நுண்ணறிவின் பல பரிணாமங்கள்
நாம் புத்திசாலி விலங்குகளை நினைக்கும் போது, பொதுவாக சிம்பன்சிகள், டால்பின்கள் அல்லது நாய்கள் நினைவுக்கு வரும். ஆனால் சில பறவைகளும் அதே அளவு புத்திசாலிகள் என்றால் ஆச்சரியமாக இல்லை. பறவைகளும் பாலூட்டிகளும் நுண்ணறிவை உருவாக்க முற்றிலும் வேறுபட்ட பரிணாம பாதைகளைக் கடந்து வந்துள்ளதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் அமைப்புகள் வேறுபட்டிருந்தாலும், இரு பிரிவுகளும் ஒரே பிரச்சினையை தங்களுக்கே உரிய முறையில் தீர்க்கின்றன. இந்த பயணம் இயற்கை அறிவார்ந்த மூளையை உருவாக்க ஒன்றிற்கும் மேற்பட்ட செய்முறைகளை கொண்டுள்ளதாக காட்டுகிறது.
பறவைகளின் சிறிய தலைகளில் பிரதிபலிக்கும் அறிவுத்திறன் நீண்ட காலம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நியோகார்டெக்ஸ் (neocortex) எனப்படும் மடிப்பு நிறைந்த மேலடுக்கு இல்லாததால், அவற்றின் மூளை ஆரம்பநிலையிலேயே உள்ளது என விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் இந்த எண்ணத்தை தகர்த்துவிட்டன.
பறவைகளின் மூளையில் நரம்பணுக்கள் மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவை மனித மூளையின் நியோகார்டெக்ஸுக்குச் சமமான பணிகளை மேற்கொள்கின்றன. சில பறவைகளில் நரம்பணு அடர்த்தி குரங்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு காகத்தின் நெல்லிக்காய் அளவிலான மூளையில் சுமார் 1.5 பில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன. இந்த சிறிய, திறமையான வடிவமைப்பு நுண்ணறிவுக்கு எடை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கிறது. இயற்கை பறவைகள் பறப்பதற்கு ஏதுவான வகையில் எளிமையான, ஆனால் திறன் வாய்ந்த மூளை வடிவத்தை உருவாக்கியுள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கும் முதுகெலும்புள்ள விலங்குகளான பாலூட்டிகளுக்கும் இடையிலான நுண்ணறிவுத் திறன்கள் குறித்து நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர். 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மூதாதையர்களின் மூளையின் எந்த தடயமும் இப்போது இல்லாததால், பரிணாமம் எந்தப் பாதையை எடுத்தது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே உயிரியலாளர்கள் இந்த வகையான நரம்பியல் சிக்கலானதால், அது எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதை அறிய, வளரும் மற்றும் வயது வந்த விலங்குகளின் மூளை அமைப்புகளை ஒப்பிடுவது போன்ற பிற அணுகுமுறைகளை எடுத்துள்ளனர்.
பிப்ரவரி 2025 இல் Science இதழில் வெளியிடப்பட்ட மூன்று தொடர் ஆய்வுகள்1, பறவைகளும் பாலூட்டிகளும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து நுண்ணறிவை உருவாக்கும் நரம்பியல் பாதைகளைப் பெறவில்லை, மாறாக அவை சுயமாக உருவாகின என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன. முதுகெலும்பு நுண்ணறிவு பல முறை பரிணமித்திருக்கலாம் என்று இத்தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவற்றின் சிக்கலான நரம்பியல் பெருமளவில் வெவ்வேறு திசைகளில் உருவாகவில்லை: பறவை மற்றும் பாலூட்டி மூளை வியக்கத்தக்க வகையில் ஒத்த சுற்றுகளைக் காட்டுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நியோகார்டெக்ஸ் இல்லாத பறவைகள், பாலியம் (pallium) எனப்படும் புதிய மூளைப் பகுதியைக் கொண்டுள்ளன. இந்த பகுதி மேம்பட்டு விரிவடைந்து, காகங்கள், கிளிகள் போன்ற இனங்களில், சிக்கலான சிந்தனை போன்ற செயல்பாடுகளை நன்கு மேற்கொள்கிறது. இயற்கை ஒரே புதிரை இரண்டு முறை, ஆனால் வெவ்வேறு வழிகளில் தீர்த்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பரிணாமம் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் அழுத்தங்கள் இருந்தால் முற்றிலும் வேறுபட்ட உயிரியல் தீர்வுகள் தோன்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. இதுவே இணை பரிணாமம் (Convergent Evolution) எனப்படும் நிகழ்வின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு.
