காஞ்சி பூசூடா உமையாள் படலம்

கிழவி உமையாள் கெடுபிடியான ஆள்போல. இரண்டு நாள் முன்பு தலைவிரி கோலமாக காலையில் பத்துமணி பொழுதில் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தாள், முதலில் இரு காவலரை பார்த்து முறையிட்டாள் பிறகு எழுத்தரிடம் -யாருமே அவள் கோரிக்கை ஏற்காமல் விரட்டிவிட்டனர். வீட்டிற்கு செல்லாமல் கொண்டுவந்த கட்டுச்சோற்றை தின்னுவிட்டு அந்த சுற்றத்திலேயே சுற்றித்திரிந்து அடுத்தநாளும் பத்துமணிக்கு காவல் நிலையம் வந்து தன்னுடைய கோரிக்கையை வைத்தும் யாரும் பொருட்படுத்தவில்லை- என்ன சேதி, என்ன ஊர் என்று ஏதாவது சொன்னால் ஆகவேண்டிய முன்னேற்பாடு செய்யலாம், அவள் கூற்றுதான் முழுதும் அரைகுறையாச்சே. “ஏன் உசுரே போயிடும்பா நீங்க மட்டும் வரலயினா.” என்றாள் முதன்மை காவலரிடம்; “தலை மூழ்கிபோற வேலைதான்பா, நல்லா மகராசனா இருப்ப, யாராவது ஒரு பயல கூட அனுப்பிவிடுபா.” என்றாள் துணை ஆய்வாளரிடம். அவளும் யாராவது கூட வாங்களேன் தம்பி என்று ஒருவர் விடாமல் காவல் நிலையத்தில் கேட்டு கண்ணை கசக்கியெடுத்தாள், எதுக்கும் அசைந்துக்கொடுக்கபோவதில்லை என்று தெரியவரவும் நுழைவாயிலிலேயே நின்றவள் பசியை ஆற்ற என்ன செய்வதென அறியாது கடைகடையாக நடந்தாள். முதல்நாள் கொண்டுவந்த கட்டுசோறு தூக்கு கொடகொடவென ஆட்டம்காட்டி ஊரையே வலம் வந்தது. அவளது தோலோ குழைந்து நெழிந்து தொங்கி ஞாயிறிடமிருந்து நான் காக்கிறேன் என்றுகூறி வழக்கத்தை விட கருப்பை கூட்டிக்கொண்டது. கூனி நடந்தாலும் கம்பு துணை நாடாதவள் உமையாள்- இன்னும் நான் இரண்டடி தாராளமாக எடுத்துவைப்பேன் என்பதுபோல அவளது வத்தல் உடம்பு முன்சென்றது. கூட்டமாக இருக்கும் இடத்தையெல்லாம் மூன்று சுற்று சுற்றியிருப்பாள். இரண்டு நாள் தங்குவோமென எதிர்பார்க்கவேயில்லை அவள், முன்கூட்டியே கணித்திருந்தால் எப்படியாவது காசு திரட்டி வந்திருப்பாள். தற்போது முந்தானையில் முடிந்துவைத்த பத்து ரூபாயே மிச்சம்.

பேருந்து நிலையத்தின் ஓரத்து கொட்டகையில் சிவப்பு அங்கியுடன் நிற்கிறாரே டீகடை காரர்- மனிதரேயில்லை அவரெல்லாம், முந்தியநாள் ஒருவன் காசு தராமல் ஏமாற்றி சென்றதற்கு இப்போதுவரையுமா கடுகடுவென சாடுவார். உமையாளே பத்து ரூபாய்தான் வைத்துள்ளாள் பதினைந்து ரூபாய் தந்தாலொழிய டீ கிடையாது பாதையை மறைக்காதே தள்ளு என்றால் அவள் என்ன செய்யவாள், முதலில் கேட்ட கடைக்காரரே இப்படி வப்புவப்பென பிடுங்கினால் இனி வேறுகடைக்குபோய் கேட்க தோன்றுமா. கிழவிக்கே எட்டாண்டு கழித்து கடையில் டீ குடிக்க தோன்றியிருக்கு இப்போதுபோய் விலையை ஏற்றினால் நாதியற்ற கிழவி யாரிடம் இந்த கொடுமையை எடுத்துரைக்கும்.  

பக்கத்து மளிகை கடைக்குள் நுழைந்து பத்து ரூபாய்க்கு ஏதும் ரொட்டியிருக்குமா என்று வினவினாள். கடைக்காரர் மேரியிருக்கு மில்க்கு இருக்கு சாக்குலேட்டில் ஒன்றிருக்கென அடுக்கினார்- கிழவி அயர்ந்துபோய் எதை கைகாட்டுவதென விழித்தாள். கடைக்காரன் அடுத்த வாடிக்கையாளரை பார்க்கவே போய்விட்டான் அவளுக்கு முடிவெடுக்க தெரியவில்லை. இது சரிபட்டுவராது நமக்கு தெரிந்த ஏதாவது வாங்குவோமே என்று முறுக்கு, அதிரசம் எங்கேவென தேடி ஆட்டுக்கால் கேக்கை கண்டுபிடித்தாள்- கை அதை நோக்கி நீள கடைக்காரன் அஃது ஒன்று பத்து என்றான்- அவன் கூறிய தொகைக்கு ஆட்டுக்கால் கேக்கை பேசி முடிப்பதற்குள், ஒருநொடி திரும்பினாள். கல்லூரி மாணவிகள் பஞ்சுமிட்டாய் வாங்கி தின்றுகொண்டிருந்தனர். வறண்ட நாக்கு நமநமத்து உமிழ்நீர் எட்டிபார்க்கவும் மளிகை கடையிலிருந்து வெளியேறி பஞ்சுமிட்டாய் காரனிடம் பத்து ரூபாய் நீட்டி இரண்டு பஞ்சு மிட்டாய் வாங்கி ஒன்றை பிரித்து பைய தின்றாள். நல்லவேளை ஆட்டுக்கால் வாங்கவில்லை, வாங்கியிருந்தாள் ஒன்றை பிரித்து தின்றதோடு அடுத்தது என்னதென வாய் ஏங்கியிருக்கும். தற்போது பாருங்கள் அவள் கையில் ஒன்று தீர்ந்தால் மற்றொன்று இருக்கு- வாயில் போட்டதும் கரைந்துபோகும்தான்; மெல்லபோட்டு மெல்ல கரைப்பாள் கிழவி.

