நதிக்கரையோரம் பரந்த ஆலமரம் ஆழ்ந்த அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
மாலையில் யாரோ மனதோடு பேச என்ற சுத்த தன்யாசியில் அமைந்த ராஜாவின் இசையில் வரும் வாலியின் வரிகள் மெல்ல அலையென வந்து மனதைத் தொடுகிறது. சூரியன் மறைந்த பிறகு, வானம் தேங்கிய ஒளியின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த தருணம்.
அந்திப் பொழுதின் நிழல் மட்டும் நிலத்தின் மேல் நீண்டு நிற்கும் வேளை.
இருள் மெதுவாகப் பரவி, வெளிச்சம் குறைந்த அந்த இடைப்பட்ட நேரத்தில், சிறிய நட்சத்திரங்கள் கருமையான வானத்தின் மேல் ஒன்றன் பின் ஒன்றாகத் துளையிட்டு வெடிக்கத் தொடங்குகின்றன.
அத்தகைய நேரத்தில், ஆலமரத்தின் கிளைகளில் பல மணி நேரமாக இலைகளும் காய்களும் போல் ஒட்டியே உறங்கிக் கொண்டிருந்த ஒரு விசித்திரமான உயிரினம் திடீரென விழித்தெழுகிறது – அதுதான் வௌவால், பறக்கும் ஒரே பாலூட்டி!

மென்மையான சிறகுகளுடன் கூடிய அந்த நிழல் உருவங்கள் தங்கள் தங்குமிடங்களிலிருந்து மேலெழுந்து, குளிர்ந்த காற்றைக் கிழித்துக் கொண்டு அழகான வளைவுகள், வளைந்தும் நெளிந்தும் பறக்கத் தொடங்குகின்றன. இவற்றை நாம் அடர்ந்த மரங்களின் மேல், பழமையான கோவில்களின் ஓரங்களில், பாழடைந்த கட்டிடங்களின் இருட்டு மூலைகளிலும் பலமுறைப் பார்த்திருப்போம். அவை எப்போதும் மர்மம் போலவே தோன்றுகின்றன. சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நாம் காண முடியாத உலகில் அவை துல்லியமாகச் செல்கின்றசெல்கின்றன – இரவின் மறைநுண் வழிச் சிந்தனை போல.

கண்டறியப்படாத உள்ளார்ந்த திசைகாட்டி
நகரங்களின் சலசலப்புகளுக்கு அப்பால் ஒளி, ஒலி மாசுகள் இன்றி மேலும் விண்மீன்களால் சூழப்பட்ட, நான்கு கிரிக்கெட் மைதானம் கொண்ட நிலப்பரப்பில் அமைந்த சிறிய தீவில், நரம்பியல் விஞ்ஞானிகள் குழு தங்கள் ஆய்விற்காக ஆறு எகிப்திய பழவெளவால்களை விடுவித்தது. ஒவ்வொரு வௌவாலின் மண்டையோட்டிற்குள்ளும் தரவுப் பதிவியுடன் (data logger) இணைக்கப்பட்ட மிகச்சிறிய மின்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வௌவால்கள் இரவு நேரங்களில் அந்தத் தீவின் மேல் பறக்கும்போது, அவற்றின் மூளையில் உள்ள வழிசெலுத்தல் தொடர்பான நரம்பணுக்களின் செயல்பாட்டை இந்த சாதனங்கள் கண்காணித்தன.
ஆராய்ச்சியாளர்கள் கவனித்த விஷயம் உண்மையிலேயே வியப்பிற்குரியது. வௌவால்கள் பறக்கும்போது, அவற்றின் மூளையில் உள்ள தலைத் திசை செல்கள் (head direction cells) எனப்படும் குறிப்பிட்ட நரம்பணுக்கள், அந்த விலங்கு எந்தத் திசையை நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப செயல்பட்டன. இவை உயிரியல் திசைகாட்டி (biological compass) போலச் செயல்படுகின்றன: வௌவால் குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பும்போது, உதாரணமாக, வடகிழக்கு – குறிப்பிட்ட நரம்பணுக்கள் மின்னின. தென்மேற்கு என்றால், வேறு நரம்பணுக்கள் மின்னின. மீண்டும் திரும்பும்போது, மற்றொரு தொகுப்பு தடையின்றிச் செயல்பட்டது. வௌவாலின் மூளை உள்ளார்ந்த திசைகாட்டியைத் சுமந்து செல்வது போலவும், அது தலையைத் திருப்பும் போதெல்லாம் திசையைத் துல்லியமாகக் கணக்கிடுவதைப் போலவும் இது இருந்தது.
