காளான்கள் சித்தரிக்கும் நவீன உலகம்

மழைக்குப் பிறகு புல்வெளியில் திடீரென்று முளைக்கும் காளான்களைக் (mushrooms) கண்டு நம்மில் பலருக்கும் வேறு உலகத்தின் உணர்வு வந்திருக்கும். அவை இரவோடு இரவாக தோன்றி, சில நாட்களில் மறைந்து விடுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அவற்றை சில சமயம் உணவாகவும், சில சமயம் நஞ்சாகவும், சில சமயம் ஆன்மிக அனுபவங்களுக்கான கருவியாகவும் பார்த்துக் கொண்டே வந்தனர்.

ஆனால் இன்று மெதுவாக புதிய புரட்சி நடக்கிறது. காளான்கள் மட்டும் அல்ல, முழு பூஞ்சை (fungus) உலகமே, காட்டின் நிழலிலிருந்து வெளிவந்து ஆய்வுகூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், இன்னும் தரவு மையங்கள் வரை நுழைந்து கொண்டிருக்கின்றது. இவை இனி வெறும் மரங்களிலோ, ஈரமான மண்ணிலோ தோன்றும் விசித்திரமான காய்கள் மட்டுமல்ல; உயிருடன் வளரும் கட்டிடப் பொருள்கள், புதிய மருந்துகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் சுத்திகரிப்பாளர்கள், கூடவே புதிய கணினி மெய்ம்மை கணக்கீட்டு முறைகளுக்கு ஊக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இப்பதிவு, பூமியில் உயிர் வளரத்தொடங்கிய தொன்மையான காலத்திலிருந்து இன்று செயற்கை நுண்ணறிவால் வழிநடத்தப்படும் எதிர்காலம் வரை, காளான்களும், பூஞ்சைகளும் எப்படி நம் அறிவியல், தொழில்நுட்பங்களுடன்  பின்னப்பட்டு வருகின்றன என்பதற்கான பயணம்.

பூமியில் உயிர் பிறந்த காலத்தின் பழமையான கூட்டாளிகள்

எதிர்கால தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுவதற்கு முன், பூஞ்சைகள் ஏன் இவ்வளவு முக்கியம் என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் காலத்தை வெகு தொலைவுக்கு பின்சென்று பார்க்க வேண்டும்.

நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியின் கண்டங்கள் இன்று போல பசுமையானதாக இல்லை. ஏனெனில் காடுகள், வயல்கள், மலர்கள் இல்லை; பாறைகளும், அச்சூழலை மூடிய பழமையான நுண்ணுயிர் படலங்கள் பரவியிருந்த கடினமான காலநிலை. அப்போது முதன்முதலாக தாவரங்கள் நிலத்துக்கு வர ஆரம்பித்தபோது அவை மிகவும் பலவீனமான முன்னோடிகளாக இருந்தன. அவர்களின் வேர்கள் பாறையில் இருந்து சத்துக்களை எடுக்க முடியாமல் திணறின. அவர்களுக்கு ஒரு கூட்டாளி தேவைப்பட்டது, அதுதான் பூஞ்சை.

காட்டில் நடக்கும்போது, திடீரென தரையில் சிறிய குடை போன்ற வடிவம் தெரிகிறது. அதைப் பார்த்து நாம்  காளான்  என்று வியக்கிறோம். ஆனால் அது முழு உண்மையல்ல. அது பூஞ்சையின் (fungus) ஒரு பகுதிதான்!

பூஞ்சை என்பது முழு உயிரினக் குடும்பம். இது தாவரமோ விலங்கோ அல்ல. பூஞ்சையின் உடல் பெரும்பாலும் மண்ணுக்கடியில் அல்லது மரத்தின் உள்ளே பரவியிருக்கும் நூல் போன்ற வலைப்பின்னல், அதுதான் மைசீலியம் (mycelium). இது உணவை அழித்து உறிஞ்சி வாழ்கிறது. ஈஸ்ட் (yeast), பூஞ்சணம் (mold), பெனிசிலியம் போன்றவையும் பூஞ்சைகளே.

ஆனால் காளான் என்பது அந்த பூஞ்சையின் கனி போன்ற பகுதி, அதாவது பழவகை அமைப்பு (fruiting body). மழைக்காலத்தில் ஈரப்பதம் கிடைக்கும்போது, மைசீலியம் மேலே தள்ளி அனுப்பும் அந்த குடை வடிவ உறுப்பு, வித்துக்களை (spores) பரப்புவதற்காக வருகிறது. ஆப்பிள் மரத்தின் கனி போல, காளான் பூஞ்சையின் இனப்பெருக்கக் கருவி மட்டுமே. வித்துக்கள் புதிய இடத்தில் விழுந்து, மீண்டும் மைசீலியம் உருவாக்கி, காளானின் புதிய தலைமுறை பிறக்க உதவுகின்றன. இவ்வாறு காளான் தன் வாழ்வின் முழு சுழற்சியை மைசீலியம் → குடை → வித்துகள் → மைய்சியம் என்ற வடிவத்தில் தொடர்கிறது

எனவே, எல்லா காளான்களும் பூஞ்சைகள் தான், ஆனால் எல்லா பூஞ்சைகளும் காளான் தருவதில்லை. சில பூஞ்சைகள் காளான் இல்லாமலேயே வாழ்கின்றன. உதாரணமாக ரொட்டியில் படரும் பச்சை-வெள்ளை பூஞ்சணம் போல!

காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது. 

இதன் மூலம் காளான் சுற்றுச்சூழலின் உயிரியல் சத்துக்களை சீரமைத்து, உயிரணுக்களை பரப்பி, கரிமப் பொருட்களை அழிக்கவும் மாற்றவும் உதவுகிறது. உயிரியல் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் உபயோகத்தைக் கையாளும் செயலே காளானின் முக்கிய பங்காகும். இதன் மூலம் காளான் சுற்றுச்சூழலின் உயிரியல் சத்துக்களை சீரமைத்து, உயிரணுக்களை பரப்பி, கரிமப் பொருட்களை அழிக்கவும் மாற்றவும் உதவுகிறது. உயிரியல் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் உபயோகத்தைக் கையாளும் செயலே காளானின் முக்கிய பங்காகும்.

ஆரம்ப கால தாவரங்களின் வேர்களில் பூஞ்சைகள் குடியேறி, மிகவும் மெலிந்த நார்களைப் போன்ற ஹைபா (hyphae) என்று அழைக்கப்படும் இழைகளைக் கொண்டு பாறைகளுக்குள் ஊடுருவி, பாறைகளை உடைக்கும் அமிலங்களையும், சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் வெளியேற்றின. இவ்வாறு கிடைத்த பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை தாவரங்களுக்கு வழங்கி, பதிலுக்கு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உருவாக்கிய சர்க்கரைச் சத்துக்களைப் பெற்றன. இந்த பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் முதல் மண்ணும், நிலத்தின் முதல் சுற்றுச்சூழல் வடிவங்களும் உருவாகின.

இன்றும் அந்த பழைய கூட்டாண்மையின் வாரிசுகளை நாம் பார்க்கிறோம். மைகோரைக்சா (mycorrhizae) என்றழைக்கப்படும் பூஞ்சை–வேர் வலையமைப்புகள். மரங்களின் மற்றும் தாவரங்களின் வேர்களை இணைக்கும் இந்த பூஞ்சை நூல்கள், நுண்ணிய அடிநில இணையம் போல விரிந்து இருக்கும். இந்த வலை ஊட்டச்சத்துகள், ரசாயனச் சமிக்ஞைகள், தண்ணீர் ஆகியவை ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு செல்ல வழி செய்து, சில சமயம் “wood-wide web” என்று அழைக்கப்படும் அளவுக்கு பெரிய மற்றும் சிக்கலான வலையை உருவாக்குகிறது.

அமானுஷ்ய கதைகளிலிருந்து ஆய்வகங்கள் வரை: மருத்துவ வரலாற்றின் மைல்கற்கள்

பழங்காலத்திலிருந்து மனிதர்களுக்கு பூஞ்சைகளுடான உறவு பெரும்பாலும் உள்ளூர் அனுபவங்களாலும், கதைகளாலும் சூழப்பட்டதாக இருந்தது. எந்த காளானை சாப்பிட்டால் உயிரை காக்க முடியும், எது நஞ்சாகும், எதை உண்பதால் காட்சிகள் மாறும் போன்றவைகளை மக்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் கட்டியெழுப்பிய அறிவால் தெரிந்து கொண்டு வந்தார்கள்.பல்லாயிரம் ஆண்டுகளாக பூஞ்சைகள் வழக்காற்று மருத்துவ முறைகளில் இருந்துள்ளன. சீன மருத்துவத்தில் புகழ்பெற்ற லிங்க்ழி (Ganoderma) போன்ற காளான்கள், ஐரோப்பிய வரலாற்றில் தானியங்களில் ஒட்டிய எர்காட் (ergot) போன்ற பூஞ்சைகள் பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டன.

சைக்கிளோஸ்போரின் (cyclosporine) போன்ற நோய் எதிர்ப்பு கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின் (lovastatin) மருந்துகள், சில பூஞ்சை இனங்களிலிருந்து (Aspergillus terreus) கண்டுபிடிக்கப்பட்டவை. பல்வேறு பூஞ்சைகளிலிருந்து கிடைத்த மருந்துகள், காளான்களை நீக்கவும், புற்றுநோய் எதிர்ப்புகளுக்கும் பயன்படுகின்றன.

இந்த எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம் பூஞ்சைகள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை சமாளிக்க  உருவாக்கி வைத்திருக்கும் மூலக்கூறு நூலகமும், நாளுக்கு நாள் மருந்தியல் களஞ்சியத்தை   பெரிதாக்கிக் கொண்டே போவதும்தான்.

தற்போது ஆயிரக்கணக்கான பூஞ்சை இனங்களின் மரபணுக்களை ஆராயும் போது, அவைகளிடம் உள்ள இரண்டாம்நிலை வளர்சிதைப் பொருள்கள் (secondary metabolites), சூழலோடு போராட, தொடர்பு கொள்ள, தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள இச்செயலூக்கிகளை உருவாக்கும் பெரிய மரபணு தொகுதிகள் இருப்பது தெரிய வருகிறது. ஆய்வகத்தில் நாம் ஏற்கனவே வெளிக்கொணராத மரபணு தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய மருந்துக்கான வாயிலைத் திறக்கலாம் என்று கருதப்படுகிறது.

