அரியக்குடி – கலைஞர்களைக் கவர்ந்த கலைஞர்

img430அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்(1890-1967) 20-ஆம் நூற்றாண்டில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் தலையெழுத்தை நிர்ணயித்தவர்களில் ஒருவர். ‘வித்வான்களின் விருப்பத்துக்கேற்ப இசை’ என்ற நிலையிலிருந்து ‘ரசிகர்களின் ரசனைக்கேற்ற இசை’ என்ற புதிய பாதையை வகுத்தவர்களில் ஒருவர். இவருடைய சிஷ்ய பரம்பரையும் மிகச்சிறப்பான ஒன்று. வெகுஜனங்களின் மனங்களைத் தன் இசையாற்றலால் கொள்ளை கொண்டதைப் போலவே, பிற கர்நாடக சங்கீத மேதைகளின் மனதையும் கொள்ளை கொண்டவராக இருந்தார் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். ஐயங்காரைக் குறித்து வியப்போடு பேசாத இசைக்கலைஞர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம். பாலக்காடு மணி ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர், G.N.பாலசுப்ரமணியம் இந்த மூவரும் வெவ்வேறு சமயங்களில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரைக் குறித்து எழுதியவற்றை சொல்வனம் வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் – ஆசிரியர் குழு.

பாலக்காடு மணி ஐயர்

பூர்ணத்துவம் பெற்ற ஒரு வித்வானைப்பற்றி பேசுவதோ எழுதுவதோ பூர்ணத்துவதை அடையாது. ஆகையால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை பாடிவரும் ஸ்ரீ ஐயங்கார் அவர்களைப் பற்றி எழுதுவதோ பேசுவதோ முழுமையடையாது. இதே காரணத்தால் ஐயங்கார் அவர்களைப் பற்றி தைரியமாக நிறையச் சொல்லலாம். ஏனெனில் அவரது சங்கீதத்தை எவ்வளவு ஸ்தோத்திரம் செய்தாலும் உண்மைக்கு பங்கம் வராது. உண்மைக்கு கைங்கரியம் செய்வதாகவே இருக்கும்.

palghat_maniஸ்ரீ ஐயங்கார் அவர்களுடைய சங்கீதத்தின் முக்கிய அம்சம் அளவு;

அதாவது இந்த அம்சம் இப்படி இருக்கவேண்டும் என்று துலாக்கோல் பிடித்தாற்போல் நிர்ணயம் செய்து அதனை வழுவாது பின்பற்றுவது. இந்த அளவு என்பது அவரது சங்கீதத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் எப்படிப்பிரித்துப் பார்த்தாலும் அதிகப்படாமலும் குறைவுபடாமலும் கச்சிதமாகவும் துல்லியமாகவும் இருக்கும். முதலாவது நாதத்தை வெளிப்படுத்தும் முறையில் ‘சவுண்டு கொடுப்பது என்கிறார்களே அதில் சப்தத்துக்கு எவ்வளவு அழுத்தம் கொடுப்பது’ என்பதில் ஓர் அளவு படுத்தப்பட்ட ஒழுங்கை அவரது இசையில் கேட்கிறோம். இரண்டாவது சாகித்யம், ஸ்வரம் முதலியவைகளைப் பாடும்போது அதிக அழுத்தம் இல்லாமலும் அதிகக் குழைவு இல்லாமலும் அளவு சரியாய் இருக்கம்படி பாடுவது.

