நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

தலைப்பு புதிராக இருக்கிறது என்று நண்பர் சொன்னார்.  நீண்ட காலம் எஞ்சி இருத்தல், அல்லது பிழைத்து இருத்தல் என்பது நவீனத்துவத்தின் போக்குக்கு எதிர் போலத் தோன்றும்.  ஆனால் நவீனத்துவத்தின் அழிப்புப் பாதையூடே பிழைத்து இருந்து நீண்டகாலம் தங்கி, அடுத்த கட்டங்களுக்குப் பயணிக்கும் திராணி உள்ள நாகரீகங்களே மனிதருக்கு நன்மை பயப்பன என்று சொல்ல விரும்பும் தலைப்பு இது.  நினைவாற்றலே இல்லாத அன்றாட நுகர்வை உலகில் பரப்பி அதன் வழி வரலாறில்லாத மனித இனத்தை உருவாக்கும் ஆற்றலைத் தன் மைய்த்தில் கொண்டதாக நவீனத்துவம் இன்று ஆகியிருக்கிறது.  அதன் துவக்கமோ தேக்கத்தில் மனிதரைச் சிறைப்பிடித்து க்ஷீணிப்புக்கு அவர்களை நகர்த்திக் கொண்டிருந்த பண்டைச் சமுதாயத்தை உடைத்து கேள்விகள், தர்க்கத் துளைப்பு மூலம் பல பரிமாண அறிவு விகசிப்பை நிகழ்த்தி அதன் வழியே பரிணாமத் தாவலை நிகழ்த்தும் பேராசையில் இருந்தது.  இன்று அது ஒரு காளானாக, நரம்புச் சிலந்தி போல ஆகியிருக்கிறது.  அது ஏன் என்று இங்கு யோசிக்க முயல்கிறேன்.  தலைப்பை ‘பிழைத்து இருத்தலும், நவீனத்துவமும்’ என்றும் புரிந்து கொள்ளலாம்.

***  ***   ***

இந்தியாவில் ஓரளவு விரிவாகப் படிப்பறிவு பெற்றவர்கள், தற்காலத்தை நவீன காலம் என்று அழைக்கிறார்கள். தமிழில், நவீனம் என்று சொல்லாமல் இங்கிலீஷ் சொல்லான ‘மாடர்ன்’ என்பதைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். பொது வழக்கில் நவீன காலம் என்பது ஒரு உத்தேசக் கணக்காக, 1947க்குப் பிந்தைய எல்லாக் காலத்துக்கும் ஒட்டப்படுகிறது.

இந்தியர் மனதில் 1947க்குப் பிறகுதான் வாழ்வே ஆரம்பித்த மாதிரி ஏதோ ஒரு கற்பனை என்று இருக்கிறது போல,அல்லது, அதற்குப் பிறகுதான் இந்தியருக்கு என்று இந்தியரே செயலூக்கத்துடன் ஏதும் செய்ததாக ஒரு தோற்றம் இருக்கிறது போல. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே உலகப் போரும், விடுதலைப் போராட்டமும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் படிப்படியான நலிவுமாக இந்தியாவில் எங்கும் ஒரு அரை நூறாண்டுக்கும் மேல் பொருளாதாரத்திலும், கட்டுமான அமைப்புகளிலும் மிக்க தேக்கம் இருந்தது. பிரிட்டிஷார் மூட்டை கட்டிக் கொண்டு போனதும் பொருளாதாரம், சமூக அமைப்பு ஆகியன மாற நிர்ப்பந்தம்.  அதை ஊக்கும் வகையில் மக்களும், நாடும், பண்பாடும், கருத்துகளும், நம்பிக்கைகளும், ஏன் கனவுகளுமே கூட நகர ஆரம்பித்தன என்று சொல்லலாமா? அதற்குப் பிறகு இன்னொரு 50 ஆண்டுகளாகி இருக்கின்றன, சிறிது வேகம் பெற. உருப்படியாக இந்தியர் இந்தியராகவே சிந்திக்க, செயல்பட, இயல்பாகவே தம் வாழ்வைத் தாமே தேர்ந்தெடுத்துக் கட்டி எழுப்ப இன்னும் ஒரு 50 ஆண்டுகள் ஆகும் எனச் சில நேரம் தோன்றுகிறது.

ஏனெனில் இன்னமுமே நம்மை முன்னகர்த்துவது பெரிதும் மேறகைப் பிரதி செய்யும் முயற்சி, ஆர்வம்.  அப்படி ஒரு பிரதி செய்வது நவீனமாக்கும் நம்மை என்று நாமே மிக முனைந்து நம்மை மனவசியம் செய்து கொண்டிருக்கிறோம்.  நம் அறிவு ஜீவிகளும், அரசியல் முன்னோடிகளும், ஊடகங்களும் இந்தியம் என்பது உளுத்தது, பழமை, அதை வீசி விட்டு, மேற்கின் பல பரிமாண வேகத்தைப் பின்பற்றுவதே நமக்கு உய்வு தரும் என்று நம்மைத் தினம் பல விதங்களில் நம்ப வைக்க மிக்க எத்தனம் மேற்கொள்கிறார்.   பிரதி செய்யும் முயற்சிகள் பெரும் திரள் அளவில் வெற்றி பெறாது.  ஏனெனில் கருத்துகளும், கருத்தியலும், வாழ்வுக்கான தூலத் தளமும், பழக்க வழக்கங்களும் துண்டாக்க முடியாத ஒழுங்கு அமைப்பில் பின்னப்பட்டவை.  அவற்றை ஒரேயடியாக அழிக்கும் முயற்சிகளுக்கு, அவற்றின் பின்னே அரசியல் அதிகாரமும், பெருத்த வன்முறையும் நின்றால், சில காலம் அவை வென்றது போலத் தோற்றம் கிட்டும், ஆனால் நாளாவட்டத்தில் பாரம்பரியம் என்பது மறுபடி பல மாறுதல்களூடே தலைஎடுத்து வேறு ஒரு கலவை வெளிவரும்.  மேற்கின் பிரதி நலிந்த சவலையாகவே இருக்கும்.   பாரம்பரியத்தை அப்படியே தக்க வைக்கச் செய்யப்படும் முயற்சிகளும் நலிவுடனேதான் இருக்கும் என்பதும் நாம் காணக் கூடிய ஒன்றுதான்.  கலவை (hybridity) என்பது காலனியத்தின் தவிர்க்க முடியாத ஒரு விளைவு.  அது இஸ்லாமியக் காலனியமாகட்டும், கிருஸ்தவக் காலனியமாகட்டும், விளைவு கலவையே, ஹைப்ரிடே.

ஒரு காட்டு கீழே.

