சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்

2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொகமது பவசிசி என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொகமது அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபிய வசந்தத்தின் முதல் பொறி அது.