சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன்.
அண்மையில் வெளிவந்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
திரைப்படத்தில், இடைவேளைக்குப் பின்னர் இடம்பெறுகின்ற வரலாற்றுப் புனைவுக்குரிய வசனங்களில் சரித்திர காலச் சொற்களையும், சொல் வழக்குகளையும் உரிய இடங்களில் இட்டு நிரப்பிய பணியில் எனக்கு ஒரு முதன்மையான பங்கு உண்டு.
தமிழக அறிவுச் சூழலில், சமூக வரலாறு குறித்துத் தீவிரமான ஆய்வுத் தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆய்வாளர் நீங்கள். சரித்திர ஆய்வில் சமரசத்திற்குச் சற்றும் இடம் தராத உங்கள் போன்ற ஒருவரிடமிருந்து பொதுவாகத் திரைப்படம் உள்ளிட்ட வெகுஜன ஊடகங்கள் சற்று அஞ்சி விலகியே நிற்கும். ‘சிந்தையே சந்தை’யாகிப் போன இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழலில் இத்திரைப்படத்தில் பங்கேற்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?
ஆயிரத்தில் ஒருவன் படிப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சரித்திரக் காட்சிகளில் இடம்பெறுகின்ற பாத்திரங்கள் பேசுகின்ற வசனங்களில், அந்தக் காலகட்டச் சொற்களும், தொடர்களும் இடம்பெற வேண்டுமென்று திரைப்படக் குழுவினர் விரும்பினர். இதற்காக, இப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்பட இயக்குனர் அழகம் பெருமாள், தம்முடைய நெருங்கிய உறவினரும் பேராசிரியருமான அ.கா.பெருமாள் அவர்களைத் தொடர்புகொண்டபோது, அ.கா.பெருமாள் என்னுடைய பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். இப்படித்தான் இதில் என்னுடைய பங்களிப்புத் தொடங்கிற்று.
படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏற்கெனவே பாத்திரங்கள் பேசி நடித்த உதட்டசைவுகளுக்கு ஏற்பச் சரித்திர காலச் சொற்களையும், வழக்குகளையும் பொருத்தமாக எழுதுவது ஒரு சவாலாக இருந்தது. அந்த விதத்தில் எனக்கும் அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே அமைந்தது. குறிப்பாக, படத்தின் இணை இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து பணியாற்றியது மற்றொரு நல்ல அனுபவம். அவருக்கு என்னுடைய நன்றி.
சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள இப்படத்தில் உங்களுடைய பங்களிப்பு மன நிறைவைத் தருகிறதா?
இப்படம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், என்னுடைய பங்களிப்பு எனக்கு மனநிறைவையே அளிக்கின்றது. நான் எழுதிய வசனங்கள் வரலாற்றுப் பூர்வமானவையே என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், சில இடங்களில் உச்சரிப்புப் பிழைகள் உள்ளன என்பதும் உண்மையே.
கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுக் காலத்தில் மக்கள் பேசிய தமிழ் இப்படித்தான் இருந்திருக்கும் என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
சோழர் காலத்தில் மக்கள் பேசிய தமிழ் இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு உதவியாக இருக்கக்கூடிய நூல்களில் வைணவ உரை நூல்களை முதன்மையாகக் குறிப்பிடலாம். இந்த வைணவ உரை நூல்களைப்பற்றி தமிழறிஞர்களால் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, முனைவர் ஞானசுந்தரம் அவர்களின் ஆய்வைக் குறிப்பிடலாம். சில பழந்தமிழ்ச் சொல் வழக்குகள் இலங்கையில் வழங்குகின்ற பேச்சுத் தமிழிலும், மலையாள மொழியிலும்கூட நீடித்து வருகின்றன. கொடுந்தமிழ் எனப்படும் வட்டாரப் பேச்சு வழக்குகள் பற்றி இலக்கண உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
சோழர் கால கல்வெட்டு மொழிநடை என்று எடுத்துக்கொண்டால், அந்த மொழிநடைக்கும் இலக்கிய மொழிநடைக்கும் வேறுபாடுகள் உண்டு. கல்வெட்டு மொழிநடை என்பது முழுமையாகக் கொச்சை வடிவில் இருக்காது என்றாலும் ஆவண மொழிநடையாக, அதாவது யதார்த்தமான மொழிநடையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘குடுத்த’, அல்லது ‘குடுக்கிற’ என்ற வடிவங்கள்தாம் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ‘கொடுத்த’, ‘கொடுக்கிற’ என்ற வடிவங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக, “நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனமும் கல்லிலே வெட்டுக” என்று ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) பொறிக்கப்பட்டுள்ளது.
நாம் தவறான அல்லது கொச்சையான வழக்குகள் என்று கருதுகின்ற பல வழக்குகள்தாம் சரியான பூர்வ வடிவங்கள் ஆகும். உதாரணமாக, ‘நோவுதல்’ என்பதே பூர்வத் தமிழ் வடிவம். ‘நோகுதல்’ என்பது பிற்காலத்திய வடிவம் ஆகும். ‘தமப்பன்’ (தம்+அப்பன்) என்பதே பூர்வ வடிவமாகும். அதன் சற்றுத் திரிந்த வடிவம் ‘தவப்பன்’ என்பதாகும். சோழர் கால கல்வெட்டுகளில் தமப்பன், தவப்பன் ஆகிய இரு வடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ‘தகப்பன்’ என்பது பிற்காலத்தில் இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் திருத்தி எழுதப்பட்ட வடிவமாகும்.
அதுபோலவே, ‘அடைவு’ அல்லது ‘அடவு’, ‘தரவு’, ‘படவு’ என்ற சொற்கள்தாம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவை பிறகு அடகு, தரகு, படகு என்று திருத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் ‘க’கர ஒலி என்பது தூய்மையான வடிவம் என்றும், ‘வ’கர ஒலி என்பது கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படும் ஒலி என்றும் நம் மனதில் உளவியல்பூர்வமான ஒரு முன்முடிவு பதிந்திருப்பதால் இயல்பாகவே இத் ‘திருத்தங்கள்’ செய்யப்பட்டுவிட்டன. உதாரணமாக இன்றைக்கு “அது என்ன ஆகும்” என்று கேட்டால் அது இலக்கணத் தூய்மையுடைய வழக்கு என்றும், “அது என்ன ஆவும்” என்று கேட்டால் அது கொச்சை வழக்கு என்றும் கருதுகிறோம் அல்லவா? அதுபோலத்தான். இதேபோல பல உதாரணங்களைக் கூறமுடியும்.
