தெலுங்கு மூலம் : ஸ்ரீவல்லி ராதிகா
ஆங்கிலம் : சாரதா
தமிழாக்கம் : மஞ்சுளா சுவாமிநாதன்
“இதற்கு என்ன தலைப்பு வைப்போம்… ‘கிருஷ்ணனும் அர்ஜுனனும்’ நல்லா இருக்கா?” என்று கேட்டான் அர்ஜுன்.
நான் தலையசைத்து மறுத்தேன். அவன் இன்னும் சில விநாடிகள் யோசித்து, ஒரு புதிய தலைப்பை சொன்னான் — “நரனா? நாராயணனா?”
நான் ஆச்சரியமாக அவனைப் பார்த்து, “எப்படி திடீர்னு உனக்கு இந்த தலைப்பு தோணிச்சு?” என்று கேட்டேன்.
“நாம நாலு நாளுக்கு முன்னாடி பேசினதை நினைச்சேன், உடனே இந்த தலைப்பு தோணிச்சு” என்றான்.
என் மனம் நான்கு நாட்களுக்கு முன் நடந்த உரையாடலுக்கு சென்றது. அன்று, கல்லூரியில் நடக்கவிருக்கும் கலை விழாவைப் பற்றி எங்கள் நண்பர்கள் குழுவில் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் அனைவருமே உற்சாகமான மாணவர்கள். எங்களுக்கு விழாவில் பங்கேற்க மிகுந்த விருப்பம். எங்கள் குழுவில் பாடுபவர்கள், ஆடுபவர்கள், அழகான போஸ்டர்கள் வரையக்கூடியவர்கள் என்று நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனால், நன்றாக எழுதக் கூடியவர்கள் என்று யாரும் இல்லை. அர்ஜுனும் நானும் மட்டும் எழுத முயற்சி செய்யக்கூடியவர்கள். அதனால் மற்றவர்கள் எங்களை ஒரு சிறிய நாடகத்திற்கு எழுதி நடிக்க சொன்னார்கள். அப்படி தொடங்கியது தான் இந்த உரையாடல்.
“எனக்கு தெலுங்குல பிழையில்லாம எழுத கான்ஃபிடென்ஸ் இல்ல,” என்று அர்ஜுன் சிறிது தயக்கத்துடன் கூறினான்.
“அது பிரச்சனை இல்ல. நீ ஐடியாஸ் குடு, சுபா எழுதிடுவா,” என்று எல்லாரும் அவனை கட்டாயப்படுத்தினார்கள். அர்ஜுன் சம்மதித்ததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் சம்மதித்ததற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே எனக்கு அர்ஜுன் மீது ஈர்ப்பு இருந்தது. அதில் எதுவும் ஆச்சரியமில்லை. அவன் அழகானவன். புத்திசாலியும் கூட… மூன்று வருடங்களாக அவனை கவனித்து வருகிறேன், அவன் மீது உள்ள ஈர்ப்பு அதிகமானதே தவிர, குறையவில்லை. அவனுக்கும் என் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று எனக்கு தெரியும், எந்த அளவிற்கு என்று தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அது என்னவோ இருக்கட்டும்… ஆனால், இப்போது அர்ஜுன் சொன்னது, “அன்னிக்கு நீ சொன்னதை நினைச்சேன்,” என்று. நான் அன்று என்ன சொன்னேன்? அந்த முழு உரையாடலையும் நினைவு கூர்ந்தேன். நாங்கள் நாடகம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், எங்கள் நண்பன் நிபுண் கூறினான், “நமக்கு ரொம்ப நேரம் இல்ல, இன்று வியாழன், நிகழ்ச்சி அடுத்த செவ்வாய்க்கிழமை, ஒரு சிம்பிள் டாப்பிக் எடுத்துக்கோங்க,” என்று.
“நட்பு பத்தி போடலாமா? அது சிம்பிள்தானே,” என்று ரியா கேட்டாள்.
“ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் இந்திய இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் சம்பந்தமாக நிகழ்ச்சி இருக்கணும்னு சொன்னாங்களே!” என்று நான் சொன்னேன்.
