எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தை அசைத்து உள்ளே நுழைந்த இளையராஜாவின் படைப்புகளின் ஒரு முக்கிய பலம் வயலின் பகுதிகள். பல பாடல்களில் ஒரு ஒற்றை வயலின் மனதை உருக்கிச் செல்லும். ராஜபார்வை என்ற திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு தனித்த வயலின் இசையில் மனதை அசைக்கும் பந்துவராளியை நீங்கள் கேட்டிருக்கலாம். அதைப் போலவே, ’ஹௌ டு நேம் இட்’ (“How to name it?”) என்ற இளையராஜாவின் தனி ஆல்பத்திலும் பல பகுதிகளில் ஒரு ஒற்றை வயலின் உங்கள் மனதை உருக்கியிருக்கலாம். ஏன், சில பாடல்களின் இடையிசை, திரைப்படத்தின் டைட்டில் இசைகளில் கூட சில வயலின் துணுக்குகள் என்றென்றைக்கும் மறக்கமுடியாததொரு இசையனுபவத்தை வழங்கி இருக்கலாம். அந்த வயலின் இசைப்படைப்புகளுக்கு சொந்தக்காரர், இளையராஜாவின் முன்னணி வயலின் இசைக்கலைஞராகப் பல திரைப்படங்களில் பணிபுரிந்த திரு.வி.எஸ்.நரசிம்மன்.

வி.எஸ்.நரசிம்மன்
வி.எஸ்.நரசிம்மன்

மைசூரைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ ஐயங்கார் என்ற கோட்டுவாத்தியக் கலைஞரின் மகனான வி.எஸ்.நரசிம்மன், தன்னுடைய அப்பாவிடமே கர்நாடக இசையை முறையாகப் பயின்றார். அவருடைய அப்பா பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் ‘ஸ்ரீ ரத்னா’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்தபோது அந்தத் திரையிசையின் இசைக்கோர்வையை வழிநடத்திய நரசிம்மனுக்கு வெறும் பதினைந்து வயதுதான். அப்போதிருந்தே நரசிம்மனுக்குத் திரையிசையுடனான உறவு தொடங்கிவிட்டது. பல இசையமைப்பாளர்களுடன் இசைக்கலைஞராகப் பணிபுரிந்ததோடு மட்டுமில்லாமல், அச்சமில்லை அச்சமில்லை, யார், பாசமலர்கள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

திரையிசையில் இருந்ததால், ஜாஸ், ராக், மேற்கத்திய செவ்வியல் எனப் பல தரப்பட்ட இசை வடிவங்களை அவர் நாள்தோறும் கேட்க நேரிட்டது. மேற்கத்திய செவ்வியல் வடிவம் மேல் ஒரு பெரும் ஈர்ப்பும் ஏற்பட்டது. சென்னை வந்தப் பல மேற்கத்திய இசைக்கலைஞர்களிடம் நேரடியாகவே இசை கற்றார் நரசிம்மன். அவர் தன்னைப் போன்ற மேற்கத்திய செவ்வியல் இசையில் ஆர்வம் கொண்ட மூன்று திரையிசைக் கலைஞர்களோடு இணைந்து 1993-இல்  ’மதராஸ் ஸ்ட்ரிங் க்வார்டெட்‘ (‘Madras String Quartet’) என்ற இசைக்குழுவை ஆரம்பித்தார். இந்த ஸ்ட்ரிங் க்வார்டெட்டில் நான்கு தந்திக்கருவி வாத்தியக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள். நரசிம்மன் வயலின் இசைக்க, குன்னக்குடி வைத்தியநாதனின் புதல்வர் வி.ஆர்.சேகர் செல்லோ இசைக்கருவியையும், பி.ஜே.சந்திரன் வயோலா இசைக்கருவியையும், கே.முரளி வயலினையும் வாசிக்கிறார்கள். (இவர்களில் முரளி விலகிக்கொள்ள அந்த இடத்தை பி.மோகன் ராவ் நிரப்புகிறார்).

திரையிசையில் பிற இசையமைப்பாளர்களின் படைப்புகளை வாசிக்கும் இவர்கள், இந்தக் குழுவில், தங்களுடைய சொந்தப் படைப்புகளை  வாசிக்கிறார்கள். இக்குழு ’ரெஸொனன்ஸ்’ (Resonance) என்றொரு   சங்கம இசை ((ஃப்யூஷன் இசை- Fusion music) ஆல்பத்தை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. கர்நாடக சங்கீத இசையோடு, மேற்கத்திய செவ்வியல் இசையை இணைத்திருந்த இந்த ஆல்பம் பல இசை ஆர்வலர்கள், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இக்குழுவின் வி.எஸ்.நரசிம்மனும், வி.ஆர்.சேகரும் இணைந்து இந்த வருடம் ‘ராக சாகா’ (Raga Saga) என்றொரு ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ரெஸொனன்ஸ் போலவே ராகசாகாவும் கர்நாடக இசை, மேற்கத்திய செவ்வியலின் இணைவுதான்.

வி.எஸ்.நரசிம்மன் - வி.ஆர்.சேகர்
வி.எஸ்.நரசிம்மன் - வி.ஆர்.சேகர்

இசையில் சுபாவ மெருகூட்டல் (Improvisation) கர்நாடக சங்கீதத்தின் வேராகும். கலைஞர்கள் மேடைகளில் திடீரென சில மாற்றங்களை தங்கள் இசையில் புகுத்துவர். இதைத் தொடர்ந்து வயலின், கஞ்சிரா கலைஞர்களும் அதற்கிணையான மாற்றத்தைச் செய்வர். இதனால் இசை அடுத்த கட்டத்தை எட்டும். இந்தப் புதிய பரிமாணத்தால் ராக அமைப்பிலும் அதன் சாகித்தியங்களிலும் வாளிப்பானதொரு நேர்த்தி கிடைக்கும். இந்த புதிய தரிசனங்கள் வெகுவாக ரசிக்கப்பட்டு  `சபாஷ்` போட வைக்கும் இடங்கள்.  இந்த படைப்பூக்க விளையாட்டுகளை அநேக கர்நாடக சங்கீத மேடைகளில் காணலாம்.

ராகசாகாவில் இவ்விதமான இசை வடிவ மெருகூட்டல்கள் நிறையவே இருக்கின்றன. திட்டமிட்டுச் செய்ததால் ஐரோப்பா இசைக் கூறுகளை ராக அமைப்புகளுக்கு அலங்காரமாய் மாற்றி உரமேற்றியுள்ளார்கள்.  கர்நாடக சங்கீதத்தின் மெருகூட்டல் மரபைப்போல், மூலப் படைப்பைச் சிதைக்காமல் வளம் கூட்டும் இந்த வகை முயற்சிகளில் (Interpretation friendly improvisations) புதுவித அர்த்தங்களை உள்வாங்கியபடி, இந்த ஆல்பம் பலவித உணர்வுகளுக்கும், புரிதல்களுக்கும் இடமளித்தபடி முன்னகர்ந்து செல்கிறது. இந்தக் குழுவின் இசையில் மிதக்கும் கற்பனையும், இசையின் கட்டுக்கோப்பும் ரசிகர்களை உணர்வுபூர்வமாக கண்டிப்பாக ஆட்கொள்ளும்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்து ராகங்களின் மாற்று வெளிப்பாட்டைக் கொண்டுவந்துள்ளனர். பல பாடல்கள் பிரபலமான கர்நாடக சங்கீத கீர்த்தனைகளே! இந்தப் பாடல்கள் அனைத்தும் ஜன்ய ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை.

எல்லாப் பாடல்களிலும் வயலின் முதன்மைக் கருவியாகக் கையாளப்பட்டுள்ளது. செல்லோ, வயோலா, இரண்டாவது வயலின் – ஒத்திசைவு (Harmony) அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பல பாடல்களுக்குத் தாள அமைப்பாகவும் செல்லோ, வயோலா உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மெலடிக்காக செழிப்பான கட்டமைப்பில் மேஜர், மைனர் கார்டுகளாக (Chords) வயோலா, வயலினை சில இடங்களில் உபயோகித்துள்ளனர்.(குறிப்பாக ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே என்ற தீக்ஷிதரின் கீர்த்தனை உன்னதமான வடிவமைப்பில் இருக்கிறது)

note1. எவ்வாரிபோதனா – பட்ணம் சுப்ரமண்ய ஐயர்.

தெளிவான ஆரம்பம். ஆபோஹி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை வாத்திய இசையில் வயலின் முதன்மையாகக் கொண்டு போகிறது. துணைக்கு செல்லோ, வயலோவும் அதே ராக அமைப்புகளைக் கொண்டு கூடவே பயணிக்கின்றன. இரண்டாவது வயலின் இந்த ராகத்திற்கான சுருதியாக பாடல் முழுவதும் வருகிறது. கமகங்களை முதல் வயலின் இசைக்க, மற்றவையும் தொடர்கின்றன. இப்படியாக வயலின் ஐரோப்பிய இசைக் கோணத்தை அடைந்து புது அனுபவங்களை ஒத்திசைவுடன் சேர்க்கிறது. முடிவில் ரயில் சத்தம் மெதுவாக மறைவது போல் தேய்ந்து மறையும் (fade out)  உணர்வைத் தந்து, மஹா கடல்களான இரு இசை வடிவங்களைச் செழிப்பாக இணைக்கின்றன.

note2. வாதாபி – முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

மிகப் பிரபலமான விநாயக துதிப் பாடல். இப்படிபட்ட பிரபலமான பாடல்களில் புது இசைக் கூறுகளை புகுத்தியிருப்பது, இந்த இசைக் கோப்பின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகத் தோன்றுகிறது. ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த இந்த பாடலில் பிட்ஸிகாடோ (Pizzicato) எனும் ஜாஸ் பாணி கையாளப்பட்டுள்ளது. இது ஒரு பரோக் (Baroque) பாணியென்றாலும் தற்காலங்களில் ஜாஸ் இசையில் பிரபலமாக உபயோகப்படுத்துகின்றனர். பாடல் முழ்வதும் நாடித் துடிப்பு போல தொடந்துகொண்டேயிருக்கும் செல்லோவின் தந்தி மீட்டலே பிட்ஸிகாடோ பாணியாகும்.

இது இந்த பாடலுக்கான தாளமாகவும் செயல்பட்டு வேகத்தைக் கூட்டுகிறது. மிகவும் கம்பீரமாக பவனி வரும் இந்த ஹம்ஸத்வனியின் சரணத்தில் ஸ்வர வேறுபாடுகளைத் தெளிவாக வெளிக்காட்டவில்லை என்பது சிறு குறையாக இருந்தாலும் , முடிவில் வரும் கருவிகளின் ஆர்ப்பாட்டம் ’வாதாபி’-யின் அர்த்தத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. முடிவுப் பகுதியில், துதிப்பாடலிலிருந்து வளர்ந்து கம்பீரமான தாளகட்டுக்களை எதிர்பார்க்கத் தொடங்குகிறோம்.

note3. ஸ்ரீ மஹா கணபதி – முத்துஸ்வாமி தீக்ஷிதர்

செல்லோ ஆலாபனையுடன் தொடங்கும் இந்த கெளளா ராகப் பாடலில் வயலின், வயோலா அலங்காரத்திற்காகக் கூடவே இசைத்து வரும். ஒரு த்ரில்லர் கதையின் பின்னணி போலத் தொடங்கும் செல்லோவுடன் இரண்டு வயலின்களும் ராக வெளியில் இழைகின்றன. விடையில்லாத கேள்வியைப் போல ஆலாபனை மீண்டும் மீண்டும் ஸ்வர ஸ்தாயிகளில் சஞ்சாரம் செய்து வருகிறது. இந்தக் கேள்வியைத் தீர்க்கவே, நடக்கும் கூட்டம் போல ஸ்வரகல்பனாவை அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஸ்வரகல்பனா வகைக் கூறு கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான அங்கம் வகிக்கிறது. இது ராகத்தில் பல்வேறு பகுதிகளை ஆராயும் பகுதி. தேர்ந்தெடுத்த ரி,க ஸ்வரக் கோர்வைகளை எல்லா வாத்தியக்கருவிகளும் இசைத்துக் காட்டும். இது சுற்றறிக்கை போல் மாற்றி மாற்றி வலம் வரும். கர்நாடக சங்கீதத்தில் இந்த மனோதர்ம மேம்பாடு (Improvisation) முக்கியமான கூறாகும். ராக ஆலாபனை போல, ஸ்வர கல்பனாவிலும் ராகத்தின் உலகத்தில் மேலும் கீழும் சஞ்சாரித்து மீண்டும் செல்லோவின் தாளத்திற்கு திரும்புகின்றனர்.

