தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இடைச்செருகல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை நீக்கி, புதிய உரையெழுத அறிஞர்கள் முன்வரவேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், நான்கு வகைச் சாதியமைப்பு, மனு வர்ணாஸ்ரம முறைகள் தொல்காப்பிய உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன என்று சிலர் சொல்வது சரியா?

இவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் புகுத்தியதாகச் சொன்னால் அது அறியாமை; தொல்காப்பியத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்றால் அது உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை; இதற்கும் அப்பால் தொல்காப்பியன் என்ற பிராம்மணன் தங்களுடைய நால் வர்ண முறையை தமிழர்களிடத்தில் புகுத்த முயற்சிசெய்து தோல்வியுற்றதாக ’தமிழக வரலாற்றை’ முதன்முதலில் எழுதிய கனகசபைப் பிள்ளை கூறியிருக்கிறார். இம்மூன்று கருத்துகளுமே விஷமத்தனமான, வேறோர் உள்நோக்கத்துடன் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்பாகும்.

இம்மூன்று கருத்துகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது ஓர் அபத்தம்; அதனால் இதை விடுத்துவிடுவோம்.

தொல்காப்பியத்தில் இவை இடைச்செருகல்கள் என்போர் மரபியல் என்ற அதிகாரமே இடைச்செருகல்தான் என்கிறார்கள். ஏனெனில், மரபியலில்தான் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற வர்ண அமைப்பு வரிசை இடம்பெறுகிறது. அதில் வைசியன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற நூற்பா “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்பதாகும். மரபியல் முழுவதுமே இடைச்செருகல் என்று சொல்பவர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற திணையடிப்படையிலான சமூக அமைப்புதான் தமிழர்களுக்குரியது என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதை ஒப்பிட்டு மரபியல் முழுவதுமே செயற்கையான ஒரு பிரிவினையைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வகைப்பாடு மட்டுமே தமிழகத்தில் நிலவிற்றா? வேறு வகைப்பாடுகள் ஏதும் இருந்ததில்லையா? தன்மை அடிப்படையில் வெவ்வேறு விதமாக மக்கள் தொகுதியை வகைப்படுத்த முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கும் வருவாய்த் துறையினர் ஊர்களை வகைப்படுத்துவது ஓர் அணுகுமுறை; அதாவது ஒரு வருவாய்க் கிராமம் என்பது விளை நிலங்கள் சார்ந்து ஆயக்கட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள வகைப்பாடாகும். உள்ளாட்சித் துறை வகைப்பாடு என்பது வேறு அணுகுமுறை; காவல்துறை தனது சரகங்களைப் பிரித்து வகைப்படுத்துவது என்பது வேறோர் அணுகுமுறை. இவற்றுக்கெல்லாம் வெவ்வேறு அளவுகோல்கள் உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களையே எடுத்துக்கொள்வோம். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது; ஆனால், திருக்குறளோ அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைச் சொல்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் பாடுபொருள் வேறுபாடுகள். இத்தகைய பாடுபொருள் வேறுபாட்டையொட்டியே வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாடுபொருளுக்காகவே வகைப்பாடேயன்றி வகைப்பாட்டுக்காகப் பாடுபொருள் அல்ல. தொல்காப்பிய அகத்திணையியல் புறத்திணையியல் ஆகியவற்றில் காதலும் வீரமும் சொல்லப்படுகின்றன. மற்ற பல விவரங்களுக்கு விளக்கமளிக்க வேறு வகை அளவுகோல்கள் தேவை; அதன் அடிப்படையில் அவை வேறுவிதத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, போர் நடக்கும்போது அரசர்களுக்கிடையே ஒரு தூதுவன் சமாதானம் பேசச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அவனை அகத்திணையியலிலோ அல்லது புறத்திணையியலிலோ சொல்லப்படும் வகைப்பாட்டுக்குள் அடக்கி, அவனை ஆயனாகவோ, குறவனாகவோ, களமனாகவோ, நுளையனாகவோ, எயினனாகவோ சித்திரித்துவிட முடியுமா? அவனை ஒரு தூதுவனாகத்தான் சித்திரிக்க வேண்டும். ஏன், ஒரு அமைச்சரைப் பாடுபொருளாகக் கொண்டு விவரிக்க நேர்கையில் அகத்திணையியலோ அல்லது புறத்திணையியலோ நமக்குப் பயன்படாது. அதை விளங்கிக் கொள்ள நமக்கு மரபியல்தான் தேவை.