நவீனம் என்பதன் ஒரு அர்த்தம் ‘புது’. அதைப் பரவலாகப் பயன்படுத்தினால் ஓரளவு பொருத்தமாக இருக்கும். புது யுகம், புது இலக்கியம், புதுக் கவிதை என்பது போல. புதுக் கவிதை என்பது துவக்கத்தில் பயன்படுத்தப் பட்டாலும் இன்று அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை, கவனித்திருப்பீர்கள். 1950-60க்குப் பிறகு எழுச்சி பெற்ற அக்கவிதைப் பாணி இன்று ஆளும் பாணியாக ஆகி விட்ட பிறகு அதைப் புதிது என்று சொல்லத் தேவை இல்லை என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

புதுக் கவிதை என்பது ’மாடர்ன் பொயட்ரி’ என்று இங்கிலீஷில் துவங்கியதன் ஒரு தமிழ் நகல். வசன கவிதை என்று எதார்த்தமாகச் சொல்லிப் பார்த்து அது ஏற்பு இல்லாது ‘புது’ அடைமொழியாய் நின்று விட்டது. அதுவும் 70களிலிருந்தே புது என்ற அடைமொழி இல்லாது எதுவும் கவனிக்கப்படவில்லை போலிருக்கிறது. இன்று புது என்பது புதிதாக ஏதுமில்லாத ஒரு வடிவாக நிற்கிறது என்பது ஒரு முரண்.  இத்தனைக்கும் சூழலில் எத்தனையோ புதிதாக மாறிக் கொண்டிருக்கிறது.

துவக்கப் புதுக் கவிதையாளர்கள் தம் பண்பாட்டில் கவிதை அதுவரை இருந்த விதத்தையும், மேற்கின் ’மாடர்ன் பொயட்ரி’ தோன்றி நகர்ந்த விதத்தையும் பற்றி ஓரளவேனும் விழிப்புணர்வுடன் இருந்தனர். மேற்கின் கவிதைகளில் ஏற்பட்ட பல உருவ-உள்ளடக்க மாறுதல்களில், நம்மிடம் உள்ளடக்கம் பாதித்த அளவு உருவ மாற்றங்கள் பாதிக்கவில்லை என்று சொல்ல முடியும் எனத் தோன்றுகிறது. உள்ளடக்க மாறுதல்களும் அரசியல், பண்பாட்டுக் கருத்தியலில் மேற்கின் பாதிப்பு நம்மிடம் ஏற்பட்ட விதங்களை ஒத்தே அமைந்துள்ளன.  அவை நம்மிடம் கூடுதலாக ஆக ஆக அந்தத் திசையின் உள்ளடக்க மாறுதல்களும் நம்மிடம் இறக்குமதி ஆவது அதிகரித்தது. ஆனால் படிப்படியாக உருவ மாறுதல்கள் கீழிறங்குவது குறைந்து போயிற்று என நினைக்கிறேன்.  இறக்குமதி செய்வது நம்மிடம் நுகர்வைப் பழக்கும், நாமே உற்பத்தியாளராவதை ஊக்குவிக்காது.  ஒரு நாகரீகமாக, பொருளாதாரமாக, தேச அமைப்பாக நம்மிடம் நம்க்குத் தன்னம்பிக்கை பிறந்தாலே நமது கருத்துகளை, தத்துவத்தை, சிந்தனையை, கலைகளை நாமே  மறுபடியும் புனருத்தாரணம் செய்ய வல்ல மக்களாக வெளிவருவோம். அப்படி நாமே உற்பத்தி செய்யப் புகுந்தால், அவற்றின் வழியே நம் வாழ்வின் அனுபவங்கள் சூழலில் வியாபித்து, ஒப்பீட்டில் வேரற்ற, தானாகப் பிழைக்கவியலாத இறக்குமதியை எப்படியும் அடித்துப் போடும். இது ஏற்கனவே சில துறைகளில் இந்தியாவில் காணக் கிடைக்கிறது.

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க கால புதுக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

பண்டை சமுதாயத்தின் மதிப்பீட்டு எச்சங்கள் தம்மைப் பீடித்திருப்பதாக உணர்ந்து அவற்றைப் பின்னே விட்டு நகர்ந்து தம் காலத்து அனுபவங்கள், மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் ஊடகமாகக் கவிதையை ஆக்குவது போன்ற சில பொதுமைகளை அவர்கள் ஏற்றனர். ஆனால் பல நூறாண்டுகளாக அங்கு ஆதிக்கம் செலுத்திய கிருஸ்தவத்திலிருந்து விடுபட முயன்ற மேற்கிற்கு எதுவெல்லாம் அவசியமான நகர்வுகள் எனத் தோன்றியவையோ, அவை எல்லாவற்றையும் தமிழ்ப் புதுக் கவிதை இயக்கத்துக்குக் கொணரத் தேவை இல்லை என்பது இவர்களுக்குத் தெரிந்திருந்தது. அது அன்று, 50களில், ஓரளவு 60களில்.  70களின் துவக்கத்தில் இருந்து புதுக்கவிதையின் இயல்பு மாறி இருக்கிறது.

இன்றோ, மேற்கின் ஊடகங்களில் நிலவும் கிருஸ்தவ/எதிர்ப்பு போராட்டங்களின் விளைவுகள் கருத்தியல் வடிவில் அதிக தடங்கல்கள் எதையும் எதிர்கொள்ளாமல் அப்படியே கைமாற்றி இந்தியாவில் நுழைவதாக ஒரு தோற்றம் இருக்கிறது.  ஏன் இன்று மேற்கின், கிருஸ்தவத்தின், அதன் கருவியும், எதிரியும் ஆன நவீனத்துவத்தின் ஊடுருவல் எளிதாகி விட்டிருக்கிறது?

மேற்கின் கிருஸ்தவப் பண்பாடு நீர்த்துப் போனதால் பிற பண்பாடுகளை நோக்கிய அதன் முந்தைய  இறுகிய மனோபாவம் தளர்ந்து, நமக்கு அத்தனை விசித்திரமாக இல்லாத நெகிழ்வுத்தன்மையை கொண்டு அது உலவுகிறது, என்று நாம் கருதுவதாலா? அல்லது நம்மவர்களில் கணிசமான தொகை மக்களின் நாட்டு எல்லைகளைத் தாண்டிய உலகப் பயணங்கள், தாராளமயமாக்கத்தால் இந்தியாவினுள் நுழையும் பிற நாட்டு ஊடகங்களின் வழியே மொழியாக்கம் ஆகி இங்கு புழங்கும் பண்பாட்டு நுகர்பொருட்கள், தவிர இந்தியப் பண்பாட்டிலேயே தொடர்ந்த பெருநகர வாழ்வின் தாக்கத்தால் ஏற்படும் மேற்கு நோக்கிய நகர்வுகள் ஆகியவற்றால் நம் பாரம்பரிய உலகம் நீர்த்துப் போய் மேற்கின் சாயையாக ஆகிறது என்று கருதுவதாலா? இதை எப்படிப் புரிந்து கொள்ளலாம்?

இந்த இரண்டு கேள்விகளும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. மாற்றங்கள் விரைந்து நடக்கும் தற்காலத்திலேயே நம்மால் இந்த கேள்விகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  அத்தகைய முயற்சிகள் இருளில் துழாவிப் பயணிக்கும் முயற்சிகளாகவே இப்போதைக்கு உள்ளன.

இதைச் சமூக ஆய்வுகள் மூலம் கூட நிறுவி விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் கருவிகளால், சாதனங்களின் பயன்பாட்டால், வாழ்வில் மாறுதல் என்பது நேர்கிறது. அம்மாறுதல்களை ஒட்டியும், விலகியும், எதிர்த்தும்,  மக்களின் உளப்பாங்கு, பண்பாடு ஆகியனவற்றில் நகர்வுகள்  ஏற்படுகின்றன.  இம்மாறுதல்கள் இன்று எல்லாக் குழுக்களிலும் ஏற்பட்டு வருகின்றன.  இவை பலகுழு உறவுகள் மூலம் இணைக்கப்படும் சமூகத்தில் ஏற்படுத்தும் புரிதல் பிரச்சினைகளோடு, பங்கீட்டுப் பிரச்சினைகள், உறவு/ பரிமாற்றப் பிரச்சினைகள் ஆகியனவே பண்பாட்டிலும் சிக்கல்களாகப் பரிணமிக்கின்றன.  இவற்றை வெறும் பிரதி எடுக்கும் சிந்தனையால் சமாளிக்க ஏலாது.   பிரதி எடுத்த, எடுக்கும் அணுகல்கள் உதிர்ந்து தம்மியல்பாக இவற்றை அணுகுவோர் தொடர்ந்து முன்னெடுப்பில் இருப்பது என்பதுதான் விளைவாக இருக்கும்.