இந்தக் கண்டுபிடிப்பின் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், வௌவால்கள் ஒரு சிக்கலான நிஜச் சூழலில் பறந்தபோதிலும், இந்த நரம்பணு மாதிரிகள் தீவு முழுவதும் சீராக இருந்தன. இதற்கு முந்தைய ஆய்வுகள் அனைத்தும் ஆய்வகங்கள் மற்றும் கூண்டுகள் போன்ற செயற்கையான இடங்களிலேயே நடத்தப்பட்டன. ஆனால், இந்த இயற்கைச் சூழலிலும் வௌவால்களின் திசையறியும் திறன் மாறாமல், நீண்ட தூரங்களுக்கு நம்பகமானதாக இருந்தது.
மேலும், இந்தத் திசைகாட்டி பூமியின் காந்தப்புலத்தையோ அல்லது சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற விண்பொருட்களின் இயக்கத்தையோ சார்ந்து இருக்கவில்லை. மேகமூட்டமான வானம் அல்லது சந்திரனின் நிலை போன்ற வெளிப்புற மாற்றங்களின் போதும், வௌவால்களின் உள்ளார்ந்த வழிசெலுத்தல் அமைப்பு நிலையாக இருந்தது. அதற்குப் பதிலாக, வௌவால்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு அடையாளங்களை – கடற்கரை ஓரங்கள், மரங்கள், விஞ்ஞானிகள் அமைத்த கூடாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு திசையை உறுதி செய்துகொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த அடையாளங்கள் வௌவால்களின் ‘அறிவுசார் வரைபடத்தில்’ (cognitive map) அங்கமாகி, நிஜ உலகில் அவை நிலைபெற உதவுகின்றன.
இரண்டு பருவங்களாக 301 வௌவால் பயணங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, தலைத் திசை செல்கள் செயற்கையான சூழலில் மட்டுமின்றி, இயற்கையான சூழலிலும் செயல்படுகின்றன என்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தை வழங்கியுள்ளது. பரிணாம வளர்ச்சி எதற்காக இந்த அமைப்பை உருவாக்கியதோ, அதே இயற்கைச் சூழலில் பாலூட்டியின் உள்ளார்ந்த திசையறியும் திறன் முதன்முதலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மூளையின் ஜி.பி.எஸ் (GPS)
எலிகள் முதல் வௌவால்கள் மற்றும் மனிதர்கள் வரை

இந்த ஆய்வின் ஆழமான முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, இடஞ்சார்ந்த வழிசெலுத்தல் (Spatial Navigation) குறித்த ஆராய்ச்சியின் விரிவான வரலாற்றை நோக்குவது முக்கியம். 1970-களில், நரம்பியல் விஞ்ஞானி ஜான் ஓ கீஃப் (John O’Keefe) எலிகளின் ஹிப்போகாம்பஸில் (Hippocampus) ‘இட செல்கள்’ (Place cells) இருப்பதைக் கண்டறிந்தார். இவை விலங்கு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்போது மட்டும் தூண்டப்படக்கூடிய நரம்பணுக்கள் ஆகும். மூளைக்கு என தனித்துவமான உள் வரைபடம் இருப்பதை இந்த கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியதால், ஓ கீஃபிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், மே-பிரிட் மற்றும் எட்வர்ட் மோசர் என்ற விஞ்ஞானிகள் ‘கிரிட் செல்கள்’ (Grid cells) எனப்படும் நரம்பணுக்களை அடையாளம் கண்டனர். இவை மூளைக்கு ஒருங்கிணைந்த அமைப்புமுறையை வழங்கி, தூரத்தையும், இருப்பிடத்தையும் அளவிட உதவுகின்றன. அதனைத் தொடர்ந்து, மூளை எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்பதை உணர்த்தும் தலைத் திசை செல்கள் கண்டறியப்பட்டன. இந்த பல்வேறு வகை நரம்பணுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, விலங்கு தான் எங்கே இருக்கிறது, எந்த திசையை நோக்கி இருக்கிறது, இருக்கும் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எப்படிச் செல்வது என்பதைத் தீர்மானிக்க உதவும் வலிமையான அமைப்பை உருவாக்குகின்றன.
