இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

இந்தியாவில், உலகெங்கும் இருப்பது போல, வங்கிகள் பணம் மாற்றிக் கொள்ள மற்றும், நுகர்வோர் பணக் கொடுக்கல்/வாங்கலுக்கு பலதரப்பட்ட மின்னணு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

 
ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவினுக்கே (organized economic sector) பயனளித்தது. இந்தியப் பொருளாதாரத்தின் வெறும் 2% மட்டுமே இதிலடங்கும். எஞ்சியிருக்கும் பொருளாதாரம், ரொக்கத்தை (cash) நம்பியே இயங்கி வந்துள்ளது. இதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய விஷயங்கள்:

  1. ரொக்கம் என்பது ஒரு சேவை முடிந்தவுடன் உடனே கைமாறும்
  2. மிக எளிதாக வங்கியில்லாத இடத்திற்கெல்லாம், பயன்படும் கருவி ரொக்கம்

இவ்வளவு பெரிய இந்த ரொக்கப் பொருளாதாரத்தை எப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவது? அத்துடன், அரசு மானியம், மற்றும், மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கலை எப்படி ரொக்கப் பொருளாதாரத்திலிருந்து விடுதலைச் செய்வது?
கிராமங்களில் இன்று நிச்சயமாக இருக்கும் இரண்டு விஷயம்தபால் நிலையம் மற்றும் செல்பேசிகள். செல்பேசிகள் தபால் நிலையம் இல்லாத சில இடங்களிலும் உண்டு என்ற நிலை வந்துள்ளது.
வேறு விதமாகச் சொன்னால், இந்தியாவில் எந்த ஒரு புதிய பொருளாதார முயற்சியும் ரொக்கப் பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமானால், முக்கியமாகச் சிந்திக்க வேண்டியத் தேவைகள்:

  1. ஐந்து வினாடிக்குள் ஒரு சேவை நிகழ்ந்தவுடன், பாதுகாப்பாக, பணம் கைமாற வேண்டும்
  2. எல்லா வித செல்பேசி, தபால் மற்றும் வங்கிகளுடனும் வெகு எளிமையாக, ஆனால் கட்டணமின்றி இந்தப் பரிவர்த்தனை நிகழ வேண்டும்
  3. இந்தியர்கள் செல்பேசி நிறுவனங்களுடன் பெரிதாக விசுவாசம் காட்டுவதில்லை. எந்த நிறுவனம் எந்தத் தருணத்தில், எங்கு நல்ல ஒரு திட்டம் தருகிறதோ, அவர்களுக்கே இந்தியர்களின் அந்நாளைய விசுவாசம். நல்ல வேளையாக, இந்திய அரசாங்கம், மேற்குலகைப் போல, குடிமக்களை செல் நிறுவனகங்களுடன் சட்டங்களால் கட்டிப் போடவில்லை. நிதி நிறுவனங்களும் செல்பேசி நிறுவனகங்கள் போல எளிதில் மாற்றக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

 

