தேனம்மை

ஏனோ ஓரே இடத்தை சுற்றி சுற்றி வருவதுபோல் இருந்தது. ‘முன்பு பார்த்த அதே கடைகள் தானோ?’ என்ற சந்தேகம் கொஞ்சம்  இந்தமுறை வலுவாகவே வந்தது. ‘தனியாக வந்தாலே இப்படித்தான் முன்னும் பின்னும் குழப்பி போகிறது. ‘ மேல்சேலையை நன்றாக இழுத்துவிட்டு வாயில்புடவையின் முந்தானையை இன்னும் கொஞ்சம் வலுவாக இழுத்து செருகிக் கொண்டாள். அதே இடத்தில் நின்று ஒவ்வொரு கடையின் பெயரையும் மறுபடி ஒருமுறைப் படித்துப் பார்த்தாள்.கண்ணாடியின் மஞ்சள் விளிம்பு இடக்கு பண்ணியது. மங்கலடைந்திருந்த கண்ணாடியின் ஊடே கண்களை இடுக்கி உற்றுப் பார்த்தாள். தோளை யாரோ தொடுவது போலிருந்தது.

மேல்கடை பாய் நின்றிருந்தார். 

 “வெயில்ல ஏன் நிக்கறீங்க?..பஸ் வர்ற வரைக்கும் ஓரமா நெழல்ல நிக்கவேண்டியதுதானம்மா?” என்றார்.

“பஸ்ஸுக்கில்ல..ஏடிஎம் வந்தேன் பாய்”

“அது தெக்குவீதி பக்கம் இருக்கே..நீங்க இந்த கோபுரம் பக்கம் வந்துல்ல நிக்கறீங்க”.

“அதான்.. கொஞ்சம் கொழம்பிடுச்சு பாய்” என்றாள்.

“அந்த வழியாதானே..வந்திருப்பீங்கம்மா” என்றார்.

“ஆமால்ல..கவனிக்காம விட்டுட்டேன் போலிருக்கு..”.

“சரி..வாங்க..வண்டில கொண்டிவிடறேன்.”

“இல்ல பாய்..நடந்தே போய்க்கிறேன்” என்றாள்.

பாய் உற்றுப் பார்த்தார்.தனக்குள்ளே ஏதோ யோசித்தபடி.. “இங்கேயே இருங்க” என்றுவிட்டு கொஞ்சம் தள்ளிப்போய் வெற்றிலைப்பாக்கு கடையிலிருந்து ஒரு பையனை கைதட்டி அழைத்தார்.”ரஃபீக்கு..பாட்டிய தெக்குவீதி ஏடிஎம் ல விட்டு பணம் எடுத்தப்புறம் நம்ம  வேம்புகிட்ட   சொல்லி வீட்டுல இறக்கிவிட சொல்லு”..

“சரிங்க அத்தா,” என்றபடி வண்டியை எடுக்க போனவனிடம்.. சன்னமாக “அவுங்க கொடுக்கிறது வாங்கிக்க சொல்லு.மேல பேசாண்டாம்.”

பையன் தலையாட்டிக் கொண்டு வண்டியை எடுத்தான்.

“நன்றி பாய்,” என கைக்கூப்பினாள்.

“பத்திரமா போங்க”

ஏறும் முன் ஜாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ்ஸைத் தொட்டுப் பார்ததுகொண்டாள்.

“நல்லா பிடிச்சுக்கோங்க பாட்டி”

“ம்..பிடிச்சுகிட்டேன் ..நீ போ,” என்றாள்.

‘ஏன் இப்படி இடங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.இடதும் வலதுமாக நேற்று இங்கிருந்த கடைகள் ஏன் நேர் எதிர் சாலைக்கு போகின்றன?..கோபுரம்கூட அப்படித்தான்.கமலாலயத்தின் அந்தப்பக்கம் இருந்த கோவில் எப்படி இங்கு வந்தது? நான் போவதற்குள் வீட்டு வாசலும் இப்படித்தான் ஆகிவிடுகிறது.தூங்கிஎழுந்து வாசல் கூட்டும் போது ஒருநாள் கிழக்கிலும் மறுநாள் மேற்கிலும்.கிழக்கில் இருக்கும்நாட்கள் பரவாயில்லை.மேற்கில் வாசல் வரும் நாட்களில் மனசுக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு.வாஸ்து சரியாயிருக்கனும்னு வீடு பாக்க சொன்னேன் ..இந்த சீனு பயல..இப்படி பாத்துவச்சிருக்கானேன்னு அன்னைக்கு முழுக்க அவன திட்டவேண்டியதா இருக்கு‌.

