படுக்கையில் நகர முடியாமல் கிடந்த ஏடா, வயிற்றில் சுண்டி இழுத்துக் கொண்டிருந்ததோடு, உடலெங்குமே பரவியிருந்த அதிகபட்ச வலியில் பற்களைக் கடித்துக்கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்திருந்த ஆன்னா இஸ்பெல்லாவை ஏறிட்டுப் பார்த்து, “அம்மா கொஞ்சமே கொஞ்சம் அபினைத் தா, பின்னர் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; என்னால் வலியைத் தாங்க முடியவில்லை” என்றாள். முகத்தில் எந்த மாறுபாடுமின்றி, “நீ உன் பாவங்களுக்காக மன்னிப்பை எப்போது கேட்கிறாயோ, அப்போதுதான் உனக்கு வேண்டியது கிடைக்கும். ஏடா, நீ விரைவில் கர்த்தரைச் சந்திக்கவிருக்கிறாய், அப்போது நீ தூய்மையாக இருக்க வேண்டாமா? சொர்க்கத்தில் உனக்கு இடம் கிடைக்கவே நான் இவற்றைச் செய்கிறேன்” என்றாளஆன்னா.
லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், ஏடா, ஆன்னாவின் அனுமதியின்றி யாருமே வர முடியாமலான வெறிச்சோடிக்கிடந்த அவளது படுக்கையறை வாசலைப் பார்த்தபடி கண்ணீர் வழிந்த கண்களை மூடிக்கொண்டாள்.
ஆன்னா இந்த வீட்டுக்கு வருவதற்கு முந்தைய நாள் வரை கர்ப்பப்பை புற்று நோயின் வலியைத்தாங்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்த அபினை ஏடா அன்றாடம் எடுத்துக்கொண்டிருந்தாள். நோய் முற்றி, ஏடா நடமாடமுடியாமல் படுக்கையில் இருக்கவேண்டி வந்து, அவளைப்பார்த்துக் கொள்ளவென்று ஆன்னா அங்கு வந்தபிறகு எல்லாம் ஆன்னாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மகளின் உச்சவலியைக்காட்டிலும் இளமையிலிருந்தே தனக்குள் உறைந்துபோன கிறிஸ்துவ நெறிகளுக்கே ஆன்னா முக்கியத்துவம் கொடுத்தாள். ஏடாவின் மரணத்தைச் சாக்காக வைத்தாவது ஏடா தொலைத்ததாக ஆன்னா நம்பிய, குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்கவும் சொர்க்கத்தில் ஏடாவுக்கு இடம்கிடைப்பதை உறுதிசெய்யவும் நினைத்தாள் ஆன்னா.
’’…அம்மா அம்மா…’’ என்று கெஞ்சும் ஏடாவின் வலி நிறைந்த குரலைப் புறக்கணித்து, ஆன்னா இஸபெல்லா என்னும் அந்தத்தாய் இறுகிய முகத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். நோயுற்றிருந்த ஏடாவுக்கு வேண்டியதைச் செய்ய அங்கே ஏராளமான பணியாளர்கள் இருந்தனர். லவ்லேஸ் குடும்பச் சீமாட்டி, கோமான் வில்லியமின் மனைவியான ஏடா, செல்வாக்குமிக்க பிரபுக்களின் குடும்பத்தில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள். புற்றுநோயின் வலியிலிருந்து தப்பிக்க அவளுக்குக் கஞ்சாவும் அபினும் வெகுவாக உதவின. முன்புபோலக் குதிரைப்பந்தயங்களில் ஈடுபடவும் அவளது நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும் அவளால் முடியாமல் போனபோதும், வலியைத் தாங்கிக்கொள்ள அபின் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், 1852 கோடையில் ஏடா நடமாட முடியாமல் போனதும், ஆன்னா இஸபெல்லா மகளின் வாழ்வைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
கடுமையான மதம் சார்ந்த ஒழுக்க நெறிகளால் இறுகிப்போன மனம் கொண்ட ஆன்னா, கணவனின் கிறுக்கு ஏடாவுக்கு வந்துவிடக் கூடாது என இளமையிலிருந்தே மிகக் மிகக் கடுமையாக ஏடாவின் வாழ்வை கட்டமைத்தார். ஏடாவை வேவு பார்க்கவென்றே பல பணியாளர்களை அமர்த்தி, ஏடாவை ஒரு கணம் கூட சுயமாக வாழவிடாமல் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றாள் ஆன்னா.
பெருங்கவி பைரனின் காதல் மனைவியாகத் தான் பட்ட பாட்டைத் தன் மகள் படக் கூடாது என ஆன்னா நினைத்ததில் தவறில்லை; ஆனால் அதை அவள் நடைமுறைப்படுத்தியது மிகக் கடுமையாக ஏடாவைப் பாதித்தது. ஆன்னாவின் விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே தன் வாழ்வை ஏடா அமைத்துக்கொள்ள முயன்றாள்.
வில்லியம்ஸை மணமுடித்து தன் விருப்பம் போல ஏடா வாழ்ந்து கொண்டிருக்கையில்தான் ஆன்னா அவள் வாழ்வில் குறுக்கிட முடியாமலானது.
