’புத்தம்’ நாவலின் முதல் அத்தியாயம்

வானம் விட்டுக் கீழிறங்கக் கள்ளப் பருந்து ஆயத்தமானது. பகலெல்லாம் பறந்து களித்த வான் வெளியினூடே சூரியச் செவ்வொளி மேற்கில் இறங்கியது. எல்லையற்ற அகல்வெளி. திகட்டாத ஒளிர்வெளி.  

இறக்கைகளுக்குக் கீழே பூமி தனக்குள் குவிந்திருந்தது. வானம் பூமியைத் தன் உள்ளங்கைக்குள் அடைகாத்திருந்தது. வடக்கில் தூரத்து மலைகளின் வழி பிற்பகலில் கனத்து மூளும் வாடைக்காற்று வசமிழக்கச் செய்தது. நேரம் ஆக ஆகக் களிற்றுக் கூட்டம் போலக் கார்முகில்கள் திரண்டு வந்தன. விரி சிறகுகளின் நுனித் துடியில் தடம் மாற்றி வட்டமிட்டுச் சுழன்றபடியே வானில் மிதந்திருக்க வேண்டும்போல் தோன்றிற்று. ஏனோ அன்று மாலை நிலம் தொட விழைவற்று அப் பருந்தின் மனம் வான்வெளியாய் வெறிச்சோடியிருந்தது. பருந்தின் வெண் வால் பிளவு வானேறி இறங்குவதில் விரிந்து மடிந்தது. மனவெழுச்சி கொண்ட வேளைகளில் குரலிசைத்துப் பறந்தது. அது மனிதர்க்கு இசைவாகவும் சிற்றுயிர்களுக்கு நசிவாகவும் கேட்டது.

ஒளி மாழ்கிச் சூழும் பையிருளில் தன் கூர்பார்வை தீரும் கடைசி நொடிவரை அசைவற்றுப் பறந்திருக்க அது விழைந்தது. தன்னை நெஞ்சகத்தில் தாங்கிக்கொள்ள எக் காலத்திற்கும் நிபந்தனைகள் ஏதுமற்றுக் கைவிரித்து வாஞ்சையுடன் காத்திருக்கும் பூமியின் மேல் மெய் மறந்து இன்னுமின்னும் பறக்க அவாவுற்றது. தன் அன்றாட வசிப்பின் காட்டுப்பரப்பில் இருட்டுவதற்குள் எம் மரத்தின் மறையிலைக் கிளையில் கால் பதிப்பது என்று எண்ணி, இனி வானத்தில் தகைக்க இயலாதென்ற போதில் சட்டெனக் காற்றில் முன்பக்கமாக உடல் சரித்துக் குனிந்து, பிடித்து வைத்திருந்த உடலெடையை விடுவித்தது. விர்ரெனத் தான் தேர்ந்த பெருமரத்தின் தலை நோக்கி நேர்த்தியுடன் உச்ச வேகத்தில் வளியழுத்தம் கிழித்துச் சரிந்தது.   

அதுவோர் அரசமரம். அண்மையில்தான் காய்ந்த முதிரிலைகள் முற்றாய் உதிர்த்து நிர்வாணம் ஆகிப் பின் பைய பசுந்தளிர் இலைகள் துளிர்த்தன. இலைகள் அகன்று செறிந்து காற்றில் சிலிர்த்து அக் காட்டில் மரம் தன்னிருப்பைப் பேருருவாக்கிக் கிளைபரப்பி நிற்கிறது. சிற்றுயிர் பேருயிரென ஏராளமான உயிரினங்களைத் தன் விரிகுடையின் கீழ் பரிவோடும் தண்ணிழலோடும் காத்து வருகிறது. பூமியைப் போன்றே தன்னளவில் அது முழுமையானது. தனக்குள் அண்டும் உயிர்களின் நிறைவான உறைவிடம். சீறிப் பாய்ந்து வந்த பருந்து மரத்தின் உச்சியை நெருங்கும் தருணம் கிளைகளுக்கு ஊடான இடைவெளியில் தவம்போல் உடலொடுக்கி மனங்குவித்து இறங்கியது. இலைசெறிந்த தக்க இருளிடம் ஒன்றில் ஓசையின்றித் துல்லியமாய்க் கிளையில் கால் பற்றி நின்றது. கிளை ஆட்டமின்றிக் காற்றால் மட்டுமே அசைந்தன இலைகள். தன் சுவாசம் உற்றறிந்து அமைந்தது பருந்து. 