சவால்களும் புதிய கண்டுபிடிப்புகளும்
இருப்பினும், இந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் சிறிய, கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களிலேயே மேற்கொள்ளப்பட்டன. கூண்டுகளிலோ சிறிய மைதானங்களிலோ எலிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் நரம்பியல் செயல்பாடுகள் எப்படி மாறுகின்றன என்பதை மட்டுமே விஞ்ஞானிகளால் பார்க்க முடிந்தது. ஆனால், சில கேள்விகள் விடை தெரியாமல் இருந்தன:
இந்த அமைப்புகள் காடுகளிலும் இயற்கைச் சூழலிலும் இதேபோல் செயல்படுமா?
பெரிய, ஒழுங்கற்ற பரந்த இடங்களுக்கு இவை பொருந்துமா?
நிஜ உலகின் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது விலங்குகள் இதே வழிமுறைகளைத்தான் நம்பியிருக்கின்றனவா?
சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க முயல்கிறது. பரந்த நிலப்பரப்பில் சுதந்திரமாகப் பறக்கும் வௌவால்களின் நரம்பியல் செயல்பாடுகளைப் பதிவு செய்ததன் மூலம், தலைத் திசை செல்கள் வெறும் தத்துவார்த்த ரீதியாக மட்டுமின்றி, இயற்கையிலும் சீரான வரைபடத்தைப் பராமரிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒவ்வொரு தனித்துவமான திசையும் நிலையான நரம்பணுத் தொகுப்பின் செயல்பாட்டோடு ஒத்துப்போகிறது. இது ‘உயிரியல் திசைகாட்டி’ (Biological compass) போலச் செயல்படுகிறது; வௌவால் எங்கு பறந்தாலும் அதன் துல்லியம் மாறுவதில்லை.

இந்த உலகளாவிய நிலைத்தன்மை, விஞ்ஞானிகள் கூறும் ‘உலகளாவிய திசைகாட்டி கருதுகோளை’ (Global compass hypothesis) ஆதரிக்கிறது. அதாவது, மூளையின் உள் திசைகாட்டியானது பரந்த இயற்கைச் சூழல்களிலும் தனது திசை சார்ந்த பணிகளைத் துல்லியமாகத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
உலகத்துடன் வெளியை வரைபடமாக்குதல்
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மிகவும் வியப்பான உண்மை என்னவெனில், நீண்டகாலமாக திசையறிய உதவும் முக்கியக் கூறுகளாகக் கருதப்பட்ட விண்வெளி அடையாளங்களான நட்சத்திரங்களும், நிலவும் திசை நோக்குநிலையை பராமரிக்க அத்தியாவசியமானவை அல்ல என்பதுதான். அதற்குப் பதிலாக, வௌவால்கள் தங்களது ‘உள்ளார்ந்த திசைகாட்டியை’ (internal compass) உலகில் உள்ள இயற்பியல் நிலப்பகுதிகளுடன் இணைக்கின்றன. கடற்கரைகள், மரங்கள் மற்றும் கூடாரங்கள் போன்றவை அவற்றின் தலைத் திசை செல்களின் செயல்பாட்டை நிலைப்படுத்த உதவும் குறிப்புப் புள்ளிகளாக மாறின.
