மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?

கார்கில் போர் வெற்றியின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு நாடு தயாராகிக் கொண்டிருந்த அதே வேளையில் பிரிட்டனில் பெரும் சர்ச்சை ஒன்று வெடித்திருந்தது. தலிபானை அழித்தொழிக்க ஆஃப்கானிஸ்தான் அனுப்பப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் படைகளுக்குப் போதுமான அளவில் ஆயுதத் தளவாடங்களை அனுப்பத் தவறியிருந்தது  அரசு. ப்ரிட்டிஷ் அரசின் இந்த பொறுப்பின்மைக்கு எதிராக பத்திரிக்கைகளிலும், பாராளமன்றத்திலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

முக்கியமாக, தேவையான எண்ணிக்கையில் ஹெலிகாப்டர்கள் இல்லாமல் ப்ரிட்டிஷ் படைகள் போரில் இறக்கிவிடப்பட்டுள்ள நிலையை அந்நாட்டின் ராணுவப் பிரதம தளபதி ஜென்.சர்.ரிச்சர்ட் டென்னட் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும், பின்னர் பத்திரிகைகளுக்கும் விளக்க, பிரதமர் கார்டன் பிரவுன் ப்ரிட்டிஷ் பாராளமன்றத்தில் சற்றே அதிகமாக விமர்சிக்கப்பட்டு தர்மசங்கடத்துக்கு ஆளானார்.

அங்கு, ப்ரிட்டிஷ் தளபதி தனது துருப்புகளுக்குத் தேவையான தளவாடங்களைப் பெற்றுத் தர தன்னாட்டுப் பிரதமருக்கே தர்மசங்கடம் ஏற்படுத்திக்கொண்டிக்க, இங்கு இந்தியா கார்கில் போரில் வீரமரணம் எய்திய 526 இந்திய ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயாராகிக்கொண்டிருந்து. தில்லியில் அனைவருக்கும் முன்பாக போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டிய ராணுவத் தளபதி மட்டும் நாட்டிலேயே இல்லை.

கார்கில் யுத்தம்
கார்கில் யுத்தம்

ஜென்.தீபக் கபூர் அலுவல்களைக் கவனிக்கவும், இந்திய-அமெரிக்க ராணுவம் உறவுகளை மேம்படுத்தவும் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்கா செல்வதிலோ, உறவுகளை மேம்படுவதிலோ, எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தமது படைவீரர்களை நினைவுகூறும் நாளன்று இந்தியாவில் இருக்குமாறு தனது பயணத்திட்டத்தை அமைத்துகொள்வதில் அவருக்கு அதிக சிரமம் இருந்திருக்காது என்று நம்பலாம்.

போர் நினைவு தினத்தை சரியாக அனுசரிக்காதது பெரியதொரு தவறாகக் கருதாமல் மறந்துவிட இயலும். ஆனால் இந்தியப் படைகளின் இன்றைய நிலையோ மேலே சொல்லப்பட்ட சிறிய தவறை தேசியப் பாதுகாப்பு நிறுவனங்களில் புரையோடியிருக்கும் ஒருவித தேக்கநிலையை எடுத்துக்காட்டுவதாகவே கருதவேண்டியிருக்கிறது. போரின் பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த தவறுகளை விசாரித்த சுப்ரமணியம் கமிட்டி அவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக உளவு நிறுவனங்களையும், அரசியல் மட்டத்தில் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பது ஆகியவற்றைப் பற்றியே சுப்ரமணியம் கமிட்டியின் பரிந்துரைகள் அமைந்தன.

உண்மையில் உளவுத்துறையில் சில தவறுகள் நிகழ்ந்திருந்தாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அதைவிட அதிகத் தவறுகளும், கீழ் மட்ட அதிகாரிகளிடம் இருந்துவரும் தகவல்களை உதாசீனப்படுத்துதலும் நிரம்பவே நடந்துள்ளதாகத் தெரிகிறது. ஊடுருவல் சம்பந்தமாக கீழ்மட்ட அளவில் ஒரு சில கமாண்டர்களுக்குக் கிடைத்த இராணுவ உளவு தகவல்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட போதும் அவை வழக்கமான ஊடுருவல்கள் என்று உதாசீனப்படுத்தப்பட்டன. மே மாதம் ஸ்ரீநகரில் நடந்த Unified Command-இன் கூட்டத்தில்கூட வடக்கு கமாண்டைச் சேர்ந்த லெப்.ஜென்.பால் பெரிய அளவில் ஊடுருவல் எதுவும் இல்லையென்றும், ஊடுருவக் காத்திருக்கும் சில பாகிஸ்தானியரையும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளைக் கொண்டே சமாளிக்க இயலும் என்று வாதாடினார்.  கீழ்மட்ட அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளும், கிடைத்த உளவுத் தகவல்களும் உண்மையிலேயே வருடா-வருடம் நடைபெறும் ஊடுருவலைப் போன்றே 1999ஆம் ஆண்டும் நடைபெறுவதைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கலாம்; அதனாலேயே ராணுவம் போரின் ஆரம்பத்தில் சில தவறுகளை செய்திருக்கலாம். காஷ்மீர் போன்ற பல்லாயிரம் வீரர்கள் எல்லைப்பகுதிகளில் இருபக்கமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விசாரிப்பதும் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் எந்தவொரு ராணுவ அமைப்புக்கும் மிகவும் முக்கியமான விஷயம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தாலும் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அந்த விசாரணையின் முடிவு தெளிவாக எடுத்துச் செல்லப்படவில்லை.