தாவரங்களுக்கு நிலத்தை வெல்ல உதவிய பழைய பூஞ்சைகளின் ராஜ்ஜியம், இன்று புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான மிக வலுவான எல்லையாக மாறி வருகிறது.

சமீபத்தில் மாயக்காளான் (magic mushroom) என அழைக்கப்படும் வகையைச் சேர்ந்த சைலோசைபின் (psilocybin) மூலக்கூறை உற்பத்தி செய்யும் காளான்களைப் பற்றிய கண்டுபிடிப்புகள், உயிரியல் மற்றும் மருத்துவ உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

https://www.medicalnewstoday.com/articles/308850#what-is-psilocybin

2025ஆம் ஆண்டில் வெளியான ஒரு முக்கியமான ஆய்வு, இருவேறு காளான் இனங்கள் சைலோசைபினை தனித்தனி உயிர்வேதியியல் பாதைகள் மூலம் உருவாக்குகின்றன என்பதை வெளிப்படுத்தியது. அதாவது, இந்த மூலக்கூறு ஒரே முன்னோடி இனத்திலிருந்து உருவாகாமல், இயற்கைத் தேர்வின் விளைவாக பல முறை தனித்தனியாக உருவாகியுள்ளது. இந்தப் பண்பு காளான்களுக்கு உயிரியல் நன்மையை அளிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக, பூச்சிகள் போன்ற எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க இந்தச் சேர்மம் உதவக்கூடும் என்பதே ஒரு முக்கியமான கருதுகோள்.

https://www.science.org/content/article/mind-bending-twist-magic-mushrooms-evolved-twice-independently

இந்த புரிதல் உயிரியல் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப மற்றும் மருந்தியல் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக கண்டறியப்பட்ட நொதிகளால் சைலோசைபினை செயற்கையாகவும் திறமையாகவும் உருவாக்க முடியும். உதாரணமாக Johns Hopkins University, University of South Florida, University of California San Francisco மற்றும் மருத்துவ நிறுவனங்கள், மனஅழுத்தம், அடிமைத்தனம், நரம்பியல் நோய்கள் போன்றவற்றுக்கு சைலோசைபின் சிகிச்சையின் பயனை ஆராய்ந்து வருகின்றன.

உலகளவில் ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகள் நிறைவு பெற்றோ அல்லது நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமீபத்திய முடிவுகள், இந்தச் சேர்மம் மூளையின் செயல்பாட்டை மாற்றி, மனஅழுத்தத்துடன் தொடர்புடைய எதிர்மறை சிந்தனை முறைமைகளை உடைக்க உதவுகிறது என்பதை காட்டுகின்றன. சில தரவுகள், ஒரே சிகிச்சை அமர்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் நீடிக்கும் நன்மைகள் கிடைக்கலாம் என தெரிவிக்கின்றன. எனினும், இவை அனைத்தையும் உறுதிப்படுத்த பெரிய அளவிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகின்றன.

மொத்தத்தில், காளான்கள் பற்றிய இந்த புதிய கண்டுபிடிப்புகள், இயற்கையின் பரிணாம அறிவை நமக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனநல மருத்துவத்தின் எதிர்காலத்தையும் மாற்றக்கூடிய திறன் கொண்டவை. ஒருகாலத்தில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இந்த மாயக்காளான்கள், இன்று அறிவியல் மற்றும் மருத்துவ உலகில் புதிய நம்பிக்கையாக மாறி வருகின்றன.

பூஞ்சைகள் கட்டமைக்கும் நவீனப் பொருள்கள்

இன்று காளானில் காணப்படும் மைசீலியத்தினாலான வலையமைப்பை செயல்படுத்தி புதிய பொருளை  உருவாக்க விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் முயலுகின்றனர்.

வைக்கோல், அரிசி, சோளத்தோல் போன்ற விவசாயக் கழிவுகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் குறிப்பிட்ட பூஞ்சை இனத்தை சேர்த்து, அதன் மைசீலியம் முழுவதும் அந்தப் பொருளை ஊடுருவும் வரை காத்திருந்து, சரியான தருணத்தில் வளர்ச்சியை நிறுத்தும் வகையில் உலர்த்தவோ, வெப்பப்படுத்தவோ செய்கிறார்கள்.

இந்தச் செயல்முறையின் முடிவில், மிகவும் குறைந்த எரிசக்தியில், இயற்கையாகவே ஒருங்கிணைந்த, நுரை போன்றும், உறுதியானதாகவும் இருக்கும் ஒரு உயிரி-கூட்டுக் கலவையை (bio composite) உருவாக்கிறார்கள். இதை தேவையான வடிவங்களில் வார்க்கவும், வெட்டி வடிவமைத்துப் பயன்படுத்தவும் முடியும்.

