங்’ மிக முக்கிய வால்ட் டிஸ்னி அனிமேஷன் திரைப்படம். டிஸ்னியின் 32 வது முழு நீள அனிமேஷன் திரைப்படம் இது. இரு பரிமாண அனிமேஷன் திரைப்படங்களிலேயே மிக அதிகம் ஈட்டிய திரைப்படம் இது. 783 மில்லியன் டாலர்கள் ஈட்டிய ‘லயன் கிங்’ பாத்திரமான ‘சிம்பா’, சிறுவர்களிடம் மிகவும் பிரபலம். எல்டன் ஜான் பாடிய பாடல் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசை இரண்டும் இப்பட்த்தை மிகவும் உயர்த்தி அனிமேஷன் பட  வரலாற்றில் இடம் பெறச் செய்தது. இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் நாசர் வியந்து சொன்னதை முன்பு படித்தோம்.

1995 ஆம் ஆண்டு முதன் முறையாக முழு நீள முப்பரிமாண அனிமேஷன் திரைப்படமான ‘Toy Story’-யை பிக்ஸார் நிறுவனம் வெளியிட்டது. ‘Luxo Jr’ சோதனையை இன்னும் பிரமாதப்படுத்தினார்கள்.

ஆஸ்கர் அகாடமி ஜான் லாஸட்டருக்கு 1996 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனை விருது வழங்கி அழகு பார்த்தது. அனிமேஷன் திரைபடங்களுக்கு ஜான் தன் உழைப்பு மற்றும் திறமையால் ஒரு தனி அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

1998 ஆம் ஆண்டு முதன் முறையாக முழுவதும் கணினி உதவியுடன் ட்ரீம்வர்க்ஸ் நிறுவனம் ‘Antz’ என்ற முழு நீள திரைப்படத்தை வெளியிட்டது.

இதற்கு போட்டியாக டிஸ்னி, ‘A Bug’s Life’ என்ற அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டது.

’Antz’ மற்றும் ‘Bug’s Life’ இரண்டுமே பூச்சிகளை பற்றிய கதைகள். ‘Antz’ திரைப்படம் சிறந்த பாத்திரப்படைப்புக்காகவும் உட்டி ஆலனின் பின்னணிக் குரலுக்காகவும் பாராட்டப்பட்டது. ‘Bug’s Life’ மிக அருமையான தொழில்நுட்பத்திற்காகப் பாராட்டப்பட்டது. மனிதர்கள் இல்லாத படங்களை ஏன் இரு பெரும் ஸ்டூடியோக்களும் தேர்ந்தெடுத்தன? மனித முடி மற்றும் உடைகளை அசைவுடன் அழகாகக் காட்டும் திறன் அன்றைய அனிமேஷன் நுட்பத்தில் மிகக் கடினமாக இருந்தது.

1999 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இரண்டு பெரிய முப்பரிமாண திரைப்படங்கள் முக்கியமானவை. ‘Toy Story 2’, மற்றும் ‘Ice Age 1’. இரண்டு திரைப்படங்களும் மனிதர்களை முப்பரிமாணத்தில் காட்டின. மனிதத்தோல் நிறங்கள், தலை முடி மற்றும் உடைகள், பொம்மைகள் போல தோற்றமளிக்காமல் வெகு யதார்த்தமாக இருந்து பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இதில் ’ஷ்ரெக்’ (2001) மற்றும் ‘ஐஸ் ஏஜ்’ திரைப்படங்கள் பின்னணி குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தன. ஹாலிவுட் பிரபலங்களான எட்டி மர்பி, மைக் மையர்ஸ் போன்றவர்களின் பின்னணிக் குரல் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மிக நேர்த்தியாக கதை சொல்லப்பட்டதும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். கதை மற்றும் வசனம் அனிமேஷன் திரைபடங்களில் மிகச் சரியாக இருக்க வேண்டும். கணினியில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களுக்கு ‘ஸ்டார் வால்யூ’ என ஒன்றும் கிடையாது. தவறுகள் மன்னிக்கப்படமாட்டாது. பின்னணிக் குரல் கொடுக்கும் நடிகர்களுக்கும் இது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. அனிமேஷன் திரைப்படங்களின் முதல் ஆஸ்கார் விருது 2001-ல் ட்ரீம்வர்க்ஸ் நிறுவனத்திற்கு சென்றது. ‘ஷ்ரேக்’ திரைப்படம் மிக நேர்த்தியாக ரசிகர்களைக் கவரக் காரணாம் அதன் தொழில்நுட்பம் பகிரங்கமாகத் தெரியவில்லை. கதாபாத்திரங்கள் உணர்ச்சிகளை நிஜ மனிதர்களைப் போல முக பாவங்களில் காட்டின. ’ஷ்ரெக்’ கின் முக பாவங்களுக்காக மட்டும் 500 முக பாவங்கள் தேவைப்பட்டன என்றால் பாருங்களேன்! இதற்குப் பின் வந்த திரைப்படங்களின் தொழில்நுட்ப முன்னேற்றம் அசாத்தியமானது. கனிணிகளின் பயங்கர முன்னேற்றத்தை ஈடு செய்தது அனிமேஷன் துறையின் முன்னேற்றம். 2002 ல் ‘Ice Age 2’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த ’Shrek 2’ மீண்டும் வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படத்தின் விசேஷம் பல மனித உருவங்களை முப்பரிமாணத்தில் வேறுபடுத்திக் காட்டி, அழகாகக் கதை சொல்லி, பிரபல பின்னணிக் குரல்களை சேர்த்து குழந்தைகளை மட்டுமன்றி எல்லோரையும் கவர்ந்தது. ட்ரெய்லரில் முக பாவங்கள், உடைகள், ஒளியமைப்பு போன்றவற்றை கவனியுங்கள். இத்தனை முன்னேற்ரம் ‘லயன் கிங்’ வெளிவந்து பத்தாண்டுகளுக்குள்!

