நிழல் நந்தி

“உச்சிவேளை தவிர காலையும், மாலையும், முற்பகலும், பிற்பகலும் இது வெயில் வாழும் அறை. தங்கவட்டம் வெள்ளிவட்டமாக முதிர்ந்து மறைந்து மீண்டும் வெள்ளிவட்டமாக முளைத்து பசும்தங்கமாகத் தணிந்து தேயும் காட்சி சக்கரம். வெயில் வட்டங்களைப் பார்த்துப் பார்த்து ஒரு வெறி. வட்டங்களை எண்ணி எண்ணிப் பார்க்கிற வெறி. புதிது புதிதாகக் கிரணங்கள் தோன்றி, புதிய புதிய வட்டங்கள் இந்த அறையைத் தழுவுவதாக ஒரு நிச்சயம். நீள் வட்டம். முழு வட்டம். சிறிது இலை போன்ற மழுப்பிய வட்டம். கன்னத்தைக் கிள்ளி இழுத்தாற்போன்ற வட்டம். யாரோ அழுத்தி பால் வட்டமாகக் குறைந்த வட்டம்.”

– தி.ஜானகிராமன் (மரப்பசு நாவல்).

இன்றைக்குப் பெரும்பாலானோர் டிஜிட்டல் கேமராவைப் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி, ‘இது எத்தனை மெகாபிக்ஸல்?’ என்பதுதான். எத்தனை மெகாபிக்ஸலோ, அத்தனை உசத்தியானது கேமரா! 7 மெகாபிக்ஸல் கேமரா இருக்கையில் கிட்டத்தட்ட அதே விலைக்குக் கொஞ்சம் உறுதியான 5 மெகாபிக்ஸல் கேமரா வாங்கிய என்னை அற்பமாகப் பார்த்தார் ஒரு நண்பர். மெகாபிக்ஸலைத் தாண்டி அடுத்து அதிகமாக அறியப்படும் குறிச்சொல் கேமராவின் உருப்பெருக்குத் திறன் (zoom). 3 மடங்கு உருப்பெருக்கத்தைக் காட்டிலும், 5 மடங்கு, 6 மடங்குக்குக் கவனிப்பு அதிகம். பொழுதுபோக்குக் கேமராவின் குறிச்சொற்களைத் தாண்டி தொழிற்முறை கேமராக்களுக்கு முன்னேறிய நபர்கள் என்ன லென்ஸ் வாங்குவது, என்னவிதமான மேம்படுத்தும் மென்பொருளை உபயோகிப்பது என்பதைக் குறித்து கவலைப்படுவார்கள்.

உண்மையில் பொழுதுபோக்குக் கேமராக்களைப் பொருத்தவரை மெகாபிக்ஸல்கள் ஒரு முக்கிய அளவுகோலே இல்லை. புகைப்படத்தைப்  போஸ்டர்  போன்று  பெரிய அளவில் அச்செடுக்கும்போதுதான் அதிக அளவில் மெகாபிக்ஸல் அடர்த்தி தேவைப்படும். வீட்டில் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் படமெடுத்து உள்ளங்கையளவில் பிகாஸாவில் போட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு       5-மெகாபிக்ஸலே அதிகம். ஆனால் கேமரா உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிக அடர்த்தி டிஜிட்டல் கேமராக்களை சந்தையில் இறக்கி, பழைய கேமராக்களைக் காலாவதியாக்குகிறார்கள். அதிக மெகாபிக்ஸல்,அதிக உருப்பெருக்கம் என்று மக்களை மாயவலையில் தள்ளி புதிய, புதிய கேமராக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது கன்ஸ்யூமரிஸ யுகம்!

அதிக மெகாபிக்ஸல், அதிக உருப்பெருக்கம், நல்ல லென்ஸ், நல்ல மென்பொருள் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் மோசமான புகைப்படம் எடுக்கலாம். ஒரு புகைப்படம் நன்றாக அமைவதற்கான மிக அடிப்படையான தேவை காம்போசிஷன் என்று அறியப்படும் ‘வடிவமைப்பு’ (composition). புகைப்படச் சட்டகத்துக்குள் (frame), என்னென்ன விஷயங்கள் எங்கெங்கு இருக்க வேண்டும், புகைப்படத்தின் சப்ஜெக்ட் எங்கே இருக்க வேண்டும், ஒளியமைப்பு எவ்வாறு உபயோகப்படுத்தப்பட வேண்டும், வண்ணச்சேர்க்கை எப்படியிருக்க வேண்டும் – இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக ‘வடிவமைப்பு’ என்ற சொல்மூலம் குறிப்பிடலாம். வடிவமைப்பைச் சரியாகக் கையாளத் தெரிந்தாலே தீப்பெட்டி போன்றிருக்கும் செல்ஃபோன் கேமராவில் கூட நல்ல புகைப்படங்கள் எடுக்கலாம். ஒவ்வொரு கேமராவுக்கென்றும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை அறிந்து கொண்டு அதற்குள் நல்ல வடிவமைப்பை உருவகித்து சிறந்த புகைப்படங்கள் எடுக்கலாம்.