நிலத்திலிருந்தபடிதான் இரவின் நிலவை மீன்களை கோள்களை வியக்க முடிகிறது. ஆனால் நெருங்க முடிவதில்லை. பகல் போன்றே தடமற்ற வெளி என்றாலும் இருள் பாவித்த கருமை எங்ஙனும் சூழ்ந்து மேலே எழும்பவிடாது. இதமாய் ஒளி தரும் பெருவளர்பிறைகளில் இன்னும் கொஞ்சம் மேலடுக்குகளில் நீந்திப் போகலாம். ஆனாலும் குளிர். கடுங்குளிர். சிறகுகள் கனத்துப்போய்விட நீண்ட நேரம் வேண்டியவண்ணம் வானில் திளைக்க முடிவதில்லை. அன்று பெளர்ணமி. விரைவிலேயே நிலவு தோன்றும். ஆனால் மழைக் கரும்பொதிகள் பெருகி வடகிழக்கில் இருளடர்ந்தது. 

பருந்து தலையைக் கீழே தாழ்த்திற்று. மரத்தடியில் யாரோ அசைவற்று அமர்ந்திருப்பது தெளிவற்றுத் தென்பட்டது. யாரது இந் நேரத்தில் என்று வியப்பும் திகைப்பும் கூடி இலைகளின் அசைவுகளினூடே தலை சரித்துக் கால் மாற்றி இன்னும் ஊன்றிப் பார்த்தது. அதே மனிதர்தான். அக் காட்டுப் பகுதியில் பகலும் இரவுமெனச் சுற்றித் திரிகிறவர். தனித்து நெடுநேரம் அசைவற்று அமர்ந்திருக்கிறவர்.  

சில நாட்களுக்கு முன்னர்தான் இவர் சாகக் கிடந்ததை அப் பருந்து கண்டது. உடலொட்டி நலிவுற்று எலும்பும் தோலுமாக நடக்கக்கூடத் தெம்பற்று அடியெடுத்து நகர்ந்து வந்தார்.  ஒரு கட்டத்தில் பாதையோரம் மயங்கி விழுந்தார். அவருக்கு நிகழவிருக்கும் மரணத்தை எதிர்பார்த்து எஞ்சிக் கிடக்கும் அவ்வுடலின் தோலுக்கும் சதைக்குமென அக்கம்பக்கத்து வல்லூறுகள் ரகசியமாக அம் மனிதரைப் பின்தொடர்ந்தன. 

அவ்வப்போது அவரைச் சில நண்பர்கள் சூழ்ந்தபடி செல்வார்கள்.  சில சமயம் அவரோடு காட்டோரம் சுள்ளிகள் பொறுக்க வரும் ஊர்ப் பெண்கள் பேசியபடி செல்வர்.  பெரும்பாலும் ஊர்ச் சிறுவர்கள் அவரோடு கதைத்தும் விளையாடியும் காய்கனிகளைக் கொறித்தும் போவார்கள். குறு விலங்குகள் சில அவருடன் ஒட்டியுறவாடிப் போகும்; பருந்துக்கான இரையாகும் சிற்றுயிர்களும் சிறு பறவைகளும்கூட. எந்த அச்சமும் தயக்கமும் உணர வாய்க்காத பரிவு சூழ்ந்த நற்காட்சியது. அப் பருந்து கூட அவ்வப்போது வானில் வட்டமடிக்கையில், காட்டுமரங்களின் பசுங்குடைகளுக்குள் ஓய்வெடுக்கையில் தனித்திருக்கும் அம் மனிதரை நோட்டமிட்ட வண்ணமிருந்தது. 

அம் மனிதரும் தன்னைப் போலவே தனித்துத் ததும்பித் தன்னிலையில் லயித்துத் திரிவதைக் கண்டு அவர்மேல் சற்றே அக்கறையும் கவனமும் கொண்டிருந்தது. தனக்கான வளிமண்டலம் போல இவருக்கு இக் கானகம் இருக்குமென்று நினைத்தது. தனிமையின் குன்றாச் சாரத்துள் தன்னைப் போன்றே அமிழ்ந்தொளிரும் ஓருயிர் அதுவென்று உணர்ந்தது. கண்மூடி மெய்மறந்து அமர்ந்து உறங்கத் தொடங்கிற்று. கருங்காட்டின் குளிர்காற்றில் இலைக் கொத்துக்குள் பொதிந்துறங்கும் வேளை இருளின் மாயக் கிறக்கத்தில் மன்னுயிர்களோடு கனவுக்குள் திளைத்தது பருந்தும்.  

***

நூற்றாண்டுகள் தாண்டிய அந்த அரச மரத்தினடியில் கால் மடக்கிச் சம்மணமிட்டு அமரும் வேளை மழை விம்மிச் சாரலாய் இறங்கிக் காற்று சில்லென உடல் ஊடேறிற்று. பெருமரத்தண்டின் உட்புறமாக மடிந்திருந்த மரயிடுக்கின் உள்ளே மேலும் நுழைந்து போய் அமர்ந்து கொண்டார். ஏதோவொரு முன்னுணர்வு, அவ்விரவில் பல்லாண்டு காலத் தவத்திறத்தின் பயனாக இம் மானுடனுக்கு அர்த்தமிக்கதொரு ஞானதரிசனம் வாய்க்குமென்று. குசா புல்மெத்தை மேல் இன்னும் வசதியாகக் கால்மடக்கித் தன்னை அமர்த்தி முதுகு நிமிர்த்தித் தவத்தில் நிலைக்கத் தொடங்கினார். அரசமரமென பிரபஞ்சக் கூரையின் கீழ் தன்னையும் சேர்த்த அனைத்துயிரின் மீட்சிக்கென ஆழ்ந்திருந்தார். 