ஆனால் புற்றுநோய் ஏடாவின் வாழ்வை முற்றிலுமாக மாற்றியமைத்தது. ஏடா நோயுற்றதும் ஆன்னா ஏடாவின் மாளிகைக்கே வந்துவிட்டாள். கடவுளின் மீது விசுவாசம் கொண்டிருந்தவர்கள் என ஆன்னா நம்பியவர்கள் மட்டுமே ஆன்னாவின் அனுமதியுடன் ஏடாவின் அறைக்கு பணி செய்ய வந்தார்கள். வலி தாங்க முடியாத ஏடா அபினுக்காக எதையும் செய்யத் தயாரானபோது, நோயும் அவளை அழைத்துச் செல்லும் அளவுக்கு முற்றி இருந்தது.
இறப்பு அணுகிக்கொண்டிருப்பதை அறிந்த ஏடா, வலியில்லாமலாவது மரணத்தைச் சந்திக்க முடிவுசெய்தாள். அம்மாவிடம் தான் பாவமன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகச் சொன்னாள். “முதலில் ஒரு மனைவியாக நீ செய்த எல்லாப் பாவங்களையும் கணவனிடம் சொல்லிவிடு, பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்” என்றாள் ஆன்னா. கண்ணீருடன் ஒத்துக்கொண்ட ஏடா, ஆன்னா அளித்த அபினை உண்டு வலியைக் கட்டுப்படுத்திக்கொண்டு கணவனை வரச் சொன்னாள்.
1835-ல் திருமணம் ஆனதிலிருந்து ஏடாவின் மீது பேரன்பு கொண்டிருந்த வில்லியம் கிங், ஆன்னாவின் வரவுக்குப் பிறகு ஏடாவைப் பார்ப்பது குறைந்திருந்தது. ஏடாவின் நோயை அவரும் அறிந்து துயருற்றிருந்தார். ஏடாவிடமிருந்து அழைப்பு வந்தபோது, அவருக்குத் தெரிந்திருக்கவில்லை ஏடா எத்தனை பெரிய அதிர்ச்சியை அவருக்கு அளிக்கப்போகிறாள் என்று.
படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து ஏடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின் கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் ஏடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார்.

ஆனால் அடுத்து ஏடா சொன்னதை அவர் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை. குதிரைப்பந்தயக்காரரான ஜான் குரோஸுடன் தனக்கிருந்த மணஉறவைத் தாண்டிய காதலையும் தெரிவித்த ஏடா, தனது பிற ஆண் நண்பர்களைக் குறித்தும் தெரிவித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். திகைத்துப்போன வில்லியம், பாவமன்னிப்பை அளிக்கவும் மனமின்றி ஏடாவைப் பற்றியிருந்த தனது கைகளை என்றென்றைக்குமாக விலக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார். ஒரே வீட்டிலிருந்தும் ஏடா மரணமடையும் வரை வில்லியம் மீண்டும் அவளைச் சந்திக்கவே இல்லை. பின்பு ஏடாவின் இறுதிநாட்கள் முழுக்கவே ஆன்னாவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
1852-ன்ஆகஸ்ட் மாதம், ஜன்னல் திரைகள் இழுத்து மூடப்பட்டிருந்த அந்த இருண்ட அறையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், எலும்பும் தோலுமாகப் படுக்கையில் கிடந்த ஏடா புற்றுநோயின் வலியை மறக்க வைத்த அபினின் மயக்கத்தில் கண்கள் செருகி, மயக்கத்துக்கும் விழிப்புக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்தாள். வாசலில் நின்றிருந்த ஆன்னா இஸபெல்லாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஏடாவின் நீண்ட கால நண்பர் சார்லஸ் டிக்கின்ஸ் உள்ளே நுழைந்தார். கையில் அவர் எழுதிய ‘டாம்பி அண்ட் சன்’ (Dombey and Son) நாவல் இருந்தது. மெல்ல ஏடாவின் அருகில் அமர்ந்த டிக்கின்ஸ், அவளது மெலிந்த கைகளைப் பற்றினார்.
முயன்று புன்னகைத்த ஏடா மெல்லிய குரலில் முணுமுணுத்தாள், “சார்லஸ், நல்லவேளை நீங்களாவது என்னைப்பார்க்க வந்தீர்கள். மரணம் என்பது எண்களைப் போன்றது என்று நினைக்கிறேன். உச்ச கட்ட வலியின் போதெல்லாம் எனக்கு சுவர்களில் எண்களின் மாயத்தோற்றம் தெரிகிறது. எண்களும் கணக்குகளும் தானே துல்லியமானதும், தவிர்க்க முடியாததும்? ஆனால் என் கணினி இயந்திரம் நெய்யப்போகும் அந்த எதிர்காலப் பூக்களைக் காண நான் இருக்க மாட்டேன் போலிருக்கிறது.”
டிக்கன்ஸ் அவளது கையை அழுத்திப் பிடித்து, “ஏடா, உங்கள் சிந்தனைகள் அழியாதவை. அவை காலத்தைக் கடந்தவை. இப்போது எண்களைப் பற்றி யோசிக்காதீர்கள். இதோ, உங்களுக்குப்பிரியமான நீங்கள் கேட்டுக்கொண்ட பால் டாம்பியின் கதையை உங்களுக்காக வாசிக்கிறேன்,” என்றார்.
