“அண்…ணா, அண்…ணா ….” கேவிக்கேவி மதுஷா அழுதுகொண்டிருந்தாள். அவளின் தலை குனிந்தபடியே இருக்க, அவளின் வலது கை அவளின் ரீசேட்டினை இறுகப் பற்றியிருந்தது. “நானும் அவனும் எந்த நேரமும் சண்டைபிடிப்பம்… ஆனா லேசில ஒராளை ஒராள் விட்டுக்கொடுக்க மாட்டம். ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்ததாலை, … அவனின்ர ரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். சிலவேளையில, அதுகளை அறியுறதுக்காக அம்மா என்னைக் குடைவா… ஆனா, நான் வாயே திறக்கமாட்டன்…” அவளின் சொற்கள் உடைந்து உடைந்து வந்தன.
“அண்ணா, எழும்பினவுடனை வாஸ்ரூமுக்கு போறது யாரெண்டு ஆர் இனி என்னோட சண்டைபிடிப்பினம்? … ஓயாமல் கதையாம, கொஞ்சம் வாயை மூடிக்கொண்டிரு எண்டு நெடுக உனக்குச் சொல்லுவனே, அதுதான் நீ மொத்தமாவே மூடிட்டியா? அண்ணா, அண்ணா …” கண்களை அடிக்கடி சுருக்கிச் சுருக்கி இறுக்கிமூடினாள். அவளின் கண்ணீர் அவளின் கன்னங்களில் வழிந்தோடியது.
பின்னர் திரும்பவும், கேவிக்கேவி அழுதபடி, ரோசானின் தலைமாட்டடியில் போய் அவள் நின்றுகொண்டாள். அவளின் வலது கை அவனின் தலையை வருடிக்கொண்டிருக்க, இடது கை அவளின் கண்களிலிருந்து வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்த மண்டபத்துக்குள் நுழைந்த என்னுடைய உடல் விறைத்துப் போனது. ஆறு மாசத்துக்கு முன்பாக இதே மண்டபத்தில்தான் நிலாவை அப்படி வளர்த்தி வைத்திருந்தார்கள். இப்போது மகேனின் நண்பனின் மகன். “வாரும், வாரும்,” என்றபடி என்னுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, மகேன் முன்னுக்குப் போனார்.
ரோசானின் முன் நின்றிருந்த சுசி என்னைக் கண்டதும் கட்டிக்கொண்டு கதறத்தொடங்கிட்டாள். பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்கு வருகின்ற வழியில truck ஒன்றுடன் அடிபட்டுப் பரிதாபமாகச் செத்துப்போயிருக்கும் மகனின் இழப்பைத் தாங்கமுடியாத அவளின் ஓலம் நெஞ்சைக் கிழித்தது.
“அக்கா, நாங்க என்ன பாவம் செய்தானங்க? இவனும் இப்பிடிப் போயிட்டானே!” பரிதாபமாக ஒலித்த சுசியின் கேள்வி என்னையும் உலுப்பியது. சுசியின் முதுகைத் வருடியபடி நானும் விம்மினேன். ஒருவரின் பின் ஒருவராக ஆக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தனர். சுசியைக் கட்டியணைத்துக் கொள்ளவதற்கென இன்னொரு பெண் சுசியை அண்மித்தபோது, சுசியின் பிடியிலிருந்து விடுபட்ட நான் ரொபோட்போல அசைந்து அசைந்துபோய் அங்கிருந்த வாங்கொன்றில் அமர்ந்துகொண்டேன்.
