kamagra paypal


முகப்பு » அஞ்சலி, ஆளுமை, எழுத்தாளர் அறிமுகம்

அம்ரிதா ப்ரீதம்

அஜ் மை(ம்) ஆக்கா(ன்) வாரிஸ் ஷா நு

(பஞ்சாபிக் கவி, கதாசிரியர் அம்ரிதா ப்ரீதம் அவர்களின் மறைவுக்குப் பின் எழுதிய அஞ்சலி)

Bengal_Writers_Amritha_Preetham_Pritam_Amrita_Authors

தன் 86-ம் வயதில் (1919-2005) மறைந்த அம்ரிதா ப்ரீதம் பற்றி எழுதுவது சுவாரஸ்யமான அதே சமயம் சிக்கலான விஷயமும் கூட.  நிறைந்த புகழும் தன் வாழ்நாளிலேயே வெற்றியும் அடைந்தவர். இன்றைய பஞ்சாபி இலக்கியம் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே முதலில் முன்னிற்பது அவரது பெயராகத்தான் இருக்கும். அந்த பெயர் நமது பிரக்ஞையில் கொண்டு சேர்க்கும் நினைவுகள், பஞ்சாபின் இலக்கிய சரித்திரத்தையும், அரசியல் சரித்திரத்தையும், அந்த மண்ணின் பெண் பட்ட வேதனைகளையும், அதேசமயம் அந்தப் பெண் எல்லாவற்றையும் மீறி தலை நிமிர்ந்து நிற்பதையும் கொண்டு சேர்க்கும். அவரது கவிதையில் பஞ்சாபின் ஸூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்திருப்பதையும் காணலாம். மார்க்சிய சமதர்மமும் வந்து போகும். எந்த தயக்கமுமற்ற, தன் தர்மங்களைத் தானே தீர்மானித்துக் கொண்ட ஒரு பெண்ணிய வாதியையும் காணலாம். அந்த பெண்ணி­யக் கவிஞர், தான் விரும்பிய ஆண்களையெல்லாம் மிகத் தீவிரமாக நேசித்தவர். அதே சமயம் எந்த ஆணுக்கும் கட்டுப்பட்டவரும் அல்லர். பெண்­ணியம் fashionable ஆன லேபில் ஆகும் முன்னரே பெண்ணிய வாழ்க்கை வாழ்ந்தவர். பெண்ணாக அதன் எல்லா அழகுகளோடும், வல்லமையோடும் வாழ்ந்தவர். தன் பெண்மையை வலியுறுத்தியவர்.

sv-ws-logo copyஇத்தகைய ஒரு பெண், ஒரு கவி, தீவிர நம்பிக்கையும் ஆசாரமும் கொண்ட ஒரு சீக்கிய மத பிரசாரகர் குடும்பத்தில், – கிராந்தி என்பார்கள், – பிறந்தவர் என்றால், அப்படியா, ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்லலாம். அதெப்படி இருக்கமுடியும் என்றும் கேட்கலாம். இரண்டிற்கும்  அவர் எழுத்திலும், வாழ்க்கையிலும், தடயங்கள் காணமுடியும். குடும்பச் சூழலிருந்து மரபார்ந்த கவிதை எழுதத் தெரிகிறது. 16 வயதுப் பெண் என்ன கவிதை எழுதும்? அழகான பெண். கவர்ச்சியூட்டும் கண்கள். கவிதை எழுதுகிறாள்.தன் தந்தை கிராந்தியிடமிருந்து கற்றவற்றைத்தான். சீக்கிய குருக்கள் பற்றி.  பரபரப்பிற்கும் ரசித்துப்  பாராட்டும் பெரியவர்களுக்குக் கேட்பானேன்? கிராமத்திலிருந்து லாகூருக்கு வந்து அங்கு வியாபாரத்திலிருந்த ப்ரீதம் ஸிங்குக்கு மணம் செய்விக்கப்படுகிறார். பாகிஸ்தானாக பஞ்சாப் துண்டாடப்பட்டதும் டெல்லிக்கு குடி பெயர்கிறார்கள். புகழ் பெற்ற அம்ரிதாவுக்கு டெல்லி வானொலியில் வேலை கிடைக்கிறது. கவிதையும், தன்முனைப்புக்கொண்ட பெண்மையும் வாணிபத்துடன் நீடித்த உறவு கொள்ளமுடியவில்லை. அம்ரிதா விவாக ரத்துப் பெற்று பிரிந்து வாழ்கிறார் தன் மகனோடு.