நிக்கான் D80 உயர்தொழில்நுட்பக் கேமராவைக் காட்டிலும், டிஜிட்டல் கேமராவான நிக்கான் S4-இல் நான் நல்ல புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அதன் சுற்றிச்சுழலும் லென்ஸ் பல வித்தியாசமான கோணங்களைக் கொண்ட வடிவமைப்பு முறையை சாத்தியப்படுத்தியது. மாலை நேர இளம்வெயிலின் பொன்நிறம் சாத்தியப்படுத்திய நிழலில் செல்ஃபோன் கேமராவில் கூட நல்ல புகைப்படம் ஒன்று கிடைத்தது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருப்பவர்கள் ஒரு சாதாரண கேமராவில் பல்வேறு புகைப்படங்கள் எடுத்து, வடிவமைப்பு முறையில் நல்ல தேர்ச்சி பெற்றபின் கேமராவின் எல்லையைத் தொட்டு அடுத்த நிலைக்குச் செல்வதே நன்று.

குறிச்சொற்கள் வெறும் தொழில்நுட்பம் சார்ந்தவை. ஆனால் வடிவமைப்பு என்பது ஒரு தனிமனிதரின் படைப்பூக்கத்தைச் சார்ந்தது. இந்த ஒரு புள்ளியில்தான் புகைப்படங்களை எடுத்தல் தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி ஒரு கலைவடிவமாகிறது. தொழில்நுட்பம் கைவருவதற்குக் கொஞ்சம் பயிற்சியும், புத்தக அறிவுமே போதும். ஆனால் வடிவமைப்பு என்பது ரசனையையும், பார்வை அழகியலின் முன்னேற்றத்தையும் பொருத்தது. நல்ல இசையைத் தொடர்ந்து கேட்பது, இசை ரசனையில் முதிர்ச்சி தருவதைப் போல், தொடர்ந்து பல நல்ல புகைப்படங்களைப் பார்க்கும்போது இந்த பார்வை சார்ந்த அழகுணர்ச்சியும் முதிர்ச்சியடைகிறது.

வெறும் வடிவமைப்பு முறையை மட்டுமே கைக்கொண்டு வெகுசிறப்பான ஒளிவிளையாட்டு நடத்தி, என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதொரு புகைப்படம் இக்பால் மொஹமத் என்ற சிறந்த புகைப்படக் கலைஞர் எடுத்த ‘தாராசுரம் கோயில் நந்தி’யின் புகைப்படம்.

nandi-iqbalmohamed1

சூரியன் நந்திக்குப் பின்னாலிருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சூரிய வெளிச்சம் நந்திமீதும், கொடிமரம் மீதும் பட்டு நீள்நிழலை முன்னாலிருக்கும் மண்டபத்தரையில் சாய்க்கிறது. நந்தியின் உண்மையான உருவம் கூடப் பின்னாலிருந்து வெளிச்சம் வருவதால் வெறும் நிழலுருவமாகத் (silhoutte) தெரிகிறது. மண்டபத்திலிருக்கும் தூண்கள் கூட ஆங்காங்கே சூரிய வெளிச்சத்தில் நிழலுருவமாகத் தெரிகின்றன. மொத்தத்தில் ஒரு வெளிச்சப்பாளம் நந்திக்குப் பின்னாலிருந்து அந்த இருட்டான மண்டபத்தில் விழுகிறது. அந்த வெளிச்சத்தில் நீளமாக விழுந்திருக்கும் நந்தியின் நிழல் தூண்களின் வரிசைக்கு இணையான ஒரு அற்புதமான ஜியோமெட்ரி அமைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் புகைப்படத்தின் முன்பகுதியில் தரையில் விழுந்திருக்கும் ஒளியின் பொன்னிறமும் புகைப்படத்திற்கு இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது.