இது விலங்குகள், அதாவது இந்த ஆய்வில் வௌவால்கள், கலப்பு வழிசெலுத்தல் அமைப்பைப் (hybrid navigation system) பயன்படுத்தக்கூடும் என்று உணர்த்துகிறது: திசை உணர்வை வழங்கும் உள்ளார்ந்த திசைகாட்டி மற்றும் அந்த திசைகாட்டியை நிஜ உலகத்துடன் பிணைக்கும் வெளிப்புறச் சூழல் அம்சங்கள். இது பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தர்க்கரீதியானது. நிலப்பகுதிகள் பெரும்பாலும் நம்பகமானவை மேலும் குறிப்பிட்ட இடத்திற்கு உரியவை; விண்வெளிப் பொருட்கள் முழுமையான திசையை வழங்கினாலும் அவற்றைத் தெளிவாகப் பார்க்க மேகமற்ற வானம் தேவைப்படுகிறது. அதேபோல் காந்தப்புலங்கள் உலகளாவிய நிலைத்தன்மையை வழங்கினாலும், அவை நாம் இருக்கும் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி எதையும் கூறுவதில்லை. திசைக்கான உள்ளார்ந்த திசைகாட்டி மற்றும் அதைச் சரிசெய்வதற்கான வெளிப்புற நிலப்பகுதிகள் என இந்த இரண்டும் இணைந்த அமைப்பு, நெகிழ்வுத்தன்மையையும் துல்லியத்தையும் வழங்குகிறது.
இந்தக் கருத்து மற்ற உயிரினங்களைப் பற்றி நாம் அறிந்தவற்றதோடும் ஒத்துப்போகிறது. எடுத்துக்காட்டாக, ராபின்கள் போன்ற பல இடம்பெயரும் பறவைகள் பூமியின் காந்தப்புலத்தைத் திசைகாட்டியாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் அவை உள்ளூர் நிலப்பகுதிகள், சூரியனின் நிலை, விடியற்காலை அல்லது அந்தி சாயும் நேரத்தில் கிடைக்கும் துருவப்படுத்தப்பட்ட ஒளியின் (polarized light) வடிவங்களையும் தங்களைச் சரிசெய்துகொள்ள நம்பியுள்ளன. இத்தகைய பலதரப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தும் உத்தி, ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் வியக்கத்தக்க துல்லியத்துடன் இடம்பெயர அவற்றுக்கு உதவுகிறது.
தேனீக்கள் மற்றும் எறும்புகள் போன்ற பூச்சிகளிடமும், ‘பாதை ஒருங்கிணைப்பு’ (தொடங்கிய இடத்திலிருந்து தூரம் மற்றும் திசையைக் கண்காணித்தல்), சுற்றுச்சூழல் நிலப்பகுதிகள், சில சந்தர்ப்பங்களில் காந்தக் குறிப்புகளை இணைக்கும் சிக்கலான வழிசெலுத்தல் அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சில தேனீக்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள வானில் உள்ள துருவப்படுத்தப்பட்ட ஒளியின் வடிவங்களைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் எறும்புகள் தங்களைச் சுற்றியுள்ள காட்சிகளை மனப்பாடம் செய்வது போல், நிலப்பரப்பில் நடக்கும்போது தங்களது படிகளை எண்ணியும் பயணிக்கின்றன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை என்றாலும், அவை பொதுவான தர்க்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றன: விலங்குகள் வெளியின் உள்ளார்ந்த பிரதிநிதித்துவத்தை உருவாக்கி, வெளிப்புறக் குறிப்புகளைப் பயன்படுத்தி அதைத் தொடர்ந்து மறுசீரமைக்கிறது.
வௌவால்களில், அவற்றின் எதிரொலி மூலம் இடமறியும் திறன் (echolocation), நரம்பு மண்டலங்களுடன் இணைந்து மிகவும் துல்லியமான நிலையான இடஞ்சார்ந்த வரைபடங்களை உருவாக்குகின்றன. எக்கோலோகேஷன் வௌவால்களுக்கு அருகிலுள்ள தடைகளையும் இரையையும் கண்டறிய உதவுகிறது; தலைத் திசை செல்கள் அவற்றுக்கு திசை உணர்வை வழங்குகின்றன; மேலும் நிலப்பகுதிகள் அந்தத் திசை உணர்வை அடையாளம் காணக்கூடிய சூழலுடன் பிணைக்கின்றன.