உள்வெளி சுவாசத்தையும் நெஞ்சுக்கூடு விம்மித் தாழ்வதையும் கூடவே வயிறு விரிந்து சரிவதையும் உணர்ந்தார். சுவாசத்தோடு முழு உடலுணர்வின் விழிப்பை மனத்துடன் ஒருமுகப்படுத்தி நிலைகொள்ளச் சற்று நேரம் தேவைப்பட்டது. பின்னர் சுவாசத்தின் ஆழ வேர்த்தடம் உற்றறிய குபுகுபுவென உயிராற்றல் உட்திரண்டு கபாலத்தினுள் செறிவுற்று மூச்சில் அடர்த்தியாய் இறங்கியது. 

தண்டுவடத்தில் குளிர் மின்னல் வெட்டித் தேகம் விதிர்த்தது. மலைப்பாம்பொன்று உடலைச் சுற்றி வளைத்துத் தலைமுதல் கால்வரை பிணைத்து முறுக்கியதுபோல உணர்த்திற்று. மென்மையும் ஊக்கமுமாய் ஊடேறி உடலுக்குள் பாம்பாய், பாம்புக்குள் உடலாய் ஒன்றாகி ஊர்ந்து ஊர்ந்து மேன்மேலும் பெருகிற்று செந்தவ ஆற்றல். சற்றைக்குள் உடலும் பாம்பும் மாயமாகின. மிகுவிழிப்பு மட்டுமே காற்றென, ரீங்காரமென, சூழ் உணர்வெனத் தழைத்து நின்றது. 

உடல்நிறை புவிஈர்ப்போடு கரைந்து முழுமையும் வெற்றாய் உணர்த்திற்று. முதுகுத்தண்டின் அடியில் உள்வால் நுனி ஊக்கமுற்று உடலைத் தூக்கித் தூக்கிச் சாய்க்கத் துடித்தது. அப்பூமிப் பகுதியின் உயிர்காந்த ஆற்றல் உடலை உலுக்கியது. தக்கையென உணர்த்தியது யாக்கை. 

மேகங்கள் மேன்மேலும் கருத்துக் குபுகுபுவென உருண்டு தொடர் இடியொலி முரண்டு கானகத்திற்குள் ஆழமாய் எதிரொலித்தது. 

வழக்கத்திற்கு மாறாக அன்றிரவு பெருமழைதான்.  தொடர்ந்து மின்னல் கொடியோடிப் பேரிடிகள் வானிலிருந்து பாய்ந்து வனமரங்களைத் தாக்கின. அனலேறும் சஞ்சலையுமாய் ஓவென்ற பேரோசையில் ஊழிபோல் இலங்கிற்று வனப்புலம். மீனில்லா வானோடும் கானகக் காற்றோடும் சுழன்றடிக்கும் புயலோடும் பெயலாகி வழிந்தோடும் புனலோடும் விண்ணும் மண்ணும் மோதியுண்டாகும் ஊழிப் பெருங்காலமன்ன தோற்றிற்று சூழல். 

அரச மரத்தின் அகண்டு உட்குழிந்த பெருந்தண்டின் அடியில் மறைவாய் அமர்ந்திருந்தாலும் அவர் முற்றிலுமாக நனைந்திருந்தார். உடல் குளிரேற்றுத் தாங்கிச் சிலிர்த்து அவ்வப்போது நடுங்கிற்று. நெஞ்சும் மூச்சும் அடைத்து வேர்கள் விலகி மண்ணுக்குள் ஆழ ஆழ உள்ளோடுவதாய் முழு பிரக்ஞை கொண்டு பூமிக்குள் கலந்து யாக்கையுணர்வு அற்றுப் போனது.

தேகத்தில் மூச்சுவழி சூல்கொண்டது ஆதார மையம். முதுகுத்தண்டு, வால்நுனி, குரல்வளை, நெற்றிப்பொட்டு, விழிக்குழி, உச்சந்தலையென ஆற்றல் தன் சுழல் குவியத்தை மாற்றி மாற்றிப் போனது. அடிவயிறு உட்சுருண்டு பின்முதுகுச் சுவர் தொட்டு உதரவிதானம் முழுதாய் நாணென விசைகொண்டு நிற்க, பிராணன் அப்படியே நிலைத்துத் தன்னை நிறுத்திக்கொள்ள, மேலேகும் சுவாசச் சுழல் தலைக்குமேல் திரண்டு நின்றது. 

