kamagra paypal


முகப்பு » சிறுகதை

ஆரோகணம்

அந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கினால் எவருக்காயினும் மனம் சில கணங்கள் அதன் உச்ச விசையில் ஓடியடங்கும். எந்த நொடியும் விழுந்து விடுவோம் என்ற பயமும் அந்த உயரத்தின் பிரமிப்பில் கடந்து வந்த தொலைவை நோக்க வேண்டும் என்றொரு குறுகுறுப்பும்.  பாற்கடலை கடைந்த போது பொங்கிய நுரைத் துளிகள் எல்லாம் உறைந்த மலையாகிவிட்டன போலும், பனி மலையல்ல முடிவற்று நீளும் பனிக் கடல் என்று எண்ணிக்கொண்டார் அந்தக் கிழவர். வாழ்க்கையும் நினைவுகளும் எல்லாம் எங்கோ தொலைவின் அடிவானக் கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டன. காலமும், தேசமும், தொலைவும் எதுவும் அவருக்கு புலப்படவில்லை. ‘பட்’ ‘பட்’ இரண்டுமுறை அந்த ஒலியை செவிக்கு வெகு அருகில் கேட்டவுடன், அத்தனை ஆண்டுகளாக அந்தக் கணத்தை எதிர்கொள்ளும் போது உதிர்ப்பதற்காக சுமந்து இருந்த சொல்லை முணுமுணுக்க முயன்றது மட்டும் மங்கிய நினைவாக எஞ்சியிருந்தது.

எங்கு தொடங்கிய நடை? எப்போது தொடங்கிய நடை? எதை நோக்கிய நடை? தலைக்குள் கசங்கிய தாள்களாக நினைவுகள் தேங்கி சுருண்டுகொண்டு விட்டன. யுகம் யுகமாக கடக்க இயலா சமுத்திரத்தை நடந்தே கடப்பது போல் கால்கள் கனத்தன. எத்திசையை நோக்கினும் கண்கூசும் வெண்மை. மெல்ல குனிந்து தொட்டுப்பார்த்தார். கையிலெடுத்த துளியை நாக்கு நுனியில் வைத்தார், எரிந்தது.

வேறொரு சீரான மூச்சொலியும் நெருக்கத்தில் கேட்டது. மெதுவாக திரும்பி நோக்கினார். காது மடல்கள் விறைத்து நின்றன, அதன் உலர்ந்த பழுப்பு நிறக் கண்களில் உணர்ச்சியற்ற வெறுமை படர்ந்திருந்தது போலிருந்தது. கூர் அர பல் வரிசைக்கிடையில் சிவந்த நாக்கை வெளிநீட்டி மூச்சிழுக்கவில்லை என்றால் கருவறையிலிருந்து இறங்கி வந்த காலபைரவனின் வாகனம் என்றே தொன்றியிருக்கும். நாயின் வால் நிமிர்ந்தும் வான் நோக்கி வளைந்தும் நின்றது. பனியில் அதன் கால் தடங்களும் தன்னுடைய தடங்களுக்கு இணையாக நெடுந்தொலைவு வரை பதிந்திருந்ததை கண்டார். மெதுவாக நெருங்கி வந்து நின்ற நாயின் தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார். விரிந்த கண்களுடன் பொக்கை வாய் குழந்தை சிரிப்பு ஒன்று உதிர்ந்தது அவரிடம்..