அகநானூற்றில் ஒரு பாடலைப் பாருங்கள்:

இவனே நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
யானே மீனெறி பரதவர் மகளே

– இந்த வர்ணனையில் இடம் பெருகிற தலைவனை அகத்திணையியல் புறத்திணையியல் வகைப்பாடுகளுக்குள் அடக்கி திணை சார்ந்த மக்கள் தொகுப்பின் பெயரைக்கொண்டு மட்டும் அடையாளங்காண இயலுமா? மரபியலில் தேரைப் பயன்படுத்துகிற உரிமை அரசர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாகச் சொல்லப்பட்டிருப்பதனால் இத்தலைவனை அரசன் என நாம் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு; அதேநேரம் நியமமூதூர் என்று இருப்பதனால் அத்தலைவன் ஒரு வைசியனாகவும் இருக்கமுடியும். மரபியலிலேயே தேர், ‘மன்பெருமரபின்’ ஏனோர்க்குமுரிய என்று சொல்லப்பட்டுள்ளதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு வைசியனும் தேரில் செல்லமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு மரபியலே பயன்படும். இப்படியான பயன்பாடுடைய மரபியலை இடைச்செருகல் என்று கூறுவது அபத்தமான ஒரு கருத்தாகும்.

அகத்திணையியலில்

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

புறத்திணையியலில்

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

கற்பியலில்

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே
’ என்றும்

பொருளியலில்

பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இளம்பூரணர் தொடங்கி பழைய உரையாசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் விளக்கமளித்துள்ளனர். அவர்களெல்லாம் நம் காலத்திற்குச் சற்றொப்ப 700 ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்தவர்கள். இப்போது இருப்பதைவிட தமிழ்ச் சமூகம் அப்போது பழைய இலக்கியங்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. எனவே நாம் தற்கால சமூக நிலைமையைக் கருத்தில் கொண்டு இவற்றை இடைச்செருகல் என்பது அவ்வுரையாசிரியர்களின் புலமையைக் கேள்விக்குள்ளாக்குகிற செயலாகும்.

மரபியல் இடைச்செருகல் என்றால் இவற்றுக்கெல்லாம் விளக்கமளிக்க முடியாமல் போய்விடும். எனவேதான் கனகசபைப் பிள்ளை, பின்வருமாறு கூறுகிறார்: “நான் விவரித்துக்கொண்டிருக்கும் காலத்திற்கு, குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்குள் குடியேறத்தொடங்கிய பார்ப்பனர்கள், தங்களின் சாதி முறையை தமிழர்களின் தலையில் கட்ட முற்பட்டனர். தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரால் கி. மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தற்போதும் வழக்கில் உள்ள முற்பட்ட தமிழ் இலக்கண நூலில், அறிவர் அல்லது ‘துறவி’கள் பற்றி அடிக்கடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து அவர் விவரிக்கின்ற அத்தியாயத்தில், நூலாசிரியர் அறிவர் பற்றி எதுவும் குறிப்பிடுவதை விட்டுவிட்டு, புனித நூல் (பூணூல்) அணிந்த பார்ப்பனரை முதல் சாதியாக வைக்கிறார். வீரர்கள் என்னாது, ஏதோ சேர, சோழ பாண்டியன் என்று மூன்றே அரசர்கள் ஒரு சாதியாகிவிட முடியும் என்பது போல, மிகுந்த எச்சரிக்கையுடன், அரசர்கள் எனப் புனித சாதியாகச் சொல்கிறார்; வணிகத்தைக் கொண்டு வாழ்ந்த அனைவரையும் மூன்றாவது சாதியாகச் சொல்கிறார். அரசர்களோ அல்லது வணிகர்களோ புனித நூல் அணிந்திருந்தார்களா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளர்களை மட்டும் தனிமைப்படுத்தி, நிலத்தை உழுவது தவிர அவர்களுக்கு ஒரு தொழிலுமில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களை சூத்திரர்களாகக் கருதவேண்டும் என்றும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கெளரவிக்கவேண்டும் என்றும் மறைமுகமாக, உட்கிடக்கையாகச் சுட்டுகிறார். இதுதான் தங்களின் சாதி அமைப்புக்குள் தமிழர்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லாது போயிற்று. மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ, இன்றைக்கு வரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்.” (The Tamils, Eighteen Hundred Years Ago, V.Kanakasabhai, Pub: The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd. 2nd edn. Sep., 1956, p.116.)

