டைட்டானிக் – டேவிட் ஆர். ஸ்லாவிட்

யாருக்குத்தான் பிடிக்காது டைட்டானிக்?
நாளைக்கே அதே பயணத்திற்கான
பயணச்சீட்டுகள் விற்கப்பட்டால்
யார்தான் வாங்காதிருப்பார்?
மூழ்குவதற்கு…
நாம் அனைவரும் மூழ்குகிறோம்,
பெரும்பாலும் தனியாக.
ஆனால் இங்கே மக்கள் கூட்டத்துடன்,
நண்பர்களுடன், பணியாளர்களுடன்,
வயிறார உண்டு,
இசையோடும் விளக்குகளோடும்! ஆஹா!
உலகமும் அதிர்ந்து, துக்கம் அனுசரிக்கும்—
அது செய்ய வேண்டியபடியே,
ஆனால் வெகு அரிதாகச் செய்வது போல்.
புத்தகங்களும் திரைப்படங்களும் இருக்கும்—
நாம் யார், எப்படி இறந்தோம் என்பதை
நம் பேரக்குழந்தைகளுக்கு நினைவூட்டவும்,
அவர்களை மனம் நொந்து அழ வைக்கவும்.
அத்தனை மோசமில்லை,
அனைத்தையும் எண்ணிப் பார்த்தால்.
அந்தக் குளிர்ந்த நீர்
மயக்கமருந்தைப் போல்
மரத்துப்போகச் செய்து,
விரைவாக முடித்தும் விடும்.
எல்லாப் பக்கங்களிலிருந்தும்
எழும் அலறல்கள் கூட
ஒருவித ஆறுதலாகவே இருக்கும்.
நாம் எல்லோரும் போகப் போகிறோம்:
ஒருசிலரே, முதல் வகுப்பில்.
மூலம்: “Titanic” By David R. Slavitt
இரு பேராற்றல்களின் சங்கமம் – தாமஸ் ஹார்டி
I
கடலின் தனிமையில்
மனித அகந்தையிடமிருந்து வெகு ஆழத்தில்
அவளை உருவாக்கிய
‘வாழ்வின் பெருமிதம்’ அடங்கிப் போக,
அமைதியாகப் படுத்திருக்கிறாள் அவள்.
II
ஒருகாலத்தில் கனல் பறந்த
தீயினால் அழியாத
அவளது எஃகுக் கூடங்கள்
இன்று குளிர்ந்த நீரோட்டங்கள்
ஊடுருவிச் செல்ல
சீரான அலைகளின்
யாழாக இசைக்கின்றன.
III
செல்வந்தர்களின் முகத்தைப் பிரதிபலிக்க
உருவாக்கப்பட்ட கண்ணாடிகளின் மேல்
ஊர்ந்து செல்கிறது கடல் புழு
விகாரமாக, பிசுபிசுப்பாக, ஊமையாக
எதையும் பொருட்படுத்தாமல்.
IV
புலன்களை மயக்குவதற்காகவே
மகிழ்ச்சியுடன் வடிவமைக்கப்பட்ட
நகைகள் ஒளியிழந்து கிடக்கின்றன
மினுமினுப்பு அனைத்தும்
மங்கிக் கறுத்துக் குருடாக
V
மங்கிய நிலவைப் போன்ற
கண்களைக் கொண்ட மீன்கள் அருகே வந்து
தங்கமயமான அந்தப் பாகங்களைக் கண்டு
வியந்து வினவுகின்றன: “இந்த வீண் பெருமைக்கு
கடலுக்கடியில் என்ன வேலை?”…
VI
சரிதான்: பிளந்து செல்லும்
இறக்கைகளைக் கொண்ட உயிரினமாக
இந்தக் கப்பல் உருவாகிக் கொண்டிருந்த
அதே வேளையில்தான்
எல்லாவற்றையும் இயக்கி உந்துகின்ற
அந்த உள்ளுறைந்த பேராற்றல்…
VII
மகிழ்ச்சியுடனும் மாண்புடனும்
விளங்கிய அவளுக்கென்று
ஒரு பயங்கரத் துணையைத்
தயார் செய்து கொண்டிருந்தது —
வெகுதொலைவில் தனித்திருந்த
பனியால் ஆன ஒரு வடிவத்தை.
VIII
அந்த மிடுக்கான கப்பல்
தன் உயரத்தில் அழகில் வண்ணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த
அதே வேளையில்
நிழல் சூழ்ந்த அமைதியான தொலைவில்
அந்தப் பனிப்பாறையும்
வளர்ந்து கொண்டிருந்தது.
IX
அவை ஒன்றுக்கொன்று
முற்றிலும் அந்நியமாகவே தோன்றின;
அவற்றுக்கிடையே பின்னப்பட்டிருந்த
நெருக்கமான பிற்கால வரலாற்றை
எந்த மனிதக் கண்ணாலும்
காண முடியவில்லை,
X
அல்லது விரைவில் நிகழப்போகும்
ஒரு மாபெரும் நிகழ்வின்
இரு கம்பீரமான பாதிகளாக மாறுவதற்காக
ஒரே பாதையில் ஒன்றை நோக்கி ஒன்று
பயணித்துக் கொண்டிருந்ததற்கான
எந்த அறிகுறியும் இல்லை,
XI
ஆண்டுகளின் நூலைச் சுழற்றுபவன்
“இப்போது!” என்று சொல்லும் வரை.