ரோசானைப் பற்றிய தங்களின் நினைவுகளை, ரோசானின் பல்கலைக்கழகச் சினேகிதர்கள், பாடசாலையில் அவனுடன்கூடப் படித்தோர், அவன் விளையாடிய விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள், சொந்தக்காரர்களென மாறிமாறிப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
திடீரென உச்சஸ்தாயில் ஒலித்த ஒரு குரல் என்னைத் திடுக்கிடச்செய்தது. “இன்றைய இளையோர்தான் எங்கட எதிர்காலத் தலைவர்கள். அவையளை வளத்தெடுக்கிறதில பெற்றோர் நிறையக் கரிசனை காட்டோணும், அவையோட நல்ல தொடர்பாடலைப் பேணுறதின்ர அவசியத்தை உணரோணும். எங்கை போயினம் வருகினமெண்டு அறிஞ்சிருக்க வேணும். நல்லது கெட்டதுகளை அறியும்படி எடுத்துச் சொல்லவேணும். உச்சம்தொட வேண்டுமெண்டு அவையை வற்புறுத்தக்கூடாது …”
இளம் அரசியல்வாதி ஒருவர் அது இதெண்டு முழங்கிக் கொண்டிருந்தார். எனக்குத் தொண்டையடைத்தது. எழும்பிப்போய் தண்ணீர் குடித்துவிட்டு மீளவந்தேன்.
X X X
‘நிலாவுக்கு நான் அழுத்தம் கொடுத்தேனா? உச்சம்தொடும்படி வற்புறுத்தினேனா?’
மாதமொரு முறையாவது வந்துகொண்டிருந்த நிலா இரண்டு மாதங்களின் பின், reading week லீவில் அன்றுதான் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்திருந்தபோது நான் வீட்டிலிருக்கவில்லை. ஒரு வார கால விடுமுறையில் நிற்கப்போகும் அவளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்துகொடுப்பதற்காக முருங்கைக்காய், மரவள்ளிக்கிழங்கு, கரணைக்கிழங்கு, வல்லாரை, வாழைப்பொத்தி, sherbet syrup என அவளுக்குப் பிடித்த பொருள்களின் பட்டியலுடன் ஸ்காபோரோவுக்குப் போயிருந்தேன். பனி சரமாரியாகப் பொழிந்துகொண்டிருந்ததால், வாகனத்தை மெதுவாகவே ஓட்டவேண்டியிருந்தது.
எதிர்பார்த்த நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்ப முடியவில்லையே என்ற கவலையுடன், வீட்டுக் கதவைத் திறந்த நான், “நிலா, நிலா’’ என அழைத்தபடி உள்ளே நுழைந்தேன். அவள் தன் கட்டிலில் குப்புறப்படுத்திருந்தாள்.
“நீ வாறதுக்கு முதல் வந்திடலாமெண்டு நினைச்சன். சொறியம்மா, ஏதாவது சாப்பிட்டனனியா?”
“I am not hungry, I am just tired. Let me have sometime quite time,” என்றாள், அவள். சரி, என அவளின் தலையில் முத்தம் கொடுத்துவிட்டு நான் என் சமையலைத் தொடங்கினேன்.
சமையலும் முடிந்து பொழுதும்பட்டுவிட்டது. நிலா தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவளின் அறைக் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே சென்ற நான், “நிலா, are you okay?” என்றபடி அவளின் தலையை மென்மையாகத் தடவிக்கொடுத்தேன். அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
நெற்றியைத் தொட்டுப்பார்த்துக் காய்ச்சல் இல்லையென்பதை உறுதிப்படுத்திய பின்னர், “ஏதாவது பிரச்சினையா? என்னம்மா நடந்தது? எழும்பு, முகத்தைக் கழுவிப்போட்டுச் சாப்பிடன்,” என்றேன்.
“Mom, please leave me alone!” முகத்தைத் திருப்பாமலேயே சத்தமாகச் சொன்னாள்.
“பிள்ளை, எதெண்டாலும் மனம்விட்டுக் கதைச்சா கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்… எழும்பு, எழும்பிச் சாப்பிடு. உனக்குப் பிடிச்ச கறிகள் எல்லாம் செய்திருக்கிறன், சாப்பிட்டால் கொஞ்சமாவது தெம்பாயிருக்கும்… எழும்பு பிள்ளை!”
“Please don’t bother me!” பதிலுக்கு அவள் கத்தினாள்.
அங்கிருந்து விலகுவதைத் தவிர, வேறெந்த வழியும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பலதையும் பத்தையும் ஓயாமல் கதைத்துக்கொண்டிருக்கும் நிலா, வீட்டைக் கலகலப்பாக வைத்திருக்கும் நிலா எதுவும் பேசாமல் ஒதுங்கிப் போயிருந்தது என் மனதைப் பிசைந்தது. கண்களை நனைத்தது. நிலைமையை மாற்றமுடியாமலிருக்கும் என் இயலாமை என்னைக் கொன்றது.