லாகூரிலும் சரி, குடிபெயர்ந்து வந்த தில்லியிலும் சரி, பஞ்சாபி, எழுத்துலகில் அம்ரிதா ப்ரீதம் மிகவும் பேசப்பட்ட, கவியாகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பிற்குப் பெயர் ‘அம்ருத் லஹரே(ன்) .அம்ருத அலைகள். அம்ருத் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமும் கொள்ளலாம். பேசப்படுவதற்கு கேட்பானேன்? அதற்கு அவரது அழகும், பெண்­ணிய சுதந்திர சிந்தனைகளும், மாறி வரும் கவித்வ ஆளுமையும். அக்கவித்வ ஆளுமையில் அந்நாட்களில் மிகவும் பரபரப்பாகிக் கொண்டிருந்த இடது சாரி இயக்க சிந்தனைகள் அவரது சுதந்திர மனதுக்கு ஏற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. அப்போது நாட்டையே உலுக்கிய பிரிவினையும், பல லக்ஷக்கணக்கில் இடம் பெயர்ந்தும், உடமை இழந்தும், உயிர் இழந்தும் அலையாடப்பட்ட மக்கள் வேதனையும் அம்ரிதா ப்ரீதமின் உள்ளத்தையும் கவிதையையும் பாதித்தன. பஞ்சாப் வெட்டுண்டு போயிற்று, எங்கே போயிற்று, ஹிந்து, முஸ்லீம், சீக்கியர் எல்லோரையும் அன்பால் ஒன்றிணைத்து மதம் மீறிய ஆதர்ஸ்மாக விருந்த ஸூஃபி ஞானிகளின், கவிஞர்களின் பஞ்சாப்?  வேதனைப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மனம் பஞ்சாபின், கவித்வத்தின், ஸூஃபியிஸத்தின் பிரதிமையாகவே ஆகியிருந்த வாரிஸ் ஷா வை நோக்கி தன் வேதனையை எடுத்துச் செல்கிறது. ‘பார், அப்பாகிட்டே சொல்றேன் பாரு’ என்று அழுது கொண்டு அப்பாவிடம் செல்லும்  குழந்தையைப் போல, ‘அஜ் மை(ம்) ஆக்கா(ன்) வாரிஸ் ஷா நு’ ( ‘இன்று நான் வாரிஸ் ஷா விடம் சொல்வேன்’) என்ற கவிதையை எழுதுகிறார். ‘எழுந்து வா, உன் சமாதியிலிருந்து, வந்து பார், நீ அடுத்து என்ன காதல் கவிதை எழுதப் போகிறாய், இன்று எழுந்து வந்து பஞ்சாபைப் பார், சீனாப் நதி இரத்தவெள்ளமாக பிரவாஹித்துக் கொண்டிருக்கிறது, அது சடலங்கள் மிதக்கும் நதியாகிவிட்டது, இந்த வேதனைக்கு நீ என்ன ஆறுதல் தருவாய்” என்றவாறு அந்த கவிதை போகிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா’, “ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் அல்லவோ” என்ற பாரதியை நோக்கி இன்றைய தமிழகமும் கதறக் கூடும். கதற வேண்டும். ஆனால் கதறவில்லை. சாதியை விட லாபம் தரும் அரசியல் நாம் இன்னும் காணவில்லை.

