அமெரிக்காவில் ஜெயமோகன்

விமானத்தில் இருந்து இறங்கி வருபவர்களுக்கென்று சில சாமுத்ரிகா லட்சணங்கள் உண்டு. கலைந்த சிகை; பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்ட 24 மணி நேரமும் விண்ணிலும் மண்ணிலும் சுற்றிய களைப்பு; கசங்கிய ஆடை என்று பயணங்களில் உங்களை கவனித்திருப்பீர்கள். ஜெயமோகனிடம் ஏனோ இதெல்லாம் காணக்கிடைக்கவில்லை. விமானம் வந்துசேர்ந்த பதினைந்தே நிமிடங்களில் வெளியே வந்துவிட்டார். விட்டால் அப்படியே நேரடியாக சென்று கீநோட் பேச்சுக் கொடுக்க தயாராக இருக்கும் பாவத்துடன் வந்திருந்தார்.

அன்றாடம் இந்தியா சென்று திரும்பும் என்னிடம் ஐம்பது பவுண்டுக்கு சற்றும் குறைவைக்காத இரு பெரும் பெட்டிகளும், கைமாடாக இன்னும் இரு பைகளும் என இந்து தெய்வங்களைப் போல் நாலு கை நிறைந்து இருக்கும். ஜெயமோகன் எளிமையான பயணி. உள்ளே ஒன்று; கையில் ஒன்று; கூடவே மடிக்கணினிப் பை. அம்புட்டுதான். எழுத்திலும் இந்த மாதிரி சிக்கனம் காட்டலாம் என்று தோன்றியதை சொல்லாமல் அடக்கிக் கொண்டேன்.

காதோரம் நரை. பேசும்போது ஊடுருவும் கண்; விறைப்பான அமைதியான நடை; பிறர் சொல்லும் விஷயம் தெரிந்திருந்தாலும் கேட்டுக்கொள்ளும் பொறுமை; ‘அடுத்து என்ன’ என்று அவசரப்படாத, பதட்டம் கொள்ளாத தன்மை; ‘எனக்கு இதுதான் வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொள்ளாத, கொடுத்தால் மட்டும் பெற்றுக் கொள்ளும் நாணல் சுபாவம்; தலையணை வைத்துக் கொள்வதில்லை; எந்த உணவாக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி முயற்சிக்கிறார்.

jm2
புகைப்படம்: வேல்முருகன்

எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுபிடிப்பது முக்கியமாகப் பட்டது. அவரும் தமிழை ஃபோனெடிக் முறையில், அஞ்சல் கொண்டு தட்டச்சுகிறார். ‘நேரமாச்சு’ என்று குரல் கொடுத்தபின்னும் அசராமல், இணையத்தில் 30 நிமிடமாவது மேய்கிறார். ‘இன்னும் கிளம்பலியா’ என்றபிறகு 15 நிமிடம் எடுத்துக் கொள்கிறார். அப்பொழுது மனைவியிடமிருந்து ‘உங்களைப் போலவே ஜெயமோகன் இருக்கிறார்’ என்று பெருமிதப்பட வைத்த தருணம்.

கண்ணாடியை மூக்கின் நுனியில் தள்ளிக்கொண்டு நோக்கும் பார்வையில் அவரிடம் கதைவிட முயல்பவர்களுக்கு கொஞ்சமாய் அச்சம் கலந்த தற்காப்புணர்ச்சி மேலிடுகிறது. எதைக் குறித்துக் கேட்டாலும் அதற்கு பதில் வைத்திருக்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வராவிட்டாலும், மேலும் கேட்க நிறையக் கேள்விகள் தோன்றும்.

ஒரு வருடத்திற்கு ஜெயமோகன் சற்றேறக்குறைய ஆறு மேடைப் பேச்சுக்கள் தருகிறார். இந்த வருடம் ஆஸ்திரேலியாவோடு சேர்த்து ஒன்றிரண்டுதான் முடிந்திருக்கிறது. மற்றவற்றை ஈடுகட்ட, அமெரிக்கா வருவதற்காக, சிந்தனையைத் தூண்டும் சிதறல் எண்ணங்களையும் செறிவான தகவல் நிறைந்த கருத்துக்களையும் தயாரிக்கும் வேலை பின்னணியில் நடந்திருக்கும். அந்த உழைப்பு பேச்சில் தெரியாதவாறு எளிமையாக்கிக் கொடுக்கிறார்.