சிரிப்பு. எண்ணங்களும், நினைவுகளும், பிம்பங்களும் ஒன்றாக உள்ளுக்குள் வெந்து நொதிந்து புகை கிளப்பியது. ‘புகையிலிருந்து ஒரு பிம்பம் மந்தமாக துலக்கம் பெற்றது. ‘கஸ்தூர்’ இறுகப் பூட்டிய துறு ஏறிய பூட்டோன்று படீரென்று உடைந்தது. மெல்ல மின்சுற்று ஒன்று உயிர் பெற்றது. உயிர்ப்புடன் சரசரவென்று கிடங்கிலிருந்து எதையெதையோ இழுத்துப்போட்டது. ‘பா’. மனமறிந்து சிரித்த பொழுதுகள் எல்லாம் பா வின் நினைவுகளை முட்டி நிற்பது தான் வழக்கம், அவளுடைய அறியாமைக்காக, கொஞ்சலுக்காக, உயிர் பிழைப்பாளா என்றொரு நிலையிலிருந்து அவள் மீண்டு வந்த போது சிரித்த அந்த முதல் சிரிப்பு, பகல் பொழுதின் கனவுகளையும் லட்சியங்களையும் காலடியில் நசுக்கி காமத்தை கிளர்த்தும் அவளுடைய சிரிப்பு. சீ…அருவருப்பான ஏதோ ஒன்றை மிதித்த மாதிரி மனம் பதறியது. . அன்னையாக ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னதெல்லாம் வெறும் பசப்புகள் தானா? ஆளரவமற்ற பனிக்காட்டின் தனிமையில் ஏன் இது நினைவுக்கு வரவேண்டும்?  பிரம்மச்சரிய பரிசோதனைகளும், கடும் விரதங்களும், உபாசனைகளும், எல்லாம் வெறும் வேடிக்கை தானா? ஒரு அடிக்கூட நகர இயலவில்லை. கால்கள் கனத்து பனிக்குள் இறங்கின. நீர் சலசலக்கும் அரவம் கேட்டது. தூய்மையான நீர். பனிதிட்டுகளின் ஊடே தென்பட்ட கரும்பாறை ஒன்றில் சென்று அமர்ந்து நீரைப் பார்த்துக்கொண்டிருந்தார். நாயும் பின்தொடர்ந்து சென்று நின்றது. “பா இருந்திருந்தால்?” கண்களில் நீர் தளும்பியது.  ஒருவேளை பா இருந்திருந்தால் அவள் காத்திருப்பாள். ஆம் அவள் என் அன்னையும் கூட. எந்த சோதனைகளும் என்னை உணர தேவையாய் இருந்திருக்காது என்று எண்ணிக்கொண்டார். காமம் என்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கும் சுனை. நீர் காய்ந்தாலும் மண்ணுக்கடியில் உலராத நீர் தடம் இருந்துகொண்டே தானிருக்கும். சலசலக்கும் நீரோட்டத்தை தாண்டிக் கடக்கும் வேளையில் கால்களை விட்டகன்ற காலணிகள் நீரோட்டத்தில் சுழன்று திரும்பி தனித்து மிதந்து எங்கோ சென்றன. குளிர்ந்த நீர் தெறிப்புகள் உள்ளங்காலை சில்லிட வைத்தது.  மனம் லகுவானது. கொதிப்பின் குமிழ்கள் மனதில் சற்றே ஓய்ந்தன. கால்கள் பூக்காத மரமாயின.