மூச்சுக்காற்று நாசிநுனியில் சூழ்காற்றோடு கலந்து தன்வசமிழந்தது. கயிறு இழுத்துக் கட்டிய பாய்மரமாய் சுவாசிக்கக் காற்றின் ஆழ் உந்துதலில் விழிப்பூக்கம் கூடித் தன்னுணர்வுவழி உடலின் அனைத்துத் துளைகளிலும் நுண்துவாரங்களிலும் பாய்ந்தோடியது.

மூச்சு தன்னையே நெஞ்சுக்குழிக்குள் நிறுத்தி வெகுவேக கதியில் முழு உடலைத் தனக்குள் மூழ்கடிக்கும் வெண்ணாற்றலில் இளைப்பாறி நின்றது. சுவாசச் சுழல் சிரசில் திரட்சி கொண்டு மெல்ல மெல்லப் பரவி வளியோடு ஒன்றறக் கலந்து காணாமல் போனதின் விழிப்பாக உயிருக்குள் திளைத்தது. மேனி புறத்தோலில் சிலிர்த்திருக்க உள்ளே என்பும் சதையும் ஆவியாகிக் கிளர்ந்து கரைந்து மாயத்தொகுப்பாய் அமர்ந்திருந்தது. அவ்விரவு பூராவும் தவழ்ந்து தழுவிச் செல்லும் காற்றைப்போலக் கடந்து சென்றது. அதில் நிறைவும் பூரண அமைதியும் தோய்ந்திருந்தது. தற்போதம் பரபோதமாகிக் காற்றில் விரிந்தது. மெய்யறிவின் மாயவுருக்கள் உடலுக்குள் புகுந்தோடின.  

வான்பொழிவோடு நெருப்பாற்றின் தண் சுனைத் தழல் செம்பொழிவாய்க் கசிந்தோடிற்று. நெருப்பற்று தண்ணென்ற ஒளிநீர்மையில் தேகம் வெந்து, மெல்லத் தணிந்தது உடலெனும் காடு. தழல் ஆற்றல் தீரத்தில் தமதென்றும் பிறிதென்றும் ஏதுமற்றுப் போனது.

அவர் சரண்புகப் பணிந்து தொழ, சரணடைய உள்ளே ஏதுமற்று உணர்த்தியது. சரண் அளிக்க ஏதுமற்று இருந்தது. கொள்ளளவு என்று ஏதுமின்றிப் போனது. பாத்திரப் பொருளடக்கம் நழுவி விட்டிருந்தது. 

எதைச் சரணுக்குட்படுத்த?
உன்னத மென் சுனை.
அடர் திரளாய் ஆற்றல்.
நாட்டங்கள் அடங்கி
வழுவுதல் அன்றி
அறிதற்கரிய
சுடர்ந்தெழும் சூழமைவில்
அகப்பெருவெளி சுவைத்துத்
திளைத்துப் பின் தொழுது
உள்ளுணர்வாய் விளங்கி
உள் வெளி தான் பிற ஏதுமற்று
செம்பொருள் பொலிந்த
செவ்வருட்காட்சி..
திளைக்காமல் திளைக்கும்
அவ்வுலகில் இவ்வுயிரிருப்பு

முதல் சாமத்தின் கணப்போதில் இருளடர்ந்து சோதியாய்ச் சுடரும் உயிரச்சம். மெல்ல உடலைப் பக்கவாட்டில் சரிசெய்து சாய்ந்தமர்ந்தார். வாழ்கூறுகள் அற்ற, எவ்வொரு நம்பிக்கையுமற்ற, நிராதரவான, எல்லாம் முடிந்தது எனும் துயரார்ந்த தருணம். மரண பயத்திற்கான அனைத்துக் காரணங்களையும் கூட்டி அழுத்திய புதுமையான அடர் கணமது. திடுக்குற்று வலக்கரத்தைத் தரையில் அழுத்த உடல் சற்றே சரிந்து பின் தன்னைத் தேற்றி நிறுத்தி நிலைகொண்டு அமர வைத்தது. அது உடலை இன்னும் ஆழமாகப் பூமியோடு பிணைத்தது. பூமியே உடலின் அபயமெனத் தரைக்கும் அமர்த்தலுக்குமான ஒட்டுறவினூடே பேராற்றல் புறப்பட்டு தண்டுவடம் பிடித்துத் தலை முழுதையும் ஆட்கொண்டு நெற்றிப்பொட்டு குடைந்து உச்சிக்குள்ளேறிக் குறிபாய்ந்து விர்ரென்று தேகம் குலுங்கி அதிர பூமியும் நடுங்கிற்று. வானும் உறுமிற்று. நீரும் பெருகிற்று. காற்றும் சுழன்றடித்தது. 

