வாசகர் மறுவினை

நான் இங்கிலாந்தில் பார்த்த கிளப் மாட்சுகளிலும் செம்ஸ்போர்ட் மைதானங்களிலும் இந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக காணக் கிடைக்கும். கையில் புத்தகங்கள், சூரிய ஒளி க்ரீம்கள் பூசிக்கொண்டு, வழிய வழிய பீர் கோப்பைகள், குடும்பத்துடன் மாட்ச் பார்க்க வருவார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் மதிய உணவு இடைவேளை பின் ஆட்டத்தில் அரைக்கண் மூடி… கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு நாள் அனுபவம். இந்த கட்டுரையின் மூலம் சித்தார்த் வைத்தியநாதன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், அவருக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்!

வாசகர் மறுவினை

நீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம்! ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம்.

வாசகர் மறுவினை

இன்று வெளியான சொல்வனத்தில் க.நா.சு. பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். மைத்ரேயன் கட்டுரை படித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. மிக நன்றாக எழுதி இருக்கிறார். அந்த தஞ்சை பிரகாஷ் மேற்கோள்கள் மிக அருமை. என்ன ஒரு ஆளுமை.

வாசகர் மறுவினை

சொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

வாசகர் மறுமொழி

திரு.லலிதா ராம் எழுதிய “துருவ நட்சத்திரம் – காலம் சென்ற பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கைக் கதை” என்ற புத்தகத்தை என் அபிமான புத்தகக்கடையில் காண நேர்ந்தது. அந்த இளம் எழுத்தாளரின் பெயரைக் கண்டவுடன் நான் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டேன். புத்தகத்தைப் படிக்கத் துவங்கிய இரண்டே மணி நேரத்தில் 224 பக்கங்கள் அனைத்தையும் படித்து முடிக்கும் வரை நேரம் போனதே எனக்குத் தெரியவில்லை.

வாசகர் எதிர்வினைகள்

சொல்வனம் இப்படி ஆரவராமில்லாமல் தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருப்பது மார்க்கெட்டிங் மட்டுமே செய்து ப்ராண்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நம் சூழலில் மிகப்பெரிய சேவை. இதன் பயன் இன்று உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நீண்டகாலத்தில் சொல்வனத்துக்கென்று அழியாத இடம் காத்திருக்கிறது. அது உங்கள் தொடர்ச்சியான செயல்பாடு மூலம் மட்டுமே சாத்தியம்.

வாசகர் மறுவினை

விவல் அக்கா கதையின் சிறப்பு கடைசி பாராவில் நிகழும் காலமாற்றமும் முடிவும்தான். திட்டமிடப்பட்ட முடிவு வாசகனை ஒரு முட்டுச்சந்தில் விட்டுவிட்டு கதைசொல்லி காணாமல் போவது இயல்பாக நிகழ்கறது. திருமலைராஐன் ஆதாமிண்ட மகன் அபுவில் குரலுயர்த்தாமல் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார். வணிக கவனமிருந்தாலும் கூட கிரீடம் (திலகன் மோகன்லால் நடித்தது) போன்ற நல்லபடங்களை (குறைந்த பட்சம் பேத்தலில்லாத்து)மலையாளத்தில் வருகின்றன. தமிழில் அதேபடம் அசிங்கமானது.

பீடு நடை போடும் கியூபா – சில எதிர்வினைகள்

பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் காலடியில் விழுந்து சேவகம் செய்கின்றன என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் காஸ்ட்ரோ ஒப்பற்ற தலைவனாக ஏற்றுகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். அது எப்படி என்று விளக்கலாம். இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருபக்கம் அமெரிக்காவின் காலடியில் இருந்துகொண்டே மறுபுறம் காஸ்ட்ரோவையும் ”ஒப்பற்ற தலைவனாக” ஏற்றுகொண்டுவிட்டனவோ என்னவோ.

வாசகர் கடிதங்கள்

என் அப்பாவே ஆசிரியராகப் பணியாற்றியிருந்தாலும், குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர்கள் மீது பொதுவாகவே கோபம் இருந்தது. ஒருமுறை ஒரு மாணவன் எல்லா கேள்விகளுக்கும் விடையாக பானிபட் போரைப் பற்றியே எழுதியிருந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விடைத்தாளில் பின்குறிப்பாக, “நான் 12 மைல்கள் நடந்து பள்ளிக்கு வருகிறேன். வீட்டுக்குத் திரும்பியபின் எனக்கு படிப்பதற்காக மிகக் கொஞ்சமே நேரம் இருக்கிறது” என்று எழுதியிருந்தானாம். அவனுக்குக் குறைந்தபட்ச பாஸ் மார்க் வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட்டேன் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

வாசகர் மறுமொழி

ப.கோலப்பன் எழுதிய ‘வெறுமை’ சிறுகதை மிக அருமை. பொதுவாகத் தமிழில் நல்ல சிறுகதைகள் அருகி வரும் காலத்தில் இது ஒரு ஆசுவாசமளிக்கும் நல்ல எழுத்து, நல்ல கதை. வெறுமை சிறுகதை சங்கீத வெறுமையை வெகு அழகாகச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சங்கீதம் ரசிப்பவர்களுக்கு, முக்கியமாக நாதஸ்வர ரசிகர்களுக்கு இச்சிறுகதை ஒரு பொக்கிஷம். தி.ஜா எழுத்துகளைப் போல அரிதான சங்கீதப் புனைவு.