நாதத்திலும் உச்சரிப்பிலும் அளவிருப்பது போலவே மூன்றாவதாக தாளத்திலும் ஓர் அளவு. சங்கீதத்துக்கு முக்கியமான அம்சமாயிருக்கும் மத்திம கால நடையில் இந்த அளவைப் பின்பற்றுகிறார் ஸ்ரீ ஐயங்கார். ’ரெண்டும் கெட்டான் காலப்பிரமாணம்’ என்றொரு பிரமாணம் உண்டு. இதில் என்ன சங்கடமென்றால், மேற்காலம் சரியாகப் பேசுவது கஷ்டம். கீழ்க்காலத்தில் நிலைக்காமலும், நிறைவு படாமலும் காலப்பிரமாணம் நிற்காமல் ஓடிப்போய்விடும். வாய்ப்பாட்டானாலும் சரி, வாத்தியங்களானாலும் சரி, இந்த இரண்டும் கெட்டான் காலப்பிரமாணத்தில் சரளமாகவும், சிரமமில்லாமலும் விளையாட்டுப்போல் பாடவோ, வாசிக்கவோ திறனிருந்தாலும் சாரீரமோ, வாத்தியமோ வித்துவானுக்கு ஸ்வாதீனப்பட்டதாகச் சொல்லலாம். இந்த இரண்டும் கெட்டான் காலப்பிரமாணத்தை ஸ்ரீ ஐயங்கார்வாள் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தக் காலப்பிரமாணத்தில் உள்ள உருப்படிகளை அவர் பாடும்பொழுது அவை தனிச்சிறப்புடன் விளங்கும். இவ்வளவு காலமாகப் பாடும் ஸ்ரீ ஐயங்கார் இப்பேர்ப்பட்ட மேதையாக இருக்கும் ஸ்ரீ ஐயங்கார், தமது இசையில் எவ்வளவோ புதுமைகளை சேர்க்கலாம் என்று சிலர் சொல்லி நான் கேட்டதுண்டு. அப்படிச் சொல்பவர்கள் மேலெழுந்த வாரியாகத்தான் அவரது பாட்டை கவனித்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தகுந்த பதில் சொல்ல முடியும். அதாவது அவருக்குப் புதிதாக பல விஷயங்கள் தோன்றவே செய்கின்றன. ஆனால் அப்படித்தோன்றும்போதே, அவை நீண்டகாலமாக அவரிடம் ஊறியுள்ள பழமை அம்சம்போல அவ்வளவு பக்குவத்துடன் இருக்கும். அதாவது நூதன அழகுகளும் புராதனப்பொலிவுடன் விளங்கும். மேலும் நாத வித்தையில் புதிது புதிதாகச் செய்வதற்கு விசேஷமாக ஒன்றும் இல்லை. செய்ததையே திரும்பத் திரும்ப தபஸ் பண்ணுவது போல அருள் பெறுவதுதான் முக்கியம் என்பது என் அபிப்பராயம்.

ஸ்ரீ ஐயங்கார் அவர்கள் பிராசீனமான மகாவித்வான்களின் வாய்ப்பாட்டு வாத்திய இசை முதலியவற்றை கர்ண பரம்பரையாகக் கேட்டு அவைகளில் இருக்கும் நல்ல அம்சங்களை நிச்சயம் செய்து ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவர். இப்பொழுது மாறிக்கொண்டு வரும் நவீனம் அவரது சங்கீதத்தைக் கொஞ்சம் கூட கெடுக்கவோ, கலப்படமாக்கவோ முடியாது. ஐயங்கார் அவர்களுக்குப் பாடுவது என்றால் விசேஷ சிரமம் கிடையாது. பேசுவதற்கு எவ்வளவு சிரமமோ அவ்வளவு சிரமம்தான் பாடுவதற்கும். ஆகையால் பேச்சிருக்கும்வரை அவர் பாடிக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

(நன்றி: தேதி தெரியாத பழைய கல்கியில் படித்தது).

