இசைவழி ஓடும் வாழ்க்கை – பகுதி 2

[இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்: http://solvanam.com/?p=10888]

இசை இல்லாத சமூகங்கள் குறைவு, மிக மிகக் குறைவு. இத்தனைக்கும் இசையை ஒழிக்கத் துடிக்கும் இயக்கங்கள் வரலாற்றில் ஆங்காங்கே இருந்தன, ஒன்றிரண்டு இன்னமுமிருக்கின்றன. இசை மீதான இப்படிப்பட்ட தணிக்கைகளைக் குறித்து இந்த இணையதளத்தில் படிக்கலாம். இத்தளத்திலிருக்கும் ஒரு பேட்டியில் இஸ்ரேலின் புகழ்பெற்ற தானியேல் பாரென்பொய்ம் (Daniel Barenboim) என்ற இசைக்கலைஞர் தான் சந்தித்த தணிக்கையைக் குறித்து பேசியிருக்கிறார்.

barenboim2001-ஆம் ஆண்டு தானியேல் இஸ்ரேலில் ஒரு இசைநிகழ்ச்சியைத் தந்திருக்கிறார். அதில் வாக்னரின் ஒரு இசைக்கோர்வையை வாசித்திருக்கிறார். அதை வாசிப்பதற்கு முன்னால் பார்வையாளர்களிடம் வாக்னரின் இசைக்கோர்வையை வாசிக்கப்போவதாகவும், விருப்பமில்லாதவர்கள் எழுந்து சென்று விடலாம் என்றும் சொன்னார். ஒரு சிலர் எழுந்து சென்றும் விட்டனர். ஆனால் வாக்னர் அந்த இசைக்கோர்வையை வாசித்துமுடித்ததும் அரங்கிலிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி தானியேலை கெளரவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து பொது ஊடகங்களில் தானியேல் இசைச்சூழலை மாசு படுத்துக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து தானியேல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களைச் சேர்த்து ஒரு இசைக்குழு ஆரம்பித்து இசைநிகழ்ச்சிகளைத் தந்தார். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து. ஆனால் அதற்காக அவர் கடுமையான வசைகளையும், தடைகளையும் சந்திக்க நேர்வதாக வேதனையோடு குறிப்பிடுகிறார்.

இரண்டாம் உலகப்போரின்போது, வாக்னரின் இசை, நாஜிகளால் கூட்டங்களுக்கு வெறியேற்றவும்,பெரும் அரசு நிகழ்ச்சிகளை ஆர்ப்பாட்டமாக அரங்கேற்றவும் பயன்படுத்தப்பட்டன. இன்று, வாக்னரின் நாஜி அபிமானம் குறித்த ஆய்வுகளும், புத்தகங்களும், கட்டுரைகளும் அவர் பெயரில் சேற்றையும் கரியையும் பூசியிருக்க, அவர் பெயரைச் சொன்னாலே ஏளனப் பார்வை கிட்டும் அளவுக்கு இருக்கிறது.  இருந்தாலும், வாக்னரின் இசை இன்னமும் பேரரங்குகளில், பல்லாயிரம் மனிதர் நடுவே உலகெங்கும் ‘நாகரீகம்’ மிக்க சமூகங்களில் இசைக்கப்படுகின்றது. அது இன்னமும் சராசரி மனிதருக்கு அசாதாரணமான மேன்மையைத் தரிசிக்க உதவுகிறது. இசை, புற வெளியில் மேன்மையை நமக்குக் காட்டுவதை விட நம் அந்தராத்மாவில் மேன்மையைக் காட்டுகிறதென்று நினைக்கிறேன். அதனால்தான் அதன் வழி ஏற்படும் பெருங்கிளர்ச்சி நம்மை சக்தி இழந்து தொய்ய வைக்காமல், உத்வேகத்துடன் வாழ்வில் இறங்க ஊக்குவிக்கிறது, நம்மைப் புதுப்பிக்கிறது. சோக இசை கூட, மனதை உருக்கி துக்கத்தில் நம்மை ஆழ்த்தக் கூடிய இசை கூட ஏதோ ஒரு தளத்தில், இடத்தில் நம்மைப் புதுப்பிக்கிறது. தியான மண்டபங்களிலும், மனோவியாதி நிலையங்களிலும் மிக்க அல்லலும் உளைச்சலும் பெற்ற மனிதருக்கு செவ்விசையும், பக்தி இசையும் மன அமைதியையும், புத்தியைக் குவிக்கும் சக்தியையும் கொடுத்து வாழ்வில் மீண்டும் இயங்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

