மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர். விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர். சைப்ரஸில் குடியிருந்த கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.