முசிறி சுப்ரமணிய ஐயர்

240ee26a-a754-11dd-8f29-000b5dabf6131914-ஆம் ஆண்டு திருவையாற்றில் நிகழ்ந்த ஸ்ரீ தியாகபிரும்ம உற்சவத்தில்தான் நான் முதன்முதலில் ஐயங்கார் அவர்களுடைய கச்சேரியைக்கேட்டேன். அன்று முதல் இன்று வரை எனக்கு அந்தப் பாட்டில் மிக விருப்பம். இசைவானில் 50 ஆண்டுகள் மங்காத ஒளிவீசும் சுடராக விளங்கிவரும் ஸ்ரீ ஐயங்கார் அவர்களின் மிகச்சிறப்பான அம்சம் அவரது பங்கீடு (proportion). ராகமாயினும் நிரவல் ஸ்வரமாயினும் எல்லாம் அளவோடு அதது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும். அவர் ஒலி கொடுக்கும் விதம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. உயிரெழுத்துக்களைச் சரியானபடி உச்சரிப்பது இசையில் மிகவும் இன்றியமையாதது. தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழ்ச்சொற்களை இவர் சொல்வதே ஒரு தனி அழகு. குற்றமுடைய ஒலி இவருடைய வாயில் தோன்றாது. வாயைத்திறப்பது, இதழ்களைக் குவிப்பது முதலிய யாவும் அளவுக்குட்பட்டே இருக்கும். இது அவருக்கு இயற்கையில் அமைந்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த அரிய பண்பை அவர் விருத்தம், சுலோகம் பாடும்போது நன்றாக உணரலாம். ராகம் சொற்களின் மீதே ஊர்ந்து வருவது போல் விருத்தம் பாடுவது சம்பிரதாயமான முறை. அம்முறை வழுவாது ஐயங்கார் விருத்தம் பாடுவது குறிப்பிடத்தக்கது. எந்தெந்தக் கீர்த்தனையை எந்தெந்தக் காலப்பிரமாணத்தில் பாடவேண்டும் என்பதை ஸ்ரீ ஐயங்கார் அவர்களுடைய பாட்டைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

செளக்கம், மத்யமம், துரிதம் ஆகிய மூன்று காலங்களில் அதனதன் காலப்பிரமாணம் வழங்குவது, இசைப்பது ஐயங்கார் அவர்களின் சிறப்பு. ஐயங்கார் குருவாகிய பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் அவர்களுக்கு சம்பிரதாயமான பாடாந்திரம் ஏராளம். அவரது ஆப்த சிஷ்யரான நமது ஐயங்கார் அவர்களுக்கு அச்செல்வம் முழுவதும் கிடைத்துள்ளது. உருப்படிகளை மெருகிட்டு வழங்குவார். எந்தரோ மகானுபாவலு, ஸ்ரீ சுப்ரமண்யாய, அம்ப நன்னு புரோவு போன்ற பல பாடல்கள் ஐயங்கார் அவர்கள் பாடும்போது தனிச்சுவையோடு இலங்குகின்றன. யாருக்கும் புரியாத ராகங்களை ஐயங்கார் அவர்கள் தொடுவதில்லை. எல்லோருக்கும் நன்கு தெரிந்த ராகங்களையே தேர்ந்தெடுத்துப் பாடுவார். எல்லாவற்றிலும் ராகத்தின் உருவம் எடுத்த எடுப்பில் விளங்கும்படி பாடுவது இவருடைய முறை. சபையினர் நன்கு கேட்கவேண்டும் என்பதை மனதில் கொண்டு, சபையின் குறிப்பறிந்து பாடுவதில் ஐயங்கார் நிகரற்றவர். சாதுர்யமாகவும், ரசமாகவும் பேசுவது இவரது தனிச்சிறப்பு. சரசியான இவர் யாரையும் இழித்துப் பேசமாட்டார். இவரது கச்சேரி முடிந்தவுடன் யாரவது புகழ்ந்து பேசினால் ‘குரு கடாட்சம்’ என்று சொல்லி நிறுத்தி விடுவார்.

எழுபதுக்கும் மேற்பட்ட இந்த முதிய வயதிலும் ஐயங்கார் மிகவும் உற்சாகமாகவும் இளமையோடும் பாடுவதன் ரகசியம் இவர் இடைவிடாது சங்கீதத்தை அனுசந்தானம் செய்து வருவதே ஆகும். நினைப்பதும் சங்கீதம், வாயைத்திறந்தால் சங்கீதம் என்பது இவர் விஷயத்தில் முற்றிலும் பொருந்தும். லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள ஐயங்கார் அவர்களின் சதாபிஷேகம் பாரதத்தலைநகரில் வட இந்திய, தென் இந்திய வித்வான்கள் யாவரும் ஒன்று கூடி சிறந்த முறையில் நடத்த வேண்டும். அந்த நன்னாளை ரசிகர்கள் யாவரும், ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

(1995 இசை மலர், தினமணி)

அரியக்குடி கச்சேரி
அரியக்குடி கச்சேரி

G.N.பாலசுப்ரமணியம்

ஸங்கீத உலகில் ஸ்ரீ அய்யங்கார் அவர்கள் விசேஷ கௌரவத்துடன் விளங்குகிறார். அவருடைய ஸங்கீதத்தில் பழமையும் புதுமையும் ரஞ்சகமாகக் கலந்து, எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.