KulykPainting

மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக நடை வேகம் பிடித்தது. காலமும் தேசமும் புரியாத வெளி மனதை அச்சுறுத்தியது. அந்த வெட்டவெளியில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ள மூளை அங்குமிங்கும் குதித்தோடியது. பின்தொடர்ந்து வந்த நாய்க்கு அத்தகைய குழப்பங்கள் ஏதுமிருப்பதாக தெரியவில்லை. தெளிவுடனும் தீர்க்கத்துடனும் அது தன் போக்கில் நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டார். மூளை! எத்தனை அபாயகரமான உறுப்பு! நிகழ்வுகளை பகுத்து கூறுகளாக்கி கற்பனைகளுடன் இணைத்து புதிய ஒன்றை சலிக்காமல் உருவாக்கிக் கொண்டிருக்கும் இயந்திரம். அச்சம் ஒரு வித்திலிருந்து வெளிமுளைத்து கிளை பரப்ப தொடங்கி, புதிய புதிய அச்சங்களையும் நம்பிக்கையின்மைகளையையும் பிறப்பித்தன. கைதவறிய கடந்த காலமும், விளைவுகளை அனுபவிக்கும் கோரமான நிகழ்காலமும், எதிர்காலம் எனும் பிரம்ம ராட்சதனை உருவாக்கிக் காட்டியது. பனி சிகரத்தின் சரிவு மேலும் குறுகியது. ஏதேதோ காட்சிகள் மனத்திரையில் ஓடின. குருதி தோய்ந்த  உதிரித்துண்டுகளாக கைகளும், கால்களும் விரவிக் கிடக்கும் தெருக்கள், தலையை விரித்துக்கொண்டு சுவற்றில் முட்டி அழும் பெண்கள், கரங்களை கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு சுருண்டு அலமாரியில் ஒளிந்து மூர்ச்சையாகிக் கிடந்த அந்த பெண் குழந்தை. ‘ராமா!!!” மனதிற்குள் உச்சவிசையில் ஒலித்த குரல் வெறும் புகையாக காற்றில் கலந்தது.  உறக்கமற்ற இரவுகளை கடக்க அன்னை கற்றுக்கொடுத்த மந்திரத்தை தேடி எடுத்து மனம் உச்சரிக்கத் தொடங்கியது. ‘ராமஸ்கந்தம் ஹனுமந்தம்’ உதிரம் தோய்ந்த கொடுவாள்கள் ‘வைனதேயம் வ்ருகோதரம்’ கருகிய பிஞ்சுக் கரங்கள் ‘ சயநேன ஸ்மறேன் நித்யம்’ நிரம்பி வழியும் சவக் கிடங்கு ‘ துர்சொப்பனம் தஸ்ய நஷ்யதி’. துர்சொப்பணம் தஸ்ய நஷ்யதி. வெறும் கனவுகளாக இருந்துவிடக் கூடாதா? வெறும் தீங்கனாக்கள் தான். தலை சுற்றியது. அக்காலத்து தேதிகளும் நிகழ்வுகளும் இடங்களும் பெயர்களும் பிம்பங்களும் துல்லியமாக நினைவுக்கு வந்தன. வெகுதொலைவு கடந்துவிட்ட மாதிரி தெரிந்தது. மெல்ல குறுகலான பாதையின் குறுக்கே கடந்த பாறையில் அமர்ந்தார். மனிதன் ஏன் அத்தனை குரூரமாக நடந்துகொள்கிறான்? ஏன் இத்தனை அகங்காரம் கொண்டவனாக பசித்து அலைகிறான்? அவனுடைய ஆற்றலையும் அறிவையும் அலங்காரமாக அணிந்துகொண்டு திரிவது எல்லாம் மலத்தை கரங்களில் கரைத்து பிறர் மீது அள்ளி வீசத்தானா? எத்தனை ஏன்கள்! மூச்சிரைக்க செய்யும் ஏன்கள். மூச்சை நிதானமாக இழுத்து விடத் துவங்கினார். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது, சிந்திப்பதை நிறுத்த வேண்டும், வேறொன்றும் இல்லை. அயர்ச்சி இன்றி உத்வேகம் கொண்டு ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். தகவல்களால் நிரம்பிய மூளை ஒரு போதும் நிறைவுகொள்ளாது, அதற்கு உண்டு செரித்து உயிர்வாழ மேலும் அதிக தகவல்கள் வேண்டும். மூளையின் பரபரப்பு ஓய்ந்து நாகம் அதன் பெட்டிக்குள் அடங்கியது. சென்று சேர வேண்டிய இலக்கைப் பற்றியும் அதற்கு கடக்க வேண்டிய தொலைவைப் பற்றிய போதமேதும் இல்லை. நடக்க வேண்டும், நடந்தே கடக்க வேண்டும் அது ஒன்று மட்டும் உந்தித் தள்ளியது.  கொதிநீர் ஊற்றொன்று ஆவியை புகைத்துத் தள்ளியது. மெல்ல அருகில் சென்று சுடுநீரை கையில் வாரி உடலில் தெளித்துகொண்டார். எலும்பை நொறுக்கும் குளிருக்கு இதமாக இருந்தது. நீர் குளிர்ந்த அடுத்த நொடி குளிர் மீண்டும் கவ்விப் பிடித்து உடலெங்கும் ஊறியது. இடுப்புக் கச்சையில் செருகியிருந்த குளிரில் ஸ்தம்பித்த கடிகாரம் குனிந்து எழும் போது நீரின் அடியாழத்திற்குள் தன்னை புதைத்து கொண்டது. நாய் சுனைநீரை பொருட்படுத்தவில்லை அதற்குள் இறங்கவும் இல்லை. அவருக்காக காத்திருந்தது. “நல்ல வழித்துனைவன் நீ!” நாயை அன்புடன் வருடிக்கொடுத்தார் அந்த கிழவர்.