இன்று மாறுதல் நிகழும் வேகத்தில் இவற்றை உடனடியாக அறிய நம்மிடம் சிறந்த ஆய்வு முறைகளும் இல்லை, கருவிகளும் இல்லை. இருப்பவையும் அனேகமாக மேற்கின் சமுதாயத்தை அணுக உருவான கருவிகள், முறைகள்.  அவற்றின் களப் பொருத்தம் குறித்து நம்மிடம் சர்ச்சைகள் அதிகம் இல்லை, அல்லது பரவலாக இல்லை.  அவற்றில் முதலீடு செய்யும் தொலைநோக்கும் எந்த நிறுவ்னத்துக்கும் இல்லை.  அரசு, அரசியல் அமைப்புகளுக்கு இத்தகைய முதலீட்டில் நம்பிக்கை கூட இல்லை.  ஆராயச் செய்ய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட நம்மிடம் ஒரு படிப்பாளிகளின் கூட்டமும் இல்லை.  இருக்கும் ஒரு சிறிய கூட்டம் கூட காலனியத்துக்குப் பலியான அறிவோடு, முன்னாள், இந்நாள் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்யத் துடிப்போடு நிற்கும் ஐந்தாம்படையாகத்தான் இருக்கிறது.

மேற்கில் சர்ச் என்பது சமூகத்தைப் பல விதங்களில் கட்டுப்படுத்தியதோடு, கண்காணித்தும், ஆதரவளித்தும், வழிகாட்டியும், கண்டித்தும், திருத்தியும், அறபோதனை செய்தும், இசைக் கல்வி போதித்தும், திருமணம், சாவு, பிறப்பு போன்ற முக்கிய வாழ்வுக் கட்டங்களுக்குக் கூடமாக இயங்கியும் தனிமனித வாழ்வில் ஆழமாக ஊடுருவிய ஒரு நிறுவனம். அதன் பிடியில் இருந்து விடுபட சுமார் 500 ஆண்டுகளாக மேற்கத்திய அறிவாளர் கூட்டம் முயன்று இன்னமும் பெருவாரியான மக்கள் பகுதியோ, முழுதுமோ, விடுபடாமல் இருக்கிறார்கள். சர்ச் முன்னளவு ஆகிருதியும், ஊடுருவலும் இல்லாது ஆணிவேர் அறுந்த நிறுவனம் மேற்கில் என்பது நாம் காணக் கூடிய ஒன்று. ஆனால் அதன் கருத்தியல் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அரசியல், சட்டம், நீதி, இன உறவுகள், மண உறவுகள் என்று எத்தனையோ தூலமான இடங்களில் சர்ச் என்ற நிறுவனத்தின் நிழல் படிந்தே இருக்கிறது, அதை விட இன்னும் சரியாகச் சொன்னால், அதன் 2000 வருடக் கருத்தியலின் பல படிவுகள் இன்னமும் மேற்கின் சிந்தனையைக் கறைப்படுத்திய வண்ணமே இருக்கின்றன.

சர்ச்சுடன் பொருதும் அன்றாட வாழ்வின் பல எதிர்ச் சிந்தனைகளை மெற்கொள்ள சர்ச் நிறுவனங்கள் நிறையப் புது வடிவங்களில் தம் இயக்கங்களை மறுவார்ப்பு செய்கின்றன என்றாலும், சர்ச்சுகள் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் அத்தனை துரிதம் காட்டுவதில்லை.  துரிதம் காட்டும் சில கிருஸ்தவ இயக்கங்கள் சாதாரண வாழ்வின் அவலங்கள் நிரம்பிய அமைப்புகளாகவே உருவாகின்றன.   இதனாலேயே கிருஸ்தவத்தின் புதுப்பிக்கும் மரபு க்ஷீணித்து நிற்கிறது.  இப்படி க்ஷீணமாகி விட்ட தேங்கி விட்ட ஒரு மரபைப் புதுப் பாதை என கிருஸ்தவ இயக்கங்கள் இந்தியாவில் இன்னும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.  எது நவீனப்படுதலால சிதிலமானதோ அதே அமைப்பை நவீனப்படுதலின் ஒரு முக்கிய சாதனமாக மேலைக் கிருஸ்தவம் இந்தியாவில் பரப்புகிறது என்பது ஒரு நகை முரண் தான்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் மேற்கின் சர்ச்சுகளுக்கு ஒப்ப, முனைந்து வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊடுருவும்படி நிறுவப்பட்ட ஆதிக்க நிறுவனங்கள் இந்து சமுதாயத்தில் இல்லை. மிஞ்சிப் போனால் சில ஜாதிகளில் ஜாதிச் சங்கங்கள் இருந்தன, சிலவற்றில் மடம் என்று ஒன்று இருந்தது, ஆனால் அந்த மடம் ஊரூராக எங்கும் பரவி அன்றாட வாழ்வில் ஊடுருவவில்லை. மக்கள் தம் விருப்பம்போல பல கோவில்களுக்குப் போனார்கள். கோவில்கள் சர்ச் போன்றன அல்ல. குடும்பத்துக்குச் சடங்குகளை நிறைவேற்றிக் கொடுக்கும் புரோகிதர்கள் அல்லது பூசாரிகளுக்கு ஒரு வேலைக்காரருடைய அந்தஸ்து இருந்ததே தவிர ஆசான் என்ற அந்தஸ்து கிடையாது. இப்படிப் பல மாறுபாடுகளைச் சொல்லிப் போகலாம். ஏதாவது கட்டுப்பாடு, ஊடுருவல் என்றிருந்தால் அது கிராமங்களில் ஜாதிகளின் கூட்டு சபைகளின் வழி நடந்திருக்கலாம்.  ஆனால் அவை மதத்தின் விதிகளால் வழிநடத்தப்படவில்லை, ஏனெனில் மதம் என்று ஒன்று ஒரே ஊரில் கூட ஒருங்குபட்டு இருக்கவில்லை.

நகரங்களிலோ  ஜாதி சபைகளும் இல்லாத நிலையில் அரசியல், பண்பாட்டு முதலீட்டாளர்கள், அல்லது பிரசாரத்தில் ஈடுபடுபவர்களின் ஆதிக்கம் மேலோங்குகிறது.  இவர்கள் அனேக நேரம் கருத்து வளர்ச்சியை அடைப்பவர்களாக, வெறும் ஃபார்முலாக்களுக்கு ஏற்ப சிந்தனையை வளைப்பவர்களாக, தேக்கத்தையே முன்னேற்றம் என்று காட்டும் ஜால வேடிக்கைக்காரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பது பிரச்சினையே.  ஆனால் இவர்கள் தாமே பிரச்சினை என்பதை மறைத்து, இந்து மதத்தை, அதன் பாரம்பரியத்தை  மாறும் சமூகங்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக்குவது ஒரு பொய்மை.

