திகிரி

சிதறால் மலைக்கு மேலே வருடக் கணக்கில் ஒரு மனிதரைக் கூட காணாது சமணத்
துறவிகள் இருந்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு எனக்கு
அங்கே ஒரு இரவாவது தங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு ஒருநாள்
தனியாகத் தங்கினேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மாலைஅடர்ந்ததும் கீழிறங்கிப் போவதை
பார்த்தேன். குரல்கள் ஒவ்வொரு படியாகபுறாக்களை போலத் தத்தி தத்தி
இறங்கின. பின்னர் எதிர்பாரா ஒருகணம் காற்றால்உந்தப்பட்டு பறந்து உங்கள்
அருகே மீண்டும் வந்து உங்களைத் திடுக்கிடச் செய்தன.

குதிரை வட்டம்

சற்றுநேரம் மின்னல்கள் நதிப்பரப்பில் சிறுபிள்ளைகள் போல ஒன்றையொன்று துரத்திப் பிடிப்பதைப் பார்த்தவாறு நாங்கள் நின்றிருந்தோம்.கடைசியில் ஒரு பெரிய சட்டாம்பி மின்னல் வந்து எல்லாரையும் விரட்டியடித்தது அதன்பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு விளையாட்டரங்கம் போல வானம் அமைதியுற்றது.மழை சொட்டித் தீர்ந்தது.சிறிய ஓடைகளின் கொலுசுச் சப்தம் கேட்க ஆரம்பித்தது.சோடியம் வேபர் விளக்கு திடுமென்று ”இனி நான் பணி நோக்கட்டே ?”என்பது போல எரிந்தது

ஆடியில் கரைந்த மனிதன்

நள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டு போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் .மிக கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒப்பனை.அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன .நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனார் போல .