நாய் பின்தொடர மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கினார். பயணம் நீண்டது. வழிநெடுகிலும் வெண் பனி மோனத்தில் உறைந்திருந்தது. அன்னையின் சொற்களில் உருப்பெற்ற பால்யத்தின் கனவுகளில் மட்டுமே காணக்கிடைத்த வெண்மை. ஒருவேளை இதுதான் ஈசன் உறையும் கைலாயமோ? அப்பழுக்கற்ற தூய வெண்மையின் அழகு. வெண்மை மட்டுமே எங்கும் நிறைந்திருக்கும் முழுமையின் அழகு. முழுமையே அழகு. முழுமையின் ஒழுங்கும் நேர்த்தியுமே அழகு. ஆனால்! எது முழுமை? முழுமையை எம்பிக் குதித்து எட்டிப்பிடிக்கவே தன் வாழ்நாள் முழுவதும் முயன்று இறுதியில் தோற்று விட்டதாக அவருக்கு தோன்றியது. மனிதர்கள் முழுமையற்றவர்கள். நானும் தான். முழுமை ஒரு தலைசுமையாக மனிதனை அழுத்திக் கொண்டிருந்தது. முழுமையற்ற மனிதன் தன்னை சுற்றி இருக்கும் பிறரிடம் முழுமையை எதிர்நோக்குவதில் நியாயம் என்ன இருக்க முடியும்? துக்கம் ஊர்ந்து உடலெங்கும் படர்ந்தது. கண்களை மூடியப்படி ஆழத்திலிருந்து ஒரு மந்திரம் போல் உச்சாடனம் செய்தார் ‘ஹரி.’ நான் அவனுடைய தலையில் தூக்கி வைத்த முழுமையின்  கனம் தாங்காமல் மண்ணுக்குள் புதைந்தவன் அல்லவா அவன். கைநழுவிப் போன வைரம். ‘ஹரி, என் பிரிய மகனே!’ நெஞ்சில் துக்கம் படர்ந்தது என் முழுமையை நோக்கிய வேட்கையில் ஒளியின் முன் மண்டியிட்டு காத்திருக்கும் போது பின்னால் நீண்டு வளர்ந்த நிழலுருவத்தை கவனிக்காமல் போனேனே. அவனை நான் திருத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏன்? அவனையும் ஆன்ம பரிசோதனைக்காக, ஆன்ம சுத்தியை நிலைநாட்டுவதற்கான சாதனமாக பயன்படுத்திகொள்ளவா? எனது கருணையும் அன்பும் அவனை ரணப்படுத்தியிருக்கும்..அவன் விரும்பிய படி அவனை நான் என் சத்ருவாக அங்கீகரித்திருக்க வேண்டும். மகிழ்ந்திருப்பான்.. ஆசுவாசமடைந்திருப்பான்.. சிரித்திருப்பான்.. அவன் வாழ்க்கை லட்சியத்தில் வென்றிருப்பான்.. மகனுக்கு அந்த பாக்கியத்தை கூட அளிக்க இயலவில்லை.. வெண்பனிக்காட்டு பரப்பிலிருந்து துருத்திக்கொண்டு தனித்து உயர்ந்து நின்றது இலைகளற்று கறுத்த நெடுமரம். அது அல்லவா பனி வெளியை  நிறைக்கிறது? வெறும் பனிப் பரப்பில் என்ன இருக்கிறது? எண்ணங்களுக்கு இடையிலுள்ள வெளியில் தானும் தன் விசுவாசமுள்ள நாயும் மட்டும் நடந்து கொண்டிருப்பதாக அவருக்கு தோன்றியது. எங்கிருந்தோ சுழன்று வந்த காற்றில் வீசி எறியப்பட்ட பனி துண்டு ஒரு ஏவுகணையைப் போல் அவருடைய காலில் மோதி சிதைந்தது. மறைவில் எவரோ விளையாடும் உண்டிகோல் போல வரிசையாக வீர் வீரென்று பனி கட்டிகள் ஊ வென ஓலமிட்டப்படி சீறிப் பாய்ந்தன. கிழவர் நடக்க இயலாமல் கண்களை வலது கையால் மறித்தபடி இடது கையில் தடியை ஊன்றி நின்றிருந்தார். இரண்டு பனி துண்டங்கள் பாய்ந்து வந்து அவர் கண்ணாடியில் பிளந்து தெறித்தன.  கண்ணாடியை வீசி எறிந்தார். நாய் எவ்வித சலனமுமிமின்றி அருகிலேயே நின்றிருந்தது. சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்ந்து இயல்பானது. தளர்ந்த நடை தான் ஆனாலும் ஏதோ ஒன்று நிற்க விடாமல் அவரை அழுத்தித் தள்ளியது. “நண்பா, உனக்காவது நாம் எங்கு போகிறோம் என்று தெரியுமா?” என்று நாயிடம் கேட்டப்படி முன்செல்ல தொடங்கினார்.