மேற்சொன்ன மத வழிச் சமூகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடல் என்பது மேற்கின் மக்களுக்கும் தேவையாக இருந்தது என்றாலும் அங்கிருந்த மத இறுக்கத்துக்கு எதிரான இயக்கம் இயல்பில் வேறானது.  அங்கு முன்பு அரசும், மத நிறுவனமும் இணைந்தியங்கி சமூகத்தை இருப்புப் பிடியில், கிடுக்கியாகப் பிடித்திருந்தன.  மாறாக இங்கு விடுபடல் இயக்கம்,  மத நிறுவனத்தை விட அதிகம்  சமூக இறுக்கத்துக்கு எதிராகவே அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் இங்கு மதம் சமூகத்தைக் கட்டவில்லை, சமூகமே மதத்தைக் கட்டமைத்திருந்தது. அதுவும் ஒரு மதமாக அல்ல.  பல மதப்போக்குகளாகத்தான் அமைத்திருந்தது.

இதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத எதிர்ப்பு இயக்கங்கள் 19ஆம், 20 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்தை அழித்தால் சமூக விடுதலை கிட்டும் என்று முயன்று அதே வியர்த்தமான முயற்சிகளை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இந்து மதம் வீழ்ந்தால் அதை விடக் கொடுமையான இறுக்கம் நிறைந்த, சகிப்புத் தன்மை அற்ற பண்டை மதங்களும், நவீன மதங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, விடுதலை கிட்டும் வாய்ப்பை இல்லாமலாக்கும், இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மக்கள் முன்னெப்போதையும் விட வெஞ்சிறை வாழ்வை எதிர் கொள்வர் என்பது இந்த எதிர்ப்பாளர்களுக்குப் புரியவில்லை, புரியாது.  ஏனெனில் அவர்களில் பலரும் காலனியக் கோட்பாடுகளில் அறிவை அடகு வைத்து அந்த ஆடிகள் வழியே இந்திய சமுதாயத்தை நோக்குகிறார்கள்.

இந்து சமுதாயம் எப்போதும் போல இந்த எதிர்ப்பு இயக்கங்களின் சிறைப்பிடியில் சிக்காமல், தன் போக்கில் மாறுதல்களைத் தனிநபர் தேர்வுகள் வழியே அடைந்து கொண்டிருக்கிறது.  அதனால்தான் துரத்தப்பட்ட ஏகாதிபத்திய காலத்து எச்சமான தனித் தமிழ் இயக்கம்,  மரித்த லெனினியம் அல்லது அதன்  பண்டை வடிவான யூரோப்பிய எவாங்கலியம், உலக அரசியலில் தோல்வியைச் சகிக்க முடியாது அணையும் தருவாய் வெறியில் உலகைச் சாடும் வஹ்ஹாபியம் போன்ற, அடிப்படையில் மேலும் தளைகளை மக்கள் வாழ்வில் சுமத்தும் முயற்சிகளை லட்சியம் செய்யாது, பெரும் மக்கள் திரள், அன்றாட வாழ்வுத் தேர்வுகள் மூலம், அதாவது எதார்த்த வாழ்வுக்கான நடவடிக்கைகள் மூலமே நவீன உலகுக்கு நகர்ந்து விட்டிருக்கிறது.

நவீனத்துவத்தின் ஒரு தேவையாக,  தனிமனிதரின் விடுபடல் என்பது பல வகையாக தேர்வுகள் வழியே இங்கு நடந்தது.  உதாரணமாக, விரிந்த குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றும் கட்டாயக் கடமையில் அன்று இருந்த இளம் தலைமுறையினர், படிப் படியாக அவற்றில் இருந்து விடுபடுதல்  என்பது ஒரு முக்கியத் தேர்வு.   இதை மிகத் துன்பப்பட்டு, மிக்க சேதத்துடன் தனிநபர்களும், குடும்பங்களும் மேற்கொண்டன.  20 ஆம் நூற்றாண்டின் இந்திய மொழி இலக்கியத்தில் இந்த குடும்பச் சிதைவுகள் பற்றி நிறையவே படிக்கக் கிட்டும்.  சில பகுதிகளில் இந்தச் சிதைவுகள் 19ஆம் நூற்றாண்டிலேயே துவங்கி விட்டன.  சில இந்தியப் பகுதிகளில் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலேயே இச்சிதைவுகள் வேகம் பெற்றன.  ஆனாலும் சமீபத்திய காலத்தில் கூட்டுக் குடும்பம், அல்லது விரிந்த கிளைகளால் ஆன குடும்பம் என்பதே நலிந்த பின், இத்தகைய தனி நபர் உதிர்தல் அவ்வளவு சிரமமாக இல்லை அல்லவா?  இன்றோ அடுத்த கட்டத்திலிருந்து மேலும் நகர்வு ஏற்படுகிறது.  இது வயதானவர்களின் அதிகாரத்திலிருந்து இளைஞர்கள் நகர்ந்து சுயத் தேர்வுகளின் படி வாழ்வை அமைத்தல் என்ற எளிய உத்தி வழியே நடப்பது.  20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இது ஆரம்பித்தது, நூற்றாண்டு முடிவில் மிகத் துரிதப்பட்டு இன்னமும் இந்தியா, தமிழகம் முழுதும் பரவலாக, வேகமாக நடக்கிறது. சமீபத்து இலக்கியத்தில் முதியவர்கள் தம்மைக் கவனிக்க யாருமில்லாது அனாதையாக விடப்பட்டோம் என்று உணர்வதைப் பற்றி எழுதும் புனைகதைகள் நிறையக் கிடைப்பது இந்த நகர்வால், அதன் பல விளைவுகளால்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்தல், (சில குழுக்களில்) குலத் தொழில் என்றறியப்பட்டதை விட்டுத் தாம் தேர்ந்தெடுத்த அல்லது தமக்கு முன்னேற வாய்ப்பாகப் பட்ட வாய்ப்புகளைத் தேடிப் போதல், பல நாடுகளுக்குத் தொழில் நிமித்தம் பய்ணித்து அங்கேயே குடிபெயர்தல் என்று, இடம், பொறுப்பு ஆகிய தளங்களில் தம் தேர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தலாக, மனித ஆளுமைக்கு அவரவர் பாதை தேடுவதாகவே இதெல்லாம் அமைந்தது.

வாழ்வு முறையில் ஏற்பட்ட இத்தகைய மாறுதல்கள் இலக்கியத்திலும் ஏற்படுவது தவிர்க்கக் கூடியதா என்ன?

பொதுவாக இலக்கியம், கலை போன்றன வாழ்வு முறைகளில் மாறுதல்கள் ஏற்படுகையிலேயே கூடவே ஏற்பட்டாலும், அவை ஒத்திசைந்து நடப்பது அரிதே.  அனேகமாக இலக்கியம், கலை ஆகியன சில நேரம் முன்னகர்ந்தும், சில நேரம் பின்னிருந்து ஓடி வந்து சமூக மாறுதல்களை எட்டிப் பிடிப்பதுமாக அமைகின்றது.  எந்த வகை மக்களிடம் இலக்கியம் கலை ஆகியனவற்றின் படைப்பு ஊக்கம் அதிகம் உள்ளது என்பதைப் பொறுத்து இந்த ஒத்திசைவு அமையும் என்றும் நாம் பார்க்கலாம்.