அவர் நாவலைத் திறந்து ஏடாவுக்கு பிடித்தமான அந்த நாவலின் உருக்கமான மரணக் காட்சியை வாசிக்கத் தொடங்கினார்: “மெல்ல… மெல்ல அந்த நதி கடலை நோக்கிப் பாய்கிறது…”
ஏடா கண்களை மூடியபடி சொன்னாள், “சார்லஸ்… உங்கள் குரல் என் வலியைக் குறைக்கின்றது. என் தந்தை பைரன் கவிதைகளால் உலகை வென்றார், நான் எண்களால் உலகை மாற்ற முயன்றேன். ஆனால் இப்போது, அப்பாவுக்கும் மகளுக்குமான உறவுச்சிக்கலைச் சொல்லும் இந்தக்கதையே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.”
டிக்கின்ஸ் தொடர்ந்து வாசித்தார். அந்த அறையில் டிக்கின்ஸின் கணீர் என்ற குரலும், ஏடாவின் தட்டுத்தடுமாறும் சுவாசமும் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆன்னாவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு மேதைக்கு இன்னொரு மேதை வழங்கிய இறுதி அஞ்சலி அது.
தொடர்ந்த நவம்பரில் ஏடாவின் மூச்சு மெல்ல மெல்லக் குறைந்து, இன்னும் சில நாட்களில் இறப்பது உறுதியானபோது, ஏடா அதுநாள் வரை தனக்கு ஆன்னா இழைத்த எல்லா அநீதிகளுக்கும் பதிலாகத் தனது மரணத்திற்குப் பின்னதான ஒரு விருப்பத்தை கடவுளின் பெயரால் தெரிவித்தாள். அதைச் செய்யாமல் இருக்கவே முடியாதென்பதால் ஆன்னா அதிர்ந்துபோனாள்.
மத நம்பிக்கைகளால் இறுகிக் குளிர்ந்திருந்த ஆன்னா, ஏடா பிறந்த 5-வது வாரமே பெருங்கவி பைரனைப் பிரிந்தார். அவர் மீது காதல் இருந்தபோதும் அவரது பைத்தியக்காரத்தனம் தன் மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பைரனின் உருவப்படத்தைக் கூட ஏடா பார்க்காதபடி ரகசியமாகக் காத்தார். பைரன் அவ்வப்போது ஏடாவுக்கு எழுதிய கடிதங்களில் மட்டுமே அவள் தன் தந்தையை அறிந்திருந்தாள். பைரனின் கிறுக்குத்தனம், கவி மனம், தங்கை முறையுடையவளோடு அவருக்கு இருந்த காதலுறவு, கணக்கற்ற காதலிகளுடனான தொடர்பு போன்ற ஒழுக்க மீறல்கள் பைரனின் ஒரே சட்டபூர்வ மகளான ஏடாவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆன்னா ஏடாவை மிகமிகக் கடுமையாக வளர்த்தாள்.
தனது அரண்மனை போன்ற தாய்வீட்டில் கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்த தந்தையின் உருவப்படத்தை தனது 20 வயதில்தான் முதல்முறையாகப் பார்த்தாள் ஏடா.
தந்தையின் கவி மனம் மட்டுமல்ல, தாயின் கணிதப் புலமையையும் பல மடங்கு அதிகமாகக் கொண்டிருந்த ஏடா, தன் கடைசி விருப்பமாகத் தான் 36 வயது வரை பார்த்தே இராத தனது தந்தை பைரனின் கல்லறைக்கு அருகிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, நவம்பர் 27, அன்று நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டாள்.
ஏடா, டிசம்பர் 10, 1815-ல் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன், தாய் லேடி பைரன். ஏடா பிறந்த சில வாரத்திலேயே அவரது தாய் கணவரைப் பிரிந்தார். ஏடாவுக்கு 8 வயதாக இருந்தபோது பைரன் இறந்துபோனார்.
ஏடாமட்டும் தான் பெருங்கவி பைரனின் சட்டபூர்வமான ஒரே ஒரு மகள். பைரனுக்கு அவரது மாற்றாந்தாயின் மகளும் தங்கையுமான அகஸ்டாவுடன் காதல் உறவு இருந்தது. எனவே தன் காதல் மனைவி ஆன்னாவுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘அகஸ்டா ஏடா’ என்றே பெயரிட்டார் பைரன்.(அகஸ்டா ஏடா பைரன் (Augusta Ada Byron).திருமணத்திற்குப் பிறகு, அகஸ்டா ஏடா கிங், கவுண்டஸ் ஆஃப் லவ்லேஸ் (Augusta Ada King, Countess of Lovelace).
அகஸ்டாவுடனும், மேலும் பலருடனும் பைரனுக்கு இருந்த உறவுகளையும் அவரது பைத்தியக்காரத்தனத்தையும் திருத்த முடியாது என்று அறிந்துகொண்ட ஆன்னா, ஏடா பிறந்து 5 வாரங்களானபோது பைரனை மணவிலக்கு செய்வதாக அறிவித்துவிட்டுத் தனது தாய்வீட்டிற்குப் பிரிந்து சென்றார். மாபெரும் கணித நிபுணரான ஆன்னா இஸபெல்லா, பைரனைப் போல ஏடா எந்தவிதத்திலும் வளரக் கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்பைக் காட்டினார். ஆன்னாவின் தாயும் ஏடாவின் பாட்டியுமானவரின் கடுமையான கண்காணிப்பில் ஏடா வளர்ந்தாள்.