தன் வேலைகளில் அவளுக்கு இலேசில் திருப்தி வருவதில்லை. எதையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனாலும், கடைசி நேரம்வரை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பாள். என்றாலும்கூட, அவளின் அந்தப் பழக்கம் அவள் பாடசாலையில் இருந்தபோது எந்தப் பிரச்சினையையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. எப்படியோ நிறையப் புள்ளிகளும் பாராட்டுகளும் வாங்கிவிடுவாள். பல்கலைக்கழகத்துக்குப் போனபின் அது எப்படிப் பிரச்சினையானதென்று எனக்கு விளங்கவேயில்லை. இரண்டு, மூன்று assignmentகளைச் செய்து கொடுக்கவில்லை என்பது கிறிஸ்மஸ் லீவுக்காக வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் தெரியவந்திருந்தது.
கடைசியில் மனச்சோர்வுதான் அதற்கெல்லாம் காரணமென்றார் டொக்டர். பிள்ளை எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்கிறாள். அவளை அன்பினால் குளிப்பாட்டி, விரும்பியதெல்லாம் செய்துகொடுத்து நாங்கள் வளர்க்கிறோம். அவளுக்கு எப்படி மனச்சோர்வு வந்ததென்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 90 கிமீ தூரத்திலிருக்கும் Mc Master பல்கலைக்கழகத்துக்கு அவளை அனுப்பியிருக்கக்கூடாது. வீட்டுக்குக் கிட்டவுள்ள பல்கலைக்கழகத்தில், அவள் என் மேற்பார்வையில் படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டுமென மகேன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.
முடிவில், கவுன்சலிங், மருந்துகளென அவளின் வாழ்க்கை நிறைந்துபோனபோது, அவளுக்கிருக்கும் பிரச்சினையை அவளே கையாளவேண்டும். நாங்கள் அதில் தலையிட முடியாதென்றார் உளவியலாளர். என் நிலைமையின் மீதும், என் கையாலாகத்தனத்தின் மீதும் எனக்கு வெறுப்பாக இருந்தது.
எட்டு மணி என்பதைக் கடிகாரம் காட்டியபோது, பிள்ளை, சோகத்தில் இருக்கிறாள். அவளை எப்படி அப்படியே விட்டுவிடுவதென மனம் அங்கலாய்த்தது. மீளவும் அவளின் அறை வாசலில் போய்நின்று கூப்பிட்டேன்.
“நிலா, பிஸீஸ் எழும்பு, பிள்ளை. எட்டு மணியாச்சுது. எழும்பிச் சாப்பிட்டிட்டுப் படு. நீ சாப்பிட்டால்தானே நானும் சாப்பிடலாம்.”
“எனக்குப் பசிக்கேல்லை.”
“கொஞ்சமாய்த்தன்னும் சாப்பிடன். சாப்பிடாட்டி ஒழுங்கா நித்திரையும் வராது. பிறகு நாளைக்கும் ஒரு வேலையும் செய்யேலாது.”
“Mom, you are making my stress worse!” அவளின் வார்த்தைகள் என் இதயத்தைக் கிழித்தன.
“உன்ரை நன்மைக்காகத்தானே சொல்றன்,” சோகத்தில் குரல் உடைய, கவலையை அடக்கமுடியாமல் சத்தமாக அழுதேன்.
கடைசியில், நான் மனம்நொந்து அழுததால், எப்படியும் அவள் எழும்பி என்னிடம் வருவாள் என்ற எதிர்பார்ப்புடன் என் அறைவாசல் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டுப் படுத்துக் கொண்டேன்.
ஆனால், காலையில் நித்திரை கலைந்தபோதுதான், காத்திருந்து, காத்திருந்து களைத்துப்போய் நித்திரையாகியிருக்கிறேன் என்பது தெரிந்தது. அவசர அவசரமாக எழும்பி வெளியில் சென்றேன். வரவேற்பறையிலிருந்த சோபாவில் நிலா இருப்பதைப் பார்த்ததும் எனக்கு ஆறுதலாக இருந்தது.