தொல்காப்பியர் ஒரு காவ்ய கோத்ர பிராம்மணர் என்று சொல்லக்கூடிய ஒரு மரபு உண்டு. காப்பியத் தொல்குடி [வரந்தரு காதை, வஞ்சிக் காண்டம் 82] என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் ஒரு பிராம்மணர் என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் மக்களிடத்தில் “பார்ப்பான் தமிழும் வேளாளன் க்ரந்தமும் விழ விழலே” [ரெவரண்ட் ஜெ.பி. ராட்லர் தமிழ் இங்லிஷ் அகராதி] என்றொரு பழமொழி வழங்கியுள்ளது. இதன் பொருளாக ராட்லர் குறிப்பிடுவது ”தொல்காப்பியன் என்ற பிராம்மணன் செய்த தமிழிலக்கணமும் அமரசிம்மன் என்ற சூத்திரன் செய்த நாமலிங்கானுசாசனம் என்கிற சம்ஸ்கிருத நிகண்டும் இல்லையெனில் தமிழ் மொழியும் வட மொழியுமே விழலுக்கிறைத்த நீராகப் போயிருக்கும்” என்பதாகும். அதே நேரத்தில் தொல்காப்பியர் சமணராக இருக்கலாம் என்பது வையாபுரிப் பிளளை போன்ற அறிஞர்களின் கருத்து. தொல்காப்பியர் சமணரோ பிராம்மணரோ, அவர் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கை முறைகளையும் வரையறைகளையும் இலக்கணமாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய அமைப்பு இருந்ததற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லாதைப்போல சில ‘அறிஞர்கள்’ திரித்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் மரபியல் இடைச்செருகல் என்று கொண்டு அகத்திணையியலும் புறத்திணையியலும்தான் தமிழர் வாழ்வெனில், சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரம் இவற்றுடன் முரண்படுவதாயிருக்கும்.

மதுரைக் காஞ்சியில்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்
’ [489-92] என்றும்,  அதேபோல,

நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீ இயுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
’ [497-499] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடலிலுள்ள அறங்கூறு அவைய உறுப்பினர்களும் காவிதி மாக்களும் அரசமைப்பு என்ற நிறுவனத்தையொட்டி உருவாகி வளர்ந்த வர்க்கத்தவர்கள். இவர்கள் திணை மக்களிடத்திலிருந்தே வந்தவர்கள்தான் என்றாலும் அவர்களின் திணைப் பெயரைத்தான் சொல்லவேண்டுமெனில் அவர்களின் பதவியை நாம் புரிந்துகொள்ள இயலாமல் போகும். எனவே அரசதிகாரம் சார்ந்து நாம் அவர்களை அறங்கூறு அவையத்தார் என்றும் காவிதி மாக்கள் என்றும்தான் அடையாளம் காட்ட முடியும். இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள மரபியல்தான் நமக்கு உதவுகிறது.