தாயைப்போலவே ஏடாவுக்குக் கணிதம் இயல்பாகவே வந்தது; எனினும் அவளுக்குத் தனியே சிறப்புக் கணிதப் பாடம் எடுக்க ஆசிரியரை நியமித்திருந்தார் ஆன்னா. தனது 17-ம் வயதில் கணித ஆசிரியருடன் காதல்வயப்பட்ட ஏடா, தாயின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க அந்த ஆசிரியருடன் வீட்டிலிருந்து தப்பி ஓடினாள். ஆனால் காதலன் வீட்டில் அவர்களைக் கண்டுபிடித்து ஏடாவை மீண்டும் ஆன்னாவிடம் ஒப்படைத்தார்கள். அந்த நிகழ்வை அப்படியே மூடிமறைத்த ஆன்னா, மேலும் பலபடி ஏடாவைக் கடுமையாக வளர்க்க முயன்றார். தனது தாய்க்கு ஏடாவை ஒருமையில் அது இது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதுமளவுக்கு ஏடாவின் ஒழுக்கக் குறைபாட்டில் ஆன்னாவுக்கு அதிருப்தி இருந்தது.
ஏடாவின் வயதொத்த பெண்கள் தையல் கலையில் ஈடுபட்டிருக்கையில்,பிறவி மேதையான ஏடா பறவைகள் பறப்பதைத் கூர்ந்து கவனித்துப் பறத்தலியல் (Flyology) என்னும் நூலைத் தனது பதின்மவயதில் எழுதினாள். பறவைகளின் உடல் அமைப்பு, எடை, இறகுகளின் அமைப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வரைபடங்கள் உண்டாக்கி, அவற்றைப்போலப் பட்டுத் துணி காகிதங்கள் மற்றும் கம்பிகளால் இறக்கைகளையும் செய்து கொண்டிருந்தாள் ஏடா. கணிதத்தில் நிபுணராகிய ஆன்னாவை விடவும் பல படிகள் முன்னேறி, “எண்களின் மாயக்காரி” எனக் கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜினால் செல்லப் பெயர் சூட்டுமளவுக்குக் கணிதத்தில் நிபுணத்துவம் கொண்டிருந்தாள் ஏடா. பாபேஜ் மட்டுமல்லாது பல முன்னணி அறிவியலாளர்களுடன் ஏடாவுக்குத் தொடர்பு இருந்தது.
அக்காலத்தின் சிறந்த அறிவியலளர்களான மேரி சோமர்வில்லே மற்றும் அகஸ்டஸ் டி மார்கன் ஆகியோர் ஏடாவுக்குப் பாடம் கற்பித்தனர். குறிப்பாக மேரி சோமர்வில்லே ஏடாவுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார், அவருடன் அவர் விண்வெளி மற்றும் வானியல் குறித்து விவாதித்தார்.
ஏடா ஒரு உயர்குடிப் பெண் என்பதால், மேரி போன்ற பெண் அறிவியலாளர்களுடன் நட்பில் இருந்ததோடு அக்காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். மின்காந்தவியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடேயுடன் ஏடா அறிவியல் கருத்துக்களை விவாதித்தார். தந்தி கண்டுபிடிப்பாளரான சார்லஸ் வீட்ஸ்டோன், கலைக்கண்ணாடியைக் கண்டுபிடித்தவரான டேவிட் ப்ரூஸ்டர் ஆகியோருடன் ஏடாவுக்கு அறிமுகமும் நல்ல நட்பும் இருந்தது. ஏடா தனது தந்தை பைரனின் “கற்பனைத் திறனையும்” தாயின் “கணிதத்தையும்” இணைத்துத் தன்னுடைய அறிவியல் அணுகுமுறையை “கவித்துவ அறிவியல்” (Poetical Science) என்று அழைத்தார்.
ஏடாவுக்கு 17 வயது இருக்கும்போது, மேரி சோமர்வில்லே மூலம் கணினியியலின் தந்தை எனக்கருதப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார். சில வருடங்கள் அவருடன் நல்ல அறிவார்ந்த நட்பிலிருந்த ஏடா, பாபேஜ் உருவாக்கிய கொஞ்சம் பெரிய கால்குலேட்டர் போன்ற கணக்கிடும் இயந்திரத்தைப் பார்த்தவுடன், அதன் நுட்பத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். பாபேஜ் அந்த இயந்திரத்தை வெறும் எண்களைக் கணக்கிடும் கருவியாக மட்டுமே பார்த்தார். ஆனால் ஏடா, அந்த இயந்திரம் எண்களைத் தாண்டி இசை, ஓவியம் மற்றும் குறியீடுகளைக் கூடக் கையாளும் என்று கணித்தார். இதுதான் இன்றைய நவீன கணினிகளின் அடிப்படைத் தத்துவம்.
இப்போது உபயோகத்தில் இருக்கும் நவீன கணினிக்கு இணையான ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்ற ஒன்றை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்த சார்லஸ் பாபேஜ் இத்தாலியில் உள்ள துரின் பல்கலைக்கழகத்தில் தனது அந்த அனலிட்டிக்கல் இயந்திரத்தைப் பற்றி 1842-ல் ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஆற்றினார். அவருக்கு இத்தாலிய மொழி தெரியாது. அரங்கிலிருந்த இத்தாலியர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் பாபேஜின் நண்பர் ஜியோவானி பிளானா அந்த உரையை உடனுக்குடன் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து விளக்கினார்.
