ஈழத்தின் தமிழ்த்திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி சார்பான பார்வை

ஈழத்தின் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பு பணியானது ஏறத்தாழ 60 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது நம்மில் பலர் அறிந்த விடயமே. அன்று முதல் இன்றுவரை பல்வேறு படைப்பாளர்களால் பல்வேறு படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளமையும் நாம் அறிந்ததே. இந்த படைப்புகளை வெளிக்கொணர்வதில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் பெரியளவிலான பல சிரமங்களை எதிர்கொண்டே அவற்றை உருவாக்கி வெளியீடு செய்கின்றனர். திரைப்படத் தயாரிப்பு என்பது கட்டுரைகளை அல்லது கதைகளை எழுதி அச்சுப்பதிப்பு செய்து வெளியிடுவது போன்று ஓரிரு படிமுறைகளில் பூரணப்படுத்தப்படுபவையல்ல. அவற்றை உருவாக்குவதில் பல்வேறு படிமுறைகளை படைப்பாளர்கள் தாண்ட வேண்டி இருக்கிறது.

முதலில் திரைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கும் பணி அதற்கான சிறந்த கதைக்கருவொன்றை அடையாளம் காணுதல்> அந்த கதைக்கருவை மையப்படுத்தியதாக கதையை உருவாக்குதல்> அதனை பின்னர் திரைக்கதைக்கு மாற்றுதல் போன்ற இந்த ஆரம்பப் படிமுறைகளுக்கே நீண்ட நாட்களை செலவிடவேண்டியிருக்கிறது. அதற்கடுத்தாற்போர் முதலீட்டாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை இசைபடவைத்து படத்தை ஆரம்பித்து முடிப்பதற்கிடையில் மேலும் பல படிமுறைகளைத்தாண்டுவதோடு பல சவால்களையும் முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது. இவையெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்கள் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய விடயமல்ல. 

அத்தனை படிமுறைகளையும் தாண்டி ஒரு படைப்பை தயாரித்து வெளியிட்டால் அதற்காக செலவிடப்பட்ட முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை த்தானும் பெறமுடியாத இக்கட்டான தோல்வி நிலையை பல படைப்புகள் சந்தித்து விடுகின்றன. இவ்வாறான தோல்விகள் படைப்பாளர்களை மீளவும் தலை தூக்கமுடியாத நிலைக்கும் கொண்டு சேர்த்துவிடுகின்றன். அப்படியான நிலைமையிருந்தும் பலர் துணிவுடன் அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் துணிகரமாக ஈடுபடுவதை நாம் எம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது. சில திரைப்படங்கள் படைப்பின் தரத்தின் பொருட்டு மக்கள் மனதைத்தொட்டு வெற்றிபெற்ற படமாக இருந்தாலும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறாமல்போனதும் உண்டு.

இப்பேற்பட்ட ஒரு நிலைமையில் ஈழத்தின் தமிழ் சினிமாத்துறை இருப்பதற்கு காரணம் என்ன என்பதை படைப்பாளர்களோ> ஆர்வலர்களே> முதலீட்டாளர்களோ தேடிப்பார்த்து சரியான காரணங்களை கண்டறிந்தார்களா என்றால் அநேகமாக இல்லை என்பதே எனது கருத்து. நானும் இந்தக் கட்டுரையில் சரியான காரணங்களை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கேட்டறிந்து வெளியிடலாம்> அவர்கள் மிகச்சரியான கருத்துகளை தேடிக்கண்டறிந்து வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துப் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆயினும் எனது முயற்சிகள் நான் எதிர்பார்த்தளவு பயனளிக்கவில்லை என்றே கூறலாம். திரைப்படத்துறையில் இருப்பவர்களில் அநேகமானவர்கள் பதில்தருவதற்கு முன்வரவில்லை. பதில் தந்த சிலரும் தாங்கள் ஏற்கனவே தீர்மானித்து தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்ற காரணங்களைத்தான் திரும்பத் திரும்ப கூறுகின்றார்களே தவிர அதற்கு அப்பால் சென்று தேடுவதற்கோ> தேடிச்சரியான காரணங்களை கண்டுபிடித்து தாங்கள் கொண்டிருக்கும் காரணங்களை மாற்றுவதற்கோ அல்லது அவற்றோடு கண்டுபிடித்த புதிய காரணங்களை சேர்த்துக்கொள்வதற்கோ  அல்லது ஏனையவர்களின் கருத்துகளுக்கு செவிமடுப்பதற்கோ தயாராக இல்லை.