புறநானூறு குறிப்பிடும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்பவர்கள் முல்லைத் திணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு அவர்களை முல்லைக்குரியவர்களாக மட்டுமே கொண்டால், மருத நிலத்தில் நாம் காண்கிற பாணர்களை எப்படி விளக்கமுடியும். இவர்கள் தலை மககளுக்குப் பணி மக்களாக பணிபுரிந்த நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது. அப்படியானால் இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்ச் சமூக வளர்நிலையையொட்டி உருவாயிற்றா அல்லது வர்ணாஸ்ரம அமைப்பால் புகுத்தப்பட்டதா? புகுத்தப்பட்டது என்று சொன்னால், தமிழ்ச் சமூக அமைப்பே வர்ணாஸ்ரம அமைப்பால் உருவாயிற்று என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். சங்க இலக்கியத் தலைமக்களெல்லாம் வர்ணாஸ்ரமத்தினால் உருவானவர்கள் என்றாகிவிடும்.

தொல்காப்பிய அகத்திணையியலில் அன்பின் ஐந்திணை என்பது தலைமக்களுக்கு மட்டுமே உரியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. அடியோர், வினைவலர் ஆகிய பிரிவினர்களின் காதலை கைக்கிளை, பெருந்திணையில்தான் பாட வேண்டும் என்று தொல்காப்பியர் தெளிவாகக் கூறியுள்ளார். “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்.” மௌரியர்கள் ஆட்சியில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை தாச, ப்ருத்ய என்ற இரு வகை அடிமைகளாகப் பணியமர்த்தினர் என்று தெரியவருகிறது. தாசர் என்பவர்கள் முழுமையான அடிமைகள். ப்ருத்யர் என்போர் நிபுணத்துவம் மிக்க பணியாளர்களாவர். அவர்களும் அடிமைகள் தானெனினும் அடிமைகளைவிடச் சற்றே மேம்பட்டவர்கள். அடியோர், வினைவலர் என்ற தொல்காப்பிய வகைப்பாடும் அத்தகையதே. சங்க கால அரசர்களிடையே போர்களே நடந்ததில்லை; போர்களில் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை; அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டோர் அடியோர்களாகவோ வினை வலர்களாகவோ பணியமர்த்தப்படவில்லை; அடியோர்களும் வினைவலர்களும் உருவாகவும் போர்கள் நிகழவும் காரணம் வர்ணாஸ்ரமமே என்று கொண்டால்தான் தொல்காப்பிய நூற்பாவுக்கு வேறுவிதமாக விளக்கம் கூறமுடியும்.

சோழர்கள் சூரிய குலம் என்றும் பாண்டியர்களும் சேரர்களும் சந்திர குலம் என்றும் உரிமை கொண்டாடும் மரபு மிகப் பழமையானது. சூரிய குலத்தவர்களும் சந்திர குலத்தவர்களும்தாம் க்ஷத்ரியர்கள். சந்திர குலத்தின் கிளைக் குலமாகிய யது குலத்தவர்களே வேளிர்கள். “நீயே வடபான் முனிவன் தடவினுட் டோன்றி” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல் [201] இதற்குச் சான்று. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் மாண்ட வீரர்கள் தன் முன்னோரென்பதால் பெருஞ்சோற்றுப் பிண்டம் படைத்தான் என்பது புறநானூறு குறிப்பிடுகிற ஒரு செய்தியாகும். பாண்டவர் கௌரவர்களோடு தன்னை இணைத்து இனம் காட்டிக்கொள்வதற்காக ஆரிய பிராம்மணர் சொல்லிக்கொடுத்த பொய்யை ஏற்றுப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இச்சடங்கைச் செய்தான் என்று சொல்வது நம்மை நாமே இகழ்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