X X X
வீட்டுப்போகலாமென மகேன் வந்துகூப்பிட்டார். அவரைத் தொடர்ந்துபோய்க் காருக்குள் ஏறிக்கொண்டேன். வானம் இருட்டாயிருந்தது. மழை சத்தமாகப் பெய்து கொண்டிருந்தது.
“காரில காஸ் சொட்டும் இருக்கேல்லையாம். கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாம கார் ஓட்டியிருக்கிறான். குடிச்சிருப்பான் அல்லது போதையில இருந்திருப்பான் எண்டு ஆக்கள் கதைக்கினம்,” என்றார், மகேன்.
“வாகன விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார், இன்றைய பெற்றோர் பிஸி, அவர்களுக்குப் பிள்ளைகளுடன் நேரம் செலவிட அவகாசமில்லை… அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாம், ஆனால், அது தாய்க்கே தெரியவில்லையாம்!” என்பதாகத் தங்களின் விமர்சனங்களையும் சேர்த்துத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்திகளாக்கியிருந்த கதையை வீட்டுக்கு வந்திருந்த தங்கை விமலா கூறிச் சென்றது என் காதுகளில் மீளவும் ரீங்காரமிட்டது. அந்த நேரத்தில் சுவாசிப்பதற்குக்கூட சிரமப்பட்ட என் மார்பில் அவை ஈட்டியாய்க் குத்தியிருந்த சோகம் நினைவில் வர, நெஞ்சு நொந்தது. ரோசனுக்கும் என்ன நடந்திருக்குமென்று எவருக்குமே தெரியாது, நொந்துபோயிருப்பவர்களின் வேதனையின் சுமையும் யாருக்குத் தெரியப்போகுது. பேசித் தீர்க்கட்டுமென நினைத்துக்கொண்டேன்.
நெடுஞ்சாலையில், மகேன் வழமைபோல் மிக வேகமாகச் செல்கிறார் என்பதை குலுங்கிக்கொண்டிருந்த என் உடல் எனக்குச் சொன்னது. காரின் உள்ளே கதவுக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பட்டியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன்.
“அப்பா, 100 ரோட்டிலை, 125இல போறிங்க. அவசரமாய்ப் போய் என்ன செய்யப் போறியள்? குறையுங்கோ, குறையுங்கோ அப்பா! அல்லது நான் ஓட்டுறன், விடுங்கோ!” நிலா பின்னுக்கு இருந்து உரத்துச் சொல்வதுபோலப் பிரமையாக இருந்தது. அப்படி அவரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பவள்தான் அன்று வேகமாய்ச் சென்றிருக்கிறாள் என்றும், வாகனம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால், அது மரமொன்றுடன் மோதி பள்ளமொன்றுக்குள் தலைகீழாய் விழுந்துபோயிருந்தது என்றும் பொலிஸ் அறிவித்திருந்தது.
பெருமூச்சொன்று எனக்குள் இருந்து கிளர்ந்தது.
X X X
வீட்டுக் கதவைத் திறந்தேன். வீடு கும்மிருட்டில் தொலைந்துபோயிருந்தது. தொலைபேசியிலிருந்த ரோச் வெளிச்சத்தைப் பயன்படுத்திச் லைற் சுவிச்சைப் போட்டபோது, சுவிச்சின் மேல் தொங்கிக்கொண்டிருந்த படம் வெளிச்சத்தில் ஒளிர்ந்து என் கண்களின் ஓரத்தை மேலும் ஈரமாக்கியது. நிலாவை என் மார்பில் தாங்கியபடி பெருமிதத்துடன் நான் அதில் சிரித்துக் கொண்டிருந்தேன்.
அவளின் மூச்சும் என் மூச்சும் சீராகக் கலந்து ஒலித்த காலமது. என்னைத் தேடும் அவளின் பார்வையும், என்னைக் கண்டதும் மலரும் அவளின் ஒளிரும் கண்களும் சிரிக்கும் முகமும் எனக்குக் கொடுத்திருந்த அந்த உயிர்ப்பின் சுகம் மனதை நெகிழ்த்தியது.