வாசகர் கடிதங்கள்

இந்த சொல்வனம் இதழில் வந்த கணியான் கூத்து கட்டுரை அபாரம். நான் மிகவும் ரசித்துப் படித்தேன். திருச்செல்வன் இதை ஒரு கலை வடிவம் என்று மட்டுமில்லாமல், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருப்பது மிகவும் அற்புதமானதாகவும், அவர் ரசனையின் உண்மையைச் சொல்வதாகவும் இருந்தது. இதைப் போன்று அழிந்து, நசிந்து வரும் நாட்டார் கலைகளைக் குறித்து சொல்வனம் வெளியிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் மறுமொழி

இசைச்சிறப்பிதழ் என்று சொல்லாமலேயே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, அமெரிக்க இசை, திரையிசை எனப் பலவகை இசையைப் பற்றியும் சத்தமில்லாமல் ஒரு சிறப்பிதழாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள். கட்டுரைகளை ஏனோ தானோவென்று வெளியிடாமல், தேவையான படங்கள், வீடியோக்கள், ஒலித்துணுக்குகள் தந்து ஒரு புதிய அனுபவத்தையே அள்ளித்தரும் உங்கள் சிரத்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.

வாசகர் எதிர்வினை

புத்தகத்தைப் பற்றி பேசும் போது, அதன் வடிவமைப்பையும் பற்றி சிலாகிப்பது அவசியமாகிறது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை நல்ல வடிவமைப்பு. சிரத்தை கண்கூடாக தெரிகிறது. வண்ணதாசன் சாருடைய அணிந்துரை அம்சமானது. ஏக்நாத்தின் ‘ பூடம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு, தன் வளமான மொழியை விடுத்து அச்சு அசல் திருநெவேலி தமிழில் அவர் எழுதி தந்திருக்கிற அணிந்துரை இதுவாக தான் இருக்க வேண்டும்.

வாசகர் மறுமொழி

சொல்வனத்தில் சென்ற இதழில் பிராந்து சிறுகதை படித்தேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டுமொரு முறை ரசித்துப் படிக்கும்படி தந்ததற்கு நன்றி. இந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் இப்போதெல்லாம் இலக்கியத்துக்கு நிறைய முக்கியத்துவம் தருவதும் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், வெ.சா, ஆ.மாதவன் போன்றவர்களின் படைப்புகளை அடிக்கடி படிக்க முடிவதும் சொல்வனத்தின் தகுதியை வெகுவாக உயர்த்துகிறது.

வாசகர் மறுமொழி

இன்றைய இலக்கியச்சூழலில் வெங்கட் சாமிநாதன் குறித்து ஒருவரால் பாராட்டாக எழுதமுடிகிறது என்றாலே அவர் தமிழில் வடிகட்டி எடுக்கப்பட்ட தேர்ந்த, நேர்மையான இலக்கியவாதி என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற அலட்டலில்லாத, தேர்ந்த படைப்பாளிகள் – வெங்கட்சாமிநாதனை நெருங்கமுடியக்கூடியவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனின் கட்டுரை மிகவும் நிறைவாக இருந்தது.

வாசகர் எதிர்வினை

சில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.

வாசகர் மறுமொழி

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, மிக அழகாக எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை. எத்தனை தகவல்கள். முற்றிலும் புதியது.நானும் காந்தளூர்ச்சாலை குமரி எல்லை என்று நினைத்திருந்தேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆய்வு. நான் அறிந்த சரித்திரத்தின் படி திருவனந்தபுரம் என்பது வெகு சமீபத்திய நகரம். ஒரு நானூறு ஆண்டுகள் இருக்கலாம் எனபதுதான். அதிலும் வேணாடு அரசர்கள்தான் அதை தலைநகராக கொண்டு ஆண்டனர்.

வாசகர் மறுமொழி

சொல்வனத்தில் வரும் தொடர்கள் சிறப்பாகவே இருக்கின்றன. நான் மிகவும் விரும்பிப்படித்த நாஞ்சில்நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, அருண் நரசிம்மனின் ‘ராகம் தானம் பல்லவி’ இரண்டும் திடீரென்று நின்றுபோனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. தொடர்கள் இடைவெளியில்லாமல், திடுதிப்பென்று நிறுத்தப்படாமல் வெளிவருவது ஒரு இதழின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். தொடரிலும் தொய்வில்லாமல் இருக்கும். ஆசிரியர் குழு கவனிக்கும் என நினைக்கிறேன்.

வாசகர் எதிர்வினை

ஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை.

வாசகர் எதிர்வினை

பல புத்தகங்கள், மனிதர்கள் சொல்லாத தகவல்களையும் ஒரு மரம் சொல்லிவிடும் என்பார் என் தாத்தா. என் இளவயது நினைவுகள் கிராமத்து மரங்களையும், செடிகளையுமே சுற்றிவருபவை. பவளமல்லியும், சங்குப்பூவும், தும்பைப்பூவும், அந்தி மந்தாரையும் குறித்து நினைக்கும்போது ஏதோ கனவு காண்பது போல்தான் இருக்கிறது. என் நினைவுகளை மீட்டுத்தந்த நாஞ்சில்நாடனுக்கும், சொல்வனத்துக்கும் நன்றி.

வாசகர் கடிதம்

இளையராஜா சமீபத்தில் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது – ‘இயக்குனர்களுக்கு உள்ள ஒரே ப்ரச்னை – ஹீரோ போல இமேஜ் பிரச்னை. ஒரு ஃபார்முலா வேலை செய்து விட்டால், அதையே மாற்றி போட்டு, மாற்றி போட்டு கதை சொல்வதையே மறந்து விடுகிறார்கள்”.

வாசகர் மறுமொழி

பத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.