 
உலகில் இன்று இது நிகழும் ஒரே நாடு இந்தியா. இதற்கு UPI மற்றும் ஆதார் என்ற அருமையான முயற்சி அடிப்படை என்று பார்த்தோம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் அவ்வளவு எளிதாக பண மாற்றம் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனே மாற்றல் என்பது அவ்வளவு எளிதல்ல.  அத்துடன் விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் பெரு வியாபாரிகளுக்கு உதவினாலும், சின்ன வியாபாரிகளுக்கு இவர்களின் மூன்று/நான்கு நாள் பணப் பரிமாற்றத் தாமதம் ஒரு பெரிய தடைக்கல். இதனாலேயே விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் இந்திய கிராமப் பகுதிகளில் அதிகம் காலூன்றவில்லை. இன்று, இந்தியர்கள் மெதுவாக, ப்ளாஸ்டிக் கார்டுகளைத் துறந்து பல நிதிப் பரிவர்த்தனைகளை செல்பேசியிலேயே செய்யத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கமும், மானியம் மற்றும் மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கல் விஷயங்களை நேரடியாகச் செய்யத் தொடங்கிவிட்டது. இதற்கு அர்த்தம், ரொக்கம் முழுவதும் மறைந்துவிட்டது என்பதல்ல. பிரச்னையை இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்கள் ஒழுங்காகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ரொக்கம் முழுவதும் மறைந்து, ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருளாதாரத்திற்குள் பெரும்பான்மை இந்தியர்கள் வருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகலாம். ஆனால், முதன் முறையாக
,
மேற்குலகைக் காப்பியடிக்காமல் இந்தியப் பிரச்சினைக்கு ஒரு அருமையான இந்தியத் தீர்வு கண்டுள்ள இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்களை எத்தனைப் பாராட்டினாலும் போதாது. இந்த நிதிப் புரட்சி இந்தியாவில் இப்பொழுதுதான் ஆரம்பமாகி உள்ளது. இதன் வீச்சு, இந்தியப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் சக்தி கொண்டது.
நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்
இந்திய நிதிப் புரட்சி இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முயற்சிகள் முழுவதும் பயனளிக்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  1. தனியார் வங்கிகள், UPI மூலம் பல சேவைகள் அளித்தாலும், இதில் அதிகம் காசு பண்ண முடியாது என்று அறிந்துள்ளது. இதனால், இவர்கள் மிக முக்கியமாக, ஒரு புதிய சிந்தனையுடன் வங்கி வியாபாரத்தை அணுக வேண்டும். அதாவது, கட்டணம் வசூலித்துப் பழகிய வங்கிகள் கட்டணத்திற்கு பதில் வேறு வழியைக் காண வேண்டும். நுகர்வோர் விட்டுச் செல்லும் டிஜிட்டல் தடையங்கள் நாளைய வருமான வழிகாட்டிகள். இதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தை முழுவதும் புரிந்து கொண்ட தனியார் வங்கிகள் வெற்றி பெரும். மற்றவை தடுமாறும். முதல் முயற்சிகள் அதிகப் பயனில்லாமல் போகலாம் – இதற்கும் தயாராக இருக்க வேண்டும்
  2. அரசு வங்கிகள், பழைய முறைகளைத் துறந்து, புதிய UPI சேவைகளுடன் போட்டி போட வேண்டும். இங்குத் தொழிற்சங்கம் ஒரு இடையூறாகவும் இருக்கலாம். இந்த மாற்றத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது அரசு வங்கிகள் என்பது என் எண்ணம். ஆனால், ஒரு முக்கிய முன்னேற்றம் அரசு வங்கிகளைக் காப்பாற்றும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. இந்திய கொடுக்கல்/வாங்கல் சேவைகள் சந்தை ராட்சச வேகத்தில் விரிவடையும். இந்த விரிவடைப்பில், அரசு வங்கிகளும் பயன்பெறும். ஒரே குறை, விரிவான சந்தையில் அரசு வங்கிகளின் பங்கு, தனியார் வங்கிகளை விடக் குறைவாகவே இருக்கும்
  3. ஆர்.பி.ஐ., Payments Bank என்ற அமைப்பை 2014 முதல் அனுமதித்தது. இது போன்ற அமைப்புகள், கடனளிப்பு, மற்றும் சில விஷயங்களைத் தவிர, வங்கிகள் போல செயல்படலாம். இதில் முக்கியமாக, இந்திய தபால், ஒரு Payments Bank –ஐத் தொடங்கியுள்ளது. பீகார், ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்து கட்டட வேலை போன்ற சிறு வேலைகளை, மும்பய், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் செய்கிறார்கள்.  இவர்கள் பொதுவாக, தங்கள் கிராமத்திற்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்புகிறார்கள். இதற்கும் சில நாட்கள் பிடிக்கிறது. இந்தியத் தபால் 150,000 அலுவலகங்களுடன் இயங்கும் ஒரு பெரிய அமைப்பு. எந்த வங்கிக்கும் இத்தனைக் கிளைகள் இல்லை. இந்தியத் தபாலின் IPPB, மணியார்டர் விஷயத்தைத் தொழில்நுட்பம் கொண்டு தலைகீழாக மாற்றும் என்ற நம்ப வாய்ப்பிருக்கிறது. (IPPB – India Post Payments Bank). IPPB –யிடம் மற்ற வங்கிகளைப் போல ATM உண்டு, ATM card உண்டு, இவர்களிடம், வங்கி தொடர்பாளர்களும் (banking correspondents) உண்டு. வெறும் 15 நிமிடத்தில் UPI/Aadhaar செல்பேசி கொண்டு, பணம் மும்பயில் கட்டியவுடன், ஒரு சின்ன ஒடிஸா கிராமத்தில் குடும்ப உறுப்பினர் கையில் கிடைக்கும். இது இன்று சாத்தியம். இதற்கான கட்டணம், மணியார்டரை விட வெகுக் குறைவு. IPPB இன்னும் தன்னுடைய 150,000 கிளைகளிலும் எல்லா சேவைகளையும் அளிக்கத் தொடங்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் இது ஒரு பெரிய இயக்கமாக மாற வாய்ப்பிருக்கிறது
  4. BBPS (Bharat Bill Payment System)  என்ற அமைப்பைப் பற்றி முன்னமே பார்த்தோம். இதன் பயனை முழுவதும் இந்திய வியாபாரங்கள் இன்னும் பெறவில்லை. இன்றைய அதிகபட்சப் பயன், இந்த சேவையைப் பயன்படுத்திச் சில மின்சாரம், தண்ணீர், வீட்டு வரி போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதோடு சரி. இன்னும் வியாபார பொருள் விவரப் பட்டியல்களை (invoices) வியாபாரிகள் அதிகம் இந்த எளிய முறையைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இந்திய அரசாங்கத்திடம் இன்னும் மக்களுக்கு தன்னுடைய வியாபார விஷயங்களை முழுவதும் பகிரும் அளவுக்கு நம்பிக்கை வளரவில்லை. ஆரம்பத்தில், UPI  கொடுக்கல்/வாங்கல் சேவைகள் மீதும் நம்பிக்கையின்மை இருந்தது உண்மை. BBPS மீது நம்பிக்கை வளரத் தொடங்கினால், இந்தியாவின் 70 மில்லியன் வியாபாரங்களில், ஒரு 25% பங்கெடுத்தாலும், உலகின் மிகப் பெரிய வியாபார கொடுக்கல்/வாங்கல் அமைப்பாக இது மாற வாய்ப்புண்டு. ஏனென்னில், 17 மில்லியன் வியாபாரங்கள் வருடம் ஒன்றைக்கு, தலா 1,000 பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பு மூலம் சரி செய்து கொண்டால், 17 பில்லியன் பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பில் காடுகளை விடுதலை செய்யும். காகிதம் தேவையிருக்காது. வியாபார வருமான வரிக்கும் இது ஒரு அருமையான வழி. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் சில சட்டங்கள், மற்றும் ஊக்கம் மூலம், இந்த மின்னணு  நெடுஞ்சாலையில் இந்திய வியாபாரங்கள் பயணிக்கும் என்று நம்பலாம். இது UPI புரட்சியை விடப் பன்மடங்கு பெரிது. இந்த நம்பிக்கைக்குக் காரணம், இந்திய வியாபாரங்கள் மிக வேகமாக மாறும் தன்மை கொண்டவை – இதில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை உடனே கண்டு கொள்வார்கள்.