இரவு துயிலாட பேருந்து நிலையத்தையே தேர்ந்தெடுத்தாள். குருதி தட்டுப்பாடால் அவளை கொசுக்களும் தீண்ட மறுத்தன- சென்ற ஆண்டு புதுப்பிக்கப்பட்ட தளமது அதற்கு மேலும் அழகூட்ட மக்கள் கக்கி வரைந்த ஆரஞ்சு, பச்சை சித்திரங்கள் கொடுவாயாட்டம் ஆங்காங்கே பளபளத்தன. சித்திரங்கள் எதன்மீதும் பட்டுவிடாமல் தனது கூன் முதுகை நன்கு சுருட்டி புடவையை வளைத்து போர்த்தி படுத்திருந்தாள் கிழவி. வயிறு நிறைய உண்டதால் தூக்கமும் சொக்கியது- பஞ்சுமிட்டாய்க்கு வயிறு நிறையவில்லை, மாலைபோல தெருக்களில் நடக்கையில் ஒருவீட்டுத் திண்ணையில் தண்ணிக்கு உட்கார்ந்து கதையடிக்க தொடங்கி அப்படியே வயிறுமுட்ட உண்டாள். உமையாளிடம் அந்த வீட்டுக்காரி உன்னை காவலர் எவரும் பெரியோருக்கான மாண்புடன் நடத்தவில்லையென இரங்கினாள், பின் அவளுக்கும் நகை காணாமல்போனபோது இவ்வாறே நடத்தினர் என்று புலம்பி தீர்த்தாள். உமையாளோ தான் அவள் புலம்பலை கேட்டால் ஏதாவது நன்மை வந்து சேரும், அதில் ஏதாவது தனக்கு நாளை காவல் நிலையத்தில் உதவும் என்றெண்ணி உன்னிப்பாக வாய் பார்த்தாள்- நல்லவேளை வயிறாவது நிரம்பியது.

ஏப்ரல் இரவுக்கு உமையாளும் அவளது கணவனும் வாசலில் கட்டில்போட்டு அரவணைத்து மிதந்துகொண்டே பள்ளிகொள்வதை சிந்தித்து அசைபோட்டாள்- மூன்று துளி கண்ணீர் மட்டும் இடது கண்ணில் வடிந்தது. கணவன் இறந்துவிட்டாரே என்றெல்லாம் வருந்தவில்லை, எந்த கடினத்தையும் அளிக்காமல் போய்சேர்ந்தவர், அவருடன் வாழ்ந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் போதுமான முழுமையை தந்தது, ஒரு துணுக்கு வருத்தமில்லையென உமையாளே விளிப்பாள். கண்ணை துடைத்து கலகத்துக்கு அவளே விடை தேடிக்கொண்டாள், “எப்படி துணி தொவைச்சு, எப்படி வீடு கூட்டி, எவ்வளவு தூய்மையா வாழ்ந்தவ நா! வீட்டுல மத்தவங்கள என் துணிமணியில கைவைக்கவிட்டிருப்பேனா, நானே கைபட தொவைச்சாதான் அதை தொடுவேன்- இப்போ எங்க தொவைக்கமுடியுது, வாடையடிக்கிற புடவைய மூனுநாளா கட்டுறேன்; குடிதண்ணி தூக்கமுடியாம செலவுத்தண்ணியை சூடுபண்ணி குடிக்கிறேன்.”

கிழவி ஓரமாகவே துயில்கொண்டாள், இருப்பினும் வழக்கமாக பத்துபேர் தூங்கும் இடத்தில் பதினொராவது ஆளாக படுக்கவும் எதிரே நின்ற வேப்பமரத்தில் விளையாடிய இரவாடி தேவாங்குக்கே யாரிவள், என்ன புதிதாய் படுதே இடமே என்றெல்லாம் ஐயம் எழுந்தது, பேருந்துநிலையத்திலேயை மச்சானுக்கு திறன்பேசி கடை வைத்துக்கொடுத்த துணை ஆய்வாளருக்கு ஐயுறாமலாபோகும். காவலர் ஒருவர் கிட்டபோய் பார்த்துவிட்டுவந்து அவரிடம் சொன்னார், “ஐயா, இரண்டுநாளா காலையில நம்மலபோட்டு படுத்திய கிழவிதான் சுருட்டிகிட்டு கிடக்கு.”

“ஏய்! கொஞ்சமாவது இரக்கப்படுங்கைய்யா.” என்றுகூறி துணை ஆய்வாளரும் அருகில் சென்று நோட்டமிட்டார். உமையாள் ஒருக்கணித்து நன்றாக உறங்கினாள். இத்தனைநாள் இதே பேருந்து நிலையத்தில் எத்தனையோ முறை வலம்வந்ததும் கரையாத நெஞ்சு இன்றைக்கு காலையில் கெஞ்சிவிட்டு வந்த கிழவி ஒற்றையாக சாவக்கிடப்பதுபோல் தரையில் படுத்ததை கண்டதும் துணை ஆய்வாளருக்கு உள்ளமே குலைந்தது. “நல்ல கெடுபிடியான ஆளுப்பா” என்றார் அருகிலிருந்த இரு காவலரிடமும். “நாளைக்கு ஐயாகிட்ட பேசி கிழவிக்கு ஒரு ஆள புடிச்சு கொடுத்துரலாம், புதுசா சேர்ந்த மணிபயல போக சொல்லிருவோம். ஐயாவும் ஒத்துக்கிறுவாரு- என்ன சொல்லுறிங்க?”

கூடவந்த இரு காவலரும் ஆமாபோட்டனர். திட்டமிட்டபடியே அடுத்தநாள் கிழவிக்கு ஆள் கிடைத்ததும் அவளது கால்கள் துடியாய் துடித்தது அங்கிருந்து புறப்பட; மிக விரைவாக அங்குமிங்கும் நடந்தாள். மணிகண்டன் தன்னுடைய ‘அப்பாச்சி’ இருசக்கரவாகனத்தில் அங்குவந்த சேர்ந்தான். அவனை கண்டதும் கிழவிக்கு முகம் வாடிப்போனது- வந்தவன் நல்ல உயரம், ஆனால் கட்டையல்ல; அகவை இருப்பத்தியெட்டு இருக்கும், ஆனால், பார்க்க அப்படி தோன்றாது பதினெட்டுபோல தென்படுவான்- செய்தி தெரிவிக்கப்பட்டதும் மணிகண்டன் தானும் ஒரு திட்டமிட்டான், விரைவாக வேலையை முடுத்து காதலியுடன் சிறிது பொழுதை போக்கவேண்டுமென. காதலிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து “சாயங்காலம் நண்பர்களோட ஏதோ காலிவுட் படத்துக்கு போகிறதா சொன்ன, எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போட்ரு, வேலையை வெடுக்குனு முடிச்சுட்டு வந்துர்றேன்” என்றான். எதிரே ஓர் அமைதியான செயலிடத்திலுருந்து கிசுகிசுப்பில் மறுமொழி வந்தது, “அப்போ ஆறுமணிக்குள்ள காரைக்குடி வந்திடு” என்று.