இரண்டும் அதைக் கேட்ட அக்கணத்தில்
நிறைவேறியது இரு அரைக்கோளங்களின் சங்கமம்
ஒன்றோடொன்று மோதி அதிர்ந்து.
*
மூலம்: “The Convergence of the Twain” By Thomas Hardy
(Lines on the loss of the “Titanic”)
*
டேவிட் ஆர். சிலாவிட் (1935–2025):
டேவிட் ஆர். சிலாவிட், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும், கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். நியூயார்க் மாநிலத்தின் ஒயிட் பிளெயின்ஸில் பிறந்த ஸ்லாவிட், யேல் பல்கலைக்கழகத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். 1958_ல் ‘நியூஸ்வீக்’ (Newsweek) இதழில் புத்தக மற்றும் திரைப்பட விமர்சகராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், 1965_ல் முழுநேர எழுத்தாளராக மாறி நூற்றுக்கும் மேலானப் புத்தகங்களை எழுதி இலக்கிய உலகில் தடம் பதித்தார். இவர் தனது சொந்தப் பெயரில் தீவிர இலக்கியப் படைப்புகளையும் கவிதைகளையும் எழுதியதோடு மட்டுமின்றி ஹென்றி சட்டன், டேவிட் பெஞ்சமின், லின் மேயர், ஹென்றி லாசரஸ் போன்ற பல புனைப்பெயர்களிலும் வணிகரீதியான நாவல்கள் பலவற்றை எழுதி மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
அதுமட்டுமின்றி கிரேக்கம், லத்தீன், எபிரேயம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலிருந்து பல பாரம்பரியப் செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காகவும் இவர் போற்றப்படுகிறார். வெர்ஜில், ஓவிட், செனெகா மற்றும் ஈஸ்கிலஸ் போன்ற பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை நவீன வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் நவீன உரையாடல் தொனியில் மொழிபெயர்த்தார். இவை வெறும் மொழிபெயர்ப்புகள் மட்டுமல்லாமல், மூல நூல்களுடன் ஆழமான உரையாடலாகவும் அமைந்திருந்தன.
கவிதை மற்றும் உரைநடை இரண்டிலும் சிறந்து விளங்கிய இவரது பங்களிப்புகள் அமெரிக்க இலக்கியத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக இவரது கவிதைகள் வடிவ நுட்பம், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த புலமை கொண்டவை என விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளன.
*
தாமஸ் ஹார்டி (1840–1928):
தாமஸ் ஹார்டி விக்டோரிய காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரும் கவிஞரும் ஆவார். இங்கிலாந்தின் டோர்செட் பகுதியில் பிறந்த இவர் கட்டிடக்கலை பயின்று சிறிது காலம் அப்பணியில் ஈடுபட்ட பின், எழுத்துலகில் முழுமையாக ஈடுபட்டார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை, சமூக கட்டுப்பாடுகள், திருமணம், மதம் தொடர்பான மரபுகளை யதார்த்தவாத பாணியில் விமர்சனக் கண்ணோட்டத்துடன் சித்தரித்தார். Far from the Madding Crowd, The Return of the Native, The Mayor of Casterbridge, Tess of the d’Urbervilles, Jude the Obscure போன்றவை இவரது புகழ் பெற்ற நாவல்களாகும். இவற்றில் பலவும் ‘வெசெக்ஸ்’ (Wessex) என்ற கற்பனையான தென்மேற்கு ஆங்கிலப் பின்னணியில் அமைந்தவை. இவற்றில் சில கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் எதிர்கொண்டன. அதனால் பாதிக்கப்பட்ட ஹார்டி, நாவல் எழுதுவதையே கைவிட்டு முழுமையாகக் கவிதைகளில் கவனம் செலுத்தினார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1898_ல் வெளிவந்தது. ஆயினும் வாழ்நாள் முழுவதும் முதன்மையாகத் தன்னை ஒரு கவிஞராகவே கருதினார். மனைவி எம்மா கிஃபோர்டின் மரணத்திற்குப் பின் எழுதிய “Poems 1912–13” தொகுப்பு இவரது சிறந்த கவிதைப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விதி, துயரம், காதலில் ஏமாற்றம் போன்ற கருப்பொருள்களை ஆழமாக வெளிப்படுத்திய இவரது கவிதைகள் பிற்காலக் கவிஞர்களான எஸ்ரா பவுண்ட், டபிள்யூ.எச். ஆடன், பிலிப் லார்கின் போன்றவர்களைப் பெரிதும் பாதித்தன. 1928-இல் இவர் மறைந்தபோது, இங்கிலாந்தின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள ‘கவிஞர்கள் மூலையில்’ (Poets’ Corner) இவரது சாம்பல் அடக்கம் செய்யப்பட்டது.
*
Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