வௌவால்கள் தனித்துவமானவையா?
பாலூட்டிகளில் உள்ள நரம்பு மண்டல திசைகாட்டியை (neural compass) முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், திசையறிதல் குறித்த மற்றொரு ஆராய்ச்சி காந்தப்புல உணர்வு (Magnetoreception) மீது கவனம் செலுத்துகிறது. இது பூமியின் காந்தப்புலத்தை நேரடியாக உணரும் விலங்குகளின் திறனாகும். இது தலைத் திசை செல்கள் போன்ற நரம்பியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல; இது காந்தப்புலத்தையே உணரும் உயிரியல் உணர்திறன் ஆகும். சிலர் இதை ‘ஆறாவது அறிவு’ என்று அழைக்கிறார்கள்.
கடல் ஆமைகள், சால்மன் மீன்கள், நண்டுகள், வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் உட்பட பல விலங்குகளில் இந்த காந்தப்புல உணர்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலங்குகள் அடையாளச் சின்னங்கள் அல்லது சூரியனை வைத்து மட்டும் திசையை ஊகிப்பதில்லை; அவற்றால் பூமியின் காந்தப்புலத்தின் திசை அமைப்பைக் கண்டறிந்து அதையே வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும்.
பறவைகளில், கண்ணின் விழித்திரையில் உள்ள கிரிப்டோக்ரோம்கள் எனப்படும் சிறப்புப் புரதங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மூலக்கூறுகளின் மீது ஒளி படும்போது, காந்த சக்திகளால் குவாண்டம் அளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நரம்பு சமிக்ஞையை உருவாக்கி, அதை பறவையின் மூளை திசை தகவலாகப் புரிந்துகொள்கிறது. இந்த வியக்கத்தக்க பொறிமுறையானது, பறவைகள் அவற்றின் காட்சி உலகிற்கு மேலே காந்தப்புலத்தை அடுக்காகப் பார்க்கக்கூடும் என்று உணர்த்துகிறது.
சில வௌவால்களில், இந்த காந்தப்புல உணர்வு அவற்றின் திசையறியும் கருவித்தொகுப்பின் பகுதியாக இருக்கலாம். உதாரணமாக, சூரியன் மறையும் போது அதன் நிலையை வைத்து வௌவால்கள் காந்த திசைகாட்டியைச் சரிசெய்து கொள்வதற்கான தரவுகளை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்தத் தொடக்கச் சரிசெய்தலுக்குப் பிறகு, பழக்கப்பட்ட அடையாளச் சின்னங்கள் இல்லாதபோது கூட, காந்தக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி அவற்றால் திசையை அறிய முடிகிறது.
எனவே, சமீபத்திய ஆய்வுகள் வௌவால்கள் அடையாளச் சின்னங்களையும் நரம்பியல் வரைபடங்களையும் சார்ந்து இருப்பதைக் காட்டினாலும், வேறு சில ஆராய்ச்சிகள் வௌவால்கள் காந்தக் குறிகாட்டிகளையும் பயன்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகின்றன, குறிப்பாக அடையாளச் சின்னங்கள் குறைவாக உள்ள இடங்களிலும் அல்லது நீண்ட தூரப் பயணங்களின் போதும் இது நிகழ்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, விலங்குகள் பெரும்பாலும் பல திசையறியும் அமைப்புகளை இணையாகப் பயன்படுத்துகின்றன: பொதுவான திசையை அறிய காந்தப்புல உணர்வு, உள்ளூர் பகுதிகளில் திசையறிய அடையாளச் சின்னங்கள், காட்சி குறிகள் போன்ற அனைத்து சமிக்ஞைகளையும் ஒருங்கிணைத்து தெளிவான திசை உணர்வைப் பெற உள் திசைகாட்டி செல்கள்.