இவர்களது கருத்துகளுக்குள் மிக முக்கியமான கருத்தாக அநேகமானவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்துத்தான் “தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டால் கட்டாயமாக ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறும்” என்பது. நான் இந்தக் கருத்துடன் உடன்பட்டாலும் அண்மைக் காலங்களில் வெளிவந்த தரமான பல படைப்புகள்கூட வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லையே அப்படியென்றால் அதற்கு காரணமென்ன. இது நிறையவே அலசி ஆராயவேண்டிய ஒரு பிரச்சனை. 

ஈழத்தில் தமிழ் சினிமாப்படங்களை எடுத்து வெளியிடும் படைப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் எத்தனை நாளைக்குத்தான் எடுத்து வெளியிட்டு வெளியிட்டு தங்கள் சொந்த பணத்தை அல்லது இன்னொரு முதலீட்டாளரின் பணத்தை இழந்துகொண்டிருக்க முடியும். சமூக மாற்றத்திற்காக> தங்களுடைய நீண்ட கால கனவை நனவாக்க> தாம் கண்ட பிரச்சனைககளை மட்டும் படைப்புகளுக்கூடாக வெளிக்கொணர> எமது மக்களின் வாழ்வியலை வெளிக்கொணர என்று ஒரு சில படங்களை மட்டும் வெளியிட்டு தங்கள் முதலீட்டை இழக்கலாம் ஆனால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியுமா? ஆகவே கட்டாயமாக எமது நாட்டின் தமிழ்த் திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறும் படங்களாக உருவாக சாத்தியமான காரணங்களை தேடி அவற்றை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. வெறுமனே எமது படைப்புகள் தரமான படைப்புகளாக வெளிவந்தால் வெற்றி பெறும் என்று கூறிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இந்த நிலைமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கியபோது அதற்கான போதுமான பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை. பலர் எனது முயற்சிக்கு தங்களுடைய சாதகமான சமிக்ஞையை காண்பிக்கவில்லை> பலர் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்> பதிலிறுத்தவர்களின் பதில்களும் தீர்வை காண்பதற்கான அல்லது பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கான பதில்களாக அமைய வில்லை.

பதிலிறுத்தவர்களில் அநேகமானவர்களின் பதிலாக எனக்கு தெரியப்படுத்தப்பட்ட பதில்களில் தேடலுக்கான கேள்விக்கு பொருத்தமாக வழங்கப்பட்ட பதில்களை இங்கு தருகிறேன். அவற்றையும் படைப்பாளர்கள் எதிர் காலத்தில் தமிழ் திரைப்படங்களை ஈழத்தில் தயாரிப்பதற்கு முன்னர் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு திரைப்படத்தயாரிப்பில் ஈடுபடுகின்றபோது அவர்களது திரைப்படங்களை வெற்றிப் படங்களாக அமைத்துக் கொள்வதற்கு சில வேளைகளில் உதவியாக அமையக்கூடும். சிலருடைய கருத்துகள் இந்த பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கூடிய பொருத்தமான பதில்களாக அமையாதமையால் அவற்றை இங்கு தவிர்த்திருக்கிறேன். 

