எமிலி வில்ஸன் ‘த ஆடிஸி’யை எப்படி மொழி பெயர்த்தார்?

ரோஜா விரல்கள் கொண்ட வைகறை, மூல நூலில் எவ்வளவு முறை தொன்றுகிறாளோ, அதே அளவு மொழியாக்கத்திலும் தோன்றுகிறாள், எப்போதும் ரோஜாக்கள் அல்லது மலர்கள் அல்லது இளஞ்சிவப்பில், எப்போதும் விரல்களுடன் அல்லது தொடுகையாய், எப்போதும்’ அதிவிரைவில் அல்லது புதுப் பிறப்பாய், அல்லது முதற் பிறப்பாய், ஆனால் இப்படி மீண்டும் மீண்டும் வரும் கூறுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை பலவிதமாய் மாற்றியிருக்கிறேன்- இவ்விதமாய் படிமங்களும் உருவகங்களும் வாசகருக்கு எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்து இதைச் செய்திருக்கிறேன். இருபது முப்பது முறை இப்படி வந்தாலும் அது அலுக்கக் கூடாது. ஒவ்வொரு முறை ஒரு அதிதி வரவேற்கப்படும்போதும், ஒருவர் உடை மாற்றிக் கொள்ளும்போதும், உணவு உண்ணும்போதும், ஹோமரில் நடக்கும் விஷயங்கள் குறிப்பிட்ட வரிசையில் நடக்கின்றன என்பதை வாசகர்கள் அனுபவமாய்ப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அது உங்களைத் தொட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள இந்தக் கோலத்தில் சிறு சிறு வடிவ மாற்றங்கள் அமைந்துள்ளன. உருப் பெறாத வெறும் மொத்தைகளாக வைகறையின் விரல்கள் வானில் இருக்கக் கூடது என்று நினைக்கிறேன்; வாசகி அவற்றின் தொடுகையை உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியம்.