இப்படி ஒரு முன்னகர்வில் புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்ந்து துரிதமாக மாறி, பழைய பாணிக் கவிதைகளை ஓரமொதுக்கி விட்ட பின், இன்று அனேகமாக ஏதும் பெரும் நகர்வுகளற்று தேங்கிக் கிடக்கிறது என்று எனக்குப் படுகிறது.  இதை வேறு சமயத்தில் கவனிக்கலாம்.

துவக்க கட்ட புதுக் கவிதைக்காரர்கள், கருதுபொருளில் அலங்காரச் சொற்களைத் தவிர்த்து, அன்றாட வாழ்வின் நடப்பு/ அனுபவங்களை நேரடியாகச் சொல்வதையும், அதே நேரம் சொற்சிக்கனத்தோடு வாசகனின் பிரக்ஞையில் தாவல்களைத் தூண்டுவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டு எழுதினர். தற்கால அல்லது சமகால வாழ்வின் பல சாதாரண அம்சங்களை, உணர்வுகளை, சம்பவங்களை, பார்வைகளை, தூல உலகின் பொருட்களை எல்லாம் கருப்பொருளாகக் கொண்டும், சாதாரண மனிதரையும் பொருட்படுத்தியும் எழுதப்பட்டதனால் அவற்றாலமைந்த கவிதை திடீரென்று ஜனநாயகப் பட்டதோடு, சாமானியமாகவும் ஆனது. சாதாரணத்தின் களத்தில் அசாதாரணத்தைக் கொடுப்பது என்பது ஒரு குணம் இங்கு. கவிதை என்பதே அசாதாரணமாக இருந்த நிலை மாறி தன்னளவில் சாதாரணமாகிப் போயிற்று.

விசேடப் பயிற்சி இல்லாது யாரும் கவிதை எழுத முயலலாம், அதில் கவித்துவம் என்பது இலக்கணப் பயிற்சி அல்லது, சொற்கட்டு மீது உள்ள பிரமாதமான லாகவம் என்பதெல்லாம் முன் நிபந்தனையாக இல்லாது பார்வையின் கூர்மை, வெளிப்பாட்டின் தரம், மேலும் ஓரளவு அசாதாரணக் கருத்து என்று வேறு விதமான, உரைநடை உலகிலிருந்து சிந்திய மதிப்பீடுகள் கவிதை உலகில் நடைபோடத் துவங்கின. ஒலியழகு என்பது முற்றிலும் ஒதுக்கப்படவும் இல்லை, ஒதுங்கவும் இல்லை. அது இன்னொரு வகைக் கவிதையாக, ஆனால் மேற்படி புதுவகை இயல்புகளோடு இணைந்து மக்களிடம் இறங்கி வந்து புழங்கியது. ஒலியழகில்லாமலும், கவிதைகள் உரைநடையே போல இருந்தாலும், பரவலாகவே உலவின.

பலர் தம்முடைய பிரதான வாசகராகத் தாமே செயல்பட்டு அதையே முதல் நிலையாகக் கொண்டு எழுதினர்.  அதாவது தன்மயச் சிந்தனையும், தன்னிலையில் இருந்து உயர்வான வெளிப்பாடு எனக் கருதுவதையே அவசிய குணமாகக் கொள்வதும், புற எதார்த்தத்தைக் கருக்காகக் கைப்பற்றுவதும், சமூகப் பொறுப்பு என்று கவிஞர் தாமே தம்மீது சுமத்திக் கொண்டனவும் என்று பல வகைக் குறிக்கோள்கள் அங்கு செயல்பட்டன. கவி மொழி புழக்கமொழிக்கு அருகில் வந்தது இக்கவிதைகளைத் துரிதப்படுத்தவும் உதவியது.

ஆனால் தமிழில் இக்கவிதை வந்த விதம், அதன் நோக்கங்கள், பின்னே இருந்த கருத்தியல் அல்லது தர்க்கம் ஆகியன மேற்கின் ஒரு நூற்றாண்டு செயல்பாட்டைப் போலவோ அந்த வகை உள்புற உந்துதல்கள், வளர்ச்சிப் பாதை ஆகியனவற்றையோ கொண்டிருந்தன என்று சொல்ல முடியாது. மேற்கை மாதிரியாகக் கொண்டு இயங்கத் தலைப்பட்டவர்கள் தம் சூழலின் பாதிப்பாலேயே உந்தப்பட்டு இயங்கினார்கள் என்பதால் மேற்கின் பல வடிவச் சோதனைகள், கருத்தியல் பரிமாற்றங்களெல்லாம் இங்கு நடைபெறவில்லை. மேற்கின் பாதையில் நடந்த சோதனைகள் இங்கு நடக்கவில்லை என்பதோடு அந்தச் சோதனைகள் வழியே மேற்கின் அழகியலிலும், கருத்தியலிலும் நடந்த பரிமாற்றங்களும், பல கலைத் துறைகளோடு உறவாடிய பரிமாண வளர்ச்சியும் இங்கு இல்லை.

களம், நிலம் மாற்றி நடப்பட்ட ஒரு பயிராகச் சில காலம் துவண்டு இருந்து, பின் சூழலுக்குத் தக மாறி இன்று வேறு ஒரு வரலாறு, வேறு ஒரு பாதையோடு தமிழில் புதுக் கவிதை எனப்படுவது நிற்கிறது. இங்கு துவக்கமே திடீரென்று அமைந்ததால், மேற்கின் கட்டம் கட்டமாக மாறிய அனுபவமோ, தர்க்கச் சேர்ப்போ இங்கு இல்லை. புதுக்கவிதை பெருமளவு பயன்படுத்தலில் இருக்கும் இன்னொரு கவிதை வடிவு அவ்வளவே. இதனால் ஜனநாயகப்படுத்தப்பட்ட ஒரு வெளிப்பாட்டு வடிவம் என்பதைத் தவிர இதற்கு வேறு ஏதும் விசேஷ தாக்கம் அழகியலிலோ, கருத்தியலிலோ இருக்கிறது என்று எனக்குப் பார்க்க முடியவில்லை.

இருந்தாலும், மறு நிலையும் எனக்குப் புலப்படுகிறது.  அதாவது,  வெறும் வடிவ மாற்றம் மட்டும் இருக்கிறது என்றோ, அப்படி வேரற்ற ஒரு உருமாற்றம் மட்டும் இருக்க முடியும் என்றோ நான் நம்பவில்லை.  உருமாற்றங்கள், பல நேரம் உள்ளுறையும் காரணிகளின் வெளிப்பாடாக, வடிகாலாக இருப்பதால்தான் நேர்கின்றன. அதாவது உருமாற்றம் அவற்றை வெளிப்படுத்த ஒரு கருவியாக அமைகிறது.  தம் வசீகரத்தால் உருமாற்றத்தை ஏற்க  எழும் தூண்டுதல் புறத்திருந்து வருகையில் அதை ஏற்பதும், ஏற்காததும் தனி நபர்களின் உளப்பாங்கைப் பொறுத்தது என்றாலும், இரண்டும் கெட்ட நிலையில் உள்ள கணிசமான மனிதரை உருமாற்றங்கள் இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்ற உறுதி நிலைக்குத் தள்ள அல்லது இழுக்க உதவுகின்றன.