அந்த உரையைத் தழுவி இத்தாலியப் பொறியாளர் லூய்கி மெனாப்ரியா, அனலிட்டிகல் என்ஜினின் செயல்பாடுகளைப் பற்றிப் பிரெஞ்சு மொழியில் ஒரு கட்டுரையை எழுதினார். அக்காலத்தில் ஐரோப்பாவின் அறிவியல் மொழியாகப் பிரெஞ்சு இருந்தது.
பாபேஜின் நண்பர்கள் ஏடாவிடம் அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். ஏடா அதை மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அசல் கட்டுரையை விட மூன்று மடங்கு அதிகமான நீளத்திற்குத் தனது சொந்த “குறிப்புகளை” (Notes A to G) அதில் சேர்த்தார். அந்த ‘Note G’ பிரிவில்தான் “பெர்னோலி எண்களை” அந்த இயந்திரம் எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதற்கான வழிமுறையை எழுதினார். இதுவே உலகின் முதல் கணினி நிரல் (First Computer Program) எனக் கருதப்படுகிறது.
ஏடா தனது ‘குறிப்பு G’ பகுதியில், பெர்னோலி எண்களைக் கணக்கிடுவதற்கான ஒரு படிமுறை நிரலை (Algorithm) எழுதினார். பெர்னோலி எண்கள் என்பது எண் கோட்பாட்டில் (Number Theory) பயன்படுத்தப்படும் ஒரு வரிசைமுறை எண்கள். பாபேஜின் இயந்திரம் வெறும் கூட்டல், கழித்தலை மட்டும் செய்யாமல், ஒரு சங்கிலித் தொடர் போன்ற கட்டளைகளைப் பின்பற்றி எப்படி ஒரு சிக்கலான விடையைக் கண்டறியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க ஏடா விரும்பினார்.
ஏடா தனது நிரலை ஒரு அட்டவணை வடிவில் உருவாக்கினார். இன்றைய நவீன புரோகிராமிங்கில் பயன்படுத்தப்படும் பல அடிப்படை நுட்பங்களை அவர் அன்றே பயன்படுத்தியிருந்தார்: இயந்திரத்தின் தரவுகளைச் சேமிக்கும் இடங்களை மாறிகள் -Variables என்று குறிப்பிட்ட ஏடா அவற்றை $V_1, V_2, V_3$ எனப் பெயரிட்டு அழைத்தார். ஒரு குறிப்பிட்ட கணக்கை மீண்டும் மீண்டும் செய்ய ‘சுழற்சி’ (Loops) முறை தேவை என்பதை அவர் உணர்ந்து, அதைத் தனது நிரலில் சேர்த்தார். ஒரு விடை கிடைத்தால் அடுத்த கட்டத்திற்குச் செல்வது போன்ற தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கும் முறையையும் அவர் விளக்கினார்.
இதற்கு முன்னால் யாரும் ஒரு இயந்திரம் தானாகவே ஒரு கணக்கைச் செய்வதற்குத் தேவையான “வழிமுறைகளை” எழுதியதில்லை. இயந்திரம் கணக்கிடும் என்பது மட்டுமே பாபேஜின் பார்வையாக இருந்தது, ஆனால் ஏடா இயந்திரத்திற்கு நாம் எப்படி கணக்கிட வேண்டும் என்று “கட்டளை” இடலாம் எனக் கருதினார்.
இந்தச் சிறிய வித்தியாசம்தான் மென்பொருள் (Software) என்ற துறையை உருவாக்கியது. ஏடா எழுதிய அந்த முதல் நிரலில் ஒரே ஒரு சிறிய பிழை (Bug) இருந்தது. அந்தப் பிழையை அவர் வேண்டுமென்றே செய்தாரா அல்லது தற்செயலாக நடந்ததா என்று இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பிழையைத் தவிர்த்துப் பார்த்தால், அந்த நிரல் தர்க்கரீதியாக மிகச் சரியானது. அந்த இயந்திரம் ஒருவேளை அப்போதே உருவாக்கப்பட்டிருந்தால், ஏடாவின் நிரல் துல்லியமாக வேலை செய்திருக்கும் என்று நவீன விஞ்ஞானிகள் கணினி மூலம் சோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு இயந்திரத்தால் எண்களைக் கையாள முடிந்து, அந்த எண்களை இசைக் குறிப்புகளாகவோ, ஓவியப் புள்ளிகளாகவோ மாற்றினால், கணினியால் தானாகவே இசையமைக்க முடியும் என்று ஏடா 1840-களிலேயே கணித்தார். இதுதான் இன்றைய Artificial Intelligence (AI) மற்றும் டிஜிட்டல் இசையின் தொடக்கப்புள்ளி.