இதற்கான முன்னோடி முயற்சிகள் தற்போது ஆய்வகத்திலிருந்து வணிக உலகிற்கு சென்றுள்ளன. மைசீலியம் மூலம் தயாரிக்கப்பட்ட கட்டுப் பொருள்கள் இன்று சில தொழில்களில் ஸ்டைரோஃபோமுக்கு மாறான பசுமைப் பொருளாகக் காணப்படுகிறது. வடிவமைப்பாளர்கள் மைசீலியம் கொண்டு நாற்காலிகள், விளக்குகள், குறுகிய ஆயுள் கொண்ட கண்காட்சி அமைப்புகள் போன்றவற்றைச் செய்துள்ளனர்.

மேலும் வளர்ச்சிக் காலம், ஈரப்பதம், வெப்பநிலை, கலந்த பல பூஞ்சை இனங்கள், உடன் சேர்க்கப்படும் கனிமப் பொருட்கள் எல்லாவற்றையும் சீராகக் கட்டுப்படுத்தி, பயன்பாட்டின் தேவைக்கு ஏற்ப மைசீலியம் கலவைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.

மரத்துக்கு இணையாகவோ, பிளாஸ்டிக்கிற்கு நிகராகவோ இருக்கும் வலிமை மற்றும் உறுதியைக் கொண்ட பொருள்கள், இயல்பாகவே தீவிரத்தைக் குறைக்கும் குணம், வெப்பத் துண்டிப்பு, ஒலி சிதைவு போன்ற தொழில்நுட்ப குணங்கள், மின்கடத்தி நானோப் பொருள்கள், நிறமிகள் போன்றவை சேர்த்து, உணரும் அல்லது செயல்படும் மேற்பரப்புகளாக மாறும் புதிய வகை அமைப்புகள் என பலவிதமான பொருள்களை கட்டமைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.  

சில பரிசோதனைக் களங்களில், மைசீலியம் உயிருள்ள எலும்புக் கட்டமைப்பு போல செயல்பட்டு, அதன் மீது கால்சியம் கார்பனேட் போன்ற கனிமங்களைப் படியச் செய்து, எலும்பு அல்லது பவளப்பாறை போன்ற இருக்கும் பொருள்களையும் உருவாக்க முடியும். இவை சின்னச் சின்ன பிளவுகளைக் கூட தானாக மீட்டெடுத்து, சிதைந்த பகுதிகளை புதுப்பிக்கும் வகையான உயிர்மப்பொருள்கள் (living materials) ஆகலாம்.

இந்த புரட்சிகரமான மாற்றம், பூமியிலிருந்து கனிமங்களைத் தோண்டி எடுத்து, அதிக வெப்பத்தில் கலக்கி உருக்கி, அதிக அழுத்தத்தில் பொருளை வலுக்கட்டாயமான வடிவத்தில் அடைவதை தவிர்க்கும்.  பூஞ்சைகளோ, அதற்கு தகுந்தவாறு மெதுவாக வளர்ந்து, சூழலுக்கு ஏற்ற வலையமைப்புகளை உருவாக்குகின்றன. குறைந்த கார்பன் தடம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால்,  கட்டிடக்கலை, நகர வடிவமைப்பு துறைகளில் இதற்கான எதிர்காலம் கவர்ச்சிகரமாக உள்ளது. அதே ரீதியில், ஆடைத் துறைகளிலும், பூஞ்சை மைசீலியம் வளர்த்துத் தயாரிக்கப்படும் இந்தப் பொருட்கள், ஏற்கனவே சில முன்னோடி நவநாகரீக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.  பசுவின் தோலைப் போல் நெகிழ்வும், உறுதியும் கொண்ட மைசீலியம் தோல் என்று அழைக்கப்படும் பூஞ்சை தோல் மாற்றுகள் சந்தையில் உள்ளன. எதிர்காலத்தில் நாம் அணிவது, நமது காலணிகள், பைகள், ஜாக்கெட்டுகள் எல்லாம் பூஞ்சை விவசாயப் பண்ணைகளிலிருந்து வரக் கூடும்.

https://link.springer.com/article/10.1007/s43615-025-00539-x

பூஞ்சைகள் – சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு புதிய தொழிலாளர்கள்

இயற்கையில் பூஞ்சைகள் மரக்கட்டைகள், உலர்ந்த இலைகள், செடியின் தண்டு போன்றவற்றின் மீது படர்ந்து, சிக்கலான அமைப்புகளையும் உடைக்கும். அதே திறனால், இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சில கடினமான கழிவுகளையும் கரைக்க முடியும் என்று புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. எண்ணெய் கசிவு போன்ற சூழல்களில் உள்ள சில ஹைட்ரோகார்பன்களை உடைப்பதற்காண பூஞ்சைகள் , ஆடைத்துறை தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் சில சாயங்கள், வண்ணப்பொருள்களைச் சிதைப்பதற்காண இனங்கள்,   சில வகை பிளாஸ்டிக் கூறுகளை மெதுவாக உடைக்கும் நொதிகளைக் கொண்ட பூஞ்சைகள் போன்ற முயற்சிகள், உயிர்மறுசீரமைப்பு (mycoremediation) என்ற பெயரில் வளர்ந்து வருகின்றன. எண்ணெய் கசிவுக்குப் பிறகு மண்ணில், நீரில் பூஞ்சை படுகைகளைப் பரப்பி, அதில் உள்ள கரிம நச்சுப் பொருட்களை குறைவான தீங்கு உள்ள வடிவங்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். சில வழக்குகளில், பூஞ்சை  படுக்கைகள்  வழியாக பாயும் மழைநீர், தொழிற்சாலை நீர்வெளிகள், அதிலுள்ள நச்சு ரசாயனங்கள் குறைந்து, பின்னர் அது ஆற்றுகளுக்குள் சென்றால் சற்று பாதுகாப்பானதாக இருக்கிறது.

இது தேசங்களுக்கு, நகரங்களுக்கு, தொழிற்துறைகளுக்கு மிகவும் சிக்கனமான, தாங்கும் திறன் கொண்ட ஒரு பசுமையான சுத்திகரிப்பு தொழில்நுட்பமாக வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும், காலநிலை மாற்றம் என்ற உலகப் பிரச்சினையில் பூஞ்சைகள் மறைமுக வீரர்கள். மைகோரைக்சா பூஞ்சைகள் தாவரங்களுக்கு உணவு சத்துகளும், தண்ணீரும் தருவதால், தாவரங்கள் வெப்ப அழுத்தம், வறட்சி போன்ற கடினங்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இவ்வாறு மரத்துக்கும், காட்டிற்கும் காலநிலையை தாங்கும் சக்தியைக் கூட்டிக் கொடுக்கும் இந்த அடிநில வலைகள், நிலத்தில் எவ்வளவு கார்பன் தங்கி, எவ்வளவு வளிமண்டலத்துக்குத் திரும்புகிறது என்பதைப் பாதிக்கின்றன. எனவே, இவற்றை நாம் அறிந்து, கணக்கிட்டு, பராமரித்தால், மண் ஆரோக்கியம், மறுகாட்டுறை, கார்பன் சேமிப்பு போன்ற திட்டங்களுக்கு தேவையான நுண்ணறிவு கிடைக்கும்.

நாம் இயற்கை சார்ந்த தீர்வுகளைப்  பற்றி பேசும்போது, பெரும்பாலும் மரங்களை, ஈரநிலங்களை, கடற்கரை வனங்களை நினைக்கிறோம். ஆனால், அடிநிலத்தில் ஊதியாடும் ஒளியற்ற பாத்திரங்கள் பூஞ்சைகள். அவைகளை ஏற்ற முறையில் சமயோசிதமாகக் கையாளும் தொழில்நுட்பம், எதிர்கால சூழல் தீர்வுகளின் முக்கிய அங்கமாக மாறலாம்.

பூஞ்சை வலைப்பின்னல் கட்டமைக்கும் கணக்கிடும் முறைகள்

மைசீலிய வலைகள் சூழலிலிருந்து வரும் ரசாயன, இயற்பியல் சமிக்ஞைகளுக்கு பிரதிபலித்து வளரும்போது, அவை தகவலைச் செயலாக்குகின்றன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மைசீலியம் பரிசோதனை மழையில் வளரும்போது, முன்னால் இருக்கும் உணவு மூலத்தின் தூரம், பாதையின் தடைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, வலைப்பின்னல் தன்னால் முடிந்த அளவு சரியான வழி தேர்வு செய்யும். நுட்பங்களின் அகலம், கிளைப்பிரிவு அடர்த்தி, ஊட்டச்சத்து விநியோகம் என பல அளவுகளிலும் மாற்றம் நிகழ்கிறது. இதை சில ஆராய்ச்சியாளர்கள் தகவலைக் குறியாக்கும் ஒரு இயற்கையான அரட்டை/கணினி முறைப்படி அணுகத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சில பூஞ்சைகளின் ஹைபா நார்களில் மெதுவாக சிக்கலான மின்காந்த அலைபேச்சு நிகழ்வதைப் பதிவு செய்துள்ளனர். இது எத்தனையோ வினாடிக்கு மின்னழுத்தம் மாறும் நரம்புக் குடும்பத்துக்கு ஒப்பாக இல்லை என்றாலும், ஸ்பைக் மாதிரி மின்சடக்குகள் அங்கு இருக்கின்றன. அவை, அந்தப் பூஞ்சை வலைப்பின்னலில் எங்கு உணவு உள்ளது, எங்கு அச்சுறுத்தல் உள்ளது, எங்கு வளர்ச்சி வழிநீர்ப்பு வேண்டுமென்பதைப் பற்றிய தகவல்களை ஒரு அளவுக்குப் பகிரும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மரபுசாரா கணினிவியல் துறையில் சிலரை நேரடியாகப் பூஞ்சை மைசீலியத்தை கணினி மாதிரி பயன்படுத்தத் தூண்டியுள்ளது. சமிக்ஞைகளைப் படிப்பதற்காக மைசீலியத்தில் மின்தகடுகள் (electrodes) பொருத்தி, ஈரப்பதம், ரசாயனங்கள், வெப்பம் போன்றவற்றை மாற்றி உள்ளீடுகளை அளிக்கின்றனர். மைசீலியத்தில் ஏற்படும் மின்சமிக்ஞை மாற்றங்களை, நுண்ணறிவு முறைமைகள், வடிவ அங்கீகாரத்தின் மாதிரிகள் மூலம் வாசித்து, தர்க்க வாயில்கள் (logic gates) போல் நடத்த முயற்சிக்கின்றனர்.

