புத்தனின் கருப்புப் பௌர்ணமி (குறுங்காவியம்) 

1.நிலவொளிதின்னி

திறந்த ஜன்னல் வழியே அடிக்கடி ஒலிக்கிறது
புராணங்களிலிருந்து நடப்பியலுக்குப் புலம்பெயர்ந்து வந்த
நிலவின் ஒளிக் கிரணங்களை மட்டுமே தின்று வாழும்
சகோரிப் பறவையின் மெல்லினிமைப் பாடல்
நானும் நிலவுக் காதலன் என்பதறிந்தே
என் இரவுகளைத் தன் மலர் மணத்தால் மயக்கும்
வாடகை வீட்டுத் தோட்டத்துப் பாரிஜாத மரத்தில்
கூடு கட்டியிருக்கிறது அது

சொந்தம் என எனக்கு மிஞ்சியிருப்பது
நிலாவும் துயர நினைவுகளும் மட்டுமே
நிலா – தூரத்து சொந்தம்
துயரம் – உடன் பிறந்த சொந்தம்

இலங்கைத் தமிழர் என்றாலே
எங்கள் கண்களில் எரியும் வரலாறு
உங்கள் கண்களிலும் நிழலாடும்

அப்பா ஷெல் அடிபட்டு சதைத் துண்டுகளானார்
அம்மாவை சிங்கள ராணுவ மிருகங்கள்
எங்கள் வீட்டில், எங்கள் கண் முன்பே, கூட்ட வேட்டையாடின
ரத்தக் களறிகளோடே அவள் தூக்கில் தொங்கினாள்
சொந்த நாட்டில் அகதிகளாக
அனாதைகளாக வளர்ந்தோம்
அண்ணனை இயக்கப் பொடியன் என்று சந்தேகித்து
இழுத்துச் சென்ற ராணுவம்
பிணமாக்கிய பின்னும் சித்ரவதைகள் தொடர்ந்தது
பள்ளித் தங்கை ராணுவ சோதனைச் சாவடியில் குதறப்பட்டாள்
பெரிய தங்கை போர்க்களத்தில் சயனைட் குப்பி கடித்தாள்
நான் நள்ளிரவில் கள்ளத்தோணியேறினேன்

நூற்றுவ சகோதரர்கள், ஆயிரம் சகோதரிகள்,
லட்சம் தாய் தந்தையர்
கதை இதுதான்

ஆயினும் அந்த மெய்யியல் பறவை
எனது உடைந்த இதயத்தை மென்மையாக வருடி
ஆறுதல் அளித்து
வரலாற்றுக் காயங்களுக்கு மருந்திடுகிறது

கூர்ணிக் கியூ கூர்ணிக் கியூ – ச்சா ச்சா டிர்ர்ர்ச் ட்வீச் ட்வீச்
மொழி புரியாதென்பதால்
உணர்வால் தொடர்புகொள்ள விரும்பும்
மனிதரல்லாத அண்டை வீட்டாரின் பாடல்
என்றோ இழந்த புன்னகையை மீட்கிறது

நிலாப் பறவையின் காந்தக் குரலும் மெல்லிசையும்
இனிய சோகத்தில் ஆழ்த்தி
இரவுகளைத் தாலாட்டுகின்றன

சோகத்தையும் சுகமாக்கித் தரும் திறன் கொண்டவை
இசையும், காதலும், ஊர் ஏக்கங்களும்தான்

2.அகதிகளின் இரவு

ஈழ அகதிகளின் இரவுகள்
உறக்கங்களை வேட்டையாடுகின்றன

இன்னமும் அணையவில்லை
யாழ் நூலகம் எரிந்த பெருநெருப்பு
இன்னமும் கருகிக்கொண்டிருக்கிறது
அறிவின் வேர்களைப் பொசுக்கிய வாடை
பசிபிக் பெருங்கடலிலும் கேட்கிறது
குமுதினிப் படகில் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களின்
குடல் சரிந்த மரண ஓலம்

நினைவுகளில் நஞ்சாகப் பரவுகிறது
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை வயல்வெளிகளில்
நெற்கதிர்களுக்குப் பதில் பிணங்கள் விளைந்த கோரம்
நாவற்குழி முதல் செம்மணி வரை
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனித எலும்புகள்
நள்ளிரவில் எழுந்து நீதி கேட்டு அலைகின்றன