இந்த வெளியில் இரவு என்ற ஒன்றே கிடையாதா? சூரியன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லையா? காலம் வெட்ட வெளியாக தன்னை பரப்பிக்கொண்டிருக்கிறது. இத்தனை தொலைவை கடந்த பின்னரும் நின்ற இடத்திலேயே நடந்துகொண்டிருப்பதாக தோன்றியது அவருக்கு. இந்த தொலைவு இத்தனை சிரமம் எல்லாம் எதற்காக? சலிப்பு ஒரு காந்தத்தைப்போல் நரம்புகளிலிருந்து ஆற்றலை பகுத்து நெஞ்சுக் கூட்டில் கனத்து இறக்கியது. கால்கள் தளர்ந்தன. கையைவிட்டு நழுவிய தடியை கண நேர சுதாரிப்பின் வழியாக இறுகப் பற்றிகொண்டார். உடன் வந்த நாயை திரும்பிப் பார்த்தார். சோர்வோ, களைப்போ அதற்கில்லை. அதே நிதானத்துடனும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. இது பாழும் பனி வெளி. என்னை இது எங்கும் இட்டு செல்லாது. வாழ்நாள் எல்லாம் எதற்காகவோ போராடி இயங்கி இறுதியில் வெறுமையையும் அவநம்பிக்கையையும் தோண்டி எடுக்கத்தானா? எங்கே சென்றது அந்த போர்குனம்? பேரபாயம் சூழ்ந்த போது மற்றும் ஒரு போராட்டத்திற்கு நான் தயார், நீங்கள் தயாரா? என்று கேட்டபோது எவரும் செவிமடுக்கவில்லை. எதுவும் நடக்காது, எதுவும் மாறாது. மனிதர்கள் இப்படித்தான். வாழ்க்கை இப்படித்தான். பெருநியதியின் திட்டம் ஒன்றாக இருக்கும் போது மானுட முயற்சிகளுக்கு என்ன பொருள்? அத்திட்டம் எதுவென அறிவதற்கும் வழியில்லை எனும் போது மானுட யத்தனங்களுக்கு அவசியம் தான் என்ன? கணக்குகள் பிழையான தருணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன, பற்றற்று செயலாற்று, பலனை எதிர்நோக்காமல் செயலாற்று என வாழ்நாள் முழுவதும் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன், ஆனால் தோல்வியை கண்டு அஞ்சினேன். சுமக்க இயலா கனவுகளை சுமந்து திரிந்தேன். கால்கள் வெடவெடக்க தொடங்கின. குளிரையும் மீறி வியர்வை வழிந்திருந்தது. தடியை ஊன்றி மெல்ல பாறைக்கு அப்பால் ஏற முயன்றார். தடி பனிக்குள் புதையுண்டு கையைவிட்டு நழுவியது. தடியை கைகொள்ள திரும்பிய கனபொழுதில் தடிக்கு கீழிருந்த பனி சரியத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக பிரம்மாண்டமான கத்தியைக் கொண்டு எவரோ மேற்பரப்பின் தோலை சீவியது போல் அவருக்கு பின்னாலிருந்த பனி படலம் அதி வேகத்துடன் உருண்டோடியது. நாய் பாறை மீது கால்மடக்கி அமர்ந்து பனி சரிவை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தது. ஒருவேளை அங்கேயே நின்றிருந்தால்? மனம் அதிர்ந்தது. நாய் உடலை உதறிக்கொண்டு முன் சென்றது. கிழவர் நடக்கத் தொடங்கினார். நிற்பதற்கும் தயங்குவதற்கும் நேரமில்லை. தன் கடமை நடப்பது, இன்னும் கடக்க வேண்டிய தொலைவைப் பற்றி மட்டுமே அவர் எண்ணினார், இல்லை அதையும் கூட எண்ணவில்லை.