காலை பதினொரு மணி இருக்கும் திரும்பிகூட பார்க்காமல் உமையாளை பின் இருக்கையில் உட்காரவைத்து அவளது தூக்கை இருக்கையின் ஓரமிருந்த கொக்கியில் மாட்டி புறப்பட்டு ஒரு புறவழிச்சாலையில் நுழைந்தான், அங்கிருந்து காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலை முன் நிறுத்தி உமையாளின் மறுமொழிக்கு காத்திருத்தான். அவளுக்கு தன்பேச்சை வேண்டியே நிற்கிறான் என்று அறிந்துக்கொள்ளவே நொடிகள் எடுத்தது. “வரயில இந்த வழியா வரலயேப்பா! இந்தரே தெரியிதே அந்தநாடி போ நீ, சொல்லுறேன்” என்றாள். சிறு தொலைவு சென்று இதுவா ஆயா என்று முதல்முதலாக கண்ணாடியில் உமையாளின் முகத்தை தெளிவாக கண்டு வினவினான்.

“ம்… இதுதான்போலயேபா. நீ இதுவழியாவே போயேன். நான் சொல்லுறேன்.”

அவள் கண்டரமாணிக்கம் வழியை காண்பித்ததும் அவனுக்கு முகம் சிறிது அலுத்துப்போனது- சிந்தையில் காரைக்குடிவழி தெள்ளுவழியென ஒளித்தது. “ஊர் என்ன ஆயா.”

அவள் காற்றுக்கு இதமாக கன்னம்காட்டி மரங்களையும் கடைகளையும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள். மீண்டும் அவன் ஊர் என்னவென கேட்கவும். “நீபோபா. நானே சொல்லுறேன்” என்றாள்- மறுமொழியாக மணி பெருமூச்செறிந்தான்.

கிழவி ஒருபக்கமாக உட்கார்ந்து உரசும்படியிருந்தது அவனுக்கு நெருடியது- சிடுமூஞ்சி மணிகண்டன் உரையாடுவதும் அரிது, நகைப்பதும் அரிது; எக்குதப்பாய் தெரியாதவர் பேச்சுக்கொடுத்தாலே உறண்டையிழுப்பதுபோல எடுத்துக்கொள்வான், உமையாள் தானாக கதைத்தது போதாதென செவிக்கு நெருக்கமாகவும் முகத்தை வைத்திருந்தாள்.

“இரண்டு நாளா நான் உன்னைய எதுவும் பார்த்தேனாபா, அவ்வளவுபேருகிட்ட கேட்டதுக்கு மாத்தா உன்கிட்ட மொதவே கேட்ருக்கனும்- நல்லவேளைப்பா உன் வண்டியை கொண்டுவந்த அது இல்லாட்டி கடுசாகிருக்கும்.”

தான் பேசுவது அவனுக்கு ஒழுங்காக காதை எட்டவில்லைபோல என முடிவுக்கு வந்து இன்னும் அருகே நகர்ந்து காதோரம் பேசினாள். “கையில வச்சிருந்த காசு பூராம் காலி, வீட்டுல சுளகுக்கு அடியில கெடுக்கு எடுத்துட்டு வராம விட்டுடேன், என் தப்புதான்பா, தவிச்சவாய்க்கு தண்ணினா மூத்தரத்த பேஞ்சு குடிக்கசொல்லுவானுங்க கடைக்காரனுங்க.”

திடீரென வண்டியை நிறுத்திவிட்டான். கிழவி விழித்தாள். “வாய மூடிக்கிட்டு வாங்கமா சும்மா சும்மா பேசாம. வழியமட்டும் சொல்லுங்க” என்றதுமே கிழவியின் வாய் அடங்கியது சிறிது நேரம்.

நல்ல வெயில், கிரண்டை முடியை பொசுக்கிடும் சூட்டை சாலை கக்கியது. வண்டியை மெதுவாகவே முடுக்கினான், ஆங்காங்கே தென்பட்ட புளியமரங்கள் நன்கு ஆட்டம் காட்டியது. முன் இருக்கையில் உட்கார்ந்து மணிகண்டன் பார்வையில் பார்த்தோமெனில் வழி எங்கும் மஞ்சளாக தென்படும், சாலையின் ஓரம் மட்டும் தோண்டப்பட்ட பள்ளங்களில் செம்மண் ஒளி. போகும் வழி எங்கும் ஒரு திருப்பத்தில்கூட மேடில்லை, பள்ளமில்லை, முழுதும் வெட்டவெளி; தீண்டாமை போல மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தள்ளியே நின்றன. பிறகு நான்கே மரங்களை ஆட்கொண்டு பெரிய கம்மாய் இருந்தது, அதையும் கடந்து சென்றான். வழியால் மருளி அவன் எந்த பேச்சுமே எடுக்காமல் ஓட்டிக்கொண்டிருந்தான்- திடீரென, இந்தவழியாக போபா என்றதும் படாரென வண்டியை நிறுத்தி மெய்யுணர்ந்து திருப்பினான்.

“பசி வயித்த கிள்ளுது ஆயா, காலையில எதுவுமே தின்காம வந்துட்டேன்.”

“இல்லப்பா, இன்னும் கொஞ்சம் தூரம்போனா ஊரு வந்திரும்ல.” 

“தலையே சுற்றுது ஆயா.”

நானும்தான்பா எதுவும் தின்கவில்லை என்று சொல்லலாமென வாயெடுத்தாள். பிறகு வந்தவனும் பாராமுகமாக நடந்துக்கொள்ளக்கூடமென சிந்தித்து தவிர்த்தாள்.