பலமுறை நான் இதே தாராசுரம் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். புகைப்படமெடுப்பதற்கென்றே கூட பிரத்தியேகமாகச் சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட இந்த ‘நிழல் நந்தி’ வடிவமைப்பை உருவகப்படுத்திப் பார்க்க முடிந்ததில்லையே என்று என்னைக் கடும் நாணம் கொள்ளவைத்தது இப்புகைப்படம். முதல்முறையாக வடிவமைப்பைக் கவனித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை அறைந்து மனதில் நிறுத்தியது. ஒளியையும், நிழலையும், ஒளிமூலத்தையும் எப்போதும் கவனித்தபடி இருக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லித்தந்தது.

2004-ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இந்த மூன்றையும், “வாழும் சோழக்கோயில்கள்” என்ற செயல்திட்டத்தின் கீழ் தன்னுடைய பராமரிப்பில் எடுத்துக் கொண்டது. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இக்பால் மொஹமதை இந்த மூன்று கோயில்களையும் புகைப்படம் எடுக்குமாறு யுனெஸ்கோ கேட்டுக்கொண்டது. அத்திட்டத்திற்காக இக்பால் மொஹமத் எடுத்த புகைப்படங்களில் ஒன்றுதான் இந்த ‘நிழல் நந்தி’.

zooming1இக்பால் மொஹமத் இப்புகைப்படங்களை எடுப்பதற்கு முன்னரே வெகு பிரபலமான புகைப்படக்கலைஞர். விளம்பரப் புகைப்படங்கள் இவருடைய தனிச்சிறப்பாகக் கருதப்படுபவை. சென்னை லயோலா கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு கலிஃபோர்னியாவில் இருக்கும் ‘Brooks Institute of Photography’யில் முறையாகப் புகைப்படக்கலை குறித்து பயின்றார். பயிற்சி முடிந்தபின் பல ஹாலிவுட் புகைப்படக் கலைஞர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார். இந்தியாவுக்குத் திரும்பி தனித்துத் தொழில்முறை புகைப்படக் கலைஞரானபின் ஃபோர்ட், டொயோடா, டிவிஎஸ், அஷோக் லேலண்ட் போன்ற பல பிரபல நிறுவனங்களுக்காகவும் புகைப்படங்கள் எடுத்தார்.

யுனெஸ்கோ நிறுவனத்துக்காகப் புகைப்படங்கள் எடுத்ததைப் போலவே, “நீலகிரி மலை ரயில்” என்ற தென்னிந்திய ரயில்வேயின் செயல்திட்டத்தின் கீழ், பல அழகான ஊட்டி மலைரயில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இக்பால் மொஹமத் ஊட்டியில், வெகு அழகான சூழலில் “Light and Life Academy”என்ற புகைப்படப் பள்ளியையும் நடத்தி வருகிறார். இன்று இந்தியாவின் மிகப்பிரபலமான புகைப்படப் பள்ளியாக இது விளங்கி வருகிறது. பல சிறந்த இளம்தலைமுறை புகைப்படக்கலைஞர்கள் இப்பள்ளி மாணவர்கள்.

“புகைப்படக் கலையில் இருக்கும் ஒரே சந்தோஷமளிக்கும் விஷயம் ஜியோமெட்ரி.”

– உலகப் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்ரி கார்ட்டியே-ப்ராஸ்ஸான்.

‘நிழல் நந்தி’யைப் போலவே, யுனெஸ்கோ நிறுவனத்துக்காக இக்பால் மொஹமத் எடுத்த ஒவ்வொரு புகைப்படமுமே புகைப்பட வடிவமைப்பைக் குறித்து நமக்கு ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தரக்கூடியது. ஜியோமெட்ரி, ஒளியின் விளையாட்டு – இவை இரண்டும் நிழல்நந்தி உட்பட பல புகைப்படங்களின் முக்கிய அம்சங்கள். புகைப்பட சட்டகத்துக்குள் கிடைக்கும் ஜியோமெட்ரி புகைப்படத்துகொரு சிறந்த பரிணாமத்தைத் தரும். பார்வையாளர் கவனத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

நிழல்நந்தி புகைப்படத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒரு அழகான ஜியோமெட்ரி இருக்கிறது. நந்தியின் நிழலின் இருபுறமும் தூண்களின் வரிசையும் சேர்ந்து வட்டத்தின் ஆரக்கோடுகள் போல அமைந்து பார்வையாளரின் கவனத்தைப் புகைப்படத்துள் இழுக்கிறது. இந்த ஜியோமெட்ரியை இவருடைய பிற சோழர் கோயில் புகைப்படங்களிலும் பார்க்கலாம்.