 
சிறு வியாபாரங்களை இந்த முன்னேற்றம் சென்றடைய வேண்டும். இதற்கு, பல ஐடியாக்களும், சில முதல் முயற்சிகளும் ஆரம்பித்து விட்டது என்றாலும், இதில் இன்னும் சில தடைகள் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கிகள் இன்னும் இந்த இந்திய அடுக்கைப் பயன்படுத்தி சிறு வியாபாரங்களுக்குக் கடன் வழங்கத் தொடங்கவில்லை. அத்துடன், சிறு வியாபாரங்களும், ரொக்கத்திலிருந்து விடுபட்டு, மின்னணு முறைகளை முழுவதும் அரவணைக்கவில்லை. இது மிக அவசியம் உடனே நிகழ வேண்டும். நாளொன்றுக்கு, 10% முதல் 30% வட்டி கொடுத்து பல சிறு வியாபாரிகள் இந்தியா முழுவதும் அல்லாடுவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். இந்திய அடுக்கை, சிறு வியாபாரிகள் கடன் விஷயத்தில் பயன்படுத்தத் தொடங்கினால், மிகப் பெரிய சமூக மாற்றம் இந்தியாவில் உண்டாகும்.
 

 
இதுவரை நாம் பார்த்த எல்லா இந்திய அடுக்கின் அரவணைப்புகளும், தனியார், பொது வியாபாரங்கள், மற்றும், தனிநபர்களிடமிருந்து வந்தவை. இந்திய அரசாங்கம், சமூக மற்றத் திட்டங்கள் மற்றும் மானிய பட்டுவாடா விஷயத்தில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. விவசாய ஊக்கப் பணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற விஷயங்களில் இடைத் தரகர்களை விடுவிக்க அரசாங்கம் இந்த இந்திய அடுக்கை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அரசாங்க நிலச் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த இந்திய அடுக்கில் உள்ள டிஜிட்டல் பெட்டகம் மூலம் கொடுக்கல்/ வாங்கல்/ பதிவு விஷயங்களை முழுவதும் கொண்டு வந்துவிட்டால் லஞ்சம் வெகுவாக குறைந்துவிடும். அத்துடன் நகராட்சிகள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இன்னும் 5-8 வருடங்களில் இவை நடக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது.
கடைசியாக மிக முக்கியமான விஷயம், இந்தத் தொழில்நுட்பம் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு, அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயன்பாட்டாளர்களுக்கு அதிகம் பயிற்சி அளிக்கப்படவில்லை. வணிக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் பயிற்சியை துச்சமாக நினைக்கக் கூடாது. என்னதான் தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக இருந்தாலும், பயிற்சி விஷயத்தை ஒதுக்குதல் தவிர்ப்பது நல்லதல்ல
முடிவுரை
எந்த ஒரு ராட்சச ப்ராஜக்டிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். இன்று உலக வணிகத்திற்கே முக்கியமான பனாமா கால்வாயைக் கட்டுகையில் 10,000 மனிதர்கள் பணியில் இறந்தார்கள். தேடிப் பிடித்து ஆவணப் படத்தைப் பார்ப்பவர்களைத் தவிர, இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. பனாமாவை விடப் பெரிய சாதனை இந்த இந்திய அடுக்கு. முதலில் நம்ப மறுத்த மேற்குலகம், Forbes, Fortune, Harvard Business Review, Wharton Business School என்று படிப்படியாக இதை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவால் இதெல்லாம் சாத்தியமா என்று சொன்னவர்கள் இன்று அதிகம் பேசுவதில்லை. பொதுவாக, மற்ற அரசாங்கங்கள் பொறுத்திருந்து இந்திய சோதனை வெற்றி பெற்றபின் பார்க்கலாம் என்றே இயங்கி வருகிறார்கள். பொதுவெளியில் மேற்குலகால் இவ்வளவு வேகமாய் செயல்பட இயலாது. அதற்கான தொழில்நுட்ப வல்லமையும் அவர்களிடம் இருந்தும், இவ்வாறு செயல்படுத்த தூரநோக்கு அவர்களிடம் இல்லை; அத்துடன் அரசியல் தலைமையின் முழு ஒத்துழைப்பும் மேற்குலகில் இல்லை. இந்தியாவின் அதிஷ்டமான விஷயம், நம் அரசியல்வாதிகள் எத்தனை ஊழல் புரிந்தாலும், நம்முடைய இளைஞர்களின் திறமை மற்றும் மேலாண்மை மீது இவர்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டு வந்துள்ளதுதான்.
 

 
இரண்டாம் உலகப் போர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கியது என்பது சரித்திரம். ஆனால், இன்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அந்த நாடு உலக அளவில் முக்கியத்துவம் இழக்கவில்லை – ஏன்? அதன் சண்டையிடும் ராணுவம் குறைந்திருக்கலாம். அதன் உலகளாவிய கட்டுப்பாடும் குறைந்திருக்கலாம். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகின்றன. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு அருமையான சுதந்திர, முன்னோடி இந்திய முயற்சியாக மலர வேண்டும்.

மேற்கோள்கள்

பல இணையதளங்கள், பத்திரிக்கைகளில் வந்தக் கட்டுரைகள் இந்தக் கட்டுரையின் ஆராய்ச்சிக்கு உதவியது. இந்த மேற்கோள்கள் இந்த முக்கிய இந்திய முயற்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். சில சுட்டிகளுக்கு குறிப்புறையும் அளித்துள்ளேன்.

