1965ல் ஒரு பஸ் பயணம்

இப்போ நிலைமை எப்பிடின்னு தெரியலை. அந்த நாட்களிலே டிரைவரோட வேலை வண்டி ஓட்டுறது மட்டும் இல்லை. அவர் ஒரு ஆடிட்டராகவும் மாத்து ஜோலி பார்ப்பார். கண்டக்டருக்கு ஒரு கவுண்டர்-பாலன்ஸ் மாதிரி. இது ஒரு பிரமாதமான, தனித்துவமான செயல்முறை எல்லாரையும் நேர்மையாய் வைத்திருப்பதற்கு. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வந்து, ஏறக்குறைய மூணாம் மைல் பக்கம் முதல் நிர்வாக நிறுத்தம் செய்யப்படும், டிரைவரும் கண்டக்டரும் கலந்து தீவிர ஆலோசனை செய்தபிறகு. இந்தச் சின்ன தூரத்தில் ஒரு நாலு தடவை அண்ணாச்சிகள், பாட்டையாக்கள், ஆச்சிகள், குஞ்சுகள், குளுவான்கள் பஸ்ஸை இஷ்டப்படி நட்ட நடு ரோட்டில் நிறுத்தி, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சாகவசமாக ஏறுவார்கள். அப்படி என்ன அவசரம் என்ற தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியப்படுத்திவிடுவார்கள்.