ஆங்காங்கே மின்பட்டு நெருப்பூறிற்று காடு. உடற்கட்டுகள் தாண்டி, மனம் தளர்ந்து, தாதுக்கள் பேரூக்கம் கொண்டெழுந்து பிரபஞ்சப் பேராற்றலாய்த் திரண்டு தானெனும் திட திரவ வாயுவில் ஏதென அறியவியலாப் பேருண்மையில் திகழ்ந்தது. மழைபொழியும் காரிருளில் தண்ணெனக் கிளர்ந்தெழும் செஞ்சுடராக அவர் அமர்ந்திருந்த மரத்தடி தென்பட்டது. அது புத்தவெளி. அகம், புறம், தான், பிறவென ஏதுமற்று எல்லாமுமாகத் திகழ்ந்த பெருவிழிப்பு. பேரறிதல். அம் மெய்நிலை உய்த்துணர்ந்தவன் பிறகு அவனாக ஒருபோதும் இருப்பதில்லை. அவனுடையதென ஏதுமற்றதே அவன் அடையாளம் இனி. அவ்வழி ஏகியோன் இப் புவியில் வாழ்வதென்பது காலத்தின் நீட்டிப்பே. அவ்வாறாகக் காலமாக ஆகிவிட்டது அது. 

உயிரணுக்களில் பூமித்தாதுக்கள் ஒளிர்ந்தன. பூமியின் தாதுக்களால் கட்டப்பட்ட இவ்வூனுடல் தன்னுணர்வில் ஒளிர்வது. எனவே இவ்வுடல் மாரனுக்கானதல்ல, இப் பூமிக்கானது. மாரனும் அப்படியே. மனத்தின் விடுதலை என்பது இவ்வுடற்கூட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பது. அதன் விடுதலையையும் அக் கூட்டின் மூலமே அடைய வேண்டும். 

ஆழ்தவத்தில் மன உடல் கூட்டமைப்பினுள் மேன்மேலும் ஊடுருவிச் சென்று உயிருக்குள்ளோடி இருப்பின் மையக்கருவுக்குள் இயற்கையாய் அமையப்பெற்ற மெய்ஞ்ஞான ஆற்றலை வளர்த்தெடுத்துப் பெருக்கிக் களித்து இன்புறுதலும், பிறரும் உய்த்துணர்ந்து மெய்ஞ்ஞானம் எய்த உதவுவதும், பேரின்பம் பகிர்வதுமே இப் பிறப்பின் மேலான சிறப்பென சித்தாத்தர் அன்று உணர்ந்தார். 

இரண்டாம் சாமத்தில் அவர் வாழ்நாளின் அன்றன்றைய, அவ்வக் கணத்தின் எண்ணிறந்த பிறப்புகள் எழுந்தாடின. பிறப்பும் மரணமும் எனும் ஊழிக்கூத்து.  நாமரூபங்கள் உயிர்களென எழுந்தாடின. எழுந்தவை மடிந்தன. ஓலம், எங்கணும் ஊழியின் ஓலம். மரணத்துயரின் ஒப்பாரி. உருண்டோடும் தீராக் கண்ணீரின் கரிப்பு கூடி ஆற்றோடு கலந்து ஆழியில் உப்பாய் அடர்ந்தது. எல்லாம் எழுந்தெழுந்து அடங்கின ஓயாமல் தவித்துப் புரண்டன முட்டி மோதின விலகின அமைதியுற்றன. மீண்டும் எழுந்தன. பிரபஞ்சத்தின் மாயா மண்ணுயிர்ச் சுழற்சி.    

நிலம் நடுங்கி பூமி பிளவுண்டாற்போல் மேன்மேலும் கூடுகள் தென்பட்டு ஆடின. பருவங்கள் மாறின. தண்மை வெப்பங்கள் மாறின. நிலம் மாறிற்று. விண்வெளி மாறிற்று. பிரபஞ்சத்தின் சுழற்சியில் இருப்பின் எல்லைகளும் எல்லை இகந்தவையும் ஒருமித்து நீண்டன. 

நிகழ்வன கணங்களுக்குள் சுழல அவற்றைத் தேர்வது அறிவாகிறது. புலனூடேயே புலனுக்கப்பாற்பட்ட இருப்பின் தேறல். வளங்குன்றாச் சுவை. அச் சுவைக்கு இட்டுச்செல்லும் தவப் பெருநோக்கு மூன்றாம் சாமத்தில் எழுந்தது. 

அறயின்பம், பொருளின்பம், களியின்பம் தாண்டிய வீடுபேறு. ஒண்சுடராய் அறிவதே அறிவாய் நின்றாடும் கூடற்ற உள்ளொளி. 

ஈரம் பாய்ந்த அரச மரத்தடியில் உயிரணுக்கள் அனைத்திலும் விண்ணாற்றல் கரைந்து பூமித்துகள்களினூடே தாதுக்களில் காந்தமாய்ப் பாய்ந்து வசியப்படுத்தித் தியானித்திருந்த அவருள்ளேறி பிரக்ஞையில் சுடர்ந்து நின்றது பிரபஞ்சப் பெருவெளியின் ஞானம். 