போரின் போது செய்திவாசிப்பாளர்களுக்கு அடுத்து அதிகமாக தொலைகாட்சியில் நாம் கண்டது போபர்ஸ் பீரங்கிகளை. 1986ஆம் ஆண்டு மொத்தம் 1500 போபர்ஸ் 155 எம்.எம் பீரங்கிகள் வாங்க சுவீடன் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ரத்து செய்யபட்டது. இந்த ஒரே ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த இருபது வருடங்களில் நவீன 155 எம்.எம் பீரங்கிகளை நம் நாடு வாங்கவேயில்லை. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகவே இந்திய ராணுவம் டெண்டர் மீது டெண்டராக வெளியிட்டுகொண்டே இருக்கிறது – ஒவ்வொரு முறையும் போபர்ஸ் நிறுவன பீரங்கிகளே சோதனைகளில் முதல் இடம் பிடிக்கின்றன. அரசியல்வாதிகளோ போபர்ஸ் பக்கம் போவதற்கே அஞ்சுகிறார்கள். வேறு நாடாக இருந்தால் பத்திரிகைகளிலும், பாராளமன்றத்திலும் அரசாங்கத்தை விமர்சித்து நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும். கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கபட்ட ஜென். ரிச்சர்ட் டென்னட் மற்றும் ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகளின் செயல்பாடு இதற்கு ஒரு நல்ல உதாரணம். அனால் இங்கே இதுவரைக்கும் ராணுவத் தலைமை பாதுகாப்பு அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொண்டுவிட்டது.

சரிசெய்யப்படும் போஃபர்ஸ் பீரங்கி (நன்றி: Indian Express)
சரிசெய்யப்படும் போஃபர்ஸ் பீரங்கி (நன்றி: Indian Express)

அரசியல் தடைகளைக் கூட அகற்ற இயலும், ஆனால் ராணுவம் தனக்குத் தானே விதித்துகொள்ளும் தடைகளை அகற்றுவது சற்று கடினமானது. உதாரணமாக போபர்ஸ் நிறுவனம் ராணுவத்திடம் இருக்கும் 400 போபர்ஸ் பீரங்கிகளை இந்திய இராணுவம் கேட்கும் அளவுக்கு மேம்படுத்த முடியாது என்று தெரிவித்துவிட்டது. ராணுவமோ புதிய ரக பீரங்கிகளின் அளவுக்கு செயல்பாட்டை அதிகப்படுத்தினால் தான் காண்டிராக்ட் என்கிறது. யாருமே மேம்படுத்த முடியாத அளவுக்கு ஒரு தளவாடத்தின் தரமும் செயல்பாடும் இருக்கவேண்டும் என்று கேட்பதும், அதற்கு ஒரு டெண்டர் கோருவதும் நாட்டின் பாதுகாப்புக்கு கேடுவிளைவிக்கக் கூடிய ஒன்று தானே ஒழிய எந்த விதத்திலும் ராணுவத்திற்குப் பயன் தருவதாக அமையாது.