குடுமித் தலையர்  கிராப்புத் தலைக்கு மாறுவதோ, வேட்டி ஆண்கள் அதை வெட்டி, நிஜார், பேண்ட் ஆண்களாக மாறுவதோ உருமாற்றங்களாகவும், கருவி அவசியம் கருதியும், வாழ்க்கைப் பாணியாகவும் மாறி இறுதியில் வேட்டி கட்டுதல் என்பது விசித்திரம், பழமை அல்லது அடையாள அரசியல் என்பதாகத் திரிகிறது. லுங்கி என்பது ஒரு குறிப்பிட்ட வகை வாழ்வடையாளமாக இருந்தது, இன்று ஏனோ எதிர்க் கலாசாரத்தின் தைரியமான வெளிப்பாடு போலத் தெரிய வருகிறது. அதுவுமே தனி நபரின் வீட்டு வாழ்வாகப் போய், பாண்ட் சட்டை என்பது கிட்டத் தட்ட இந்திய ஆண்களின் ஆடையாகவே மாறி இருக்கிறது.  இதனால் இந்திய ஆண்கள் மேலைப் பண்பாட்டுக்கு மாறிவிட்டனர், என்றோ, நீட்ஷா, டெரிடா, ஜேம்ஸ் காமரோன், ஸ்னூப்பி டாக் என்ற ஒரு பண்பாட்டுக்கு மாறி விட்டனர் என்றா சொல்ல முடியும்.  அத்தகையோரின் கருத்துகள், படைப்புகளின் சில சாயைகள் இவர்கள் வாழ்வில் மலினப் பதிப்புகளாக உலவ வாய்ப்புண்டு.  அதுவும் வேறு விதமாக நம்மால் புரிந்து கொள்ளப் பட வாய்ப்பு உண்டு.  மேற்படி சாயைகள் இன்றைய இந்திய வாழ்வின் ஏதோ சுரங்களையே  இசைப்பதாக இருப்பதால் நம்மவர்கள் இவற்றைப் பிடித்துக் கொள்ள அதிகம் தர்க்கம் ஏதும் இல்லாமல், உள்புற சஞ்சலம் இல்லாமல் தன்னியல்பாக நகர முடிகிறது என்றும் பார்க்க முடியும்.

இதே விதமான உருவ மாறுதல் தேர்வுகள் பெண்களிடமும் -நீள் கூந்தலை வெட்டுதல், தலைக்குப் பலநிறச் சாயங்கள் பூசுதல், முக ஒப்பனைக்கு மேற்கத்தியத் தொழிற்சாலைத் தயாரிப்பான சாயப் பொடிகளைப் பயன்படுத்துதல், ஸ்கர்ட், சுரிதார், டிரவுசர் இப்படிப் பல வகை ஆடைகளை அணிதல் என்று- மரபுப் பண்பாட்டை விட்டு விலகியதற்கு அறிக்கையாகவும்,  மாறிய சமூகப் பங்கின் வெளிப்பாடாகவும்  ஒரே நேரம் விளங்குகின்றன. துவக்கத்தில் இவையே சௌகரியம் அல்லது ஆடம்பரம் அல்லது அழகு என்ற காரணங்களால் ஏற்கப் பட்டிருக்கலாம். பிற்பாடு ஒரு சுய வெளிப்பாட்டு அறிக்கையாகக் கூட மாறுகின்றன.  ஆனால் மேற்கின் பாதிப்பு மேலும் மேலும் ஏற்பட வாய்ப்பு, பெண்கள் தம் குடும்பங்களை விட்டுத் தனியராகி தம் வாழ்வுக்குப் பொறுப்பேற்று இயங்கத் துவங்கும் போதும், தம் தேர்வுகளை அமல்படுத்த முடிவோராகவும் ஆகும்போதும் கூடுதலாகிறது.  அது மேற்கின் பண்பாடாகத்தான் மாற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, ஆனால் கல்வி முறையில் மேற்குடைய ஊடுருவல் கூடினால் பண்பாட்டுத் தேர்விலும் அந்தப் பாணி கூடும்.

இதில் ஆண், பெண் என்பதால் பெரும் வேறுபாடுகள் இரா.   யாருக்குச் சுய தேர்வுகளை நிறைவேற்றக் கூடுதலான சுதந்திரம் இருக்கிறது என்பதே பாதிப்பைக் கொணரும். இன்று தேர்வுகளைத்  ’தனிநபர் அரசியல்’ அறிக்கை என்று ஏதும் பெருவாரி மக்கள் கவனிப்பதில்லை.

எவ்வளவுக்கு இந்த வெளித் தோற்றங்கள் ஒரு குடும்பத்திலோ, சமூகத்திலோ பரபரப்பை ஏற்படுத்துகின்றனவோ, அவ்வளவுக்கு அந்தக் குடும்பங்கள், சமூகங்கள் மொத்த மக்கள் திரளின் நகர்வை ஏற்காது, பழகியதையே திரும்பச் செய்வதையே விரும்புகிறார், ஆனால் அடுத்த கட்ட வாழ்வுக்குத் தம்மைத் தயார் செய்யும் உந்துதல் உள்ள இளைஞர்கள் தேங்காமல் மாற முயல்கிறார் என்று நாம் எதார்த்தமாக எடுத்துக் கொண்டு போய் விடுகிறோம்.   தாம் இளைஞராக இருந்தபோது பரவலாகவும், ஏற்புடையதாகவும் இருந்த வழக்கங்களையே அடுத்தடுத்த தலைமுறைகளும் பழக வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவோருக்குதான் பெரும் உளைச்சல்கள் இருக்கும். இந்த உளைச்சல்கள் சில நேரம் நன்மையைச் சொல்லித் தரவோ, நீண்ட கால அனுபவத்தில் வெற்றி தருவனவற்றையோ முன்வைக்க விரும்பும் நல்லெண்ணத்தால் எழுவனவாக இருக்கலாம். அதாவது, அவை வயதான தலைமுறையினரின் ஆதிக்க முயற்சியாகவோ, அதிகாரத்தை இழக்க விரும்பாத முரண்டு பிடித்தலாலோதான் என்று நாம் எதிர்மறையாகவே அணுகத் தேவை இல்லை.

இருந்தபோதும்,  அனேகமாக மாறுதல் என்பதன் மாயை, அனுபவம் என்பதன் உண்மையை இருட்டடிக்கக் கூடியது.  அனுபவ உண்மை மறுபடி தனக்கொரு தேவை வரும் என்று பொறுத்திருக்க வேண்டி இருக்கும்.  அல்லது தானும் அதே மாயையை அணிந்து போட்டி சக்தியாக வெளிப்பட சாமர்த்தியம் உள்ளதாகத் தன்னை மாற்ற வேண்டி வரும்.

ஊடகமே செய்தி என்றானபின், உண்மை என்பதும் தன்னை ஊடக ஜாலம் கொண்டதாக ஆக்கிக் கொள்ளாவிடில் மாறுதல் என்ற பொய்மையின் ஜாலத்தின் முன் தோற்கவே செய்யும்.  உண்மை என்பது ஏதும் இல்லை என்று பிரச்சாரம் செய்வது மாயையின் ஜாலம்.   ஜாலம் என்பது உருவ வேறுபடுத்தலின் வசீகரம்.  அதை யாரும் கையகப் படுத்த முடியும்.  அதைப் பயன்படுத்தித் தன்னை உண்மை என்று நிறுவவே பொய்மை உலவுகிறது,  உண்மை என்று ஏதும் இல்லாவிடில் பொய்மைக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற ஏன் அத்தனை  பதட்டம் , அதுவும் சும்மா கிடக்க வேண்டியதுதானே என்ற மிகச் சாதாரணமான தர்க்கத்தின் புரிதலை நிறுவுவது கடினம் என்பதை நாம் மஹாபாரதக் காலத்திருந்தே இலக்கியத்திலும் புராணத்திலும் படித்து வந்திருக்கிறோம்.

