மனிதன்+

ஊர் பூரா ரிசெஷன். போளி ஸ்டால் ராயர்கூட ‘ரிசெஷன் ஸ்பெஷல்’ என்று சின்ன சைஸ் மசால்வடை போட ஆரம்பித்துவிட்டார். தினம் பொழுதுவிடிந்தால் இண்டர்வியூவுக்கு வரும் மானாவாரியான இளைஞர்களிடமெல்லாம், “பட்டா பட்டி டை கட்டிக்கொண்டு வந்தால் போதாது, கொஞ்சம் புத்திசாலித்தனமும் எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லாமல் சொல்லி அலுத்தாகிவிட்டது. முப்பது பேரை நேர் கண்டால் ஒரு இளைஞன் தேறுகிறான்/றாள். தத்தி முத்தி எப்படியோ ஒரு பட்டம் வாங்கி வந்துவிடுகிறார்களே தவிர, உயிர் வாழ்தலின் அடிப்படையான சூட்சுமங்களை இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று அடி வயிற்றிலிருந்து பட்டினத்தார் போன்ற ஏக்கம் பீறிடுகிறது. நாகரிகம் முன்னேற முன்னேற, மனிதன் மலடாகிக் கொண்டிருக்கிறான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அசடாகவும் ஆகிக் கொண்டிருக்கிறானோ?

‘தி அட்லாண்டிக்’ இதழில் சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று சற்றே ஆசுவாசம் தருகிறது (ஜமாயிஸ் காஸ்ஷியோவின் –Jamais Cascio-கட்டுரைக்கான சுட்டி கீழே தரப்பட்டிருக்கிறது). 74,000 வருடம் முன்பு சுமத்ராவில் மகா எரிமலை வெடித்து, சாம்பல் புகையால் சூரியன் வடிகட்டப்பட்டு, உலகம் ஃப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி குளிர்ந்து, ஏறக்குறையக் கூண்டோடு சாகத் தெரிந்தோம். அதில் சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே பிழைத்தன என்கிறார்கள்.

இந்த மாதிரி ஆபத்துகள் பூமிக்குப் புதியவை அல்ல. இருபது லட்சம் வருடமாக அதற்கு ஏதாவது ஒரு வல்லடி, வலிப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. இதில் கடைசியாக வந்த குளிர் ஜுரம் 10,000 வருடம் முன்னால் நேர்ந்த ஐஸ் யுகம். திடீர் திடீரென்று பருவ நிலைகளுக்கு மூடு மாறும்போது மனிதன் குழம்பிப் போய், இந்த சீசனில் எந்தப் பிராணியைச் சாப்பிடலாம், எது நம்மைச் சாப்பிடும் என்று புரியாமல் தவித்திருக்கிறான். பிறகு எப்படிச் சமாளித்தான்? தன்னுடைய புத்திசாலித்தனத்தை அதிகரித்துக்கொண்டு!

வில்லியம் கால்வின் என்கிற ஏதோ நரம்பு டாக்டர், நவீன மனிதனுடைய உயர் திறமைகள் யாவும் இந்தக் கொடுமையான ஐஸ் யுகத்தின்போது பரிணாமம் அடைந்ததுதான் என்கிறார்; மொழித் திறமை, சதித் திறமை எல்லாம் இதில் அடக்கம். ஓடும் நாயைக் குறி பார்த்துக் கல்லால் அடிக்கும்போதுகூட, எதிர்காலத்தைக் கணித்துச் செயல்படும் நம் திறமையைத்தான் உபயோகிக்கிறோம்.

இப்போது நம் எரிமலைகள் சாதுவாகிவிட்டாலும், அதைவிடப் பல பெரிய ஆபத்துக்கள் மூலை திரும்பினால் காத்திருக்கின்றன:

1. நம் நாகரீகத்துக்கே ஆதாரமான பெட்ரோல், டீசல் யுகம் முடியப்போகிறது. தரைக்கு அடியில் கையிருப்பு சொற்பம்தான். இனிமேல் ஆபீசுக்கு நாக்கு உலர சைக்கிள் மிதிக்க வேண்டியிருக்கும்.