சோழர் காலத்தில் வழங்கிய சில சொற்கள் கி.பி. 15-16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு திரிபடைந்தன. உதாரணமாக, ‘கும்மாளம்’ என்ற சொல்லும், ‘கோமாளி’ என்ற சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை ஆகும். கும்மியடித்தல் என்று சொல்கிறோம் அல்லவா? கும்முதல், குழுமுதல் என்ற கருத்தின் அடிப்படையில் ‘கும்மி’ என்ற சொல் வருகிறது. கும்மாளம் அல்லது கொம்மாளம் என்பதும் கூட்டமாகக் கூடி ஆடுதல் என்று பொருள்படும். இவ்வாறு ஆடுபவர்கள்தாம் கொம்மாளிகள். சோழர் கால இலக்கியமான தக்கயாகப் பரணியில் இந்த சொல்லாட்சி உள்ளது. ‘கும்மாளக் கூத்து’ என்பது சோழர் காலத்தில் வழக்கிலிருந்த ஒருவகை நாட்டுப்புறக் கூத்து வகையாகும்.
‘மக்கள்’ என்ற வழக்கு இன்றும் பேச்சுவழக்கில் இருக்கிறது. மக்களை விளிப்பதற்கு ‘மக்களே’ என்ற வழக்குதான் நீடித்து நிற்கிறது. ‘மக்காள்’ என்பது வழக்கொழிந்துவிட்டது. ஆனால், இன்றும் நாஞ்சில் நாட்டுத் தமிழில் ‘மக்காள்’ என்பதை ‘மக்கா’ என்று திரிந்து வழங்குகின்றது. எனவே மக்காள், மக்கா என்ற இரண்டு வடிவங்களையும் நாம் 12-13ஆம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழாக எடுத்துக்கொள்ளலாம். ‘வாருங்கோள்’, ‘எழுங்கோள்’, ‘பருகுங்கோள்’ போன்ற வியங்கோள் வினை வடிவங்கள் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்கில் இன்றும் நீடிக்கின்றன. வைணவ உரை நூல்களில் இவ்வடிவங்கள் காணப்படுகின்றன.
‘தள்ளை’ என்பது தாயைக் குறிப்பதற்குத் தென்பாண்டி நாட்டிலும், மலை நாட்டிலும் வழங்கிய ஒரு திசைச் சொல் என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றும் நாஞ்சில் நாட்டில் இச்சொல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
தாகம் என்று நாம் இன்று வழங்குவதை ‘தகை’ எனச் சில இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அழகர் கலம்பகம், அந்தரமுடையார் வில்லுப்பாட்டு போன்ற பிற்கால நூல்களில் இச்சொல்லாட்சி இடம்பெறுகிறது. கன்னடத்திலும் இது ‘தகே’ என்ற வடிவில் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு பழமையான வழக்கே என்று நாம் முடிவு செய்ய முடிகிறது. “தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தல்” என்ற வழக்கு இன்றும் நம்மிடையே உள்ளது. தபித்தல், தகித்தல் என்ற இருவிதமான சொற்கள் வெப்பத்தின் காரணமாக எரிதல் என்ற பொருளுடையவை. எனவே, ‘தாபம்’ என்ற சொல்லும் இப்பொருளுடையதே. தாபதர், தபஸ் என்ற சொற்களும் இந்த பொருளுடையவையே. சங்க இலக்கியங்களில் ‘சுடரொடு திரிதரும் முனிவர்’ என்றும், தொல்காப்பியத்தில் ‘தாபத நிலை’ என்றும் குறிப்பிடப்படுகின்ற வழக்குகள் காணப்படுகின்றன. எனவே தபித்தல், தவித்தல், தகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில் ‘தகை’ என்ற சொல் இடைக்காலத் தமிழிலேயே வழங்கியிருக்க வாய்ப்புண்டு.
சங்க காலத்திலிருந்தே பேச்சுத் தமிழும், எழுதும் தமிழும் வேறுபட்டுதான் இருந்தன என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
உறுதியாகச் சொல்ல முடியும். சங்கத் தமிழ் என்று சொல்லுவதே எழுத்துத் தமிழ்தான். அதாவது, புலவர்கள் கூடுகின்ற சங்கத்தில் அரங்கேறிய கவிதைகளில் பயன்படுத்தப்பட்ட இலக்கணத் தமிழ். சங்க காலத்திலேயே மக்களுடைய பேச்சு வழக்கில் இத்தகைய இலக்கணத் தமிழ் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியாது.
இலக்கண ஆசிரியர்கள் இதைச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். செந்தமிழ் என்பது நேரான (straight) தமிழ் என்றும், கொடுந்தமிழ் என்பது வளைந்த (curved) தமிழ் என்றும் பிஷப் ராபர்ட் கால்டுவெல் மிகச் சரியாகவே தம்முடைய Comparative Grammar of Dravidian Languages நூலில் விளக்கமளித்துள்ளார். செங்கோல் என்பது நேர்மையான அரசாட்சி என்றும், கொடுங்கோல் என்றால் திரிபடைந்த நேர்மையற்ற அரசாட்சி என்றும் பொருள்கொள்வதுபோல இச்சொற்களுக்கும் பொருள்கொள்வது பொருத்தமே.
ஆனால், செந்தமிழ் என்பது புலவர்கள்கூடிய அவையில் புழங்கிய மொழி (academic language) என்றும், கொடுந்தமிழ் என்பது தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் வழங்கிய வட்டார மொழி வழக்கு (Local Dialect) என்றும் விளக்கமளிக்கலாம். இவ்விரண்டையும் சரியான சொற்களில் வகைப்படுத்த வேண்டுமென்றால் செந்தமிழ், இயற்றமிழ் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
இயற்றமிழ் என்பது இயல்பான தமிழ். இதை வட இந்தியப் பிராகிருத மொழி வழக்குகளுடன் ஒப்பிடலாம். செந்தமிழ் என்பதைச் சம்ஸ்கிருதம் என்ற மொழிப் பெயருடன் ஒப்பிடலாம். ப்ரகிருதி என்றால் இயற்கையைக் குறிக்கும். இச்சொல்லின் நேர்ப் பொருள் ‘முன்னால் செய்யப்பட்டது’ என்பதுதான். சம்ஸ்கிருதி என்பது செம்மை செய்யப்பட்டது. பிராகிருத மொழி வழக்குகளில் இருந்துதான் சம்ஸ்கிருதம் உருவாயிற்று என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே இயற்றமிழில் இருந்துதான் செந்தமிழ் உருவாயிருக்க முடியும். இயற்றமிழ் என்பது பேச்சுத் தமிழே. செந்தமிழ் வழக்குகள் இயற்றமிழ்மீது தாக்கம் செலுத்துவது இயல்புதான்.