இவை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. பூஞ்சை கணினிகள் மெதுவாக செயல்பட்டாலும், கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, மீண்டும் மீண்டும் ஒரே முடிவைப் பெறுவது கடினம். ஆனாலும் இவர்களின் வழி நாம் பார்க்கும் ஒரு புதிய உலகம்: வளர்ச்சி, பரிமாற்றம், உடல் அமைப்பின் மாற்றமே தகவல் செயலாக்கமாக இருக்கும், உயிருடன் கூடிய கணினி அமைப்புகள்.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் நரம்பியல் வலைப்பின்னல் என்று அழைத்தாலும் அது மூளை மாதிரி தோற்றம் கொண்ட சமன்பாடுகள் மட்டுமே; உண்மையில் உயிர்மூளை இல்லை. பூஞ்சை மைசீலியத்தின் அமைப்பு தானே வளரும், தானே மெதுவாகத் திருத்திக் கொள்ளும், அதன் உடல் அமைப்பே நினைவாகவும், கற்றலாகவும் நடக்கிறது. இந்த எண்ணம் இன்று வேறு பல ஆராய்ச்சிகளோடும் தொடர்பு கொண்டுள்ளது:

பசுமையான கட்டிடங்களில், மண்ணில், வன சூழல்களில் வளர்த்துக் கொள்ளும் மைசீலிய வலைப்பின்னல்கள் மூலமாக உணர்தல் நடக்கலாம். அந்த உயிருள்ள உணரிகளின் பதில்களை செயற்கை நுண்ணறிவு முறைமைகளை வாசித்து, கட்டிடம் எப்போது பழுது பார்க்க வேண்டும், எந்த இடத்தில் ஈரப்பதம் அதிகம், எந்தப் பகுதியில் மருந்தளிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது போல உயிரியல்-டிஜிட்டல் கூட்டாண்மை உருவாகலாம்.

இவ்வாறு பார்க்கும் போது, பூஞ்சைகள் நேரடியாய் கணினியாக இல்லாவிட்டாலும், அவர்கள் கற்றுக் கொடுக்கும் வலைப்பின்னல் புதிய கட்டமைப்புகளுக்கு வழி காட்டியாக இருக்கும்.

https://www.sciencedaily.com/releases/2025/10/251026021724.htm

பூஞ்சையியலில் செயற்கை நுண்ணறிவு 

நவீன பூஞ்சை அறிவியலில் ஆயிரக்கணக்கான இனங்களின் மரபணுத்தொகுப்புகள் ஒப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. மண்ணில், கடலில், தாவர வேர்களில், நமது உடலின் உள்ளே வாழும் பூஞ்சைகள் எல்லாம் டிஎன்ஏ வரிசைமுறைப்படுத்தல் மூலம் வரைபடமாக்கப்படுகின்றன. உயர் தெளிவுத்திறன் நுண்ணோக்கிகள் மூன்று பரிமாணங்களில் வளர்கிற மைசீலியத்தின் ஒவ்வொரு கிளையையும், ஒவ்வொரு முனையையும் பதிவு செய்யப்படுகிறது.

இந்த அளவுக்கு சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட தரவைப் புரிந்துகொள்ள, இயந்திர கற்றல் மாதிரிகள் சில நூற்றுக்கணக்கான பூஞ்சை மரபணுத்தொகுப்புகளில் எவை மருந்து மாதிரி பேசும் பழக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று கணிக்கின்றன. இலைக்கும், மரத்துக்கும், பாக்டீரியாவுக்கும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் உருவாகியுள்ள இந்த ரசாயனங்கள், நம் மருத்துவத்திற்கு மருந்தாக மாறலாம். இவ்விடத்தில் செயற்கை நுண்ணறிவானது எந்த வகையான தொகுப்பை ஆய்வகத்தில் இயக்கிப் பார்க்க வேண்டும் என்று முன்மொழிகிறது. இந்த முறையில் புதிய நுண்ணுயிர்க்கொல்லி, புதிய புற்று மருந்து போன்றவற்றை விரைவில் தேட முடியும்.

சூழலியல் ஆராய்ச்சியில், பூஞ்சை சமூகங்கள் (fungal communities) காலநிலையுடன், மண்ணுடன், தாவரங்களுடன் சேர்ந்து எப்படி மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் ஏ.ஐ பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக எந்த மண்ணில் எந்த பூஞ்சை இனங்கள் இருந்தால், அது தண்ணீர் தாங்கும் திறனை அதிகரிக்கும்.  எந்த தாவர–பூஞ்சை கூட்டுக்குள் இருக்கும் தொகுப்புகள் வறட்சி, வெப்ப உயர்வு போன்ற தாக்கங்களுக்கு அதிகம் எதிர்த்து நிற்கும். பூஞ்சை வலைப்பின்னல்கள் கார்பன் நிலையேற்றத்தில் எவ்வளவு பங்கு வகிக்கின்றன? அவை குலைந்தால் என்ன ஆகும் என்பது போன்ற

புள்ளிவிவரங்களை ஒருங்கிணைத்து, அடிநில பூஞ்சை உலகம், மேல்நில இயற்கை காட்சி ஆகியவை எப்படி ஒன்றையொன்று அமைத்துக்கொள்கின்றன என்பதை அறியலாம்.