இந்த பன்முக உத்திகள், பரிணாம வளர்ச்சி என்பது விலங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப, திசையறிதல் என்ற சிக்கலுக்குப் பல்வேறு தீர்வுகளை உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது. கண்டங்கள் கடந்து செல்லும் பறவைகளுக்கு நீண்ட தூரம் முழுவதும் நிலைத்தன்மை தேவைப்படுகிறது, எனவே அவற்றுக்கு வலுவான காந்த உணர்வு உள்ளது. சிக்கலான நிலப்பரப்புகளில் இரவு நேரங்களில் உணவைத் தேடும் வௌவால்கள், அவ்வப்போது காந்த அல்லது வானியல் குறிகாட்டிகளால் சரிசெய்யப்படும் நரம்பியல் வரைபடங்களையும் உள்ளூர் அடையாளச் சின்னங்களையும் அதிகம் நம்பியிருக்கலாம்.
இந்த வியக்கத்தக்க அமைப்புகளைப் பார்க்கும் போது, ‘நமது மூளையிலும் இது போன்ற ஏதாவது ஒன்று இருக்கிறதா?’ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அது இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள், எலிகள் மற்றும் வௌவால்களில் காணப்படும் அதே வகையான இட செல்கள், கிரிட் செல்கள் மற்றும் தலைத் திசை செல்கள் போன்ற செல்களை ஒத்த அமைப்புகள் மனித மூளையிலும் இருப்பதை உணர்த்துகின்றன. உதாரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வலிப்பு நோயாளிகள் அங்குள்ள சூழலை ஆராயும்போது, விலங்குகளைப் போலவே அவர்களின் மூளையிலும் இடஞ்சார்ந்த வரைபடம், திசையறியும் செயல்பாடுகள் நடப்பது பதிவாகியுள்ளது. மனிதர்களாகிய நாம் அன்றாட வாழ்க்கையில் வழிநடத்தப்படுவதற்கு வௌவால்களைப் போல எதிரொலி இருப்பிடமறிதல் (Echolocation), காந்தப்புலங்கள் அல்லது மீத்திறன் கொண்ட உணர்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, நாம் பார்வை மற்றும் நில அடையாளங்களை (தெரு அடையாளங்கள், கட்டிடங்கள், சூரியனின் நிலை போன்றவை) பெரிதும் நம்பியிருக்கிறோம். இருப்பினும், வழிசெலுத்தலுக்குத் தேவையான அடிப்படை நரம்பியல் கட்டமைப்பு அனைத்து பாலூட்டிகளுக்கும் பொதுவாகவே உள்ளது. வௌவால் தீவில் பறக்கும்போது அதன் மூளையில் எந்த செல்கள் செயல்படுகிறதோ, அதே போன்ற செல்கள் தான் நாம் நகரத்தில் நடக்கும்போதோ அல்லது கடந்த வாரம் சென்ற பாதையை நினைவுகூறும்போதோ நமது மூளையிலும் செயல்படுகின்றன.
வௌவால் குறித்த இந்த ஆராய்ச்சியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த நரம்பியல் அமைப்புகள் வெறும் ஆய்வகச் சூழலில் மட்டுமன்றி, சிக்கலான நிஜ உலகச் சூழலிலும் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இதிலிருந்து மனித வழிசெலுத்தல் அமைப்புகளும், நமது சிக்கலான உலகிற்கு ஏற்ப வலுவாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. நாம் காந்தப்புலத்தை உணர்வுபூர்வமாக உணராவிட்டாலும், நமது மூளை தொடர்ந்து காட்சி அடையாளங்கள், சமநிலை, இயக்க உணர்வுகள், ஒலி குறிப்புகள் போன்ற பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து நமக்கு உள்ளார்ந்த திசையறியும் உணர்வை உருவாக்குகிறது. இது நம் உணர்வுக்குத் தெரியாமல் ஆழமாகச் செயல்படும் செயல்முறையாகும்.
மனித ஆரோக்கியத்தில் இதன் தாக்கம்
இந்த அமைப்புகளைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வது மனித ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, அல்சைமர் போன்ற நோய்கள் பெரும்பாலும் இடஞ்சார்ந்த நினைவாற்றல் மற்றும் திசையறியும் திறன் குறைபாடுகளுடனேயே தொடங்குகின்றன. ஆரம்பகட்ட அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுக்குப் பழக்கப்பட்ட இடங்களிலேயே வழிதெரியாமல் தடுமாறலாம் அல்லது பாதைகளை மறக்கலாம். விலங்குகள் எவ்வாறு இடஞ்சார்ந்த தகவல்களைச் சேமிக்கின்றன, திசை சமிக்ஞைகளை நிலைப்படுத்துகின்றன என்பதை ஆராய்வதன் மூலம், இந்த அமைப்புகள் எவ்வாறு சிதைகின்றன என்பதையும், வருங்காலத்தில் அவற்றை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முடியும்.