இதற்கு ஃப்ரெஞ்சுக் குழப்பல்வாதிகளின் ‘அறிவு ஒளி’  நமக்குத் தேவை இல்லை, நம்மிடமே இது இருந்திருக்கிறது. என்றாலும் இறக்குமதிக்கு இருக்கும் வசீகரம், நம் பண்டைப் பண்பாட்டுக்கு இப்போதைக்கு இல்லை.  ஏனெனில் பண்டை நாகரிகம் பல நூறாண்டுகள் இறக்குமதிகளிடம்  ராணுவ ரீதியாகத் தோற்றதோடு, அதனாலேயே வசதிகளற்றுப் போய், தன்னைத் தொடர்ந்து உள்ளிருந்து புதுப்பிக்கும் ஆற்றலற்றதாக இருந்திருக்கிறது.

ஆக ஃப்ரெஞ்சுக் குழப்பங்களை நம் தலையிலிறக்கிக் கொண்டு பறைசாற்றினால்தான் நாம் கவனிக்கப் படுவோம் என்று சூழல் ஆகி விட்டது.  அதுவும் காலனிய பாதிப்பு மட்டுமல்ல, உலகமயமாதலின் இன்னொரு வடிவும்.

உலகில் எது ஆதிக்கத்தில் இருக்கிறதோ அதையே நாம் நம் இயல்பாகக் காட்ட விரும்புகிறோம், அத்தோடு சேர்ந்து வசதி வேட்டையில் இறங்குகிறோம்.  நம் பண்டை வாழ்வு, பலியாடுகளின் வாழ்வாக நம் உணர்வில் தெரிய வருகிறதால் அதிலிருந்து விலகி நின்று நாமும் நம் மக்களையே வேட்டையாடும் இதர வேட்டைக்காரர் போல ஆகும் முயற்சியே நம் அறிவு ஜீவிகளின் மேற்கு மயமான சிந்தனைப் பாங்கு.

இதே போலத்தான், மேற்கில் துவங்கிய உரைநடைக் கவிதை எனும் வடிவம் நம்மிடம் இறங்கியதும். பெருவேகம் கொண்டு  முன்னேகும் மேற்கை எட்டிப்பிடிக்க உதவும் என்ற மாயக் கருத்தாலும், நம் பழமையிலிருந்து விடுபடல் கிட்டும் என்ற உள்ளுணர்வாலும், உலகளவில் உயர முடிந்தவர் என்று காட்டும் உந்துதலாலும் எனப் பல காரணங்களோடு துவக்கத்தில் ஏற்கப்பட்டாலும், அதே காரணங்களை முன்வைத்து இன்னொரு தலைமுறையாலோ, இன்னொரு வாழ்வு முறையை விரும்புவோராலோ மறுக்கப்பட்டாலும்,  தலைமுறைகள் மாற மாற  நாளடைவில் கலவைப் பண்பாடே வழமையாகி, பொதுப் பழக்கத்தில் ஒலிநயக் கவிதை என்பது ஓரமொதுங்கி  இசையுடன் சேர்த்துப் பாட்டாகப் பாடுவதற்கு மட்டுமே என்று ஆகி விட்டது.

மக்கள் திரளிடையே படிப்பு பரவியது இம்மாறுதல்களைச் சகஜமாக்க ஒரு காரணம்.  கல்வி போதனையின் வடிவமும், மாறியது.  செவி வழிக் கல்வியாகவும், மரபை வலியுறுத்துவதாகவும் பெருமளவு இருந்தது மாறி, அச்சடித்த புத்தகங்கள், ஒலிநாடாக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கம்ப்யூட்டர் என்று கருவிப் பயன்பாடு வழியே  பெரும் நிலப்பரப்பை அறியச் சென்று விட்டோம்.  ஆனால் பல வடிவ மாறுதல்களுக்கிடையே கூட,  பெரும்பாலும் கல்வி என்பது, தகவல் சேகரிப்பு என்பது இன்னமும் மௌன வாசிப்பையே நம்பி இருப்பதால் அச்செழுத்து இன்னமும் நம்மைப் பிடித்துக் கட்டி வைத்திருக்கிறது.

செவிவழிப் பண்பாட்டின் மையத்தில் ஒலிநயப் பாடல், கவிதை, கல்வியிலும், சௌந்தர்ய நுகர்விலும், உயர்மட்டத் தர்க்கத்திலும் இயல்பாகப் பெருகி இருந்தது. காகிதப் புத்தகமும், அச்சடித்த பாடமும், மௌனப் படிப்பும் பெருகிய நாகரீகத்தில், கவிதையும் மௌன வாசிப்பின் வழி பல பரிமாணங்களைத் தொடுவதாக இருப்பதே உசிதம் என்றாகிறது. ஒலிநயம் அத்தனை அவசியமாகத் தெரியவில்லை. அத்ற்காக முனைவது நேர விரயம், பயண வேகத்தைக் குறைக்கும் என்பதாக் உணரப்படுகிறது.

கை நீட்டினால் தகவலைக் கொட்டும் புத்தகங்கள்,  தகவலைப் பொக்கிஷம் போலவோ, சொத்து போலவோ  வைத்துக் கொள்ளும் மனிதரை ஓரம் கட்டின. யாருக்கும் எங்கும் கிட்டக் கூடியதாக உள்ள புத்தகங்களில் சேமித்த சமூக அறிவு,அன்றாடப் புழக்கத்தில் நாம் சந்திக்கும் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனுபவ அறிவை ஓரளவு செல்லாக் காசாக்கி விடுகிறது, இல்லையா?   இந்த மாறுதலுக்குப் பின் முன்பு யார் ஆகிருதியும், சமூக அந்தஸ்தும் கொண்ட அறிவாளராக இருந்தாரோ, அவர்கள் இன்று சாதாரண ஆய்வாளருக்குமே வெறும் ஆய்வுப் பொருளாக மாறி விடுகிறார்.  சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் மேற்கின் ’இந்திய ஆய்வாளர்களுக்கு’த் துவக்கத்தில் ஆசிரியராக இருந்து, பின் அவர்களுடைய பணியாட்களாக மாறியது இப்படித்தான். இன்று சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் அறிவிலிகள், பழம் பொருள் என்றும், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் இந்தாலஜிப் புத்தகம் எழுதுபவர்களே  நமக்கு உண்மையாக இந்தியாவைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பவர்களாகவும் நாம் கருதத் துவங்கி விட்டோம்.  அத்தோடு போயிற்றா? எது இந்தியா என்று அறியாத மூடர்களாகவும் நம்மை அவர்கள் உலகுக்கே அறிவிக்கக் கூடிய ஆணவக்காரர்களாகவும் ஆகி, நமக்கு நம்மைப் பற்றிப் போதிக்க முன்வருகிறார்.