அது மாத்திரமல்ல. சுமார் ஆறு நூற்றாண்டுகளாக பஞ்சாபில் அதன் நாட்டுப்புற பாடல்களில், கதைகளில் வாழ்ந்து வரும், இன்று வரை தொடர்ந்து வரும் ஹீர் ரஞ்சா கதை, ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும், ஹிந்து ஆண்மகனுக்கும் இடையேயான காதல் கதை, கடைசியில் அது தோல்வியுற்று சோகத்தில் முடியும் கதை பஞ்சாப் கிராமீய வாழ்க்கையின் அடி நாதங்களில் ஒன்று. இக்கதையை எண்ணற்ற கவிகள் தம் கதைப் பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். குரு நானக்கையும், கிரந்த சாகேப்பையும் சேர்த்து. அவற்றில் எல்லாம் சிகரம் போன்றது 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாரிஸ் ஷா என்னும் ஸுஃபி கவியின் கிஸ்ஸா  ஹீர் ரஞ்சா என்னும் கதைப்பாடல். அவர் பாடிய காலத்திய சமூக வாழ்க்கையும், அரசியல் கொந்தளிப்பும் அக்கதைப்பாடலின் பின்னணியாக ஒலித்துக் கொண்டிருக்கும் . மொகலாய அரசு முடிந்து விட்டது. பஞ்சாபில் அதை எதிர்த்த அரசியல் கொந்தளிப்புகள். இவை எல்லாம் வாரிஸ் ஷாவின் கதைப்பாடலில் பின்னிக் கிடக்கும். இக்கொந்தளிப்புகளினிடையே தான் ஹிந்து – முஸ்லீம் காதல் அரும்புகிறது. குரு நானக்கின் கைகளில் அது, நம் அகப் பாடல்கள் பக்தியுகக் கவிகளின் கடவுள் மேல் கொள்ளும் காதலாக பரிணாமம் பெறுவது போன்று, கடவுள் மேல் கொண்ட காதலின் உருக்கமாக மாறும். வாரிஸ் ஷாவின் அடியொற்றியே அம்ரிதா ப்ரீதமின் கவிதையும் நாற்பதுகளின்  அரசியல் கொந்தளிப்பும், மத மாச்சரியங்களும் மனிதனையும் நாட்டையும் ரணகளமாக்கிய வேதனையின் குரலாக வாரிஸ் ஷாவை அழைக்கிறது. தன் கவி வேதனையை, நாட்டின் வேதனை குரலாக மாற்றியது, அம்ரிதா ப்ரீதமின் பெரும் பாய்ச்சல். பஞ்சாபி இலக்கியத்தில் இக்கவிதை ஒரு சிறப்பான இடம் பெற்றது. அம்ரிதா ப்ரீதம் இக்கவிதைக்குப் பிறகு புகழின் உச்சிக்கே சென்றார். அம்ரிதா ப்ரீதமின் பெயர் சொல்ல அவர் முத்திரை பதிக்க இக் கவிதை ஒன்றே போதுமாகியது.

அக்காலம் இடது சாரிகளின் காலம். நாடகத்தில் Indian Peoples Theatre Association- ம் ஒவியத்தில் Progressive Painters -ம் தோன்றிய காலம். தில்லியோ, பஞ்சாபோ, அம்ரிதா ப்ரீதமோ தப்பவில்லை. அம்ரிதா ப்ரீதமின் சிந்தனைகளும் வளர்ச்சியும் அதற்கு ஏதுவாகவே இருந்தன. இடது சாரிகளின் ஆதரவு ஒரு அமைப்பின் ஆதரவு. உலக அமைப்பின் ஆதரவு. பிரசார ஆதரவு. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வெங்கும் புகழ் பரப்பும் ஆதரவு. தமிழ் நாட்டு முற்போக்கு பெறும் வசதிகள் போன்றது. சோவியத் லாண்ட் பரிசு, ரஷ்ய பிரயாணம், கிழக்கு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு இத்யாதி. ஆனால், அம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்ணியம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­ணியம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.

