இவை பெண்களின் கதைகள், பெண்கள் அதி-இயற்கையைச் சாதிக்கும் கதைகள் – ஆனால் ஒவ்வொரு கதையும் திகில் கதையாக ஆவது அதில் ஓர் ஆவி இருப்பதால் அல்ல, மாறாக அவை, நாம் வாழ்வில் ஏதோ சில கட்டங்களில் கேள்விப்பட்டிருந்த அல்லது அடைந்த அனுபவங்களை வினோதமான ஒரு வகையில் ஒத்திருக்கின்றன என்பதால்தான். ….”எனக்கு உருவங்களில்தான் கதை துவங்குகிறது. நான் ஒரு ஓவியராக இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரிசையாக சில உருவங்களைப் பார்க்கிறேன், இவை கிளர்வூட்டி என்னைச் சிந்திக்கத் தூண்டுன்றன. அதன்பின் அவற்றுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதத் துவங்குகிறேன். ஆனால் கதை எழுதும்போது, இதை மட்டும்தான் செய்ய வேண்டும். உனது நோக்கம், உனது பெண்ணிய வாதையைப் போகவிட வேண்டும்- உனக்குள் இருக்கும் கதைசொல்லிக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்.”