1. சரியான கதைக்கரு இல்லாமை

2. சிறந்த ஒளிப்பதிவு இல்லாமை

3. திரைக்கதை வசனம் சரியான முறையில் எழுதப்படுவதில்லை

4. கதைகளில் ஆச்சரியங்கள் திருப்பங்களை சரியான இடத்தில் சரியான முறையில் உட்படுத்துவதில் போதுமான நுட்பங்கள் கதை மற்றும் திரைக்கதை எழுதுபவர்களுக்கு போதாமல் இருப்பதும் அதுபற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளாமையும். 

5. திரைப்பட தொகுப்பு (எடிட்டிங்) சிறப்பாக செய்யக்கூடிய திறன் இல்லாமையும் படங்களில் எடிட்டிங் சிறப்பாக செய்யப்படாமையும்.

6. ஒளிப்பதிவில் ஈடுபடுபவர்களின் திறன் போதாமையும் ஒளிப்பதிவு தரமாக மேற்கொள்ளப்படுவதில் உள்ள பிரச்சனைகளும்.

7. முதலீட்டாளர்களுக்கு முதலிடுவதில் பயம்

8. திரைப்படத்தில் பேசப்படும் மொழி மக்கள் விரும்புவதாக இல்லை அல்லது அவர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட திரைப்படங்களின் மொழியையொத்ததாக இல்லை 

9. தொழில் நுட்பத் திறன் குறைபாடுகள்

10. நடிகர்கள் தேர்வு சரியாக மேற்கொள்ளப்படாமையும் அவர்களின் நடிப்பாற்றல் சிறப்பானதாக அமையாதமையும்

11. ஒப்பனைகளில் தேர்வு பெற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களை பயன்படுத்தாமை அல்லது ஒப்பனை மேற்கொள்பவர்களுக்கு ஒப்பனை சார்பான பூரணமான அறிவு இல்லாமை.

12. நடன அமைப்புகளை பொருத்தமான முறையிலும். சிறப்பான முறையிலும் மேற்கொள்ளும் அனுபவம் போதாதவர்கள் அதற்கு பயன்படுத்தப்படுவது.

13. கலை இயக்குனர்களின் அனுபவக்குறைபாடு சிறந்த காட்சியமைப்புக்கான ஒழுங்குபடுத்துவதில் குறைபாடுகளை உருவாக்குகின்றமை.

14. படைப்புகள் தரமானவைகளாக மக்கள் இரசனைக்கு உகந்தவையாக அமையாமை

15. இலங்கைத் தமிழ் திரைப்படங்களில் இந்திய திரைப்படங்களுக்கு அமைவான ஒலிப்திவு சாதனங்கள் பயன்படுத்தப்படுவதில் உள்ள குறைபாடும் இது பற்றிய போதுமான பயிற்சிகளைப் பெற்றவர்களை இதற்கு பயன்படுத்தாமையும்.

போன்ற மேற்படி கருத்துக்கள் பலவேறு முயற்சிகளுக்கூடாக என்னால் கண்டறியப்பட்ட கருத்துகள். ஏனையவர்களுடைய கருத்துகள் தவிர்த்து எனது மனதிலும் உதித்த சில முக்கியமான விடயங்களையும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொளளலாம் என நினைக்கிறேன். 

– ஈழத்து தமிழ் சினிமாவை பார்க்கும் மக்கள் தொகை இங்கு மிகக் குறைவாகவே உள்ளது.

– தயாரிக்கப்படும் திரைப்படங்களின் தரத்தில் இன்னமும் குறைபாடுகள் இருக்கின்றன.

– சினிமாத்துறையில் ஈடுபடும் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் (நடிகர்கள்> இயக்குனர்கள்> ஒப்பனையாளர்கள்> கமரா இயகக்குனர்கள்> ஒளியமைப்பாளர்கள்> ஒலிப்பதிவாளர்கள்> கலை இயக்குனர்கள்> நடன இயக்குனர்கள்> நடனமாடுபவர்கள்> திரைப்பட எடிட்டர்கள்> கதாசிரியர்கள்> திரைக்கதை எழுதுபவர்கள்> வசனகர்த்தாக்கள் போன்றவர்கள்) அந்தந்த துறைசார் அறிவு> திறன் மற்றும் அனுபவம் குறைவாகவே இருக்கிறது.

– திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் மொழி நடையில் மக்கள் விருப்பத்துக்கு மாறான குறைபாடுகள் இருக்கின்றன.

-சந்தை விரிவாக்கம் பற்றிய விளக்கமும் அதன் தேவை பற்றிய ஆய்வுத்திறனும் இங்கு மிகவும் குறைபாடாக இருக்கிறது.

-புதிய வெளியீட்டுத் தளங்களின் வெளியீட்டுக்கான கிடைப்பனவு ஈழத்துப் படைப்புகளுக்கு இல்லாமல் அல்லது மிகக்குறைவாக இருப்பதும் அதுபற்றிய தெளிவு படைப்பாளர்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருப்பதும்> இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு யாரும் முன்வராதைமையும்> புதிய வெளியீட்டுத் தள உருவாக்கத்திற்கான முயற்சியில் யாரும் ஈடுபடுவதில் முனைப்புக்காட்டாதமையும் இன்னொரு காரணமாக பார்க்கலாம்.

– எமது தாயக திரைப்படங்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வராமை. இங்கு முதலிடுவதற்கு தயங்கும் முதலீட்டாளர்கள் வர்த்தக ரீதியான இலாபத்தை இலக்காகக்கொண்டு அயலகத் திரைப்படங்களில் முதலீடு செய்வதில் மட்டும் அதிக அக்கறை செலுத்துகின்றமை.

-தாயகத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அநேகமான ஊடகங்கள் எமது படைப்பாளர்களை ஊக்குவிப்பதை தவிர்ப்பதோடு மட்டுமல்லாது தமது ஊடகங்களில் வெளியிடப்படும் தொலைக்காட்சித் தொடர்கள்> திரைப்படங்கள்> மற்றும் ஏனைய சில நிகழ்வுகளை அயல் நாட்டில் அதிக விலை கொடுத்து பெற்று தமது ஊடகங்களில் வெளியிடுகின்றமை.

– தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்களின் தயாரிப்புக்கு முந்திய மற்றும் தயாரிப்புக்கு பிந்திய கவனத்தில் எடுக்கப்படவேண்டிய பல விடயங்கள் பற்றிய கவனக்குறைவு> தெளிவின்மை மற்றும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமை.

– படைப்பாளர்கள்> தயாரிப்பாளர்கள்> இயக்குனர்கள் மற்றும் இயக்குனர்கள் தற்போதைய இரசிகர்கள் குழாமின் இரசனை> எதிர்பார்ப்பு> ஆர்வம் மற்றும் விருப்பம் போன்றவற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அல்லது அவை பற்றிய அக்கறையில்லாமல் தங்கள் படைப்புகளை உருவாக்குவது. இந்திய மற்றும் மேற்குலக நாடுகள் தமது சினிமாப் படைப்புகளை நவீன காலத்தைய எதிர் பார்ப்புகளுக்கமைவாக மாற்றிக்கொண்டதோடு அதி நவீன தொழில் நுட்பங்களை இரசிகர்களை ஈர்க்கும் நோக்கோடு பயன்படுத்தி தமது படைப்புகளை படைத்து வெளியிடுகின்றனர். பாகுபலி> அவதார்> ஜூரசிஸ் பார்க் போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாக பார்க்கலாம். அந்த சிந்தனையை நாம் இன்னமும் கவனத்தில் எடுக்காதிருக்கிறோம்.

தாயகத்தின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய மற்றும் தரமான படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்குரியதான ஊக்குவிப்பிலும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும் அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தாமையும் தனது ஆதரவை ஏற்புடையதான வகையில் வழங்காமையும் இதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமையும்.