அம்மாவுடன் வளராததால்தான் எனக்கும் அம்மாவுக்கும் இடையில தாய்-மகள் உறவு நல்லதாக இருக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கிருந்ததால் நிலாவுடனான உறவை இறுக்கமாகப் பேணுவதற்காக எல்லாவகையிலும் முயற்சித்திருந்தேன். வேலையைக்கூட அவள் பள்ளிக்கூடத்தில இருக்கிற நேரத்தில் செய்யக்கூடிய மாதிரித்தான் தெரிந்தெடுத்திருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் அவள் இருந்தபோது, கூடப்படித்த ஒருவன் தன்னைக் காதலிக்கிறதாகச் சொன்னதைகூட அவள் எனக்குச் சொன்னபோது, எங்களுக்கிடையில் இருந்த ஒளிப்பு மறைப்பற்ற தொடர்பாடலை அது உறுதிப்படுத்தி என்னைப் பூரிக்கச் செய்திருந்தது.
‘எப்பிடி என்னோட மனம்திறந்து பேச விரும்பாத நிலை அவளுக்கு வந்தது? இடையில என்ன நடந்தது? நான் எங்கே பிழை விட்டேன்?’ என் மனம் அரற்றியது.
‘என்னையும் வைச்சுக்கொண்டு அந்த உளவியலாளர் அவளுடன் கதைச்சிருக்கலாம். அப்பிடிச் செய்திருந்தா நிலைமை வேறை மாதிரி இருந்திருக்கும். தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில்கூட, தனித்துவம், சுதந்திரம் வேணுமெண்டு சொல்ற இந்த நாடும், இந்த ஸ்ருப்பிட் கலாசாரமும், எனக்கு நானே சத்தமாகச் சொல்லிக் கொண்டேன்.
தானொரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்ற இலக்குடன் படித்தாள். சட்டக்கல்லூரி நுழைவுக்கான பரீட்சையில் மிக அதிகமான புள்ளிகள் எடுத்திருந்தாள்,. வேலையுடன் தொடர்பான அனுபவத்தைப் பெறுவதற்காகச் சட்டத்தரணி ஒருவரிடம் பயிற்சியும் எடுத்திருந்தாள். நான்கு மாதத்துக்குள் அவளின் ஆர்வமும், இலக்கும் 180 பாகைக்கு திரும்பிவிடுமென யார் நினைத்தது? என் மனம் எனக்குள் அழுதது.
அன்று காலையில் நிலாவைச் சோபாவில் பார்த்ததும் எனக்கு ஆறுதலாயிருந்தது. “ஓ, பிள்ளை எழும்பியிட்டாள். தேத்தண்ணி போடட்டா அல்லது சாப்பிடப் போறியா?” என்றேன்.
தொலைபேசித் திரைக்குள் கண்களை வைத்துக்கொண்டு, “எனக்கு இப்ப ஒண்டும் வேண்டாம்,” என்றாள், அவள்.
“என்னம்மா, ராத்திரியும் சாப்பிடேல்லை… Assignmentகள் செய்து கொடுத்திட்டியே? வெள்ளிக்கிழமைக்கிடையில செய்திடுவன் எண்டாய். செய்தனீயோ? அல்லது செய்யாததாலைதான் உனக்குக் கவலையாயிருக்கா? பிந்திக்கொடுக்கிறது பிரச்சினையெல்லே?”
அவள் பேசாமலிருந்தாள்.
“என்ன பிரச்சினையெண்டு சொன்னால்தானே எங்களுக்கும் விளங்கும், பிள்ளை… எவ்வளவு கெட்டித்தனமாய்ப் படிச்சிட்டு, இப்ப…” எனத் தொடர்ந்த என்னிடம், “Mom, please stop it. I think it’s better better if you don’t check in all the time,” என முகத்தில் அறைவது போலச் சொன்னாள்.
என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனாலும், அவளின் மனம் ஈரமாகவில்லை.