அடிப்படை விளக்கம்

  1. http://indiastack.org/ – இந்திய அடுக்கைப் பற்றிய அருமையான தளம், அருமையான கானொலிகள் உண்டு
  2. https://en.wikipedia.org/wiki/India_Stack
  3. https://www.slideshare.net/indiastack/india-stack-a-detailed-presentation
  4. http://www.livemint.com/Politics/afjuy0dHgS4beFggSTVddP/Aadhaar-20-Creating-Indias-digital-infrastructure.html
  5. https://www.linkedin.com/pulse/banking-india-stack-road-cashless-economy-prasanna-lohar/
  6. https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/20161014 1612hrs IPPB_Frequently Asked Questions 2 0.pdf – இந்திய தபால் துறையின் Payments Bank பற்றிய கேள்வி பதில்

விவரமான விளக்கங்கள்

  1. https://www.quora.com/What-is-India-Stack-How-is-it-going-to-impact-India-in-the-next-few-years
  2. http://www.cgap.org/blog/should-other-countries-build-their-own-india-stack
  3. https://medium.com/wharton-fintech/your-guide-to-upi-the-worlds-most-advanced-payments-system-b4e0b372bf0b – இந்திய சாதனையை அழகாக விளக்கும் ஒரு கட்டுரை
  4. http://www.cgap.org/photos-videos/india-stack-new-financial-inclusion-infrastructure
  5. http://www.cgap.org/blog/india-stack-major-potential-mind-risks
  6. http://mashable.com/2017/02/14/india-aadhaar-uidai-privacy-security-debate/#fyBOm47C1Oqg
  7. https://techcrunch.com/2016/06/14/indias-fintech-revolution-is-primed-to-put-banks-out-of-business/
  8. http://edugild.com/assets/img/medialogos/biometrics.pdf
  9. https://medium.com/wharton-fintech/the-bedrock-of-a-digital-india-3e96240b3718
  10. http://www.iamwire.com/2016/11/list-of-mobile-wallets-upi-payment-apps-in-india/145172
  11. https://www.youthkiawaaz.com/2016/06/nandan-nilekani-writes-about-aadhar-card/
  12. https://techcrunch.com/2013/12/06/inside-indias-aadhar-the-worlds-biggest-biometrics-database/

பின்னணி

  1. https://yourstory.com/2017/07/history-of-aadhaar/ – ஆதார் பின்னணி

செய்தித்தாள் கட்டுரைகள்

  1. http://www.thehindu.com/opinion/lead/Aadhaar-on-a-platform-of-myths/article13673159.ece
  2. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/how-india-post-payments-bank-prepares-for-a-new-life-from-money-order-to-mobile-banking/articleshow/58917285.cms

ஆதார் பாதுகாப்பு விமர்சனம்

  1. http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf

மேற்குலகக் கருத்துக்கள்

  1. https://www.forbes.com/sites/abehal/2015/11/25/mapr-and-big-data-in-the-worlds-largest-biometric-database-project/#46579dbd2035 – Forbes
  2. https://www.forbes.com/sites/johnmauldin/2017/04/09/indias-tech-revolution-has-already-left-the-west-behind-its-the-best-investment-opportunity-now/2/#5a5e629c35a8
  3. http://uk.businessinsider.com/india-might-be-first-cashless-society-2017-6 – Business Insider
  4. http://www.icommercecentral.com/open-access/payment-systems-in-india-opportunities-and-challenges.pdf
  5. https://www.huffingtonpost.com/entry/why-were-excited-about-technology-stacks-for-financial_us_58add330e4b0598627a55f72 – Huffington Post
  6. https://hbr.org/2017/11/how-india-is-moving-toward-a-digital-first-economy
  7. http://knowledge.wharton.upenn.edu/article/mapping-indias-economic-future-jobs-productivity-and-banking-reform/?utm_source=kw_newsletter&utm_medium=email&utm_campaign=2017-12-14 – Wharton Business

எதிர்காலம்

  1. https://www.examrace.com/Current-Affairs/NEWS-Nine-Pillars-of-Digital-India-Important.htm – இந்திய அரசாங்க எதிர்காலத் திட்டம்

பி.கு: இக்கட்டுரையுடன், ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் என்னுடைய விஞ்ஞான/தொழில்நுட்பக் கட்டுரைகள் 100 –ஐத் தாண்டிவிட்டது. ஊக்கமளித்த ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி. விஞ்ஞான/ தொழில்நுட்பக் கட்டுரைகளை தமிழில் எழுத, ஆரம்பத்தில் என்னை ஊக்குவித்த திரு. சேதுபதி அருணாசலத்திற்கு தனிப்பட்ட நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.