மயிலந்தனை முதல் புதுக்குடியிருப்பு வரை
சிங்கள ராணுவத்தின் பூட்ஸ் கால்கள்
நசுக்கிச் சிதைத்த மழலைகளின் பொம்மைகள்
கனவுகளுக்குள் ஊடுருவி அலைந்து திரிகின்றன
குருதி படிந்த சித்திரங்களாக

வடமராட்சிக் கடற்கரையோர நாகர்கோவில் மண்ணில்
சிங்கள ஷெல்லடி வெறியாட்டத்தில்
பள்ளி மைதானமெங்கும் உடல் சிதறிப் பலியான
விளையாட்டுச் பிஞ்சுகள் இருபத்தைவரின் உயிரோலம்
துளைக்கிறது செவிப்பறைகளை
செஞ்சோலைச் சிறுமியரின் சிதறிய சீருடைகள்
காற்றின் திசையெங்கும் அலைந்து திரிகின்றன

தமிழனின் ரத்தம் குடித்த ருசியில்
சப்புக்கொட்டிக்கொண்டிருக்கிறது இலங்கைத் தீவு
தாய்மண்ணின் ஒரு துண்டு உரிமைக்காக
அடைக்கலநாட்டு வீதிகளில் அலைகின்றன அகதிக் கால்கள்

3.எல்லைகளற்ற வானமும் இரும்பு வேலிகளும்

பாரிஜாதத்தின் கிளையிலிருந்து
சாகோரிப் பறவை கேட்கிறது:
யார் நீ?
ஏன் உன் கண்களில்
இத்தனை போர்க்களங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன?

அவன் சொன்னான்:
நானோர் அகதி
என் நிலம் பறிக்கப்பட்டது
தேசம் சிதைக்கப்பட்டது
அடையாளம் ரத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டது

சிரித்தது நிலாப் பறவை
தேசம் என்றால் என்ன?
நிலத்தின் மீது நீங்கள் கிழித்துக்கொண்ட
காயக்கோடுதானே?
மதம், ஜாதி, இனம் எனும் நஞ்சை
உயிர்நீராகப் பருகும் மனிதர்களே,…
மண்பரப்பைத் துண்டு துண்டாகப் பிய்த்து
எல்லைகள் எனும் சிலுவைகளில்
ஏன் உங்களை நீங்களே அறைந்துகொள்கிறீர்கள்?

நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம் என
பூமியின் மார்பில் நீங்கள் கீறிய கோடுகள்
அதிகாரத்தின் வரைபடங்கள்தானே தவிர
இயற்கையின் விதியல்ல

எனது வானத்தில் எங்கே இருக்கிறது எல்லை?
மேகங்களுக்கு ஏது குடியுரிமை?
காற்று, எந்த நாட்டின் அனுமதி கேட்டு வீசுகிறது?
மழைக்கும் வெயிலுக்கும் பனிக்கும்
உண்டா இனம், மதம், ஜாதி?

நான் நிலவொளி தின்கிறேன்
யாரோடும் போரிடாமல்
யார் நிலத்தையும் அபகரிக்காமல்
குளிரொளியால் என் வெம்பசி ஆறுகிறது

மனிதர்கள் அதிகாரம் புசிக்கிறீர்கள்
நிலத்தின் மீதான உடைமை வெறியால்
சக மனிதர்களின் மாமிசம் தின்கிறீர்கள்
ஜாதி, மத, இன வெறிகளால்
மனிதத்தின் குருதியும் குடிக்கிறீர்கள்
பூமிப் பந்தைத் தின்று தீர்த்தாலும்
அடங்க மறுக்கும் உங்கள் ஆதிக்கப் பசி
அன்பைத் தவிர அனைத்தையும்
தனதாக்கிக்கொள்ளத் துடிக்கிறது

எல்லைகளற்ற எனக்கு
முழு வானமும் சொந்தம்
எல்லைகள் கொண்ட உங்களுக்கோ
எல்லைக் கோடுகள் மட்டுமே உலகம்

4.குருதி தோய்ந்த பூமி

இளைஞன் சொல்கிறான்:
சாகோரியே,… உன் உலகம் ஒளி நிறைந்தது
மனித உலகம் இருளால் ஆனது
அதிகார வேட்டைக்காக நாங்கள்
ஆயுதங்களைக் கடவுள்களாக்கித் தொழுகிறோம்

மதங்கள் போர்க்கருவிகளாக மாறின
ஜாதியெனும் நஞ்சு
நிலத்தின் நரம்புகளெங்கும் ஊடுருவி
மனிதத்தைச் சவக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கிறது

மனிதர்கள் ஏன்
தன்னினஉண்ணிகளாக இருக்கின்றனர்?
உலகம் ஏன் ஆதிக்க வெறியர்களால் நிரம்பியுள்ளது?

