மிளகு அத்தியாயம் நாற்பது

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.