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Finding Nemo’ மீன்களை பற்றிய அழகான கதை. 864 மில்லியன் டாலர்கள் ஈட்டிய இப்படம் இதுவரை அனிமேஷன் திரைபடங்களின் வசூல் ராஜா. பிக்ஸார் டிஸ்னி வெளியிட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் அற்புதமானவை. தண்ணீருக்குள் முக்கால்வாசி படமும் காட்டப்பட வேண்டும். மீன்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும். கடலடியில் இருக்கும் தாவரங்கள் மற்றும் நீர்நிலையின் ஆழத்தைப் பொறுத்து ஒளியைக் குறைத்து அல்லது கூட்டி, தத்ரூபமாய்க் காட்டுவது இமாலய சாதனை. பொதுவாக, அனிமேஷன் உலகில் தண்ணீர் கொண்ட காட்சிகள் அமைப்பது மிகக் கடினம். தண்ணீரில் ஒளி பிரதிபலிப்பு எப்படி இருந்தால் மனிதர்கள் அக்காட்சியை உண்மையானதாக ஒப்புக் கொள்வார்கள் என்று பலர் உயர் தொழில்நுட்ப பல்கலைகழகங்களில் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். இந்த சாதனைக்காக இப்படம் ஆஸ்கர் வென்றது.

2004 ஆம் ஆண்டு மீண்டும் பிக்ஸாரின் ‘Incredibles’ அனிமேஷன் சாதனை படைத்தது. குடும்ப சூப்பர் ஹீரோ முப்பரிமான அனிமேஷன் திரைப்படம் வெற்றி பெற்றது. கண்ணாடிகள் உடையும் காட்சியை  அனிமேஷனில் காட்டுவது மிகவும் கடினமானது.

2007 ல் வெளிவந்த ‘Ratatouille’ என்ற பிக்ஸார் அனிமேஷன் திரைப்படம் எலிகள், மனிதர்கள் என்று மிக அழகாக கதை சொல்லி ஆஸ்கர் பரிசு வென்றது. இதில் காட்சியமைப்புகள் ஒரு உணவுவிடுதி சமையலறையில் கற்பனை வளத்துடன் அமைக்கப்பட்டன. மனித ஆசைகள், பகை, ஏமாற்றம், சோகம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

2008 ல் ‘Wall-E’ என்ற பிக்ஸார் திரைப்படம் மீண்டும் ஆஸ்கர் வென்றது. ரோபோ ஒன்றைப்பற்றிய எதிர்காலத்தில் நடக்கும் கதை.

2009 ல் சில முன்னேற்றங்கள் இத்துறையின் பல பரிமாணங்களைக் காட்டுகின்றன. 1) இரு பரிமாண அனிமேஷனுக்கு இன்னும் மதிப்பு உள்ளது. உதாரணத்திற்கு, ” The Princess and the Frog” என்ற பழைய டிஸ்னி எனிமேஷன் திரைப்படத்தை இன்றைய தொழில்நுட்பத்தோடு அழகாக வெளியிட்டார்கள். நம்மூரில், மீண்டும் ‘பில்லா’ படமெடுத்து வெளியிடுவதைப் போல!

2) முப்பரிமாண காட்சியமப்பு முப்பரிமாண அனிமேஷனுடன் சேர்த்து, காட்சிகள் உயிர்பெற்று ரசிகர்களை கவர்ந்ததன. உதாரணம், ‘Up’ என்ற பிக்ஸார் திரைப்படம். 2009 ஆம் ஆண்டு சிறந்த அனிமேஷன் மற்றும் பின்னணி இசைக்கு ஆஸ்கர் வென்றது இப்படம். இதைப்பற்றி, சொல்வனத்தில் ஏற்கனவே எழுதியாகிவிட்டது.