சிக்கல்கள், அபாயங்கள், நெறிமுறைகள்

இன்றைய பூஞ்சைகளின் ஆய்வுகள் பல சிக்கல்கள், எச்சரிக்கைகளையும் முன் வைக்கிறது.

முதலில், அனைத்து பூஞ்சைகளும் பயன்பாட்டுக்கு ஒப்பாகாது. சில இனங்கள், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஆபத்தானவையாக ஆகலாம். உதாரணமாக Candida auris போன்ற  multi drug resistant fungal infections மருத்துவமனைகளில் பெரிய சவாலாகிவிட்டது. இரண்டாவதாக, பூஞ்சைகளின் சூழலியல் நடத்தை மிகவும் சிக்கலானது. பூஞ்சைவழிச் சீராக்கம், மண் பொறியியல் போன்ற திட்டங்களில் புது பூஞ்சை இனங்களை வெளியில் விடும்போது, அந்த சூழலின் சொந்த இனங்களோடு எப்படி உறவாடும் என்பதில் நிச்சயமற்ற தன்மை அதிகம் உள்ளது. தவறான வகை பூஞ்சை அதிகமாக பரவினால், அது உள்ளூர் பல்லுயிரை  மிகவும் பாதிக்கும்.

தற்போது காளான்களைப் பார்க்கும் நவீன கண்ணோட்டம் மூன்று பெரிய தளங்களில் மாறியுள்ளது.  முதலில் அடிப்படை உயிரியலில், இவைகள் தாவரம் அல்ல, ஒளிச்சேர்க்கை செய்ய முடியாத ஹெடரோட்ரோப் உயிரினம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தாவரங்களிலிருந்து முழுதாய் பிரிக்கப்பட்ட ஒன்றான பூஞ்சை தனி ராஜ்யமாகவே பார்க்கப்படுகிறது. நியூரோஸ்போரா (Neurospora), ஏஸ்பெர்ஜில்லஸ்(Aspergillus), ஈஸ்ட் போன்றவை போல், காளான்களும்  மரபணு போன்ற அடிப்படை உயிரியல் கோட்பாடுகள் வழியாக உருவாகியது என்பதால், நவீன அணு உயிரியல், மரபணுத்தொகுதியியல் வளர்ச்சியில் தனி இடத்தைப்  பெற்றுள்ளது.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் இயக்கங்கள், கார்பன் சுழற்சி, புவி புனரமைப்பு போன்றவற்றில் அவற்றின் மையப் பங்கு.  

மூன்றாவதாக, மனித சமூகத்துக்கு வழங்கும் புதிய பயன்பாடுகள், உதாரணமாக மருத்துவம், தொழில், பொருட்கள், உணவு ஆகியவற்றில். இன்று நவீன கருவிகள் மூலம், நூற்றுக்கணக்கான காளான் இனங்களின்  மரபணுத்தொகை வரிசை கிடைக்கிறது. இதனால் மண், தாவரங்கள், கடல்சூழல், மனித குடல் போன்றவற்றில் காணப்படும் நுண்ணுயிர்களில் மறைந்திருக்கும் பூஞ்சைகளின் பல்வகைமை தெரிய வந்துள்ளது.

CRISPR-Cas9, தொகுப்பு ஜீவவியல் போன்ற கருவிகள் கலாச்சாரத்தில் வளராத காளான்களின் மரபணுக் குழுக்களை வேறு நுண்ணுயிரிகளில் வெளிப்படுத்தி புதிய இயற்கை மூலக்கூறுகளைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்திய மருத்துவ பூஞ்சையியல்  அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு,  நோயறிவு வழிமுறைகள், இடர் மாதிரிகள் ஆகியவை முக்கிய பேசும் பொருளாக ஆகி, காளான் தொற்றுகளை அறிந்து கொள்வதிலும், கையாள்வதிலும் இயந்திர கற்றல் பெரும் பங்கு வகிக்கிறது.

மறைந்த நாயகர்களாகக் காணப்பட்ட காளான்கள் கரிமப் பொருள்களை அழித்து, கார்பன்-நைட்ரஜன் சுழற்சியை இயக்கி, மண்ணின் அமைப்பு, ஈரப்பதம், வளம், கார்பன் சேமிப்பு ஆகியவற்றை நிர்னயிக்கும் முக்கிய தளமாகக் கருதப்படுகிறது. தாவர வேர்களுடன் உருவாகும் மைக்கோரைசா தொடர்புகள் தாவர வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மண் கார்பன் தேக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு தருகின்றன என சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பிளாஸ்டிக், பெட்ரோலிய நச்சுகள், மருந்து உறைவு போன்ற மாசுகளை உடைத்தொழிக்கும் நுண்தணிப்பை (micromitigation) வளர்ந்து வரும் துறையாக மாற்றியுள்ளது.