– இலங்கையின் மொத்த சனத் தொகை 22 மில்லியன் அதில் தமிழ் பேசும் மக்கள் 2.2 மில்லியன் முஸ்லிம் மக்கள் 1.7 மில்லியன். முஸ்லிம் மக்களும் தமிழ் பேசுபவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் மொத்தமாக 3.9 மில்லியன் மக்கள் தமிழ் பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 25 வீதமானவர்கள் படம் பார்ப்பதை பொழுதுபோக்காக கொண்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு லட்சம் மக்கள் உள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் அனேகமாக இந்திய சினிமாவை பார்ப்பதையே பழக்கமாகக்கொண்டவர்கள். இவர்களுள் ஆங்கிலத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களும் உள்ளனர். ஈழத்தில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களை மிகச் சொற்ப அளவிலானவர்களே பார்வையிடுகின்றார்கள். ஒரு 10 வீதமானவர்கள் ஈழத் தமிழ்த் திரைப்படங்களை பார்ப்பவர்கள் என்று ஊகித்தால் மொத்தமாக 97>500 தனி நபர்களே உள்ளனர். எமது திரைப்படங்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் ஆய்வு செய்து பார்த்தால் இதை விட மிகச் சொற்ப அளவிலேயே இருப்பர். அதனை இதுவரை யாரும் ஆய்வு செய்து பார்க்கவில்லை. ஆய்ந்து பார்க்கவேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதுதான் உண்மையான சந்தைக்கேள்வி என்ன என்பதை கண்டறிய முடியும். அதேவேளை இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியவும் முடியும். மேலே குறிப்பிட்ட இந்த தொகையினர்  அனைவரும் எமது திரைப்படங்களைப் பார்த்தால் அனுமதிச் சீட்டின் விலை உரூபா 400 என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் உரூபா 39>000>000களுக்கே மொத்த விற்பனை இடம்பெறும்.ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு இந்திய வெளியீட்டாளர்கள் இந்திய உரூபாயில் 10 கோடியில் இருந்து 300 கோடிகள்வரை செலவு செய்கிறார்கள் (இந்த தொகை இலங்கை உரூபாயில் 3.4 மடங்கு அதிகமாக இருக்கும்;). நமது படைப்பாளர்கள் முடிந்தவரை முயற்சி செய்து இலங்கை உரூபாயில் 3 கோடிகளுக்குள்தான் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆகவே மேலே குறிப்பிட்ட வருமானம் மட்டும்தான் முழுமையாக கிடைக்குமாக இருந்தால் இவர்களால் எப்படி வெளியீட்டாளர்கள்> விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் போன்ற அனைவரது இலாபப் பங்கையும் கணிப்பிட்டு தங்கள் இலாபத்தையும் கணிப்பிட்டு வர்த்தக ரீதியில் வெற்றிபெற்ற திரைப்படமாக எடுக்க முடியும். இதே வேளை நடைமுறையில் இதுவரை வெளிவந்த நமது திரைப்படங்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையை ஒரு ஊகிப்பில் மாவட்டத்திற்கு 1000 நபர்கள் என்று பார்த்தால் 25 மாவட்டங்களையும் சேர்த்து 25000 நபர்கள் பார்வையிட்டிருப்பார்கள். இந்த தொகை கூடலாம் குறையலாம் சராசரியாக என்ற ஊகிப்பில் இந்த கணிப்பீட்டை செய்திருக்கிறேன் அப்படியென்றால் மேலே நான் குறிப்பிட்ட தொகையைவிடவும் மிகக்குறைந்தளவு வருமானமே கிடைக்கும். இந்த நிலைமைதான் தொடரும் என்ற நிலைமை இருந்தால் ஒருபோதும் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் வார்த்தக ரீதியில் வெற்றிபெறாது என்ற ஊகிப்புக்கு நாம் வரலாம். ஆகவே நாம் இந்த நிலையில் இருந்து வர்த்தக ரீதியில் வெற்றிபெறுவதற்கான மாற்றுத் தீர்வுகளை ஆராய்வது சிறந்த பெறுபேறுகளை வழங்கும்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.