சிலர் தங்களை ‘முத்தமிழ் அறிஞர்’, ‘ஐந்தமிழ் அறிஞர்’ என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே? வேறு சிலர் அதை வழிமொழிகிறார்களே? இப்பட்டங்கள் பொருத்தமானவைதாமா?
ஒவ்வொரு மொழியையுமே இப்படி வகைப்படுத்திவிட முடியும். முச்சமஸ்கிருதம், முவ்வாங்கிலம், முவ்விந்தி, ஐஞ்செருமானியம் என்றெல்லாம் சொல்லிவிட முடியும். முத்தமிழ் என்பது பழமையான வழக்கு என்பதை நான் மறுக்கவில்லை. இப்படிச் சொல்வதன் பொருள் என்னவென்றால் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றுமே தமிழ் மரபுக்குரிய தனித்தன்மையுடன் வளர்ந்தவை; நீண்ட நெடிய பாரம்பரியம் உடையவை என்பதுதான். “முத்தமிழும் நான்மறையும் ஆனாய் நீயே” என்று தேவாரத்தில் சிவபெருமான் குறிப்பிடப்படுகிறார். முத்தமிழாகவே இறைவனைப் பாடுவதென்பது பக்தி மனப்பான்மையின் வெளிப்பாடு. இன்றைக்கும் தலைவர்கள்மீதிலான பக்தி நெறியை (Hero Worship) வளர்க்க நினைப்பவர்கள் இதைப் போன்ற அடைமொழியைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய அடைமொழியைப் பெற்றவர்கள் அதைத் தம்பட்டமாகவே முரசறைந்து அறிவித்துக் கொள்கிறார்கள். இவ்வாறு போற்றிப் புகழ்ந்துரைப்பதெல்லாம் பாடிப் பரிசில் பெறும் புலவர் மரபின் புனைந்துரைகளே தவிர வேறல்ல.
இத்தகைய புலவர்களை ‘வாழிப் புலவர்கள்’, ‘வாளிப் புலவர்கள்’ என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன். வாழிப் புலவர்கள், “வாழி வாழி” என்று வாழ்த்துவதோடு பலன்பெற்றுப் போய்விடுகிறார்கள். அவர்களால் அதிகம் தீங்கு விளைந்துவிடுவதில்லை. ஆனால், வாளிப் புலவர்களோ வடிம்பலம்ப நின்ற பாண்டியன் போல நிற்கின்ற – அமர்ந்திருக்கின்ற என்றுகூடச் சொல்லிவிடலாம் வேந்தர்களுக்குக் கால்களில்மேல் நீர் பெய்துவிடுகின்ற திருப்பணியைத் திறம்படச் செய்கின்றவர்களாகவும், அந்த வேந்தர்கள் கண்காட்டுகின்ற திசையில் பாய்கின்ற வாளி(அம்பு)களாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் விளைகின்ற தீங்கு அதிகம். வேந்தர்களின் கருத்துகளோடு மாறுபடுபவர்களை வசைபாடுவதும், மிரட்டுவதும்தான் இவர்களுடைய முதன்மையான பணியாக இருந்துவருகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க முத்தமிழ், ஐந்தமிழ் என்று சொல்வதெல்லாம் அறிவியல் பூர்வமான வகைப்பாடு அன்று. இயற்றமிழ், செந்தமிழ் என்ற வகைப்பாடே அறிவியல்பூர்வமானது என்று கருதுகிறேன்.
இப்படத்தின் கதை உருவாக்கத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்றாலும், படத்தில் இடம்பெறும் சரித்திரச் சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பாக ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் என்ன நினைக்கிறீர்கள்? குடவோலை முறை போன்ற தேர்தல் முறைகளை அறிமுகப்படுத்திய சோழர்கள், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற கட்டிடக்கலை அற்புதத்தை நிர்மாணித்த சோழர்கள், காட்டுமிராண்டிகள் போலச் சித்திரிக்கப்பட்டுள்ளனர், இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு நியாயமானதா?
இந்தியாவைப் பொருத்தவரை படைப்பிலக்கியங்கள், திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது இயல்பே. வரலாறு என்று வரும்போது இருவிதப் பார்வைகள் இருந்துதான் தீரும். அதனால் சர்ச்சைகள் எழுவது இயல்பே. ஆனால், அது சரியான சித்திரிப்பா, பொருத்தமற்ற வரலாறுக்கு முரணான சித்திரிப்பா என்றுதான் நாம் பார்க்கவேண்டுமே தவிர சோழர்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளன என்றெல்லாம் சொல்வது தவறாகும். குறிப்பாக, இந்தத் திரைப்படத்தைப் பொருத்தவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் சித்திரிப்பது திரைப்படம் மக்களிடையே ஏற்படுத்துகின்ற உணர்வுபூர்வமான தாக்கத்தையே குறைத்துவிடும் என்ற அடிப்படைக் கணக்கீடுகூட தெரியாதவர்களா இப்படத்தை உருவாக்கியவர்கள்? எனவே, இவ்வாறு சிலர் சொல்வதெல்லாம் தங்களை வரலாறு பற்றி சகலமும் அறிந்தவர்கள், தமிழ் உணர்வுடன், வரலாற்றுடன் ஒன்றியவர்கள் என்று தம்மை முன்னிறுத்துக்கொள்வதற்காகவே.