ஏடா ஒரு புகழ்பெற்ற உவமையைக் குறிப்பிட்டார்: “நெசவு இயந்திரம் எப்படி பூக்களை நெய்கிறதோ, அதேபோல் அனலிட்டிகல் என்ஜின் இயற்கணித வடிவங்களை (Algebraic patterns) நெய்யும்.” துணிகளில் எம்பிராய்டரி டிசைன் செய்ய அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘பஞ்ச் கார்டுகளை’ கணினிக்குத் தரவுகளை வழங்கப் பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கினார். “இயந்திரங்களுக்குச் சொந்தமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது; நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே அவை செய்யும்.”என்றார் ஏடா.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீனக் கணினியின் தந்தை ஆலன் டூரிங் (Alan Turing), ஏடாவின் இந்தக் கருத்தை ஆராய்ந்து அதற்கு Lady Lovelace’s Objection என்று பெயரிட்டார். ஏனென்றால் ஏடா லவ்லேஸ் அந்த இயந்திரத்தை கொடுக்கப்படும் கட்டளைகளை மட்டும் செய்யும் ஒரு “கருவியாக” , ஒரு பணியாளாக மட்டுமே பார்த்தார்; அதற்குச் சொந்தமாகப் புதிய யோசனைகளை உருவாக்கும் திறன் இல்லை என்றார். ஆனால், ஆலன் டூரிங் இயந்திரங்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் அவை மனிதனைப் போலச் “சிந்திக்கும் ஆற்றல்” பெற்று, புதிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்பினார். ஏடா இயந்திரத்தின் வரம்புகளை விளக்கியதை, டூரிங் தனது ‘சிந்திக்கும் இயந்திரம்’ என்ற கோட்பாட்டிற்கு எதிராக வந்த ஒரு தர்க்கரீதியான தடையாக (Objection) கருதினார்.
அடுத்த நூற்றாண்டு உலகமே கணினி மயமாகப் போவதை அறியாமலேயே உலகின் முதல் கணினி நிரலரான ஏடா லவ்லேஸ் அந்த அறையில் அன்று விடைபெற்றுக்கொண்டாள். எந்தத் தந்தையைப் பார்க்கக் கூடாது என்று ஆன்னா தடுத்தாளோ, அந்தத் தந்தை இறந்த 36-வது வயதிலேயே ஏடாவும் இறந்தாள். நேரில் சந்தித்திராத தந்தையின் கல்லறைக்கு அருகே தானும் அமைய விரும்பினாள் ஏடா.
நாட்டிங்ஹாம்ஷையரில் இருந்த புனித மேரி மக்தலீன் தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில், எளிய நிலவரையில் ஈரமான சுவர்களுடன் இருந்த பெருங்கவி பைரனின் கல்லறை திறக்கப்பட்டது. அவரது சவப்பெட்டியின் மீது போர்த்தப்பட்டிருந்த ஊதா வெல்வெட் துணி மங்கி வெளுத்திருந்தது. அந்த வெல்வெட் துணியின் மீது ஒரு வெண்கலத் தகடு வைக்கப்பட்டு, அதே குழியில் பைரனின் சவப்பெட்டிக்கு அருகிலேயே “நானும் பைரனின் குருதிதான்” என அறிவித்துவிட்டு இறந்த ஏடாவின் சவப்பெட்டியும் இறக்கி வைக்கப்பட்டது. ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூடத் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் மனைவியின் சடங்கில் வில்லியம் கலந்துகொண்டார்.
தாய் ஆன்னா, ஏடாவின் அடக்கத்திற்கு வராமல், குதிரைப்பந்தயக்காரன் ஜான் குரோஸுக்கு பெருந்தொகையளித்து, ஏடா எழுதிய காதல்கடிதங்களை அவனிடமிருந்து வாங்கி லண்டன் சதுக்கத்தில் இருந்த அந்த மாபெரும் மாளிகையில், அவளது கடிதங்கள், கணிதக்குறிப்புகள், பறவைகளைக்குறித்த ஏடாவின் அவதானிப்புகள், குதிரைப்பந்தய கணக்கு வழக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் என எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்து ஏடாவின் ஆன்மாவைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள். ஏடாவின் சூதாட்டம், ஜான் குரோஸ் உடனான தொடர்பு மற்றும் தந்தையின் சாயல் தெரிந்த அனைத்துக் கடிதங்களையும் அவர் எரித்தார். அப்படி அழிப்பதன் மூலம் ஏடாவின் வாழ்வைத் தூய்மைப்படுத்தி அவளைச் சொர்க்கத்திற்கு அனுப்ப முடியும் என ஆன்னா நம்பினாள்.
அதிர்ஷ்டவசமாக, ஏடா மற்றும் பாபேஜ் பரிமாறிக்கொண்ட அனலிட்டிகல் என்ஜின் தொடர்பான முக்கியக் குறிப்புகள் பாபேஜிடம் இருந்தன. பாபேஜ் அவற்றை மிகவும் பத்திரமாக வைத்திருந்தார். ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்னும் கருவிக்காக ஏடா எழுதிய நிரல்களை, அவளின் சிந்தனை கணினி உலகில் உண்டாக்கிய தாக்கத்தை ஆன்னாவால் ஏதும் செய்ய முடியவில்லை.
விக்டோரியன் காலத்தில் பெண்கள் அறிவியல் அல்லது கணிதத் துறையில் ஈடுபடுவது அநாகரிகமாகக் கருதப்பட்டது. எனவே, ஏடா தனது கட்டுரையைத் தனது முழுப் பெயரில் வெளியிடாமல் “A.A.L.” என்ற இனிஷியலில் மட்டுமே வெளியிட்டார். இதனால் அந்த மேதை ஏடாதான் என்று பலருக்குத் தெரியாமலேயே போனது. சார்லஸ் பாபேஜின் அனலிட்டிக்கல் என்ஜின் திட்டம் நிதி நெருக்கடியால் முழுமையாக முடிக்கப்படவுமில்லை. மென்பொருள் இருந்தும் அதை இயக்க வன்பொருள் (Hardware) இல்லாததால், ஏடாவின் நிரல்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டன.