அது திறந்தவெளியில் கொட்டகைபோட்டு நடத்திவந்த கடை, மணி இரண்டுவேளைக்கும் சேர்த்து சோறு தின்றான். உமையாள் வெளியில் மரத்தின் நிழலில், வாயைகூட பார்க்காமல் நின்று புகைந்தாள். “கின்னிக்கோழியோ தின்னிக்கோழியோ நான் என்ன கண்டேன்.” நினைத்துக்கொண்டே அவனை நோக்கி சென்று அவனுக்கு வைத்த தண்ணீரை எடுத்து குடித்தாள். கடையில் ஈ காகம் இல்லை.

“ஏன்பா நீ எந்த ஊரு?”

“காரைக்குடி ஆயா.” வாயிலிருந்த உணவு சிந்தாமல் விடையளித்தான். வீராப்பாக ஒருபுறமாக சாய்ந்துக்கொண்டான், அப்போதுதான் உடம்பிலுள்ள எந்த தோலுக்கும் நோகாமல் நெருடல்கொடுக்காமல் இருக்கும். எதிரே நின்றவள்மீது பொட்டு பார்வையில்லை, அஃது உன் பேச்சை பொருட்படுத்தவில்லை என்ற நோக்கில்தான் செய்தான்.

“வெண்டக்கா மண்டி- மொச்சப்பயரு போட்டுவச்சிருந்தா நல்லாருந்திருக்குமே, உருளைக்கிழங்கு வருவலு, பொரிச்ச கீரை, அது என்னது ஒழுங்கா அம்படலயே.”

“அது பரங்கிக்காய் ஆத்தா. இதோ, இது நீங்க கேட்ட கலக்கி.” சொன்னது கடைக்காரன் பெரியகருப்பன். “ஆத்தா என்ன சொல்லுது, மண்டிக்கு மொச்சப்பயரு போடணும்குதா?”

“தனி டேசுட்டு கூட்டிக்கொடுக்கும். நீ போட்டுபாரு தம்பி ஒருதடவை.”

“தெரியும் தாயி, நான் இருக்குறத வச்சுதான் கடைய ஓட்டிக்கிட்ருக்கேன், உங்கள மாதிரி இரண்டுபேர் எப்பயாவது வர்ரதே அறிது.”

“இருக்கிறது கிடக்கிறது வைச்சு நிரம்ப செய்யலாம்பா. கழிச்சி ஆத்தா கூடயிருப்பா நீ ஒடைஞ்சுபோவாத.”

“எங்க ஆத்தா, நாலு இடத்துல பார்த்தத கேட்டத வைச்சுதான் செஞ்சு பொழப்ப ஓட்டுறேன். நீ வேணும்னா சொல்லிக்கொடு.” பெரியகருப்பு முன்னே நிற்கிற ஆளைவைத்து குற்றம்குறை கண்டுபிடிக்க தெரியாதவன்- பழுத்தாலும் கனியவிரும்பாத உள்ளம் அவனுக்கு. உண்மையிலேயே கிழவி எதாவது சொல்லித்தருவாளா என்றெண்ணியே கேட்டான்.

யாருக்கு கற்றத்தருவது என்று காத்திருந்தாற்போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”

“அடேயப்பா, கேட்கவே எச்சு ஊறுதே- என்ன வேலை பார்கிற ஆத்தா.”

“அந்தகாலத்துல செட்டியார் வீட்டுல ஆக்கிபோட்டேன்பா. இப்பதிக்கு மண்ணுவெட்டுற வேலை, நூறுநாள்வேலையினு கிட்டக்க கெடைக்கிறத செய்றேன்- செட்டியாரு பொண்டாட்டிக்கு இட்டலிகூட தொட்டுக்க அந்த கத்தரிக்கா சுட்டு செய்வோம்ல ஒன்னு, பேரு மறந்திருச்சு, இருப்பா.”

“கோசுமல்லியா?”

“ம், அதேதான். அத அவுக சுவச்சு தின்பாங்க.”

“உங்க வீட்டுக்காரர் உயிரோட இருக்காரா.”

“அந்தாளு எறந்துட்டாரு ரொம்ப நாள்முன்ன, இப்ப நான்தான் வீட்டுக்காரரு.”

“புள்ளைங்க.”

“அதுக்கு நான் கொடுத்துவைக்கல.”

நொய் நொய்யென இருவரும் பேசியது மணிக்கு எரிச்சலாக்கியது- ‘அங்கிட்டுபோய் பேசித்தொலைங்க, அமைதியா திங்ககூட முடியல’ என்று கடிந்தான் உள்ளுக்குள். உரையாடலை உடைக்க, கிழவியை நோக்கி “நீ எதும் வாங்கிக்கிறியா” என்றான்.

“நான் வீட்டுக்குபோய் ஆக்கி தின்னுக்குறேன்.”

“இந்த பெருசுங்களுக்கு எங்கயிருந்துதான் கொடகொடனு வார்த்தை வந்து விழுகுதோ. சனியனுங்க நம்ம பக்கம் வந்திடாம.” என்றெண்ணி அவர்களை நோக்கிய பார்வையை அகற்றினான். ‘என்கிட்டயும் பேசாதிங்க என் முன்னயும் பேசாதிங்க’ என்பதை அவனது பொன்மொழியாக மண்டையில் ஓடியது- ஓடிய அடுத்த நொடியே, “தம்பி உங்களுக்கு எதுவும் புதுசா செய்ய தெரியுமா.” என்றான் பெரியகருப்பன்-மணி முறைத்தான்.

சோறு தின்றுமுடித்து கைகழுவி காசை நீட்டும்போதும் இரு கிழடும் கதைத்துக்கொண்டிருந்தன. பேசி முடிக்கட்டும் காத்திருப்போம் என்றெல்லாம் காக்க இயலாது, இந்தா பிடி என்று அடித்துசொல்லிவிடுவான் நொடியில், ஆனால் கையை கட்டி முறைத்து வெந்தான். 

நூற்று பத்து தம்பி என்றதும் காசை வைத்துவிட்டு வண்டிக்கு நடந்தான். பேசிக்கொண்டே இருந்த கிழவி அடித்துபிடித்து நடைபோட்டாள். இருவரும் புறப்பட்டனர்.

முன்னும் பின்னுமாக பல வழிகளில் புகுந்து மீண்டும் வந்த வழியிலேயே ஓட்டிக்கொண்டிருந்தான். கிழவிக்கு ஐயம், எங்கே வந்தபாதையிலேயே வருகிறோமோவென, சிறிது சிறிதாக அவள் பேச்சில் ஓசை குறைந்தது- வாக்கியத்தையே ஐயத்துடன் தயங்கி தயங்கி பயன்படுத்தினாள்.