மணிகண்டனுடன் எஸ்.இராமச்சந்திரன்
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சரித்திரக் காட்சிகளின் சித்திரிப்பு என்பது சில இடங்களில் தர்க்கபூர்வமாக அமையவில்லை என்ற விமர்சனம் எனக்கும் இருக்கிறது. ஆனால், சோழர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்று சொல்வது சரியான விமர்சனம் ஆகாது. ஏனென்றால், அதே சோழர்கள்தாம் எதிரி நாட்டின்மீது படையெடுக்கும்போது மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் தகர்த்துத் தரை மட்டமாக்குதல், அந்நாட்டுப் பெண்டிரைச் சிறையெடுத்தல், தெய்வப் படிமங்களை வெற்றிச் சின்னங்களாகத் தூக்கிவருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
மேலைச் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்த நூர்மடிச் சோழ வித்யாதரன் (முதலாம் இராஜேந்திரன்) சமணர்களையும், அந்தணர்களையும், பெண்டிரையும் கொன்று குவித்தது அந்நாட்டுக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. அவன் மகன் முதலாம் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரான (மராட்டிய மாநிலம்) கல்யாணபுரத்தைச் சூறையாடி அங்கிருந்து கொண்டுவந்த துவாரபாலகர் சிற்பம் இன்றும் தஞ்சாவூர்க் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குலோத்துங்கன், வீர பாண்டியன்மீது படையெடுத்துச்சென்று,, “நெட்டூரில் எதிர்த்த வீரபாண்டியன் முடித்தலை கொண்டு அமர்முடித்து அவன் மடக்கொடியை வேளம் ஏற்றி”யதாகத் தனது மெய்க்கீர்த்தியில் பறைசாற்றுகிறான். வேளம் ஏற்றுதல் என்றால் அடிமைப்படுத்தப்பட்ட உயர்குடிப் பெண்டிரை வேலைக்காரியாகவும் போகத்துக்குரியவளாகவும் மாற்றுதல் என்று பொருள்படும்.
மன்னர்களும் மனிதர்கள்தாம். அவர்களுடைய நடவடிக்கைகளிலும் அரசியல் சூழ்ச்சி, குடும்பச் சதி வேலைகள் போன்றவையே அடிப்படை உந்துசக்தியாக இருந்துள்ளன என்பதையும், பலவிதமான மறப்போர் (அதர்மமான போர்) முறைகளும் பின்பற்றப்பட்டுத்தான் மாபெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன என்பதையும் நம்மால் மறுத்துவிட முடியாது.
குடவாயில் பாலசுப்ரமணியன் என்பவர் ஜுனியர் விகடன் (24/1/2010) இதழில், “சமீப காலமாக சோழர்களையும் அவர்களது வரலாற்றையும் கேவலப்படுத்துவதற்கும், திரித்துப் புனைவதற்கும் ஒரு கும்பலே செயல்படுவதாகத் தெரிகிறது. தசாவதாரம் படத்தில் குலோத்துங்க சோழனை அசிங்கப்படுத்தினார்கள். கோவிந்தராஜப் பெருமாளுக்குக் கோயில் கட்டியவனே அவன்தான்; கோவிந்தராஜப் பெருமாளைக் கடலில் தூக்கிப்போடும் பெரும் கொடுங்கோலனாக அவனைச் சித்திரித்திருந்தார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இந்தக் குற்றச்சாட்டே ஒரு ‘டப்பிங்’ குரலாகத்தான் தொனிக்கிறது. சரித்திரத்தில் இத்தகைய ஒரு டப்பிங் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல் புலவர் தமிழ் சங்கத் தலைவர் நக்கீரர் எனலாம். இறையனாரின் ஒரிஜினல் குரலில் அமைந்த கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந்தொகைப் பாடலுக்குத் திருவிளையாடல் புராணத்தில் வாயசைத்தது தருமி என்ற பாத்திரம் ஆகும். ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல் திரைப்படக் காட்சியில் அந்தப் பாட்டு குறித்து சர்ச்சை உருவாகும்போது நக்கீரர், “சர்ச்சை என்பது புலவர்களின் உரிமை” என்று பேசுவதாக ஒரு வசனம் இருக்கும். எனவே, வரலாற்றுச் சர்ச்சைகளைக் கண்டு ஆய்வாளர்கள் அஞ்சிவிடமாட்டார்கள் என்பதை ஒரு (தற்சிறப்பு) பாயிரம் போல சொல்லிவிட்டுப் பதிலுக்கு வருகிறேன்.
அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனர் இரா. நாகசாமி, Ramanuja – Myth and Reality என்ற நூலில் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சுதை உருவத்தை அல்லது சிற்பத்தை உடைத்துக் கடலில் எறிந்தவன் இரண்டாம் குலோத்துங்க சோழன் என்பது வரலாற்று உண்மையாகும். ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியிலும், மூவர் உலாவிலும் இதனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். வரலாற்று உண்மை இப்படியிருக்க, திரு. நாகசாமி தம் நூலில், பின்னமாகிப்போன சிற்பத்தை அகற்றுவது என்பது சாஸ்திரபூர்வமான ஒரு செயல்பாடே என்றும், அதைத்தான் இரண்டாம் குலோத்துங்கன் செய்தான் என்றும் அம்மன்னனின் செயலுக்கு ஓர் ஆட்சேபனையின்மைச் சான்றிதழும், பின்னேற்பும் வழங்கியுள்ளார்.
சிதைவுற்றிருந்த பழைய சிற்பத்தை நீக்கிவிட்டுக் கோவிந்தராஜப் பெருமாளுக்குப் புதிய சன்னிதியை இரண்டாம் குலோத்துங்கன் உருவாக்கினான் என்று பொருள்படும் வகையில் இவ்வாறு வியாக்கியானங்கள், விளக்க உரைகள், அதாவது காண்டிகை உரைக்கு விருத்தியுரையினை குடவாயில் பாலசுப்ரமணியன் வழங்கியுள்ளார் போலும்.