பாடல் முடியும் வரை இருதயத் துடிப்பு போல் தாளமாய் செல்லோ இசைப்பது அற்புதமான அனுபவமாகும்.

note4. பராத்பரா – பாபநாசம் சிவன்

வாசஸ்பதி ராகத்தில் தவழும் கீர்த்தனை. பல்லவிக்குள் நுழைவதற்குமுன் அற்புதமான மெலடியின் துணையுடன் வயலின் இசை திணறடிக்கிறது. இந்த வயலினுடன் அவ்வப்போது துணையாக வரும் வயோலா, செல்லோ இதன் அழகைக் கூட்டுகிறது.

இந்தப் பாடலின் – ‘ஹரி அயனும் காண பரமஜோதி, ஆதி அந்தமில்லாத பழமநாதி’ எனும் வரிகள் நெகிழ வைத்த கணங்களைவிட, அதை வயலினாகக் கேட்கும் அனுபவமே தனியானதுதான். மிகச் சுருக்கமான சரணத்தில் இடையிடையே பக்கபலமாக செல்லோ இனிக்கிறது.

note5. ஞான மூச்க ராதா – தியாகராஜர்

தியாகராஜர் தன் இரு மூர்த்திகளோடு ஆஜராகாத சம்மேளனங்கள் இருக்க முடியாது. இந்த ஆல்பத்திலும் தியாகராஜருக்கு கம்பீரப் பிரவேசம் (grand entry) தான். பூர்வி கல்யாணி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் நெக்குருகி நம்மையும் ஞானத்தைக் கேட்கும்படி செய்கிறார். மற்ற பாடல்களை விட இதில் சில வித்தியாசங்கள் உண்டு. ஒத்திசைவுக்காக எல்லா இசைக்கருவிகளும் சேர்ந்தப் பாடலிது. மற்ற தந்திக் கருவிகள் ஒத்திசைவு வாசிக்க, முதல் வயலின் மெலடியில் நம்மை கரைக்கும். இந்தப் பாடலில் வயலின் மெலடியைப் பார்த்துக்கொள்ள, மற்ற மூன்று தந்திக்கருவிகளும் ரூபக தாளத்தை கையாள்கின்றன.

note6.ஓராஜூப்பு – தியாகராஜர்

இதைக் கேட்டவுடன் நமக்கு ‘சலமேளரா.. சாகேத ராமா’ பாடல் நினைவுக்கு வந்துவிடும். இரண்டும் ஒரே ராகத்தில் அமைந்திருப்பதும் ஒரு காரணம். ஜாஸ் இசைக்கூறுகளை இந்தப் பாடலில் நுழைத்துள்ளனர்.

த்ராம்போன் (Trombone) எனப்படும் இசைக் கருவி குழல் போன்றது. ஜாஸ் இசையில் இதை பஸ் ஒலிப்பான் போல உபயோகப்படுத்துவர். இந்தப் பாடலில் செல்லோ, வயோலா கருவிகள் trombone போலச் செயல்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஒரு நிறுத்தம் போன்றதொரு உணர்வு ஏற்படும். இதனால் இந்த ராக அமைப்பிற்கே ஏற்படும் ஒருவித மயக்கும் ஜாஸின் விளைவுகள் நம்மை ஆட்கொள்கின்றது. இதைக் கேட்டவுடன், `சலமேளரா`வை இப்படிச் செய்தால் இன்னும் இனிமையாக இருக்குமெனத் தோன்றியது.

note7. ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே – முத்துஸ்வாமி தீக்ஷிதர்:

இது இந்தத் தொகுப்பில் ராஜ நடையுடன் பவனி வரும் காம்போதி ராக அமைப்பு. வயலினில் மெலடியை மட்டும் பிரதானமாக உபயோகப்படுத்திவிட்டு அடுத்த கட்ட ஒத்திசைவுக்காக செல்லோவுக்கு தாவுகிறது. சில இடங்களில் மேஜர், மைனர் கார்டுகள்(Chords) தலைத்தூக்கி ஒத்திசைவு இருப்பதாக அறிவிக்கிறது.மெதுவாகச் சென்றாலும் அற்புதமான மெலடியினால் பின்னப்பட்ட பாடல்.

