வானில் சூரியன் எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். செஞ்சுடர் ஒளிர அந்தத் தீவண்ணன் நடந்து வருவது போல பொன்னம்பலத்திற்கு மேனி சிலிர்த்தது. தன்னையறியாமல், பாட்டு கிளம்பியது. “ அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்; பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூ மிசை; என்னம்பாலிக்கும் ஆறு கண்டின்புற ; இன்னம் பாலிக்குமோவிப்பிறவியே “ என்று பூர்விகல்யாணி ராகத்தில் லயித்து, தில்லையம்பலவாணனை நினைத்து மனமுருகப் பாடிக் கொண்டே நடந்தவர் அப்படியே அந்த சூரியன் வந்த திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு கண்மூடி நின்றிருந்தார். “ நடராஜா” என்று கண் விழித்தவர் அருகில் நின்றிருந்தவரை க் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டார்.