3) ஸ்டீரியோ க்ராஃபிக் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன. இதில் மனிதர்களுக்கும் அனிமேஷனுக்கும் சம பங்கு. எங்கு வழக்கமான படப்பிடிப்பு முடிகிறது, எங்கு அனிமேஷன் ஆரம்பிக்கிறது என்று சொல்வது கடினம். ‘அவ்தார்’ திரைப்படம் ஒரு உதாரணம். உலகத்திரைப்பட சரித்திரத்தில் அதிகம் வருமானம் ஈட்டிய திரைப்படம் இதுவே.

விளம்பரத் துறை அனிமேஷன்துறை வளர்ச்சியை அழகாக பயன்படுத்தி வந்துள்ளது.

இதோ 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இண்டெல்’ நிறுவனத்தின் ஒரு விளம்பரம்:

முப்பரிமாண அனிமேஷன் மற்றும் உண்மையான வீடியோவுடன் பிரமாதமாக உருவாக்கப்பட்ட இன்றைய கோக் விளம்பரம்:

பொதுவாக, சி.ஜி. என்பது ஒரு பெரிய துறை. இதில் பல விஷயங்கள் அடக்கம். மேல்வாரியாகச் சொல்லப் போனால்,

1)  கணினி கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்கள்.

2) கணினி கொண்டு உருவாக்கப்படும் விசேஷ எஃபெக்டுக்கள் – மனிதர்கள் நடிக்கும் திரைப்படங்களிலும் இது அடங்கும். உதாரணம், ஜுராசிக் பார்க் திரைப்படம்.

3) கணினி கொண்டு உருவாக்கப்படும் விளம்பரப்படங்கள் – இதில் உண்மையான வீடியோக்களுடன் அனிமேஷனும் உண்டு. (மேல் சொன்ன கோக் விளம்பரம் இந்த வகையில் சேரும்.

4) கணினி கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பர அனிமேஷன் திரைப்படங்கள்.

5) கற்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட அனிமேஷன் வகைகள். உதாரணம் ஒரு செயல்விளக்கத்திற்காக அனிமேஷன் உபெயோகப்படுகிறது. கார் என்ஜின் செய்லவிளக்கம் இங்கே http://britton.disted.camosun.bc.ca/rotary-engine-animation.swf.

6) விடியோ விளையாட்டுக்கள். இதைப் பற்றி சுருக்கமாக சொல்லி விட்டோம். இதைப் பற்றி எதிர்காலத்தில் ‘சொல்வனத்தில்’ விவரமான கட்டுரைகள் எதிர்பார்க்கலாம்.

7) இணையதளத்தில் விளம்பரம் மற்றும் செயல்விளக்கமுறை பற்றிய அனிமேஷன். உதாரணத்திற்கு கார் கம்பெனிகள் தங்களது கார்களை அனிமேஷன் கொண்டு இணையதளங்களில் பலவாறு வாடிக்கையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். இதோ, டயோடா இணையதளத்தைத் திறந்தால் அனிமேஷன்தான்:
http://www.toyota.ca/cgi-bin/WebObjects/WWW.woa/wa/vp?vp=Home&language=english

இக்கட்டுரைகளில் விளம்பரத்துறை பற்றி அதிகம் விவரிக்கப் போவதில்லை. திரைப்படங்களில் வரும் அனிமேஷன் பற்றியே விவரிக்கப் போகிறோம். விசேஷ எஃபெக்டுகளில் பல ரகங்கள் உள்ளன. மார்ஃபிங் (morphing) தொழில்நுட்பம் 90 களில் தொடங்கி மிகவும் அதிகமாக வரத்தொடங்கியது. மார்ஃபிங் என்ற நுட்பத்தில் ஒரு உருவம் மெதுவாக மற்றொரு உருவமாகக் கணினி கொண்டு மாற்றப்படும். மார்ஃபிங் பற்றி இரு உதாரணங்கள். மைக்கேல் ஜாக்ஸன் ’Black or White’ என்ற 90-களின் இசை வீடியோவில் இதை மிகவும் பிரபலப்படுத்தினார்: இந்த வீடியோவில் உலகின் பல தரப்பு மனிதர்களின் முகங்களை அழகாக மார்ஃப் செய்துள்ளார்.

தமிழ் சினிமாக்களில் இதை விடாமல் பாடல் காட்சிகளில் காட்டி மைக்கேல் ஜாக்ஸனை சிரத்தையாகப் பின்பற்றியுள்ளார்கள்.  ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற,  ‘மாயா மச்சீந்திரா’ என்ற மிகவும் இலக்கியத்தரமுள்ள(?) பாடலில் மைக்கேல் ஜாக்ஸன் அப்பட்டமாய்த் தெரிகிறார்!

இப்பகுதியில் திரைப்பட அனிமேஷன் துறையின் ஆரம்பம், வளர்ச்சி, மற்றும் சவால்களை பார்த்தோம். அடுத்து, இரு பரிமாண அனிமேஷன் பற்றி விவரமாக பார்ப்போம்.