இசையைத் தடை செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும் தொடர்ந்து தோற்கின்றன. வாளும், துப்பாக்கியும், கசையடியும், கட்டாயப் பாசறைகளும் எப்படி உள்மனதில் ஊறுவதை ஒழிக்கும்? இறைவனே கொடுத்த ‘சட்டமோ’, புரட்சித் தாரகைகளின் கைப்புத்தகங்களோ, விவசாயிகளின் பெயரால் சர்வாதிகாரிகள் விவசாயிகளிடமே நடத்திய ‘களை எடுப்புகளோ’, படைப்பு ஊக்கத்தையோ, கலை ஆர்வத்தையோ எத்தனை காலம் முடக்கி விட முடியும்? இசை என்றில்லை, ஓவியம், எழுத்து, நடனம், நாடகம், சினிமா, சிற்பம் போன்ற பல கலைகளுக்கும் அவ்வப்போது எதிரிகள் பல உருவில் தோன்றி இருக்கிறார்கள். இசையே முதலியத்தின் நசிவை வளர்க்கிறது என்பன போன்ற அற்பக் கட்டளைகளைப் பல இயக்கங்கள் முயன்று சுமத்திப் பார்த்திருக்கின்றன. இசை காம ஊற்று என்று கோணலாகப் பார்த்த பெரும் மதங்களின் போதகர்கள் இருந்திருக்கிறார்கள்.

இன்று நாகரீகத்தின் குறியீடாக உலகுக்குத் தன்னை விற்க முயலும் மேலை நாடுகளில் பல பகுதிகளில் பெரும் இசைக்கெதிராக இந்த மதபோதகர்களின் சொல்லைக் கேட்டு, இசையை அழிக்க, கலையை ஒழிக்க ரத்தக்களறியே நிகழ்ந்திருக்கிறது. இறையச்சம் என்ற பெயரில் ஆசியா, ஆப்பிரிக்காவெங்கும் பல நாடுகளில் கலைகளுக்கெதிரான கட்டளையைச் சுமத்தித் தோற்றிருக்கின்றனர் மனிதப் படைப்பூக்கத்தின் எதிரிகள்.

ஒளரங்கசீப் தன் சபையிலிருந்த சங்கீத மேதைகளைப் பாடவிடாமல் பல்லாண்டுகள் தடை விதித்திருந்தான். நாஜிகள் ஐரோப்பியரல்லாத மற்ற அனைவரின் இசைக்கும் தடை விதித்திருந்தனர்.  எத்தனையோ தேர்ந்த ஜிப்ஸி இசைக்கலைஞர்கள் வதைமுகாம்களில் கொல்லப்பட்டனர். கம்யூனிஸ நாடுகளில் ‘இயக்கப் பாடல்கள்’ தவிர மற்ற அனைத்து இசைவகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. சீனாவின் நாட்டுப்புறப்பாடல்கள் தடைசெய்யப்பட்டு, கட்சியின் புகழ்பாடும் பாடல்கள் (மேற்கத்திய மெட்டுக்களில்?) கற்றுத்தரப்பட்டன.

violin-students-466ரஷ்யாவும் சீனாவும் பல வகை இசைகளை, நாவல்களை, ஓவியங்களை, திரைப்படங்களைத் தடை செய்து, படைப்பாளிகளைத் தண்டித்துப் பார்த்து தோற்றிருக்கின்றன. தண்டிப்பும், சிறைச்சாலைகளும், கட்டாய உழைப்பு முகாம்களும், தவிர நொறுக்கப்பட்ட பியானோக்கள், வயலின்கள், உடைக்கப்பட்ட விரல்கள், அறுக்கப்பட்ட குரல் நாண்கள் – எதுவும் இசையை ஒழிக்க முடியவில்லை. எந்தச் சீனா மேற்கின் வெகு ஜன இசையையும், செவ்விசையையும் முதலியச் சகதி என்று பிரச்சாரம் செய்து மக்களை மூளை சலவை செய்ய முயன்றதோ, அதே சீனா இன்று மேற்கத்திய செவ்விசையை நாட்டின் நாற்புறமும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பரப்பி வருகிறது. இந்த வகைத் தணிக்கை முறைகள் உலகின் பல நாடுகளிலும் இன்னும் தொடர்ந்து அமலில் உள்ளன.