இவ்வாறெல்லாம் இவர்கள் விளக்கமளிப்பதன் உட்பொருள் சோழர்கள் சமயப்பொறை மிக்கவர்கள், அனைத்துச் சமயத்தவர்களையும் சமமாக நடத்தியவர்கள், எனவே சோழர்களைப்பற்றி இவ்வாறு குற்றம் சுமத்துவது என்பது அவர்களை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்பதுதான். 50 ஆண்டுகளுக்கு முன்னரே வரலாற்று ஆய்வாளர் டி.என். சுப்பிரமணியன் அவர்கள் இத்தகைய சப்பைக்கட்டுகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்று காட்டும் விதத்தில் நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி உண்மையை நிலைநாட்டிவிட்டார். “சோழர்களைக் கேவலப்படுத்துவதற்குப் புறப்பட்டுவிட்ட கும்பலின் பிதாமகன் டி.என். சுப்பிரமணியன்” என்றுகூட குற்றஞ்சாட்டக்கூடும். நான் தமிழினி (மே 2009) இதழில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளேன். (http://www.sishri.org/ramanuja.html)
சேர, சோழ, பாண்டிய மாமன்னர்கள் மள்ளர் (தேவேந்திர குல வேளாளர்) குலத்தவர்கள் என்றும், அவர்களுடைய வரலாற்றை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இழிவுபடுத்திய வந்தேறி செல்வராகவனைக் கண்டிப்பதாகவும் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் பெருமன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவே? இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தமிழக அரச குலம் தங்களுடைய குலம்தான் என்று ஆய்வுபூர்வமாகத் தங்கள் தரப்பினை முன்வைப்பதற்கோ, பெருமிதம் கொள்வதற்கோ, விவாதத்தில் ஈடுபடுவதற்கோ யார் முனைந்தாலும் அதைப் பற்றி வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. சொல்லப்போனால், தங்களுடைய வேர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி என்பது பல வரலாற்று ஆய்வுகளுக்கு உந்துவிசையாக இருந்துள்ளது என்பதால் அத்தகைய உரிமைக் குரல்களை நானும் மதிக்கிறேன். மூவேந்தர் குலமே சான்றோர் (நாடார்) குலம்தான் என்பது என் கருத்து என்பதை மட்டும் இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு உரிமை கோருகின்றவர்கள், எதிர்த் தரப்பினருடைய கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதோ, எதிர்த் தரப்பினரின் சித்திரிப்பே திரிப்பு வேலைதான் என்று கூறுவதோ, வந்தேறிகள் என்பதுபோல வசைபாடுவதோ நியாயமாகாது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவர் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதைக்கூடச் சீரணித்துக் கொண்டிருக்கும் நாம் கேளிக்கை ஊடகமான திரைப்படத்தில் உள்ள வரலாற்றுச் சித்திரிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுவதும் சரியானதுதாமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படிச் சில சாதியினர் தங்களுடைய குலமே அரச குலம் என்று பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், “வரலாறு என்பது அறிவியல் பூர்வமான வரலாறாக இருந்திருக்குமேயானால், யாருமே தங்களை ‘ராஜபரம்பரை’ என்று சொல்ல வெட்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜனைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்…” என்று தலித்முரசு (ஆகஸ்டு 2008) இதழில் சொல்லியுள்ளாரே?
சில சாதியினர் தங்களுடைய குலமே அரச குலம் என்று முழங்கும் உரிமைக் குரல்கள் ஒரு துருவம் என்று கொண்டால், ஆ.சிவசுப்பிரமணியனின் கருத்து இன்னொரு துருவம். என்னைப் பொருத்தவரை, வரலாற்றை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். தமிழ் வேதமாகக் குறிப்பிடத்தக்க திருக்குறளிலேயே, இன்றைய பெண்ணியவாதிகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஜீரணிக்க முடியாத கருத்துகள் இருப்பது உண்மைதான். அதற்காகத் திருக்குறளே பெண்ணுரிமைக்கு எதிரான ஒரு நூல் என்று குற்றம் சாட்டிவிடுவது சிறுபிள்ளைத்தனமானது. மன்னர் ஆட்சி நிலவிய சமூகங்களில் இன்றைய ஜனநாயக யுக தர்மத்திற்கு முரணான பல செயல்பாடுகள் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவேண்டும் என்பது நியாயமான அணுகுமுறையே. ஆனால், மன்னர் ஆட்சி என்பதே கொடுங்கோலாட்சி என்ற முடிவுக்கு வருவது தவறான புரிதல் ஆகும். ஒவ்வொரு யுகத்திற்கும் தர்மங்கள் மாறுகின்றன.
இன்றைக்கும் ஜனநாயகம் என்று நாம் பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலேயே மன்னர் ஆட்சியில்கூட நடக்காத அநீதிகள் பல ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படுகின்றன என்பதை மறுத்துவிட முடியுமா? உதாரணமாக, மதுரை தினகரன் எரிப்பு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். தன் மகன் பொறுப்பின்றி வேகமாகத் தேரை ஓட்டிச் சென்றதால் தேர்ச் சக்கரத்தில் அறைபட்டுக் கன்றொன்று இறந்துபட அதற்குத் தண்டனையாகத் தன் மகனையே தேர்ச் சக்கரத்தில் நசுக்கிக் கொன்ற மனுநீதிச் சோழனையும் வரலாற்றுப் பாத்திரம் என்றுதான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதே நிகழ்வு இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சத்திலும் இலங்கையை ஆண்ட ஏலார (எல்லாளன்) என்ற சோழ நாட்டுப் பிரபு தொடர்பானதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், இன்றைய ஜனநாயகத் தமிழ்நாட்டில் கண்முன்னே என்ன பார்க்கிறோம்? மன்னராட்சிக் காலத்தில்கூட நிகழ்ந்திராத அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வுகள் எல்லாம், மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்ற சர்வாதிகாரிகளால் நிகழ்த்தப்படுகின்றன. இவைபற்றி ஒரு முணுமுணுப்பாகக்கூட எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தத் துணிவின்றி அமர்ந்திருக்கின்றவர்கள்தாம் வெட்கப்பட வேண்டுமே தவிர, ராஜபரம்பரைக்கு உரிமை கொண்டாடுபவர்கள் அல்லர்.

நவகண்டம்
அரசர்களுக்காக ராஜவிசுவாசிகள் (தொண்டர்கள்) நவகண்டம் என்ற பெயரில் தம்மைத் தாமே பலியிட்டுக்கொள்வது வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வெட்டுடன்கூடிய ஒரு சோழர் கால நவகண்டச் சிற்பம் இருந்தது. தற்போது அது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சை மராட்டா தர்பார் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் “பொன்னி மகன் பிளைக்க” என்று பொறிக்கப்பட்டுள்ளது. மரணத் தறுவாயில் விழுப்புண் பட்டுக்கிடந்த பொன்னி மகன் (பொன்னியின் செல்வன்?) உயிர் பிழைக்கவேண்டும் என்பதற்காக நேர்ந்துகொண்டு தன்னுயிரைப் பலிகொடுத்த ஒரு வீரனின் சிற்பமே அது. இவ்வாறு நவகண்டம் கொடுப்பது என்பது சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு யதார்த்தம். அதைத் திரைப்படத்தில் சித்திரிப்பது மட்டும் எப்படிக் காட்டுமிராண்டித்தனம் ஆகும்?