தமிழ் ஈழம் குறித்த வினாவா? நடந்து முடிந்த தேர்தல் களமா? ஜான் அப்டைக்கின் எழுத்து நடையும் Paula Coelhoவின் புத்தகங்களும்… எதைப் பற்றியும் ஆணித்தரமான நம்பிக்கையை உண்டாக்கும் விதத்தில், ஆதாரபூர்வமான தரவுகளுடன், மனதில் பதியும் எடுத்துக்காட்டுகளுடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, வாதிடும் லாவகமும், புத்தியில் நிறையும் வீரியமும் வியக்க வைக்கிறது.

ஜெயமோகன் மட்டும் பேசுவதை எல்லாம் எழுதிவந்தால், தமிழ் தகவற் களஞ்சியம் தயார். கைவசம் குறிப்புகள் இல்லாமலோ, பவர்பாயின்ட் ஸ்லைடுகள் போடாமலோ, கோர்வையாக, விஷய அடர்த்தியுடன், தெளிவாகப் பேசுவதை ஒலிப்பதிந்து ஆடியோ பதிவுகளாக இட வேண்டும். ஒலிப்புத்தகங்களாக்கி பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கேட்டதில் எதிரொலியாக அலையடிக்கும் சில ஜெமோண்ணங்கள்:

நந்திகிராம்: கலவரம் நடந்தவுடன் அங்கே சென்றிருந்தேன். பல இடங்களுக்கு, குடியிருப்புகளுக்குள், கிராமங்களுக்குள் இந்தியர்கள் செல்ல அனுமதியே கிடையாது. மொத்த ஊரும் பங்களாதேஷில் இருந்து ஊடுருவியிருக்கு. அரசாங்க அனுமதியுடன், மார்க்சிஸ்ட் அரசின் ஆசியுடன் இந்த அத்துமீறல், குடிபுகல் நடந்தேறியிருக்கு. நன்றிக்கடனாக, உள்ளே வந்த பங்களாதேஷியர்களும் கம்யூனிஸ்ட் வாக்கு வங்கியாகவே இருந்தார்கள். கொஞ்ச நாளில் காஷ்மீர் மாதிரி வங்காளமும் ஆசாதி கோரலாம்.

இளையராஜாவோடு நேசம் கலந்த நட்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். எந்த ட்யூனை கொடுத்தாலும், அதன் அசலை எங்கிருந்தோ கொணர்ந்து ஒத்திசைவை காட்டுகிறார். புது மெட்டாக இருக்கட்டும், இந்திப் பாட்டாக இருக்கட்டும். அவரின் அனுபவம் பிரமிக்க வைக்கிறது.

நீர் மேலாண்மை: காவிரியில் டிஎம்சிங்கிறோம்; வீராணம் ஏரின்னு ரொம்ப காலமாக சொல்லிண்டு இருக்கோம்; ஆந்திரா அணை கூடாது; பெரியார் பாலம் என்று ஆயிரக்கணக்கில் தேவையில்லாத பிரச்சினைகளை பூகம்பமாக்கி, அரசியல்வாதி அறிக்கைப் போரிலும், மாநில பூசல்களாகவும் வளர்த்து வாக்குப் பெட்டி நிரப்புவதுதான் நடக்கிறது. காவேரி கடலில் வீணாகாமல் இருக்க ஆயிரக்கணக்கான ஏரிகள் தஞ்சாவூர் ஜில்லாவில் சோழ இராச்சியத்தில் கட்டப்பட்டது. அவையெல்லாம் இன்று பட்டா போடப்பட்டு, அரசியல் தலைவர்களின் நிலங்களாக மாறி, அடுக்கு மாடி வீடாகி விட்டது. கர்னாடகத்தில் போராடி வாங்கும் தண்ணீர், கடலில் சென்று கலக்கிறது. வீராணம் ஊழல் பிரசித்தி பெற்றது. இருக்கிற நீர்வளத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு, அணைகளை செப்பனிட்டு, குளங்களை மீட்டெடுத்து, ஏரிகளைத் தூர்வாரினாலே தமிழகம் செழிக்கும்.

குறிப்பாக ஷங்கர் படம் பார்ப்பது போல் தமிழ்நாட்டின் தண்ணீர் வீணடிப்பைக் காட்சிப்படுத்தினார் ஜெயமோகன். சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, பூறம்போக்கு நில ஆக்கிரமிப்பு, அரசியல் சதுரங்கம், தலைவர்களின் அலட்சியம் என்று ஒவ்வொரு நிகழ்வையும் முடிச்சுப் போட்டு, கல்லணை காலத்தில் இருந்து ஆளுங்கட்சிகளின் ஊழல் மகாத்மியம் தொட்டு, குடியானவனின் இன்றைய தேவையை புள்ளிவிவரங்களாக்கி ஜெயமோகன் கொடுத்தவிதம், கோபமும் வேகமும் ஆதங்கமும் எழவைத்தது.

