ஆறில் ஒரு பங்கு

வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன்.