இதே போன்ற நிலையை டாங்கிகள் விஷயத்திலும் பார்க்க முடிந்தது. உள்நாட்டுத் தயாரிப்பான அர்ஜுன் டாங்கிகள் முதல் நாள் சோதனையில் இருந்து ரஷ்ய/அமெரிக்க டாங்கிகளை விடச் சிறப்பாக செயல்படவேண்டும் என்று எதிர்பார்த்த இந்திய ராணுவம் ரஷ்யத் தயாரிப்பான 1970களில் வடிவமைக்கபட்ட டி-72 ரக டாங்கிகளின் இறுதிகட்ட பரிணாமமான டி-90 டாங்கிகளை ஏறக்குறைய கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறது. வருங்காலத்தில் சிறப்பாக மேம்படுத்தக் கூடிய அர்ஜுன் டாங்கிகளை பழைய ரக டாங்கி என்று ஒதுக்கிவிட்டு மேம்பாட்டுக்குக் குறைவான வாய்ப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பான டி-90 டாங்கிகளை மட்டும் அதிக எண்ணிக்கையில் வாங்குகிறது. டி-90 டாங்கிகள் முதல் நாளிலிருந்தே ஏதேனும் ஒரு கோளாறை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது – ராணுவமும் பொறுமையாக அவற்றைச் சரிசெய்கிறது. ஆனால், இதே பொறுமையை அர்ஜுன் டாங்கிகளிடம் காட்ட மனம்வரவில்லை ராணுவத் தளபதிகளுக்கு.

கார்கில் போரின் போது வெளிநாட்டில் வாங்கியிருந்த பீரங்கிகளின் ஷெல்(குண்டுகள்) பற்றாக்குறை ஏற்பட்டபோது இஸ்ரேல் அவசர-அவசரமாக இந்தியாவுக்கு ஷெல்களை அனுப்பி உதவிசெய்தது. வருங்காலத்தில் இது போன்ற அவசரமான சூழ்நிலைகளில் டி-90 டாங்கிகளில் ஏதேனும் பிரச்சனை/உதிரி பாக பற்றாக்குறை என்றால் ரஷ்யாவிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தன்னைத் தானே உட்படுத்திக் கொண்டுள்ளது. உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பே தொலைநோக்கு அடிப்படையில் உகந்தது என்ற பாடத்தை கார்கில் போரில் இருந்து ராணுவம் கற்கவில்லை. உள்நாட்டுத் தயாரிப்புகள் சர்வதேச தரத்தை அடைய சிறிது காலம் பிடிப்பது இயல்பு. ஆனால் ராணுவம் உள்நாட்டு ஆயுத உற்பத்தியை ஊக்கப்படுத்த எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. அரசுத்துறை ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஒரு காலத்தில் தரமில்லாத ஆயுதங்களை ராணுவத்திற்கு சப்ளை செய்தது உண்மையென்றாலும் உள்நாட்டு நிறுவனங்களை மேம்படுத்துவதே அவசர கட்டத்தில் ராணுவத்திற்கு உதவும். எப்போதும் இஸ்ரேல் உதவிக்கு வரும் என்று என்ன நிச்சயம்?

அரசியல் தலைமையுடன் அனைத்துவகையான தொடர்புக்கும் இன்றுவரை ஆங்கிலேயர் விட்டுச் சென்ற வழிமுறைகளையே கையாளப்பட்டு வருவதை சுப்ரமணியம் கமிட்டி விமர்சிக்காமல் இல்லை. முப்படைகளையும், பாதுகாப்பு சம்பந்தமான மற்ற நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவையையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து தேசிய பாதுகாப்புத் தலைமையகம் போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தாமல் இன்றுவரை ஏனோ தானோ என்றே ராணுவ விவகாரங்கள் கையாளப்பட்டுவருவதாக தெரிவிக்கிறது சுப்ரமணியம் கமிட்டி.

நவீன இந்தியாவின் தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் ராணுவத்திலும் தேசியப் பாதுகாப்பு நிறுவனங்களிலும் தேவைபடுகின்றன. இந்தியத் தரைப்படையில் மட்டும் பதிமுன்று லட்சம் வீரர்கள் தேச சேவை புரிகின்றனர் – இத்தனை பெரிய நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகப் பெரிய சவால் என்றாலும் இன்றைய நிலையில் ராணுவம்தான் சீர்திருத்தங்களுக்குத் தடையாக நிற்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை. மேலும் ராணுவ சீர்திருத்தங்களை வடிவமைத்துச் செயல்படுத்த ராணுவத்தால் மட்டுமே இயலும். அப்படிபட்ட சீர்திருத்தங்களை ஆரம்பித்துவைக்க சிறந்த ராணுவத் தலைமையும் அவசியம். அரசியல் தலையீட்டையும், ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கக்கூடிய கவர்னர் பதவிகளையும் பற்றி அதிகம் கவலைப்படாமல் செயல்படக்கூடிய தலைமைத் தளபதியை நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

’கார்கில் – பத்துவருடங்கள்’: சில புகைப்படத் தொகுப்புகள்

இந்தியா டுடே
Ibn Live Indian Express

One Reply to “மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?”

Comments are closed.