“இந்திய இதிகாசத்தில் இருந்து நட்பை பறைசாற்றும் விதமாக ஏதாவது நாடகம் எழுதுங்க,” என்று கவுதம் சொன்னான்.
அதன் பிறகு இந்திய இதிகாசத்தில் இருந்து நண்பர்களின் பெயர்களை அனைவரும் சொல்ல ஆரம்பித்தோம், ராமன் – சுக்ரீவனன், துரியோதனன் – கர்ணன், கிருஷ்ணன் – அர்ஜுனன்… என்று பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.
“அப்படின்னா, இந்த கதாபாத்திரங்களுக்குள் ஒரு விவாதமாக எழுதலாமா? ஒருவேளை, யார் நல்ல நண்பன் என்று அவர்கள் தங்களுக்குள்ளே வாதாடுவது போல?” என்று நான் சொல்லி, நண்பர்களின் கருத்துகளை வரவேற்றேன்.
“அவர்களே ஒருவரை ஒருவர் நல்ல நண்பன் என்று புகழ்கிறார்களா?” என்று யாரோ ஒருவர் கேட்டார்.
“இல்ல, அது சரியா வராது…”
“அப்படின்னா கதையின் ஓட்டம் எப்படி இருக்கணும்?”
“ஒருவேளை, வேறு யாரோ அவர்களது நட்பை பற்றி பேசுவது போல…” “ஆனால் யார்?” என்று அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டபோது, என் மனதில் ஒரு உத்தி உருவானது.

“அர்ஜுனனும், அவன் மனைவி சுபத்ராவும்” என்றேன் நான். எல்லோரும் ஆர்வத்தோடு என்னை நோக்கி திரும்பினார்கள். நான் மேலும் விளக்கினேன். “அர்ஜுனனும் சுபத்ராவும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன், இவர்களில் யார் நல்ல நண்பன் என்று வாதாடறாங்க; சுபத்ரா, அர்ஜுனன்தான் நல்ல நண்பன் என்று வாதாடறா; அர்ஜுனன், கிருஷ்ணன்தான் நல்ல நண்பன் என்று சொல்றான்.” மற்ற அனைவருக்கும் எனது யோசனை பிடித்திருந்ததால், என் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார்கள்.
அர்ஜுனும் நானும் விவாதிக்க அமர்ந்தபோது, நான் மேலும் எனக்கு தோன்றியவற்றை கூறினேன். அர்ஜுனனும் சுபத்ராவும் காலார நடந்தபடி ஒரு உரையாடலில் ஈடுபடுகிறார்கள், என்று காட்சியை நான் அமைத்தேன். அந்த உரையாடல் நடக்கும் நேரத்தையும் நான் தீர்மானித்தேன் — குருக்ஷேத்ரப் போருக்குப் பிறகு என்று கூறினேன். அர்ஜுனும் அதை ஏற்றுக்கொண்டான்.
“வாரயிறுதியில் நாம இரண்டு பேரும் என்ன வாதங்களை முன் வைக்க போறோம்னு யோசிச்சு, திங்கட்கிழமை வசனம் எழுதலாம், நீ கிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசு,” என்று வெள்ளிக்கிழமை மதியம் வீட்டிற்கு கிளம்பும்போது நான் சொன்னேன். அர்ஜுன் சம்மதித்தான். என்னுடைய அணைத்து பரிந்துரைகளுக்கும் அவன் சம்மதிப்பது என்னை மிகவும் கவர்ந்தது. அவன் தெலுங்கு என் அளவிற்கு செம்மையாக இருக்காது, அது எங்கள் இருவருக்குமே தெரியும், இருந்தும், நான் நல்ல தெலுங்கில் பேசும்போது அவன் கண்களில் தெரியும் பாராட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.
“அர்ஜுன், நாம வசனங்களையும் வீக்கெண்ட்லேயே எழுதிடலாம். அப்படி செஞ்சா திங்கட்கிழமை முழு நாடகத்தையும் ஒரே தடவையில் சரி பார்த்துடலாம்,” என்று மனதை மாற்றியவளாக நான் சொன்னேன்.