முதல் நாளிரவு கொட்டிய பனிமழை சேறும் சகதியுமாக வீட்டின் முன் தேங்கியிருந்தது. வெளியில் வரத்துடித்த என் வார்த்தைகளை மனதுக்குள் தேக்கிவைத்துக் கொண்டேன்.
சற்று நேரத்தில், “இண்டைக்குச் சிந்துஷாவின்ர பேர்த்டே. வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கிறாள். உங்கட காரைக் கொண்டு போகலாமோ?” என்றாள்.
“நான் கொண்டுபோய் விட்டுவிடுறனே.” என்றபோது,
“Mom, I am not in high school. உங்களுக்குக் கார் வேணுமெண்டா, நான் பஸ்சில போறன்.” என்றாள்.
“சரி, காரைக் கொண்டுபோ. ரோட்டேல்லாம் வழுக்கும், கவனமாய்ப் போட்டுவா. போனவுடனை ரெக்ஸ்ற் பண்ணு, என்ன?” எனச் சொல்லி அனுப்பி வைத்திருந்தேன்.
பேர்த்டே பார்ட்டிக்குப் போகிறபடியால் அவளின் மனம் கொஞ்சமாவது திசைதிரும்பும். திரும்பிவந்தபின் என்ன, ஏதென்று கதைத்துப் பார்ப்போமென நினைத்துக் கொண்டேன். ஆனால் ….
முடிவில், வீட்டில் நானும் மகேனும் மட்டும் தனித்து விடப்பட்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்தபடி எங்களின் நாள்கள் ஏனோ தானோ என்று நகர்ந்துகொண்டிருக்கின்றன.
போய்க் குளிரூட்டியைத் திறந்தேன், திறந்தபின் ஏன் திறந்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை. எது பழையது, எது புதியதென்பது தெரியாமல், வெவ்வேறு கொள்கலன்களில் அதற்குள் உணவு நிறைந்துபோயிருந்தது.
படுக்கையில் உருண்டுகொண்டிருந்தேன் ஒரு மணியாகியும் நித்திரை வரவில்லை. அன்று அதே ஒரு மணியைக் கடிகாரம் காட்டியபோதுதான், பதினொரு மணியளவில் வீட்டைவிட்டு வெளிக்கிட்டுச் சென்றவளிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. என்னவாயிருக்குமோ என்ற பதற்றத்துடன் அவளின் கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்திருந்தேன்.
அடுத்த முனையில் ஓர் ஆண் குரல்தான் பேசியது. பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தன்னை அடையாளம் காட்டிய அந்தக் குரல் என்னை யாரெனக் கேட்டுவிட்டு, நிலா விபத்துக்குட்பட்டிருக்கிறாள். அவளை ரொறன்ரோ வெஸ்ரேன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்கிறோம் என்றது.

விபத்தென்றால் எப்படி நடந்திருக்கும்? எவ்வளவு தூரம் பாதிப்புக்குட்பட்டிருப்பாள்? பல கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தன.
“அம்மாளே என்ரை பிள்ளைக்கு ஒண்டும் நடக்கக்கூடாது. இரவைக்கு எவ்வளவு பனி கொட்டினாலும் உன்னட்டை நான் நடந்து வருவன்.” தீபமேற்றிக் கடவுளிடம் மன்றாட்டமாகக் கேட்டுவிட்டு அவசர அவசரமாய் ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிட்டேன்.
வேலைக்காக மொன்றியலுக்குப் போயிருந்த மகேன் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தபோது, “நிலா விபத்துக்குட்பட்டி…ருக்கிறா…” வார்த்தைகளை முடிக்கமுடியாமல் அழுதேன்.
சாவிகளைத் தொங்கவிடுவதற்காகக் கையை உயர்த்திய மகேன், “எங்கை நடந்தது, இப்ப அவள் எங்கை, பெரிய காயமாமோ?” எனக் கேட்டபடி மீளவும் கார்ச் சாவிகளைக் கையிலெடுத்திருந்தார்.