நம் சமூகம் பற்றிக் குறைகள் சொல்ல விரும்பும் இந்தியர் இங்கு அக்குறைகளைச் சொன்னால் போதாது, உலகரங்கில் இந்தியாவை ‘பகிரங்கமாகத் துகிலுரித்தால்தான்’ தமக்கு ஆதாயம் கிட்டும் என்று கருதி உலகரங்கில் தொடர்ந்து இழிவுப் பிரசாரம் செய்து, தம் சொந்த வாழ்வுக்கு ஆதாயம் தேடுகிறார்.  தம் முக்கிய நோக்கான பண்பாட்டு அழிப்பு வேலையை, இந்தியரே மேற்கொண்டு செய்வது குறித்து மேற்கின் இந்தாலஜி ஆய்வாளர்களுக்குப் புளகாங்கிதம் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இப்படி ஆனது இந்த மாயாஜாலப் பிரசார நடவடிக்கைகளைக் காலனியம் சாமர்த்தியமாகக் கையாண்டதால்தான். இன்னமும் உலக ஏகாதிபத்தியக் கனவுகளைக் கைவிட மறுக்கும் மேற்கின் முன்னாள் காலனி ஆதிக்க நாடுகள், அதே பிரசாரத்தை மாற்று உத்திகள் மூலம் தொடர்வது சாத்தியமாவதும் முந்தைய வெற்றிப் பாதை இன்னும் அழியாமல் கிடப்பதால்தான்.

வடிவ மாறுதல்கள் உள்ளடக்கத்தையும் மாற்றும் என்பது இதில் நிறுவப்படுகிறது.  ஆனால் வடிவ மாறுதல்களை இரண்டாம் கையாகவே ஏற்பவரால் உள்ளடக்க மாறுதல்களைத் தன்னியல்பாகக் கொணர முடியுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.  அத்தகைய மாறுதல்களைக் கொணர்ந்தால் கூட முதல் நிலைக் கருத்துகளாக அவை ஒருபோதும் உலகளவில் எழா என்பதை வேண்டுமானால் நாம் முன்கூட்டியே அனுமானிக்க முடியும்.

செவி வழிக் கல்வி முறையின் ஒரு குணம் ஏராளமாக நினைவு சக்தியைப் பயன்படுத்தி புத்தியில் தகவலையும், உருவ அமைதி வழியே அறிவையும் சேமிக்க வேண்டிய அவசியம்.  இந்த ஒரு காரணத்தாலேயே கூட அக்கல்வி பரவலாகச் சமூகத்தில் கலக்காமல் இருந்திருக்கக் கூடும்.  மாறாகப் புத்தக வழிக் கல்வி இந்த வகை அபரிமித நினைவு சக்தியைத் தேவையற்றதாக்கி விடுகிறது. மனனம்  அத்தனை அவசியமல்ல.  சாரமும், சாரங்களிடையே உள்ள தர்க்க இணைப்பும்தான் இப்போது அறிவில் சேமிக்கத் தேவை.

மேற்கில் அறிவாளர்கள்,  தொடர்ந்து பண்டைப் பண்பாட்டினர் மனனம் வழியே கற்பது அவர்களைச் சிந்திக்கத் தெரியாத இரண்டாம் கை அறிவாளராக, வேலையாட்களாக மட்டும் ஆக்கி வைத்திருக்கின்றன என்று பல பத்தாண்டுகளாகச் சொல்லி வந்தார்கள்.  அது வழக்கம் போல ஒரு பொய்யை உண்மை போலச் சொல்லி நிறுவிய வெற்றி.  ஆட்சியில் உள்ள அவர்களது கருத்துகளின் தோற்றுவாய் அவர்களது பண்பாடு, சமூகம், பொருளாதாரம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் இருந்தது.  அங்கு கிளைத்து, அங்கேயே உரம் பெற்று, அங்கேயே பரிணாம வளர்ச்சியும் அடைய முடியும்.  அதே வாய்ப்புகளை இந்தியருக்கோ, ஆப்பிரிக்கருக்கோ, வேறு காலனிப் பிரஜைகளுக்கோ மறுத்த காலனியம், இரண்டாம் கை மனிதர் என்று இழிவையும் பரப்பியது  ஆதிக்கப் பார்வை.  அதை ஏற்று, அதுவே உண்மை என்று காலனி நாட்டு அறிவாளர்களும் நம்பத் துவங்கியது வரலாற்றுச் சோகம்.

இந்த இதழ் சொல்வனத்தில் உள்ள ப்ளூம்பாக்ஸ் எரிபொருள் பெட்டகம் பற்றிய கட்டுரை, மனனக் கல்வி வழி மேலெழுந்தவரால் சாரத் தர்க்கம் வழியே கற்றவரின் ஆய்வறிவை ஒத்த இயக்கம் பெற முடியும் என்று சுட்டுகிறது.  ஆனால் இவர் ஒரு அசாதாரணம்,  எனவே அவரை முன்வைத்து நாம் மொத்த நாகரிகமும் அப்படி என்று வாதிட முடியாது.

இப்போது உலக வலை வழியே தகவல் பெருக்கம் நடக்கும் உலகிலோ, அறிவுத் திறன் என்பது, எளிதில் புறமிருந்து கொட்டும் தகவலை அவ்வப்போது துரிதமாகப் படித்து சாரத்தை மட்டும் வாங்கி பல சாரத் தொகுப்புகளை அலசி இணைத்து அடுத்த கட்ட அறிவு மேம்படுத்தலுக்குப் பயன்படும் கருவியாகி விடுகிறது. அதே நேரம் மனனமோ, அல்லது ஒலி நயம் வழியேயோ எதையும் கற்பது தேவை இல்லை என்றாலும், அத்தகைய சக்தி ஒரு அசாதாரணத் திறன் என்றும் வியக்கப் படுகிறது. உண்மை பொறுத்திருந்து மறுபடி வெல்லும் என்பதை இதில் காண முடியும்.  பழமை என்பது வெறுமையோ, வறுமையோ அல்ல.  பழமை சார்ந்த விவசாயம் இன்று கவர்ச்சியுள்ள ஆர்கானிக் விவசாயம் என்று தொழில் மய சமுதாயத்தின் வெறுமைக்கும், வறுமைக்கும், நோய்ப்பாதைக்கும் மாற்றாக முன் நிற்பதைப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.  சூழலியல் சிந்தனை என்பதே பழமையின் ஒருங்குபட்ட அனைத்துப் பரிமாண அறிவை முன்வைப்பதுதான்.

இன்று வலைப்பின்னலைக் கையாண்டு முன்னெட்டிப் போகத் தேவைப்படும் அளவு அறிவு, வெறும் தகவல் சேமிப்புக்குத் தேவைப்படுவதில்லை. இந்த வகை இயக்கத்துக்கு மாறாதவர்கள் மெல்ல மெல்ல பின்னே விடப்பட்டுவார்கள். அமைப்பில் அதிகாரமும், வசதிகளும் அவர்களுக்கு அதிகம் கிட்டாது. இது பரிணாமத் தாவலில் அடுத்த கட்டம்.

இந்தத் தாவலுக்குப் புதுக்கவிதை ஒரு வடிவச் சான்று அவ்வளவே. எனவே இந்த உருவ மாறுதலை இயல்பாக ஏற்றுப் பழகுபவர்களுக்கு இதன் பின்னே சமூகத்தில் ஏற்பட்ட பெரும் நகர்வுகள் பற்றிய ஆய்வறிவு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஏற்கனவே இந்த நகர்வுகளுக்குத் தம்மைத் தயாரித்துக் கொண்டவர்களாகவே வெளிப்படுகிறார்கள்.

(தொடரும்)