ஏடிஎம். ..பாத்தியா..இதும் மாறித்தான்  போயிருக்கு.’

“பாட்டி..பணம் எடுக்கத் தெரியுமா?”

“நான் எடுத்துக்கறேன்.நீ இங்கேயே நில்லு..”

உள்ளேப்போய் கார்டு போட்டு பணம் வந்தவுடன்..ரசீது எடுத்துப் பார்த்தாள்..மீதி பதினெட்டாயிரம் இருந்தது..இரண்டையும் பர்ஸில் பத்திரப்படுத்தி ஜாக்கெட்டில் வைத்து தாலிக்கயிற்றிலிருந்து ஊக்கு எடுத்து  மாட்டிக்கொண்டாள்.ஆட்டோக்கான பணத்தை முந்தானையின் நுனியில் முடிந்து செருகிக் கொண்டாள்.

கண்ணாடியை துடைத்துமாட்டி வெளியில் வந்தபோது பையன் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

‘அழகுப்பயல்தான்..முடியும் முழியும் ..அப்படியே செந்தில்   ஐஸ்கூல் படிக்கையில் பார்த்தது போல் இருக்கிறது. அவனுடன் தான் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது. இரண்டாவது ஆணா பொறக்கனும்னு சுவாமிமலை முருகனை வேண்டி பிறந்தவன். இப்போது தலையெல்லாம் நரைத்துவிட்டதுன்னு சசி சொன்னா..பாத்து ரெண்டு வருசமாச்சு..புள்ளைங்களையாவது லீவுக்கு சசி வீட்டுக்கு வந்திருந்தபோது பாத்தது..இவனதான் பாக்க முடியல. பார்க்காததுகூட  ஒருவிதத்துல நல்லதுதான்.நரைமுடியோட பாக்க வேணாம்.’

சிரிச்சமூஞ்சி பையன் அவளை ஆட்டோவில் மாற்றிவிட்டு சிரித்துக்கொண்டே போனான்.அலையலையான அவன் கேசம் பறந்தலைவதையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தெருவும் வீடும் அவள் நினைத்தது போலவே மாறியிருந்தன.வாசலில் சீனு உட்கார்ந்திருந்தான்..

“பானு எங்க போன..நான்தான் வர்றேன்னு சொன்னேன்ல.”

“ஆமா..நீதான..ஒன்ன நம்பிட்டுருந்தா..சரிதான்.இதோ பாத்துகொடுத்தியே ..ஒரு வீடு வாங்கி ஒரு வருஷம் கூட ஒழுங்காயில்ல.டெய்லி வாசல் மாறிடுது”.

ஆட்டோக்காரன் புரியாமல் விழித்தான்.

“அக்கா அப்படித்தான்..நீங்க போங்க.’

“என்னடா சொல்ற அவருகிட்ட?..”

“ஒண்ணுல்ல பானு”.

“ஏதாவது லூஸூ மாறி ஒளறிட்டுருக்காத.”.

“ஆமா..கூடபொறந்தன்ல .லூஸூதான்”.

“உன் பொண்டாட்டி வேலையிருந்து வந்துட்டாளா?”

“இந்நேரம் வந்திருப்பா”.

“சரி வா.ஒரு வாய் காப்பி குடிச்சுட்டு போவ”.

உட்புறம் போய் கொஞ்சம் தடுமாறி..நாணல் குழாய்களை சரடாக கோத்திருந்த தாலிக்கயிற்றிலிருந்து சாவியை எடுத்து  பூட்டை திறந்தாள்.

“கொஞ்சம் உப்புமாங்காபோட்டு பூண்டும் நிறைய உரிச்சுப்போட்டு புளிக்குழம்பு வச்சிருக்கேன்.எடுத்துட்டு போ”.

“சரி..பானு”.

வீட்டினுள் கண்பழக சிறிதுநேரம் பிடித்தது. 

“வெயில் அதிகம் டா..”என்றுவிட்டு சுவரை பிடித்தபடி உள்ளே போனாள்.

‘பானு.. கடந்த இரண்டு வருடமாக திடீரென மெலிந்து விட்டதாக தோன்றியது.அவர் சென்று இந்த ஏப்ரலோடு  பதினொன்று வருடங்களாகிறது..கடைசியாக லீவுக்கு வந்த மகளையும் பேரக்குழந்தைகளையும் ஏற்றிவிட ஸ்டேஷனுக்கு அவருடன் இவனும் சென்றான்.சசிக்கும் குழந்தைகளுக்கும் கையசைத்து அனுப்பிவிட்டு ரயில் போனபிறகும் அப்படியே நின்று கொண்டிருந்தவரிடம்..”அத்தான் கிளம்பலாங்களா?” என்று இவன் தான் கேட்டான்.

அதற்கு மறுநாள் அவர்  பெரிய பயணத்திற்கு தயாராக போகிறார் என்பது தெரியாமலே.ஏதோ நண்பர்களை பார்க்க விழுப்புரம் போவதாக கூறிவிட்டு சென்றது தான்.நான்குநாள் ஆனபிறகு ஏதோ கனவு கண்டு எழுந்து  உட்கார்ந்து இவள் கவலைபட்டபோது கண்ணில் பட்ட டைரிதான்.. அதில்தான் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தார்’.

“அதை எடுக்கபோகும்போதே தெரிஞ்சுடுச்சுடா.. எப்படின்னு தெரியல..தெரிஞ்சுடுச்சுடா..”, என்று இப்போதும் அக்கா சொல்லுவாள்.அப்போது அவளின் அந்த கண்களை பார்க்க இவனால் முடியாது.

அடுப்படி நிலைப்படியில் கை ஊன்றி மறுகையில் முந்தானையில் பொதிந்து காப்பி டம்ளரை கொண்டுவந்தாள்.

“இப்பல்லாம் கை சூடு பொறுக்குதில்லை”.தனக்கே சொல்லிக் கொண்டாள்.

“ஏண்டா தலையில் எண்ணையே வைக்க மாட்டியா.பஞ்சடைஞ்சுபோய் கெடக்கு”.

“ஒனக்கு எப்பப் பாரு எந்தலையிலயேதான் கண்ணு”.

“ஆமா.பெரிய தியாகராஜ பாகவதர்..இவன் தலையில் கண்ணு. நல்லா சீவி..நல்லா வையின்னா..என்னவோ பண்ணு.”

காஃபியை அவனிடம் நீட்டினாள்.

டம்ளரோடு சோஃபாவில் அமர்ந்த வனின் காலடியில் அமர்ந்து அவனுடைய முழங்காலில் கையை வைத்து முகத்தைப் பார்த்தாள்.

“அப்படியே நீ அப்பாதாண்டா சீனு..”என்றாள்.

“ஆனா அறிவுதான் அவர் மாதிரி இல்ல.கொஞ்சம் கம்மி” .

“ஆமாமா.அவர்க்கு இருந்த அறிவு எனக்கு வேணாம்.இருந்த சொத்தல்லாம் அழிச்ச அறிவு”

“விடுடா..செத்தவங்கள பெருமையாய் தான் பேசனும்”.

“புதுசு புதுசா ஏதாவது சொல்லு.”

“தம்பி..அதவிடுடா..நேத்து ஏதோ தெரியாத நம்பர்ல்ருந்து நாலஞ்சு முறை ஃபோன் வந்துச்சுடா.எடுத்தா..அந்தபக்கத்துலருந்து பேசமாட்டேங்கறாங்க..யாரா இருக்கும்??..”

குடித்து முடித்த காப்பி டம்ளரின் உள்ளே உற்றுப் பார்த்துக் கோண்டே “நீயே சொல்லு..யாரா இருக்கும்?”

“அவுங்களா இருக்குமாடா?

“ம்ம்..”

“அத்தானா இருக்குமாடா?.. என்கிட்ட பேச தயக்கமா இருக்கோ.”

பர்ஸில் இருந்து அந்த டயல்பேட் ஃபோனை எடுத்து உற்றுப் பார்த்து நான்கு முறை அழுத்தி அவனிடம் கொடுத்தாள்.

“இந்த நம்பர்தாண்டா தம்பி..”

“சரி..நான் பேசிப் பார்க்கிறேன்”.

அந்த பக்கத்தில் ஃபோனை எடுத்தவர்

“வீட்டுல ஏதோ நம்பர் மாத்தி போட்டுட்டாங்க போல சார் “, என்றார்.

ஃபோனை வாங்கி வைத்தவள்

“இதவிடு..போன மாசமும் இப்படித்தான் வேற நம்பரிலிருந்துவந்தது”, என்றாள்.

“சரி மறுபடி வந்தா பாப்போம் பானு”, என்றான்.

“எங்கயோ இருக்காங்கடா?..எ மனசு சொல்லுதுடா..கண்டிப்பா இருப்பாங்க..

இல்லாம..அந்த துர்க்கா பரமேஸ்வரிக்கு இருக்கிற விரதமும் செய்யுற பூஜையும் சும்மா போய்டுமா?அவள  தினமும் கேள்வி கேட்டுட்டு தான் இருக்கேன்”. கேள்வியும் கேட்டு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள். கண்களை விழித்து விழித்து அவள் பேசியது பார்க்க.. அவனுக்கு பெரிய வீட்டு தாழ்வாரத்து ஊஞ்சலில் ஆடிய பட்டுப்பாவாடைப் போட்ட குண்டு அக்காள் ஞாபகம் வந்தாள். கண்ணீர் தெரியாமல் இருக்க குனிந்து கொண்டான்.

“அட  லூஸுப்பயலே..இதுக்கா அழுவுற..இனிமே ஃபோன் வந்தா குறிச்சுவச்சு சசிகிட்ட சொல்லிக்கிறேன்.கோழப்பயலா இருக்கியேடா..சரி இரு ..கொளம்பு எடுத்துட்டு வர்றேன்”.

பின் புடவையை எடுத்து விட்டுக்கொண்டு எழுந்து உள்ளே போனாள். 

அவர் கிளம்பி சென்று பத்து வருடத்திற்கு பின்னும் என்ன நம்பிக்கை இது.? துர்க்கையை இவள் பிடித்துள்ளளா?..அது இவளை பிடித்துவைத்துள்ளதா?.’

கல்யாணப்படம் எதிர் சுவற்றில் தொங்கியது. ‘அக்கா மஞ்சள் நிறம்..அத்தான் மாநிறமானாலும் அழகு. கண்கள் ஈர்ப்புடையது.நின்று நேருக்கு நேர் பார்க்கமுடியாது. இவனுடைய அப்பாவின் இறப்பிற்கு பின் அங்குதான் அண்ணனோடு சேர்த்து இவன் ஜாகையும். பயமும் மரியாதையும் கலந்த உறவு. நேருக்குநேர் பார்த்துப் பேசியதில்லை’.

காரணம்.. அந்த கண்களும் தான் என இப்போது தோன்றுகிறது.

எதிரிலிருப்பவரைத் தாண்டி  அப்போதே எதையோ தேடிக்கொண்டிருந்தனவோ? திடீரென சுற்றியுள்ள மனிதர்களை அப்படி மறந்து கிளம்பி விட முடியுமா என்ன?..சின்னவயதில் செல்வதற்குகூட ஏதாவது காரணமிருக்கும். எல்லாவற்றையும் முடித்து நன்றாயிருக்கும் குடும்பத்தை விட்டு ..அதுவும் வயதான இவளைவிட்டு ..எப்படி?

சாமி கும்பிடுபவர்களுக்கு நேர்மை வேண்டாமா? இந்த பத்து வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விட்டாள். உயரம் முக்கியமாக. ஒருமுறைக்கூட அழுது யாரும் பார்த்ததில்லை. சின்னதிலிருந்தே மிக தைரியசாலி. முதலில் வாய் ஓயாத பேச்சு எல்லோரிடமும்..இப்போது பேசுவதற்கு வீட்டில் நிறைய சாமிகள் வைத்திருக்கிறாள். ரிஷிவந்தியத்தில் அத்தான் வேலைப்பார்த்த போது பிடித்துவிட்ட பக்தி. அந்த சிவனுக்கு மாதமொரு முறை அத்தான் காசில் தேனபிஷேகம் நடக்கும். அது ஒரு விசேஷம் அங்கு. அதைப் பார்க்க அப்போதே ..நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஐம்பது பேர் போல நின்றிருப்பார்கள். அந்த கோயிலின்

அர்த்தமண்டபம் நீளமானது. ஆனால் அகலம் குறைவு. தேன் ஊற்றும் போது விடையில் அமர்ந்த அர்த்தநாரீஸ்வர ரூபம் தெரியும். லிங்க அமைப்பு அப்படி. அதைப்பார்ப்பதில் அத்தானுக்கும் இவளுக்கும் அவ்வளவு ஆசை. உள்மண்டபத்தில் நின்று கண்கொட்ட பார்க்கையில் பானுவின் கண்களை எதிர் நின்று இவன் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

ஒரு சிறு மூடிபோட்ட வாளியில் குழம்புடன் வந்தாள்.

“ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளோ?”

“ராத்திரி  நேரத்துல புளிக்குளம்பை சாப்டாதீங்கடா..சூடு பண்ணிட்டேன்.சாதத்துல தண்ணிவிட்டு வைக்க சொல்லி காலைல பழையதுக்குத் தொட்டுக்கோ..நல்லாருக்கும்”.

“சரி..வர்றேன் பானு”, என்றுசொல்லிவிட்டு நடந்தான்.

“பாத்து ஓரமா போடா”, பின்னாலிருந்து கத்தினாள்.

கொஞ்ச நாளாகவே சத்தமாக பேசுகிறாள். நாம் பேசும்போது உற்றுப்பார்க்கிறாள். காது கேட்கவில்லையா? நேரமிருக்கும்போது அழைத்துப்போகவேண்டும். சசி நல்ல நிலைமையில் இருக்கிறாள். அவள் கூப்பிட்டாலும் இவ்வூரை விட்டு எங்கும் போவதில்லை. எல்லாவற்றிலும் பிடிவாதம். அதீத தைரியம். சமீபமாக அவளுடைய உடம்பு அந்த தைரியத்தை அசட்டுத்தனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. தனியாக இவள் இங்கு இருப்பது இவனுக்குள் ஒவ்வொரு நிமிடத்தையும் பதட்டமாக்கிக் கொண்டிருக்கிறது.

தலையை தொங்கப் போட்டுக்கொண்டு சீனு தெரு முடிவில் நடந்து போவது அவளுக்கு ஒரு முண்டம் தனியாக போவதுபோல் இருந்தது. “இதென்ன பிள்ளைய இப்படித்தான் யோசிச்சிட்டு”. திரும்பி உள் சென்று கைகால் அலம்பி விளககேற்றினாள். எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் சாந்தமான முகத்துடன் அமர்ந்திருந்த துர்க்கையின் முன்விளக்கை ஏற்றினாள். அந்த விளக்கும் படமும் பாசார் ஐயர் மாமி கொடுத்தது. அவ்வளவு நட்பு இருவருக்குள்ளும். 

வெள்ளிக்கிழமை பூஜை செய்யவும் அந்தம்மாள்தான் சொல்லிக் கொடுத்தாள். 

அம்மா உட்கார்ந்திருக்கும் சிம்மத்தை பாக்கனுமே. அதுதான் கடவுளோடு இருக்கும் கம்பீரம் இல்லையா?’ தொட்டு கண் ஒற்றிக்கொண்டாள். படத்தின் காலடியில் அர்ச்சித்த குங்குமத்தில் இருந்து மோதிர விரல்நுனியால் துளி எடுத்து வகிட்டிலும் தாலியிலும் இட்டுகொண்டு.

“லூஸூப்பய அளுவுறான் இப்பதான்” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்புறம் சென்றாள்.

செட்டியார் வீட்டின் செங்கல்பாவிய தரையும் கருங்கல்பாவிய உள் முற்றமும் தெரிந்தன. வெளிதாழ்வாரத்திற்கும் உள்கூடத்திற்கும் இடைப்பட்ட நடையில் அக்கம்பக்கம்வீட்டின் குஞ்சுகுளுவான்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  செந்தில் எல்லோரையும் அடக்கிக் கொண்டிருந்தான். வாசல்கதவை தாழிட்டு விட்டு துவாரத்தின் வழியே வரும் வெளிச்சத்தில் வெளியே செல்பவர்கள் தலைகீழாகத் தெரிவதை செந்தில் படம்ஓட்டுவதாகச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தான்.

சமையல் கட்டில் குப்புற படுத்துக் கொண்டிருந்த இவளின் ஜார்ஜெட் புடவையின் பூக்கள் தெளிவாகத் தெரிந்தது. கருநீலத்தில் லைட்ஊதாவும் வெள்ளையுமான பூக்கள். இவளுக்குப் பெரியவள் பிறந்தபோது  அப்பா எடுத்துக் கொடுத்தது. சிலோன் ரேடியோவில் புதியப்படம் ‘விதி’ கதாசித்திரம் கேட்டுக்கொண்டிருந்தது. ‘ஞாயித்துக்கிழமை போலருக்கிறது. எங்க இவங்களை காணுமே. கேம்ப் போயிருப்பாங்களோ. ஞாயிற்றுகிழமைல என்ன கேம்ப்?’

நடுவில் திடீரென, பணத்தோட்டம் படப்பாட்டு, எம்.ஜி.ஆர், சரோஜாதேவி. கோவிலின் துர்க்கை சன்னதியில் ஆடுகிறார்கள். விசுவநாதகுருக்கள் அவசரமாக வந்து “அம்மா! அபிஷேகம் ரெடிவாங்கோ”, என்கிறார்.

“சார் எங்க இருக்காங்க ஸ்வாமி?” என்கிறாள்.

“அங்கேதான்  இருக்கார்.வேடிக்கை பாக்காம நீங்க வாங்கோ “, சொல்லிவிட்டு பிரசாதப் பாத்திரத்தோடு நடக்கும் அவரின் பின்னே

புடவையின் கொசுவத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருண்ட பிரகாரங்கள் வழியே ஓட்டமும் நடையுமாக போகிறாள். ‘கொசுவமா?..ஆமா..ஆனா இப்பல்லாம் பின்கொசுவம்தான வச்சு கட்டுறேன். இதென்ன பேரகுழந்தைகள்ளாம் ஆயாச்சு. இப்பபோய்?’

கருவறையின் சிறு கோணலான கல்லில் தேன் உருக்கி விட்ட மெழுகுபோல வழிகிறது. ‘என்ன இது..ஐயர் பையன் பஞ்சுவா அபிஷேகம் பண்றான் ..சரிசமமாக ஊற்ற வேண்டாமா? படிக்கிற சினனப் பையனை விட்டா இப்படித்தான்.அம்மை மட்டும் தெரியறாளே!’ ”நேரா விரவி ஊத்துடா தம்பி!”வாய்விட்டு சத்தமாக சொல்லப் போகும்போது..ஏடிஎம் பையன் சிரித்துக்கொண்டே அலைஅலையாக கூந்தல் அலைய வண்டியில் தாண்டிப் போகிறான். மணி ஒன்று. டிவி சத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எழுந்து ட்யூப்லைட்டையும் டிவியையும் அணைத்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தாள். மேலே அந்த பல்லி இன்றும் இதேநேரத்திற்கு அதே இடத்தில் இரவு விளக்கிற்கு பக்கத்தில் இருந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.