ஏன், இன்றைய நிலையையே எடுத்துக்கொள்ளுங்கள். திராவிட இயக்கத் தலைவர்களுக்காகத் தீக்குளிக்கின்ற பல தொண்டர்களைக் கண்முன்னால் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அவர்களின் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவற்றை நியாயப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் தவறு. அதுபோலத்தான் வரலாற்று ஆய்விலும் வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு முறையான விதத்தில் எதிர்வினை ஆற்றவேண்டுமே தவிர, குடவாயில் பாலசுப்ரமணியம் போலவோ, ஆ. சிவசுப்பிரமணியன் போலவோ இரு வேறு துருவ நிலைகளில் நின்று வரலாற்றைப் பார்ப்பது பிழையான பார்வையாகத்தான் இருக்கமுடியும்.
“கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் 40 சதவீதம் வரலாற்றுச் செய்திகளும் 60 சதவீதம் புனைவும் இருந்தது. ஆனால், அதைப் படித்த அத்தனை பேரும் அதில் வரும் கற்பனைப் பாத்திரமான நந்தினியைப் பற்றி இன்னும்கூட பிரமிப்பு நீங்காமல் எங்களைப் போன்றவர்களிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு காட்சிப்படுத்துதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நம் தமிழ் மக்கள், இது போன்ற சினிமா காட்சிகளையும் ஏற்றுக் கொண்டால் என்ன கதியாகும்?” என்றும் குடவாயில் பாலசுப்ரமணியன் விசனப்பட்டுள்ளாரே?
படைப்பாற்றல் என்பது ஒரு சித்தாந்தத்தின் கருத்துப் பரப்பலுக்கு பயன்படக்கூடிய ஒரு கூர்மையான ஆயுதம் என்ற அளவில் இவருடைய ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த ஆதங்கத்தில் ஒரு முரண்பாடும் இருக்கிறது. சோழர்களைப் பற்றிய காதலும், வீர சாகசமும் நிறைந்த மிகை நவிற்சிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சோழர்களைப் பற்றிய யதார்த்தமான சித்திரிப்புகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்ற தொனி இந்த ஆதங்கத்தில் உள்ளது.
கல்கி ஒரு வரலாற்று ஆய்வாளர் அல்லர். அதே நேரத்தில், இந்திய சுதந்திரப் போராட்டச் சூழலில் எழுந்த பாரம்பரியப் பெருமித உணர்வு சார்ந்த வரலாற்றுத் தேடல் அவருடைய கதைகளில் முதன்மையான இழையாக ஓடுவதைக் காணலாம். இன்றைக்கு அந்த நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லை. கம்ப ராமாயணம் போன்ற ஓர் இதிகாசத்தை இன்றைய நிலையில் தமிழில் எவரும் எழுதிவிட முடியுமா? மக்கள்தாம் ஏற்றுக்கொண்டு விடுவார்களா? இது விமர்சன யுகம். எனவே, எதிலும் யதார்த்தம் இழையோடுவது தவிர்க்கமுடியாதது.
“மக்களிடம் இருந்த நிலங்களையெல்லாம் பிடுங்கி அந்தணர்களுக்குக் கொடுத்தவன் ராஜராஜன் என்பதாக இப்போது ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள் சிலர்” என்று அவர் ஆதங்கப்பட்டிருகிறாரே? ராஜராஜன் பற்றிய இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?
நா. வானமாமலை அவர்கள் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இது ஒரு தவறான குற்றச்சாட்டு என்று சொல்லிவிட முடியாது. பிரம்மதேயங்கள் என்ற பெயரிலும், சதுர்வேதி மங்கலங்கள் என்ற பெயரிலும் பிராம்மணர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுப் பிரத்தியேக உரிமையுடன்கூடிய நிலங்கள் வழங்கப்பட்டதெல்லாம் உண்மைதான். இந்நிகழ்வுப்போக்கு கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதென்பதற்குப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில்கூட இத்தகைய நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.
சில நேரங்களில் “பண்டுடையாரையும் பழம்பெயரையும் தவிர்த்து” (பழைய நிலவுடைமையாளர்களையும், பயிர் செய்யும் உரிமை உடையவர்களையும் தவிர்த்து) நிலங்கள் வழங்கபட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று குடிநீக்கித் தேவதானமாக ஆக்கியதாகவும், குடிநீங்காத் தேவதானமாக ஆக்கியதாகவும் கல்வெட்டுகள் சொல்கின்றன. இக்கல்வெட்டு வாசகங்களில் இடம்பெறுகின்ற நீக்கி, தவிர்த்து என்ற சொல்லாட்சிகளுக்குச் சரியான பொருள் என்ன என்பது குறித்து இன்றும் அறிஞர்களிடையே சர்ச்சைகள் நிகழ்ந்துவருகின்றன.
வட இந்தியக் கல்வெட்டுகளில் “சப்ரஜா தேவஸ்தானம்” அல்லது “சப்ரஜா தேவஸ்வம்” என்ற தொடர் இடம்பெறுவதுண்டு. இதன் பொருள், நிலங்களில் பயிர்செய்து அல்லது நிலங்களைச் சார்ந்து வாழ்கின்ற குடிகளோடு சேர்த்து அந்நிலங்களைக் கோயிலுக்கு உரிமையாக்குதல் என்பதாகும்.
“குடிநீங்காத் தேவதானம்” என்பது இதே பொருளுடைய தமிழ்க் கல்வெட்டு வாசகமாகும். குடிகள் நீங்கலான நிலங்களை மட்டும் தேவஸ்தானமாக மாற்றுவது குடிநீக்கிய தேவதானமாகும். ‘நீக்கி’ என்ற வினையெச்ச வடிவம் இப்பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது என் கருத்து. அதாவது, அரசிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ நிலவுரிமை வேறு ஓர் அமைப்பிற்கு மாற்றப்பட்டபிறகும் அந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்ற குடிகள் அதே நிலையில் விருப்பமிருந்தால் தொடரலாம்; வேறு நிலங்களில், நிலங்களைச் சார்ந்தோ பயிர்செய்தோ வாழ்வதென்றாலும் வாழலாம். அதாவது, அவர்கள் தாங்கள் வாழ்கின்ற குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படாது. ஏனென்றால், அக்குடியிருப்புப் பகுதியின் நிர்வாகம் பிரம்மதேயத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளாட்சி போன்ற அமைப்புகளைச் சார்ந்தே இருந்தன. எனவே இது மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஆய்வுச் சிக்கலாகும்.