அதற்கும் சம்மதித்து “நன்றி,” என்றான். நான் அவனை சந்தேகத்தோடு பார்த்தேன்.
“அட, எனக்கு சுலபமான வேலை கொடுத்ததுக்கு நன்றி.”
“சுலபமான வேலையா?”
“பின்ன, நீ சொன்ன நான் கிருஷ்ணனுக்கு ஆதரவா வசனம் எழுத்தணும்னு. கிருஷ்ணன் நல்ல நண்பன்னு வாதாடுவது சுலபம் தானே?”
“அப்படியா? நான் அர்ஜுனன்தான் நல்ல நண்பன்னு நிரூபிச்சுட்டேன்னா?” என்று நான் சவால் விட்டேன்.
“அது சாத்தியம்னு நீ நினைக்கிறியா? கிருஷ்ணன் ஒரு கடவுள்! அவரைவிட யாரும் நல்லவரா இருக்க முடியாது!” என்று அவன் உறுதியா சொல்ல முயன்றாலும், அவன் குரலில் நிச்சயமின்மை தெரிந்தது. அவன் அப்படி குழப்பமா இருக்கும் போது, என் மனசு சிறகடித்து பறக்க ஆரம்பிச்சிடும். இந்த முறை நான் என் சந்தோஷத்தை மறைக்கவே முயற்சிக்கல.
“கிருஷ்ணன் கடவுள் என்றால் என்ன? எனக்கு எப்போதும் விருப்பம் அர்ஜுனன் என்கிற நரன்தான். கிருஷ்ணன் என்கிற அந்த நாராயண ஸ்வரூபன் இல்ல,” என்றேன். அன்னிக்கு நான் சொன்னது அதுதான். எங்களுடைய முழு உரையாடலையும் நினைவுகூர்ந்தபோது, எனக்குள்ள ஆர்வம் ஏற்பட்டது. அவன் எங்க உரையாடலை உண்மையிலேயே அவ்வளவு தூரம் யோசிச்சானா? நான் சொல்ல முயன்றதை அவன் புரிஞ்சுகிட்டானா? என்று அவனை ஊடுருவிப் பார்த்தேன். அவன் கண்கள் வழக்கம்போல சிரித்துக்கொண்டிருந்தன, அவன் என்ன நினைக்கிறான், என்ன உணர்கிறான் என்று என்னால் கணிக்க முடியவில்லை. நான் விரைவாக என் எண்ணங்களிலிருந்து மீண்டேன்.
“ ‘நரனா? நாராயணனா?’ என்ற தலைப்பு வைப்போம், அது சரியா இருக்கு,” என்று சொல்லி அன்றைய உரையாடலைத் தொடர்ந்தேன்.
“வாதம் ஆரம்பிக்கும் முன்னால் ஒரு சில விஷயங்களை நாம் கடைபிடிப்போம். கிருஷ்ணன் நல்ல நண்பன் என்று நிரூபிக்க, அவன் தெய்வீக சக்திகள் கொண்டு நிகழ்த்திய அற்புதங்களை நீ முன் வைக்கக் கூடாது. அவர்கள் இருவரையும் சக நண்பர்களாக பாவிச்சே நம்ம வாதம் செய்யணும். ஒத்துக்கிறியா?” என்றேன்.
அர்ஜுன் தன்னம்பிக்கையோடு என் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். வீக்கெண்ட் முழுவதும் இதற்காகவே அவன் தயார் செய்தது போல மகாபாரதத்திலிருந்து அற்புதமான வாதங்களை கிருஷ்ணன் சார்பாக அவன் முன்வைத்தான்.
துரதிர்ஷ்டவசமாக, எனக்கு அவன் அளவிற்கு தயார் செய்ய முடியவில்லை. சனி, ஞாயிறு வீட்டில் பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது.
அப்பா, அவருக்கும் அவர் தம்பிக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கலங்கியிருந்தார். தாத்தாவுக்கு இரண்டு மகன்கள் — அப்பா, சித்தப்பா. இருவரும் குணத்திலும், வாழ்க்கையை அணுகும் விதத்திலும், முற்றிலும் மாறுபட்டவர்கள்.
