அகவாழி

ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது.

வான்பார்த்தல்

அவள் ஐந்தாம் வகுப்பு படித்தாள். ‘அவளைவிட எனக்கு அறிவு மிகுதி’ என்று உணர்ந்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு அழகு மிகுதி’ என்று நினைத்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு வலிமை மிகுதி’ என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  ஆனால், அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது, எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புரிந்தது.