வழிசெலுத்தல் ஆராய்ச்சியின் எதிர்காலம்
வௌவால்கள் குறித்த இந்த ஆய்வு மிகமுக்கியமான மைல்கல். இது வெறும் கோட்பாடுகள் மற்றும் ஆய்வகச் சோதனைகளிலிருந்து, இயற்கைச் சூழலில் நிகழும் உண்மையான நரம்பியல் பதிவுகளை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், மூளை எவ்வாறு விண்வெளி, திசை குறித்த உள்நிலை பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான நீண்ட பயணத்தில் இது சிறு படி மட்டுமே. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் புதிய கேள்விகளை எழுப்புகின்றன:
வௌவால்கள் மற்றும் எலிகளிடம் காணப்படுவதைப் போலவே மனிதர்களிடமும் தலைத் திசை செல்கள் செயல்படுகின்றனவா?
விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் உள்ள பல்வேறு வழிசெலுத்தல் அமைப்புகள் (காந்தப்புலம், அடையாளக் குறிகள், ஹார்மோன்கள், உணர்வு உறுப்புகள்) எவ்வாறு ஒன்றோடொன்று இணைகின்றன?
தனிநபரின் வழிசெலுத்தல், திறனை வடிவமைப்பதில் மரபியல் போன்றவற்றில் வளர்ச்சியின் பங்கு என்ன?
அனைத்திற்கும் மேலாக, மிகவும் தத்வார்த்தமான எழும் கேள்வி, இந்த உலகத்தையும், அதற்குள் நம்மை நாமே உணர்வது என்பதன் பொருள் என்ன?
வௌவால்களைப் பொறுத்தவரை, வழிசெலுத்தல் என்பது அடிப்படை உணர்வுத் திறன் மட்டுமே. அவற்றின் மூளை விண்வெளி தகவல்களை ஆழமாகவும் இயல்பாகவும் குறியீடாக்கும் வகையில் பரிணமித்துள்ளது. இதனால் அவை வியக்கத்தக்க துல்லியத்துடன் உலகில் நடமாட முடிகிறது. மனிதர்களுக்கு வழிசெலுத்தல் என்பது பெரும்பாலும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கிறது – நாம் வரைபடங்களைப் படிக்கிறோம், ஜிபிஎஸ் பயன்படுத்துகிறோம், வழிகளை நினைவுகூர்கிறோம். இருப்பினும், இதற்கெல்லாம் கீழே மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட உயிரியல் அடிப்படை உள்ளது. அந்த அடிப்படைதான் தீவுப் பகுதிகளில் வௌவால்களையும், கண்டங்கள் கடந்து பறவைகளையும், பூந்தோட்டங்களில் பூச்சிகளையும் வழிநடத்துகிறது.
இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும், உயிரியலின் பழமையான சிக்கல்களில் ஒன்றான – உலகில் தங்கள் இடத்தைக் கண்டறிவது எப்படி மற்றும் அங்கேயே தங்கள் திசையை எவ்வாறு நிலைநிறுத்துவது – என்பதன் வெவ்வேறு பக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
அந்தப் பழமையான சிக்கலில், நகரும் அனைத்து உயிரினங்களோடும் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். இது வெறும் உடல்ரீதியான இடப்பெயர்வு மட்டுமல்ல, விண்வெளி மற்றும் நினைவாற்றல் வழியாக நிகழும் அறிவாற்றல் பயணம். திசை என்பது அதன் அடிப்படை நிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வௌவால்கள் நமக்குக் கற்பித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யும்போது, அவை மனிதர்களுக்குரிய அடிப்படைத் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன: நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நமது தேவையே அது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