கர்நாடக ஸங்கீதமானது, பின்வரும் வித்வான்கள் முன்னிருந்து தொழில் செய்த பெரியவர்களிடம் பல காலம் கேட்டு, கற்று, உணர்ந்து தெரிந்து கொள்வதனால் தலைமுறை தலைமுறையாகத் தொன்று தொட்டு வருவது. இக் காலத்தில் அநேகமாக ஸங்கீத வித்வான்கள், எல்லோரும் இவரிடம் கேட்டு, கச்சேரி செய்யும் முறையும், மற்றும் உள்ள ஸங்கீத விஷயங்களும் இவரைப் பின்பற்றித் தெரிந்து கொண்டவை தான். நானும் சுமார் இருபது வருஷ காலமாக இவருடைய ஸங்கீதத்தை இடைவிடாது கேட்டு வந்திருக்கிறேன்.

ஸ்ரீ அய்யங்கார் அவர்களின் சங்கீதத்தில் முக்ய அம்சங்கள் மூன்று: (1) ஸம்பிரதாயம் (2) அழகு (3) மிதம்.

1. ஸம்பிரதாயம்

நம் முன்னோர்களில் நிறைந்த வித்வத்துடனும், நீண்ட காலம் கியாதியுடனும் இத் துறையில் அனுசரித்து வந்த முறைகளை ஸம்பிரதாயமெனச் சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ”classical style” என்று சொல்லுவார்கள். பிராசீன வித்வான்களைக் கேட்டவர்களும், அனுபவம் நிறைந்த ஞானஸ்தர்களும் ஸ்ரீ அய்யங்கார்வாளின் கச்சேரிக்குக் கூடுவதே, அவர் பழைய முறைகளை நன்கு அனுசரிக்கிறார் என்பதன் அத்தாட்சி.

பழைய முறைகளில் நவீனத்தில் இணைத்து, எல்லோரும் ரஸிக்கும் விதம் செய்யும் பெருமை அவருக்கே உரியது. முக்யமாக அவர், கச்சேரி செய்யும் முறையையே உன்னத ஸ்தானத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வர்ணத்தில் ஆரம்பித்து முறையே கீர்த்தனங்கள், ராகம், தானம், பல்லவி, சில்லறைகள் பாடுவது என்ற பழக்கம் தற்காலத்தில் இவர்தான் விசேஷமாகப் பிரபலப்படுத்தி இருக்கிறார்.

ஸ்ரீ அய்யங்கார் அவர்களுடைய சாரீரம் கர்நாடக ஸங்கீதத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அகார, கமக சுத்தமாயும், ஸ்தாயி பாவம் நிறைந்ததாயும், கன நயப் பொருத்தத்துடன் விவரமான மதியம, துரித காலப் பேச்சுடனும் அமைந்த சாரீரம்.

gnb

அநேகமாக வர்ணத்துடன் தான் கச்சேரி ஆரம்பம். உடன் ராகம், பாடப்போகும் கீர்த்தனத்திற்குப் பொருத்தமாயும், அதற்கு வேண்டிய அளவுடனும், சவுக்க மத்ய துரித காலங்களின் ஸஞ்சாரங்களுடனும், ராகக் களையுடனும் பாடி, கீர்த்தனத்தில் அதி பாவம் இல்லாமலும், ராக பாவத்துடனும், ரக்தியுள்ள இடங்களில் ஸாஹித்ய அக்ஷரங்கள் நகராமல் நிரவல் செய்தும், பொருத்த நிமித்தங்களுடன் நிரவல் செய்யும் கிரஹங்களுக்கு ஸ்வரம் பாடுவார். அதிலும் அளவுண்டு.