மனித உருக்களைப் படம் வரையக் கூடாதென்று சட்டம் பிறப்பித்த மதங்கள், தொலைதரிசிகள் உண்டு.  அவர்களின் நாடுகளிலேயே இன்றோ எங்கும் எதிலும் படம், அங்கு மட்டுமில்லை, அனைத்து நாடுகளிலும் பெரும்பாலான வீடுகளில் எங்கும் படமே. அதுவும் ஒன்றில்லை, இரண்டில்லை, படங்களின் வெள்ளமே ஓடுகின்றது. சூனாமி அலையாகவே பிம்பங்களின் பெருக்கு அடித்து வீசுகிறது. அஃதில்லாமல் நாகரீகமே இல்லை என்னுமளவு சாடிலைட் டிஷ் மூலம் காட்டுப் பகுதிகளில், மலைகளில், நடுக் கடலில் எல்லாம் ஒலி ஒளிக் காட்சிகள் பாய்கின்றன. வீட்டில், கடையில், ரயில்நிலையத்தில், விமான நிலையத்தில், உணவகங்களில், பஸ்களில் எங்கும் ஓடும் படங்கள். பல நாடுகளில் கழிப்பறைகளில் கூட படமோட்டும் பெட்டிகள் ஒளிர்கின்றன. பொது இடங்களில் எங்கும் பிம்பங்கள், கூடவே உரத்த இசையின் ஒலி – சில சமயம் அதெல்லாம் நாராசமாகக் கூட இருக்கிறது. இருந்தும் அதில்லாமல் தொலைதூரப் பயணங்களிலும் உறங்க மறுக்கின்றனர் மக்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் நம் அமைதியைக் குலைக்கின்றன, ஓய்வெடுக்க விடாமல் செய்கின்றன, சிந்திக்கத் தேவையான மௌன இருப்பை நமக்கு மறுக்கின்றன. ஆனால் உலகெங்கும் மனிதக் குழுக்கள், சமுதாயங்கள் அன்றாட வாழ்வில் பல விதக் கலைகளை விரும்புகிறார்கள் என்பதை இந்த வகைப் பெருக்கெடுப்பு நமக்குக் காட்டுகிறது. கசப்பு மனோபாவம் கொண்டவர்கள் கூட, பிறருடைய சந்தோஷத்தை அழிப்பதே தம் வாழ்வுக் கடமை என்று நடந்து கொள்பவர் கூட தம் தனிமையிருட்டில் இந்தப் பிரவாஹத்தையே நாடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

மனிதரின் இயல்போடு இசைந்தவை ஓவியமும், இசையும், கவிதையும், பாட்டும், நாட்டியமும், தாளமும், விளையாட்டும், கதைகளும், புராணங்களும். இவை இல்லாத நாகரீகம் ஏது? அதிலும் குறிப்பாக, தலையை முண்டனம் செய்த துறவியும், நீள்தாடியால் முகத்தை மறைத்து, தம் கொடுஞ்சொற்களால் கேட்பாரின் மதியை மரக்கடித்த மதபோதகரும், மீசையை முறுக்கி வீரமான பாவனை செய்யும் மோசடிச் சர்வாதிகாரிகளும் செயலற்று நிற்பது எங்கே, வெளியை நிரப்பும் இசையின் முன்.

