மேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார். சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது.