தென்னை மரத்தில்…

உலக வணிக கட்டமைப்பு- மாற்றுப் பார்வை

இன்று நிலவும் மத்திய கிழக்கு சூழலில் இந்தக் கட்டுரையின் பொருத்தம் பற்றிய கேள்விகள் எழலாம். எண்ணெய் சரக்கு தேங்கி நிற்பதால், எரி பொருளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. சல்ஃப்யுரிக் அமிலம், தகவல் மையங்களின் அடிப்படை மூலக்கூறுகள், மின்கலன், விவசாயதிற்குத் தேவையான செயற்கை                நைட்ரஜன் அனைத்தும், எண்ணெய் சுத்திகரிப்பு நிகழ்கையில் விளையும் உப பொருட்கள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள். சல்ஃப்யுரிக் அமிலம் இல்லாமல். செம்பு உலோகத்தை, கோபால்ட்டை பிரித்தெடுப்பது கடினம். எனவே, எண்ணெய் வேண்டும்.

வன்முறை, வன்முறைக்கு தீர்வாகாது என்ற இந்திய தத்துவத்தை பொதுமக்கள் இயக்கமாக முன் எடுத்துச் சென்ற காந்தியை இந்தியர்களே புரிந்து கொள்ளவில்லை. இன்றைய போர் சூழல் யாருக்குமே நன்மை செய்யவில்லை. இதன் அடிப்படையாக, வளங்களை கொள்ளையடிக்கும் ஆர்வம், சுய பாதுகாப்பு, மத மேன்மை மமதை, வீங்கிக்கொண்டிருக்கும் அகங்காரம் என்ற பல காரணங்களைச் சொல்லலாம்.
ஈரான், தன் சகோதர நாடுகளையே அழிவிற்கு உள்ளாக்குகிறது. இஸ்ரேலோ லெபனானின் பொதுமக்கள் வசிப்பிடத்தில் ஆயுதங்களை செலுத்துகிறது.
அமெரிக்கா எண்ணெய் வளத்தை தான் எடுத்துக்கொண்டு தன்னுடைய கைப்பாவை ஈரானை ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இஸ்ரேலுக்கு, அதனுடைய பாதுகாப்பிற்காக ஹமாஸ், ஹெஸ்புலாஹ், போன்ற அமைப்புகளை ஊட்டி வளர்க்கும் ஈரானை அழிக்க வேண்டும்; .அமெரிக்காவிற்கு எண்ணெய் வளம், தலையாட்டும் பொம்மை வேண்டும்; ஈரானிற்கு, எங்கள் மதமே உயர்ந்தது, எங்கள் வரலாறு தனித்துவமானது, அல்லாவை எதிர்ப்பவர்களை அழித்தொழிப்போம் என்ற வீம்பு.
ஒவ்வொருவரும், தேவையில்லாத, மாறுபடும் குறிக்கோளை வைத்துக்கொண்டு பொது உயிர்களுடன், ஏவுகணை கொண்டும், மற்ற பல்வகை ஆயுதங்களைக் கொண்டும் விளையாடுகிறார்கள்.

இந்தக் கட்டுரை போரைப் பற்றியது அல்ல. இது வெளியாகும் நேரம் போர் முடிந்து நல் அமைதி நல்லிணக்கம் ஏற்பட்டிருந்தால் அது மிகவும் நல்லது. இக்கட்டுரை போர் நமக்கு என்ன செய்தி சொல்கிறது, நாம் துரிதமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கும்  ஒன்று.

இந்தக் கட்டுரை உலகத்திற்கு தற்போது அவசியம் தேவையான ஒரு உலக வணிக அமைப்பைப் பற்றி அலசுகிறது.

25/12/25 மற்றும் 26/01/26 சொல்வனம் இதழ்களில் வெளியான ‘நழுவும் பாதரசம்’ மற்றும் ‘உலக பொது நாணயம்’ என்ற கட்டுரைகளின் தொடர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம். உலக வணிகம் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களில் இருப்பதால், அதற்கான தேவை அதிகரித்து, நிறைய டாலர்களை இருப்பில் வைத்துக் கொள்ள நேர்வதால், இந்தியா போன்ற நாடுகள் கட்டமைப்பிற்கான தேவையான நிதிகள் ஒதுக்க முடிவதில்லை என்று அந்தக் கட்டுரைகள் எடுத்துக்காட்டின. உலக வணிக கட்டமைப்பு சீரானமுறையில் சமமாக நாடுகளை நடத்தவில்லை என்பதால், அதையும், உலகப் பொது நாணயம் மற்றும் உலக வணிக மறுகட்டமைப்பையும் இணைக்கும் முயற்சி இந்தக் கட்டுரை.

“அதீத கற்பனை என்றாலும், ஒரு உலக நாணயம், அமெரிக்க டாலர்களுக்கான உண்மையான மாற்றாக அமையும்.”

மற்றொன்றையும் வலியுறுத்த வேண்டும்.  உலக நாணயம், கோட்பாட்டின் படி அற்புதமான ஒன்றுதான்; ஆனால், பொருளாதார அவ நம்பிக்கைகள்- நிலையான அரசு, பணவியல், நிதியியல் கொள்கை கட்டுப்பாடுகள், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மனத் தடைகள் என்பவை கவனத்தில் கொள்ள வேண்டியவை.

என் அளவில், வர்த்தகப் பற்றாக்குறை, வர்த்தக அபரிமிதம், அதன் விளைவாக எழும் பொருளாதார மாற்றங்கள், வேலையின்மை, இவற்றை சீர் செய்ய ‘உலக நாணயம்’ தேவை.

ஒரு நாணயம் —
உலகம் முழுதும் ஒலிக்கும் ஓசை,
எல்லைகள் கரையும்,
மனிதம் ஒன்றாய் நிற்கும்.

அது கனவு தான் இப்போது
சமத்துவ மலர் அரும்பிவிடும்
பசியும் பிணியும் வலியும் நீங்கும்,
அன்பின் இதழ் அடுக்கடுக்காய் விரியும்.”  (என் முந்தைய கட்டுரைகளிலிருந்து)

இப்போது நிகழும் போர், அதில் பங்கு கொள்ளாத நாடுகளையும் பாதிப்பதால், உலகப் பொது நாணயத்துடன், உலக வணிக கட்டமைப்பைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும், அதன் மாற்றுரு என்னவாக இருக்க வேண்டுமென்றும் இதில் பார்க்கப் போகிறோம்.

உலக வணிக கட்டமைப்பின் போதாமைகள்

உலக வணிக கட்டமைப்பு, சில நாடுகளின் செல்வ நிலை மேம்படுவதற்காக, மையமாக்கப்பட்டு, தலைமுறைகளாக ஒரு சிறு மேலைக் குழுவினர் நிர்வாகம் செய்யும் ஒன்றாகத்தான் இருக்கிறது- டாலரில் பொருட்களின் மதிப்பீடுகள், லண்டனில் வணிகக்கப்பல்களின் காப்பீடுகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்தியை,) போரின் தொடக்கத்தில் ஈரான் முடக்கவில்லை. அங்கே எரிபொருள், எரிவாயு மற்றும் இதர வணிகப் பொருட்களை சுமந்து வரும் கப்பல்களுக்கு, காப்பீடுகள் தர மறுத்தது லண்டனிலுள்ள லாய்ட்ஸ் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள். அவை ஏறத்தாழ உலக வணிகத்தில் 49% கடல் பயண காப்பீடுகளைக்  கையாள்கின்றன. அவை, போர்ச் சூழலில் காப்பீடுகள் தருவதில்லை. ஒற்றையான பலசாலியாக உலகை ஆளும் டாலர், ஒற்றை அமைப்பாக, வணிக கப்பல் காப்பீடுகளை வளைத்துப் போட்டுள்ள ஒரு பேராசை அமைப்பு, போர் சமயத்தில் உதவ முன்வராத, இழப்பீடுகளை அலட்சியம் செய்யும் உலக வர்த்தக சபை, போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூட சொல்லாத உலக குற்றவியல் நீதிமன்றம், இவையெல்லாம், தெற்குலகு என்று அழைக்கப்படும் நம் நிதிகளாலும் கூடத் தான் இயங்குகின்றன. ஆனால், இவையனைத்தும் போரில் பங்குபெறாத, போரை வரவேற்காத, நம்மைப் போன்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. பல்லாக்கு தூக்குபவர்களாகவே தெற்குலகம் இருக்க வேண்டுமா?

உலக வர்த்தக கட்டமைப்பில் தற்சமயம் நாம் அனுபவித்து வரும் நிலையை அறிந்து கொண்டு அதன் பின் அதைத் தீர்ப்பதைப் பற்றிப் பார்ப்போம்.

காப்பீடு- யூரோப் இதை தனது தனி உரிமையாக கையாள்கிறது. அது நினைத்தால், எந்த கடல் தடத்திலும், எந்தக் கப்பலுக்கும் காப்பீட்டை மறுக்க முடியும். அது கேள்விகளுக்கு உட்பட்டதல்ல.

 டாலரில் வர்த்தகம்- அது எண்ணையோ, காப்பீடோ, கப்பல் போக்குவரத்தோ அனைத்தும் டாலரில் தான் நடக்கின்றன. டாலர், ஒரு ஆக்டோபஸ்.

பாதுகாப்பு வலை- உலகின் பொது நன்மைக்காக, ஆசியா, ஆப்பிரிக்கா, போன்ற நாடுகள் உலக அமைப்புகளில் அங்கத்தினர்களாக வேண்டும்; பணம் கட்ட வேண்டும். ஆனால், போர் நேரங்களில், எந்தவித பாதுகாப்பு வலையும், போரில் ஈடுபடாத தேசங்களுக்கும் கிடையாது- எண்ணெய் விலை, காப்பீடு, கப்பல் வழித்தடங்கள், உள்ளூர் நாணயத்தின் அதிர்ச்சி அலைகள் எதற்குமே பாதுகாப்பு வலை உலக அமைப்புகளிடமிருந்து கிடைக்காது. ‘நமக்கு நாமே’தான்!

எரிபொருள் மற்றும் இதர பொருட்களின் சேமிப்பும், மாற்று வினியோக சங்கிலியும்- அமெரிக்கா, யூரோப் போன்ற நாடுகளுக்கு இது சிக்கலில்லை. ஆனால், இந்தியா,பாகிஸ்தான், நேபாள், இலங்கை?

இராணுவம் கழுத்தை நெரிக்கும் ஜலசந்திகள்- ஆம், ஹார்மூஸ், பாப்- எல்- மேன்டப், சூயஸ், மலாக்கா இவையெல்லாம் உலகின் ஒருமித்த கருத்தால் நிர்வகிக்கப்படவில்லை- இராணுவ பலத்தினால், வர்த்தகப் பாதுகாப்பு என்ற போர்வையில் இவை நடக்கின்றன.

இதெல்லாம் பழைய காலத்தவை 1945-75ல் கொண்டுவரப்பட்டவை. இன்றுவரை ஏன் மாறவில்லை அல்லது மாற்றப்படவில்லை?

உலக வணிக கப்பல் காப்பீட்டின் மதிப்பு 2024ல் $39.92 பில்லியன். இதில் $22.6 பில்லியன், அதாவது, 56.7% சரக்கிற்கான காப்பீட்டுத் தவணைத் தொகை. ஏறத்தாழ 48.5% யூரோப் பெறுகிறது ஆசியா- பஸிபிக்  28.1% தான்.

இந்த வரைபடத்தில் உலக கடல் சார் காப்பீட்டுச் சந்தையின் வளர்ச்சியைப் பார்க்கலாம். இந்த வளர்ச்சிக்கான பல காரணங்களில் முக்கியமானது, உலக வாணிபம் மேலோங்குவது, நிலையில்லாமல் ஏறியிறங்கும் எண்ணெய் விலை, அதிகரிக்கும் கப்பல் கட்டுமானச் செலவுகள்

பிராந்தியவாரியான தகவல்களை கீழே உள்ளதில் பாருங்கள்

எந்த அளவிற்கு மேலை நாடுகள் இதில் அதிக அளவில் இலாபம் பார்க்கின்றன என்பது புரியும்.

துறைவாரியான தகவல்களும் உதவும்

என்ன செய்ய வேண்டும்?

உலக வணிக கட்டமைப்பு சமச்சீராக இல்லை என்பது தெளிவாகிறது அல்லவா? அது செல்வம் மற்றும் இராணுவ அதிகாரத்தில் மேம்பட்டவர்களுக்கு உதவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. மிகச்சோதனையான காலத்தில், இந்தியா போன்ற நாடுகள், வாஷிங்டன், லண்டன், தெஹ்ரான், டெல் அவிவ் நகரங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அதிக விலை தர வேண்டியுள்ளது. இது எப்படி சரியான வாதமாகும்? கீழே காரணங்கள் தந்திருக்கிறேன்

இந்தியா 85% எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

இதில் 60% ஹார்மூஸ் வழியே வருகிறது.

காப்பீட்டை லண்டன் கட்டுப்படுத்துகிறது

வளைகுடா நாடுகளில் 10 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அன்னியச்செலாவணி தற்சமயம் நமக்குத் தேவை. அதைவிட முக்கியமாக, அவர்களின் உயிர்களும், உடைமைகளும் காப்பாற்றப்பட வேண்டும். ‘திரைகடலோடி திரவியம் தேடும்’ நிலையில்தான் பாரதமிருக்கிறது.

பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமிருக்கிறது.

உலகப் பொது நாணயக் கருத்தை, சிதறல் சிதறலாக இல்லாமல், உலகத்திற்கான நாணய சமச்சீர் என்று எடுத்துக் கொண்டு உலக வணிக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். போராலும், வர்த்தகத் தடைகளாலும், தனி நிறுவன காப்பீடுகளின் செயல்முறையாலும் நலிந்திருக்கும் உலக வர்த்தக கட்டமைப்பை எப்படி சீர் செய்யலாம், எப்படி அது அனைவருக்கும் சம நீதியைத் தரும், அதன் பயனாக மனித இனம்  எவ்விதம் செழிப்புறும் என்பதைப் பார்க்கலாம்.

வகைமைகள்லண்டன் மற்றும் மேலை நாடுகள்தெற்குலகம்
முன்னணியில் இருப்பவர்கள்லாய்ட்ஸ் கூட்டமைப்பு, நார்வேயின் ‘கார்ட்’ ஜெர்மனியின் ‘அலையன்ஸ்’  மற்றும் AXA XL (France).CPIC (China),சீனா பசிபிக் இன்சுரன்ஸ்PICC (China), GIC Re (India), United India Insurance, BNDES/IRB (Brazil), Misr Insurance (Egypt).
தற்சமய நிலை300 வருடத்திய வரலாற்றுத் தகவல்கள், தரமான சட்டம், மறுகாப்பீடிற்கான அதிக அளவு செல்வ வளம்,,சிக்கல்களை சமாளிக்கும் ஆற்றல்அரசுகளின் நேரடி நிர்வாகம், அதிக அளவில்  கைபற்றப்பட்ட காஸ்கோ போன்ற கடற்படைகள் , 90% உற்பத்தி இடத்தின் அருகே அமைந்திருப்பது குறைவான நிரந்தரச் செலவுகள்.
திறன்பெரும் ஆபத்துக்களை காப்பீடு செய்து ஆதாயம் அடையும் திறன், வளமிக்க செயற்கருவிகள்.துறைமுக கட்டுமானங்கள், அதிக அளவில் சரக்குகளை கையாள்வது, உலர் பொருட்களின் சரக்கு, ஜி-7 வழித்தடத்தில் செல்லாதிருப்பது.
தொழில் நுட்ப பயன்பாடுவழமையை மாற்றி இலக்க முறையைப் பயன்படுத்துதல்  உதாரணம் பி பி எல் ஆனாலும், மெதுவாகத்தான் செயல்படுகிறார்கள்திறன்பேசி பயன்பாடு அதிகம்., எழுத்துறுதி, உண்டு..செயற்கைக் கோள் உதவியுடன் சரக்கின் பயணத்தை உடனுக்குடன்  அறிதல், ப்ளாக் சங்கிலி தொழில் நுட்பம்
அரசியல் நிலைப்பாடுஜி-7 , யூரோப்பிய யூனியனின் பொருளாதா தடைகளுக்கு உதவுகிறது”நடு நிலையானது. அரசுகளிடம் பேச்சு வார்த்தை செய்கிறது; . மேற்குலகின் பொருளாதார தடைகள் இங்கே செயல்படாது, தெற்கு- தெற்கு இணக்கம்.

நாம் மேலே பார்த்தது, வளர்ந்து வரும் தெற்குலக நாடுகள் கடல் வணிக காப்பீட்டில் எப்படி மேலை உலகிலிருந்து தம்மை மீட்டெடுத்து தமக்கான ஒன்றை, இன்றைய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஏற்படுத்தி வருகின்றன என்பதைச் சொல்கிறது. அதிலும் சீனாவின் கப்பல் கட்டுமானம், அதைச் சார்ந்த இயந்திர வடிவமைத்தல் அதற்கு நல்லதொரு நிலையைப் பெற்று தந்திருக்கிறது. அதன் முதலீட்டு பலம், முன்னர் சொன்ன கட்டுரைகளில் பார்த்தபடி, உலகமயமாக்கலை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சாதுர்யம்தான்.

இந்தியாவும் மிக பின்தங்கிய நிலையில் இல்லை. ஜெனெரல் இன்சூரனஸ் அமைப்பு மறு காப்பீட்டிலும், யுனைடட் இந்தியா கடல் வணிக காப்பீட்டிலும் சிறப்பாக செயல்படுகின்றன. செங்கடல் வழியாக கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்யும்போது நாம் செலுத்திய அதிக காப்பீட்டுத் தவணைத் தொகை நம் கண்களைத் திறந்துள்ளது இன்று பாதுகாப்பும், முன்காப்பீடும் என்று நாமும் செயல்படுகிறோம்.

ஒன்றை மட்டுமே சார்ந்திருந்த தெற்குலகம் இன்று பரவலான நாடுகளைச் சார்ந்திருக்க கற்றுக் கொண்டுள்ளது. இந்த முறையில், பொருளாதாரத் தடைகள் இல்லாமல், கப்பல்வரத்து பாதைகள் செயல்படும்; காப்பீட்டு தவணைத் தொகை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மாபெரும் மறுகாப்பீட்டுக் கூட்டணி ப்ரிக்ஸ் + 20 நாடுகளின் பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் நாமும், சீனாவும் முன்னிலை வகிக்கிறோம். தெற்காசிய நாடுகளில் ஏதேனும் கப்பல் விபத்து நேர்ந்தால், லண்டனிலிருந்து இழப்பு

மதிப்பீட்டாளர் வருவதற்கே அதிக காப்பீட்டுத் தவணைத் தொகை செலுத்த வேண்டிய நிலை மாறி, அருகிருக்கும் துறை நிபுணர் வந்து மதிப்பிடுவதால், பண விரயம், நேர விரயம் குறைகிறது. ‘ஷாங்காய் கடல் வழி சட்டம்’ இன்று லண்டனின் பழைய பிரிட்டிஷ் சட்டத்தின் இடத்தை கைபற்றி விட்டது-அதாவது அது கொண்டு வந்துள்ள சட்ட விதிகளை பல நாடுகள் ஒப்பீட்டளவில் ஒத்துக்கொண்டுள்ளன. தெற்கு- தெற்கு வாணிபத்தில் கப்பல் உடற்பாக கட்டுமான காப்பீட்டில் சீனா லாய்ட்சையும் முந்திவிட்டது. 1000 மில்லியன் டன்னிற்கும் மேலாக சரக்குகளை கையாளும் இந்தியா, மேலை நாடுகளின் கொள்கை மாறுதல்களுக்கு இரையாக வேண்டாம்.

எழுதுவதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருந்தாலும், தெற்குலக நாடுகளில் நிறைய மூலதனம் இல்லை. சீனா மூலதனத்தை சேர்க்கும் வழிகள் பல நமக்கு உவப்பானவை அல்ல. மேலும், சீனாவின் கை ஓங்கி வளர்வதும் நமக்கு எத்தகைய சூழலைக் கொண்டு வரும் எனச் சொல்வது கடினம். இந்த நிலையில் என்ன செய்யலாம்?

கடலடிக் குழாய்கள்:

இருக்கவே இருக்கிறது Middle East-India Deepwater Pipeline or SAGE project.

இப்போது பயன்படுத்தப்படும் ‘வாகனம் & சரக்கு’ சார்ந்த காப்பீடு பல படிகளாக காப்பீட்டு தவணைத் தொகைகளைக் கேட்கிறது.

கப்பல் உடற்பாகமும், இயந்திரங்களும்

எண்ணெய் கடலில் விபத்தால் சிதறுவதும், கப்பல் பணியாளர்களுக்கு ஏற்படும் சேதங்களும்.

குறிப்பிட்ட எண்ணெய், சரக்கு இவற்றிற்கான காப்பீடு

போர் அபாயத்திற்கான அதிக ப்ரிமீயம்

பயணத்தில் இருக்கும் ஒவ்வொரு கப்பலுக்குமே தவணைத்தொகை செலுத்த வேண்டும். அதாவது, கப்பல்கள் அசையும் பொருட்கள். ஆனால், கடலடிக் குழாய்கள் அசைவதில்லை. அவை நிரந்தர சொத்துக்கள். ஆண்டிற்கொருமுறை ப்ரிமீயம் செலுத்தினால் போதும்.

கடலடிக் குழாய்கள், மற்றும் கப்பல் காப்பீடு- ஒரு ஒப்பீடு

காரணிகள்இப்போது இருப்பதுகடலடிக் குழாய்கள்
ஆபத்துகடற் கொள்ளை, மோதல், சூறாவளிகடல்படுகையில் நடப்படுவதால் ஆபத்துக்கள் குறைவு
காப்பீட்டு வகைகடற்பயணம், நேரம், காலம்சொத்து, மற்றும் இயக்கம்
செலவுத் தன்மைஏறி ஏறி , (தோன்றினால்) இறங்கும்நிலையானது. பெரும்பாலும் ஆண்டிற்கொருமுறைதான்
சூழலியல்எண்ணெய் சிதறினால் விரைவில் பரவும். கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்கசிவு இருந்தால், உடனேயே இயக்கம் தடை செய்யப்பட்டுவிடும். தானியங்கிகள் செயல்படுவதால் சூழல் கேடுகள் ஏற்படாது.

ஒற்றையான வணிகக் கட்டுப்பாட்டு பிடியிலிருந்து, நாம் பன்முகமான ஒரு சமச்சீர் கட்டமைப்பை உண்டாக்க வேண்டும்; அதே நேரத்தில் அது வாணலிக்கித் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடவும் கூடாது. எனவே ஐக்கிய அமீரகத்திலிருந்து கடலடிக் குழாய்களின் வழியே எண்ணெய், இயற்கை வாயு, பசுமை ஹைட்ரஜன், அமோனியா போன்றவற்றை இறக்குமதி செய்யும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்து விரைவில் செயல்பட வேண்டும். இருதரப்பு காப்பீட்டு அமைப்போ, அரசுகளின் உறுதி ஆவணங்களோ இதற்கு நல்ல நம்பகத்தன்மையைத் தரும். கடலடிக்குள்ளே சென்றுவிட்டோமென்றால், போர் அச்சுறுத்தலகள், கடற் கொள்ளைகள், கழுத்து நெரிபடுதல் இவற்றிலிருந்து தப்பிக்கலாம். காப்பீட்டு தவணைத் தொகையும் குறைவு.

கடலடிக் குழாய் செலவுகளும், எண்ணெய் கப்பல் செலவுகளும்- ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு எவ்வளவு சேமிக்கலாம் என்று பாருங்கள்

அளவீடுகள்எண்ணெய் சரக்கு கப்பல்(ஹார்மூஸ் நீரிணை வழியாகஒரு பீப்பாய்க்குகடலடிக் குழாய்கள் ஒரு பீப்பாய்க்கு
சரக்கு கட்டணம்~$10.00 – $14.00~$1.50 – $2.00
காப்பீட்டுக் கட்டணம்$3.00 – $7.50  (போருக்கான ப்ரிமீயமும் சேர்த்து)$0.20 – $0.50  (செயல்பாட்டுச் செலவீனங்கள் உட்பட)
தரையிறங்கும் செலவுஅடிப்படைக்கோடுசேமிப்பு ~$10–$15
வாயு (LNG) இறக்குமதி~$7.50 MMBtu (Metric Million British Thermal Unit)~$5.00 – $5.50 MMBtu

IMEC என்று ஒன்றிருக்கிறது. அது என்ன? இந்தியா- மத்திய கிழக்கு- யூரோப்பின் தாழ்வரை. இதிலே பசுமைத் தாழ்வரையையும் சேர்த்திருக்கிறார்கள். அது பசுமை ஹைட்ரஜனையும் ஏற்றுமதி செய்யும் விதத்தில் வடிவாகி வருகிறது.  தேவையான எரி பொருள் என்றும் தடையில்லாமல் கிடைப்பதற்காக இந்த IMEC அமைக்கப்பட்டுள்ளது. கடலடியில் எண்ணெய்க் குழாய்களுக்கு இணையாக மின் சக்தி குழாய்களும், பசுமை வாயுக் குழாய்களும் அமைப்பதை பற்றி தீவிரமான திட்டங்கள் இருக்கின்றன. 2024ல் ஒரு எண்ணமாக இது உதித்தது. மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.

இந்தப் பசுமை ஹைட்ரஜன் வாயு திட்டம் உலகின் மிகப் பெரிய வணிகப் பாதை. சவுதியின் NEOM திட்டம் 85% முடிந்துள்ள நிலையில் 2026 முடிவதற்குள் அது ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிடும். இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், தன்னை உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் வடிவமைத்துள்ளது. இந்த பசும் பாதை, ஐக்கிய அமீரகத்தில் IMEC ரயில் பாதையின் இணையாக, சவுதி, ஜோர்டான் வழியாகப் பயணப்படும். 2025ல் ஐக்கிய அமீரகம் சில செயற்கை நுண்ணறிவு தகவல் தளங்களில் பசும் ஹைட்ரஜன் பயன்படுத்தி ஒரு கலப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் மத்திய கிழக்கிலிருந்த சில பிராந்திய பிரச்சனைகளால் சிறிது தாமதமானாலும், இந்திய- யூரோப்பிய கூட்டமைப்பின் வர்த்தக ஒப்பந்தம் (2026) இதைக் காப்பாற்றி விட்டது. மெடிடரேனியன் வரை செல்லும் இந்தத் தாழ்வரை திட்டத்திற்கு, யூரோப்பிய கூட்டமைப்பின் நிதியும் கிடைக்கிறது. இன்றைய ஹார்மூஸ் சூழலில் இந்த நில- நீரடிப் பாதை எத்தனை உதவிகரமாக இருக்கும் என்று நினைத்துப் பார்ப்போம்.

அம்சம்கடலடிப் பாதைபசுமைப் பாதை
மூலப்பொருள்இயற்கை வாயு- படிமப் பொருள்எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன்
பாதைநேரடியானது-ஐக்கிய அமீரகம், ஓமன்பல்வழி- இந்தியா- ஐக்கிய அமீரகம்,- சவுதி-யூரோப்
தேவையாஆம். எரி பொருளுக்கான செலவு கணிசமாகக் குறையும்கரியமிலம் குறையும். சூழல் மாசு குறையும்
2026ல் நிலைதிட்ட நிலையில் தான் இருக்கிறது. நிதி ஆலோசனை நடக்கிறதுரயில் பாதை, மற்றும் துறைமுகக் கட்டுமானங்கள் தொடங்கிவிட்டன.
கேள்விக்குறிகள்குழாய்கள் சிதைவுற்றால், அவற்றை சரி செய்யும் வரை தொழில் நிறுவனங்கள் செயல்படுவது கடினம்மாற்று வழிகள் உள்ளன.
முக்கியமானதுஅமெரிக்கா, சீனா தடை செய்ய முடியாதுசீனா, பாகிஸ்தான் தலையீடு இருக்காது

காசு, பணம், துட்டு, மணி, மணி

திட்ட அளவில் நின்றுவிடாமல், பல உள்நாட்டு குழுமங்கள், அதன் துணை நிறுவனங்கள், கோடிக்கணக்கான டாலர்களை பசுமைத் தாழ்வரையில் முதலீடு செய்து  பசும் மின் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியப் பகுதியில் அதானி குழுமம். 30 GW குறிக்கோளுடன் துவங்கிய இது ஏற்கெனவே 17 GW உற்பத்தி செய்துவிட்டது. குஜராத் காவ்டா பகுதியில் இயங்குகிறது. வளைகுடா நாடுகளின் காற்றாலை, சூர்ய சக்தி ஆலைகளில் முதலீடு செய்வதற்காக ‘அதானி புதுப்பிக்கப்படும் சக்தி’ என்ற துணை நிறுவனத்தை பிப் 26ல் ஐக்கிய அமீரகத்தில் நிறுவியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து பெறப்போகும் உயர் மின்னழுத்த சக்திக்காக துறைமுகத்தில் பொருத்தமான ஆற்றல் கம்பிகளை நிறுவத் தொடங்கி விட்டது.

ஐக்கிய அமீரகம் தனது மஸ்தார் (Masdar) மூலமாக renewable energy துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஏற்கெனவே 65 GW உற்பத்தி செய்துள்ள இது, 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் புதுப்பிக்கத் தகுந்த சக்தியில் இப்போது கவனம் செலுத்துகிறது.

சவுதி, 2 GW சூர்ய சக்தியை உற்பத்தி செய்துவிட்டது. பசுமைத் தாழ்வரையில் இது நிலத்தை, நாடுகளை ,இணைப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.

ரிலயன்ஸ் தொழிலகம்

2032ல், 3 மில்லியன் மெட்ரிக் டன் பசும் ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய ஜாம்நகரில் கட்டுமானங்களைத் தொடங்கிவிட்டது. கண்ட்லா, ஜாம்நகர் துறைமுகங்கள் இந்த பசுமை திட்டத்தின் கீழே மேம்படுத்தப்படுகின்றன. ஐக்கிய அமீரகம், மற்றும் சவுதிக்கு ஹைட்ரஜன் மூலக்கூறுகளை ஏற்றுமதி செய்யப் போகிறது.

உலகின் வர்த்தக தமனிகள் சில தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் நிறுத்தப்படுவதால், ஒரு குறிப்பிட்ட நாணய மேலாதிக்கதால், குறிப்பிட்ட நீரிணையை அடைப்பதால், உலக வணிக சட்டங்கள் சிலருக்கு மட்டுமே சாதகமாகச் செயல்படுவதால், தெற்குலகம் மாற்றி சிந்தித்து செயல்படுகிறது.

வளைகுடா- இந்தியா கடலடிக் குழாய்கள்

பசும் தாழ்வாரம்

ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டுக் கண்காணிப்பு

கட்டுமானங்கள், காப்பீடுகள், பல நாட்டு ஒற்றுமை

இவற்றுடன், உலகப் பொது நாணயம், சமச்சீரான வர்த்தக கட்டமைப்பு சேர்ந்தால், இந்தப் பூமியே சொர்க்கமாகிவிடும். நம்புவோம். இனி தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டாது.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.