2. உலகத்தின் உணவு உற்பத்தி – விநியோகம் – கேரளாவுக்கு அரிசி கடத்தல் – சாப்பாடு என்கிற உணவுச் சுழற்சி (food cycle) மிகவும் பலவீனமானது; எந்த நிமிஷமும் நொறுங்கக்கூடியது.

3. குழந்தை பெற்றுத் தள்ளிக்கொண்டிருக்கிறோம். உலகம் அடைசலாகிக் கொண்டிருக்கிறது!

4. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இதய நோய்கள் – அடுத்தது என்ன?

5. பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி போன்றவையெல்லாம் வகை தெரியாமல் வளர்ந்து நமக்கே ஒரு நாள் வேட்டு வைத்துவிடலாம்.

Courtesy : newscientist.com
Courtesy : newscientist.com

இதெல்லாம் நம் வாழ்வைக் கலைப்பதற்கும், முடிப்பதற்கும் வல்லவை. நல்ல வேளையாக, நம்முடைய மூளையும் பரிணாம வளர்ச்சி அடைந்து, அதற்கு எதிர்கால ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து, உரிய தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திறன் கிடைத்திருக்கிறது.

ஆனால் ஒன்று: குறுகிய காலத்தில் நடக்கப்போகிற, உடனடியாகக் கண்ணுக்குத் தெரிகிற ஆபத்துக்களைத்தான் நம் மூளை கிரகித்துக்கொள்ள முடிகிறதே தவிர, மெல்ல மெல்லக் கவிந்து வந்து நீண்ட காலத்தில் நம்மை அழிக்கப்போகும் அபாயங்களை உணர்வதில் இன்னும் நாம் பக்குவப்படவில்லை. அதிலும் உலகம் தழுவிய சிக்கலான பிரச்னையாக இருந்தால் நம்மால் அவற்றை அறிய முடிந்தாலும், உணர முடிவதில்லை. சந்தேகம் இருந்தால் மரத்தையெல்லாம் வெட்டிச் சாலையை அகலப்படுத்தும் சர்க்கார் ஆசாமிகளைக் கேளுங்கள்.

இப்போது, ஒரு நல்ல செய்தி: சில விஞ்ஞானிகள் பயம் காட்டுவது போல் இந்த அழிவெல்லாம் வரப்போகிறது என்பது உண்மையானால், அப்போது நாமும் நம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம். நீண்ட கால ஆபத்துக்களைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வோம். இந்த முறை, ஐஸ்யுக மனிதனுக்கு இல்லாத மற்றொரு வசதியும் நமக்கு இருக்கிறது: டெக்னாலஜி!

பரிணாம இட்லிப் பானையில் மெல்ல மூளை வெந்து பக்குவப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபாஸ்ட் ட்ராக்கில் நாமே நம் பரிணாமத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்தப் போக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட்டில் புகுந்தவுடன் ஒரு தேன்கூட்டின் அறிவு போல் ஒத்து யோசித்து ஒரே மாதிரி செயல்படுகிறோம். ஒரே எம்.பி-3 பாட்டை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்கிறோம். அதிக நேரம் தூங்காமல் விழித்திருக்க, கவனத்தைக் கூர்தீட்டிக்கொள்ள, மருந்துகள் இருக்கின்றன. (சாப்பிடாதீர்கள்.) கணினியில் ‘விஷுவலைசேஷன்’ என்று மனம் நினைப்பதைக் கண்முன் படமாகக் காட்ட மென்பொருள்கள்.