சித்தப்பாவிற்கு பேராசை அதிகம்; எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாத மனோபாவம் கொண்டவர் அவர். அப்பா, அதற்கு நேர்மாறாக, நிறைவாக வாழ்பவர்; வாழ்க்கையைப் பற்றியோ, சொத்துகளையோ பற்றியோ ஒருபோதும் குறை சொல்லாதவர். தாத்தா உயிரோடிருந்தபோது அவருடைய அலுவல்கள் அனைத்தையும் அப்பாதான் செய்தார்; ஆனால், பலன்களை சித்தப்பா அனுபவித்தார். கடந்த வருடம் தாத்தா காலமானார். இப்போது, சித்தப்பா அவரது முழு பூர்வீகச் சொத்தையும் கைப்பற்ற முயற்சிக்கிறார்.
அப்பா தன் தம்பியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர விரும்பவில்லை. அதேசமயம், அமைதியாகவும் இருக்க விரும்பவில்லை. அப்பாவின் மனம் புண்பட்டிருந்தது. அவரை வருத்தியது பண இழப்பு அல்ல, அவர் சொந்த தம்பியுடனேயே சண்டையிட வேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டதே என்று.
“நாம மற்ற அண்ணன்–தம்பிகள் மாதிரி சண்டை போட வேண்டாம்! நீ சொல்றது போலவே நான் செய்யறேன்,” என்று பாகப்பிரிவினையின் போது அவர் சொன்னது எனக்கு மகாபாரதத்தில் யுதிஷ்டிரரை நினைவூட்டியது.
சித்தப்பாவோ, அவர் அண்ணனின் உயர்ந்த எண்ணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். சொத்துப் பிரிப்பில், பழமொழியில் வருவது போல அப்பாவுக்கு மாட்டின் முன்பகுதியும், அவருக்கு வளமையான மாட்டின் பின் பகுதியும் கிடைத்தது.
அப்பா, நம்பிக்கையின் அடிப்படையில் சில காகிதங்களிலும் கையெழுத்து போட்டிருந்தார். அவை “நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்ஸ்”; தாத்தாவுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க சித்தப்பாவிற்கு அனுமதி அளிக்கும் ஆவணங்கள். சித்தப்பா, அந்த பணத்தை வசூலித்து, இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பார் என்று அப்பா நினைத்திருந்தார்.
சித்தப்பா, எல்லா பணமும் கைக்கு வந்ததும், பணிவான தம்பி போல நடிப்பதை நிறுத்தி, ஒரு சில்லறை சண்டையைப் பிடித்து, அப்பாவுடன் பேச மறுத்தார். தொலைபேசியில் அழைத்தாலும் எடுக்க மறுத்தார், இதைப் பற்றிய எந்த பேச்சுவார்த்தையையும் ஏற்க மறுத்தார். அதற்கும் மேலாக, உறவினர்களை சந்தித்து, அப்பாவைப் பற்றிய பொய்யான கதைகளை பரப்ப ஆரம்பித்தார்.
அப்பாவுக்கு தம்பியைப் பற்றி தெரிந்திருந்தாலும், இப்படி தடாலடியாக அவர் ஏமாற்றியது அதிர்ச்சியாக இருந்தது. அவரது உறவினர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்காதது அவரை மேலும் வருத்தியது. அப்பாவின் குணத்தையும், சித்தப்பாவின் ஏமாற்று வேலையை அறிந்திருந்தும், ஒருவர் கூட சித்தப்பாவை கண்டிக்கவோ, சமரசம் செய்யவோ முன்வரவில்லை.
என்னுடைய வாரயிறுதி முழுவதும் இந்த சூழ்நிலையில் முடங்கிப்போனடாது. எனக்கு வேறு எதற்கும் நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் மகாபாரதத்தின் நுணுக்கங்களில் எனக்கு ஓரளவு பிடிப்பு இருந்த காரணத்தினால் நான் தளரவில்லை. நான் ஆங்கில மீடியம் பள்ளிகளில் படித்தாலும், இந்திய புராணக் கதைகளை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்பா நினைத்தார். இராமாயணம், மகாபாரதம், மகாபாகவதம் பற்றிய விவாதங்கள் எங்கள் வீட்டில் வழக்கமானவை. படிக்கும் பழக்கத்தையும் அப்பாதான் எனக்கு உருவாக்கினார். மகாபாரதத்தில் அப்பாவுக்கு யுதிஷ்டிரர் பிடிக்கும்; எனக்கு பிடித்தவர் அர்ஜுனன். மகாபாரத கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட தெலுங்கு படங்கள் அந்த காவியத்திற்கான என் ஆர்வத்தை எப்போதும் துடிப்புடன் வைத்திருந்தன.