அடுத்ததாக, பிரம்மதேயக் குடியேற்றங்கள் என்பவை அரச அதிகார அமைப்பின் முதன்மையான தூண்களாக விளங்கக்கூடிய சட்டத் துறை, நிர்வாகத் துறை நிபுணத்துவம் மிக்க கல்வியாளர்களின் குடியேற்றங்கள் ஆகும். எனவே, இது சத்திரிய வர்ணத்தைச் சேர்ந்த சோழ அரச குலத்தவருக்கும், சோழர்களின் படைப்பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு போர்க்குடிகளுக்கும் பிராம்மணர்களும் இடையே இருந்த புரிந்துணர்வு, செயல்பாடு சார்ந்த நடைமுறை உறவுகள் போன்ற பல விஷயங்களை சார்ந்ததாகும். சத்திரிய வர்ணத்திலேயே பெரும்பான்மையானவர்கள் சட்டத் துறை, நிர்வாகத் துறை நிபுணத்துவத்துக்குரிய கல்வி பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து முழுவதும் புரிந்துகொள்ளாமல், நிலங்கள் எளிய மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு பிராம்மணர்களிடம் கொடுக்கப்பட்டன என்று முடிவு செய்வது சரியான புரிதல் ஆகாது என்றே நினைக்கிறேன்.
சத்திரியர் போன்ற வர்ணத்தவர்களுக்கு முழு உரிமையுடைய நிலங்கள் வழங்கப்பட்டதற்குச் சான்றுகள் உண்டா?
சோழர் காலத்திலேயே ராஜகுலவர் காணிப்பற்றுகள் (அரச குலத்தவரின் காணி நிலங்கள்), கணிமுற்றூட்டு (சோதிடர்களுக்கான முழு உரிமையுடைய எஸ்டேட் போன்ற பண்ணை நிலங்கள்) வழங்கப்பட்டமைக்குக் கல்வெட்டு ஆதாரம் உண்டு. கணி என்பது சோதிடர்களைக் குறிக்கும். இச்சோதிடர்கள் பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட காலகட்டம்வரை வள்ளுவர் சாதியினைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் என ஊகிப்பதற்கும் கல்வெட்டுகளில் தடயங்கள் உள்ளன.
மங்கலம் என்ற பின்னொட்டுடன் முடிபவை எல்லாமே பிராம்மணர்களுக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்கள் என்று கருதுவதும் தவறே. சான்றாக, பாண்டிய நாட்டில் ”அங்கை மங்கலமான வீரபாண்டியன் மடிகை மாநகரம்” என்ற ஊர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இது தற்போது திருச்செந்தூருக்கு அருகில் அங்கமங்கலம் என்ற பெயரில் உள்ள ஊராகும். இவ்வூர் 13ஆம் நூற்றாண்டில் மளிகைப் பொருள்களைச் சேமித்து வைக்கின்ற பெரும் வணிகப் பேட்டையாகவும் அங்கைப் போர்வீரர்கள் அல்லது அங்கக்காரர்கள் எனப்பட்ட உயர் வர்க்கப் போர்வீரர்களுக்கான மானிய நகரமாகவும் இருந்த ஊராகும்.
சோழர் காலத்தில் பரிக்கிரகம் என்கிற போர் அவைகள் (defense academy) இருந்துள்ளன. போர் அவைகளில் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த மானியதாரர்களாகத்தான் இருந்திருக்க முடியும். இதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்த பின்னர்தான் சோழர் கால நிர்வாக அமைப்புக் குறித்தும், அதில் அந்தணர்களின் ஸ்தானம் குறித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியும். இது குறித்து இதுவரை நடந்த ஆய்வுகள் (அதிகம் பேசப்படுகிற பர்ட்டன் ஸ்டெயின் ஆய்வுகள் உட்பட) முழுமையானவை அல்ல.
விமர்சனம் எங்கு முடிவடைகிறது, இழிவுபடுத்துவது எங்கு தொடங்குகிறது என்று உங்களால் வரையறுத்துக்கூற முடியுமா? உதாரணமாக, சரஸ்வதி தேவியை ஆடையின்றி எம்.எஃப். ஹுசைன் வரைந்தபோது எழுந்த சர்ச்சை இன்றுவரை நீடிக்கிறது. அதைப்பற்றி அண்மையில்கூட படைப்பிலக்கியவாதி ஜெயமோகன், இந்தியத் தாந்த்ரீக மரபில் இத்தகைய சித்திரிப்புகள் இயல்பானவையே, அதனால் இதையெல்லாம் இழிவுபடுத்துதல் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
ஜெயமோகனின் கருத்து அடிப்படையில் சரியானதுதான். ஆனால், ஹுசைன் தொடர்பான பிரச்சினையே வேறுபட்ட ஒன்று. இது தொடர்பாக ஹுசைனைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்விகளிலும் சில நியாயங்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவது தொடர்பானவை அல்ல. சரஸ்வதியை ஆடையின்றி ஓர் இஸ்லாமியர் வரைந்துவிட்டார் என்பதனால் மட்டுமே அக்கேள்விகள் எழுந்துவிடவில்லை.
அவர் தம் கலை வெளிப்பாடுகளின் மூலம் அனைத்து மதரீதியான கட்டுப்பெட்டித்தனங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு சுதந்திரமான கலைஞன் என்பதை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தியிருந்தால் எல்லா ஜனநாயகவாதிகளும் அவர் பக்கம் நின்றிருக்க முடியும். தாம் சார்ந்திருக்கின்ற மதம் விதிக்கின்ற அடிப்படையான சில கலை வெளிப்பாட்டு வரையறைகளை மீறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்ற அவர் பிற மதங்களைப் பொருத்தவரை இங்கு நிலவுகின்ற சுதந்திர உணர்வைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை என்பதுதான் அதில் எழுகின்ற கேள்வி.
உதாரணமாக, முகம்மது நபிக்கு எவ்வித உருவ அடையாளமும் கற்பிக்கக்கூடாது என்பது இஸ்லாம் விதிக்கின்ற கட்டுப்பாடு. அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் ஹுசைன். ஒரு சுதந்திரக் கலைஞனின் குரல்வளையை நெறிக்கின்ற, கை விரல்களை முறிக்கின்ற கட்டுப்பாடல்லவா இது என்று அவர் கேட்டிருக்க வேண்டுமே? இந்தக் கேள்வியை அவர் இதுவரை கேட்டதுண்டா?
எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், எங்கள் பெண்கள் உடலை முழுவதும் மறைக்கும் உடையுடன்தான் இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் மிகுந்த கண்ணியத்துடன்தான் பழக வேண்டும். ஏனென்றால், நாங்கள் கட்டுப்பெட்டியானவர்கள். உங்கள் வீட்டுக்கு நான் வந்தால், உங்கள் வீட்டுப் பெண்கள் கவர்ச்சியாகவே உடை உடுத்தவேண்டும். நான் அவர்களுடன் மிக இயல்பாகவும் உரிமையுடனும் பழகுவேன், அவர்களுடைய ஆடையைப் பிடித்து இழுப்பேன், தொட்டுப் பேசுவேன். ஏனென்றால், நீங்கள் தாராள மனப்பான்மை உடையவர்கள் என்று வாதிடுவது போன்றதுதான் இது; தமிழ்நாட்டுத் தெக்கத்திக் கட்டப் பஞ்சாயத்துகளில் பேசப்படும் வாதம் போன்றதாகும்.
ஹுசைனின் கள்ள மௌனத்துடன் ஒப்பிட்டால் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விமர்சனக் குரல், அதில் தொனிக்கின்ற படைப்பிலக்கியவாதியின் சுதந்திர மனப்பான்மை எவ்வளவு உயர்வானது, போற்றத்தக்கது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். திராவிட இயக்கத்தவரால் கவிக்கோ என்று பட்டம் சூட்டப்பட்ட அப்துல் ரகுமான் சற்றொப்ப 15 ஆண்டுகளுக்கு முன்பு தஸ்லிமா நஸ்ரினைப் பற்றிக் குமுதம் இதழில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். விருப்பப்பட்ட ஆணுடன் விரும்பியபடி திருமண அங்கீகாரம் இன்றிச் சேர்ந்து வாழ உரிமை கோருகின்ற ஒழுக்கம் கெட்ட பெண் அவர் என்றெல்லாம் பழித்துப் பேசியிருந்தார். முத்தாய்ப்பாக ஒன்று கூறியிருந்தார். அதுதான் இதில் கவனிக்கத்தக்கது. தஸ்லிமா குரானை மட்டுமல்ல, கீதையையும்தான் விமர்சித்திருக்கிறார் என்று இந்துத்துவவாதிகளையும் தம்முடைய அணிக்கு வலைவீசி இழுக்கின்ற விதத்தில் சில சொற்களைப் பெய்திருந்தார்.
தஸ்லிமா நஸ்ரின் கீதையை விமர்சனம் செய்ய அனைத்து உரிமைகளும் கொண்ட ஒருவர். கீதையை விமர்சனம் செய்வதற்கு எந்தப் ஃபத்வாவோ, தடையோ யாராலும் விதிக்கப்படவில்லை. தஸ்லிமா நஸ்ரின் குரானை விட்டுவிட்டு கீதையை மட்டும் விமர்சித்திருந்தால்தான் அது ஐயத்தைத் தோற்றுவிக்க நியாயமுண்டு. இந்து மத – இந்தியச் சிந்தனை மரபில் பகவத் கீதை, திருக்குறள் போன்ற பல உன்னதமான இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும்கூட இன்றைய ஜனநாயக சமதர்மத்திற்கும், ஆண் – பெண் சமத்துவத்திற்கும் முரணான கருத்துகள் இடம்பெற்றிருக்க முடியும். அவற்றை விமர்சனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதுதான் என் கருத்து. விமர்சனம் என்பதே இழிவுபடுத்தும் முயற்சி என்று கூக்குரலிடுவதும் ஒரு தாலிபானிய மனநிலையின் வெளிப்பாடுதான்.
மற்றபடி, ஜெயமோகன் சொன்னதில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.
ஆதாரபூர்வமான வரலாற்றுத் திரைப்படம் ஒன்றைத் தமிழில் எடுப்பது சாத்தியம்தானா?
வரலாற்றைப் பொருத்தவரை ஆய்வு என்பதை இரண்டு வித அணுகுமுறைகளில் மேற்கொள்ள முடியும். ஒன்று, சட்டதிட்டமான பகுப்பாய்வு முறை (analytical approach); மற்றொன்று, உள்ளுணர்வு சார்ந்து தொகுத்துப் புரிந்துகொள்ளும் முறை (intuitive understanding; holistic) இவ்விரண்டு அணுகுமுறைக்கும் அதனதற்குரிய பலமும் பலவீனங்களும் உண்டு. இவை இணைந்து ஒரு முழுமையான படைப்பாற்றலுடன்கூடிய வரலாற்றுச் சித்திரிப்பு என்பது சிரமசாத்தியமே. அப்படிச் சாத்தியமானாலும்கூட வரலாற்றுக்கு நாங்களே சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடும் ஒரு குழுவினுடைய தாக்குதலை எதிர்கொள்ள நேரலாம்.
ஆனாலும், மனித முயற்சி என்பது முடிவற்றது. எனவே, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. வரலாற்றை வாசிப்பது என்பதும் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது என்பதும் மனக் கிளர்ச்சியூட்டக்கூடிய அனுபவங்களாகும். நம்முடைய இளமைப் பருவத்தில் நிகழந்த நிகழ்வுகள் தொடர்பான நிழற்படங்களை நாம் பார்த்து ரசிப்பது போன்றதுதான் இது.
இன்னமும் பின்னோக்கிப் பழைய காலத்திற்குப் போகும்போது, அத்தகைய மனக்காட்சி என்பது ஒரு மாயப் புகைப்படலம் சூழ்ந்த தோற்றமாக இருப்பதால் அதன் கவர்ச்சி மிக அதிகம். புகைப்படலத்தைத் துடைத்து உண்மை நிலையைத் துலக்கமடையச் செய்யும் முயற்சியிலும் மர்மத்திலிருந்து உண்மையைக் கண்டறியும் மனக்கிளர்ச்சி (joy of discovery) உள்ளது. எனவே, இத்தகைய வரலாற்றுச் சித்திரிப்பு முயற்சிகளுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன்.
3 Replies to “ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்”
Comments are closed.