பனியூழிகள்-கண்டுபிடிப்பும் ஆய்வுகளும்

நீண்டகாலத் தாழ்வெப்பநிலை காரணமாகப் புவியின் கணிசமான நிலப் பரப்புகள் சில/பல மில்லியன் ஆண்டுகள் உறைபனியால் மூடிக் கிடந்த காலங்களில் ஐஸ் ஏஜஸ் (ice ages) எனப்படும் பனியூழிகள் சம்பவித்தன. பனியூழி என்ற சொல்லாடல், தோலாடை அணிந்த கற்கால மனிதன் உணவு தேடி, பனிபடர்ந்த விரிந்த நிலப்பரப்பில் முற்றிலும் நம்பிக்கை இழந்தவனாக அலைந்து திரியும் காட்சியை உங்கள் மனக்கண் முன் நிறுத்தக் கூடும். ஆனால் மனித இனம் தோன்றி ஓங்கி உயர்ந்தது எல்லாம் கடந்த 300000 (3 லட்சம் ) ஆண்டுகளுக்குள் தான். அதற்கு முன்பே பெரும்பாலான பனியூழிகள் முடிந்து விட்டன.