கருவியும் காரணமும் புரிந்த பறவைகள்
மனிதர்கள் கருவிகளைப் பயன்படுத்துவது நம்முடைய தனிப்பட்ட திறன் என நம்பினர். நமது மூளை கணிதத்தைச் செய்ய முடியும், தர்க்கத்தைப் பயன்படுத்த முடியும், சுருக்கங்களை ஆராய முடியும், விமர்சன ரீதியாக சிந்திக்க முடியும். ஆனால் சிந்தனையில் ஏகபோகத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. பின்னர் சிம்பன்சிகள் கருவிகளைப் பயன்படுத்தி எறும்புகளைப் பிடிப்பதைக் கண்டோம். இன்று பறவைகளும் நுட்பமான கருவி நிபுணர்கள் என்று நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக நியூ கலீடோனியன் (New Caledonian) காகங்கள் மரக்கிளைகளை வளைத்து கொக்கிகள் உருவாக்கி பூச்சிகளை எடுக்கும். சில பறவைகள் சாலைகளில் விதைகளை வீசி வாகனங்கள் அவற்றை உடைத்த பின் போக்குவரத்து மாறும் நேரத்தில் சென்று எடுத்துக்கொள்கின்றன. இத்தகைய நடத்தை காரணம் –விளைவு புரிதலின் அடையாளம் மேலும் உயர்ந்த சிந்தனை தரத்தின் சின்னமாகும்.

சாம்பல் நிற சிக்கடிகள் (chickadee) ஒரு நிலப்பரப்பில் பதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதைகளைக் கண்காணிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், பறவைகள் நம்முடைய மூளையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றினாலும், வியக்கத்தக்க சாதனைகளைச் செய்கின்றன: அவை சிறியவை மற்றும் பாலூட்டிகளின் நுண்ணறிவுடன் தொடர்புபடுத்தும் போது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை.”10 கிராம் மூளை கொண்ட ஒரு பறவை, 400 கிராம் மூளை கொண்ட ஒரு சிம்பன்சியைப் போலவே செயல்படுகிறது,” என்கிறார் மூளை அமைப்புகளை ஆராயும் ஓனூர் குன்டர்குன்.

பறப்பதிலும் பல சிந்தனைச் சவால்கள் உள்ளன. வானில் மூன்று பரிமாணங்களில் பறப்பது அரிய அறிவு செயலாகும். 200 மைல் வேகத்தில் பாயும் பருந்து தனது பாதையைச் சில மில்லி விநாடிகளில் மாற்றிவிடுகிறது. அதற்கு மிகுதியாகப் புரிதலும் வேகமும் அவசியம்.

சில பறவைகளுக்கு தனித்துவமான இடநினைவு (spatial memory) திறன் உண்டு. கிளார்க் நட்கிராக்கர் (Clark’s nutcracker) எனப்படும் பறவை தானே புதைத்த ஆயிரக்கணக்கான விதைகளை, அவை எங்கே உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்கும். ஹம்மிங் பறவை தன்னைச் சுற்றிய ஒவ்வொரு மலரையும், அந்த மலரில் தேன் மீண்டும் எப்போது நிரம்பும் என்பதையும் துல்லியமாக நினைவில் கொள்கிறது. இந்த பறக்கும் தேவைகள் நிலத்தில் வாழும் பாலூட்டிகள் எதிர்கொள்ளாத வகையில் பறவைகளை நுண்ணறிவுக்குத் தள்ளியிருக்கலாம். வானம் தனிப்பட்ட சவால்களை உருவாக்கியதால், அதற்கென தீர்வுகள் தேவைப்பட்டது.