இந்திய நாடு முழுவதும் அரச குலத்தவரிடையே மணவுறவு இருந்துள்ளது. இது ஒரு யதார்த்தம். மொழியியல் அடிப்படையில் வடமொழியை இந்தோ ஐரோப்பிய மொழியென்றும் தமிழை திராவிட மொழியென்றும் சொல்வதனாலேயே இவ்விரு மொழி பேசிய மக்கள் தொகுதிக்கும் பரஸ்பர உறவு இருந்ததில்லை; ஒன்று மற்றதன் மீது தனது பண்பாட்டைத் திணித்தது என்று கொள்வதெல்லாம் மிகப்பெரிய அபத்தம் என்பதை ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்றாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். உதாரணமாக, நாம் மேலே சொன்ன ‘காவிதி’ என்ற சொல்லாட்சி இலங்கைக் கல்வெட்டுகளில் கபதி (அ) கபிதி என்றும், பாலி மொழியில் கஹபதி என்றும், வடமொழியில் கிரகபதி என்றும் வழங்கி வந்துள்ளது. இப்படிப் பல சொற்கள் இந்திய அளவிலான பின்புலத்தைக் கொண்டவை. இவை குறித்து மொழியியல் அறிஞர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.

சங்கப் புலவரான கபிலர் ஓர் அந்தணர். அவர் பாரிவேள் என்ற சிற்றரசனைப் பாடி பரிசில் பெற்றுள்ளார். ஆனால் எந்த வேளிரும் வேந்தரும் பிறரைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்றதாக ஒரு சான்றுமில்லை. இது தொல்காப்பியர் கூறும் மரபுடன் எங்ஙனம் பொருந்துகிறது என்று பார்ப்போம்.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்

– என்ற தொல்காப்பிய வரிகளுக்கு இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள், அறுதொழில் செய்யும் அந்தணர்கள் என்றும் ஐந்தொழில் புரியும் அரசர்கள் என்றும் உரை கூறுகின்றனர். திருவள்ளுவரும்கூட அந்தணர்களை அறுதொழிலோர் என்கிறார். அறுதொழில்களாவன, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன. அரசர்களின் ஐந்தொழில்களாவன ‘ஏற்றல்’ என்பது தவிர்த்த மேற்படி ஐந்துமாகும். இது மேற்குறித்த தொல்காப்பிய மரபுடன் பொருந்தியிருப்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களுடைய கோட்பாடுகளுக்கு இசைவாக இல்லாதவற்றை இடைச்செருகல் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவினருமே தங்களுக்கு உடன்பாடாக இல்லாதவற்றை நீக்கவேண்டும் என்று கூறத் தொடங்கினால் ஒட்டுமொத்தமுமே இடைச்செருகல் என்றாகிவிடும்.

முக்கியமான ஒரு செய்தி. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை யாருடைய அங்கீகரத்திற்காகச் சமர்ப்பித்தார் என்பது பனம்பரனாரின் பாயிரத்தில் பதிவாகியுள்ளது. ஆசான் மரபினராகிய அதங்கோட்டு ஆசான் என்பவர்தான் தொல்காப்பியரைக் கேள்விகள்மூலம் சோதித்து இறுதியில் ஒப்புதல் வழங்கிய பெருமகனாவார். குமரி மாவட்ட அதங்கோட்டில் உள்ள சான்றோர் குலத்தவருள் ஒரு பிரிவினர் தங்களின் முன்னோரான அதங்கோட்டு ஆசானுக்கு இப்போதும் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். அவர்கள் மண்ணின் மரபுகளை அறியாதவர்கள் என்றோ, வர்ணாஸ்ரம மாயையில் சிக்கி இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றோ சொல்வது தமிழக வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிற ஒரு செயலாகும்.

கடைசியாக ஒரு வினா. ரசிகமணி டி.கே.சி. கம்ப ராமாயணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பாடல்களை, அவற்றில் கம்பருடைய முத்திரை இல்லை என்று சொல்லி நீக்கிப் பதிப்பிக்க முயன்றபோது திராவிட இயக்கப் பகுத்தறிவு முகாமைச் சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் ”கம்பனில் கைவைக்க இந்தக் கொம்பன் யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதுபோலத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களின் தகுதி என்ன? தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழாய்வில் என்னவும் செய்ய நினைப்பது ஓர் அராஜகம்.

One Reply to “தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?”

Comments are closed.