“இந்த வழியில போப்பா; அங்கே பெரிய பெரிய தென்னமரமெல்லாம் வளர்ந்து வீடு ஒன்று இருக்குமே அகுன வளை” என்று பம்மிய கட்டளைகள் “இந்த வழி இல்லைபோலயே! போனதிலேயே வளையேன்.” என்றானது.

இரண்டு மணிக்கூறாக வந்தவழியிலேயே சுற்றினர். மரமண்டை மணிகண்டனுக்கு நண்பகல் ஒருமணிக்கு பிற்பாடே தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கி பாலத்தில் உட்கார்ந்து நெற்றியை துடைத்துக்கொண்டு கிழவியை சினத்துடன் கண்டபோது அவள் கண்கள் இன்னும் வழி எதுவென குழம்பி மிரண்டன. அதை பார்த்ததும் அவனுக்குள் தோன்றிய கொச்சை சொற்கள்கூட மறைந்தன. வெகிளியை தனித்து மேலும் நோட்டமிடயில் அவளது முகமே வெம்பி துவண்டுபோய் கண்ணிரண்டும் சிவந்திருந்தது. பைய ஒதுங்கி சாலையோரம் குத்தவைத்து போகும் வரும் ஒருசில வாகனத்தை அது செல்லும் கடைசிவரை தலைதிருப்பிக்கொண்டிருந்தாள்.

“பய முகம் கோணிபோச்சு போ- வரயில கேட்டுக்கேட்டு நடந்துட்டேன், திரும்பவும் இவன்கிட்ட சொல்லி அதேமாதிரி கேட்டுக்கேட்டு போவோமா. ஊர் பேர் மறந்திருச்சே. நாம பாட்டுக்கு எங்குட்டு போறது தெரியலப்பானு ஒலறிட்டா அவன் பாட்டுக்கு எகுனயாச்சும் எறங்குடி முன்டையினுடபோறான். தென்னமரமா நிற்கிற வீட்டுக்கு அங்குட்டு வளைஞ்சா ஒரு வேப்பமரம் அதுக்கு எதிர்க்கதான வீடு. இப்பதிக்கு திரும்பி பார்த்தா முறைக்கிறான், நாமதான் கொஞ்ச நாழில கண்டுபுடிச்ருவமே- வாப்பா தம்பி இதுவழியா போனா போகிடலாமென சொல்லிடுவோமா? தூமையகுடிக்கி ஒடம்புவேற ஆடுது பசியல. எகுனயாச்சும் நிற்பாட்டி தண்ணிகுடிக்கணும்டா யப்பா. மகனோ, மகளோ யாராவது ஒறவு கொண்டாட இருந்திருந்தா காலம்போன காலத்தில இப்படி சீபட்டு திரியவேண்டியிருந்துருக்காது. யார குறை சொல்ல, இந்த தம்பி நல்லா இருப்பான், இவன கூட்டிக்கிட்டு ஒழுங்கா வீட்டுக்குபோணும்.”

மணிக்கோ வேறு சிந்தனைகள், எங்கே இவள் வீட்டுக்கு வழி தெரியாமல்தான் காவல் நிலையத்திற்கு வந்தாளோ என்று. களைப்பில் தலை துவட்டிய வேளை அவனது காதலி அழைத்திருந்தாள், தொலைபேசியை எடுத்துக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்தான், “அட ஏன்டி, இரண்டு நாளா காவல் நிலையத்தில எடஞ்சல் செஞ்சிது, வழி தெரியாமல் வந்திருக்கும்போலடி என் தலையில கட்டிவிட்டாங்க, நாயா அலையவேண்டிருக்கு.”

“அப்போ சாயங்காலம் வந்துசேர்ந்தமாதிரிதான்.”

“ஆஅஅஅ! வெறியாகுதுடி, பேசாமல் ஆளவிடுத்தானு இங்கேயே கலட்டிவிட்டு வந்திடபோறேன்.”

“அப்படிலாம் செஞ்சிடாதடா! முதல்ல அவங்க ஊர் பெயரென்னனு கேட்டியா நீ?”

“எனக்கு அத பார்க்கவே பிடிக்கல இதுல எங்குட்டு பேச. வந்ததுலயிருந்து அதுதான் இங்குட்டுபோ அங்குட்டுபோனு சொல்லுது- ஆளும் மண்டையும்- பொண நாத்தம்வேற அது ஒடம்பெல்லாம், ஒரு அடி தள்ளிதான் உட்கார்ந்து ஓட்டிட்டு வாரேன். அது என்னதான் சொல்லுதுனு மூனு மணிவர கேட்பேன், அப்பறம் எறங்குடி மயிருனுட்டு வாரனா இல்லயா பாரு.”

சினம்கொள்ளாது நடந்துக்கொள், சாயும்காலம் பார்த்துவா என்றுகூறி காதலி கலண்டாள். அவள் எண்ணி பரைந்ததோ இவன் எப்படியும் வரப்போவதில்லையென அறிந்து ஒருபேச்சுக்கு, அது மணிகண்டனுக்கு தலையில் மணியடிக்கவைத்ததோ கட்டாயம் வந்துவிடு என்றவாறு- முதலில் பல்லைக் கடித்தான், இரண்டாவதாக கையை முறுக்கி தொடையில் தட்டினான். நூறு தற்கால இந்திய சினிமாவில் சித்தரிக்கப்படும் ‘ஆல்பா மேலாக’ உருமாறி கிளவியிடம் புலிபோல உருமு உருமியிதாக அவன் தலைக்குள் காட்சி ஓடியது.

முகத்தால் கடிந்துக்கொண்டு ஏறு ஆயா ஒழுங்கா என்றான். பிறகு உனக்கு வழி தெரியுமா தெரியாதா எனக்கேட்டேவிட்டான்- உமையாளிடம் எந்த விடையும் இல்லை- “சரி எந்த பக்கம் இங்குட்டா.” 