genetic-engineering-cartoonஅடுத்த பத்துக்கணக்கான வருடங்களில் மரபீனி தொழில்நுட்பமும் (genetic engineering) செயற்கை அறிவும் போய் நிற்கப்போகிற இடத்துடன் ஒப்பிட்டால், இன்றைய டெக்னாலஜியெல்லாம் சிக்கி முக்கிக் கல். இவை யாவும் சேர்ந்து நம் மூளைத் திறனை அதிகரித்து, ‘மனிதன்’ என்ற இனமாக இருந்தவன் ‘மனிதன்+’ என்று புது இனமாகப் பரிணமிப்பான். இந்த ப்ளஸ் மனிதன் தோன்றும்போது, காதருகே செல்போனைப் பிடித்துக்கொள்ள ஒரு சின்ன உபரிக் கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த பனி விலகிய 12,000 வருடத்தை ஹோலசீன் யுகம் என்கிறார்கள். அதன்போது நம் புற உலகத்தைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டோம். இனிமேல் அக உலகம்: நம்முடைய மூளை, உலகின் தகவல் வெள்ளத்தை எப்படி அசை போட்டு ஜீரணிக்கப் போகிறது என்பதில்தான் நம் அடுத்த பரிணாம வளர்ச்சி இருக்கப் போகிறது. மனிதன் மொழியை, எழுத்தைக் கண்டுபிடித்தபோதே ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு, கால தூரங்களைக் கடந்து செய்தி அனுப்ப முடிந்துவிட்டது. தபால் தந்தியெல்லாம் வேறு உதவின. காடுகள் கிராமமாகி, கிராமங்கள் நகரமாகி அன்றாடச் சாப்பாட்டுக்கு முயல் வேட்டையாட அவசியமின்றி டைனிங் டேபிளுக்கே உணவு வந்துவிட்டது. எனவே மனிதர்களில் ஒரு பகுதியினர் உட்கார்ந்த இடத்திலிருந்தே சீட் தேய, மூளையால் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். மனிதன் தகவல் உலகத்தில் வாழ ஆரம்பித்தான்; சீக்கிரமே தகவல் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தான்.

கூகிளில் இன்றைக்கு sex என்று தேடினால் 66,80,00,000 பக்கம் வருகிறது. ரேடியோ, டிவி, செல்போன் என்று நாற்புறமும் தகவல் சாதனங்களின் முற்றுகை. நவீன வீடியோ கேம்களிலும் மாமியார் கொடுமை சீரியல்களிலும்கூட எத்தனை நுணுக்கங்கள், திருப்பங்கள், இன்னும் விரிவான சப்ஜெக்டுகள் பற்றி ஜாடையான குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன… இந்தத் தகவல் அருவியின் ‘ஜோ’வில் சதா நனையும் நமக்கு எதையும் சரியாகக் கவனிக்க முடியாமல் நிரந்தரமாகவே அரைப் பிரக்ஞை நிலையில்தான் விவரங்களை உள்வாங்கிக் கொள்கிறோம். தகவல் எது, பின்னணி இரைச்சல் எது என்பதே புரிவதில்லை. ஆல்வின் டாஃப்ளர் இதை ‘தகவல் ஓவர்லோடு’ என்று 1970-களிலேயே தீர்க்கதரிசனமாகச் சொன்னார்.

அளவுக்கு மீறித் தகவல்கள் இருப்பது பிரச்னை அல்ல; அதை அடக்கிச் சவாரி செய்ய இன்னும் சரியான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை; அதுதான் பிரச்னை. தலையில் ஆபரேஷன் செய்து ஏதாவது சிலிக்கான் சில்லு பதித்துக் கொள்ளலாமா? சில்லில் பதிந்த சாஃப்ட்வேர் நம் விண்டோஸ் மாதிரி க்ராஷ் ஆகிவிட்டால் என்ன ஆகும்? பாயைப் பிறாண்டுவோமா, அல்லது ப்ளாக் எழுத ஆரம்பித்து விடுவோமா?

மற்றொரு சாத்தியம், நம் ஜீன்களை வெட்டி ஒட்டி மூளையை மேம்படுத்த முயற்சிப்பது. இதுவும் சமீபத்திய எதிர்காலத்தில் எட்ட முடியாத உயரத்தில்தான் இருக்கிறது.

பின்னே, என்னதான் தீர்வு?

(அடுத்த இதழில் நிறைவுறும்)

_________________________________________________________________

மேலே சொல்லப்பட்ட  ’ஜமாய்ஸ் காஸ்ஷியொ’வின்  கட்டுரையை இங்கே காணலாம்.