பாலூட்டிகள் சமூக அறிவின் முன்னோடிகள்

பாலூட்டிகள் சிக்கலான சமூக உறவுகளால் அறிவை வளர்த்துக் கொண்டுள்ளன. உறவுகளை நினைவில் வைத்துக் கொள்வது, அதிகார நிலைகளை அறிதல், கூட்டுறவு உறவுகளைப் பேணுதல் ஆகியவை ஆழ்ந்த சிந்தனையைப் பிணைக்கின்றன. இது சமூக மூளை கருதுகோள் (Social Brain Hypothesis) என அழைக்கப்படுகிறது. டால்பின்களால் தங்களை அடையாளம் காண முடியும். யானைகள் பல ஆண்டுகளுக்குப் பின்னும் உறவுகளை நினைவில் வைத்திருக்கும். சமூகத் தேவை, முன்கூட்டியே செயலை ஊகிக்கும் திறன், உணர்ச்சி நுண்ணறிவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கிறது.
ஆப்பிரிக்கன் கிளி அலெக்ஸ் நிறங்கள், வடிவங்கள், எண்கள் போன்றவற்றை அடையாளம் கண்டதோடு, கூடுதல் கேள்விகளையும் கேட்டது. அண்டங்காக்கைகள் ஏழு வயதிற்கு குறைந்த குழந்தைகளைத் தடுமாறச் செய்யக் கூடிய பல புதிர்களைத் தீர்க்கின்றன. இவை குரங்குகளை விட மேம்பட்டதாக செயல்படுகின்றன. காகங்கள் மனித முகங்களை அடையாளம் கண்டு, எந்த மனிதரைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தங்கள் குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. இந்த மன திறன்கள் பாலூட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் உருவானவை.
பாலூட்டிகளின் மூளை வெளியில் இருந்து உள்நோக்கி வளர்ச்சி பெற்றது; அதே சமயம் பறவைகளின் மூளை உள்நோக்கி வெளியில் விரிந்தது. அமைப்புகள் வேறுபட்டிருந்தாலும் பயனும் சிந்தனையும் ஒரே நிலையாக மாறி, சுயநினைவு, எதிர்காலத் திட்டமிடல், காரணம்–விளைவு புரிதல் போன்றவை இரண்டிலும் உருவாகியுள்ளன.
நுண்ணறிவு உருவாக ஒரே மாதிரியான உயிரியல் வடிவமைப்பு தேவையில்லை
நுண்ணறிவின் இயல்பும், உயிரின் ஒத்திசைவும்
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பறவைகள் அவ்வளவு புத்திசாலிகள் அல்ல என்று நரம்பியல் உடற்கூறியல் நிபுணர்கள் கருதினர். பாலூட்டிகளின் வெளிப்புற அமைப்பான நியோகார்டெக்ஸைப் போன்ற எதுவும் பறவை உயிரினங்களுக்கு இல்லை. நியோகார்டெக்ஸ் நியூரான்களின் ஆறு அடுக்குகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அவை மூளையின் பிற பகுதிகளிலிருந்து உணர்ச்சித் தகவல்களைப் பெற்று, அதைச் செயலாக்கி, நடத்தை மற்றும் எதிர்வினைகளைத் தீர்மானிக்கும் பகுதிகளுக்கு அனுப்புகின்றன என்று கருதப்பட்டது.
1960களில், உடற்கூறியல் நிபுணர் ஹார்வி கார்டனின் (Harvey Karten, MIT) பறவை நரம்பியல் சுற்றுகள் பற்றிய ஆராய்ச்சி, பறவை நுண்ணறிவுத் துறையின் பார்வையை மாற்றியது. “நீண்ட காலமாக, இது அறிவாற்றலின் மையம் என்று கருதப்பட்டது, மேலும் மேம்பட்ட அறிவாற்றல் திறன்களை வளர்க்க இந்த வகையான உடற்கூறியல் உயிரினங்களுக்குத் தேவை” என்கிறார் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் பாஸ்டியன் சரேம்பா (Bastienne Zaremba). பறவைகள் நேர்த்தியான அடுக்குகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, குறிப்பிடப்படாத நியூரான்களின் பந்துகளைக் கொண்டுள்ளன, அவை அடையாளங்கள் அல்லது வேறுபாடுகள் இல்லாமல் உள்ளன” என்பது நரம்பியல் உயிரியலாளர் பெர்னாண்டோ கார்சியா-மோரேனோ (Achucarro Basque Center for Neuroscience, Spain) வின் கருத்து. நூற்றாண்டுக்கு முன்பு நரம்பியல் உடற்கூறியல் நிபுணர்கள் பறவைகளின் நடத்தையில் பெரும்பகுதி கற்றல் மற்றும் முடிவெடுப்பதன் மூலம் இயக்கப்படுவதில்லை, மாறாக அனிச்சையானவை என்று பரிந்துரைத்தனர். அதாவது ஒரு பாலூட்டி எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடியதை, ஒரு பறவை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது என்பதைக் குறிக்கிறது.