கையை மட்டும் நீட்டிக்காட்டினாள், அதை நாடி நேராக ஒன்றரை கி.மீ வண்டியை செலுத்தியிருப்பான், நேராக புளியமரத்தின் அணிவகுப்பு, இலைகளை உதிர்த்து உளத்தை மென்மையாக்கியது- அங்கும் நின்று களைப்பாறி சென்றனர். ஏனோதானோவென அவள் கைகாட்டி சுற்றிவிட்டதில் கோடி கும்பிடுபோட்டு தொழும்படி தென்னை மரங்கள் நிறைந்து மாடிவீடு தென்பட்டது; வளைந்தாள் கிழவி வீடு வந்துவிடும்- பேரின்பம் ஒருத்திக்கு. இருபது ஆண்டாக வீட்டைவிட்டு ஒருநாள்கூட பிரியாதவள், இரண்டுநாள் அதனிடமிருந்து விளகியது பெரும் நோதலை உண்டாக்கியது. ‘இனிமே எந்தகாலத்துகும் இப்புடி போகக்கூடாது’ என முடிவெடுத்தாள். கிழவி கொஞ்சம் நிமிர்ந்து முறுவலித்து உட்கார்ந்திருப்பதை கண்ணாடி பேழையில் கண்ணுற்றான். கடிகாரத்தில் மணி ஒன்று முப்பது. அப்பாடா, விடிவுகாலம் வந்தது என்று அவன் விழிகளும் தெளிவானது. நல்லமச்சி வெளிவந்தான், “என்ன ஆயா நீ சொன்ன தென்னை வீடு வந்திருச்சு, வீட்டைவிட்டு தொலைஞ்சதுக்கு தான என்ன இப்படி அலையவிட்ட. இனிமேல் இப்படி தொலைந்துவிடாத. இங்கே தான இறக்கிவிடவா, நடந்து நீயே போய்கிறியா?”

“தம்பி, வீட்டை விட்டுலாம் நான் தொலையல, என்பாடு தெரியாம பேசுறியேபா. இன்னும் கொஞ்ச தூரம்தான் போபா.”

“எதுவும் நகை தொலைந்து போச்சா, கண்ணுதெரியாதனால தேடச்சொல்லுறியா? ஒருவேளை ஆயா யாரையோ கொன்னுபோட்ட முண்டத்த காமிக்கபோகுதுடோய்.” என்று சொல்லி நகைத்தான். அவன் வேலை முடியப்போகிறது. கிழவிக்கு பெரிய இடரெனச்சொல்லி மாலை படத்துக்கு சென்றுவிட்டு இரவுகாவலுக்கு போய்கொள்ளலாம் என்று அவனது திட்டம் வலுபெற்றது. அமைதியை உணர்ந்தான் மணிகண்டன்.

உமையாளுக்குள் சில காட்சிகள் மட்டுமே மிச்சமிருந்தன. ஊரை ஒட்டாத வீடு அதுவும் வயலை ஒட்டி, வயக்காடு முழுமையும் கொழிஞ்சி மண்டி வறண்டு வாடுது. எதிர்வீடே பல அடி தொலைவில். அதன்பின் மிதியடியில்லாமல் கால் நடமாடும் அழகு; பல மரங்களின் நிழல்களை அந்த கால் ஏறி மிதித்து கடந்தது- இவற்றையெல்லாம் தாண்டியே அவள் குறிப்பிட்ட அந்த தென்னை மரங்கள் நிறைந்த வீடு.

அந்தோ! ஏமாற்றமே. இடரை தீர்க்க விழைந்தவளுக்கு இப்படி ஓர் இன்னலா? உமையாள் இன்னும் தன்னுடைய மூளையை குடைந்து சிந்தித்திருக்கலாம்; வழி கிடைத்திருக்கும். தென்னை மரம் நினைவிலிருந்தது அதையடுத்து நடை என்றால் எங்கோ அருகிலேயே அவளது வீடு உள்ளது. காட்சிகளை வரிசை படுத்த தவறிவிட்டாள்போல. போச்சு, போச்சு! திடீர் நல்லமச்சி மீண்டும் கடுகடுவென ஆகிவிடுவானே; பற்றி எரியபோகிறான்- அவனது தீ பார்வைக்கு அஞ்சியே அவளும் இதுதான் என் வீடென ஒப்புக்கொண்டு அடங்கியிருக்கவேண்டும், செய்தாளா? இல்லவே இல்லை, கெட்டிக்காரியவள், ஆனாலும் அவளது நிலைமை தாளமுடியாத இடும்பையே. இதுவா என்வீடு என்று அவளுக்கே ஐயம், அருகில் சென்று அந்த மஞ்சள்நிற வீட்டை தொட்டு உணர்ந்தாள், எந்த சிந்தையையும் மீட்கவில்லை. அந்த வீட்டு திண்ணையில்கூட உட்கார்ந்துவிட்டாள் , அதுவே அவள் வீடென்று ஒரு துணுக்கு நிகழ்வுகூட மண்டையில் உதிக்காதிருந்தது. மறுபுறம் மணிகண்டனோ அவள் சோர்வுற்று கண்ணீர் வடித்ததை கண்டதும் தன் வேலை முடிந்ததென கிளம்ப அணியமாகினான். வண்டியை முறுக்கிக்கொண்டு நின்றான். நோநெஞ்சு தன்னுடைய இல்லம் இதுவல்ல என உறுதிபூண்ட பின்பு திண்ணையிலிருந்து எழுந்து மணிகண்டனையும் கடந்து நடந்து சென்றது. உடம்பு தள்ளாடியதால் அருகில் தேடி ஒரு கம்பை எடுத்து ஊன்றி நடந்தது. கண்ணீருடன் கடந்த கிழவி திரும்பாமல் சென்றது வியப்பளித்தது. மணிகண்டன் அவள் வெகுதொலைவுக்கு நடக்கும்வரை அசையாது நோட்டமிட்டான்- மணி மூன்றரை; அவன் அறிந்துக்கொண்டான் கிழவி தொலைந்துபோனாள் என்பதை. புறப்பட துணிந்தான். நாதியற்ற கிழவி கண்டாங்கி புடவே தரையில் தேய அவன் வெறுத்த நாற்றத்துடன் தொலைந்து நடைபோட்டாள். வெயிலுக்கு ஒரே நடுக்கம் கம்பை பிடித்தும் கால்கள் ஆட்டம், சோறுதான் அவள் எண்ணங்களில் புதைந்துள்ளது என்று பார்த்தால், வீடு வீடென உச்சரித்து அழுகிறாள்- ‘என்ன போய்விடலாமே, என்ன தயக்கம்’ என்கிறது மணிகண்டனின் மூளை. கைகள் வண்டியை முறுக்க மட்டுமே செய்தன, முன்னேற்ற முடியவில்லை. பனையில் விழுந்த ஆலவிதைபோல இரக்கம் அவனது வெகிளியை உறிஞ்சி வளர்ந்தது.