குளிர் உடற்பரப்பில் ஆயிரம் குண்டூசிகளைக் கொண்டு துளைத்தது. உடல் நடுங்கி சூடேற்றிக் கொண்டது. பாதை தன்னை குறுக்கியப்படி வளைந்து சென்றது. பெரும் சூறைக்காற்று ஒன்று வெண் பனித் துகள்களை சுழற்றிக்கொண்டு ஓலமிட்டப்படி வந்தது. ஓரடி இடைவெளியில் நிற்கும் நாயைக் கூட காண இயலவில்லை. பனித் தூசு எல்லாவற்றையும் மறைத்தது. கிழவரின் கால்கள் தடுமாறின. காற்று அவரை கடந்து செல்லும் போது உடலை சுற்றி அணிந்திருந்த மேலாடையை கவ்விக்கொண்டு போனது. கைகளை நெஞ்சுக்கு முன் குறுக்கிக்கொண்டு பக்கவாட்டில் சரிந்திரங்கிய சிறிய பள்ளத்தில் கால் வைத்து இறங்கி குந்தி அமர்ந்தார். காலுக்கு கீழே ஏதோ ஒன்று நறநறத்தது. கையால் அதை நிமிண்டி எடுத்து உற்று நோக்கினார். கீழ்த்தாடை எலும்பு தனியாக என்றென்றைக்குமாக சிரித்து கொண்டிருந்தது. சட்டென்று வீசி எறிந்தார். கீழே குனிந்து நோக்கினார், சரிவு முழுவதும் யானை தந்த நிறத்து எலும்பு திட்டுக்கள் பனி பரப்பை தாண்டி துருத்தி நின்றன. அவருடைய உடலை இத்தனை கனமாக அவர் உணர்ந்ததே இல்லை. உடல் என்றுமே அவரை மீறியதில்லை என்று தான் அவர் நம்பிவந்தார். உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் அறிந்தவர் என்று நம்பினார். ஆனால் அது அப்படி இல்லை. மனிதன் தன் வாழ்நாளில் அதிகபட்சம் நடத்தும் போராட்டம் அவன் உடலுக்காகத்தான். பெரும்பாலும் உடலுக்கு எதிராகத்தான் அது முடிகிறது. பசி தாகம் இச்சை என பல தொல்மிருகங்களுடன் மனிதன் தன்னுடலை பகிர்ந்து கொண்டிருக்கிறான். அவன் காலந்தோறும் அதை பழக்க முயன்று கொண்டே இருக்கிறான். வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு பிறப்பிலும். உடலெனும் போர்வை குளிரிலும் வெயிலிலும் மழையிலும் அவனை காக்கிறது ஆனால் அதை கிழித்து எறியாமல் அவனால் தென்றலை உணர முடியாது. கைகளை மெல்ல அகல விரித்தார். இந்த உடலும் அதன் எச்சங்களும் இங்கேயே கிடக்கட்டும். கிடந்து மட்கட்டும். எடுத்துகொள்! ஏற்றுகொள்! ஏற்றுகொள்! மனம் மீண்டும் மீண்டும் அதே அச்சில் சுழன்றது. கண்களை இறுக மூடி கைவிரித்து காத்திருந்தார்.

ஆயிரம் ஓநாய்களின் ஒற்றை பெரும் ஓலம், அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவல், பிரம்மாண்டமான வனமிருகம் வாய்பிளந்து பாய்ந்து வருவது போல் பேரிரைச்சல். கிழவர் ஓரடிகூட நகரவில்லை. கால் ஊன்றி அப்படியே நின்றார். பாய்ந்து வரும் மிருகத்தின் மூச்சுவிசை முகத்தில் அறைந்தது. அது அவரை கடந்து சென்ற அடுத்தகணம் பேரிரைச்சல் ஓய்ந்து சட்டென்று பேரமைதி சூழ்ந்தது. கரங்களும் கால்களும் நடுங்கிகொண்டிருந்தன. மெல்ல கண்விழித்து நோக்கிய போது கரிய நாய் மட்டும் அவருக்கு எதிரில் கால்மடித்து அமர்ந்திருந்தது. திரும்பி நோக்கினார். கடந்து வந்த மலை சிகரத்தை காணவில்லை. கால்தடங்களையும் காணவில்லை. உறைந்த பாற்கடலை போல் வெள்ளை சமவெளி மட்டுமே எத்திசையிலும் தென்பட்டது. தொடுவானம் அற்ற வெண்மை. வானும் நிலமும் வேறன்று அறிய இயலா வெண்மை.