குறிப்பாக இப்புகைப்படத்தில் நீண்டு செல்லும் பிரகாரத் தூண்கள் வழியே சூரிய ஒளி பிரிந்து செல்வது அற்புதமான காட்சி.

iqbal-sunlight-11

அதே போல இந்த இரு புகைப்படங்களையும் வேறு மனிதர்களை நிற்கவைக்காமலே எடுத்திருக்கலாம். ஆனால் மனிதர்கள் நிற்கும்போது கோயில்களின், சிற்பங்களின், நந்தியின் பிரம்மாண்டம் நமக்குப் புலப்படுகிறது.

iqbal-people-11

நம் தென்னிந்தியக்கோயில்கள் இயல்பாகவே அபாரமான ஒளியமைப்பையும், ஜியோமெட்ரியையும் தரும் கட்டமைப்பைக் கொண்டவை. கட்டடக்கலையின் அற்புதங்களாகவே விளங்குபவை. நிதானமாகக் கவனித்தால் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஏராளமான சிறந்த காட்சிப்படிமங்களைக் கண்டுகொள்ளலாம். இவற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.

ஆனால் எத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. எத்தனையோ கோயில்களின் சுற்றுச்சுவர்கள் கரித்துண்டுக் கிறுக்கல்களால் நிரப்பப் பட்டிருக்கின்றன. லஜ்ஜையே இல்லாமல் பல நூற்றாண்டுகள் பழமையான சிற்பங்கள் மீது கையில் மிச்சமிருக்கும் விபூதியைக் கொட்டுகிறோம். பலருக்கும் கோயில்களின் ‘மகிமைகளின்’ மீது இருக்கும் கவனம் அதன் கட்டமைப்பின் மீது இருப்பதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை.

ஒவ்வொரு கோயிலும் சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் சொல்லும் வரலாற்றுத்தகவல்கள் இவற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பெட்டகங்கள். சோழமண்டலத்திலிருக்கும் பல மாபெரும் வரலாற்றுப் பழமை வாய்ந்த அற்புதங்கள் மீது அக்ரிலிக் பெயிண்ட் அடிக்கும் கொடுமையும் வேகமாக நடந்து வருகிறது. திருவலஞ்சுழி, திருபுவனம் போன்ற பெருங்கோயில்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. கொஞ்சம் கூட அழகியலும், ரசனையும் இல்லாத வண்ணப்பூச்சில் கோபுர உருவங்களைத் தேர்க்கடை பொம்மை போலாக்கிவிடுகிறார்கள். நுணுக்கமான புன்னகை வீசும் சிற்பத்துக்கு அருகிலேயே திகட்ட வைக்கும் வண்ணச்சேர்க்கை கொண்ட டிஜிட்டல் பேனர்களை சோழமண்டலமெங்கும் பரவலாகப் பார்க்க முடியும். யுனெஸ்கோவின் பராமரிப்பின் கீழ் வந்ததால் தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் – இந்த மூன்று கற்றளிகளும் அக்ரிலிக் பெயிண்ட் பூச்சிலிருந்து நல்லவேளையாகத் தப்பித்தன.  மாபெரும் சிற்பிகளும், கலைஞர்களும், சிற்பங்களுக்கு பல வண்ண பெயிண்ட் அடிப்பவர்களும் ஒரே மண்ணில்தான் தோன்றியிருக்கிறார்கள் என்று நம்புவதற்கே கடினமாக இருக்கிறது. எங்கே தொடங்கியது இந்த அழகுணர்ச்சியின் வீழ்ச்சி?