note8. சுதாமயி – முத்தையா பாகவதர்:

தேனினும் இனிமையான பாடல் மூன்று ஸ்வரங்களால் தொடங்குகிறது. அம்ருதவர்ஷினி ராகம் மழையை வரவழைக்கும் ராகமென்பதால், தொடக்கத்தில் ட்ரெமலோ (Tremolo) எனும் யுத்திப்படி ஒரே ஸ்வரத்தை மீண்டும் மீண்டும் வேகமாக இசைப்பதால் மழையைப் போல் ஒலியெழும்புகிறது.

செல்லோ, வயோலா, இரண்டாவது வயலின் மாற்று பாதையில் பயணித்தாலும், counterpoint புள்ளிகளில் அற்புதமாக சங்கமிக்கின்றன. ரூபக தாளத்தை இந்த மூன்று கருவிகளும் நன்றாக எடுத்தாள்கின்றன.

note9. தில்லானா – லால்குடி ஜெயராமன்

நாட்டிய இசைக்குப் பெயர் போன தில்லானா, தாள அமைப்பில் திடகாத்திரமாய் அமர்ந்து செளகரியமான அனுபவத்தைத் தரும் தேஷ் ராகத்தில் அமைந்த பாடல். இதனாலேயே இதை கடைசி விருந்தாய் கச்சேரிகளில் பாடுவர்.

ஒத்திசைவுக்கான கட்டங்கள் குறைவாக இருந்தாலும், பல்லவியில் சில ஸ்வர அமைப்புகளை அமைத்த விதத்தில் ஐரோப்ப இசைக் கூறுகள் தென்படுகின்றன. தெளிவான கர்நாடக மெலடியை உபயோகித்து, தாளத்தில் மட்டும் ஒத்திசைவுக் கூறுகள் உபயோகப்பட்டுள்ளன.

மிக எளிமையான கட்டமைப்புள்ள இந்த ராக அமைப்பில் இந்தப் பாடலைக் கேட்பது நிறைவான அனுபவத்தை தரும்.

கீழுள்ள வீடியோவில் நரசிம்மன் இந்தத் தில்லானாவின் இயல்பான வடிவத்தையும், ‘ராகசாகா’ வடிவத்தையும் வாசித்து ஒரு அருமையான ஒப்புமை வகுப்பையே எடுத்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தால் ராகசாகாவின் தனித்துவமும், சங்கம இசை நிகழ்த்தும் பாய்ச்சலும் புரியும்.

note10. சின்னஞ்சிறு கிளியே – சுப்ரமணிய பாரதி.

இந்தப் பாடல் தொகுப்பிலிருக்கும் ஒரே ராக மாலிகா அமைப்பு. பல ராகங்களை மலர் தொடுப்பது போல கோர்வையாகப் பாடுவது/இசைப்பது ராக மாலிகாவின் இயல்பு. தில்லானாவைப் போலவே இதிலும் ஒத்திசைவுக்கான இடங்கள் குறைவாகவே உள்ளன. தாள அமைப்பிலும், பல்லவியிலும் ஐரோப்பிய இசைக் கூறுகள் தென்படுகின்றன.

தெளிவான அளவுகோலுடன், இசைச் சோதனை  நடத்தியிருக்கும் இந்த சங்கமம் தென் இந்திய இசை வடிவத்திற்கு முக்கியமான முன்னகர்வாகும். “பல கர்நாடக இசைக் கலைஞர்கள் பிற செவ்வியல் வடிவங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற மனக்குறை எனக்குண்டு. நான் திரையிசையில் ஈடுபட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட மூடிய மனநிலையில் சிக்கிக்கொள்ளவில்லை. உலகின் பல சிறந்த இசைக்கலைஞர்களிடமிருந்தும் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறார் நரசிம்மன்.

நரசிம்மன் சொல்வதைப் போல அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்.

ராகசாகா ஆல்பத்தைக் குறுந்தகடு வடிவிலும், MP3 வடிவிலும் இணைய வாசகர்கள் இந்த வலைத்தளத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.