gandhi‘திருவாளர் காந்தி’ கனத்த குரல் ஒலித்த திசையை நோக்கினார். நாயிருந்த இடத்தில் ஒரு மனிதன் கைகட்டி நின்றிருந்தான். தான் கண்ட கோடிகணக்கான சாமானியர்களின் முகங்களில் ஒன்றை தான் அவனும் அணிந்து கொண்டிருந்தான். எவ்வகையிலும் நினைவுகூரத்தக்க அம்சங்கள் கொண்டிராத எளிய முகம். குளிர்ந்து உறைந்த சாந்தம் அவன் முகத்தில் நிறைந்திருந்தது. “குழம்ப வேண்டியதில்லை. நீங்கள் என்னை அறிவீர்கள். ஒவ்வொரு மனிதனும் என்னை அறிவான். அவர்களின் அண்மையில் தான் நான் எப்போதும் இருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு நான் காட்டும் முகங்கள் வேறு. இப்பயணம் தொடங்குவதற்கு முன்னர் என்னைத்தான் நீங்கள் இறுதியாக கண்டீர்கள்” என்றான் நிதானமாக. “கரிய நாயாக துரத்தியும் தொடர்ந்தும் செல்லும், கருத்த எருமையாக நிதானமாக அணுகி வரும், தன்வாலை கவ்வி சுருளும் கருநாகமாகவும் மனிதர்கள் அறிந்ததெல்லாம் என்னைத்தான். அவர்கள் அஞ்சியதேல்லாம் எனக்காகத்தான். தொடங்கும் எல்லாவற்றையும் நிறைவு செய்பவன் என்னை காலனென்றும் அழைப்பார்கள். அறத்தை வகுப்பதால் நான் தர்மன் என்றும் நியதிகளை ஒருபோதும் வழுவாதவன் என்பதால் யமன் என்றும் அழைக்கபடுகிறேன்.”

காந்திக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கியது. “நான் கேட்ட அந்த இரண்டு ஒலிகள்…நீ..நீங்கள்?” “இரண்டு அல்ல மொத்தம் மூன்று. ஆம் அது நானேதான்.” அழுத்திகொண்டிருந்தவை எல்லாம் மெல்ல லகுவானது. கனிந்த பொக்கை வாய் புன்னகையுடன் “நன்றி” என்றார். “உங்கள் கணக்குகள் முடிந்துவிட்டது. வெறும் இன்பங்கள் மட்டுமே நிறைந்த மானுடர்களின் கனவுலகம். உங்களுக்காக சுவர்கத்தின் தாழ்கள் திறந்திருக்கின்றன. நீங்கள் உங்கள் வாழ்வில் துறந்த எல்லா இன்பங்களும் அங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.”

காந்தி திகைத்து நின்றார். நொடிபோழுது மவுனித்து “மன்னிக்கவும். அப்படிப்பட்ட ஒழுக்க கேடான உங்கள் சுவர்க்கம் எனக்கு தேவை இல்லை. அங்கு நான் செய்வதற்கு ஏதுமில்லை. இத்தனை ஆண்டுகாலம் என்னை வருத்திகொண்டதெல்லாம் எங்கோ கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கட்டற்று இருக்கதானா? அகக்கொந்தளிப்புகளுக்கும் அல்லல்களுக்கும் எவ்வித பொருளுமில்லையா? இன்பம் நிறைந்திருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை? என்னை அங்கு அழைத்து செல்ல வேண்டியதில்லை”

“ஆனால் எங்கும் எவருடைய தியாகங்களுக்கும் எவ்வித பொருளும் இல்லை புனிதரே. அவை நீரால் எழும்பும் அலை சிகரங்களை போலத்தான் எத்தனை உயரம் எழும்பினாலும் அவை நீர்பரப்பில் வீழ்ந்து கலந்து தான் ஆக வேண்டும். சுவர்கத்தை விட்டால் நரகத்திற்கு தான் சென்றாக வேண்டும். அதை விதிமுறைகள் அனுமதிப்பதில்லை..”