பறவைகளை மனிதர்கள் வியக்க ஒரு காரணம் அவை பறப்பதும், பெருவானில் சர்வ அலட்சியமாக, இலேசாகத் திரிவதும். சுதந்திரத்தின் குறியீடாகப் பறவைகள் நம் வாழ்வின் பரப்பில், கற்பனையில், இலக்கியத்தில், பாடல்களில் என்றும் எங்கும் உலவுகின்றன. சற்றே கூர்ந்து கவனித்தால் தெரிவது, பறவைகளை மனிதர் போற்றுதற்கு இன்னொரு காரணம் வெளியை இசையாய் நிரப்பும் அவற்றின் குரலொலிகள். அசாதாரணமான ஒரு பறவையைப் பற்றிய விடியோ ஒன்று சமீபத்தில் பார்வைக்குக் கிட்டியது.  இந்தப் பறவை தனக்கென ஒரு கூவல் கொண்டிருப்பதோடு, என்னென்னவோ பறவைகளின் கூவல்களை எல்லாம் அற்புதமாகத் தன்குரலில் நகலெடுக்கிறது.  எந்திரங்கள், போலிஸ் சைரன்கள் ஆகியன கூட இந்தப் பறவையால் நகலெடுக்கப்படுகின்றன.  விடியோவை இங்கே பார்க்கலாம்.

பறவைக் கூவல்களில்லாத வாழ்வுதான் எத்தனை வெறுமையாய் இருக்கும்? ஆழ்கடலில் நெடுந்தொலைவு பயணம் போகும் மனிதர்கள் கடலில் பறவை ஒலிகள் இல்லாது எப்படி உணர்கிறார்களென எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் அந்தப் பறவைக் கூவல்கள் இல்லாததை நினைத்து ஏக்கம் கொள்வர் என்று தோன்றுகிறது. கடற்பயணங்கள் பற்றிய இலக்கியத்தில் கரை கண்ணுக்குப் புலப்படாத சோர்வில் மனிதர் இருக்கையில் அவர்கள் மனதில் கேவலையும், நம்பிக்கை ஊற்றையும் ஒருங்கே பெருகடிக்கும் முதற்குறிகள் வானில் சுற்றும் பறவைகள், கலத்தில் வந்து அமர்ந்து நோட்டம் விடும் பறவைகள். ஏனெனில் அவை கரை வருகிற அறிவிப்புகள். அவை கண்ணில் புலப்படும் குறியீடுகள் என்றால் அவற்றின் கூவல் வாழ்வின் இசையாக அல்லவா அங்கு காதில் விழும்? காரணத்தோடே பாடினார் கண்ணதாசன், ‘அதோ அந்தப் பறவை போலப் பாட வேண்டும்’ என்று. அடுத்த வரியோ ஆட்டத்தில் மனிதர் கொள்ளும் இயல்பான விருப்பையும் சுட்டுகிறது. அடுத்தடுத்த வரிகளில் கவிஞர் மனிதரின் இசை விருப்பையும், சுதந்திர விருப்பையும் ஒன்றாக்கும் கீதம் ஒலிப்போம் எனவும் பாடுகிறார்.

ஃபின்லாந்து நாட்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ஜான் சிபேலியஸ் தன் வீட்டுக்கருகிலிருந்த ஏரியில் பறவைகள் ஒரே சீராகப் பறந்ததைக் கண்டு அடைந்த மன எழுச்சியில் ஒரு சிம்ஃபனியை எழுதினார். ‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைவில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவைதான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’ – எனக் குறிப்பிட்டார் சிபேலியஸ். இந்த பறவைகளின் பயணம், அவற்றின் ஒலிகள் கிளப்பிய எண்ண ஓட்டங்களே ஜான் சிபேலியஸின் ஐந்தாவது சிம்ஃபனி.  (இதைக் குறித்து மேலும் படிக்க: ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2 – ரா.கிரிதரன்)

கலை மனிதரை மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று பன்னெடுங்காலமாக மனிதர்கள் நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் பறவைகளும், ஏன் மிருகங்களில் பலவுமே கலையையும், நாட்டியத்தையும், இசையையும் விரும்புவதாகவே இயற்கை அறிவியல் இன்று தெரிவிக்கிறது. எனவே இந்த ஆர்வம் மனிதருக்கு மட்டுமானதல்ல என்று தெரிய வருகிறது. டால்ஃபின்கள் கூட அலங்கரிப்பை அறிகின்றன, விரும்புகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யானைகள் ஓவியம் தீட்டும் விடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். [1]