கனமான களங்களை ஆராயும் கேட்போரின் ஆசுவாசத்திற்கு சீமான் நகைச்சுவை, தமிழ் சினிமா இயக்குநர்களின் உழைக்கும் ஸ்டைல் போன்ற கொசுறு சமாச்சாரங்களும் கொடுத்தார்.

அசோகமித்திரனை முதன்முதலாக தமிழ் நாவல் உலகின் முன்னோடியாக முன்னிறுத்தியது, சுந்தர ராமசாமி இல்லத்தில் பயணித்த தருணங்களை ‘நினைவின் நதியில்’ ஆக்கியது, எழுத்தாளர் நகுலனை திருவனந்தபுரத்தில் சந்திக்கச் சென்றது, ஜெயமோஹன்.இன் வலைக்கட்டுரைகளின் விரிவாக்கமான கருத்தோட்டங்கள் என்று மனிதர்களையும் அவர்கள் முன்னிறுத்திய இலக்கணங்களையும் இலக்கியத்தரமாக, தத்துவார்த்தமாக, சம்பவங்களாக, விவரித்த விதம் ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று சொக்குப்பொடியிட்டு பல இரவுகளை நள்ளிரவு தாண்டியும் ஆர்வமாக்கியது. அதன் பிறகும், அவர் மின்னஞ்சல் பார்த்து, பதிலிறுத்து, அதன் பின்னே உறங்கினார். அதிகாலை ஐந்தரைக்கெல்லாம் அலாரம் எதுவுமில்லாமல் எழுந்தும் விடுகிறார்.

ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்ததாக மூன்று துறைகளை சொல்கிறார். இலக்கியம், வரலாறு/கலாச்சாரம், தத்துவம். முதல் இரண்டையும் ஜெமோ உரையாடினால், அதன் தொடர்பான விவாதங்களை சாதாரணர்களிடமும் எழும்புவதை கவனிக்கலாம். தத்துவத்தை ஞானம் x கர்மம்என்று பாரத நாடு சித்தாந்தம் சார்ந்து மேற்கத்திய கொள்கைகளோடு ஒப்பிட்டு, ஜெயமோகன் முன்வைக்கும்போது, ‘கற்றது கைமண்ணளவு’ என்று சரஸ்வதி இவரைப் பார்த்துதான் சொன்னாளோ என்று எண்ண வைக்கும்.

ஒருவரின் வாசிப்புத் திறத்தை அறிய அவரை புத்தகக் கடைக்கு அழைத்து சென்று இரண்டு மணி நேரமாவது விட்டுவிட வேண்டும். இவரையும் அப்படி செய்தேன். சிலர் புத்தகத் தலைப்பை பார்த்து செல்வார். அவற்றுள் படித்ததை நம்மிடம் நினைவு கூர்வார். வேறு சிலர், அதை எடுப்பார்; விலையைப் பார்ப்பார்; பின்னட்டையை பார்ப்பார்; உள்ளடகத்தைப் பார்ப்பார்; வைத்து விடுவார். வெகு சிலர், தான் தேடும் நூல் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறிவிடுவார்; மற்றவற்றை ஏறெடுத்தும் பாரார்.

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

மேகமூட்டமான வானிலையை அமெரிக்கர்கள் ரசிப்பதில்லை. அவர்களுக்கு நீல வானம் பளிச்சென்று தெரியும் சூரியன் கொளுத்தும் தினங்கள்தான் ராசி. எழுத்தாளரைச் சுற்றியிருக்கும் மேகமூட்டத்தை நீக்கி, அவரின் முழு வீரியத்தையும், சுட்டெரிக்கும் ஆளுமையையும் முழுமையாக கவனிக்கக் கிடைக்கும் நாள்கள் பாஸ்டன்வாசிகளுக்கு மிகக் குறைவு. கிடைத்த ஒளியை, நிலாவாக வாங்கி பிரதிபலிக்க முடிவது வேறு விஷயம்.

ஜெயமோகன் முத்துலிங்கததை சந்தித்தது இன்னொரு சுவாரசியமான கதை. அதை இன்னொரு நாள்தான் அசை போடவேண்டும்.

One Reply to “அமெரிக்காவில் ஜெயமோகன்”

Comments are closed.