“நான் நரகத்திற்கே செல்கிறேன். அங்கே இன்னும் மனிதர்கள் வாழக்கூடும்.”

“ அங்கே நிணம் கொதிக்கும் சிறுமை கொண்டவர்கள் தான் இருப்பார்கள்”

“அப்படியானால் அங்கு தான் நான் தேவைப்படுவேன்..எனக்கது மற்றொரு சோதனைக்களம்..என்னை அங்கேயே அழைத்து செல்லுங்கள்..எனது நன்மையை உத்தேசித்து செய்வதானால் நான் விடுக்கும் இக்கோரிக்கையை ஏற்றுகொள்ளுங்கள்..சுவர்க்கம் அல்ல சுவர்கத்திர்கான விடாய் மனிதர்களை இயக்குகிறது”

“உத்தமரே, நீங்கள் தேர்வு செய்வது மீளமுடியாதொரு பயணத்தை. அதன் விளைவுகள் உங்களை மட்டுமே சார்ந்தது. உங்களால் ஒருபோதும் சுவர்கத்திற்கு மீள முடியாது..”

“இல்லை நான் மீள விரும்பவில்லை” என்றார் உறுதியாக.

நீண்ட மவுனத்திற்கு பின்னர் “ அப்படியானால் சரி..கண்களை இறுக மூடி திறவுங்கள்” என்றான் காலன்.

பெரும் வாயில் ஒன்றை திறந்துவிட்டான் காலன். “இதோ நீங்கள் கேட்ட உலகம்” விழிவிரிய வாயில் மீதேறி நோக்கினார். சீழ் வடிந்துகொண்டிருந்த ஒருவனின் காலை துடைத்து மருந்திட்டு கொண்டிருந்தான் ஒருவன். அவனை எங்கோ கண்டது போலிருந்தது. அவன் தன்னுருவம் கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தார். சீழ் வடியும் புண் உடையவனும் அவ்வுரு கொண்டிருந்தான். திமிரி வந்த காளையொன்று புண்ணுக்கு மருந்திட்டவனை முட்டி வீச சீறி வந்தது, அதன் கொம்பின் குத்துக்களை வாங்கி அதை தடுத்து நிறுத்தினான் மற்றொருவன் அவனும் அதே உருவம் கொண்டவன் தான். ஒரு காந்தி முட்டி நிற்கும் காளைக்கு புல்லருத்து போடுகிறார். அதோ ஒரு காந்தி மலகூடையை சுமந்து செல்கிறார். மற்றுமொரு காந்தி சாக்கடை அடைப்பை அகற்றுகிறார். அதோ ஒரு காந்தி சடலங்களை எரியூட்டுகிறார். எரிந்த சடலங்களின் மிஞ்சிய சாம்பலில் இருந்து ஒரு காந்தி எழுந்து வருகிறார். அவ்வுலகம் காந்திகளால் நிறைந்தது. காந்தி மலர்ந்த முகத்துடன் உட்புகுந்தார். வாயில் மூடிக்கொண்டது.

காலன் முறுவலித்தான் “உண்மையில் இவ்வுலகம் நரகம் அல்ல. இது காந்திகளுக்கான பிரத்யேக சுவர்க்கம். ஆம் காலகாலமாக இவ்வுலகம் காந்திகளுக்கான, இயேசுகளுக்கான, புத்தர்களுக்கான விளையாட்டு திடலாக, அவர்கள் அகம் மகிழும் சொர்க்கமாகத்தான் இருந்திருக்கிறது. இதோ யுகமடிப்பில் மற்றுமொரு காந்தி.” மனதிற்குள் சிரித்துகொண்டான்.

2 Comments »

  • shankaran said:

    நல்ல படைப்பு. வாழ்த்துக்கள் நரோபா

    # 15 June 2014 at 11:58 pm
  • meenakshi Balganesh said:

    Very well written unusual imagination. Congratulations.

    # 28 June 2014 at 10:52 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.