தன்னுணர்வுக்குள் ஓரளவிற்குப் புரிந்தபோதும் இப்படியானதொரு அனுபவம் சார்ந்த மெய்யறிவுத் தீண்டல் அவரைப் பரவசப்படுத்திற்று. அற்புதமென உணரவைத்தது. எத்தனை நீண்ட தேடல். ஏறத்தாழ ஏழாண்டு காலம். காடுறை வாழ்வு.

‘முதலில் பிரபஞ்ச ஒழுங்கியக்கம்; ஆதி அந்தமெனும் இருமை தாண்டிய, வெறுமனே எழுந்தடங்குவதாகத் தோன்றும் பேரியக்கத்தினுள் ஆழ்ந்து உய்த்துணர, நிர்வாணம் எனும் எல்லை கடந்த விடுதலை, அவ்வளவே’ என்று அவரால் அக் கணத்தில் கண்டுணர முடிந்தது. 

உள்ளேறும் எதுவும் அங்கேயே தங்கியிருக்காது வந்து போய்க் கொண்டிருந்தது; உடலிலோ மனத்திலோ வலியோ துயரோ மகிழ்வோ நிறைவோ.. அவ்வப்போது துண்டு துண்டாக இங்கொன்றும் அங்கொன்றுமெனத் தன் விழிப்படைவில் நிகழ்வதைப் பார்த்தபடி அமைந்தது இருப்பு. சார்பெழுச்சியே பிறப்பு இறப்பு, நோய் மரணம், துயரம் மகிழ்ச்சி அனைத்து இருமைகளின் ஆணிவேர்; இவ்வியற்கைக் சுழற்சியே சார்பெழுச்சிதான்; தற்கணத்தில் சார்புகளின் தோற்றம் பிறப்பு, அவற்றின் மறைவு இறப்பு; சார்பின் ஆணிவேர் நீங்க எழுச்சியுமில்லை வீழ்ச்சியுமில்லை; இரண்டுமற்றதின் வெறுவெளியில் பிரக்ஞையின் காலமற்ற இருப்பில் நிலைகொள்ளும் தவமுறையைக் கண்டறிந்தார்.

அச் சார்புறு சுழற்சியின் மெய்மையைப் புரிந்துணர்கையில் அனைத்துலகங்களின் எழுச்சி, தொடர்ச்சி, மறைவு என்பதை ஒத்ததே அனைத்துயிரின் இருப்பும் இயல்வதும் இன்மையும். பற்றுதல் தவிர்த்தலே பெறுதற்கரிய விடுதலை. தன்னின்மையே அகவிடுதலையின் சாரம். தன்னின்மை என்பது எதுவுமற்ற வெறுமையல்ல. தான் என்பதுண்டு. ஆனால் அது கணத்திற்குக் கணம் மாறக்கூடிய, உள்ளீடற்ற, நிரந்தரமற்ற, வெற்றுமையைக் கொண்ட ‘தான்’ மட்டுமே. 

இன்பமும் துன்பமும் ஒன்றைச் சார்ந்தே எழக்கூடியது என்பது வாழியல்பு. 

எவ்வொன்றையும் சார்ந்திராத எப் பற்றும் கழிந்துபோன இயல்பெருவெளிப் பரப்பொன்று உண்டு. அப் பரப்பே, வாழிருப்புப் பரிமாணமே அகவிடுதலையைத் தரிசனப்படுத்தும் நிர்வாணம். அப் பூரண, சார்பற்ற தன்னின்மைப் பரிமாணமே மானுடத்தின் மெய்வழி, நல்வழிப் பாதை. அவ்வழி ஏகுவோர்க்கு இறப்பு நேர்வதில்லை. ஏனெனில் மன உடல் தொகுப்பைச் சார்ந்ததே பிறப்பும் இறப்பும். பற்றுநிலை விட்ட, தன்னின்மைத் தூவெளியில் இறந்துபட, ஏதுமற்ற வெறுவெளி. முற்றாய் எரிந்து போன மரத்தின் தீ எத்திசை போனதென்று புலப்படாது. நள்ளிரவுக் கூகை ஒலியின் வழித்தடம்  காணக்கிடைக்காது. 

அக விடுதலையின் பாதை முகிழ்த்துத் திரண்டது. களங்கங்கள் ஆன்றவிந்திட சான்றொன்றே இருப்பாய் எஞ்சியது. உயிரியக்கத்தின் கூறுகள் பற்றிய கருத்தாக்கங்கள் கலைந்து விலகின. இருப்பென்பது ஆற்றோட்டமாய், நீர்மையாய் ஓடிக்கொண்டிருப்பது புலப்பட்டது. அகவிழிப்போடு சார்புகளைப் பிரித்துப் பிரித்து உற்றறிய மனத்தின் உடலின் இவ் வாழ்வின் அனைத்து நோய்க்கூறுகளும் அழிந்து உய்யப் பெறும் உயிர் என்று புரிந்தது. இருப்பில் உள்ளோட்டமாய் முடிவின்றித் திகழும் விடுதலையைப் புரிந்துகொண்டால் துக்கம் நீங்கும்; சார்புகளை முழுதாகப் புரிந்துணர்ந்து காரணங்களை அகவிழிப்போடு களையவும் அவற்றைக் கடக்கவோ, மாற்றுப் பாதையில் செல்லவோ பயின்றால் எல்லையற்ற விடுதலையும் நலவாழ்வும் இங்கே இப்போதே கைகூடும் என்றுணர்ந்தார். 