பறவைகள், மனிதர்கள் போக, இசை மிருகங்களையும் இமை சோர நிறுத்தி வைக்கும் என்று நம் பண்டை இலக்கியமும் சொல்கிறது. கண்ணன் குழலிசை கேட்டுப் பசுக்கள் மெய்ம்மறந்து தாமாக பாலைச் சொரிந்து நிற்பதாக எல்லாம் கற்பனை செய்து பாடுகிறார்கள் நம் மக்கள். அது வெறும் உயர்வு நவிற்சி என்று தள்ளிவிடலாம்.  ஆனால் இக்காலச் செய்தி ஒன்று. சமீபத்தில், பண்ணைப் பசுக்களுக்கு செவ்விசையை ஒலிக்கச் செய்தால் அவை கொடுக்கும் பாலின் அளவு கூடுவதாக ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.[2] குரங்குகளின் இசை ரசனையைக் குறித்து முன்பு சொல்வனம் இதழிலியே கூட படித்திருக்கிறோம்.  மிருகங்களையும் இசை அமைதியாக்கும், அல்லது பாதிக்கும் என்று நாம் உடனே நம்பத் தலைப்படுகிறோம். காரணம் அது நம்மைக் கட்டி வைக்கும் தன்மை. இது எல்லா மிருகங்களுக்கும் பொதுவாக இருக்கும் என்று நாம் நம்பத் தயாராக இருப்பதே நம்மை நாம் மிருகங்களின் அணியில் பொருத்தித்தான் அறிகிறோம் என்பதைச் சுட்டும். மனிதனை மிருகமாக்கவும், அவர்களுள் உள்ள மிருகத்தை மனிதராக்கவும் வல்லது இசை.

youthful_krishna_playing_flute_in_moonlight

எல்லாக் கலையும் உன்னதத்தையோ, நன்மையையோ பரப்புவதில்லை என்ற விமர்சனமும் ஒன்றும் பொய்யல்ல. இன்று தொலைக்காட்சி சீரியல்கள் குடும்பங்களைச் சிதைக்க, முயன்று கட்டிய பண்பாட்டை உடைக்க, ஏகப்பட்ட இசைக் கேவல்களுடன் தொடர் கதைக் காட்சிகளைப் பரப்பி மனிதரிடையே பரஸ்பரம் அவநம்பிக்கையை முனைந்து விதைக்கின்றன. ஏற்கனவே வாக்னரின் உரமேற்றும் ‘ஆண்மை’ மிக்க இசை எப்படி ராணுவ நடவடிக்கைகளையும், பெரும் அழிப்பையும் கொணர ஜெர்மன் மக்களை உந்தின என்பதை நாம் பார்த்தோம். நீலப்படங்களும், வக்கிரச் சித்திரிப்புகளும் நம் அன்றாட பாலுணர்வுகளைத் தொடர்ந்து சீண்டி நம்மை மலினப்படுத்துகின்றன என்பதிலும் பல கருத்து இராது. ஆனால் அவையும் ஒரு அளவில் கலை வெளிப்பாடுகளே, திறனற்ற, கோணலாக்கப்பட்ட மனித உணர்வுகளை, உறவுகளைத் தட்டையாக்கி மலினப்படுத்தும் கலை வெளிப்பாடுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இசை மனிதரின் வாழ்வையும் சித்திரிக்கிறது, தானே அவர் வாழ்வாகவும் ஆகிறது. வாழ்வாக ஆகும் ஒன்று வாழ்வின் பெருமைகளையும், சிறுமைகளையும் தன்னில் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அவற்றைச் சித்திரிப்பதாலோ, வெளிப்படுத்த வாகனமாக ஆவதாலோ இசை கறைப்படுவதில்லை, அது ஊடகம்தான். வாழ்வு பெருக்கெடுப்பது இசையின் வழியே பிரவஹிக்கிறது.