பாபேஜ் இறந்த பிறகு, ஏடாவின் அந்தக் குறிப்புகள் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றன. பல தசாப்தங்களாக இவை தூசு படிந்து கிடந்தன. ஏடாவின் மகள் ஆன் பிளண்ட் தனது தாயின் சில குறிப்புகளைப் பாதுகாத்தார். அவர் மூலமாகவே ஏடாவின் சில தனிப்பட்ட சிந்தனைகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தன. 1953-ல் பி.வி. போடென் ஏடாவின் குறிப்புகளை மறுபதிப்பு செய்தபோதுதான் நவீன கணினி அறிவியலாளர்கள் வியந்து போனார்கள். மின்னணு கணினிகளே இல்லாத காலத்தில் ஏடா எழுதிய ‘சுழற்சிகள்’ மற்றும் ‘தர்க்கங்கள்’ அப்படியே நவீன நிரலாக்க மொழிகளோடு ஒத்துப்போவதைக் கண்டு உலகமே அதைத் திரும்பிப் பார்த்தது. இன்று ஏடாவின் அசல் குறிப்புகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் “ஏடா லவ்லேஸ் தினம்” கொண்டாடப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், ஏடாவின் சூதாட்டப் பழக்கம், கடன் சிக்கல்கள் மற்றும் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தாய் ஏடாவின் ஆவணங்களை எரித்தது போன்றவை அவரது புகழை உலகறியாமல் செய்துவிட்டது. ஏடா ஒரு “விஞ்ஞானி” என்ற பிம்பத்தை விட பைரனின் கிறுக்குத்தனக்களும் ஒழுக்க மீறல்களும் கொண்ட மகள் என்ற பிம்பமே ஆன்னாவால் வரலாற்றில் முன்வைக்கப்பட்டது.
ஏடா லவ்லேஸ், லவ்லேஸ் கோமானின் குடும்பத்தைச் சேர்ந்த “சீமாட்டி” என்றாலும், அவரது நிதி நெருக்கடிக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தன. விக்டோரியன் காலத்தில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவருக்கே சொந்தமாகும். ஏடாவிடம் கணிசமான சொத்துக்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த அவர் வில்லியமிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஏடா பல அறிவியல் சோதனைகளைச் செய்தார், விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கினார், அறிஞர்களை வரவழைத்து விவாதங்களை நடத்தினார். இவற்றிற்குப் பெரும் தொகை செலவானது. பாபேஜின் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்ய அவர் முயன்றதும் நிதி அழுத்தத்தைக் கொடுத்தது. ஒரு சீமாட்டியாக அவர் ஆடம்பரமான விருந்துகளை நடத்தவும், அவர் செய்ய வேண்டி இருந்த சமூகக் கடமைகளுக்கும் பணம் தேவைப்பட்டது. கடன் பழக்கம் வட்டியோடு சேர்ந்து வளர்ந்தது.
ஏடாவின் நிதி நெருக்கடிக்கு முக்கியமான காரணம் ஜான் குரோஸ். அவர் மூலமே ஏடாவுக்குச் சூதாட்டப் பழக்கம் அறிமுகமானது. குரோஸ் ஒரு ஊதாரி மற்றும் கடனாளி. ஏடா அவரிடம் கொண்ட நட்பின் காரணமாக குரோஸின் கடன்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருந்தது. தனது சொந்தத் தேவைகளை விட, குரோஸ் மற்றும் அவரது குதிரைப்பந்தய முயற்சிகளுக்கு நிதி வழங்க ஏடா நிறைய கடன் வாங்கினாள். ஏடாவின் தாய் லேடி பைரன் பெரும் செல்வந்தர்; ஆனால் அவர் ஏடாவுக்கு வழங்கும் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தினாள். ஏடா அந்தச் சுதந்திரத்தைப் பெற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றாள்.
1840-களின் இறுதியில், ஏடாவுக்குக் கடுமையான பண நெருக்கடி இருந்தது. அப்போது அவர் தனது கணித அறிவைப் பயன்படுத்தி குதிரைப் பந்தயங்களில் வெற்றி பெற ஒரு ‘கணித மாதிரியை’ உருவாக்க முடியும் என்று நம்பினாள். ஜான் குரோஸுடன் இணைந்து ஒரு ரகசியக் குழுவை உருவாக்கினாள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட குதிரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கணக்கிட ஒரு சிக்கலான சூத்திரத்தைப் பயன்படுத்தினர். அந்த குதிரைதான் வெற்றி பெறும் என நம்பி அதன் பெயரில் பெருந்தொகையைப் பந்தயத்தில் கட்டினர். ஏடா ஒரு சிறந்த கணிதவியலாளர், ஆனால் ஒரு விஷயத்தைக் கணக்கில் கொள்ளத் தவறினாள்: கணிதச் சமன்பாட்டில் குதிரையின் வேகத்தைக் கணக்கிட முடிந்தது, ஆனால் வானிலை மற்றும் ஜாக்கிகளின் சூழ்ச்சிகளைக் கணிக்க முடியவில்லை. ஏடா நிபுணத்துவம் கொண்டிருந்த, அவர் பெரிதும் நம்பிய எண்கள் அவளைக் கைவிட்டன.