பயங்கரவாத, தீவிரவாத, அடிப்படைவாத, ஆதிக்கவாதக்
கூட்டப் பலிகளால்
சிவப்பாகிறது நீலப் பெருங்கோளம்
கலவரங்களின் கனலில் வெந்து சாகின்றன
நெறிகளும் நீதிகளும்
பிணங்களின் குவியல்கள் மேல் அமர்ந்திருக்கின்றன
ஆதிக்கத்தின் சிம்மாசனங்கள்

அன்பின் துளி நீர்த்திவலையேனும் இல்லாத இதயங்கள்
வெறுப்பின் நஞ்சால் நிரம்பி வழிகின்றன
இயற்கை தந்த சொர்க்கபூமியை
நாங்கள் நரகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

உனக்கு இரையாக
புழு பூச்சிகளோ, பழங்களோ, தானியங்களோகூட வேண்டாம்
உறுத்தலற்ற நிலவின் கதிர்கள் போதும்
இனிமையான கீதங்களால் காற்றையும் சிலிர்க்க வைத்து
இரவையும் நட்சத்ரங்களையும் தாலாட்டி உறங்க வைக்கிறாய்

மனிதர்களுக்கு உணவும் இருப்பிடமும் போதுமானதாக இல்லை
நிலத்தை எல்லைகளாலும்
மனிதர்களை இனம், மதம், ஜாதிகளாலும் பிரித்து
ஆளும் அதிகாரம் சிலருக்குத் தேவை
ஆளப்படுகிறவர்களுக்கோ
அதன் அடிமைத்தனம் தேவை

பகிர்தல் அறியாப் பெருவெளியில்
அறம் என்பது வழிதவறிய சொல்
மானுடம் என்பது புகலிடமற்ற அகதி

5.வைசாக அமாவாசை

என் பக்கத்து வீட்டுப் பறவை பாடுவதை நிறுத்தும்போது
நான் ஜன்னலில் சாய்ந்துகொள்வேன்
மரங்களின் மெல்லிசையைக் கேட்க
வெளியே நிலவு lunar blue-வில் புலம்பும்
நான் கற்கவியலாத மற்றொரு மொழி

புரியாத விஷயங்களின் நீள்பட்டியல்
என்னிடம் உள்ளது
குறும்பட்டியலை மட்டும் உங்களிடம் பகிர்கிறேன்
அல்ஜீப்ரா, அமைப்பியல்வாதம், அல்கோரிதம், மனித நேயம்
கடவுளின் அர்த்தம், வாழ்வின் அனர்த்தம்

என் விதியை நான் புரிந்து கொள்ளவில்லை.
ஆனாலும் ஊழின் அபஸ்வரங்களுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறேன்

நிலாப் பறவையின் கீச்சுக் குரல் ராகங்கள்
எனது துருப் பிடித்த இதயத்திலிருந்து துக்கத்தை உறிஞ்சி
வாழ்தலில் பிடிப்பை உண்டாக்குகிறது
என் புரிதலின் அளவைவிட உயர்ந்த ஒன்றை
தொடர்புபடுத்த வைக்கிறது
அபாயங்கள் இருக்கக் கூடும் என சந்தேகிக்கத் தக்க
அறியப்படாதவற்றின் கைகளில்
என்னை ஒப்படைக்கவும் துணிச்சல் கொள்கிறேன்

அமாவாசை நாளில் பட்டினி தாளாத சாகோரி
தன் பயணம் முடிந்து
திரும்பிச் செல்கிறது அதன் புராணப் புனைவுக்கு
நானோ கனவுகளாலும் கைவிடப்பட்டவனாக
மீள்கிறேன் கருணைற்ற நிஜங்களுக்கு
சிதைக்கப்பட்ட நிலத்தின் சாட்சியாக

பேரருளும் பேரழகும் பொலிந்த புத்தனின் புன்னகை
சிலைகளில் உறைந்திருக்க
அவற்றின் கண்கள் இறுக மூடிக்கொள்கின்றன


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.