மாவீரன் அர்ஜுனன், தனது ரதத்தில், கவசம் அணிந்து கம்பீரமாக நிற்கும் காட்சியை நினைத்தாலே எனக்கு பரவசம் ஏற்படும். அந்த தைரியத்தில், கிருஷ்ணன் நல்ல நண்பன் என்று அர்ஜுன் முன்வைத்த எல்லா வாதங்களையும் நான் வெற்றிகரமாக எதிர்த்தேன். ஒரு நிமிடம் நான் வென்றுவிட்டேன் என்று கூட நினைத்தேன்; அர்ஜுனன்தான் சிறந்த நண்பன் என்று அவனை நம்ப வைத்துவிட்டேன் என்றும் கூட தோன்றியது. அப்போது, அர்ஜூன் முக்கிய வாதம் ஒன்றை முன்வைத்தான்.
“சுபத்ரா, என்னிடம் தனக்கு மிகவும் பொக்கிஷமான ஒன்றை கிருஷ்ணன் கொடுத்தான்” என்று ஒரு வினாடி நிறுத்தி, “அவனது தங்கையான உன்னை கொடுத்தான், இது போதாதா கிருஷ்ணன்தான் நண்பர்களில் சிறந்தவன் என்று சொல்வதற்கு?” என்று அர்ஜுனானாகவே அவன் மாறி என்னிடம் சொன்னான்.
அவன் சொன்ன விஷயம், அதைச் சொன்ன விதம், அதுவும் என் கண்களை நேராகப் பார்த்தபடி அவன் சொன்னது, எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. என் இதயம் துடிப்பதைக் கூட ஒரு நொடி மறந்திருந்தது. வெட்கத்தால் என் முகம் சிவந்ததை மறைப்பதற்காகத் தலைகுனிந்தேன். இதை அவனே எழுதினானா, இல்லையென்றால் யாராவது உதவினார்களா என்று யோசித்தேன்.
ஒரு நிமிடம் கழித்து, நான் சுபத்ராவாக என் வாதத்தை முன்வைத்து பதிலளித்தேன். “அர்ஜுனா! என்னைப் பற்றி இவ்வளவு உயர்வாக நினைப்பது உன்னுடைய மகத்துவம். ஆனால், என்னை பொறுத்த வரை, அது நட்பை விட சுயநலம் என்றே கூறுவேன். கிருஷ்ணன், தனது சகோதரி சுபத்ரா, மிகச் சிறந்த வீரனான அர்ஜுனனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் அவர் நம்மை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, நமக்கு திருமணம் செய்து வைத்தார். அவர் மட்டுமல்ல, முழு யாதவக் குலமுமே அதையேதான் நினைக்கிறது.”
அர்ஜுனிடம் இதற்கு எந்த பதிலும் இருக்கவில்லை. அவன் அமைதியாக இருந்தான். அப்போது நான் என் துருப்புச் சீட்டை வெளியிட்டேன்.
“உண்மையில், மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு எதிராகப் போராடிய பல போர்வீரர்களுக்கும், அவர்களுடன் நேரடி பகை இல்லை. அவர்களின் பகை கிருஷ்ணனுடன்தான். கிருஷ்ணனை பழி வாங்குவதற்காகத்தான் அவர்கள் பாண்டவர்களுக்கு எதிராகப் போரில் சேர்ந்தார்கள். அந்த வகையில், கிருஷ்ணன் நண்பனாக இருப்பதாலேயே பாண்டவர்களுக்கும் அர்ஜுனனுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டது. கிருஷ்ணன் இல்லையென்றால், அவர்களுக்கு இத்தனை எதிரிகள் இருந்திருக்கவே மாட்டார்கள்!” என்றேன்.
