நினைவுப் பிழைதானோ!

ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்கள் தங்கள் கோணங்களிலிருந்து கூறும் உத்தியை நிறைய கதைகளில் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் கூட அவ்வுத்தி வெகு காலமாக கையாளப் பட்டிருக்கிறது (ரசோமான் தொடங்கி). பார்ன்ஸ் இக்கதையில் கையாளும் உத்தி அதனின்று சற்று வேறுபட்டது. ஒருவன் தன் வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது, அதைக் கூறும் விதத்தால் அப்பதிவு எவ்வளக்கெவ்வளவு உண்மை, உண்மை இல்லையெனின் அது சொல்பவரின் ஞாபகக் கோளாறா அல்லது அவன் வேண்டுமென்றே திரிக்கும் கதைகளா என்று படிப்பவரை சிந்திக்க வைக்கும் உத்தியைக் கையாண்டிருக்கிறார் ஜூலியன் பார்ன்ஸ்.

எழுதுவதென்பது ஒரு சுய இன்பச்செயல்

அப்பாவின் மெளனம், இயன் மெக்கீவனின் (Ian McEwan) ‘பிராயச்சித்தம்’ (Atonement) நாவலில் வரும் ஒரு பத்தியை நினைவுபடுத்தியது. அக்கதையின் முக்கிய கதாபாத்திரம், தான் ஐம்பது வருடத்திற்கு முன் வசித்த லண்டனிலுள்ள ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தை ஒரு டாக்சியில் கடப்பாள். அப்போது அவள் மனதில் இந்த சிந்தனைகள் ஓடும், “ஓரு வயதுக்குப் பிறகு நகரத்தினூடே பயணம் செய்தல் துயரமிக்க நினைவுகளை கொண்டு வருகின்றது. இறந்தவர்களின் முகவரிகள் குவிந்துகொண்டே போகின்றன… ஒரு நாள் நானும் ஒரு வழிப்போக்கனின் மனதில் நொடி நேர நினைவைத் தோற்றுவிப்பேன்.”