ஒன்றோடொன்று சார்புற்று செயலூக்கம் கொள்ளும் இயற்பண்பின் ஒரு சரடு உயிர்களின் உள்ளே தன்னியல்பான வினைத்திறனாக அமைந்துள்ளது. அதுவே தனக்கும் பிறருக்கும் உலகிற்குமெனத் தத்தமது முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் சுதந்திரமாகவும் இருக்கிறது. 

இதோ கெடுவிழைவென மாரன் சித்தாத்தரின் தனிப்பட்ட முடிவுகளை வேண்டி நிற்கிறான். அவரது இருப்பை அசைத்துப் பார்க்கிறான். இயலவில்லை! இனி அவனுக்கு இங்கு வேலையில்லை. இனி சித்தாத்தரை எதுவும் தடைசெய்யவோ தடுத்து நிறுத்தவோ இயலாது என்றுணர்ந்தான். அவன் காத்திருக்கத்தான் வேண்டும். அதில் மாரன் அதி பொறுமை மிக்கவன். நற்தருணம் வாய்க்கும் நொடிப்பொழுதுக்காக யுகங்களாகக் காத்திருக்கக் கடவன் என்பதை அறிந்தவன். மானுடர்களின் அதியுச்ச நாடகீயத் தருணங்களிலும் மேன்மைமிகு கணங்களிலும் சட்டென மனிதன் தன்னையுமறியாமல் தன்னிழப்பிற்கு ஆளாகிறவன். இறப்பின் இறுதி மூச்சின் அறுதிப்பொழுதிலும் பிறழ்வுறுகிறவன். மாரனோ, ஒரு நொடிப்பொழுதின் நூறில் ஒரு பங்கு இடைவெளியினூடே நுழைந்து சாய்த்து மானுட உறுதிப்பாடையும் விழுமியங்களையும் சவைத்துச் செரிப்பவன். அதனால், அவன் காத்திருப்பான், சித்தாத்தரின் அந் நொடிப் பொழுதிற்கென..

நிலை தடுமாறினும் பூமியின் இதயம் தொட்டுத் தன்னைச் சமன்படுத்தி அமர்ந்து மீண்டும் தியானப் பெருவெளிக்குள் ஐக்கியப்பட்டு அமைதியுடன் தன்னிச்சையாய்த் திகழ்ந்தது மாண்புறு தவநிலை. 

உயிரணுக்களில் பூமித்துகள்கள் ஒளிர்ந்து கிளர்ந்ததில் பிரபஞ்ச ஆற்றல் மேனியெங்கிலும் மட்டற்றுப் பெருக்கெடுத்து ஓடியது. ஐந்து கந்தங்கள் ஒவ்வொன்றாக உடல், உணர்ச்சிகள், அறிந்துணர்வு, மனவுருவாக்கம், தன்னுணர்வு எனப் பிரிந்தெழுந்தன. அவை ஒன்றோடொன்றாகப் பின்னிப்பிணைந்து மேலும் ஏராளமாய்த் தோற்றம் கொண்டு வெளிப்பட்டபடியே நீண்டன; கந்தங்கள் கூடிக்கலந்து தோற்றங்களை உருவாக்கி வளர்ந்து பின் மறைவுற்றன; தனியாக இன்றி கூட்டுக் கலவையில், ஒன்றனுள் ஒன்றென உயிரியக்கம் சார்புப் பண்பில் தொடர்வது தெளிவாயிற்று; அதில் தன் பிறப்பும் தொடர்ச்சியும் இறப்பும் பின்னர் உலக உயிரினங்கள் யாவற்றின் தோற்றமும் மறைவும் இடையிலான இன்பமும் துன்பமும் சுகமும் வலியும் இரவும் பகலுமெனச் சுழன்றபடி நீடித்தன; அச் சுழற்சியின் நடுவே அகவிழிப்பு மையங்கொண்டிருப்பது புரிந்தது. ஒவ்வொரு கந்தத்தையும் தனித்தனியென விழிப்புடன் உற்றறிய, உய்வும் தெள்ளமைதியும் உள்ளுக்குள் எப்போதும் சுரந்தபடி இருப்பின் ஆழத்தில் தென்பட்டன.