நான் அவன் என்ன சொல்வதாக இருந்தாலும் அதனை மறுதலிக்கத் தயாராக இருந்தேன், ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அர்ஜுனன் – கிருஷ்ணன் நட்பைப் பற்றிய முழு விவாதமும் பத்து நிமிடங்களில் முடிந்தது. அன்று கிளம்புவதற்கு முன் நாங்கள் இன்னொரு முறை ஒத்திகை கூட செய்தோம்.
கல்லூரியிலிருந்து கிளம்பும்போது, அன்று காலை நான் கண்ட அப்பாவின் சோகமான முகம் நினைவிற்கு வந்தது. நான் எப்போதும் அப்பாவையே என் சிறந்த நண்பனாக நினைத்தேன். அவரின் வலி என்ன்னுடையதும் கூட.
அப்பாவிற்கும், சூரி தாத்தாவிற்கும் இருந்த உறவு, எனக்கும் அப்பாவிற்கும் இருந்த உறவைப் போல, இருவரும் நல்ல நண்பர்கள். சூரி தாத்தா, அப்பாவின் மாமா முறை. அப்பாவிற்கு சிறந்த வழிகாட்டியும் கூட. அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் பல மணி நேரம் நீண்டு, உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் தொட்டுப் போகும்.
எங்கள் உறவினர்கள் பெரும்பாலும் அப்பாவின் பெருந்தன்மையை கோழைத்தனமாகவே தவறாக புரிந்துகொண்டார்கள். அப்பாவை உண்மையாக அறிந்த ஒரே நபர் சூரி தாத்தாதான். இன்று காலை நான் கல்லூரிக்குப் புறப்படும்போது அப்பாவிடம், “நீங்க சூரி தாத்தாவிற்கு ஒரு கால் பண்ணலாமே? ஒருவேளை அவர் சித்தப்பாவிடம் பேசி அவரை வழிக்கு கொண்டு வரலாம்,” என்றேன். அப்பா முகத்தில் மகிழ்ச்சி.
“நானும் அதான் நினைச்சேன். பணம் என்றுமே அவருக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை. யோசித்துப் பார்த்து மட்டுமே எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பார். இன்னிக்கு அவர்கிட்ட பேசறேன்,” என்றார் அப்பா.
நான் வீட்டிற்குள் நுழைந்தபோது, சூரி தாத்தாவோடு பேசிவிட்டு அப்பா தெளிவாக இருப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், அவர் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த மனிதரைப் போல இருந்தார் அப்பா.
சூரி தாத்தா, சித்தப்பாவிடம் பேச எந்த ஆர்வமும் காட்டவில்லை என்று அப்பா கூறினார். அப்பாவை சமாதானப்படுத்துவது தாண்டி தாத்தா பேசவே தயங்கியிருக்கிறார். அப்பா நேராகவே தம்பியிடம் பேசி சண்டையை தீர்க்கச் சொல்லும்படி கேட்டதற்கு, தாத்தா அக்கறையில்லாமல், “கேட்கத் தயாராக இருக்கும் மனுஷங்க கிட்ட தான் பேச முடியும். கேட்கவே விருப்பமில்லாத ஒருத்தர் கிட்ட நான் என்ன சொல்ல முடியும்?” என்று பதிலளித்தாராம்.
ஓரளவிற்கு அவர் சொல்வது சரிதான். தாத்தா தலையிட்டதாலேயே சித்தப்பா தன் நிலைப்பாட்டை மாற்றிவிட மாட்டார். ஆனால், தாத்தா அப்படி செய்திருந்தால் அது அப்பாவிற்கு மிகுந்த தைரியத்தை கொடுத்திருக்கும்! தனக்கு ஆதரவாக ஒரே ஒரு மூத்த உறவினர் இருந்தால் கூட, அப்பாவிற்கு அது மிகப் பெரிய பலமாக இருந்திருக்கும்.
அவரின் முடிவைத் தாண்டி, அப்பாவுக்கு அவர் மதிக்கும், நேசிக்கும் ஒருவரிடமிருந்து ஊக்கம் தேவைப்பட்டது. அப்பாவின் சோர்ந்த முகத்தை பார்த்தபோது எனக்கு வலித்தது.