அழகுணர்ச்சியின் வீழ்ச்சி என்பது ஒருபுறம் இருக்க, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பக்கலையின் பொக்கிஷங்களை இந்த பெயிண்ட் பூச்சு சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பது இன்னொரு புறம் நமக்குக் கடும் வேதனையளிக்கக் கூடிய ஒன்று. பெயிண்ட் பூச்சைப் போலவே சிற்பங்களை சிதைக்கும் இன்னொரு விஷயம் ‘நுண்மணல்வீச்சு’ மூலம் சிற்பங்களைத் ‘சுத்தப்படுத்துவது’. தாராசுரம் கோயில் வாசலில் அதன் பராமரிப்புப் பணிகளுக்காகவும், புதிய தூண்களை நிறுவுவதற்காகவும் பணி புரிந்து கொண்டிருக்கும் பல சிற்பக்கலைஞர்களின் அருகிலிருந்து அவர்களை கவனித்துப் பார்த்திருக்கிறேன். சிற்பங்களின் கண்கள், உதடுகள் போன்ற அதி நுணுக்கமான நுனிகளை உருவாக்குவதற்கு அதீத கவனமும், துல்லியமான அழுத்தமும் தேவை. சற்று ஓங்கி அழுத்தி சுத்தியலை இறக்கினாலும் சிற்பம் மூளியாகிவிடும். இப்படி வெகு கவனத்தோடு பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பல சிற்பங்களை இந்த மணல்வீச்சு மூளியாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சிறு பிரச்சினைக்கும் கொடிபிடிக்கும் அமைப்புகள் நம் நாட்டில் ஏராளமாக இருந்தும் கூட, சிற்பங்களிடமும், கோவில்கள் மீதும், மணல்வீச்சு, அக்ரிலிக் பெயிண்ட் பூச்சு இவற்றையெல்லாம் தடை செய்யக்கோரும் இயக்கமோ அதற்கான பெரும் மனஎழுச்சியோ, கவன ஈர்ப்போ இன்னும் எழவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆர்வலர்கள் குரல்கள்தான் கேட்கின்றனவே ஒழிய, கவனித்து நிற்கச்சொல்லும் எந்த எதிர்ப்பும் இதுவரை நிகழவில்லை. மாபெரும் கற்றளிகளின் பழமையையும், நுண்கலைகளையும் நம்மில் பெரும்பாலானோர் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வதையே இது காட்டுகிறது. நான் இதுவரை செல்ல நேர்ந்த ஒவ்வொரு குக்கிராமக் கோயிலிலும் நிறைய சிறுவர்களைத்தான் பார்க்கிறேன். கிராமத்து சிறுவர்கள் பெரும்பாலும் விளையாடத் தேர்ந்தெடுப்பது கோயில் பிரகாரங்களைத்தான். இந்த சிறுவர்களுக்கு கட்டடக்கலையின் அழகியலையும், பிரமாண்டத்தையும் அறிமுகப்படுத்தினாலே அது ஒரு நல்ல மாறுதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இக்பால் மொஹமதின் சோழர் கோயில் புகைப்படங்கள் பலரையும் கவர்ந்திழுக்கும். குறிப்பாகப் பள்ளிச் சிறுவர்களை. தேதிகளால் நிரப்பப்பட்ட பாடங்களை விட, இப்புகைப்படங்கள் நம் வரலாறு சார்ந்த அக எழுச்சியை ஏற்படுத்தும்.

“கலைப்பாதையைத் தெரிவு செய்யும்போது உங்களுக்கு இயல்பாகவே ஆர்வமிருக்கும் வழியில் செல்வது நல்லது. உங்களுக்கு சாப்பிடப் பிடிக்கும் என்றால், உணவுப் பொருட்களைப் புகைப்படமெடுக்கலாம். மக்களோடு பழகுவது பிடிக்கும் என்றால் ‘மக்கள் புகைப்படங்கள்’ (people photography) வழியைத் தெரிவு செய்யலாம். அதுதான் உங்களுக்கு மேலும் மேலும் உத்வேகத்தையும், பிடிப்பையும் அளிக்கும்” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் இக்பால் மொஹமத்.

வரலாறு, நுண்கலைகள் சார்ந்த ஒரு ரசனையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்திவிட்டால் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்கும் நம் கோயில்கள் தப்பிப் பிழைக்கும் என்று நம்புகிறேன்.

—oooOOOooo—

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தாராசுரம் கோயிலின் பராமரிப்பு வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்களையும், கோட்டை வாயிலையும், அம்மன் கோயிலையும் நிர்மாணிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. கோயில் வாசலில் சிற்பிகள் தொடர்ந்து சிற்பவேலைகளிலும், தூண்களைச் செப்பனிடும் வேலையிலும் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. ஒருமுறை சென்றபோது அதில் ஒரு சிற்பியோடு பேச்சுக் கொடுத்தேன்.

“கொஞ்ச நாளாதாங்க இந்த வேலை தொடர்ச்சியா கெடைக்குது. அதுக்கு முன்னாடி கஷ்டமாத்தாங்க இருந்துது. சாமிமலைலேருந்து வர வேண்டியிருக்கு. அப்பாமாருங்கள்லாம் இந்த வேலைதான் செஞ்சாங்க.. நாங்களும் இதைத்தான் செய்யறோம். தம்பி இந்த வேலைக்கு வர்லைன்னாலும் அவனும் கோயில் வேலைதான் செய்யறான்.”

“அப்படியா? அவரு கோயில்ல என்ன வேலை செய்யறாருங்க?”

“பெயிண்டு வேலைங்க”.