“விபரமாய் ஒண்டும் தெரியேல்லை. சீ, நேற்று வந்த நேரத்திலையிருந்து அறைக்குள்ளைதான் அடைஞ்சுபோயிருந்தவள். அவளிட்டைக் காரைக் குடுத்திருக்கக் கூடாது!”
“தெரிஞ்சாப் பிறகேன் குடுத்தனீர்? நீர் ஒண்டையும் முன்கூட்டி யோசிக்கிறதில்லை,” என்ற மகேனின் குரலில் இருந்த கடுகடுப்பு, குற்றவுணர்வில் தகித்த என்னைக் கொன்றது.
ஆஸ்பத்திரியில் அவள் இருந்த வார்ட்டுக்குள் சென்ற எங்களை ஒரு அறைக்குள் வருமாறு அழைத்த தாதி ஒருவர், “டொக்டர் வருவார், இருங்கள்,” என்றுவிட்டுச் சென்றார். மகேன் குறுக்கும் மறுக்கும் நடந்துகொண்டிருந்தார்.
நிமிடங்கள் அசையமறுத்தன. முடிவில் அந்தத் தாதியுடன் அறைக்குள் வந்த டொக்டர், “We are extremely sorry, we couldn’t save your daughter,” என ஏதோவெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். என் கால்களின் கீழ் என் உலகம் நொருங்கிப்போனது.
“Are you okay?” என்னருகே நின்ற தாதி கேட்டபோது, மயங்கி விழுந்திருக்கின்றேன் என்பது புரிந்தது.
காலையில் எழுந்தபோது, மகேன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். ரோசானின் வீட்டுக்குப் போகப்போவதாகவும் நானும்கூட வரப்போகிறேனா என்றும் கேட்டார். நான் தலையை மட்டும் இடம் வலமாய் ஆட்டிவிட்டு, என் குளிகைகளை எடுப்பதற்காகக் குசினிக்குள் சென்றேன்.
தண்ணீர் பைப்பைத் திறந்து கிளாசில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு திரும்பிய என் தலையில், திறந்தபடியேயிருந்த cabinet கதவு பலமாக இடித்தது. அவளின் தலையில் பலமாக அடிபட்டிருந்ததால் உயிர் இழந்திருக்கிறாள் என்ற மருத்துவ அறிக்கை அந்த நேரத்தில் நினைவுக்கு வந்து மனதை உலுக்கியது. அவளின் புத்திசாதுரியமான மூளை, சுவாசத்தைப் பேணவோ, இதயவடிப்பைத் தொடரவோ முயற்சிக்காமல் சிதைந்திருக்கிறதே என்ற வேதனையில் தலையில் அடித்து அடித்துக் கத்தியழுதேன்.
பிரஷருக்கான குளிகைகளை விழுங்கிவிட்டு சோபாவில் போய் அமர்ந்தேன். அன்று இதே இடத்தில்தான் இருந்துகொண்டு சிந்துஷாவின் பேர்த்டேக்குப் போகப் போவதாக நிலா சொல்லியிருந்தாள். ஆனால், அந்தியேட்டிக்கு வந்திருந்த சிந்துஷா, நிலாவைத் தன் வீட்டுக்குத் தான் அழைக்கவும் இல்லை, அன்று தன்னுடைய பேர்த்டேயும் இல்லை என எனக்குச் சொல்லிசொல்லி அழுதிருந்தாள். அது நினைவுக்கு வந்ததும் எப்போதும்போல எனக்குத் தலைசுற்றியது.
‘நிலா எனக்குப் பொய் சொல்லியிருக்கிறாளா? அதுதான் நான் கொண்டுபோய் விடட்டா எண்டுகேட்டபோது வேண்டாமெண்டாளா? வேணுமெண்டுதான் அடிபட்டிருக்கிறாளா…? ஆனா, எதையாவது உறுதிப்படுத்துறதுக்காக ரண்டாம்தரம் கேட்டாலே, நானென்ன பொய்சொல்லுறன் எண்டு நினைக்கிறியளோ எனக் கோவிப்பாளே.? பொய்சொல்றது அவளுக்குப் பிடிக்காதே. அதோடை என்ர காரைக் கொண்டுபோய் வேணுமெண்டு மோதுவாளா? அப்பிடியெண்டால் என்ரை தொந்தரவு வேண்டாமெண்டா வெளியில போனவள்?’
