முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2

கான்லன், நாங்கள் எல்லாரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.

முறைப்படியான ஒரு பதில்

போகுமுன், கதவுப் பிடியில் கை வைத்தபடி, அவர் சொன்னார், “உனக்கு இங்கிலிஷ் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் இதைப் பற்றி யோசி: நம் கல்லூரியில் போதிக்கும் எந்தத் துறை உனக்கு மேலான தொழில் வாழ்க்கையை அளிக்கும்? சென்ற வருடம் நம் மாணவர்கள் இரண்டு பேர் பரீட்சைகளில் தேறி, ஆஃப்ரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் போனார்கள். அவர்கள் யூரோப்புக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் இடையே நிறைய தடவை பயணம் போகிறார்கள், …. ..எல்லாரும் முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். நீ இன்னும் இளைஞன். பலவகையான வாய்ப்புகள் உன் வாழ்க்கையில் கிட்டும். நீ அவற்றுக்கு உன்னைத் தயாராக்கிக் கொள்ளவில்லை என்றால், அவை எவற்றையும் கைப்பற்ற உனக்கு இயலாது. இப்போது இங்கிலிஷை ஆளக் கற்பதுதான் உன்னை நன்கு தயார் செய்து கொள்ள இருக்கும் ஒரே வழி, நீ அதை அறிகிறாயா?”