கீர்த்தனம் பாடும்போது ஸாஹித்யத்திற்காக ஸங்கீத அம்சங்களைக் குறைக்காமலும் ஸங்கீதத்திற்காக ஸாஹித்யத்தை விழுங்காமலும் பாடுவது இவர் ஸங்கீதத்தில் விசேஷமாய்க் காணலாம். பல தாளங்களிலும் பல கால ப்ரமாணங்களிலும், வெவ்வேறு மேளங்களில் உள்ள ராகங்களிலும், அவர் கச்சேரி மேளம் குன்றாமல் பொறுக்கி எடுத்துப் பாடுவதைக் காண்கிறோம்.

பல்லவி ராகம் பாடும் அழகு தனி. முதலில் அந்த ராகத்தின் பொது ரூபம் (outline) காட்டிப் பிறகு முறையே ஒன்றரை ஸ்தாயிகளில், ரக்தியும், ராகக்களையும் உள்ள பல இடங்களில் வின்யாஸம் செய்வார்.

இதில் முதல் இரண்டாவது, மூன்றாம் காலங்களில் பாடுவதன் அழகு, தானம் பாடும்போது வியக்தமாய்த் தெரியும். நம், தா, என்று சொல்லக்கூடிய தட்டு கார்வை மீட்டுக்கள் சேர்ந்துதான், வீணையிலிருந்து உண்டாகிய தானம், மத்யம காலத்திற்குப் பொருள். மத்யம் காலம் என்றால் பாடின ராகத்தின் காலத்திற்கு அடுத்த காலம். இந்த மத்யம் காலத்திற்கு அடுத்தது துரித காலம். இதில் சுத்த அகாரங்கள் தான் ஸ்ரீ அய்யங்கார்வாள் ஸங்கீதத்தில் காணலாம். பல்லவி பாடும்போது, ஜனங்கள் வெளியேறாமல், ருசியுடன், கிரமப்படி, நிறைந்த 2,4 களைகளில் பாடுவார். வெறும் சவுக்ககால கீர்த்தனையின் நிரவல் மாதிரி இருக்காது. பூர்ண காலப்ரமாணத்துடனும், கௌரவமானதும், அளவுடனும் கூடிய அக்ஷரங்களை அமைத்து, பல ஜாதிகள், நடைகளில், பல தாளங்களிலும் பாடிக் கேட்கிறோம். ஸ்வரம் பாடும்போது, தீர்க்கக் கார்வைகள் விசேஷமா யில்லாமலும், தாளத்தைப் போட்டுக்கொண்டு ராகம் பாடுவது போல் அல்லாமலும் இருப்பதைப் பார்க்கிறோம்.

2. அழகு

அழகு என்பது கலையின் உயிர். ஆரம்ப முதல் கடைசி வரையில் யாதொரு விதமான அஸங்கீத நாதங்களோ, முக பாவங்களோ காதுக்கோ, கண்ணுக்கோ அரஸிகமான பாவமே இல்லாமல் இவர் கச்சேரி செய்வது ஒரு விசேஷம். இதைத் தவிர ராகத்தில் ரூபமாகவும் கீர்த்தனத்தில் பாவமாகவும் ஸ்வரத்தில் ரக்தியாகவும் பொதுவில் எல்லா அம்சங்களும் ஸமயத்திற்குத் தகுந்தவாறு அளவுடன் இருப்பதுதான் இவர் ஸங்கீத அழகின் முக்கிய தத்வம். பொருத்தமில்லாமல் ஒருவித செய்கையும் இவர் கச்சேரியில் பார்க்க முடியாது.