திரும்பத் திரும்ப யோசிக்கிறேன். தலைதான் வெடிக்கின்றதே தவிரப் பதில் எதுவும் கிடைக்குதில்லை.
“உனக்குப் பிள்ளை வளக்கத் தெரியேல்லை. அவளின்ர பிரச்சினையளை ஒரு தாயாக நீ அறிஞ்சிருக்க வேண்டாமே. வழிநடத்தத் தவறியிட்டாய். இப்ப இப்பிடி ஒரு நிலை வந்திருக்கு. பிள்ளை இல்லையெண்ட கவலையைவிட, மோசமாயிருக்கு ஆக்கள் கேட்கிற கேள்வியள். வெளியிலை தலைகாட்டேலாமலிருக்கு.” மகேன் தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்க்கும் பொழுதுகளில், எனக்குக் குளவி கொட்டுவதுபோல அத்துணை வேதனையாக இருக்கும். தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தவேண்டும் போலப் பைத்தியமாக இருக்கும். அதனால் மகேனிலிருந்து விலத்தியிருப்பதுதான் என் வழமை.
குளிப்போமோ என நினைத்தேன். கடைசியாக எப்போது குளித்தேன் என யோசித்தபோது அதுவும் நினைவுக்கு வரவில்லை. ‘ஆறுதலாய் குளிப்பம்’ என எனக்கு நானே சொல்லியபடி, சோபாவில் சரிந்து படுத்தேன். சுவர் மூலைகளில் சிலந்தி பின்னியிருந்த வலைகளிலும் நிலாவே தெரிந்தாள். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்பதில் அவள் மிகவும் கரிசனையாயிருப்பாள்.
ஆறு மாதங்கள் ஆறு யுகம் போலிருக்கின்றது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி நாள்களைக் கடத்தமுடியுமென எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
X X X
மழை கொட்டிக்கொண்டிருந்தது. வீட்டுக்குள்ளும் குளிர்ந்தது. ரோசானின் அந்தியேட்டி மலருக்கான கட்டுரைகளை மகேன் கொம்பியூட்டரில் ரைப் பண்ணிக்கொண்டிருந்தார்.
வெளியில் நிலா ஆசையாக நாட்டியிருந்த ரோஜாச் செடிகள் அவற்றின் இலைகள் தெரியாதளவுக்குப் பூக்களால் நிரம்பியிருந்தன.
‘நிலா இதைப் பாத்தா இப்ப எவ்வளவு சந்தோஷப்படுவாள். மொட்டுக்கள் அரும்பியிருந்ததுகூட என்ர கண்ணுக்குத் தெரியேல்லையே. அவளாய் இருந்திருந்தால் செடி மீளத் துளிர்த்தலில் இருந்து அணு அணுவாய் ரசித்திருப்பாள்.’
ஒரிடத்தில் என்னால் இருக்கமுடியவில்லை. ஏதோ ஒன்று என்னைப் பிடித்து சிப்பிலி ஆட்டிக்கொண்டிருந்தது. மகேனுக்கு முன்னால் போய் நின்றேன்.
“இரவைக்கு என்ன சாப்பாடு?” என்றார் மகேன்.
“மகேன், எனக்கு டிவோர்ஸ் வேணும். என்னால இனியும் உங்களோடை சேந்து வாழேலாது. இந்த வீட்டிலையும் இருக்கேலாது…”
“உமக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கே? இழந்ததுகள் காணாதோ அல்லது ஊர்வாய் மெல்லுறது போதாதோ?”
“ஓம், பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. என்னோடை ஒண்டும் கதைக்காதேயுங்கோ. தயவுசெய்து என்னைத் தனிய இருக்கவிடுங்கோ!”
என் வாயிலிருந்து கொட்டுப்பட்ட வார்த்தைகள் கடைசியாக நிலா கூறிய அதே வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தின.
குரலெடுத்து பெரிதாய் கேவிக்கேவி அழுதேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