“அவர், என் தம்பி அவமரியாதையாக பேசிடுவானோ என்று பயந்து, பேசத் தயங்குகிறார்,” என்றார் அப்பா.
அப்பாவை சமாதானம் செய்யத் தெரியாமல், நான் என் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டேன். தூக்கம் மிகவும் தொலைவில் இருந்தது. என் ஃபோனில் எனக்கு பிடித்த பாடல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென்று, எனக்கு மிகவும் பிடித்த மகாபாரதக் காட்சியை — கிருஷ்ணன் கௌரவர்களிடம் தூதராகச் செல்லும் காட்சியை, திரைப்பட வடிவில் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பியது. பாண்டவர்களுக்காக அந்த சபையில் நின்ற கிருஷ்ணனை நினைத்தபோது என் மனம் கணத்தது.
அடுத்த நாள் நான் தாமதமாக எழுந்து, அவசரமாக கல்லூரிக்குப் புறப்பட்டேன். ஆட்டோவிலிருந்து இறங்கியபோது, அரங்கத்திற்குப் போகும் வழியில் அர்ஜுனை சந்தித்தேன்.
“சுபா, வா! நம்ம நாடகம் தான் அடுத்தது,” என்று அவன் என்னை அழைத்தான்.
நான் அவனை ஒரு நிமிடம் நிறுத்தி, ஒரு காகிதத்தை அவன் கையில் கொடுத்து, “அர்ஜுன், உன் கடைசி வசனத்தை நான் மாத்திட்டேன். இந்த பேப்பர்ல எழுதிருக்கேன். இதிலிருந்து படிச்சு சொல்லு. நம்ம நேத்து எழுதிய வசனத்துல இதைத் தவிர வேற எதுவும் மாறல,” என்றேன்.
அர்ஜுன் ஆவலுடன் காகிதத்தைத் திறந்து உரக்க வாசித்தான்.
“நமக்கு பணமோ அதிகாரமோ இல்லாதபோதும், தர்மத்தின் பாதையில் நிற்க முயற்சிக்கும் நேரத்தில், நம்ம பக்கத்துல நிற்க ஒருவரை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட அசாத்யமான காரியம். அப்படிப்பட்ட கடினமான நேரங்களில், பிறர் என்ன நினைப்பார்கள் என்ற பயமின்றி, நம்ம பக்கத்துல நிற்கும் மனிதன்தான் உண்மையான நண்பன். அப்படிப்பட்ட உறுதியான நண்பன் ஒருவன் இருந்தால் இந்த பிரபஞ்சத்தையே எதிர்கொள்ள முடியும்; கௌரவர்களின் படையைப் பற்றி சொல்லவே வேண்டாம். எங்களது அதிர்ஷ்டம் குன்றிய நேரத்தில், எங்கள் பக்கத்தில் நின்றவர் கிருஷ்ணன். அவர் தான் உண்மையிலேயே நண்பர்களில் சிறந்தவர்.”
அர்ஜுன் இந்த வரிகளை வாசித்து, குழப்பத்துடன் என்னை பார்த்தான்.
“நீ கிருஷ்ணனை வெற்றி பெற வெக்கறியா? நீ அர்ஜுனன் பக்கம்னு தானே நினைச்சேன். அர்ஜுனன் ஜெயிக்கணும்னு நீ விரும்பலையா?” என்று கேட்டான். இந்த முறை அவன் கண்களில் இருந்த சிரிப்பை தவறாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நானும் சிரித்தபடி, “அதைத்தான் நானும் விரும்புகிறேன் அர்ஜூன்!” என்றேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொண்டு புன்னகைத்தோம். கை கோர்த்தபடி மேடைக்குச் சென்றோம். மைக்கில் அறிவிப்பு முழங்கியது: “இறுதி ஆண்டு மாணவர்கள், அர்ஜுன் மற்றும் சுபத்ரா, நட்பைப் பற்றிய ஒரு நாடகத்தை வழங்குகிறார்கள்.”
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