‘பூமி நீர் நெருப்பு காற்று கடந்த பரிமாணம் ஒன்றுண்டு; அகண்ட வெளியின் எல்லையின்மையில், தன்னுணர்வின் எல்லையின்மையில், வெற்றுவெளியின் எல்லையின்மையில், புலனூடான, புலனுக்கப்பாற்பட்ட எல்லையின்மையில் திகழும் பரிமாணம் ஒன்றுண்டு; இவ்வுலகு சூரிய சந்திரன் விசும்பு கடந்த பரிமாணம் ஒன்றுண்டு; வருவதும் போவதும் நீடித்தலுமற்று; தோன்றுவதும் மறைவதுமற்று; அமைவதுமற்று; பரிமாணம் கொள்வது என்பதுமற்று; ஆதாரத் துணையற்ற ஒன்றுண்டு’ என்ற தற்போத நிலையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். 

துருவித் துருவிச் சுரங்கமென ஊடுருவிக் கொண்டே நீண்டது விழிப்பு, உடலுக்குள் மனத்துக்குள் மண்ணுக்குள் விண்ணுக்குள் அண்டமுழுதும். அப்படியே ஊடுருவி ஊடுருவி முற்றி விதிர்த்து பிரமாண்ட வெளியாய் ஒளியாய் விரிந்தது ஞானத்திறப்பு, நித்தியமாய் பூரணமாய் நிர்வாணமாய்..  

மெய்யுலகின் மாயாவேட்கைக்
கருஞ்சுழலில் சிக்கி மடியா
விதிவிலக்கென்று எவருமிலர்.

பட்டுத்தீரா வாழ்வின் ஊழில்
மயங்கு உழல்வில் தவிக்கும்
கற்பகோடித் துகள்களின்
தாங்கொணாக் கூத்தை முடித்து
விடுதலை பெற்ற அரும்பேறின்
தெளிந்த தூய உள்ளொளி
சுடரும் ஞானவான்
அவனென அறிந்து
பதைத்தோடின களங்கங்கள்.

அதிகாலை விடிவெள்ளி வானிறங்கி நின்று ஒளிர்ந்தது, அந்தரத்தில் எப் பற்றுமற்று. புதிதெனக் காண்பதாக அவ் வெள்ளியை நோக்கினார். கடந்தது அனைத்தும் தீர்ந்துபோய் செம்மையாக ஒளிர்ந்தது உள்ளம். புள்ளினங்கள் ஒன்றிரண்டெனப் பாடத் தொடங்கின. அந் நிலத்து ஒவ்வொரு உயிர் மீதும் ஆழ்ந்த பரிவும் மெய்யான நேயமும் எழுந்தன. தான், பிற என்பதெல்லாம் தாண்டிய வெற்றுமையில் கழிபேருவகை..

அதுகாறும் ஊற்ற ஊற்ற
உள்வாங்கிக் கொண்டே இருந்த
உள்ளுறை உயிர்த்தேடல்
பூரிதப்பட்டது.
மிச்சமீதமின்றி முழுதாகக் கவிழ்க்க
வாழிருப்பின் விளிம்பு தாண்டி
நிரம்பி வழிகிறது பூரண அகவெளி.
தொடர்புறும் அண்டத்தின்
அனைத்துப் புலப்பாடுகளையும்
ஊடேறி ஒன்றிக்கொண்டாலும்
இறுதிவரை ஈரம் ஒட்டாமல்
தகைத்துத் திகழ்கிறது
வெற்றுமையின் அகல் விரிவெளி.

தனியொரு உயிரின் ஞானப் பாதையில் நுண்ணறிவையும் தன்னுணர்வையும் அகவிழிப்பையும் கருவியாகக் கொண்டு, தனக்கப்பாற்பட்ட உயர் தெய்வப் பண்புரு எனும் எக் கருத்தையும் விலக்கி, தனிமனித சிந்தனைகளாலும் தீவிர முயற்சிகளாலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கலாம்; சமதர்மப் பெருவாழ்வு இயல்வதாகும்.

தவத்தின் படிநிலைகளில் உயர்ந்தேற முடிந்தவர்கள் அதன் பேறுகளைப் பெற்று உய்யட்டும். எளிய மக்களுக்கு சார்புறு பண்பு, துக்கம், நிவாரணம், சீலம் என்பவற்றை போதித்து நல்வழிப்படுத்தலாம். எதையும் சாராத, பற்றியிராத தெள்ளமைதி, தெளிசிந்தை, பெருநோக்கு, அருநிறைவு நிலை மானுடர்க்கு வாய்க்கும். அன்பிலும் கருணையிலும் சார்ந்தூறும் மாபிரக்ஞை கொண்ட போதிசத்துவ வாழ்வு கூடுமென உய்த்துணர்ந்த அற்புத வேளையது.

புலரிச் செங்கதிரொளி காட்டு வெளியில் பனியினூடே கூர்ந்து பாய்ந்தது. அவர் தெளிந்தெழுந்தார். சம்போதி ஒளிர்ந்து மிளிர்ந்தது. இவ்வுலகம் இனி ஒருபோதும் முன்புபோல் இருக்கப் போவதில்லை என்பதாகப் பறவைகள் பாடின.

ISBN: 9788187645580
Published on: 2026
Publisher: தமிழினி
₹950


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.