பெனிசிலின் முதல் நவீன இம்மியூனோஸப்பிரசன்ட், கொலஸ்ட்ரால் மருந்துகள் வரை பல முக்கிய மருந்துகள் காளான்களிலிருந்து வந்தவை.‌ கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரம் புதிய இரண்டாம் நிலை புதிய காளான் மூலக்கூறுகள் இந்த ரசாயன பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்பதை உணர்த்துகிறது. இதே நேரத்தில், ஆக்கிரமிப்பு காளான் இனங்களின் தொற்றுகளில் மருந்து எதிர்ப்பு, காலநிலை மாற்றத்தால் சில நோய்க்காளான் புவியியல் பரவல் அதிகரித்தல் போன்றவை நவீன மருத்துவத்திற்கு பெரும் சவாலாகக் கருதப்படுகின்றன.

இத்தரவுகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் போது, காளான்கள்  சாதாரண காய்கறி அல்லது பூஞ்சை நோய் என்பதைத் தாண்டி, இன்றைய நவீன அறிவியலில் புது மருந்துகள், பசுமை தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் புனரமைப்பு, வாழ்வியல் தத்துவம் ஆகியவற்றின் மையச் சின்னமாக தோன்றிக்கொண்டிருக்கின்றன.

இன்று காளான்கள் நமக்கு புதிய கண்ணோட்டத்தை தெரிவிக்கிறது.  வேகத்தை, மையக் கட்டுப்பாட்டை, தெளிவான எல்லைகளை மதிக்கும் உலகத்தில், மெதுவாக எங்கும் பரவும் இந்த நுண்ணுயிர் கள் எதிர் திசையில் செல்கிற மாதிரி தோன்றுகிறது.  இரவில் திடீரென மண்ணில் இருந்து மேலே முளைக்கும் காளான்களாகத் தோன்றுவதற்கு முன் பல ஆண்டுகளாக அதன் இழைகள் மரத்தூள்களுக்குள் நுணுக்கமாகப் பரவி இருந்திருக்கலாம். இதன் இலக்கணங்களைப் புரிந்து கொள்வதற்கு, இன்று பல நவீன கருவிகளை உருவாக்கியும், உபயோகித்தும் வருகிறோம். மைசீலியம் பொருள்கள், மைக்காரிசல் வலைப்பின்னல்கள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும்போது, அதன் வெறும் பயன்பாட்டை அறிவது மட்டுமல்ல, அதன் நுண்ணறிவு செயல்படுகிற முறையையும் படிக்கிறோம். இது, அழிவு, மீண்டும் தோற்றம் என்ற இரண்டையும் ஒன்றாகக் கூட்டி நினைக்கக் கற்றுக்கொடுக்கிறது. மேலும் தனிநபர் உயிர்வாழ்தல், பகிரப்படும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை கடந்து ஒன்றுபட்ட சிந்தனையைத் தருகிறது. நமது முன்னோர்கள் காளான்களைப் பயன்படுத்தி மனித வரலாற்றை திசைமாறச் செய்தனர் என்கிற சமீபத்திய அறிவியல் தரவுகளில் எழும் வாதங்களைத் தாண்டி, நாம் நினைப்பதை விட நம்மைத் தவிர பல சிக்கலான உயிரனங்கள் இருக்கின்றன என்று காட்டுகின்றன.  அனைவருக்கும் மூளைகள் தனித்தனி அல்ல; சூழல், உணவு,  நுண்ணுயிர்க்கட்டு, பூஞ்சை வலையமைப்புகள், இவை எல்லாவற்றுடனும் உறவுகளால் சூழப்பட்ட உலகில் தான் வாழ்கிறோம். காடுகளின் தரையில், வயல்களில், ஆய்வுக் கூடங்களில் பரவி இருக்கும் மைசீலியம் நார்களைப் பின்தொடரும்போது, மனித வாழ்வு, அமைதியாகவும், அடக்கமாகவும் பூஞ்சை செய்து வரும் வேலைகளின் மீது எப்படி சார்ந்திருக்கிறது என்பதைக் காண ஆரம்பிக்கிறோம்.

அடுத்த முறை நாம் எங்காவது ஒரு காளானை மண் மேலோ அல்லது மரத்திலோ  குடை போன்ற தலைதனை நிமிர்த்திக் கொண்டு நம்மைப் பார்க்கும்போது, அதை வெறுமனே காயாகவோ அல்லது அலங்காரப் பொருளாகவோ பார்க்காமல் ஒரு நொடியாவது நின்று சிந்திக்க வேண்டும். இது நிலத்தடியில் மனிதன் தோன்றிய காலத்திற்கு முன்பிருந்தே எழுதிக் கொண்டிருக்கும் நீண்ட காவியத்தின் சிறு புள்ளி. அது தனது உயிர் வாழ்தல், கண்டுபிடிப்பு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களுக்கு இடையிலான கணிப்பிட முடியாத கூட்டாண்மைகள் பற்றி கூறிக்கொண்டிருக்கிறது. அதை முழுமையாக படிக்க நமக்கு இன்னும் பல கருவிகளும், செயற்கை நுண்ணறிவுகளும் தேவைப்படுகிறது. பூஞ்சைகளின் விசித்திரமான புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளத் துணிவான கதைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் தேவைப்படும்.

https://www.newscientist.com/article/2516720-how-our-ancestors-used-mushrooms-to-change-the-course-of-human-history/


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.