ஏடாவின் கணிதச் சூத்திரம் காகிதத்தில் சரியாக இருந்தது, ஆனால் பந்தயக் களத்தில் அது தோற்றது. அவர் மீண்டும் மீண்டும் வெல்ல முயன்று பெரும் தொகையை இழந்தார். ஏடா இழந்த தொகை இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும். அவரது கணவர் வில்லியமுக்குத் தெரியாமல் வைர நகைகளை இரண்டு முறை அடகு வைத்தார். கணவருக்கு அது தெரியாமலிருக்க போலி வைரங்களை மாற்றி வைத்தார். இறுதியில் அவர் பெரும் கடனாளியாகவே இறந்தார்.
ஏடா லவ்லேஸ் ஒரு “அல்காரிதம்” மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முயன்றவர்களில் முதன்மையானவர். இன்று நாம் பயன்படுத்தும் பங்குச் சந்தை கணிப்புகள் மற்றும் AI தரவு பகுப்பாய்வு ஆகியவற்றின் முன்னோடி முயற்சி இதுதான்.
பாபேஜ் இறந்த பிறகு, அவரது கண்டுபிடிப்புகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கணினி பற்றிச் சிந்தித்த இவர்களை உலகம் “பைத்தியக்காரர்கள்” என்று கருதி மறந்துவிட்டது.
1940-களில் இரண்டாம் உலகப் போரின்போது, ஆலன் டூரிங் ஏடாவின் குறிப்புகளை மீண்டும் கண்டெடுத்தார். ஏடா எழுதிய நிரல்களை ஆராய்ந்த டூரிங், ஒரு இயந்திரத்தால் தர்க்கரீதியாகச் சிந்திக்க முடியும் என்ற ஏடாவின் கருத்தை உறுதிப்படுத்தினார். 1953-இல் பி.வி. போடென் ஏடாவின் கட்டுரைகளை மறுபதிப்பு செய்தபோதுதான், “உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்” என்பது உலகிற்குத் தெரியவந்தது. ஏடாவின் கண்டுபிடிப்புகள் அவர் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தால், கணினித் துறை இன்னும் 50 ஆண்டுகள் முன்னதாகவே வளர்ந்திருக்கும்.
ஏடா லவ்லேஸிற்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் பைரன் கிங்-நோயல் அமைதியான தனிமையை விரும்பும் மனிதராக இருந்தார். இராணுவத்தில் பணியாற்றினார், ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காமல் தனது 26-வது வயதிலேயே காலமானார். மகள் ஆன் பிளண்ட் ஏடாவின் குழந்தைகளிலேயே மிகவும் திறமையானவர். ஒரு சிறந்த இசைக்கலைஞர் மற்றும் ஓவியர். அரபுக் குதிரைகளின் இனத்தைப் பாதுகாப்பதில் இவர் உலகப்புகழ் பெற்றவர். தனது பாட்டி ஆன்னாவின் கடுமையான வளர்ப்பால், தனது தாயின் மேதைமையை விட அவரது மீறல்கள் குறித்தே அதிகம் கேள்விப்பட்டு வளர்ந்தார். இளைய மகன் ரால்ப் கிங்-நோயல் தனது குடும்ப வரலாற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவர் தனது தாத்தா பைரனுக்கும் பாட்டி ஆன்னாவுக்கும் இடையிலான மோதல்கள் குறித்துப் புத்தகம் எழுதினார். ஆயினும் அந்த நூல் குடும்ப கெளரவத்தை பாதுகாக்காமல் பழைய குப்பையை கிளருவதாகவே அமைந்தது.
ஏடா இறந்த பிறகு, இந்த மூன்று குழந்தைகளும் பாட்டி ஆன்னாவின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தனர். ஏடா ஒரு “தவறான முன்மாதிரி” என்று அவர்களுக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டது. ஏடாவின் மேதமை, கணித நிபுணத்துவம் மற்றும் அறிவியல் சாதனைகளை விட, அவரது கட்டுப்பாடற்ற இயல்பும், பலரோடிருந்த காதலும் பற்றியே அதிகம் குழந்தைகளிடம் பேசப்பட்டது. கடுமையான விதிகள் இருக்குமிடத்தில் தவிர்க்கமுடியாமல் எழும் மீறல்கள் தான் ஏடாவின் வாழ்விலும் இருந்தது என்பதை அவர்கள் வளர்ந்த பிறகுதான் உணர்ந்தனர். குறிப்பாக மகள் ஆன் பிளண்ட், தனது தாயின் தனித்துவமான சிந்தனைகளையும் சிறப்புகளையும் தனது பிற்கால வாழ்க்கையில் உணர்ந்தார்.
ஏடாவும் பைரனும் இறந்ததிலும் வாழ்ந்ததிலும் இருந்த ஒற்றுமைகள் திகைப்பூட்டுவது. இருவருமே 36-வது வயதில் இறந்தார்கள். இருவருமே கடுமையான வலியை அனுபவித்தார்கள். இருவருமே மிகுந்த புத்திசாலிகளாக இருந்தும் உலகோரால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தார்கள். இருவருமே சமூகத்திற்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பைரன் கவிதைகளிலும் ஏடா கணிதத்திலும் ஆழ்ந்திருந்தார்கள். நோட்டிங்ஹாம்ஷையரின் அந்த இருண்ட நிலவறையில், சமூகக் கட்டுப்பாடுகளும், வேவு பார்க்கும் ஆட்களும், விதிகளும் இல்லாத அந்த இடத்தில் இருவரும் இன்று அருகருகே துயில்கிறார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