வண்டியை ஓட்டிக்கொண்டு கிழவிக்கு அருகே சென்று ஆயா வண்டியில ஏறு என்றான். அவள் முகம்கூட திரும்பவில்லை. மீண்டும் வண்டியில் ஏறு என்று முன்னேபோய் மறித்தான். ‘வீட்டுக்கு எப்படிபோறதுனு உண்மையிலே தெரியலயா’- அவனது தோற்றம் வீராப்பாகவும் அமைதியாவுமிருந்தது, ஆனால் முன்புபோல் வெறுப்பில்லை- “நான் போலிசு, ஏறி உட்காரு, நான் கூட்டிட்டுபோறேன்.” உமையாள் தண்ணி வாங்கி கொடுப்பியாபா என்றாள்.

மளிகை கடைக்கு சென்றனர். உமையாவிற்கு தேனீர் வாங்கி கொடுத்தான், “இந்த வழியிலதான் வந்தனுலாம் நெனப்பு இருக்கா, அந்த கடைக்காரரை பாத்தியா எதுவும்.” இல்லை என்றாள். காசு கொடுக்கும்போது கடைக்காரனிடம் இந்த ஆயாவை இங்குட்டு போகும்போது பார்த்தீரா என வினவினான், 

“எங்க, யாரு? இது உமையாள் பெரியம்மால. அம்மா என்ன போலிசோட சுத்துற. எதும் ஆச்சா சார்.” 

மணிகண்டன் கிழவியை திரும்பி நோக்கினான், அவள் எதையும் காதில் வாங்காமல் வீடு வீடென உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு தேனீரை அருந்தினாள்.

அடுத்ததாக கொஞ்சதூரம் சென்று தண்ணி பிடித்துக்கொண்டிருந்த அம்மாக்களிடம் கேட்க அவர்களும் அடையாளம் கண்டுகொண்டனர், உமையாளுக்குதான் யாரென தெரியவில்லை.

கேட்ட இடங்களிலிருந்து வெறும் இருநூறு மீட்டர் தொலைவே-ஒருவழியாக கிழவி வீட்டுக்கு வந்தாச்சு. போனதடவை மாதிரி சுவர்களை தடவி எந்த ஆய்வுக்கும் உள்ளாக்காது, சென்ற மாத்திரையே திண்ணையில் படுத்துக்கொண்டாள். மணிகண்டனும் இம்முறை புறப்பட விழையாமல், வண்டியிலிருந்த தூக்கை கொண்டுபோய் திண்ணையில் சாற்றிவிட்டு அவள் எழும்வரை காத்திருந்தான். சிறிது நொடிகளில் பெரும் ஓய்வெடுத்தவள், கடகடவென கம்பை ஊன்றி நகர்ந்து அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்- தளம், சுவர், ஓடென ஏகும் தேய்த்து பார்த்தால் கூட கரையோ தூசோ கிடைக்காது, சிறிய அறையென்றாலும் எல்லாப்பொருள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மண் பானையிலிருந்த தண்ணி கொணர்ந்தாள் அவனுக்கு, இரண்டுநாள் முன்பு இறைத்தது இன்னும் சுவைமாறாதிருந்தது- உட்காரவைத்து திருநீறு பூசிவிட்டாள், ஏதேனும் உண்கிறீரா என்றாள். அங்கும் இங்குமென அந்த குட்டி இடத்தில் ஓயாமல் அலைந்தாள், அந்த அறையினுள் இருந்த ஒரு மண்கூட தனக்கு மறந்திறாதவாறு மீண்டும் அவைகளை அளவெடுத்தாள்.

“போதும், வா ஆயா. எனக்கு எதும் வேண்டாம். எதுக்கு அழைச்சு வந்த அதச்சொல்லு.” அவனது பேச்சில் முன்பைவிட தற்போது பொறுமையிருந்தது.

அவளும் குந்தினாள், “மூஞ்ச தூக்கிவைச்சுக்காம கேட்டுறேன்பா.”

“சொல்லுங்க.”

“மணி என்னப்பா இருக்கும்.”

“ஐஞ்சாகுது.”

“பொழுது சாஞ்சா ரெண்டு பயலுக வந்துடுறானுங்க தம்மி.” சொல்லிவிட்டு அடுத்து எப்படி வார்த்தையை பயன்படுத்துவதென இடைவெளிவிட்டாள்.

“சொல்லுங்க, குடிகாரனுங்களா. வம்பு பண்றானுங்களா வீட்டு பக்கம் வந்து.”

“குடிச்சுட்டு வந்தானுங்களா என்னனு தெரியல- அலும்பு பண்றானுங்க. வெளக்கமாறகொண்டு எறிஞ்சிட்டேன் அப்பயும் வாரானுங்க. கேட்டா வீடு அவங்களுக்கு இனிமேலு, அப்படினு அதுல ஒருபய சொல்லுறான். பேங்கு காரனுங்களாம் பேங்கு, எத்தனை காலமா இந்த நிலத்துல குடியிருக்கோம் நான்க- வீட்டுக்காரி நான் குத்துக்கல்லாட்டம் இருக்கயிலே இந்த பேச்சு பேசுறானுங்களே. ஒன்னும் தெரியாதவள என்ன ஏசுவானுங்க. எங்க ஐயா நிலம்பா, என்ன கட்டுனவனும் நானும் கலவை கலந்து கட்டுன வீடு, அரண்மனையாட்டம் வலுவாயிருக்கும். ஒரு செங்கல எடுக்க சொல்லுங்க பார்ப்போம் கொரவளை இருக்காது. எதுனா அவனுங்கள நான் செய்யிறதுக்கு முன்னாடி நீங்கதான் தம்பி தடுத்து நிறுத்தனும் அதுக்குதான் கூட்டிகிட்டு வந்தேன்.”

முதன்முதலாக அவன் முறுவலிக்க கண்டாள். “எப்படியாவது முன்ன நின்னு அவனுகள வெரட்டிவிடுப்பா.”

சரி சரி என்றுவிட்டு அவனும் உட்கார்ந்தான். வீட்டை எப்படி இவ்வளவு தூய்மையாக வைத்துள்ளாய் என்று வினவினான். பிறகு எத்தனைநாளாக இங்கு வாழ்கிறீர், வெளியூரே போவதில்லையா என்றெல்லாம் வினவி பேச வார்த்தையில்லாமல் போகும்வரை நாழிகையை கடத்தினான். ஆறு மணிக்கு முன்பே தன்னுடைய காதலிக்கும் அழைப்புவிடுத்து நீங்களே படத்துக்கு சென்றுவாருங்கள் என்றுவிட்டான், அதற்காக வருத்தம் எதுவுமில்லை.