கார்ட்டன், பாலூட்டிகள் மற்றும் புறாக்கள், பின்னர் ஆந்தைகள், கோழிகள் மற்றும் பிற பறவைகளின் மூளை சுற்றுகளை வரைபடமாக்கி ஒப்பிட்டுப் பார்த்தபோது வழக்கமான சிந்தனை மாறத் தொடங்கியது. பிரதிபலிப்பு இயக்கங்களில் மட்டுமே ஈடுபடுவதாகக் கருதப்படும் மூளைப் பகுதிகள் பாலூட்டி நியோகார்டெக்ஸில் காணப்படும் நரம்பு சுற்றுகள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நியூரான்களின் நெட்வொர்க்குகளிலிருந்து கட்டமைக்கப்பட்டன. பறவை மூளையில் உள்ள இந்தப் பகுதி, டார்சல் வென்ட்ரிகுலர் ரிட்ஜ் (டி.வி.ஆர்), நியோகார்டெக்ஸுடன் ஒப்பிடத்தக்கதாகத் தோன்றியது.
1969 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்ட்டனின் புரட்சிகரமான கட்டுரையில் கூறப்பட்ட பறவை மற்றும் பாலூட்டி சுற்றுகள் ஒத்திருப்பதால், அவை ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து பெறப்பட்டவை என்ற சிந்தனை பல தசாப்தங்களாக இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் பறவை மூளையில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது.
சில தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்பெயினில் உள்ள முர்சியா பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் நிபுணரான லூயிஸ் புவெல்லஸ் (Luis Puelles) எதிர் முடிவை எடுத்தார். வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் கருக்களை ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம், பாலூட்டி நியோகார்டெக்ஸ் மற்றும் பறவை டி.வி.ஆர் ஆகியவை கருவின் பாலியத்தின் தனித்துவமான பகுதிகளிலிருந்து உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தார். இரண்டு பிரிவு மூளைப் பகுதிகளின் கட்டமைப்புகளும் சுயமாக உருவாகியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
கார்ட்டனும் புவெல்லஸும் இந்த பெரிய கேள்விக்கு முற்றிலும் மாறுபட்ட பதில்களைக் கொடுத்துக் கொண்டிருந்ததால் விவாதம் பல தசாப்தங்களாக தொடர்ந்தது. இந்த நேரத்தில், உயிரியலாளர்களும் பறவை நுண்ணறிவைப் பாராட்டத் தொடங்கி, பறவைகள் எவ்வளவு புத்திசாலியாக இருக்க முடியும் என்பதைப் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இருப்பினும், முதுகெலும்புள்ள பல்லியங்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த அவர்களின் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க முடியவில்லை.
புதிய ஆய்வுகள்

ஒற்றைச் செல் ஆர்.என்.ஏ வரிசைப்படுத்தல் (single-cell RNA sequencing) நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நரம்புச் செல்லும் கருவிலிருந்து முழு வளர்ச்சியடையும் வரை எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆராய்ந்தனர். இந்த நுட்பம், கார்ட்டன் செய்தது போல், வயதுவந்த மூளையில் மட்டுமல்ல, புவெல்லெஸைத் தொடர்ந்து கரு வளர்ச்சி முழுவதும் மூளைச் சுற்றுகளை (brain circuits) ஒப்பிட்டுப் பார்த்தனர். இந்த முறையில், கருவில் செல்கள் எங்கு வளரத் தொடங்கின, முதிர்ந்த விலங்கில் அவை எங்கு முடிகிறது என்பதை அவர்களால் கணிக்க முடிந்தது. இது பரிணாம பாதைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வளர்ச்சி பயணம்.
