சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.

நான் எழுத்தாளனான கதை

பாரதி கவிதைகளைப் பற்றி நிதானிக்குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாராவாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்குமேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-இல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவமாயிற்று.