நம் இலக்கியத்தில், நாற்பது ஐம்பது, அறுபது(இன்னா நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது. ஹநுமான் சாலீஸா இத்யாதி) என்று பாடல் வகைகள் இருப்பது போல, பாராமா என்றொரு வகை உண்டு. பன்னிரண்டு மாதம் என்று பொருள். ஒவ்வொரு மாதமாக, பன்னிரண்டு மாதங்களும், மாறும் பருவங்களுக்கு ஏற்ப தனித்திருக்கும் காதலி அல்லது மனைவி தன் பிரிவின் உணர்வுகளை, ஏக்கத்தைச்  சொல்வதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் மாறும் பருவத்திற்கேற்ப அவள் உணர்வுகளும் மாறும். இது சம்பிரதாயமான காதல் பாட்டு. ஸூஃபி கவிஞர்களின்  பாராமா-வில் காதல் பக்தி உணர்வாக மாறும். அம்ரிதா பாடும் பாராமா எப்படியிருக்கும்? சம்பிரதாயம் பற்றியெல்லாம் தான் அவருக்குக் கவலை இல்லையே. அவர் வழி புரட்சிதான். தான் விரும்பி ஏங்கிய காதல்களை, ஏக்கங்களை எல்லாம் கொட்டி அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு சுனேரே அவருக்கு 1956-ல் சாகித்திய அகாடமி பரிசைத் தந்தது. (சாகித்ய அகாடமியில் தானும் ஒரு தேர்வாளராக இருந்து கொண்டு தானே தன் புத்தகத்தைப் பரிசுக்குத் தேர்ந்து கொண்டார் என்று குஷ்வந்த் ஸிங் குற்றம் சாட்டியுள்ளார். இப்படியான சமாசாரம் தமிழ் மரபு சார்ந்தது என்றாலும், பரிசு பெற்ற புத்தகத்தின் தகுதி என்னவோ தமிழ் மரபு சார்ந்தது இல்லை என்று மனம் சமாதானம் கொள்ளலாம்) தன் சொந்த ஏக்கங்களை, தனி மனித வேதனையை மனித குல ஏக்கங்களாக மாற்ற முடிந்திருக்கிறது அவரால். அவரது தனிப்பட்ட மார்க்ஸிஸம், நாட்டுப்புற பாடல்களின் உள்ளார்ந்த தாக்கம், எல்லாம் அவரது கவித்வத்திற்கு தனிச்சிறப்பைத் தந்தன. இளம் வயதில் க்ராந்தியான தந்தையிடம் கற்றதும், புல்லே ஷா, வாரிஸ் ஷா பாடல்களின் தாக்கம் எல்லாம் அவரது கவித்வத்தின் இரத்த நாடி. மத விரோதங்களும், ஒன்றிணைந்த கலாச்சாரமாக, ஸுஃபியும், இஸ்லாமும், ஹிந்துமதமும் பிளவுபட்டு நாடும் மக்களும், மொழியும் சிதறிப் போனதும் இரு பக்கமும் வாழ்க்கை சின்னபின்னமாகிப்போனதும் ஆன trauma-வே அம்ரிதா வின் பெரும்பாலான எழுத்துக்களுக்கு காரணமாயிற்று. அவ்வளவு சமீபத்திய, சுயமாய் அனுபவித்த சோகம் படைப்பாக சாதாரணமாக மாறுவதில்லை. காலமும் தூரமும் தேவை என்பார்கள். எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால், மாறியுள்ளது. அம்ரிதா ப்ரீதம் கவித்வத்தில். அது விதி விலக்கானது என்று தான் சொல்லவேண்டும். லம்மியான் வதா(ன்)(  நீண்ட பயணங்கள்- 1948) ஸர்கி வெலே ( விடியும் நேரம் -1952) என்று தொடங்கி அது நீண்டு செல்கிறது. ஆரம்ப கால கவிதைகள் அவருக்கு சீக்கிய சமுதாயத்திலேயே நிறைந்த புகழைத் தந்தது. ஆனால், எல்லோர் முன்னிலையிலும் சிகரெட் பிடிக்கும், பேச்சிலும்,எழுத்திலும் வாழ்க்கையிலும் கட்டுக்கடங்காதவரை என்ன செய்யமுடியும்? அம்ரிதா ப்ரீதமே ஒரு கவிதையில் சொல்கிறார். ‘என் வேதனைகளையெல்லாம் புகைத்துத் தள்ளுகிறேன். அதிலிருந்து விழும் சாம்பல் துகள்கள் கவிதைகளாகிவிடுகின்றன.” இந்த வரிகளை அவரது வாழ்க்கைக்கும் கவிதைக்குமான ஒர் உருவகமாக (metaphor) வே பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.(வேதனைகள் என்று அவர் சொன்னது அவரது தனிப்பட்ட வேதனைகளை மாத்திரம் அல்ல. அவை விஸ்வரூபம் பெற்று பெண்ணின், மனிதனின் வேதனைகளாகின்றன.) ஓஷோவை அவர் மிகவும் மதித்தார். அதை ஒரு கவிதையாகவே எழுதியுமுள்ளார். ஹிந்தியில் அவர் தன் பாணியில் வாசிக்க கேட்ட ஞாபகத்தில் சொல்கிறேன், ‘உயிர் பெற்ற சப்தம் கவியாகிறது. என்று ஆரம்பித்து அடுத்தடுத்த கட்டங்களில் வளர்ச்சி பெற்ற அந்த ஜீவன் கடைசியில் பெறும் ரூபம் ஓஷோ’ என்று அர்த்தத்தில் அந்த கவிதை இருக்கும். அவர் கவிதை வாசிக்கும் பாணி கவிதைக்கு ஒரு சப்த ரூபம் கொடுக்கும். ஆனால் அதை அவர் கட்டுரைப் பேச்சு  வாசகங்களுக்கும் அதே பாணியைக் கையாளும் போது, நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் anchor களின் அறுவை தான் நினைவுக்கு வந்து வெறுப்பேற்றும். விஷயம் தெரிந்த பஞ்சாபி, உருது இலக்கியக்காரர்கள், அம்ரிதா ப்ரீதமின் சிறுகதை, நாவல்களை அதிகம் பொருட்படுத்துவதில்லை. இருப்பினும் அவரது ஒரு நாவல் (பிஞ்சர்) திரைப்படமாகியுள்ளது.