ஆறு பத்து ஆனது, வங்கி ஊழியர் வந்தனர். காலையிலிருந்து உண்ணாத உடம்பு குதித்தது, வந்தவரை கொச்சை சொற்களில் திட்டியது. வந்தவனில் ஒருவன் என்ன காவலரை கூட்டிவந்து மிரட்டுகிறீரா என்று கடிந்தான். உமையாள் இங்கே குதிக்க, வங்கி ஆள்கள் அங்கே தலையில் கைவித்தும் காதை அடைத்தும் நிற்க மணிகண்டன் ஒரு முடிவுக்கு வந்தான். கிழவியை வாயடைக்கும் வழியில் அன்பாக, “நீ இரு ஆயா இனிமே இங்கிட்டு வராதபடி நான் பேசிட்டு வந்துரேன்” என்றுவிட்டு அவர்களை பின்புறம் அழைத்து சென்றான்- உமையாளுக்கு வெறி அடங்கவில்லை கண்விழி துறுத்தி நின்றாள் மணிகண்டன் வங்கி ஊழியர்களை அழைத்து செல்வதை கண்டு. நரம்பெல்லாம் புடைத்திருந்தது, யாராவது அணைத்து ஆறுதல் கூறினால் அழுகும் வெறியது- குளிர்வித்தால் சரியாகும். தன்னை குளிர்விப்பதையும்விட வீட்டை குளிர்விக்க முடிவெடுத்தால், இரண்டுநாள் ஒழுங்காக அவள் கையால் தூய்மை செய்யப்படாமல் இருந்தது. தண்ணீர், துடைப்பம், துணி எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்திருந்தாள்.

கொல்லைநாடி போனவன் என்ன சொல்லியிருப்பானென சிந்தித்தாள்- அவள் உறுதியாகவே இருந்தாள் தன் வீட்டுக்கு வந்த இடர் நீங்கிவிடுமென்று. ஞாயிறு மறைந்து உலகம் இருட்டத்தொடங்கியது, வங்கி ஆள்கள் நாளையும் வாசல் வருவரென அச்சம்வேறு ஒருபுறம். மீண்டும் காவல் நிலையம்போய் மண்றாடவேண்டும், அதுவும் அடுத்தமுறை ஏன் அழைத்தேன் என்கிற சேதியும் அறிந்திருப்பர். இன்று மட்டும் காலம்கூடவில்லையெனில் மீண்டும் வழி தெரியாமல் தொலைய நேரிடும், என்றெல்லாம் அஞ்சினாள்- இல்லம் கழுவ கொணர்ந்த நீரில் கைவைத்துக்கொண்டு குந்தியிருந்தாள்; தண்ணி ஆடுவதுபோல் கை மட்டும் ஆடாமல் உடம்பை தல்லாடியது.

ஒருவழியாக பேசி முடித்து வந்தனர். “சொல்லிட்டு இடத்த காலிபண்ணுங்க” என்றான் மணிகண்டன். உமையாள் வியந்தாள். “மன்னிச்சுக்கம்மா, இனிமேல் வரமாட்டோம். வீடு உங்களோடது. எங்கமேலதான் தப்பு. மன்னிச்சுக்கங்க.” சொல்லிவிட்டு மணியின் முகம் நோக்கி சென்று செல்கிறோமென ஒப்புதல் வாங்கி விடைபெற்றனர்.

கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சியில் மணிகண்டனிடம் பேசக்கூட மறந்தாள். புன்னகைந்தாள் குந்தியவாறே. அவள் நகைப்பை நோக்கி “சரி நான்போறேன் ஆயா” என்றான். எழுந்து நின்று கை எடுத்து கும்பிட்டாள். வங்கி ஊழியர்களிடம் அவன் என்ன உரைத்தான் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை, அவளுக்கு வேண்டியது கிடைத்துவிட்டதே பிறகென்ன.

கொல்லைநாடி சென்றபோது ஊழியர் இருவரும் கடுகடுத்தனர், “விடுங்க சார். அவங்க கணவர் கைப்பட வீட்டு பத்திரத்தை கொடுத்து கையெழுத்துபோட்டது இதோ இருக்கு. கிழவிக்கு புரியலனு பார்த்தா நீங்களும் எங்கள மெரட்டுறிங்க.”

“நான் மெரட்டுனனா?” என்று அடிக்கப்போனவன் அவர்களின் மேற்பார்வையாளருக்கு அழைப்புவிடுக்க சொல்லி பேசினான். அவரையும் திட்டி ஒரு முடிவுக்கு கொண்டுவந்தான். எதிர்முனையிலிருப்பவர் “சார், என் வேலையில்ல அவனுங்கதான் சாகப்போற கிழவிய வம்பிலுக்கிறது. இன்கிரிமென்டுக்கு இப்படி பண்ணுறானுங்க” என்று போட்டு உடைக்க, மணிகண்டன் முறுவலிக்க, ஊழியர்கள் வெட்கத்தில் தலை குனிந்தனர். 

“அந்த கிழவியே கொஞ்ச நாளுல எப்படியும் போய் சேர்ந்திடும். ஒன்னு இரண்டு ஆண்டுக்கு பிறகு வாங்கடா புரியுதா, அப்பதிக்கு எந்த இடரும் முன்ன நிற்காது. நாளைக்கும் வந்து இதேபோல எதுனா பண்ணி உங்க வேலைக்கு ஆப்பு வைக்காம, காத்திருந்து கைபடுத்த பாருங்க.” இப்படிதான் வங்கி ஊழியர்கள் உளம் மாறியது. திட்டத்தை தள்ளிப்போட்டனர். 

அனைவரும் காணாதூரம் சென்ற பின் கிழவிக்கு பிடித்த அமைதி கிடைத்தது. நாள் கடைசியில் அவளைவிட இன்பமானவர் அன்று யாரும் இருந்திருக்க இயலாது. அவள் அரண்மனையை தண்ணீர் ஊற்றி துடைக்க தொடங்கினாள்- எஞ்ஞான்றும் அரண்மணையின் கடைசி ஆட்சியாளர் உமையாளென அவளுக்கு நம்பிக்கை. 


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.