அதனாலேயே இசையில் பல வகைகள் எழுகின்றன. மனிதரின் நுட்ப சிந்தனைக்கும், உயரும் வேட்கைக்கும், பெருமுயற்சிக்கும் இடம் கொடுக்கும், பல தலைமுறைப் பாரம்பரியத்தின் விளைவை எல்லாம் ஒன்றுபடுத்திக் கொடுக்கும் செவ்விசையாகட்டும், தோன்றிச் சில வருடங்களே ஆன இளம் சிறாரின் குதூகலத்துக்கு வடிவம் கொடுக்கும் சிறுவர் பாடல்களாகட்டும், முளைத்த சிறகு வெளியில் பறக்க வலுவுள்ளதா என்று சோதித்துப் பார்க்கும் இளைஞரின் தான் தோன்றி இசையாகட்டும் வயதுக்கேற்ற இசை, களத்துக்கேற்ற இசை, காலத்துக்கேற்ற இசை, பொருளுக்கேற்ற இசை, காலம், இடம், பொருள் எல்லாம் கடந்த மோனத்தைத் துதிக்கும் இசை என்று ஏதேதோ வகைகளில் இசை பிரிந்து நிற்கிறது. எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு ஒழுங்கும் அதில் எங்கும் ஒலிக்கிறது.

இவற்றில் ஒரு கூறே இன்று உலகில் எங்கும் ஒலிக்கும் இருவகை இசைகள். ஒன்று வெகுஜன இசை என்று அறியப்படுகிறது. (Popular music). இன்னொன்று மக்களிசை (folk music, country music, black music இத்தியாதிகள்). இதில் எந்தக் கருத்தியல் சாயத்தைக் கலந்து பார்க்கிறீர்களோ அதை ஒட்டிச் சில நசிவு இசை, சில போராட்ட இசை, சில புரட்சி இசை என்றெல்லாம் முத்திரைகளைச் சுமத்திப் பார்க்கிறீர்கள். தவிர பாட்டாளி இசை, தலித் இசை, கிருஸ்தவ இசை, பக்தி இசை, தமிழிசை, மலை மக்கள் இசை, விவசாயிகளின் இசை, நாடோடி இசை, ரோமா இசை, ஐரிஷ் (செல்டிக் அல்லது கெல்டிக்) இசை, டெர்விஷ் இசை [3] என்று பல நூறு பெயர்களுடனும், பெயரில்லாமலும் இசை ஓடைகள் உலகெங்கும் பெருகி, மனித மனதில் ஈரப்பசையைத் தக்க வைக்க உதவுகின்றன.

(தொடரும்)

குறிப்புகள்:

[1] http://www.salon.com/people/feature/2000/03/23/elephantart

http://www.dailymotion.com/video/xd22ew_painting-elephant-in-the-room_shortfilms

இது ஒரு எத்து வேலையா, ஏற்கனவே வரைந்த படத்தை யானை திருப்பி வரைகிறதா, சொல்லிக் கொடுத்ததை வரைகிறதா, அப்படி ஆனால் அது ஓவியமாகுமா போன்ற கேள்விகள் பலரால் கேட்கப்பட்டிருக்கின்றன.  இங்கு ஒரு சிறு சர்ச்சை. http://www.newscientist.com/blog/shortsharpscience/2008/07/elephant-art.html

இதில் மனித ஓவியர்களே பலரும் சொல்லிக் கொடுத்ததையோ, ஏற்கனவே வரைந்ததையோ, தம்க்குச் சரியாகப் போட வந்தையே திரும்பத் திரும்ப வரைவதையோ செய்கிறார்கள், அதெல்லாம் கலை இல்லையா என்ற கேள்வி வருகிறது.  நல்ல கேள்விகள்.

[2] http://www.telegraph.co.uk/earth/agriculture/7965615/Cows-given-waterbeds-to-improve-milk.html

பாட்டுக் கேட்டு பசுக்கள் கொடுக்கும் பாலை எப்படி எல்லாம் விற்கிறார்களென்று பார்த்தால் சந்தை எப்படி எல்லாம் மனிதரின் உணர்ச்சிகளோடு விளையாடுகிறது என்பது புரியலாம்.  இறுதியில் எல்லாம் விளையாட்டே என்றல்லவா சொல்கிறது இந்தியத் தத்துவம்.

http://www.youtube.com/watch?v=jueA-2zSkBo

[3] அனடோலியன் டெர்விஷ் இசை என்று அறியப்படும் சூஃபிகளின் இசையை இங்கு கேட்கலாம்.  அனடோலியன் என்பது துருக்கியப் பண்பாட்டின் ஒரு பகுதி.

http://new.music.yahoo.com/asik-mahzuni-serif/tracks/haci-bektas-i-veli-dost–177489619