நிறைய எழுதினார் அம்ரிதா. கவிதைகளாகவும், வசன நூல்களாகவும். தன் இச்சையாக தன் வாழ்வை பூரணமாக வாழ்ந்தவர். பெற்றதும், பெற ஏங்கியதும் எல்லாமாகத் தான். கொடுத்தது, ஏங்க வைத்ததும் தான். தயக்கமில்லாமல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவர் தான். அவர் பேச விரும்பாது மௌனம் சாதித்த உலகமும் உண்டு. ஒரு காவிய பரப்பிற்கு எழுதி விஸ்தரிக்கவேண்டிய அவரது வாழ்க்கையை எழுத வந்தவர் அதை ரசீதி டிக்கட் என்ற தலைப்பில் எழுதினார் . ரசீதி டிக்கட்டில்(1976) தன் பிறப்பிலிருந்து ஆரம்ப வருடங்களையும், தன் பெற்றோரையும் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தவர், உடனே தில்லிக்குத் தாவுகிறார். இம்ரோஸு”டனான வாழ்க்கைக்கு வந்துவிடுகிறார். இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள், மாயமாகி விடுகின்றன. அந்த மண வாழ்க்கை பற்றிப் பேச அவர் விரும்பவில்லை. ஆனால் மற்ற பஞ்சாபி, உருது இலக்கியக்காரர்களுடனான தன் உறவுகள் பற்றிப் பேச அவர் தயங்கவில்லை. அந்த அளவுக்கு வெளிப்படையாய், சொல்ல நினைத்தவற்றைத் தயங்காது சொன்னவர் அவர். மிகுந்த பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய படைப்பு அது. மராத்தியில் ஹம்ஸா வாடேகர் என்ற நாடக, சினிமா நடிகையின் சுயசரிதம் நினைவுக்கு வருகிறது. அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. மார்க்கஸ் அரேலியஸ், ரூஸோ, காந்தி, என்று அது நீளும்.