தங்கள் ஆய்வுக்காக, கார்சியா-மோரேனோவின் குழுவினர் மூளை சுற்று எவ்வாறு உருவாகிறது, வெவ்வேறு வகையான நியூரான்கள் எப்போது உருவாகின்றன, அவை எங்கு முதிர்ச்சியடைகின்றன என்பதைக் கண்காணிக்க, பல்வேறு கரு நிலைகளில் கோழிகள், எலிகள், கெக்கோக்களின் பல்லியங்களில் உள்ள செல்களை ஆராய்ந்தனர். கார்ட்டனும் மற்றவர்களும் குறிப்பிட்டது போல, முதிர்ந்த சுற்றுகள் விலங்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரே மாதிரியாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், ஆனால் புவெல்லஸ் கண்டறிந்தது போல அவை வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டன. பாலூட்டி நியோகார்டெக்ஸ் மற்றும் பறவை டி.வி.ஆர் ஐ உருவாக்கிய சுற்றுகள் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு வரிசைகளில் மற்றும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வளர்ந்தன.
கார்சியா-மோரேனோ, ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சரேம்பா குழுக்களுடன் இணைந்து பறவை பாலியத்தின் மிகவும் விரிவான அட்லஸை உருவாக்கினார். பறவை பாலியத்தை பல்லி மற்றும் எலி பாலியங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், நியோகார்டெக்ஸ் மற்றும் டி.வி.ஆர் ஆகியவை ஒத்த சுற்றுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நரம்பியல் சுற்றுகளை உருவாக்கிய நியூரான்கள் வேறுபட்டவை என்றும் கண்டறிந்தனர்.
பறவை பாலியத்தில், வெவ்வேறு பகுதிகளில் வளர்ச்சியைத் தொடங்கும் நியூரான்கள், வயது வந்தவர்களில் ஒரே வகை நியூரானாக முதிர்ச்சியடையும் என்பதை சரேம்பாவின் குழுவினர் அறிந்தனர். கருவின் தனித்துவமான பகுதிகள் வெவ்வேறு வகையான நியூரான்களை உருவாக்குகிறது என்ற முந்தைய கருத்துக்களுக்கு இது மாறுபட்டது. குறைந்தபட்சம் முதுகெலும்புள்ள விலங்குகளுக்குள்ளாவது, ஒரு புத்திசாலித்தனமான மூளையை உருவாக்கக்கூடிய சாத்தியத்தின் அளவு குறைவாகவே உள்ளது.
பாலூட்டிகளில், மூளை வளர்ச்சி ஒரு உள்ளுணர்வு பாதையைப் பின்பற்றுகிறது. வளர்ச்சியின் தொடக்கத்தில் கருவின் அமிக்டாலா பகுதியில் உள்ள செல்கள் வயது வந்த அமிக்டாலாவில் முடிவடைகின்றன. கருவின் புறப்பகுதியில் உள்ள செல்கள் வயதுவந்த புறப்பகுதியில் முடிவடைகின்றன. ஆனால் பறவைகளில் முன்மூளையின் அற்புதமான மறுசீரமைப்பு உள்ளது. பறவைகள் மற்றும் பாலூட்டிகள் சிக்கலான அறிவாற்றலுக்காக மூளைப் பகுதிகளை சுயமாக உருவாக்கின என்பதற்கான தெளிவான ஆதாரங்களை இந்த ஆய்வுகள் வழங்குகின்றன. டோஷஸின் ஆய்வகத்திலிருந்து முந்தைய ஆராய்ச்சியையும் அவை எதிரொலிக்கின்றன. இது பாலூட்டி நியோகார்டெக்ஸ் ஊர்வன டி.வி.ஆர் இலிருந்து சுயமாக உருவானது என்பதைக் கண்டறிந்தது.
இருப்பினும், ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து சில மரபுரிமை பெற்றிருக்கலாம் என்று கருதுகிறது.
ஆழமான கற்றலைப் பயன்படுத்திய மூன்றாவது ஆய்வில், கெம்பின்க், நிகோலாய் ஹெக்கர் ஆகியோர் எலிகள், கோழிகள் மற்றும் மனிதர்கள் நியோகார்டெக்ஸ் அல்லது டி.வி.ஆர் யின் வளர்ச்சியைப் பாதிக்கும் சில டி.என்.ஏ களைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டறிந்தனர். இது இரண்டு வகையான விலங்குகளிலும் ஒத்த மரபணு கருவிகள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. மேலும் முந்தைய ஆய்வுகள் பரிந்துரைத்தபடி, தடுப்பு நியூரான்கள் அல்லது நரம்பியல் சமிக்ஞைகளை அமைதிப்படுத்தி மாற்றியமைக்கும் நியூரான்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் முழுவதும் பாதுகாக்கப்படுவதாக ஆராய்ச்சி குழுக்கள் கண்டறிந்தன.
இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் கார்ட்டன் மற்றும் புல்லெஸின் விவாதத்தை முழுமையாக தீர்க்கவில்லை. யாருடைய கருத்துக்கள் உண்மைக்கு நெருக்கமானவை? புல்லெஸ் சொல்வது சரி என்று டோஷஸ் கூறினார், அதே நேரத்தில் குன்டர்குன் கண்டுபிடிப்புகள் கார்ட்டனின் கருத்துக்களை சிறப்பாக பிரதிபலிக்கும் என்று நினைத்தார், இருப்பினும் ஓரளவு புல்லெஸை மகிழ்விக்கும். கார்சியா-மோரேனோ வித்தியாசத்தைப் பிரித்து, அவர்கள் இருவருடைய கணிப்பும் தவறில்லை என்று கூறுகிறார்.
எதிர்கால ஆய்வுத் திசைகள்
இந்த ஆய்வுகள் மருத்துவ உலகிற்கு மிகவும் முக்கியமானவை. பல்வேறு நரம்பியல் பாதைகள் ஒரே செயல்பாட்டை வழங்குவதால், மூளை வளர்ச்சி குறைபாடுகளைப் புரிந்து கொள்ள உதவும். அல்சைமர், ஆட்டிசம் போன்ற நோய்களுக்கு மாற்று சிகிச்சை வழிகள் உருவாகலாம்.
இன்றைய ஏ.ஐ அமைப்புகள் பெரும்பாலும் மனித மூளை மாதிரியைப் பின்பற்றுகின்றன. குறைந்த நரம்பணு அமைப்புகளுடன் அதிக செயல்திறன் வழங்கும் பறவை மூளைகள் வேறொரு மாதிரியை வழங்கக் கூடும். இது பறவை-மாதிரியான நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி புதிய கணினி கட்டமைப்புகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கிறது.
பூமியில் நுண்ணறிவு பல முறை உருவாகி இருப்பதால், வேறு கோள்களில் உருவாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது. கண், பறத்தல், சமூக அமைப்பு போன்ற அனைத்தும் பல முறை தனித்தனியாக உருவாகியுள்ளன. அப்படியானால் நுண்ணறிவும் உருவாக வாய்ப்பு அதிகம். இது விண்வெளி உயிரியல் (Astrobiology) ஆய்வுகளுக்கும் புதிய அடிப்படை தருகிறது.
எதிர்காலத்தில் மீன்கள் மற்றும் ஆக்டோபஸ் போன்ற முதுகெலும்பில்லா உயிரினங்களில் அறிவு
சிந்தனை மற்றும் சுயஅறிவு தொடர்பான ஆய்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது நுண்ணறிவு மனிதர்களுக்கே உரியது என்ற எண்ணம் தகர்க்கப்பட்டு, பரிணாமம் பல பாதைகளில் சிக்கலான சிந்தனையை உருவாக்க முடியும் என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இனி வரும் காலங்களில், நரம்பியல், பரிணாம உயிரியல், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி உயிரியல் போன்ற அனைத்தையும் ஒன்றிணைந்து நுண்ணறிவின் புதிய வரலாறு ஒன்று, அதாவது மனித மையம் இல்லாமல், உயிரின் பல்வேறு பாதைகளை கொண்டாடுவதாக இருக்கும்.
1Constrained roads to complex brains: Neural development and brain circuit evolution converged in birds and mammals
Giacomo Gattoni and Maria Antonietta Tosches https://doi.org/10.1126/science.adv2609
Evolutionary convergence of sensory circuits in the pallium of amniotes | Science
https://www.science.org/doi/10.1126/science.adp3957
Developmental origins and evolution of pallial cell types and structures in birds | Science
2https://www.quantamagazine.org/intelligence-evolved-at-least-twice-in-vertebrate-animals-20250407
3Smart Ravens: https://www.youtube.com/watch?v=aSrmHV6rxwI
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