3. மிதம்

இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் எந்த அம்சத்தையும் அளவுக்கு மீறாமல் மிதத்துடன் இவர் அனுஷ்டிப்பதே காரணம். கச்சேரியில் ராகமோ, கீர்த்தனைகளோ, ஸ்வரமோ, பல்லவியோ, சில்லறையோ இவை யனைத்தும் ஒன்றையும் குறைக்காமலும், அதிகமாக வளர்த்தாமலும் சுமார் மூன்றிலிருந்து நாலு மணி நேரத்திற்குள் வித்வான்களும், பாமர ரஸிகர்களும் ஒருங்கே அவாவுடன் அனுபவிக்கச் செய்வது இந்த மிதத்தினால் தான். சில கச்சேரிகளில் பல்லவிக்கு முன்னால் முக்ய, விஸ்தாரமாய் உள்ள ஐந்து ராகங்களிலும் கீர்த்தனைகள் பாடியும் மற்ற அம்சங்கள் எதுவும் குறைவுபடாமல் இருந்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன். கச்சேரி கேட்பவர்களுக்கு ஆரம்ப முதல் கடைசி வரை களைப்பே இருக்காது. அதாவது முதலிலிருந்து கடைசி வரை கச்சேரியில் ”Tempo” இருக்கும்.

மேற் சொல்லியவை எல்லாம் தவிர, சில விசேஷங்கள் முக்யமாக ஸ்ரீ அய்யங்கார்வாள் ஸங்கீதத்தில் கவனிக்கத் தக்கவை. இவர் ஸங்கீதத்தில் சிற்சில அம்சங்கள் வீணையை அனுசரித்திருக்கும்.

பதம் பாடும்போது கீர்த்தனையின் ஞாபகம் வராமலும், கீர்த்தனை பாடும்போது பதம் மாதிரி இல்லாமலும், ஸ்வரம் பாடும் போது ராகம் பாடுவது போல் அல்லாமலும், ஸ்வரம் பாடும் போது ஸ்வரத்தை நிறுத்தித் தனியாக ராகத்தைப் பாடாமலும், விருத்தம், ஸ்லோகம் முதலியவை பாடும் போது சாஹித்யத்தின் தீர்க்க அக்ஷரங்களில் ராக சங்கதிகளை சேர்த்துப் பாடுவதும், அவர் கச்சேரிக்கு விசேஷ கவர்ச்சி தருகிறது. இவைகளெல்லாம் ஸம்ப்ரதாயத்தின் அம்சங்கள். இவைகளை ஸ்ரீ அய்யங்கார் அவர்களின் ஸங்கீதத்தில் ஸம்பூர்ணமாய்க் காணலாம்.

மேலும், சமயம், ஸதஸ், பக்கவாத்தியங்கள், சாரீர வசதி இவைகள் யாவையும் ஒருங்கே உணர்ந்து கச்சேரி செய்வதில், ஸ்ரீ அய்யங்கார் நிபுணர் என்றே சொல்லலாம். இதற்கு முக்ய காரணம், மற்ற வசதிகளுடன், விருப்பு வெறுப்பு இல்லாமல் நல்ல ஸங்கீத ஸாஹித்யங்களை ஏராளமாக அவர் பாடம் செய்திருப்பது தான்.

தவிர, சிலருக்கு அவர் பாடுவது மிகவும் ஸுலபமான வழியாகத் தெரியலாம். அவர் மாதிரியே பாடிவிடலாம் என்றும் நினைக்கலாம். ஆனால், அவர் பாடுவது மாதிரி அவ்வளவு அழுத்தமாகவும், ரக்தியாகவும் பாடுவது மிகவும் சிரமம்.

இப்போழுது கச்சேரி செய்யும் அநேக பாடகங்கள் இவர் பாணியை பின்பற்றி இருக்கிறார்கள். இப்பொழுது வழங்குவது ஸ்ரீ அரியக்குடி ‘style’ என்றே சொல்லலாம். இத்தகைய உயர்ந்த சாஸ்திரீயமான அழகுள்ள ஸங்கீதத்தை எல்லோரும் கேட்டு, அனுபவித்து அறிந்து, விருத்தி செய்து கொள்ளும்படியாகச் செய்ததற்கு என்னைப் போன்ற அநேக பாடகர்களும் சங்கீதாபிமானிகளும் ஸ்ரீ அய்யங்கார் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

(விகடன் தீபாவளி மலர் -1946)