 

தன் இச்சையாக, தனக்கு தான் விதித்துக் கொண்ட தர்மங்களுக்கேற்பவே வாழும் இவ்வழகிய கவியைக் காதலித்தவர் அனேகம். தாம் அம்ரிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லிக்கொண்டவரும் சொல்லிக்கொளவதில் பெருமைப்பட்டவர்களும் உண்டு. இதுபற்றியெல்லாம் அம்ரிதா கவலைப்பட்டவர் இல்லை. இப்பரபரப்பும் அவருக்கு வேண்டித்தான் இருந்தது போலும். உலகம் அறிந்தது, அவர் மிகவும் ஆசைப்பட்டது ஏங்கியது, ஷாஹிர் லூதியானவிக்காக. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்தது தான் மிச்சம். மனிதர் குடித்துவிட்டு நினைவிழந்து போக பொழுது அப்படியே கழிந்தது என்று செய்தி. அம்ரிதாவின் மகனே அம்மாவிடம் கேட்டானாம். “அம்மா, எல்லோரும் நான் ஷாஹிர் லூதியானவிக்குப் பிறந்தவன் என்கிறார்களே?” என்று. “அது தான் நான் ஆசைப்பட்டதும், மகனே” என்றாராம் அம்ருதா.  இம்ரோஸ் என்னும் பெயர் கொண்ட தாடி மழித்துக்கொண்ட சீக்கிய ஓவியருடன் தான் அவர் வாழ்ந்தார். அம்ரித்துக்காக, தன்னை அவரது நிழலாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் இம்ரோஸ். அம்ரித்தின் கடைசி மூச்சு வரை. வீட்டில் உபசரணை. அம்ரித்தின் புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியங்கள். மரணத்திற்கு முன் படுக்கையாகக் கிடந்த காலம் முழுதும் நர்ஸ் சேவை. அதிர்ஷ்டகாரர் தான் அம்ரிதா. அந்த இம்ரோசுடனான வாழ்க்கையை கொண்டாடும் முகமாக அவர் காகஸ் த்தெ கேன்வஸ்  (காகிதமும் கான்வஸ”ம்) என்னும் கவிதைத் தொகுப்பு, 1980 லோ என்னவோ ஞானபீட பரிசு பெற்றது, வாழ்க்கை பற்றிய அவரது சிந்தனைகளும், கற்பனைப் பார்வையும் (romanticism) கலந்த கவிதைகள் அடங்கியது. அவரது பிற்கால கவித்வ ஆளுமையைச் சொல்லும் அது. அவரை விட சிறந்த கவித்வம் கொண்டவர்கள் என்று ப்ர்ப்ஜோத் கௌர் போன்றவர்களை, ஒரே சீரான கவித்வமும், வாழ்க்கையும் கொண்டவர்களை சிலர் சொல்லக்கூடும். ஆனால், தன் வாழ்க்கையிலும், எழுத்திலும் வாழும் விதியை தானே விதித்துக் கொண்டவர், ஒரு colourful person ஆன அம்ரிதா சுவாரசியமும் ஈர்ப்பும் கொண்டவர். பஞ்சாபின் கவிதை பாரம்பரியத்தின் பிரகாசமான பிரதிநிதி அவர். அரசுகளும், இலக்கிய நிறுவங்களும், சமூகமும் தரக்கூடிய எல்லா பரிசுகளையும் செல்வத்தையும் செல்வாககையும் பெற்றவர்.

ஐயோவாவின் கவர்னர், ஒர் அம்மையார், அம்ரிதா ப்ரீதமைச் சந்திக்கும் தன் விருப்பத்தை, ‘தன் இச்சைப்படி வாழ்ந்த எழுதிய பெணமணியைச் சந்திக்க விரும்புகிறேன் ‘ என்றாராம். அஜ் மை(ம்) வாரிஸ் ஷா நு ஆக்கா(ன்)  என்னும்  சக்தியும் சோகமும்  நிறைந்த சொற்களை காலாதீத குரலாக்கும் வல்லமை எல்லோருக்கும் இருப்பதில்லை. சிகரெட் சாம்பல் துகள்களும் கவிதைகளாகும் அவர் விரல் நுனியிலிருந்து விழுந்தால்.

 

வெங்கட் சாமிநாதன்/13.11.05
நன்றி: காலச்சுவடுஎனி இந்தியன்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.